Tuesday, December 25, 2007

கிராமத்து மார்கழிக் காலை



கருக்கலின் போதே
கண் விழித்து

விருட்டென சிலவாளி
நீர் இறைத்து

சுருக்கெனச் சிலிர்க்க
மேனி நனைத்து

சுருட்டித் துண்டை
தலையில் கோர்த்து

உருக்கும் பனியில்
வாசல் தெளித்து

இருவிரல் திரித்து
வண்ணக் கோலமிட்டு

வருடும் காற்றில்
கேசம் பின்தள்ளி

ஒருபிடி சாணம்
கோலத்தின் நடுவில்

செருகும் பூசணிப்
பூவதன் அழகில்

பெருமைமிகு எம்குலப்
பெண்களைக் காண

மார்கழிக் காலை
மயக்கிடும் ஆளை !

Sunday, December 16, 2007

நச்சுனு ஒரு காதல் கதை

"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".

Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.

ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ஆனந்த் ஆறு வருடமாகவும், ரவி இரண்டு வருடமாகவும் ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவி வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, தாயகத்தில் குப்பைகள் அகற்ற (!) மற்றும் பெற்றோர்களுக்காக (!!) இந்தியா வந்து இந்த நைப்ரோ எனும் MNC கம்பெனியில் சேர்ந்திருக்கிறான்.

டேய் தினம் அவளப் பத்தித் தான பொலம்பறேன். அதான் அந்த எதிர்க்க இருக்க பில்டிங்கில் HR-ல வேலை செய்யறாளே பானு, அவளப் பத்தித் தான். லுக்கு தான் ஜாஸ்தியா இருக்கே தவிர்த்து பேசவே மாட்டேன்ங்கறா. இன்னிக்குக் காலைல 'வழக்கம் போல' கொஞ்சம் லேட்டா வந்தனா, வண்டிய பார்க் பண்ணிட்டு, அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்து lift எடுத்தா எதிர்த்தாப்புல நிக்கறா. அதே கண்ணு, அதே பார்வை ! அப்படியே தேவதை மாதிரி !!

அந்தப் பரபரப்பில் lift-ல் நீ இருந்தத கூட நான் கவணிக்கலை. காலரப் பிடிச்சு இழுத்தியே, நியாபகம் இருக்கா. மச்சி உன் கிட்ட தான்டா பொலம்ப முடியும். தப்பா எடுத்துக்காத டா.

என் கிட்ட மட்டுமா பொலம்பறே ! பக்கத்து cube பாஸ்கர் கிட்ட கூட தினம் அலுத்தக்கறியே டா. போன வாரம் அருண் வந்து 'உன் தொல்லை தாங்க முடியல'னு சொல்லி அவன் பொலம்பிட்டுப் போறான். "சரி இப்ப என்ன செய்யனும்" என்றான் ரவி

எனக்குத் தனியாப் போகப் பயமா இருக்கு. அவ கிட்ட இன்னிக்கு எப்படியாவது பேசிடனும்னு இருக்கேன். நீதான்டா ரவி அதுக்கு ஏதாவது நச்சுனு idea பண்ணி help பண்ணனும்.

"இந்தக் காலத்திலயும் இப்படி ஒரு புள்ளையா ?" டேய் அவனவன், காலைல சைன் போட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்ல பிட் போட்டு, லன்ச்சுல பன்ஞ்ச் வச்சு, டின்னர்-ல பின்னி பெடலெடுக்கறான். பேசப் பயமா இருக்காம், போடாங்க ....

இதான் நச்சா ... நல்லாத் தான் இருக்கு, எப்படி work-out பண்றது ?

ரெண்டு cube தள்ளி இருந்த அனு அங்கு வந்து, "ரவி இன்னிக்கு டின்னர் போறோமே, ஆனந்தும் வரட்டும்" என்று சொல்லி ரவியின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அடப்பாவி, எனக்கு idea-ன்ற பேர்ல சும்மா அளந்துவிடறேனு பார்த்தால், உண்மையாவே டின்னெர் வரை போய்டியா. அது சரி, நான் வரேன். பானு எப்படி வருவா என்றான் ஆனந்த்.

அதப் பத்தின கவலய விடுறா. அனு பார்த்துப்பா என்றான் ரவி.

சாயந்திரம் ஆனந்தப் பிக்கப் செய்து கொண்டு "லீ மெரிடியன்" நோக்கி வண்டியைச் செலுத்தினான் ரவி.

"டேய் பானு கண்டிப்பா வருவாளாடா ?" என்று பொலம்பிக் கொண்டே வந்தான் ஆனந்த்.

hotel வரவேற்பறை படு பயங்கரமாய் இருந்தது. "நவரத்னா"விற்கு வழி கேட்டுச் சென்றனர் இருவரும். ஆனந்தின் படபடப்பைச் சொல்லி மாளாது. பாவம் ரவி, எல்லாப் பொலம்பலையும் சேர்த்து கேட்டு வந்து கொண்டிருக்கிறான்.

சற்று தொலைவில், நால்வர் அமரும் மேசையில் பானுவும், அனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆனந்த், மென்று விழுங்கினான். லேசாகத் தன்னைக் கிள்ளிப் பார்த்து, "thanks டா ரவி" என்று மெலிதாகச் சொல்லிக் கொண்டான்.

மேசையை நெருங்கி இருவரும் அமர்ந்தனர்.

என்ன order பண்ணலாம் என்றான் ரவி. ஆனந்திற்கு எரிச்சலாய் இருந்தது. இப்ப என்ன order பத்திப் பேசறான். பானு கிட்ட எப்ப, எப்படி, என்ன பேசறது என்று மனதுள் குமைந்து கொண்டிருந்தான்.

முகவரி படித்து, டேய் என்னமோ பேசனும்னு சொன்னியேடா பானுவிடம், பேசு என்றான் ரவி.

என்னது காட்டான் மாதிரி போட்டு ஒடைக்கறான். இப்படியா எல்லார் முன்னாலயும் சொல்றது என்று ரவியை முறைத்தான் ஆனந்த்.

சரி ரொம்ப tension ஆகத என்ற ரவி, "பானு, உன்கிட்ட ஏதோ ஆனந்த் பேசனுமாம், அந்த private room இப்ப காலியாத் தான் இருக்கு, போய் ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க என்றான்.

நல்ல காரியம் பண்ணேடா ரவி இப்பவாவது என்றான் ஆனந்த்.

private room. மடை திறந்தோடும் வெள்ளமென ரத்த ஓட்டம் இருப்பதை உணர்ந்தான் ஆனந்த்.

அவன் எப்படிப் என்ன பேசுவது யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பானு பேச ஆரம்பித்தாள். எங்க வீட்டுல love marriage-க்கு ரொம்ப against. விசயம் வெளில தெரிஞ்சா ரொம்ப ப்ரச்சினை ஆயிடும். ரவி வீட்டுலயும் அப்படித் தான். அதான் ரெண்டு பேரும் இவ்ளோ நாள் அமைதியா இருந்திட்டோம். அனு வந்து என் கஸின் சிஸ்டர். அவ அப்பா கிட்ட மட்டும் விசயத்த சொல்லியிருந்தோம். அவர் இன்னிக்கு எங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி, ஒரு வழியா எல்லோர் சம்மதமும் கிடைச்சிருச்சு. இந்த நிலமையில தான் ரவி இன்னிக்கு உங்களப் பத்தி சொன்னாரு. நானே உங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிடறேன்னு ரவி கிட்ட சொல்லி, நான் தான் உங்கள கூட்டி வரச்சொன்னேன் என்றாள் பானு.

-----

வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே. இந்தக் கதை சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' போட்டிக்காக எழுதி பதிந்திருக்கிறேன். ஒரு வரி பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தினால் சந்தோசமாய் இருக்கும்.

Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)



மீசைக் கவி -- முண்
டாசுக் கவி -- கருங்
கோட்டுக் கவி -- பயமிலாப்
பாட்டுக் கவி -- எங்கள்
பாரதி !

-----

பாருக்குப் பா தந்து
பருத்த யானைக்குப் பழம் தர
பார்த்தசாரதி கோவில் சென்றாய்
பக்தர் வெள்ளமங்கே !

-----

கரிய நிறத்தந்த யானை
கண்கள் சிவந்து நிற்கக் கண்டீர்

முரசென அகன்றதன் காதுகள்
பட படக்கக் கண்டீர்

சுருண்டு நீளும் துதிக்கை மீண்டும்
சுருண்டு நீளக் கண்டீர்

பெரிய அதன் உருவம்
சரிந்து சரிந்தாடக் கண்டீர்

கூரிய அதன் விழிகள் கவியைக்
கூட்டத்தில் கீறித்தேடக் கண்டீர்

குழந்தையாய்க் கவியும் அதனருகே
கொஞ்சிச் செல்லக் கண்டீர்

-----

பயம் கொள்ளாப்
பா(க்கள்) எழுதிப்
பார் உயரப்
பாடுபட்டு
பாவரசன் ஆனாய் !

பாவரசன் உன்னை
பதம் பிரிக்கத் தெரியா
மதம் கொண்ட யானை
மிதித்துக் கொன்றதுவோ ?!

