மாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம்
ஒரு தாயிடம், அவள் குழந்தை வெளியில் விளையாடச் செல்லக் கெஞ்சுவதை எவ்வளவு அழகாக, எளிமையாக எழுதியிருக்கிறார்கள். இதை ஒரு folk, ஆன்மீகம், குழந்தைகள் என்று எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பாடலைப் பாடிய அருணா அவர்களின் குரலிலும் என்ன ஒரு கணீர். அருமை.
பாட ஆரம்பிக்கும் முன், புலம் பெயர்ந்த பெற்றோர்களைப் பற்றி அருணா அவர்கள் பேசிய கருத்துக்கள் அப்பட்டமான உண்மை. என்ன சொல்கிறார் என்று கேட்டுத் தான் பாருங்களேன் !!
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)
காச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்
கை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
காச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)
கள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
காட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)
தேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே.........
2 மறுமொழி(கள்):
ஆம் சதாங்கா, அருமையான பாடல் அல்லவா!
முன்னுரையும் கேட்டேன்!
வாங்க ஜீவா,
எவ்வளவோ hi-fi யாக வாழ்க்கை முறை மாறினாலும், எளிமைக்கு எப்பவுமே ஒரு அழகு தான். அதற்கு இந்தப் பாடல் வரிகள் ஒரு சிறந்த உதாரணம்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !