Thursday, March 22, 2012

தோற்றத்தில் என்ன இருக்கிறது ?


ம்மில் சிலர், உடுத்தும் துணி ஆகட்டும், கால் நுழைக்கும் காலணி ஆகட்டும், பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதாவது, நிறுவனக் குறியீடு பார்த்து வாங்குவார்கள்! காலணிக்கு இந்த நிறுவனம். மேலாடைக்கு இந்த நிறுவனம். கைக்கெடிகாரம், கால்சட்டை, காதணி, கைவளை, சாந்து மற்றும் சந்தனப் பொட்டு, வாகனம், வீட்டுப் பொருட்கள் என அது அதற்கு பேர்பெற்ற‌ நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.

பேர்பெற்ற நிறுவனங்களின் பொருள் வாங்குவதற்கும், சாதாரண நிறுவனப் பொருள் வாங்குவதற்கும் முக்கிய காரணிகள், விலை மற்றும் அதன் தரம். முன்ன‌தில் விலை, மற்றும் த‌ர‌ம் அதிக‌ம். பின்ன‌தில் விலையும் த‌ர‌மும் குறைவே. தங்கள் வசதிக்கேற்பப் பின்ன‌தைப் ப‌ல‌ரும், முன்னதைச் சில‌ரும் வாங்கி ப‌ய‌ன‌டைகிறார்க‌ள்.

முன்ன‌தில் உடை உடுத்திய‌ ஆணோ, பெண்ணோ, அப்படியெ லாவகமாக வந்து தங்கள் ஊர்தியில் இருந்து இறங்கினால், அங்கே அவ‌ர்க‌ளுக்குக் கிடைக்கும் ம‌ரியாதையே த‌னி தான். "திரைப்படங்களின் தாக்கமா, அல்லது, 'இது என்னால் முடியவில்லை இவன் செய்கிறான்' என்றா?, அல்லது வேறு என்னென்ன காரணங்களாக‌ இருக்க முடியும்?" என்று யோசித்தால், உள‌விய‌ல் ரீதியாக‌ அனுகினால் தான் இத‌ற்கு விடை காண‌ முடியும் போல‌.

கோவில் விஷேஷ‌ங்கள், வீட்டுத் திரும‌ண‌ங்கள், போன்ற இடங்களில் விலை மிகுதி போன்று போலியாக‌வோ, அல்ல‌து உணமையிலேயே விலை மிகுதியாகவோ ப‌ள‌ப‌ள‌க்கும் ஆடை அணிக‌ல‌ண்க‌ள் பூண்ட இச்சிலரின் அல‌ங்கார‌ம் ப‌ல‌ரின் க‌ண்களைப் படுத்தி எடுக்கும். ப‌ல‌ க‌ண‌ங்களில் 'ஏன் இப்படித் த‌ங்க‌ளை அல‌ங்கார‌ம் செய்து காட்சிப் பொருட்க‌ளாய் வ‌ல‌ம் வ‌ருகிறார்கள்' என்ற எண்ண‌ம் எழும்.

இப்ப‌டிப் ப‌ள‌ ப‌ளா என்று இல்லாம‌ல், 'கந்தையாணாலும் கசக்கிக் கட்டு' என்று சாத‌ர‌ண‌மாக‌ இருந்தால் தான் என்ன‌? இவ்வுல‌க‌ம் ந‌ம்மை எவ்வாறு பார்க்கும், ந‌ட‌த்தும்?

த‌லைக்குமேல‌ ஏறி உட்காருமா? எட்டி உதைக்குமா? திட்டுமா? வில்லெடுத்து எல்லாம் அடிக்குமா?

'நன்றாக உடுத்தாமல் தோற்றத்தில் பொலிவில்லாமல் ஏழையாய்த் தோற்றம் தரும் இறைவா, உன்னையே இவ்வுலகம் இப்படித் தானே நடத்திற்று' என்று வேடிக்கையாக‌ வெண்பா வ‌டிக்கிறார் ஆசுக‌வி காள‌மேக‌ம்.

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.

தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் க‌ண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் காள‌மேக‌ம்.

