Thursday, June 11, 2015

நரியைப் பரியாக்கி

ஆவுடையார் கோயில்

குதிரை வாங்கச் சென்ற அமைச்சனைக் காணாது வருந்தினான் மன்னன்.  ‘யாரங்கே?’ என்று உரக்கக் கூவியதில், அருகில் இருந்த இரு காவலர்கள் பதறியடித்துப் பயபக்தியோடு மன்னனை நெருங்கினர்.  அமைச்சன் சென்ற வழியில் சென்று தகவல் அறிந்து வரப் பணித்தான் வீரர்கள் இருவரையும்.  மன்னனின் கட்டளைக்கேற்ப, இருவரும் தத்தம் குதிரைகளில் தாவி ஏறி, அமைச்சன் சென்ற வழித்தடத்தில் பயணிக்கலாயினர்.  மதுரையில் இருந்து தொண்டி மீமிசல் நோக்கிய பயணம்.  சென்ற வேகத்தில் அதே தினத்தில் திரும்பிய வீரர்கள் இருவரும் தாம் கண்டதை மன்னனிடம் விவரிக்க, விறகடுப்புச் செங்கணலாய் விரிந்தன அவன் விழிகள்.

மேலும் சினந்து, ’மன்னனின் கட்டளை மீறிய அமைச்சனை இழுத்து வாருங்கள்’ என்று ஒரு சிறு படையை, வீரர்கள் இருவரோடும் அனுப்பினான்.  

அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையில், ‘குருந்த மரத்து நிழலில் குருவின் திருவடியில்’ உலகப் பற்றறுத்து பேரின்பத்தில் திளைத்திருந்த அமைச்சருக்கு, ‘தான் எதற்காக இங்கு வந்தோம்!’ என்று நினைவூட்டினர் சிறு படையோடு வந்த வீரர்கள் இருவரும்.  ‘நிச்சயமற்ற வாழ்வின்’ நினைவிற்கு மீண்டு வந்த அமைச்சர் மிகவும் வருந்தினார்.  மன்னனின் கட்டளை மீறியதை எண்ணி மனம் நொந்து கொண்டார்.  குருவின் காலடியில் விழுந்து கதறினார்.  நின்பால் அன்பு கொண்டு, ‘நமச்சிவாய வாழ்க’ என்று நின்னைச் சரணைடைந்த எனக்கு, இதற்கும் வழிகாட்ட வேண்டும் என்று மனமுருக வேண்டினார்.

‘ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் மன்னனை வந்து சேரும் எனச் சொல்’ என்று திருவாய் மலர்ந்தருளினார் குரு அமைச்சரிடம்.  அமைச்சரும் அவ்வாறு சொல்ல, குதிரை வீரர்கள் மன்னனிடம் செய்தியை எடுத்துச் சென்றனர்.


நரியைப் பரியாக்கி, பரிகள் மீண்டும் நரிகளாய் காட்டுக்குள் ஓடி, அமைச்சனை மன்னன் பல வகையிலும் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வரச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து, கரையை அடைக்காமல் போக்கு காட்டி, மன்னனால் முதுகில் பிரம்படி பட்டு, அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து - கிழவி வந்தி; அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

குருந்த மரத்தடியில் உபதேசம் கேட்ட அமைச்சர் மணிவாசகர் அப்படி என்ன செய்தார் அங்கே என்று பார்த்தால், குருவாய் வந்த ஆவுடையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்.  குருவாய் வந்த சிவனின் கட்டளைக்கேற்ப, சிவகணங்களை வைத்து ஓரே இரவில் கோயில் கட்டப்பட்டதாகவும் இவ்வட்டார மக்கள் சொல்கின்றனர்.  இன்றும் சில தூண்களில் சிற்பங்கள் முழுமை பெறாமல் பாதியில் நிற்பதை, கோயில் எழுப்பிக் கொண்டிருக்கையில், பொழுது விடிய ஆரம்பிக்கும் பொழுது சிவகணங்கள் அப்படியே விட்டுச் சென்றதால் தான் என்று நம்பப்படுகிறது.  

