நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்
யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி்யில்லை
என்று பாரதி மற்ற புலவர்களைப் பாராட்டியிருந்தாலும். அவரும் கூட "உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று கடைசியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாழ்த்தினாலும் ஏசும், தாழ்த்தினாலும் ஏசும் வையகம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் போலும். எதெல்லாம் நிலையில்லை / நிலைத்திருக்கும் என்றும் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார் பாரதி.
பாரதியின் பல அற்புதமான பாடல்களுள் மிக அற்புதமான பாடல் 'நிற்பதுவே நடப்பதுவே'. பாரதி திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது இப்பாடல். இசைஞானியின் அற்புதமான இசை, நல்ல காட்சியமைப்பு, ஹரீஸ் ராகவேந்திராவின் குரல், ஷாயஜி அப்படியே இதற்கெல்லாம் உயிர் தந்து நம்முன் பாரதியாக ... காட்சியும், பாடல் வரிகளும் கீழே
Thanks to gr8member for the youtube
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ... நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே ... நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே இளவெயிலே மரச்செரிவே ... நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே ... நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்.
7 மறுமொழி(கள்):
இது மாயாவாதம் என்னும் தத்துவதின்
அடிப்படையில் மஹாகவி எழுதிய
பாடல்.
மாயவாதம் என்னவென்று அறிய
மார்க்சியம் படிக்கவேண்டும்.
மார்க்சியம் படிப்பின் 'உலகமெல்லாம்
உன் வசமாகும்.'
இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
சதங்கா. இந்தப் பாடலைப் பற்றி சில இடுகைகளை முன்பு இட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்துகள் சொல்லுங்கள்.
http://nambharathi.blogspot.com/2005/11/1.html
http://nambharathi.blogspot.com/2005/11/2.html
http://nambharathi.blogspot.com/2005/11/54-1.html
ஜீவி,
வருகைக்கும், மாயாவாத தத்துவ விளக்கத்திற்கும் நன்றி.
குமரன்,
வருகைக்கு நன்றி. உங்கள் இடுகைகளை வாசித்தேன். மிக அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள். பாரதியின் வரிகளையே சொல்கிறேன். 'மேனி சிலிர்க்குது' உங்கள் விளக்கங்களை வாசிக்கையிலே ... அருமை, அருமை.
பாரட்டிற்கு நன்றி சதங்கா. மகாகவியின் பாடலமுதைப் பருகியவர் அதன் சுவை அறிவர் என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு.
பாடலுக்கு பாரதி கொடுத்த தலைப்பு - 'மெய்யா? பொய்யா?'
இது மாயாவாதம் எனும் தத்துவத்தை புகழ்வது போல் இகழும் straw-man approach. கடைசி இரு வரிகளை நன்றாக கவனியுங்கள்.
"காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்"
அப்படியெனில் அனைத்தும் மாயை என்று எப்படி ஆகும்.
- அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!!!
Post a Comment
Please share your thoughts, if you like this post !