ச‌மீப‌த்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நடந்த சம்பவம். வேறொரு குழுவினரைச் சந்திக்க வேண்டி, இவரும் இவரது குழுவிலிருந்து வில்லியம் என்ற அமெரிக்கரும் காத்திருக்கிறார்கள். நம் நண்பர் சாதாரண தோற்றத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப இருப்பவர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் பேர்வழி என்று சொல்லி கால்மணி நேரம் கழித்து வந்த இருவர், இவரைப் பார்த்து, 'யாரு வில்லியம்?' என்றிருக்கிறார்கள். நம் நண்பர் வில்லியத்தைக் காண்பிக்க. அவரிடம் ஓடி, 'ஹாய்... ஐ ஆம் ...' என்று சொல்லி இருவரும் அறிமுகம் செய்து கொண்டு, உரையாடலைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நம் நண்பரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வில்லியமும் எவ்வளவோ சங்கேதமாகச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. வந்த இருவரும் நம் நாட்டினர். ந‌ண்ப‌ர் இதுபோல‌ நிறைய‌ பார்த்திருப்பார் போல‌, அவ‌ர் முக‌த்தில் ச‌ல‌ன‌மில்லை. வில்லிய‌த்திற்கு ந‌ம் ந‌ண்பர் தான் மேலாள‌ர். ஆனால், க‌டைசி வ‌ரை ந‌ண்ப‌ர் அதைக் காட்டிக் கொள்ள‌வில்லை.

இதில், வெள்ளைக்கார‌ன் போல் தோற்ற‌மில்லாத‌, கோட் சூட் அணியாத‌ ந‌ம் ந‌ண்ப‌ரின் பேரில் த‌வ‌றா? அல்ல‌து ந‌ம் இந்திய‌ ம‌ன‌ங்க‌ளின் மீது த‌வ‌றா? இந்த எண்ண ஓட்டம் இந்தியா ம‌ற்றுமில்லை, பொதுவாக உலகெங்கிலும் உண்டு என்றே தோன்றுகிற‌து.


ஒரு காட்சி இங்கு அமெரிக்காவில். ஒரு கடையில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவரும், நல்ல தோற்றம் கொண்ட ஒரு வெள்ளைக்காரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் க‌டைக்கு ச‌ர‌க்கு இற‌க்க‌ வ‌ருகிறார் ஒரு வெள்ளையர். நேரே மற்ற வெள்ளைக்கார‌ரிட‌ம் சென்று, 'ஹலோ அலெக்ஸ், ...' என்று கைகுலுக்கி உரையாட‌லைத் தொட‌ங்குகிறார். ந‌ம் ந‌ண்ப‌ருக்கு நேர்ந்த‌ அதே க‌தி தான் இங்கு 'அலெக்ஸ்' என்ற‌ ஆப்பிரிக்க‌ அமெரிக்க‌ப் பெண்ம‌ணிக்கும். இத்த‌னைக்கும் அலெக்ஸ் கோட் சூட் எல்லாம் அணிந்திருந்தார், ம‌ற்ற‌ வெள்ளையர் ஓர‌ள‌வுக்கு அலுவ‌ல‌க‌ உடையில் இருந்தார். இருப்பினும், அலெக்ஸை ச‌ரியாக‌க் க‌ண்டு கொள்ளாது ஏன்?

இப்பொழுதெல்லாம் இங்கே அலுவ‌ல‌க‌ங்க‌ளில், மேற்க‌ண்ட‌ காட்சிக‌ளில் எவ்வாறு ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும், எவ‌ரிட‌ம் எங்கு எப்படிப் பேச‌ வேண்டும் என்றெல்லாம் வ‌குப்பெடுக்கிறார்க‌ள். இந்த‌ நிலை இந்தியாவிலும் க‌டைபிடிக்க‌ வேண்டும். எல்லோரும் ச‌ம‌மாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் !!!

(படங்கள்: நன்றி இணையம்)

Thursday, March 15, 2012

கொடுப்பது கடினம் !


பத்திருபது ஆண்டுகள் முன்னர், நூறு ரூபாய் என்றாலே அது பெரிய பணம். இப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனப்பாங்கு தழைத்தோங்குகிறது. காரணம், தாராளமயமாக்கல், வேலை உற்பத்தி, வாழ்க்கைத் தரம், பன்னாட்டு முதலீடுகள், இப்படிப் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். நடந்து போனவன் சைக்கிள் வாங்கினான், சைக்கிளில் போனவன் பைக் வாங்கினான், பைக் காராச்சு, கார் வேனாச்சு, அதினும் மேலாய் எல்லாம் சொகுசாச்சு ... இதெல்லாம் நாம் பெற்றவை. பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொடுப்பதற்கு ?