இக்கோயிலின் சிறப்புக்கள் என்று சொன்னால், சொல்லில் சொல்லி மாளாது.  எடுத்த எடுப்பிலேயே நான்கைந்து மானுடர் உயரத்தில் எழுப்பிய மண்டபம்.  மண்டபத்தைத் தாங்கும் நுண்ணிய வேலைப்பாடுடைய தூண்கள்.  தூண்களில் ஆளுயரச் சிலைகள்.  மணிவாகர், நரியைப் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாக ஓட்டிச் சென்ற சிவபெருமான், மன்னன் அரிமர்த்தனன் ஆகியோருக்கு கற்சிலைகள் உள்ளன.  பக்கத்தே ‘கொடுங்கை’ கூரை.   வரிசையாய் அடுக்கிய மரச் சட்டங்கள், அதைத் கோர்த்திருக்கும் கம்பிகள், இவற்றைத் தாங்கும் ஆணிகள், என வியந்து மேலே பார்த்தால், அனைத்தும் கல்லிலே!!  வெள்ளைகாரன் காலத்தில், ‘இது மரமா, கல்லா?’ எனச் சுட்டுப் பார்த்தததில், அதில் ஏற்பட்ட ஓட்டையைக் கூரையில் இன்றும் காணலாம்.  

பல சிற்பங்கள் எங்கும் காணாத அளவிற்கு தத்ரூபமகாவும், மிகுந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுவது வெகு சிறப்பு.  ஒரு தூணில் இருக்கும் சிலையை எடுத்துக் கொண்டால், தலையில் கொண்டையும், நெற்றியில் பட்டையும், முகத்தில் முருக்கிய அல்லது படர்ந்து பரந்த மீசையும், புன்முறுவலும், கழுத்தில் மணிமாலைகளும், வணங்கும் கைகளும், விரல் நகங்களும், இடையில் வாளும், வேலைப்பாடுகள் பல கொண்ட சுருள் சுருள் அங்கவஸ்திரங்களும், காலில் தண்டையும், இப்படி விவரித்து கொண்டே போகலாம்.  எல்லாச் சிற்பங்களுக்கும் இது பொருந்தும்.   எங்கும் தூண்கள், எதிலும் சிலைகள்.  ‘தாவும் பரியையும் வீரனையும்’ பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.   கடிவாளத்தில் கயிற்றையும், கம்பியையும், கல்லிலே காணலாம்.  

’ஒரு நாள் போதுமா? ’ இக்கோயிலை தரிசிக்க நிச்சயம் போதாது!  பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் ஒரு கலைப் பொக்கிஷம்.  இன்றைக்கும் கோயில் திருப்பணியில் ஈடுபடும் ஸ்தபதிகள், ஆவுடையார் கோயில் அளவிற்கு வேலைப்பாடுகள் எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கையொப்பம் இட்டுத் தங்கள் பணிகளை ஆரம்பிப்பதாகக் கூற்று இன்றும் உண்டு.

மணிவாசகருக்குப் பின், பல சோழர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் இக்கோயிலை விஸ்தாரித்தாகச் சொல்லப்படுகிறது.  பின்னால் எழுப்பிய பல மண்டபங்களே இதற்கு சாட்சி.  மணிவாசகர் கட்டியதாக இதுகாறும் செவி வழியாக நம்பப்பட்டு வந்தது.  சமீபத்தில் அகல்வாராய்ச்சியினர், கோயில் கல்வெட்டு ஒன்றின் மூலம், மணிவாசகர் தான் கட்டினார் என்று நிரூபனம் செய்திருக்கிறார்கள்.  செய்தித் தாள்களிலும் இச் செய்தி வந்திருக்கிறது.

எனது சொந்த ஊருக்கு வெகு அருகாமையில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலை இத்தனை காலம் தரிசிக்காமல் இருந்திருக்கிறேனே என்று என்னை நானை வியந்து கொண்டேன்!  சமீபத்தில் இக்கோயிலுக்குச் சென்று நானிருந்த ஒரு சில மணி நேரங்கள், என் கண்களுக்குப் புலப்பட்ட காட்சிகள் இங்கே புகைப்படங்களாக.
Friday, February 21, 2014

தமிழ்த் தாத்தா யார்?

