Monday, August 24, 2009

யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?


Photo Credit: www.textually.org

யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?

உங்களுக்காக சில டிப்ஸ் ...

'ஆளில்லாத ஹைவே. ஹையா ஜாலி'னு மிதி மிதினு மிதிச்சிறாதீங்க. இப்படித்தான் ஒரு ராத்திரி எங்க மாப்பு ஒருத்தருக்கு காப்பு வச்சாரு ஆப்பு. எங்கேயோ ஊர் சுத்திட்டு வ‌ந்திருக்காப்ல‌. ரோட்டுல‌ ஒரு ப‌ய‌ புள்ள, ம‌ன்னிக்க‌வும் காரு வேனு இல்ல‌. பகலில் கூட்டத்திலேயே ஓட்டி பழகினவர். இப்ப‌டி ஒரு சான்ஸ் இனி கிடைக்குமானு மிதிச்ச‌வரு தான். 'பதுங்கி இருந்துட்டு எங்குட்டு கூடி வ‌ந்தான்னே தெரிய‌ல‌ மாப்ள‌. ஓங்கு தாங்கா வ‌ந்து சீட்டுக் கொடுத்திட்டு போயிட்டான் !' என்று இன்றும் புல‌ம்புவார். (புலி ப‌துங்குவ‌து பயத்தினால் அல்ல‌ !)

"நான் இன்டியால‌யே காரு ஓட்டிருக்கேனாக்கும் !" என்று செஸ்ட்பீட் ப‌ண்ற‌ குரூப்பு தான் நிறைய‌ சாலை விதிக‌ளை புற‌க்கணிக்கின்ற‌னராம். விளைவு ப‌க்க‌த்தில் வ‌ருப‌வ‌ரை ஆலிவ்ம‌ர‌த்தில் (இங்க எங்க இருக்கு புளியமரம் :)) மோத‌வைத்துவிட்டு தேமே என‌ விழிப்ப‌து. இந்த‌ அல‌ப்ப‌ரைக‌ளுக்கு ந‌டுவில், 'டேய் அப்ப‌ப்ப‌ ரைட் ஹேன்ட் ட்ரைவிங்னு ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கிட்டே இரு'னு ந‌ம‌க்கு இன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் வேற. அருகில் அமர்ந்து வரும் நமக்கு இதக் கேட்டு தூக்கி வாரிப் போட்டாலும், வேற வழி இல்ல. என்ன தான் ஸீட்பெல்ட் போட்டிருந்தாலும் கேரண்டி கிடையாது :) (நிறைகுடம் தழும்பும் !)

ஸ்டாப் சைன் பார்த்தா, 'க‌ம்ப்ளீட் ஸ்டாப்'ன்ற‌த 'ஸ்டாப் ப‌ண்ண‌து போதும் கெள‌ம்புனு' த‌ப்பா புரிஞ்சிகிட்டு அழுத்தி என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் போல‌ மாட்டிக்காதீங்க‌. ப‌ச‌ங்க‌ளுக்கு ஏதோ க்ளாசுக்கு நேர‌ம் ஆச்சு. தென‌ம் பாக்குற‌ ஸ்டாப் சைன் தான‌. ஸ்டாப் பண்ணதெல்லாம் போதும் என்று ஒரு நாள் அழுத்தியிருக்கார் ம‌னுஷ‌ன். 'எத்த‌ன பேருடா கெள‌ம்பிருக்கீங்க‌ ?'ங்க‌ற‌ மாதிரி காருக்குப் பின்னாடியே ஒளிவ‌ட்ட‌ம். கட்டு மஸ்தா வந்த காவலர் கிட்ட, பிள்ளைக‌ளைக் காட்டி பாவ்லா காண்பித்தால் விட்டுருவாருனு நென‌ச்சு, ஸ்கூல் பைய‌னாட்ட‌ம் கெஞ்ச‌... "நான் கூட‌ வார்ன் ப‌ண்ணி அனுப்ப‌லாம்னு நென‌ச்சு தான் வ‌ந்தேன். பசங்கள வைத்துக் கொண்டே இப்படிப் போறியா, 'இந்தா பிடி' என்று சீட்டுக் கிழிக்க‌, கோர்ட் வ‌ரை சென்று வ‌ந்தார் ந‌ண்ப‌ர். (யானைக்கும் அடி ச‌றுக்கும் !)