கிணறென்றிருந்தால் அதில் நீரென்றிருக்கும். எடுக்க எடுக்கத் தான் சுரக்கும். இல்லை என்றால் அது பாழும் கிணறு. 'தொட்டனைத்தூறும் மணற் கேணி' என்றார் வள்ளுவர். வீட்டினுள்ளே புகும் காற்று வெளியே செல்லவும் வழி இருக்க வேண்டும், அதற்கு வீடமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்கிறது மனை சாஸ்த்திரம். உள்ளே... வெளியே.... ஆனால், இக்கால வாழ்க்கை உள்ளே மட்டும் தான் செயல்படுகிறது, அநேக அப்பாட்மென்ட்கள் போல‌..,. வெளியேயும் செயல்பட்டால் நம் வாழ்வு மேலும் சிறக்கும் அல்லவா!

வாரியார் தன் வ‌ள்ள‌லார் உரையில்:

இந்த‌ உல‌க‌த்திலே ப‌க்த‌ர்க‌ள் ப‌லர். ஞானிக‌ள் ப‌ல‌ர். வீர‌ர்க‌ள் ப‌ல‌ர். சிற‌ந்த‌ அடியார்க‌ள் ப‌ல‌ர். பதிவிர‌தைக‌ள் ப‌ல‌ர். ஆனால், அள்ளிக் கொடுத்த‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர் ! வ‌ள்ள‌ல்க‌ளுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முத‌லேழு வ‌ள்ள‌ல், இடையேழு வ‌ள்ள‌ல், க‌டையேழு வ‌ள்ள‌ல். ஒருவ‌ன் விடிய‌ விடிய‌ப் பேசுவான், அற‌ஞ்செய்ய‌ மாட்டான். நீர் மேல் குமிழிக்கு நிக‌ர் என்ப‌ர். ஆனால், அற‌ம் என்று சொன்னால், ஐம்ப‌து மைல் ஓடுவான். கொடுப்ப‌து தான் க‌டின‌ம். அதைத்தான் ஔவையார்,

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர் ...

வேட்டையாடி அர‌ண்ம‌னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ன். வ‌ழியிலே ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌ள்ளாடித் த‌விப்ப‌தைக் க‌ண்டான். உள்ள‌ம் துடித்த‌து, க‌ண்ணீர் வ‌டிந்த‌து. என் நாட்டிலே இப்ப‌டி ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌விக்க‌லாமா என்று தேரை விட்டு இற‌ங்கி த‌ன் ம‌ணித்தேரிலே முல்லைக் கொடியைப் ப‌ட‌ர‌ விட்டு ந‌ட‌ந்து போனான் அர‌ண்ம‌னைக்கு.

இதில் என்ன‌ கிடைக்கிற‌து?

செடி கொடிக‌ளுக்கு ஓர‌றிவு
ந‌த்தைக்கும் ச‌ங்குக்கும் ஈர‌றிவு
க‌றையானுக்கும் எறும்புக்கும் மூவ‌றிவு
ந‌ண்டுக்கும் வ‌ண்டுக்கும் நால‌றிவு
வில‌ங்குக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கும் ஐய‌றிவு
மாவும் மாக்க‌ளும் ஐய‌றிவு என‌வே என்ப‌து தொல்காப்பிய‌ம்
ம‌க்க‌ள் தாமே ஆற‌றிவு !

ம‌னிதனாக‌ப் பிற‌ந்த‌ எல்லோருக்குமே ஆற‌றிவு கிடையாது. ஐய‌றிவோடு வில‌ங்குக‌ள் போல‌த் தான் வாழ்கிறார்க‌ள் ப‌ல‌ர். சில‌ வீட்டில் போய், 'அம்மா, ஐயா எங்க?' என்று கேட்டால், 'அது எங்க‌ போச்சோ தெரியவில்லை' என்பாள் அஃறினையில் வைத்து. ஆக‌வே, செடிக்கு ஒரே அறிவு, கொடிக்கும் ஒரே அறிவு. அந்த‌ ஓர‌றிவு ப‌டைத்த‌ முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுப்பானானால், ஆறறிவு ப‌டைத்த‌த‌ற்கு என்ன‌ த‌ர‌மாட்டான்?!