'தமிழ்த் தாத்தா யார்?' எனக் கேட்டதற்கு, 'சாலமன் பாப்பையா' என்று சொல்லி அசத்திய ஒரு புள்ளைய சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து பிரமித்திருக்கலாம்.  'அப்படியா, கரெக்ட்டாம்மா ?' என சந்தேகமாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, பயபுள்ள பட்டுனு, 'இல்லியா... அப்ப, திருவள்ளுவர், திருவள்ளுவர், திருவள்ளுவர்' எனக் கூவி ஏகத்துக்கும் களேபரம் பண்ணி நம்மை எல்லாம் கலவரப்படுத்தியது.  சரி, இந்தக் காலத்துல சாலமன் பாப்பையா அவர்களையும், திருவள்ளுவரையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என சந்தோஷம் கொள்வோம்.

நிஜமாவே 'தமிழ்த் தாத்தா' யாரு ?  தமிழுக்கு அவர் செய்த பணி தான் என்ன ?  இன்றைக்குத் தமிழ் வளர்த்ததாக / வளர்ப்பதாக பிரகடனப்படுத்தும் கூட்டத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் ?  என்றெல்லாம் தேடிப் பார்த்தால், இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல எனப் புரியும்.  இவரின் பணி இல்லை எனில், இன்று அறிந்த கைமண் அளவு தமிழ் கூட நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகமே !

தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது.   ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம்.  பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே.  அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!!  ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
     இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
     குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
     காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
     இறப்பின்றி துலங்குவாயே.

இரண்டு நாட்கள் முன்பு Feb-19 உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.  இந்த ஆண்டு காதலர் தினமே வந்த சுவடும் தெரியல, போன சுவடும் தெரியல, இதுல சுவடி எடுத்தவர் பிறந்த தினமா நமகெல்லாம் ஞாபகம் இருக்கப் போகிறது !

Thursday, January 30, 2014

பழமொழி 400'பழமொழி'கள் பல நம் வாழ்வில் நாம் கேட்டு வந்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினர் அவற்றைக் கையாளுகிறார்களா என்றால், அநேகமாக இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. காரணம், இன்றைய ஊடகங்களின் ஆளுமை. நம் போன்ற சாமான்யர்களிடம், 'ப்பா....' என்ற வசனம் கூட எவ்வளவு பிரபல்யமாக்க முடியும் என்று ஊடகம் அறிந்து வைத்திருக்கிறது.

அந்தக் காலங்களில் செய்தி பரப்ப என்னவெல்லாம் முறை இருந்திருக்கும் ?! காதலர்களுக்கு புறாவும், மன்னர்களுக்குத் தூதுவர்களும், .... இருக்க நம் போன்ற சாமான்யர்களுக்கு எவ்வாறு செய்தி பரப்பப்பட்டிருக்கும் ?! 'செவி வழி' என நாம் இது வரை அறிந்து வந்திருக்கிறோம். இது மட்டும் போதுமா என சிந்தித்தால், இதற்கு மேலும் வேறு ஏதாவது மார்க்கம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

பண்டை தமிழனின் வரலாறு பல 'பாடல்'களில் பொதிந்திருக்கிறது. கண்டதையும், கேட்டதையும், ஆராய்ந்து மொழி ஆற்றலோடு பாடலாகப் படைத்தனர் அன்றைய புலவர்கள். போட்டிகள், பொறாமைகள் பல இருந்திருக்கக் கூடும். அத்தனையும் பாடல் பெற்றது. கம்பனுக்கும் ஔவைக்கும் நடந்த சப்தமில்லாச் சண்டைகள் பாடலாக்கப்பட்டது !