-----

பொருள் மாறும் காரணத்தால்
பாவரசன் நீக்கி
பாவிற்கதிபதி
பாரதி நீ என
பயந்த யானையிடம்
பார்ப்போர் சொல்லியிருந்தால் ...

இன்று நின்னுயிர்
நின்றிருக்குமோ எங்களுடன் !

ஏராளப் பாடல்கள்
இன்னும் கிடைத்திருக்கும் !

Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?


Image Courtesy pbase.com

காலை வேளையிலே
கால் கடுக்க நடக்குமவள்

மனச்சுமை கீழிறக்க
தலைச் சுமை ஏற்றிடுவாள்.

பனையில் கள்ளிறக்கி
சுண்ணாம்பு சிறிது சேர்த்து

வெள்ளை நிறத்துக்
கள்ளினைத் திரிக்க

பானையில் அதைக்கலக்கி
வீதிமுனை வந்து நிற்பாள்.

பனைஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி

ஆழாக்கு எடுத்தே
ஆள் ஆளுக்கு அளந்திடுவாள்.

இருகைப் பிடித்து
இமை மூடிப் பருகிட

தேனான பதநீர்
தித்திப்பாய் உள் இறங்கும்.

தெவிட்டாத நீரதனால், பதநீர்
நம் உடலுக்கு என்றும் இதநீர் !

-----

பதநீர் குடிப்பது போல படம் போடலாம் என்று, வழக்கம் போல கூகிளாரிடம் முறையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பனை ஓலை :))

Tuesday, November 20, 2007

இலையுதிர் காலம்



பூ மாறி ! பொழியும்
பலவண்ண இலைப்படுகை

இங்கும் அங்குமாய் ஆடி
இறகெனப் பறந்து

பூமிதனில் படர்ந்து விழும்
மனம்பரப்பா மலர்த்தூவல்.

மஞ்சளாகி, சிவப்புமாகி, சருகாகி
மறைகின்ற பசுமை.

உதிரும் இலைகளில்
உயிர் தான் இருக்குமோ ?

உறைபனி வருமுன்
உடை களையுதே மரம் !

ஆடை களைந்தே மொட்டையாய்
வாடையில் வாடுமே !

சிலிர்க்காமல் உதிர்த்து
சில்லென்ற குளிர்தாங்கி

இளந்தளிர் துளிர்க்கக் காத்திருந்து
எத்துன்பமும் தாங்கிடுமோ ?

பச்சிலைப் படரலை எண்ணி
புத்துயிர்தான் கொள்ளுமோ !

Thursday, November 15, 2007

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு



அமெரிக்கால பொறந்தாலும்
ஆப்பிரிக்கால பொறந்தாலும்,

விடுப்பு எடுக்கையில
ஓடிப்போய் கிராமத்தில்,

ஊருசனம் பார்த்துபுட்டு
உறவுகளைச் சேர்த்துக்கிட்டு,

காரு, வேன்எடுத்து
கல்லுமுள்ளுப் பாதைதாண்டி,

சென்று சேருமிடம்
குலதெய்வச் சாமிகோவில்.

மண்குதிரை அணிவகுக்க
மலைக்கும் வரவேற்பு,

மஞ்சள் ஆடைஅணிந்த
மரக்கிளைகள் ஏராளம்.

படர்ந்த மரநிழலில்
உதறிப் பாய்விரித்து,

சின்னஞ்சிறு கதைகள்
சிரிப்புக் கும்மாளங்களில்,

சிலுசிலுக்கும் மரஇலைகள்
படபடக்கும் பட்சினங்கள்.

சண்டைகொண்டு விளையாடும்
சளைக்காத சிறுவர்கூட்டம்.

பொங்கலிட்டுக் குலவையிட
சங்கமிக்கும் பெண்டிர்.

சந்தனம் பொட்டிட்டு
விழிதெரியும் குலதெய்வம்.

உறவுகள் கூடிநிற்க
படபடப்பு ஆரம்பம் ...

மாமன் மடிஅமர்த்தி
மருளும் குழந்தைக்கு,

முடியிறக்கிக் காதுகுத்த
விக்கி விக்கிஅழும்.

தேம்பி அழும்செல்லம்
தேற்றிட திராணியற்று,

பெற்றோர் மருகியதில்
உற்றார் உருகிடுவர்.

இன்றுவரை நடைமுறை,
நாளை எப்படியோ ?

Wednesday, November 14, 2007

மயில் - குழந்தைகள் கவிதை


Image Credit: Andrew Rader Studios/Biology4Kids.com

அழகுக் கொண்டை மயில்
பளபளக்கும் கண்ணு மயில்

நீளக் கழுத்து மயில்
நீண்ட தோகை மயில்

கொத்தி உண்ணும் மயில்
கத்தி உலாவும் மயில்

தத்தி நடக்கும் மயில்
தாவிப் பறக்கும் மயில் !

-----

நண்பர் ஜீவா வெங்கட்ராமன் அவர்கள் பின்னூட்டத்தில் இட்ட கவிதை. அருமையாய் எழுதியிருக்கிறார்.



நீல நிற மயிலே
நீள தோகை மயிலே

அகவல் ஓசை கேட்க
அசைந்து ஆடி வந்தேன்

தாவி தாவி வந்து
தோகை விரித்து ஆடு

மேகம் கறுத்து வருது
மேனி சிலிர்த்து ஆடு

ஆடும் அழகில் மழையோ?
மழை அழகில் ஆட்டமோ?

மழையில் நனைய வேண்டாம்
மறைய இங்கே வந்திடு.

Friday, November 9, 2007

புகைப் படப் போட்டி - November-07 - 2

இதுவும் post-production செய்யப்பட்டது. வார நாட்களில், தினமும் காலையில் இந்த சாலையில் பயணிக்காமல் இருக்க முடிவதில்லை. புரிஞ்சு போச்சா உங்களுக்கு. அதே தாங்க, அலுவலகத்திற்கு செல்லும் சாலை.



இப்படி இருந்தது முன்னர்

புகைப் படப் போட்டி - November-07 - 1

நீங்க சாலை என்று தலைப்புக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், ஆள் நடமாட்டமில்லாத சாலைகளைத் தேடுவது அறிதாக ஆகிவிட்டது. இந்த முறை கொஞ்சம் post-production செய்து களம் இறங்கியிருக்கிறேன்.

இது போட்டிக்கான முதல் படம். இங்கே ரிச்மண்டில் உள்ள ஜேம்ஸ் நதி ஓடும் இடம். குறிப்பா இந்த இடத்தை Bells Isle / Browns Isle என்று அழைக்கிறார்கள். வலதுபுறம் கீழே நதி ஓட்டத்தைப் பாருங்கள். அடிச்சிபிடிச்சு சண்டை கொள்ளும் நண்பர்களோ, காதலர்களோ, குடும்பத்தார்களோ ... இங்கு ஒரு நடை போனால், மனது இலகுவாகுவது நிச்சயம்.



இப்படி இருந்தது முன்னர்

Tuesday, November 6, 2007

குறுகும் உண்மைகளும் தழைக்கும் பொய்களும்



உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இது தான்டா,

உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரி தான்டா,

தெள்ளத் தெளிவாத் தன்பாட்டிலே சொன்னான்
பட்டுக் கோட்டை யடா,

கள்ளம் கபடம் எங்கு தேடினும்
வெள்ளைப் பொய் களடா,

கிள்ளப் படாக்கொடி முளைவிட்டு கிளைவிட்டு
காடாய்ப் போகு மடா,

துள்ளத் துடிப்பாய் அதைச்சீர் செய்தாலே
சிறு தோட்டமாய் ஆகுமடா,

பள்ளத்தில் விழும்நீர் நாளொரு வடிவம்
பெற்றே மறையு மடா,

உள்ளத்தில் எழும்சொல் வேகமாய் இருந்தால்
வெள்ளமாய் மாறு மடா,

தள்ளப் பார்க்கும் உலகை நினைத்தால்
வேதனை பொங்கு தடா,

அள்ளக் குறையா உண்மை உரைத்தால்
வாழ்வு கடலாய் நிலையுமடா.

Monday, November 5, 2007

வாஷிங்டன் வீதி உலா

சில வாரங்கள் முன்பு பயணம் சென்ற இடம், உலகப் புகழ் பெற்ற அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன். செல்வதற்கு முன்னால் சில நண்பர்களிடம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தபோது, அனைவரும் சொன்னது இது தான். என்ன இதப் போய் இவ்ளோ டீட்டெய்லா கேக்கறீங்க. இணையத்தில கிடைக்காத தகவல்களா என்றனர்.

சரி, ஏகப்பட்ட இணைய தளங்கள், ஏகப்பட்ட தகவல்கள். முக்கியமான இடங்கள சுருக்கா ஒரு நாள்ல சுத்திப் பாக்கற மாதிரி எப்படித் தகவல் சேகரிக்கிறது. யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் விபரமாச் சொன்னார். அதன்படி சென்று முக்கியமான இடங்களை ஒரு நாளில் பார்த்து, நான் பார்த்ததை எளிமையான கவிதை வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதையில் ஆங்காங்கே அடைப்புக்களில் இட்ட எண்களுக்கான படங்கள் பதிவின் கீழே.

-----

தலைநகர் வாஷிங்டன்
அடைந்த வேளையிலே

விரைந்து செல்லமுடியாமல்
வீதிமுழுதும் வாகனங்கள்

யூனியன் ரயில்நிலையம்
உள்ளே மேல்தளம்

வாகனத்தை நிறுத்த
வழிதேடி, பின்நிறுத்தி

விமான நிலையமென
வியப்பளித்த அதனைவிட்டு

வெளியேறி, தெருவை
வேகமாய்க் கடக்கையில்

கண்ணில் எதிரே, தி
கேபிடோல் ஹவுஸ் (1)

மரங்களின் ஊடே
தெரியுது அழகாய்.

அங்கிருந்து சிலதூரம்
அதன்பின் செல்லுகையில்

கண்கவர் கலை, அறிவியல்
வான்வெளி, இயற்கையென (2)

வழிநெடுகிலும் கூடங்கள்
வேண்டியன பார்த்தபின்

வானளாவி உயர்ந்த
வாஷிங்டன் மானுமென்ட்

ஐம்பது கொடிகள்
அதனைச் சுற்றி (3)

ஐம்பது மாநிலம்
அரசைச் சுற்றி

உலகப் போர்
நினைவுத் திடல் (4)

பிரதிபலிக்கும் ஏரியில்
லிங்கனின் நினைவுக்கூடம்

அதன் பிம்பம்
அதில் மிதந்து

மனதை இலகுவாக்கும்
மந்தாரக் காட்சி (5)

எதிரில்வந்து சிலதூரம்
தெருக்கடைகள் பலகடந்து

தூண்களென அணிவகுக்கும்
வானுயர்ந்த கட்டிடங்கள்

துப்பாக்கி ஏந்திய
தற்காப்புக் காவலர்கள்

இதோ அருகினில்
இருக்குது இங்கே (சத்தமின்றி !)

அனைவரும் அறிந்த
வெள்ளை மாளிகை (6)

அதன் எதிரே,
எதன் விளம்பரம் ? (7)

நின் தைரியம்
வந்தனை செய்து

ரயில் பிடித்தேன்
ரயில்நிலையம் செல்ல !

-----

படங்கள் :

படம் 1: தி கேபிடோல் ஹவுஸ்


படம் 2: இயற்கை கலைக்கூடம்


படம் 3: வாஷிங்டன் மானுமென்ட்


படம் 4: உலகப்போர் நினைவுத்திடல்


படம் 5: லிங்கன் நினைவுக்கூடம்


படம் 6: வெள்ளை மாளிகை


படம் 7: விளம்பரம்

Wednesday, October 31, 2007

மாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம்

ஒரு தாயிடம், அவள் குழந்தை வெளியில் விளையாடச் செல்லக் கெஞ்சுவதை எவ்வளவு அழகாக, எளிமையாக எழுதியிருக்கிறார்கள். இதை ஒரு folk, ஆன்மீகம், குழந்தைகள் என்று எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பாடலைப் பாடிய அருணா அவர்களின் குரலிலும் என்ன ஒரு கணீர். அருமை.

பாட ஆரம்பிக்கும் முன், புலம் பெயர்ந்த பெற்றோர்களைப் பற்றி அருணா அவர்கள் பேசிய கருத்துக்கள் அப்பட்டமான உண்மை. என்ன சொல்கிறார் என்று கேட்டுத் தான் பாருங்களேன் !!



மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)
காச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்
கை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)
கள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)
தேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே.........

Sunday, October 28, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்



விரைந்து வந்துநின்ற
அரசுப் பேருந்தில்

விறுவிறுவென ஏறும்
சுறுசுறுப்புக் கூட்டத்தினர்

ஜன்னலோரம் துண்டுபோடும்
மின்னல் மாந்தர்கள்

புகுந்து உள்ளேறும்
புத்திசாலிச் சிறுவர்கள்

இடித்துக் கீழிறங்கும்
களைத்த பயணிகள்

கூச்சலிடும் மனிதர்கள்
குழந்தையின் கூக்குரல்

திருவிழா கூட்டமென
பேருந்து நிரம்பியதில்

அமர்ந்தவர் சிலர்
அண்டிநிற்பவர் பலர்

வேகாத வெய்யிலிலும்
தேயிலைநீர் பருகி

கழுத்தில் கர்ச்சீப்போடு
கரம்சுழற்றும் ஓட்டுனர்

பயணச் சீட்டெழுதிபின்
பணவிசிறி விரலிடுக்கில்

கம்பியில் தனைச்சாய்த்து
கணக்கெழுதும் கண்டக்டர்

ஓடும் பேருந்தில்
ஓரமாய் ஜன்னலில்

காற்றின் வேகத்தில்
தேகமது சிலிர்த்திருக்க

கண்மூடித் தலைசாய்த்து
கனாக்கண்டு பயணிக்க

இனம்புரியா இன்பம்வந்து
நம்மனதைத் தாலாட்டும் !

Tuesday, October 16, 2007

ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் - செய்முறை




தேவையானவை :

பாஸ்மதி அரிசி - 1 கப்
குடைமிளகாய் - 1/2
காரட் - 1
பீன்ஸ் - 5
பட்டானி - 1/4 கப்
பேபி கார்ன் - 4
வெங்காயம் - 1
காளான் - 3
சோய் சாஸ் - 1 ஸ்பூன்
ச்சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
டொமேடோ சாஸ் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - as required

கீழே உள்ளவற்றை அறைத்து விழுதாக்கிக் கொள்ளவும்:

பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 3


செய்முறை :

1. ஒருபுறம் பாஸ்மதி அரிசியை ரைஸ் குக்கரில் (1 + 1/4) கப் நீர், சிறிது பட்டர், அரிசிக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

2. மறுபுறம் மிளகைத் தூளாக்கிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் (Baby corn தவிர்த்து) சிறிதாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். படத்தில் குடைமிளகாயும், காரட்டும் தெரிவது போல். Baby corn-ஐ வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

3. வானலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் விழுதை இட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

4. பின்பு வெங்காயத்தையும் அதில் சேர்க்கவும். லேசாக வதங்கினால் போதும். அதன் பின் மற்ற காய்கறிகளையும் சேர்க்கவும். கால்வாசி வெந்தால் போதும், அல்லது ஓவர்குக் ஆகிவிடும்.

5. மிளகு, உப்பு இவற்றையும் வதக்கலில் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கிளறி அனைத்து சாஸ்களையும் ஊற்றி மீண்டும் கிளறவும். சில நொடிகளில் அடுப்பை அனைத்துவிடலாம்.

6. பாஸ்மதி அரிசி வெந்த பின்பு, காய்கறி வதக்கலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அழகான container-ல் மாற்றி, வெங்காயத்தாள் இருந்தால், அதை சிறுசிறு வட்டங்களாக நறுக்கி, மேலாகத் தூவினால் அழகாக இருக்கும். அற்புதமான ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.



ஃப்ரைட் ரைஸ் செய்து, சுவைத்து மகிழ்ந்து சொல்லுங்கள்.

Thanks to PIT and Shri for encouraging me to post this recipe.

Questions and Suggestions are Welcome !

மழைக் காலம்



போர் கொள்ளும் மேகம்
தார் போலக் கருக்க

ஒளி மினுக்கல் மின்னி
துளித் துளியாய்த் தூவ

சிதறும் வெள்ளிக் கம்பி
உதறி மண்ணில் இறங்க



வட்ட வட்டமாய்ச் சொட்டி
வறண்ட பூமி நனைய

தென்றல் கூடிய காற்றில்
மண்ணின் வாசனை கசிய

மிதமாய் நடுக்கும் குளிரில்
இதமாய் தேகம் சிலிர்க்க

மரக்கிளை இலைகளின் இடுக்கில்
தூறல்த் துளிகள் தங்க



நடை பாதையில் ஈரம்
கேட்டுக் கதவில் ஈரம்

வீட்டுக் கூரையில் ஈரம்
ஆட்டு மந்தையில் ஈரம்

எங்கும் எதிலும் ஈரம்
பங்கு கொண்டு இருக்க

மழைக் கால ஈரம்
மனம் முழுதும் பரவியதே !

Monday, October 8, 2007

October மாத புகைப்படப் போட்டிக்கு

October மாத புகைப்படப் போட்டிக்கு

படம் : 1 - Fried Rice

முன்னெல்லாம் ப்ரியாணிக்கும் ஃப்ரைட்ரைஸ்க்கும் வித்தியாசமே தெரியாது. ஹோட்டல்களில் ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும். அம்மாவுக்குப் பண்ணத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் வித்தியாசம் தெரிஞ்சது. அதுவும் நம்ம தங்கமணி கைவண்ணம், கேக்கவே வேணாம், கலக்கிப்புடுவாங்க. அன்று காலை அவர்கள் நண்பி ஒருவரிடம் receipe வாங்கி சுடச்சுட இந்த Fried Rice செஞ்சு அசத்திட்டாங்க.




படம் : 2 - Prawns ready for masala

ப்ரான் மசாலா பண்ணலாம்னு முடிவான அன்று நம்ம புகைப்படப் பொட்டியோட சமையல்கட்டில் ஆஜர். ஆரம்பம் முதல் கடைசி வரை எடுத்த புகைப்படங்களில் சிலவே நன்றாக வந்தன. அதனால் preperation-ல் இருக்கும் படங்களில் ஒன்றை போட்டிக்கு சேர்த்திருக்கிறேன்.




