Monday, February 23, 2009

பிடித்ததும் பிடிக்காததும்



'நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க' என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன்.

அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க இலக்கியம், மார்க்ஸியம், அம்பேத்கார்,புதுக்கவிதை,ஹைகூ,திரைத்துறை என பாகுபாடின்றி அவர்கள் உரையாடல் இருந்தது.

சற்று நேரத்தில் இனிமைவேந்தன் அருகில் அமர்ந்திருந்த வயதான எழுத்தாளர் ஒருவர், 'எங்கே உன் படைப்புக்களை கொடு' என்று என்னிடம் இருந்த பைலை நோக்கினார்.

"ஏம்பா, என்ன சொல்ல வர்றே ? கதையை எழுதி, துண்டு துண்டா வெட்டினா மாதிரி இருக்கு. இதைக் கவிதை என்று வேறு சொல்கிறாயே !!!" என்றவுடன், அந்த அறையில் சிதறிய சில்லரைகளாய் சிரிப்பொலி.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், சோமேஷ் !!!

-----

"வாங்கம்மா !", எழுந்து இருகரம் கூப்பி வரவேற்றார் தலைமை ஆசிரியர் வேதசகாயம்.

என்னிடம் இருந்து சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை வாங்கி புரட்டினார். ம்ம்ம்ம்ம். பி.காம் முடிச்சு, எம்.ஸி.ஏ பண்ணியிருக்கீங்க. இரண்டொரு மார்க் வித்தியாசத்தில், தங்கபதக்கத்தை இழந்திருக்கிறீர்கள்.

பட்டென்று கோப்பை மூடி, "ஏம்மா, தெரியாம தான் கேக்கறேன், அவனவன் இந்த காலத்தில கண்டதையும் படிச்சிட்டு, கடல் கடந்து போறான், கை நிறைய சம்பளம் வாங்கறான். நீ என்னடான்னா, இந்த கிராமத்து பள்ளிகூடத்தில வேலை செய்றேன்னு சொல்றியே !!! பேசாம அமெரிக்கா, ஐரோப்பானு போயி சந்தோசமா இரு" என என்னை வழி அனுப்புதலில் ஆர்வலரானார் வேதசகாயம்.

"சொன்னா கேட்டா தானே !! என்னமோ படிச்ச பள்ளிகூடத்துக்கு விசுவாசமா இருப்பேனு சபதம் மாதிரியில்ல போட்டு கிராமத்துக்கு போனே ! இப்ப என்ன ஆச்சு!!", வெளியில் கோபம் கொண்டவராகவும், உள்ளில் ஆனந்த நிலையிலும் இருந்தார் என் தாய் ரேவதி.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், தமிழ்செல்வி !!!

-----

தமிழகத்தின் தலைசிறந்த கணபதி ஸ்தபதி அவர்களைப் பார்க்கப்போகிறேன். எனது கல்வி சான்றிதழ்களுடன் நான் வரைந்த படங்கள் சிலவற்றையும் எடுத்து சென்றேன்.

"வாப்பா அம்பி... ம்ம்ம் படங்கள் எல்லாம் வெகு ஜோர். நல்லா வரைஞ்சிருக்கியே." என வெகுவாக என்னைப் பாராட்டினார்.

"சரி நான் என்ன பண்ணட்டும்" என்பது போல் என்னைப் பார்த்தார்.

"காசியில் அப்பா உங்களை சந்திச்சாங்களாம். இப்ப தான் எம்.எஸ்.ஸி கணினி முடிச்சிருக்கேன். உங்கள் நண்பர் அலுவலத்தில் வேலை கிடைக்க சிபாரிசு செய்வதா சொன்னிங்களாம் ..." என இழுத்தேன்.

"நமக்கெதற்கு கணிப்பொறி எல்லாம் ?!! அதை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு வா. தமிழில் குறும்படம் ஒன்று வரைபடத்தில் செய்யலாம் என இருக்கிறேன். எங்கள் கலைக் குழுவில் இணைத்துக் கொள்கிறேன். உனக்கு பேரும் புகழும் கிடைப்பது நிச்சயம்" என்றார்.

ஒரு கனம் ஆனந்தத்தில் திகைத்தாலும், குடும்ப சூழல் இதற்கு இடம் தரவில்லை.

'பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்ச உடனே வரைகலையில உன்னை சேர்த்திருப்போமே !! இதுக்கு எம்.எஸ்.ஸி வரைக்கும் படித்து, நேரத்தையும் காலத்தையும் வீணடித்திருக்க வேண்டாமே ?!!' பெற்றோரின் குரல் தீர்கமாய்.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், ஜெயபிரகாஷ் !!!