இதேபோல, நாம் பயன்படுத்தும் பழமொழிகள் பலவும் பாடல் பெற்ற பழமொழிகளே. இது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாது இருக்கலாம். 'கோழி மிதித்துக் குஞ்சு முடமாகாது', 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது', 'சூரியனைக் கண்டு நாய் குரைத்தாற் போல்' என்பதெல்லாம் இன்று வரை நாம் கேட்டு வந்திருக்கும் பழமொழிகளில் சில. இவை எல்லாம் ஒவ்வொரு பாடலின் இறுதி வரிகள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! சில பழமொழிப் பாடல்கள்:

உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம்ம் பொய்கைப் புனலூர !
'தாய் மிதித்து ஆகா முடம்'. (பாடல்: 353)

ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி
'. (பாடல்: 70)

நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'. (பாடல்: 107)

இவற்றுள் 400 பாடல்களைத் தொகுத்து 'பழமொழி நானூறு' எனும் தலைப்பில் 'மூன்றுறை அரையனார்' என்ற சமண முனிவர் இயற்றியுள்ளார். இணையத்தில் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்கும் 'ப்ராஜக்ட் மதுரை' தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது இப்பழமொழித் தொகுப்பு. சுட்டி கீழே:

http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0036.pdf

மேலே கண்ட நன்கு பயன்பாட்டில் இருக்கும் பழமொழிகள் கூட சற்று எளிமைப் படுத்தி தான் நம்மை வந்து அடைந்திருக்கிறது. பாடலில் அவை பயன்படுத்திய விதம் கண்டால் வித்தியாசம் உணர முடியும். இப்படி இருக்க பல பாடல்கள் நமக்கு புரிவதாக இல்லை. புரியவில்லை என்பதற்காக அவற்றை ஒதுக்கிவிடலாமா ?!


Sunday, March 3, 2013

யோகம் பயில்
எளிதான நம் வாழ்வை எவ்வளவு கடினமானதாக‌ ஆக்கியிருக்கிறோம். உற‌வுக‌ள், ந‌ட்புக்க‌ள், உண‌வுக‌ள், செல்வம், பதவி, புகழ், வாழ்க்கை முறை எல்லாவ‌ற்றிலும் கோலோச்சினாலும், அடிப்படையான ஏதோ ஒன்றை இழ‌ந்தே இவ‌ற்றை எல்லாம் பெற்றிருக்கிறோம்.

பொதுவாக‌ இந்திய‌ர்க‌ள் உடல் ந‌ல‌த்தைப் பாதுகாப்ப‌தில்லை என்ப‌து உல‌க‌ளாவிய‌ ஒரு எண்ண‌ம். அகவை நாற்ப‌தைத் தொடுகையில் இது ச‌ற்று மாறக்கூடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இளம்வயது மார‌டைப்பு ப‌ற்றி செய்தி அறிகையில் ந‌ம‌க்குள்ளும் ஒரு ப‌ட‌ப‌டப்புத் தோன்றுகிறது. 'ஓடு உடற்பயிற்சி நிலையத்திற்கு' என்று கிளம்புகிறது ஒரு கூட்டம். 'உட‌ற்ப‌யிற்சி செய்கிறேன்' என்பது ஒரு பெருமிதத்தைத் தருகிறது நமக்கு. உடலுக்கு செய்யப்படுகிறதோ இல்லையோ, 'ஜிம்' சென்றுவ‌ருகிறேன் என்ப‌து இன்றைய‌ இள‌வ‌ட்ட‌ங்க‌ளின் ம‌த்தியில் அந்தஸ்த்தான சொல் ஆகியிருக்கிறது. நாள் முழுக்க‌ உட‌ற்ப‌யிற்சி செய்யும் ம‌னித‌ர்க‌ளும் இருக்கிறார்கள்.

ஜி.யு.போப் சொன்னால் திருக்குறள் படிக்கிறோம். 'ப்ரெய்ன் யோகா' என அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் என தோப்புக்கரணம் போடுகிறோம். இதேபோன்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ஜ‌ப்பானியர்க‌ளும், ஏனைய‌ ம‌ற்ற நாடுக‌ளிலும் செய்ய‌ப்ப‌டுவ‌தால் யோக‌ம் ப‌ற்றியும் தெரிந்து வைத்திருக்கிறோம். செய்கிறோமா, இல்லையா என்ப‌து அடுத்த‌ பிர‌ச்ச‌னை :)