கீழே உள்ளவை பார்வைக்கு

Prawn masala




Vegetable dices




Briyani

Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நீங்கள் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்திருந்தாலும், இன்னோரு முறை பாருங்க. எத்தன தடவ பார்த்தாலும் ரசிப்பிங்க ... சிரிப்பிங்க ... உத்திரவாதம் !

'மிஸ் டீன் சௌத் கரொலினா' விடம் கேட்கப்பட்ட கேள்வி :

'அமெரிக்கா' வை உலக வரை படத்தில் காணவில்லை என்கிறார்கள் சிலர் ! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அதற்கு அவருடைய பதில், மற்றும் Jimmy Kimmel அவர்களின் தமாசான விளக்கங்கள், கீழே வீடியோவில் :

Saturday, September 22, 2007

டூரிங் டாக்கீஸ்



நாலு தெருவுக்கு
நாற்பது வீடுகள்
நடுவே எழும்பியது
நமது கலைக்கூடம்.

M.G.R., சிவாஜி
இவர்கள்போல் இன்னும் பலர்
உயிர் பெற்று இன்றைக்கும்
உலா வரும் நிழற்கூடம்.

புத்தம் புதுக் காப்பி
மெத்தப் பழைய படம்
நித்தம் வருகை தரும்
மொத்த ஊரு சனம்.

மின்னும் விளக் கொளியில்
மங்கல் மணல் வெளியில்
நரை குவியல் தலைகளோடு
தரை முழுதும் மக்கள்வெள்ளம்.

கயவாடும் வில்லனை
நயமாக வீழ்த்தி
நாயகியைக் கவரும்
நாயகனைக் காணுகையில்,

காதுகள் அடைபடக்
காற்றினில் விசில் பறக்கும்
காகிதங்கள் தூள் சிதறும்
காலமெல்லாம் அது நிலைக்கும் !

-----

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

அலை கடலெனக் கூட்டம் திரண்டு கலை கட்டுகிறது மாட்டுச் சந்தை. மக்களின் கூச்சலோடு, மாக்களின் கத்தலும் காதை அடைக்கிறது. கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் ... மன்னிக்கவும், கேட்டால், வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு.

"இந்தச் சந்தையிலயாவது நாம ஒன்னு ரெண்டு மாடாவது வாங்கிப்புடணும்ணே" என்று கூவிக் கொண்டு, அக்கூட்டத்திலும் செல்வராஜை விடாது பின் தொடர்ந்தான் வேலப்பன்.

தூரத்தே ராமதுரை இரு காங்கேயம் காளைகளுடன் நின்றிருந்தார். உழைத்துக் களைத்த மாடுகளாய் நின்று கொண்டிருந்தன அவை. ஏண்ணே, ஒழச்சதெல்லாம் பத்தாதுன்னு, விக்க வேற வந்திட்டிங்களா ? பாருங்க எவ்வளவு பாவமா நிக்குதுக ரெண்டும் என்று ஆரம்பித்தான் செல்வராஜ்.

அதற்கு ராமதுரை, "ஒனக்கு ஏன்டாப்பா இத்தன அக்கற ? இந்த வெரைட்டி ஒழைக்கறதுக்குனே பொறந்ததுகடா. மத்த ஜாதி மாதிரி இத்தன வருசமினு இல்ல, சாகறவரைக்கும் ஒழைக்குமாக்கும்" என்றார் பெருமிதத்துடன் !

"அப்புறம் எதுக்கு விக்கறீங்க" என்று கிடைத்த கேப்பில் சிந்து பாடினான் வேலப்பான்.

ராமண்ணே, எம்புட்டு போகுது என்று நடந்து கொண்டே கேட்டாள் சின்னத்தாயி. ஏத்தா, ஒங்க ஊட்டுல இல்லாத மாடுகளா, நீ என்னாத்துக்கு கேக்குற என்றார்.

அதானே, நாங்கள்லாம் அப்புறம் எப்ப....டி மாடு வாங்குறது என்று இழுத்தான் செல்வராஜ்.

எப்ப 'டி'யா ? சந்தைக்குள்ள வந்து என்ன இடிச்சி தொந்தரவு பண்றேனு ஒரு வார்த்த சொன்னப் போதும், என்ன நடக்குமினு தெரியுமில்ல ... என்று மிரட்டினாள். மாட்ட வாங்க வந்தமா, போனமானு இருக்கனும். சண்டை பிடிச்சிக்கிட்டு இருந்தா வேற எவனாவுது வாங்கிட்டு போய்டுவான், இது கூட தெரியாம ... அய்யே.... என்று இழுத்தாள் சின்னா.

அப்போது அங்கு வந்த கணேசன், ராமதுரையுடன் துண்டில் கை மறைத்து விலைபேசி முடித்துவிட்டார்.

-----

மேலே உள்ள கதையை இப்போதுள்ள நடைமுறை வாழ்வில் ஒரு துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதா ?

உங்கள் ஒப்பிடுதலுடன் வந்த துறையுடன், கீழுள்ள வெண்பா (மாதிரி) பொருந்துகிறதா என்று பாருங்கள்.

பணம் பண்ணப் பணிந்து நல்ல
மனம் தன்னை இழந்து - கண்ட
காட்சி தனில் மிதந்து அன்பிலா
மாட்சியில் மறையுதே குணம்.

-----

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !

Monday, September 17, 2007

ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)

'இது உண்மைக் கதை அல்ல' என்று தொடங்கியிருந்தாலும், அதன் பொருள் நாம் அனைவரும் அறிந்ததே ! திரைத்துறையில் சந்திக்கும் 'இருவர்', தம்தமது திறமைகளால் இவ்வையத்தை (தமிழகத்தை) ஆண்டிட எண்ணுகின்றனர்.

சினிமாவில் ஜொலிக்க ப்ரயாசைப்படும் ஆனந்தன், தான் கதாநாயகனாய் நடிக்கும் முதல் படம் பாதியில் நின்றவுடன், என்ன செய்வதென்று தவிக்கிறார். வாழ்க்கையே அவ்வளவு தானோ என்று பரிதவிக்கிறார். சினிமாவில் எப்படிப் பரிமளிக்கலாம் என்று தான் எப்போதும் எண்ணுகிறார். சிறு சிறு வேடங்கள் ஏற்பதற்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்.

தமிழ்செல்வனின் அறிமுகம் கிடைத்து, நட்பைத் தொடரும்போதும் சினிமா பற்றித்தான் அதிகம் பேசுகிறார்.

இப்படி இருக்கும் ஆனந்தனை 'அரசியல்' ஆர்வம் எப்படித் தொற்றிக்கொண்டது ?

நண்பனின் செயல் ? கல்பனாவின் ஆற்றல் ?

அல்லது தான் பட்ட காயங்களால் தான் மக்களின் செல்வாக்கோடு ஆனந்தன் வெற்றி அடைந்தாரா ?

ஆனந்தனுக்கு சாத்தியமானதெனில் 'சூப்பர் நட்சத்திரம்' ஏன் அரசியல் பிரவேசம் செய்யவில்லை ?

யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள் ...

மணிரத்னம் அவர்களின் பரிமாணத்தில், மோகன்லால் - ஆனந்தன் - M.G.R. என்ன ஒரு செலக்சன் ! சுருள் முடியும், வெளிர் நிறமும், கல்யாணம் கட்டியவுடன், புஷ்பாவிடம், "ஆமா உன்னிடம் மயங்கிட்டேன், ஆனா யாரிடமும் சொல்லிடாதே" என்று காதல் மொழி உரையாடுவதும், குழந்தைகள், பெரியவர் என அனைவரிடமும் நெருங்கிப் பழகுவதும், அரசியலில் ஜொலிப்பதும், அப்படியே M.G.R.ஆக மிகத் தத்ரூபமாகச் செய்திருந்தார் மோகன்லால்.

இதோ இக்காட்சியில் M.G.R.ஐக் காணுங்கள்.

Tuesday, September 11, 2007

கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்



2007 US Open நாயகன் Roger Federer பற்றி நிறைய படித்து வருகிறோம். அவரது நிதானம் தான் அவரது மிகப் பெரிய பலம் என்பது அவர் ஆட்டத்தைப் பார்ப்போர் அறிவர். மீண்டும் US Open கோப்பையை வென்று (தொடர்ந்து நான்காவது முறை) சாதனை புரிந்திருக்கும் அவருக்கு, என்னால் மில்லியன் கணக்கில் டாலர்கள் தர இயலாவிட்டாலும் ;-) எனது மிகச் சுருக்கமான கவிதை கீழே.

------------

நடை திறந்து நீ நடக்க
மடை திறந்த வெள்ளமென
படபடக்கும் மனம் படைத்த
பார்வையாளர்(கள்) ஏராளம்

களம் புகும் உன் முகம்
வளம் தரும் காட்சிதனில்
இனம் புரியா உத்வேகம் எங்கள்
மனம் பரவி நிற்கச் செய்வாய்

நின்று நிதானித்து
எங்கு அடித்தாலும்
தங்கு தடையின்றி
பந்து பயணிக்கும்

ஏஸ், டியூஸ், டைப்ரேக்
எல்லாம் சாதகமாய்
ஆக்கும் உந்தன் நிதானம்
அடையுமே வெற்றிக் கோப்பை.