க‌பில‌ர் என்ற‌ அந்த‌ண‌ப் புல‌வ‌ர் பாரியை ஒரு பாட‌ல் பாடின‌வுட‌ன், முன்னூறு கிராம‌ம் கொடுத்தான். அத‌னால் தான் சுந்த‌ர‌மூர்த்தி நாய‌னார், கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பானில்லை. வ‌ன்புக‌ழ் பாரி காரி என்பார் அருண‌கிரிநாத‌ர். அள்ளிக் கொடுக்கிற‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர். க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தை அறுத்துக் கொடுத்தான் க‌ர்ண‌ன். சிர‌ம் கொடுக்க‌ முய‌ன்றான் கும‌ண‌ன். ஆனால், அப்ப‌டி அள்ளி அள்ளி கொடுத்த‌வ‌ங்க‌ எல்லாம் வ‌ள்ள‌ல்.

நம்மால இவ்வாறெல்லாம் அள்ளி அள்ளித் தர முடியுமா?
'எவன் வூட்டுக் காச எவனுக்குத் தர்றது' என்பது தான் நம் சிந்தை எல்லாம். கொடுப்பது கடினம் !

***

கீர‌ன் த‌ன் திரும‌ந்திர‌ உரையில்:

நாம் தவம் தவம் என்று சொல்கிறோமே, பன்னெடுங்காலம் நீரிலே நின்றார்கள். நெருப்பிலே நின்றார்கள். ஊசி முனையிலே ஒரு காலைப் பொருத்திக் கொண்டு நின்றார்கள். என இந்த முனிவர் தவம் செய்தார் என்றெல்லாம் படிக்கின்றோமே, அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக் கூடிய கருத்து, இல்லாவிட்டால் அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக்கூடிய பலன், மிக மிக எளிதாகவே நமக்குக் கிடைத்து விடும் என எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். யாருக்கும் செலவில்லாமல், போகிற போக்கில், அனைத்து உயிர்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு செயலைச் செய்தால் போதும். அதற்காக சிவபெருமான் மகிழ்ந்து நமக்கு மிகப் பெரிய தவப் பலனைத் தருகிறான் என்பது திருமூலர் கருத்து. அவர் சொல்கிறார்,

யாவ‌ர்க்குமாம் இறைவ‌ர்க்கு ஒரு ப‌ச்சிலை
யாவ‌ர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவ‌ர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவ‌ர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே


***

இறைவனுக்குத் தங்கத் தேரிழுத்து, உடல் வருத்தி அலகு குத்தி எல்லாம் இல்லாமல் மிக மிக எளிதாகப் பச்சிலை கொடுத்து அர்ச்சித்தாலே புண்ணியம் என்கிறது முதல் வரி. ப‌ச்சிலை ப‌றித்துச் சென்று கோவிலில் கொடுக்க‌ முடியவில்லையா, அப்படியே போகிற வழியில் புல்லிருந்தால் பிடுங்கி அங்கிருக்கும் ஒரு பசுவுக்கு அளித்தால் புண்ணியம் என்கிறது இரண்டாவது வரி. 'புல்லுக்கு எங்கே செல்வேன்?, பசுவுக்கு என்ன செய்வேன்?, இதெல்லாம் கடினம்' என்கிறீர்களா, உண்ணும் போது ஒரு கைபிடி அப்படியே எடுத்து காகத்துக்கோ மற்ற ஜீவராசிகளுக்கு அளியுங்கள் புண்ணியம் என்கிறது மூன்றாவது வரி. இதுவும் கஷ்டம்னா, பேசாம வாய மூடிகிட்டு இருங்க, அதுவே பெரும் புண்ணியம் என்கிறது நான்காவது வரி.



இந்த நான்காவது வரியில் லேசாகப் புன்னகை சேர்த்தாவது நாம் தரலாமே ! மேற்கண்டவை நம் தமிழ் இலக்கிய ச‌முத்திர‌த்தில் இருந்து எடுக்கப்பெற்ற சிறு உதாரணங்களே ! பணம் தந்தால் தான் வள்ளல் என்றில்லை. நம்மால் இயன்றதை (மேற்கண்ட வரிகளில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சேர்த்து) பிறருக்குக் கொடுப்போம். உங்களால் என்ன தரமுடியும் என்று நீங்கள் சிந்தித்தால், 'என்னால் என்ன தரமுடியும்?' என்ற நம் ராமேஸ்வரத்து மசூதி தெரு நாயகன், அப்துல் கலாம் ஐயா அவர்களின் தளத்தைச் சென்று பாருங்கள். சுட்டி கீழே.

What can I give ?



படங்கள் நன்றி: இணையம்