உடல் நலம் பேண, மேற்க‌ண்ட‌வாறு க‌டின‌மான‌ உட‌ற்ப‌யிற்சி தேவையா ?, என்றால், தேவையில்லை என்கிற‌து யோக‌க் க‌லை. "இன்றைய வாழ்வின் கடின உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமே. அதுவும் கடின உடற்பயிற்சியினால் உடலின் உள்ளுறுப்புக்கள் சேதமடைய சாத்தியங்கள் அதிகம். யோகத்தில், உடல் வருத்தாது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி இருக்கிறது". இதுவும் மேற்க‌த்திய‌ அறிஞ‌ர்க‌ள் சொல்லித் தான் நாம் அறிகிறோம். ந‌ம் நாட்டில் தோன்றிய‌ ப‌ல‌ துற‌விக‌ளும், ஞானிக‌ளும் ப‌ன்னெடுங்கால‌ம் செய்து வ‌ந்த‌ யோக‌த்தை, நாம் செய்யாம‌ல் விட்ட‌தை, இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செய்கின்ற‌ன‌. நாமும் செய்ய‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ யோசித்தால், விடை சுல‌ப‌மே.

ந‌ம‌க்குத் தேவை நிறைய‌ நேர‌ம். கை, கால்க‌ளை நீட்டி முட‌க்க‌ப் போதுமான‌ இட‌ம், ஒரு வ‌ழுக்காத‌ விரிப்பு, ஒரு குரு. இத‌ற்கும் மேலாக, ம‌ற்ற‌ ச‌ந்தை போல‌வே யோகாவிற்கும் ஒரு பெரிய‌ ச‌ந்தை இருக்கிற‌து. உலக அளவில் யோகா, முப்பது பில்லியன் டாலர் சந்தை என்கிறது இணைய ஆய்வறிக்கைகள்.

மேற்சொன்ன குருவும் (பலருக்கு இணையம்), இடமும், விரிப்பும் நமக்குக் கிடைத்தாலும், பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. க‌டின‌ உட‌ற்ப‌யிற்சி செய்ய‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் செல‌விடுகையில், யோகாவிற்கு ஒரு அரை ம‌ணி நேர‌ம் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு. 'ம‌ன‌ம் ஒன்றுப‌டாத‌ விஷ‌ய‌ங்களில் புல‌ன்க‌ள் வேலை செய்யாது' என்பது பல பழைய பாடல்களின் வாயிலாக நாம் அறியலாம். அதே போல் யோகாவினுள் சென்று உண‌ராத‌ வ‌ரை ந‌ம் யோக‌த்தின் பெருமையை நாம் அனுப‌விக்க‌ முடியாது.

மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இரண்டும் கலந்தது யோகா. 'மூச்ச நல்லா இழுத்து விடுங்க' என்பாரே மருத்துவர், அதே தான் இங்கு மூச்சுப் பயிற்சி. யோக முறைப்படி கை கால்களை நீட்டி மடக்கியோ, மற்றும் இடுப்பு கழுத்தை வளைத்துத் திருப்பியோ நாம் வெளியில் இருந்து செய்யும் உடற்பயிற்சி, நம் உடலின் உள்ளுறுப்புகளை விரிவடையச் செய்கிறது. உடலின் உள்தசைகளையும் இலகுவாக்குகிறது. இதனால் நம்முள் ஆற்றல் பிறந்து பரினமிக்கிறது. இதுவே அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட யோகத்தின் அடி நாதம்.

எளிய‌ ப‌யிற்சியாக‌ ஆர‌ம்பித்து, நம்மால் முடிந்த வரை க‌டின‌மான‌ யோக‌ ஆச‌ன நிலைக‌ள் வ‌ரை நம்மால் பயணிக்க முடியும். யோகா பற்றி ஏராளமான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் இருக்கின்ற‌ன. நம் முன்னோர் கண்டுபிடித்ததை, நாமும் க‌ண்டு, ப‌டித்து, செய்துண‌ர்ந்து ப‌ய‌ன்பெறுவோம் ! உடல் நலம் காப்போம் !!