எதிராளி களைத்திருக்க ...
பந்து(கள்) களைத்திருக்க ...
மட்டை(கள்) களைத்திருக்க ...
வர்னணையாளர்(கள்) களைத்திருக்க ...
ஆடுகளமும் களைத்திருக்கும் !!!

களைப்பறியா உந்தனுளம்
தளர்வின்றி நிமிர்ந்திருக்கும்.

கொஞ்சமே (!) போராடி
குவிக்கும் வெற்றிகளால்
கோப்பையிலே உன் குடியிருப்பு !

------------------

சில தொகுப்புகள் youtube-லிருந்து :




Friday, August 24, 2007

கனவு மெய்ப்பட வேண்டும்

அந்தக் காலத்தில் தான் தலைவன் வரவை எதிர் பார்த்து தலைவி காத்திருந்ததாக நிறையப் படித்திருக்கிறோம். தற்போது உள்ள கால மாற்றத்தில், நிறைய தலைவர்கள் காத்திருக்கிறார்கள் ;-) அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நில வதன் ஒளி
ஒளி படர் வெளி
வெளி அதில் மதில்
மதில் அதில் நீ.

நீ காக்கும் நேரம்
நேரம் கடத்தி நான்
நான் வரச் சினம்
சினம் கொள் மனம்.

மனம் அதில் அலை
அலை ஒடுங்கிய நிலை
நிலை கொண்ட மண்
மண் அதில் செடி.

செடி அதில் கொடி
கொடி அதை ஒடி
ஒடித் ததைப் பிடி
பிடித் ததில் அடி.

அடித் தெனை அனை
அனைத் தெனை வளை
வளைத் தெனை இழு
இழுத் தெனை முகர்.

முகர் உன் சுவாசம்
சுவாசம் அதில் நேசம்
நேசம் நித்தம் பொளி
பொளி வது அருள்.

அருள் அது பெற்று
பெற் றதைப் பேணி
பேணி உனை நாணி
நாணும் எனைக் காண்.

காணும் உனை மறவேன்
மறவா துனை இருக்க
இருப்பில் நித்தமும் கனவு
கனவு மெய்ப்பட வேண்டும் !

(எழுத்துப் பிழை இருப்பின் சொல்லுங்க நண்பர்களே !)

Friday, August 10, 2007

வாத்து (குழந்தைகள் கவிதை)

வாத்தின் உருவமும், அதன் நிறமும், நடையும் பார்ப்பதற்கு நமக்கே அழகாய் இருக்கும். குழந்தைகளுக்கு அதைவிட மேலாய் ஆனந்தம். வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிறு குளத்தில் நிறைய வாத்துக்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் போது அவற்றிற்கு ரொட்டித் துண்டுகள் போட்டு, குழந்தைகள் படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அதன் நினைவாய் தோன்றிய கவிதை கீழே.



வெள்ளை நிற வாத்து
காவி மூக்கை சாய்த்து

தட்டை காலை வீசியே
தத்தித் தத்தி நடந்திடும்

கிட்ட நீயும் செல்லவே
நீரில் தாவி நீந்திடும் !

Thursday, August 9, 2007

நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)

முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்போருக்கு, புலம் பெயர்ந்த அனேகரின் குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை, அதிலும் வாசிக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஆனந்தம். அதே நிலை தான் எனக்கும்.

அடுத்த சந்ததியினருக்கு நாம் நமது மொழியைக் கற்றுக் கொடுக்காவிடில், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க காப்பியங்கள், அதன் பின் வந்த இலக்கியங்கள், இன்று நாம் விவாதிக்கும் பல நிகழ்வுகள், இதெல்லாம் எதற்காக ?

மொழியும், இயற்கையும், உணவும், பாசமும் எல்லாம் கலந்து, நமது பெற்றோர் நமக்குச் சொல்லியதை, நாம் நமது சந்ததியினருக்குச் சொல்லித்தர வேண்டாமா ?

எனது இரண்டாவது கவிதை (நிலாச் சோறு):



வட்ட நிலா மேலே
தட்டில் சோறு கீழே
நிலா பார்த்து நாமும்
நித்தம் உண்ணலாமா ?!

நெய் சோறு கொஞ்சம்
பருப்பு சோறு கொஞ்சம்
அழகாய் நீயும் சாப்பிடு
அன்னை சொல் கேட்டிடு !

அண்ணாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாய்
பகிர்ந்து நீயும் கொடுத்திடு
பாசத்தோடு வளர்ந்திடு.

Tuesday, August 7, 2007

யானை (குழந்தைகள் கவிதை)

நாம் படித்த அளவிற்கு இக்காலக் குழந்தைகள் தமிழில் பாடல்கள் படிப்பதில்லை (சினிமா பாடல்கள் அல்ல :)). அவர்கள் தமிழில் பேசுவதே அறிதாய் இருக்கிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் சிதைந்துவிடுமோ நம் தமிழ் என்று எண்ணத் தோன்றுகிறது.

வலையில் நாம் தமிழில் இடுகைகள் இட்டாலும், வளையவரும் நம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. இதற்கு பல பெற்றோர் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அதைப் பற்றிப் பிறகு வேறு பதிவுகளில் பார்ப்போம்.

எளிமையாய் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி எழுதலாம் என்றால், எளிமை தான் கடினம் என்று புரிந்தது. ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது எனது முதல் முயற்சி. படித்து, நன்றாக இருந்தாலும் / திருத்தங்கள் தேவைப்பட்டாலும் மறவாமல் தெரிவியுங்கள். -- நன்றி.



கரு கரு யானை
பட பட காது
குரு குரு கண்ணு
துரு துரு தும்பிக்கை
பெரிய பெரிய வயிறு
டம் டம் காலு
கம்பி முடி வாலு

------

ஆற்றில் நீரை உறிஞ்சி
பீச்சி அடிக்கும் யானை

உச்சி மர இலையையும்
உறித்து உண்ணும் யானை

கோவில் வாசல் நின்று
ஆசி வழங்கும் யானை

காசு தரும் குழந்தைகளை
முதுகில் ஏற்றும் யானை

பாடி ஆடும் சிறுவர்களோடு
பந்தடிக்கும் யானை

Friday, August 3, 2007

வரவு எட்டணா செலவு பத்தணா -- கண்ணதாசன்

"பாமா விஜயம்" திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னால் வந்தாலும், பின்னாளில் பல முறை பார்த்த திரைப்ப(ா)டங்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம் என்ற எண்ணம் தோன்றாமல், இயல்பு வாழ்க்கை, இது தான் எதார்த்தம் என்று படம் முழுதும் காட்டியது கே.பாலச்சந்தர் அவர்களின் திறமை.

என்ன தான் தற்போதைய திரைப்படங்கள் அதிரவைத்தாலும், இன்னும் சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் அவை நம்மை அழவைக்கும் என்பது நிச்சயம்.

கே.பி. தான் இமயம் என்றால், நம் கவியரசர் முழுப் படத்தையும் நறுக்கென்று அவருக்கே உரிய எளிய (நாமெல்லாம் படிக்கனுமே) வரிகளில் பாடலாக்கி விட்டார்.

தற்போது, இந்த நிலையில் இருந்து நாம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறோமோ என்று தோன்றுகின்றது. வளர்ந்து வரும் பொருளாதாரம். அதை வளர்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள். நல்ல முன்னேற்றமே.

வரவு, செலவு என்பதைப் பொருத்து இந்தப் பாடல் (எனக்கு) தற்கால வாழ்வு முறைக்கு முறண்பட்டிருந்தாலும், நம்ம நடிகர், நடிகையர் மோகம் இன்னும் குறைந்த பாடில்லை என்று துணிச்சலாய்ச் சொல்ல முடியும். நடிகர் ரஜினியின் நியூயார்க் / நியூஜெர்சி வருகையில், நம் இளைய கணிப்பொறியாளர்கள் படையைப் பார்த்தால், அதிரத்தான் செய்கிறது ;-)

சரி, பாடலுக்குச் செல்வோம். பாடலைக் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.



Thanks senthil5000 for youtube


வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தனா குந்தனா

1.2.3.4.5.6.7.8.

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தணா குந்தணா

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது
ஐயா நிம்மதி இருக்காது

அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது
அம்மா உள்ளதும் கிடைக்காது

வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது

வயசுப் பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது

வாடகை சோபா ... இருபது ரூபா
விலைக்கு வாங்கினா ... முப்பதே ரூபா !

வரவு எட்டணா ...

அடங்கா மனைவி அடிமைப் புருசன் குடும்பத்துக் காகாது
ஐயா குடும்பத்துக் காகாது

யானையைப் போலே பூனையும் தின்னால் ஜீரணம் ஆகாது
ஐயா ஜீரணம் ஆகாது

பச்சைக் கிளிகள் பறப்பதைப் பார்த்தா பருந்துக்குப் பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது

பணத்தைப் பார்த்தால் கவுரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

தங்கச் சங்கிலி ... இரவல் வாங்கினா ...
தவறிப் போச்சுன்னா ... தகிடத் தந்தனா ...

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக ?
அம்மா இங்கே எதுக்காக ?

மாதர்களெல்லாம் கன்னிகளாக மாறனும் அதுக்காக
அப்பா மாறனும் அதுக்காக

கன்னிகளாக மாறிய பின்னால் பிள்ளைகள் எதுக்காக ?
ஐயா பிள்ளைகள் எதுக்காக ?

காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக ?
அப்பா வேறே எதுக்காக

பட்டால் தெரியும் ... பழசும் புதுசும் ...
கெட்டால் தெரியும் ... கேள்வியும் பதிலும் ...

வரவு எட்டணா செலவு பத்தணா ...

Thursday, August 2, 2007

அம்மா எப்பவும் இப்படித்தான்

மார்க்கெட்டில் இருந்து வரும்போது, அப்பப்பா.... என்ன வெய்யில் என்று அலுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் பார்வதி. ஹாலில் மின் விசிறியைத் தட்டிவிட்டு அதன் கீழே அமர்ந்தார். கழுத்தில் வழியும் வியர்வையை, சேலைத் தலைப்பால் சுற்றித் துடைத்து விட்டுக் கொண்டவர், ஏதோ பொறி தட்டியவராய், சேலைத்தலைப்பைப் பார்த்தார், காய்கறிக் கூடையைக் கொட்டிப் பார்த்தார். காணவில்லை. மின்விசிறி படபடக்க, பார்வதியும் அதனோடு சேர்ந்து கொண்டார்.

"இப்பத்தானே உள்ளே வந்தே, எங்கேம்மா திரும்பக் கெளம்பிட்டே" என்ற திலகத்தின் சொற்களைக் கேட்டவாறே தெருவில் நடையைத் துரிதப்படுத்தினார் பார்வதி.

கல்லு, மண்ணு, அங்கே அங்கே தோண்டியிருந்த குழிகள், அதில் தேங்கிய நேற்றைய மழை நீர் இவைகள் தான் பார்வதியின் கணகளில் பட்டன. எதை அவர் தேடுகிறாரோ அது தென்படவில்லை.

மாடியிலிருந்து கீழே இறங்கிய ஜெகன், "அம்மா குரல் கேட்டதே, எங்கே இப்ப காணோம்" என்று திலகத்திடம் கேட்டான்.

"என்ன நடக்குதுனு தெரியல. மார்க்கெட் போய்ட்டு வந்தவங்க, வந்த வேகத்திலேயே கெளம்பிட்டாங்க. ஆமா, நீ எதுக்கு அம்மாவத் தேடுற" என்றாள்.

"ஒன்னுமில்ல, சும்மாதான்" என்று சோபாவில் அமர்ந்து டி.வியை ஆன் செய்தான்.

அலைந்து திரிந்து வீடு திரும்பியவர், "கொடுத்திட்டேன்னா, கொடுத்திட்டேனு சொல்ல வேண்டியது தானே, எதுக்கு இந்தக் கத்து கத்துறான், எல்லாரயும் மாதிரியா நான் இருக்கேன், என்ன பார்த்தா ஏமாத்தறவ மாதிரியா இருக்கு, பேசிகிட்டே போறான்" என்று கடைக்காரனைத் திட்டிக் கொட்டினார்.

பார்வதியின் குரலைக் கேட்டு, "அம்மா, நேத்து ஒரு ஐநூறு ரூபாய் கேட்டேனே", என்று சோபாவில் இருந்தே குரல் கொடுத்தான் ஜெகன்.

"ஏன்டா, அம்மா படபடனு இருக்காங்க, அதுபத்தி ஏதாவது கவலைப் பட்டியா ? காசு தான் உனக்கு ரொம்ப முக்கியமாப் போச்சு" என்று வாயிலில் இருந்தே கத்தினாள் திலகம்.

"அம்மா, இப்பவாவது சொல்லு, அப்படி என்னதான் மார்க்கெட்டுல நடந்துச்சு" என்று கேட்ட திலகத்திடம், அம்மா சொன்னாள்

கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் இது தான் வாங்கினேன். கொடுத்த 50 ரூபாய்க்கு மீதி 5 ரூபா கடைக்காரன் தரணும். அவன் கொடுத்திட்டேன்கறான். ஆனா அந்த அஞ்சு ரூபா எங்கே போச்சுனே தெரியல, அதான் தேடிக்கிட்டு இருக்கேன் என்றார்.

"அம்மா, என்னோட ஐநூறு என்னாச்சு" என்று மீண்டும் குரல் விட்டான் ஜெகன்.

"இருப்பா வர்றேன்" என்று மகனுக்குச் சொல்லி, மொத்தமா அஞ்சு ரூபா, எனக்கென்னமோ கடைக்காரன் மேல தான் சந்தேகமா இருக்கு. அத்தனை பேரு வரும்போது அவன் சில்லரை தர மறக்க வாய்ப்பு இருக்கு, என்னடான்னா என்னை அல்லவா திட்டறான், மனதுக்குள்ளே நொந்து கொண்டார்.

கொட்டிய கூடையிலிருந்து காய்கறிகளை பிரித்து எடுத்து வைத்தாள் திலகம். ஒரு வெங்காயத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது அந்தப் பழைய ஐந்து ரூபாய் நாணயம்.

"அம்மா, இதோ இருக்கு பாரு, நீ பாடுபட்டு தேடிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய்" என்று ஹாலில் இருந்து கத்தினாள் திலகம்.

அளவற்ற சந்தோசத்துடன் வாயிலிலிருந்து எழுந்து உள்ளே வந்தார் பார்வதி. "அப்பாடா கெடச்சிருச்சு, நம்ம பணம் எங்கே போயிடும்" என்று திலகத்தின் கையில் இருந்து நாணயத்தை வாங்கிக் கொண்டார். "மருதமல முருகன் அருள் நமக்கு எப்பவும் உண்டுனு" உங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார் என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

அடுக்களைக்குச் சென்றவர், மகனின் நினைவு வரவே, "ஏப்பா ஜெகா எவ்வளவு கேட்டே நீ, ஐநூறு தானே ? இந்தா" என்று தனது 'பிகிபேங்க்' அஞ்சறைப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

பணத்தை மகன் வாங்கிச் செல்வதை சந்தோசமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.

Monday, July 30, 2007

உரையாடும் விழிகள்



இன்று அவள் பெயரை
எப்படியும் அறிந்துகொள்ள

ஏகாந்தமாய் உடையணிந்து
இங்குமங்கும் அலைகையில்

கடைவீட்டு ஜன்னல்வழி
கருகரு இரு விழிகள் !

மொய்க்கும் வண்டாய்
படபடக்கும் விழியிதழ்கள்

இமைமூடும் நொடிப்பொழுதும்
சளசளக்கும் சிந்தனைகள்

வழியும் வார்த்தைகள்
பளபளக்கும் இமைவழியே

சீர்செய்யும் கேசமது
சருக்கி முன்விழ

சிறிய இடைவெளியில்
தெரியும் விழிகண்டு

தடுக்கித் தடுமாறும்
அதனழகில் எந்தன் உயிர்

அசையும் விழிகளிலே
ஆயிரம் சேதிகள்

அற்புதங்கள் பல கலந்து
கலகலப்பாய் கதைக்கும் விழி

விரல்நுனியால் மையிட்ட அவள்
வேகத்திலே நிதானம்

காணும் என் விழிகள்
நாணித் தணிந்திருக்க

கயலூ... என்றவள் அம்மாவின்
காதடைக்கும் சத்தத்தில்

தேனினும் இனிதாய்த்
தெரிந்தது அவள் பெயர் !

அழகே உன்பெயரே
துள்ளும் விழி தானா ?!

Friday, July 27, 2007

கணினி ஓவியப் போட்டி - 3

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது மூன்றாவது படம்.

"ஆத்தா நான் பாசாயிட்டேன்" அப்படினு தலைப்பு வைக்கலாம், ஆனா commedy-யா போயிரதுனால

தலைப்பு : ஆனந்தம்
வரைதூரிகை : mspaint

Thursday, July 26, 2007

கணினி ஓவியப் போட்டி - 2

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது இரண்டாவது படம்

தலைப்பு : தேடல்
வரைதூரிகை : mspaint

கணினி ஓவியப் போட்டி - 1

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது முதல் படம்

தலைப்பு : மழை வரும் மாலை
வரைதூரிகை : mspaint

கல்வியா ? செல்வமா ? வீரமா ? - கண்ணதாசன்

சரஸ்வதி சபதம் எனும் திரைப் படத்தில் கவியரசரின் கருத்தாளமிக்க வரிகள்.

எவ்வளவு எதார்த்தம்:

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்



Thanks to senthil5000 for the youtube

கல்வியா ? செல்வமா ? வீரமா ?
அன்னையா ? தந்தையா ? தெய்வமா ?

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? -- இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?

கற்றோர்க்கு பொருளின்றி பசிதீருமா ? -- பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா ?

கற்றாலும், பெற்றாலும் பலமாகுமா ? -- வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

படித்தவன், படைத்தவன் யாராயினும் -- பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது -- அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா ? -- காலம்
முற்றும் பொருள் வளர்க்கும் மதி வேண்டுமா ?

தோங்கும் பகைநடுங்கும் வனம் வேண்டுமா ? -- இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?


அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? என்ற கவியரசரின் வரிகளை சற்று மாற்றி

அன்னையா ? தங்கையா ? மனைவியா ? என்று எழுதியிருந்தால் எப்படி இருக்கும் ? தற்போது இம்மூவரும் ஒன்றாக வாய்ப்பேயில்லை என்று வருத்தம் தான் குடிகொள்கிறது. அதே சமயம்

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?


என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!! சாத்தியம் இல்லையென்றாலும் கனவாவது காணுவோம் !!!

Wednesday, July 25, 2007

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ - பாரதிதாசன்

'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று தமிழுக்குப் பெயரிட்டு அழகு பார்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உன்னதமான வரிகள். பாடலைப் படிக்கும் போதே சிலிர்ப்பு ஏற்படுகிறதே, யாராவது பாடிக் கேட்டால் எப்படி இருக்கும், அதுவும் காட்சியோடு !

'பெற்றோர் ஆவல்' எனும் தலைப்பின் கீழ் வரும் பாடல் இச்சுட்டியை தட்டி காட்சியைக் காணுங்கள்

மகாகவி பாரதியாரின் மனைவி அவர்கள் மரணப்படுக்கையில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்டதாக குமரன் அவர்கள் பதிவில் படித்தேன். இப்பாடலுக்கு அருமையான விளக்கங்களையும், பின்னூட்டம் இட்டவர்களின் தகவல்களையும் இங்கே காணலாம்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

இப்பாடலைப் பற்றி வலையின் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thunbam Nergayil is in Or Iravu where the MD is Sudarsanam. But this song was much earliersung by MM Dandapani Desigar in Kacherikal. AVM approached him to use the same tune in Or Iravu.

Tuesday, July 24, 2007

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - M.S.சுப்புலக்ஷ்மி

இந்தப் பாடல் எவ்வளவு பிரசித்தம் என்று வலையில் கூகளிட்டபோது வியந்து தான் போனேன். ஆசையோடு நம் பதிவில் இடலாம் என்றால், தமிழ் வலைப்பதிவுகளிலேயே ஏகப்பட்ட பேர் பதிந்திருக்கிறார்கள். ஆதலால், ஒரு சிறு வித்தியாசம் செய்து, M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் வீடியோவுடன், ராஜாஜி அவர்களின் வரிகளும் சேர்த்து இங்கே பதிவிடுகிறேன்.

M.S. அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.



Thanks to navarasan for the youtube

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

(குறையொன்றும்)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

பி.கு. குமரன், எளிமையான பாடல் வரிசையில் இப்பாடலும் வருவதால், விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன் ! :)

Monday, July 23, 2007

மூவிங் சேல் (Moving Sale)



அதிகாலை இரண்டு மணிக்கு ட்வின் சிட்டி எனப்படும் மினியாபோலிஸ் - செயின்ட்பால் விமான நிலையத்தில் தரையிறங்கியது நார்த் வெஸ்ட் ஏர்லயன்ஸ் விமானம்.

சிங்கப்பூரிலிருந்து எட்டு மணி நேரம் கழித்து ஜப்பானில் ஒரு தரையிரக்கம். ப்ளேன் மாற்றி அடுத்து பத்து மணி நேரம் கழித்து இப்போது. இதுவரையிலும் வந்ததே அப்பாடா என்று இருந்தது. இங்கிருந்து, அரை அல்லது முக்கால் மணி நேரம் தான் டென்வர் என்று நண்பன் இளங்கோ கூறியது நினைவில் இருந்ததால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் நந்தகுமாரன். நந்தாவுக்கு இது தான் முதல் முறை இத்தனை தூர விமானப் பயணம்.

டென்வருக்கு ப்ளேன் நாலு மணிக்கு என்று அறிவிப்புப் பலகை சொல்லியது. இன்னும் இரண்டு மணி நேரம் என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒரு காபி சாப்பிடலாம் என்று சுற்றிலும் பார்த்தான், எட்ட ஒரு கடை தெரியவே அங்கே சென்று, பாக்கெட்டில் கையை விட்டவன் திடுக்கிட்டான்.

முகம் கருத்து, அங்கேயே பெட்டியை எல்லாம் பிரித்துப் போட்டு, தேடிய பர்ஸைக் காணாததால் பரிதவித்தான். அவ்வழியே சென்ற ஒரு வாட்ட சாட்டமான ஆப்பிரிக்க அமெரிக்கர், நந்தாவை ஒரு பார்வை பார்த்து.

Hey, waz up ? Any thing I can help you ? என்றார்.

திரு திரு முழி (வழக்கமான) ஒன்றை முழித்து, It's ok, I can manage என்றான்.

குனிந்து நிமிர்ந்து தேடியதில், என்னது ஒரே எடஞ்சலா இருக்கு என்று இடுப்பில் தொங்கிய pouch-ஐ பின்னுக்குத் தள்ளிய போது தான் நினைவுக்கு வந்தது, பாஸ்போர்ட், செல், பர்ஸ் எல்லாவற்றையும் ப்ளேன் மாறியவுடன் அதனுள் வைத்தது.

"உனக்குப் பொறுமையே இல்ல, எதுக்குக்கெடுத்தாலும் tension. ஒரு ரெண்டு செகண்ட் யோசிக்கறதில்லை". மனதில் உதித்தது மனைவியின் உளரல், மன்னிக்கவும் குரல்.

"நீங்க போய் செட்டில் ஆகிட்டு கூப்பிட்டுக்கங்க. அதுவரை நான் இந்தியா செல்கிறேன்" என்று அம்மா வீட்டிற்கு ஈரோடு சென்றுவிட்டாள் தேன்மொழி. அதான் நந்தா மட்டும் சிங்கையிலிருந்து இங்கே வந்திருக்கிறான்.

கொடுமையான அபார்ட்மென்ட் வாழ்க்கை, மூனு பெட்ரூமில் ஒன்பது பேர். அதைவிடக் கொடுமை அப்பார்ட்மென்ட் neatness. அதனினும் கொடுமை தினம் தினம் Interview. என்னவோ படித்து, என்ன வெல்லாமோ skill set வளர்த்து, எந்த எந்த job-ற்கோ interview attend பண்ணிக் கொண்டிருந்தான்.

ஆச்சு ரெண்டு மாசம். எல்லாம் தாண்டி, எதோ ஒரு skill set-ல வேலையும் கிடைத்தது. அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் புரிந்தது. மனதுள் சிரித்துக் கொண்டான்.

இன்று சனிக்கிழமை. டென்வரிலிருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டும். consultancy-யில் இருந்து e-ticket மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ரெண்டாவது ஸ்டேட் தள்ளியிருக்கிற டெக்சாஸிற்கு ஒரு சுற்று சுற்றி, ஒரு முறை தரையிறக்கம் லாஸ் வேகஸில் வேறு.

தேதிகளையும், பெயரையும் சரிபார்த்து print பண்ணிக் கொண்டான். திங்கள் இரவு ஹூஸ்டனில் நண்பன் ரவியுடன் கழித்தான். பழங்கதைகள் பல பேசி இரவு படுக்கச் செல்கையில், ஒரே சிந்தனை. போயும் போயும் செவ்வாய்கிழமை வேலையை ஆரம்பிக்க வேண்டுமா ? புதன் கிழமை ஆரம்பிச்சா எப்படி இருக்கும் ? பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்களே ! என்று சிந்தனையின் எல்லையில் இருந்த நந்தாவை, ரவியின் குரல் களைத்தது. "என்ன மாப்ள ஒரே flashback-ஆ ஓடுதா ?"

நந்தாவின் மனதுள் "சொல்லலாமா ? வேணாமா ? சொன்னா, டேய் நீ இருக்கறது அமெரிக்கா-ல, அதுவும் IT job பாக்கறவன். நீயே இப்படி-னு திட்டுவானோ" என்று, ஒன்னுமில்ல மாப்ள, வீட்டு நினைப்பு என்று சமாளித்தான்.

Consultancy-ல எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் நந்தா. பெரிய சண்டையே நடந்தது தொலைபேசியில். "ஒன்னும் செய்ய முடியாது நந்தா, afterall ஒரு கிழமைக்காக ஏன் இவ்வளவு tension ஆகறீங்க, நீங்க செவ்வய்க்கிழமை client எடத்தில இருக்கீங்க" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிவிட்டார்கள்.

வேலையும் ஓரளவு துரிதகதி அடைந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், ஒருவாரத்தில் தனி அபார்ட்மென்ட் பார்த்து, பத்து நாள் கழித்து வருவதாகச் சொல்லிப் பதிந்து கொண்டான். தேன்மொழிக்கு தொலைபேசியில் எல்லா விபரங்களும் சொல்லி அவளும் பதினைந்து நாட்கள் கழித்து வருவதாகச் சொன்னாள்.

அபார்ட்மென்ட் புக் பண்ணியாச்சு. அடுத்து வீட்டு சாமான்கள் வாங்க வேணுமே. நந்தாவுக்கு, ரவி யோசனை சொன்னான். "மாப்ள, நம்ம இந்தியன் ஸ்டோர்களில் 'மூவிங்க் சேல்ஸ்' notice போட்டிருப்பாங்க, அங்க போகும் போதெல்லாம் பாரு. அப்புறம் உங்க office-லயும் பாரு. உனக்குத் தேவையானது cheap-ஆ கிடைக்கும்" என்று.

microwave - $80

21" TV - $ 350

Honda Accord 1998 - Only 95 k, Brand new tires - $8000 OBO

பெரிய list-ல் நந்தா, அவனுக்கு தேவையானதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அட போங்கப்பா ... இவ்ளோ $ குடுக்கறதக்கு, நான் புதுசே வாங்கிடுவேன். பழசுக்கு எதுக்கு இவ்ள தெண்டம் அழுகணும் என்று எறிச்சல் பட்டான் ரவியிடம்.

ரவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத நந்தா, அனைத்துமே புதிதாய் வாங்கிச் சேர்த்தான். எல்லாம் 'தேனை' impress பண்ண வேண்டுமென்ற தலையாய நோக்கமும் அதற்குக் காரணம். மற்றொன்று பழையதை வாங்கி ஏதாவது repair-னா, அதுக்குக் வேறு அழ வேண்டும்.

தேனும் வந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், project முடிந்து விட்டது. மீண்டும் Interview படலம் ஆரம்பம் ஆனது. திரும்பவும் எந்த எந்த job க்கோ interview attend பண்ணி கடைசியில், ப்ஃரீமாண்டில் வேலை கிடைத்தது.

கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா ? பாருங்க எல்லாத்தையும் புதுசா வாங்கி வச்சிருக்கீங்க. இங்க இருந்து எடுத்திக்கிட்டுப் போற மாதிரியாவா இருக்கு. என் ப்ஃரண்ட் லஷ்மி வீட்டுக்காரருக்கெல்லாம் Relocation cost consultancy-யே குடுத்துச்சாம். அந்த மாதிரி உங்க consultancy குடுக்குமா ? அதுவும் இல்ல. எப்பத் தான் திருந்தப் போறீங்களோ ...

எல்லாம் செவ்வாய்க் கிழமை வேலைக்குச் சேர்ந்த நேரம் தான் என்று நொந்து கொண்டான் நந்தா.

மறுநாள், அனைத்து இந்தியன் ஸ்டோர்களிலும் நந்தா, மூவிங் சேல்ஸ் poster ஒட்டிக் கொண்டிருந்தான்.

Friday, July 20, 2007

பச்சை மாமலை போல் மேனி - உன்னிகிருஷ்ணன்

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரம்.

மெல்லிய இசையில், கசிந்து வழிகிறது உன்னிகிருஷ்ணனின் குரல். கண்ணை மூடி கண்ணனை நினைக்க உள்ளத்துள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் வரிகள் :

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி


கண்ணனைக் கண்டும், பாடலையும் கேட்டும், வாசித்தும் மகிழுங்கள்.



Thanks to myalias for the youtube

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதருகின்றேன்
ஆருளர்களை கணமா
அரங்கமா நகருளானேன்

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

Thursday, July 19, 2007

இந்தியா 2020

இந்தியா 2020ல் எப்படி எல்லாம் இருக்கும் என்று நம்ம அப்துல் கலாம் அவர்களும், நாமளும் கணவு கண்டுகொண்டு இருந்தால், அப்பவும் நமது பத்திரிகைகள் எந்த மாதிரி செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்கன்னு பாருங்க. படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்.




நன்றி : மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு.

Wednesday, July 18, 2007

திருவிளையாடல் - இன்றொரு நாள் போதுமா ?

திருவிளையாடல் படம் என்றவுடன் நம் யாவர் மனதிலும் சட்டென்று நினைவில் வரும் காட்சி, 'தருமி' நாகேஷ் 'பரமசிவன்' சிவாஜியுடன் மண்டபத்தில் கவிதை பற்றி விவாதிப்பது.

அதே சமயம் அப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அற்புதம். நம்ம கவியரசர் இயற்றிய இந்தப் பாடலில் தான் எத்தனை அகந்தை, எத்தனை கர்வம், என் பாட்டுக்கு உன்னோட நாடு ஈடாகுமா என்னும் திமிர்.

அட, பாலையாவின் பாத்திரப் படைப்பை தாங்க சொல்றேன். எப்படி கவியரசரால் இத்தனை தத்ரூபமாக, எளிமையாக, பாத்திரத்தின் குணத்தை பாட்டில் எழுத முடிகிறது ?

கவியரசர் தான் அப்படி என்றால், பாடிய பாலமுரளி, அடா அடா, என்ன ஒரு லயிப்பு பாடுவதில். இவர்களுக்கெல்லாம் போட்டியாய் பாலையாவின் முகபாவமும், அவர்தம் சிஷ்யர்களின் ஆமோதிப்பும், என்னவென்று வியப்பது. மொத்தத்தில் ஒரு தர்பாருக்கே உயிரூட்டியிருக்கிறார்கள். பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.



Thanks to senthil5000 for the youtube

ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ?
நான் பாட இன்றொரு நாள் போதுமா ?
நாதமா ? கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

புதுநாதமா ? சங்கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

ராகமா ? சுகராகமா ? கானமா ? தேவகானமா ?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா ?
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

குழலென்றும் ...
யாழென்றும் ...
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்

அழியாத கலையென்று எனைப் பாடுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி ... தோடீ ....
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் ...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
மோகனம் ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா ...
என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம், நானடா ...

நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்

யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி்யில்லை


என்று பாரதி மற்ற புலவர்களைப் பாராட்டியிருந்தாலும். அவரும் கூட "உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று கடைசியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாழ்த்தினாலும் ஏசும், தாழ்த்தினாலும் ஏசும் வையகம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் போலும். எதெல்லாம் நிலையில்லை / நிலைத்திருக்கும் என்றும் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார் பாரதி.

பாரதியின் பல அற்புதமான பாடல்களுள் மிக அற்புதமான பாடல் 'நிற்பதுவே நடப்பதுவே'. பாரதி திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது இப்பாடல். இசைஞானியின் அற்புதமான இசை, நல்ல காட்சியமைப்பு, ஹரீஸ் ராகவேந்திராவின் குரல், ஷாயஜி அப்படியே இதற்கெல்லாம் உயிர் தந்து நம்முன் பாரதியாக ... காட்சியும், பாடல் வரிகளும் கீழே



Thanks to gr8member for the youtube

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ... நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே ... நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

வானகமே இளவெயிலே மரச்செரிவே ... நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே ... நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்.

Tuesday, July 17, 2007

photography-in-tamil புகைப்படப் போட்டிக்கு

போகஹான்டாஸ் ஏரி, வர்ஜீனியா



போகஹான்டாஸ் ஏரி (மற்றுமோர் கோணம்), வர்ஜீனியா



http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_17.html

ஹரிவராசனம் - K.J.யேசுதாஸ்

எவ்வளவோ திரைப்படப் பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும், பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே ! காலத்துக்கும் அழியாதவை பக்தி பாடல்கள் என்பது எனது எண்ணம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய பாடல்கள் இன்றும் நாம் கேட்கிறோம் என்றால், அதன் பின் வந்த பலபாடல்களும் இதற்கு உதாரணம் சொல்லலாம். அப்படி ஒன்று தான் 'ஹரிவராசனம்' பாடல்.

கணீர் குரலும், தெள்ளிய உச்சரிப்பும், மிதமான இசையும் நம்மை மயங்க வைக்கும் என்பது நிச்சயம்.

சுவாமி ஐயப்பனையும், பாடல் வரிகளையும் கண்டு, யேசுதாஸ் அவர்களின் குரலைக் கேட்டும் மகிழுங்கள்.



Thanks to shankermcsa for the youtube

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் ஷக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரஹதாயுகம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்
த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

பவபயாபகம் பாபுகாவஹம்
புவனமோகனம் பூதிபூஷனம்
தவளவாகனம் திவ்யவாரனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

Friday, July 6, 2007

நிலவு

வட்டப் பட்டமென வான்சுற்றி
தட்டும் மேளதின் வடிவே

காரிருளில் வெண் பொட்டென
வலம்வரும் குட்டி நிலவே

புள்ளி வானின்
வெள்ளிப் புன் சிரிப்பே

மாதமொருமுறை தேய்ந்து வளரும்
வட்டநிலவே வான்முட்டும் நிலவே

நின்றன் வெள்ளை நிறம்
என்றும் கொள்ளை கொள்ளுமே

நின்றன் ஒளிக்கதிர் எம்மை
தென்றலாய் தீண்டிச் செல்லுமே

மனம்

ஏற்றிவைத்த விளக்கு
காற்றிலசையும் கலம்
சேற்றிலாடும் மலர்
தொற்றியாடும் தளிர்
திரியிலாடும் சுடர்
ஆட்டங் களினூடே
சுற்றிவரும் புலம்

ஓவியம்

வண்ணக் கலவையில்
எண்ணத் தூறல்

உருவிலா உருவத்தை
உருப்பெற வைத்திடும்

காணப்பெறா காட்சிகளை
கண்முன்னே காட்டிடும்

கோடிட்டே காவியத்தை
புவிதனில் சேர்த்திடும்

வரலாற்றின் சூழல்தனை
வண்ணமாய் வடித்திடும்

...

வண்ணம் சிதற
எண்ணம் சிதறா

படைப்பு பளபளக்கும்
படைப்பாளி ஓய்ந்திருப்பான்