-----

"டேய், மச்சா உனக்கு என்ன தான் ஆச்சு ! அல்ட்ரா மாடர்ன் பையனா சென்னையில வளர்ந்திட்டு, கிராமத்தில போய் விவசாயம் பண்றேன்னு சொல்றே!", நிஜமாவே அதிர்ந்து போனார்கள் என் நண்பர்கள்.

"எனக்கென்னமோ படிச்சிட்டு நாலு சுவத்துக்குள்ள உக்கார்ந்து, கண்டதையும் பேசி, காலம் தள்ளுவதில் இஷ்டம் இல்லை. அதான் இயற்கையோட ஒன்றி என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப தான், விவசாயம் சரினு பட்டுச்சு" என நான் சொல்வதை, ஆர்வத்துடன் ஏதோ கதை சொல்வது போல கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சாரி மை டியர் சன், உனக்கு அதான் இஷ்டம் என்றால், எங்களுக்கு அதான் கஷ்டம்". வழக்கம் போல ஆணித்தரமாக அப்பாவின் வாக்கியம். சொல்லிவிட்டு விறுவிறு என அங்கிருந்து நகன்றார்.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், நகுலன் !!!

-----

"பசங்களா என்ன எல்லோரும் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க. புரியுது ! புரியுது !! இன்னிக்கு அலுவலகத்தில் ஆட்குறைப்பு, அதானே பலத்த யோசனை !!! கவலையே படாதீங்க. நம்மை எல்லாம் அலுவலகத்தில் இருந்து தூக்கட்டும். இப்ப வெளியில் வேலை கிடைப்பதும் பெரும் பாடு தான். புதுசா வந்த பிரெஸிடென்ட் ஐயா வேற, விசா கோட்டா எல்லாம் ரெண்டு வருசத்துக்கு இல்லைனு சொல்லிட்டாரு. இதெல்லாம் நம்ம பெத்தவங்களுக்கு எடுத்து சொல்லி நமக்குப் பிடிச்ச துறையில போய் சேர்ந்துப்போம்" என சரமாய் தொடுத்தான் விஸ்வேஷ்.

அவனது யோசனை எல்லோருக்கும் பிடித்துப் போக, துள்ளி எழுந்தனர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரம். தொலைபேசிக்கு பெயர் பெற்ற அலுவலகத்தில் ஆட்குறைப்பு அறிவிப்பிற்கு பதில், "இன்னும் நிறைய இடங்கள் காலியாக இருக்கிறது, அதனால் எங்கள் அலுவலகத்தில் ஆள் நிறைப்பு செய்கிறோம்" என்றனர்.

'பிடிக்காத வேலையை தொடருணுமே' என பொத்தென்று விழுந்து மீண்டும் நினைவுகளில் மூழ்கினர் அனைவரும் !!!

பெப்ரவரி 27, 2009 யூத்ஃபுல் விகடனில்

Saturday, February 14, 2009

உலுக்கும் உறுமி மேளம்

கோவில் திருவிழாக்கள்
குலதெய்வ வழிபாடு,
எங்கிலும் ஒலித்தாலும்
இங்கு வலி(மை) அதிகம் !

உறுமல் ஒலி எழுப்பும்
இடிபடும் உறுமியோடு,
சுருண்டு படுத்துறங்கும்
இடுப்பில் கைக் குழந்தை.

த‌ம் வாழ்வின் தேவைகளை
தலையில் வைத்த கனம்,
உற்ற‌வ‌ன் ப‌க்க‌ம் வ‌ர‌
உறுமி அடித்திடுவாள்.

கூடும் கூட்டத்திலே
ஆட்டம் பாட்டமுண்டு,
சாட்டை சுழன்றாட
சதைகிழியும் காட்சியுண்டு.

கரணம் தப்பாது
மரணம் ஜெயித்து,
சாகசங்கள் பல புரியும்
யாசகம் வேண்டும் பிள்ளைகள்.

கோடிகளில் அடித்து
குளித்து மகிழ்பவரில், தெருக்
கோடியில் அடிபடும்
இவ‌ர்க‌ள் மேல்.

அடிமேல் அடிவைக்க‌
அதிருது சதங்கை,
வேர்த்த உடம்பிலே
உதிருது உதிரம்.

உறுமி மேளச் சத்தம்
உலுக்கும் அடி வயிற்றை,
சேகரிக்கும் சில்லரைகள்
நிரப்பும் அவர் வயிற்றை.

வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி,
தொடரும் பயணத்தில்
தினமும் எழுப்பும் ஒலி.

என்றோ கேட்ட‌ ஒலி
இன்றும் சுழ‌ல்கிற‌து,
அன்று பார்த்த‌ வ‌லி
இன்றும் (மனம்) க‌ன‌க்கிற‌து.