Wednesday, May 2, 2012

நா சுழற்றி - அருணகிரியார்


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி


வாக‌ன‌ப் புகை க‌சிந்து
விய‌ர்த்தொழுக‌ வீதி நிறைத்து
உட‌ல் துடைத்து அலுவ‌ல் ப‌டியேறி


கணிணி த‌ட்டிக் க‌டித‌மெழுதி
க‌ல‌வையாக‌க் குழுக்க‌ள் க‌ல‌ந்து
காஃபி குடித்து ம‌திய‌ உண‌வருந்தி


இருக்கை ச‌ரிந்து க‌ண்மூடிக்
கனாக்கண்டு சிறுநகை பூத்து
பின்னெழுந்து ப‌ல‌ கதைகள் பேசி


இரவு நிலா ஒளிவீச
காலைச் சூரியன் த‌க‌த‌க‌க்க‌
இன்று என்பணி இவையெலாம் என்று


மின்னஞ்சல்செய்து அலுவ‌ல் ம‌ற‌ந்து 
மீண்டும் வீதி நிறைத்து
அயர்வாக அடுக்கு மாடிப் ப‌டியேறி


க‌ணிணி த‌ட்டி உல‌கிற்க‌ல‌ந்து
க‌ண்ட‌தையும் உண‌வென்று உண்டு
தொலைக்காட்சி சிறிது க‌ண்டு முட‌ங்கியே !


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி

சமீப காலமாகக் கேட்டு வரும் ஞான சொற்பொழிவுகள், சற்று ... இல்லை இல்லை, பலமாகவே சிந்திக்க வைக்கிறது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றார்கள். மனம் இளகும். கண்கள் நீர் சுரக்கும் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.  சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட ராகத்தோடு பாடக் கூடிய மென்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும். அத்தோடு நில்லாம‌ல், இன்றைய‌ கால‌த்திற்கு ஏற்ற‌வாறு பாட‌லும் நாம் எழுத‌லாம்.  உதாராண‌ம்: மேலே :)

ஏற்கனவே அருணகிரியாரை வில்லிபுத்தூரார் யாரென்று கேட்டதற்கு, அருணகிரியாரின் நகைச்சுவை கலந்த தத்துவார்த்தமான பதிலை இந்தப் பதிவில் கண்டோம்.

ஒரு குழந்தை, கருவாகி உருவாகி வளரும் நிலையை எளிய தமிழில் அழகாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார். பாடலுக்கு விளக்கம் தேவையில்லை, ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நிச்சயம் புரியும்.

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி


கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி


அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி


அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இதே கருத்தை ஒத்த, ஆனால் சற்று விரிவாக வரும் 'இத்தா ரணிக்குள்மநு வித்தாய்' இப்பதிவில் வரும் இப்பாடலில் இறுதி வரிகள் சற்று ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.  எனக்கு விபரம் தெரிந்து இருபது ஆண்டுகள் முன்னர் வரை கோவில் திருவிழாக் காலங்களில் நிச்சயம், சொற்பொழிவுகள், கதாகாலட்சேபங்கள் இருந்தன.  இன்று ஆங்காங்கே ஒன்றிரெண்டு இருந்தாலும் கருத்தைக் கவர்வதாய் இருக்கின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறியே பதில்.  வர்த்தகத்தையே முதற்கண் நோக்கும் ஊடகங்களும், தமக்கு ஆதாயம் இருந்தாலலன்றி இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.  நம்முடைய பழம்பாடல்கள் பொக்கிஷம் எனில், அதைக் காத்து நமக்கு எடுத்துச் சொல்ல ஆட்கள் இப்பொழுதில்லை.  இப்படியிருக்க, அருணகிரியார், இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, கலைகள் பயின்று, புத்தி கெட்டு, நரை கூடி, பின் கிழப் பருவம் எய்திடினும் தமிழ் பாடும் நேசத்தை என்றும் தரவேண்டும் என்று வேண்டுகிறார்.  இன்று வரை தமிழ் வந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  சிதைந்துவிடாமல், மேலும் காப்பது நமது பெரும் கடமை.  முக்கியமாக அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவ்வித்தையும் விதைத்துச் செல்ல வேண்டும்.  கட கட என ஓடும் இத்தாரணிக்குள் பாடல்:

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி 


இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் 


சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் 


சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் 


தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் 

நா சுழற்றி அடிக்கும் மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளில் வ‌ரும் சொற்க‌ள் எல்லாம் ஒலியைக் குறிப்ப‌தாக‌வே ஆகிற‌து.  'இவ்வாறு ஒலிக்கும் படியான ஒரு மயிலேறி வந்து' காக்க‌ வேண்டும் என்று சொல்கிறார் அருண‌கிரியார்.

'பக்தி என்றால் வியாபாரம்' என்ற எண்ணம் தளைத்தோங்க இன்றைய சாமியார்களும் மடாதிபதிகளுமே பெரும் காரணம்.  இவர்களையும் மீறி, தமிழைப் போல் பக்தியும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறதெனில், நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணரலாம்.  'அன்பே சிவம்' என்றார் திருமூலர்.  இது தான் பக்தி.  தமிழோடு பயணித்து பல இடர்களையும் தடைகளையும் கடந்து தான் வந்திருக்கிறது பக்தியும்.  அப்படி வந்த அருணகிரியாரின் அடுத்த தமிழ்கவிதையின் பால் காதல் கொள்ளாதவர் எவருமில்லை எனலாம்.  இப்பொழுதெல்லாம் படத்திற்கு முன்னரே பாடல் வெளியாகிவிடுகிறது.  அதுவும், மிகப் பிரபலமான நடிகரின் படம் என்றால்,  பட்டி தொட்டி எங்கும் டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், தொலைக்காட்சி, பத்திரிகைகள் என மாதக்கணக்கில் எங்கும் பரப்பி, நம் மண்டைக்குள் நீங்கா இடம்பெற்று பெரும் வெற்றி பெரும் அவர்தம் பாடல்கள்.  இப்பேற்பட்ட விளம்பரங்கள் சிறிதுமின்றி, பொருள் புரிகிறதோ இல்லையோ, முதன்முதலில் கேட்கையிலே மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முருகா...

என்று திரை இசைப்புகழ் டி.எம்.சுந்தரராஜன் அவர்கள் அட்சர சுத்தமாக ஆரம்பிக்க, திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இருக்கை நுனியில் அமரும் ஆர்வத்தைப் போல, மனம் பரபரப்பாகும்.  திரை சம்பந்தமாக அதிக மேற்கோள் காட்டியதற்கு, இப்பாடல் திரையின் மூலம் தானே நம்மை வந்தடைந்தது.  முழுப் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ....அடிபேண


பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ....இரவாகப்


பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ....ஒருநாளே


தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு .... கழுதாடத்


திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ....எனவோதக்


கொத்தப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென ....முதுகூகை


கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ....பெருமாளே !

நம்மைப் போலவே பால்ய பருவத்தில் அருணகிரியாரும் படிப்பில் நாட்டம் அதிகமில்லாமல் இருந்திருக்கிறார். தொழு நோய் வந்து, மனம் வாடி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தவரைக் காப்பாற்றி, நாவினில் வேல் கொண்டு மந்திரம் எழுதி, 'அருணகிரி தற்கொலை செய்து கொள்வது பாவம், மீண்டும் ஒரு பிறப்பு வாராது. எம்மருள் உனக்குண்டு', என முதலடி முத்தாக எடுத்துக் கொடுத்து, 'திருப்புகழ் பாடுவாயாக' என்று எம்பெருமான் முருகன் சொல்வது, அருணகிரியாரின் மிகச் சுருக்கிய வரலாறு. முருகனருள் பெற்று முத்து முத்தாய்ப் பொழிந்தார் அருணகிரியார் திருப்புகழை. மேற்கண்ட பாடல்கள் போலவே இன்னும் ஏராளம் இருக்கிறது அதனுள்.

Tuesday, May 1, 2012

எங்கும் எதிலும் கலாம் ...'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது.  அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களை எவ்வளவு பாராடினாலும் தகும்.  அப்பொழுதே எனது மற்ற தளத்தில் பதிந்த சிறு கவிதை இப்பொழுது இங்கே:


அன்பாகப் பேசிக்கலாம்
அறன்போற்றிப் பழகிக்கலாம்
சிந்தனை வ‌ள‌ர்த்துக்கலாம்
சோம்பல் வீழ்த்திக்கலாம்
ஆன்றோரை அணைத்துக்கலாம்
சிறியோரைச் ச‌கித்துக்கலாம்
நல்லவை படித்துக்கலாம்
அல்லவை அடித்துக்கலாம்
விழியெனக் கோபித்துக்கலாம்
கனவில் விழித்துக்கலாம்
விழித்தபின் சிரித்துக்கலாம்
சிதறாமல் பார்த்துக்கலாம்
கருத்துக்களோடு மோதிக்கலாம்
நற்செயலால் சாதித்துக்கலாம்
பரிசுபல பெற்றுக்கலாம்
பிறருக்குக் கொடுத்துக்கலாம்
துயர் துடைத்துக்கலாம்
தோள் சாய்த்துக்கலாம்
புத்தகம் படித்துக்கலாம்
அறிவிய‌ல் ஆராய்ந்துக்கலாம்
இன்னும் பல கலாம்கள்
ம‌ன‌தில் இருத்திக்கலாம்
நிறைவாய் உணர்ந்துக்கலாம்
இறைவனை வணங்கிக்கலாம்
இனிது வாழ்ந்துக்கலாம்.

Monday, April 23, 2012

புவி நாள் (Earth Day) Apr 22 !


பேருந்து தினம், காதலர் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம், என்று எல்லாத்துக்கும் நாள் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆண்கள் தினம் என்று ஒன்றிருக்கா என்று தேடினால், அட, அதுவும் இருக்கத் தான் செய்கிறது :) மற்ற தினங்கள் போலே இந்த நாளுக்கு, அவ்வளவு சிறப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 'புவி நாள்' என்ற Earth Dayக்கும் இது தான் இன்றைய நிலை.

அம்மா என்றைக்கும் அம்மா தான். பேருந்து என்றைக்கும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் போகிறது, காதலர் என்றுமே கருத்தொருமித்து தான் இருக்கப் போகின்றனர் ... என்று இவை எல்லாம் அனுதினம் வாழ்வோடு ஒன்றியிருந்தாலும், வருடத்தின் ஒரு நாளை அதற்கென ஒதுக்கி சிறப்பித்ததை, எல்லாவற்றின் பின்னனியிலும் வியாபர நோக்கம் இருக்கிறது எனச் சிலர் விவாதிப்பதும் உண்டு.

ஆனால், மற்ற நாட்களில் இருந்து 'புவி நாள்' சற்று வித்தியாசப்படுகிறது. இதுவரையிலும் எந்த வியாபர நோக்கமும் கண்கூடாக நமக்குத் தெரியவில்லை. புவி நாளில், பல நாடுகளிலும், மரம் நடச் சொல்லி, பல நிறுவனங்கள் இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகினறன. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு.
(ந‌ன்றி: விக்கிபீடியா)

புவியில் இருந்து எவ்வளவு பெற்றிருக்கிறோம், இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் ? வாகனப் புகையையும், தொழிற்சாலைக் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் குப்பைகளையும், பொது இட அசுத்துங்களும் தானே அதிகம் கொடுத்திருக்கிறோம் !!! நல்லதைப் பெற்று தீயதைக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?! 'கிவ் அன்ட் டேக்' பாலிசி என்று சின்ன‌ குழ‌ந்தை முத‌ல் க‌ல்யாண‌ம் முடித்த‌ இள‌ம் த‌ம்ப‌தியின‌ர் வ‌ரை அறிவுறுத்தி வ‌ள‌ர்க்கும் நாம், புவியைப் ப‌ற்றி இன்று வ‌ரை சிந்திக்காவிட்டாலும், இனிமேலாவ‌து சிந்திப்போமே. ந‌ம‌து அடுத்த‌ த‌லைமுறைக்கு இவ்வித்தை விதைத்துச் செல்வோம்.

மரம் வளர்க்காததன் விளைவு, மற்றும் மரம் வளர்த்துக் கொடுப்பதின் மூலம், புவி நமக்கு அளிக்கும் அற்புதம் பற்றி இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் அவ‌ர்க‌ள் ...

(நன்றி: விகடன்)

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ``இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று'' சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.


ஏன் என்று நான் கேட்டதற்கு, ``உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள `டீ' தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை'' என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.


இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.


இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

(நன்றி: குமுதம் குழுமத்தின் தீராநதி)