இந்த‌ வெள்ளைக்கார‌ய்ங்க‌ளுக்கு இன்னும் ந‌ம்ம‌ள‌ப் ப‌த்தி நிறைய விசயங்கள் புதிராவே இருக்கு ! அதில‌ ஒன்னு தான் "இந்த‌ ட்ரைவிங் ஸ்கூல்" ப‌க்க‌ம் போகாம‌லேயே வ‌ண்டி ஓட்டி லைசென்ஸ் வாங்க‌ற‌து. அதுக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ கார‌ண‌ங்க‌ள் இருக்க‌லாம். என் ந‌ண்ப‌ர் ஒருவருக்கு அமைந்த நிக‌ழ்ச்சி, இன்னிக்கு நினைத்தாலும் சிரிப்பு தாங்க‌முடியாது. நீங்க‌ளும் கேளுங்க‌. 'ந‌ம்மால் ந‌ம்ம‌ பொண்டாட்டிக்கு ட்ரைவிங் சொல்லித் த‌ர‌முடியாது. வீட்டுல‌ க‌த்துற‌து ப‌த்தாதுனு ரோட்டுல‌யும் க‌த்து வாங்கி மான‌ம் போற‌துக்கு, ட்ரைவிங் ஸ்கூல் பெட்டர்'னு சேர்த்திருக்காரு. அம்ம‌ணி ந‌ல்லா ட்ரைவிங் எல்லாம் முடிச்சு, முதல் டேக்கிலேயே லைசென்ஸ்ஸும் வாங்கிட்டாங்க‌. குஷியில 'ப்ரீவேல‌ தான் முத‌லில் ஓட்டுவேன்'னு அட‌ம்பிடிச்சு போயிருக்காங்க‌. ம‌ந்திரிச்சு விட்ட‌ கோழியாட்ட‌ம் ந‌ம்ம‌ ஆளு ப‌க்க‌த்தில‌ உக்கார்ந்திருக்காரு. என்ன‌து ரொம்ப நேரமா ஒரு வ‌ண்டிய‌கூட‌ பின்னாடி காணோம்னு பார்த்தா, எதிர்க்க‌ தூர‌த்தில் வ‌ண்டிக‌ள். அப்ப‌தான் புரிஞ்சிருக்கு, ராங் வேயில் ஃப்ரீவே எடுத்திருக்கிறார்க‌ள் என‌. அம்மணி கொஞ்சம் கூட அசந்த மாதிரி தெரியல. ந‌ம்ம‌ ஆள‌ பார்த்து, யோவ் என்ன‌ கிலி பிடிச்ச‌ மாதிரி இருக்க, உன்கிட்ட இருக்க ப்ரேக்க‌ அமுக்குய்யானு அத‌ட்ட‌ல் (ட்ரைவிங் ஸ்கூல் கார் நினைப்பிலேயே) வேற :))) ஒரு வழியா அந்த‌க் குடும்ப‌ம் பொழ‌ச்சு வ‌ந்த‌தே பெரிய‌ விச‌ய‌ம். (நாங்களும் ட்ரைவர் தேன் !)

வீட்டுக்காரர் மாதிரியோ, நண்பர்கள் மாதிரியோ ஓட்டி ஒரு காம்ப்ளக்ஸ்குள்ள போயி அப்படியே முதல்வரிசையில் சருக்கென்று பார்க் பண்ணி மாட்டிக் கொள்ளாதீர்கள். என் நண்பரின் மனைவி ஒருவர், இப்படித் தான் போயி மாட்டிக்கிட்டு, காரை ரிவர்ஸ் எடுத்து பின்னங்காரில் இடித்து, அச்சச்சோ போச்சே என சுழற்றி பக்கத்துக் காரையும் பதம் பார்த்து, பதறி அடித்து ஒடித்ததில், மின்கம்பத்தில் மோதி என ஒரு சில நொடிக்களுக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார். அதனால், காத தூரம் நடந்தாலும் பரவாயில்லை, ஒரு கார் கூட கிட்ட வராத, யாருமில்லாத எல்லையில் பார்க்கிங்கை ஆரம்பியுங்கள். (பார்க்கிங் படுத்தும் பாடு !)

சில நேரம் ஆளில்லாத சிங்கில் லேன் ரோட்டில் கூட, நாப்பத்தி அஞ்சு லிமிட் என்றால் நாற்பதில் நமக்கு முன் சென்று, நம் பொறுமையை சோதிப்பர் சில முதியோர். செம டென்சனாகி, திட்டி கொட்டி, ஏதாவது டாட்டட் லைனில் அவர்களைக் கடந்து செல்லும்போது தான் தெரியும், 'அச்சோ பாட்டீ ! கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே. இவங்களப் போயி திட்டிட்டோமே' என்று. இந்தப் பொறுமை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். டி.வி.சீரியல் பார்க்க (இதுவரைக்கும் பழக்கம் இல்லை என்றாலும் கூட) கத்துக்கங்க. தினம் ஒரு சில மணி நேரங்கள் பயிற்சி எடுத்தால், எந்த யோகா க்ளாஸுக்கும் போக வேண்டாம். உங்களைப் போல சாது எவரும் இருக்கமுடியாது. (சர்வம் சீரியலார்ப்பணம் !)

'எதுக்கும் ஒரு ஆறு மாசத்துக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்குங்க. தெனாவெட்டா இருந்திறாதீங்கப்பூ.' நான் ட்ரைவிங் கத்துக்கும்போது ட்ரைவர் சொன்ன வாசகங்கள். ஒரு கதையும் சொன்னார் அவர். நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார், அதில் இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. நம்ம ஊரு ஆளு ஒருத்தர் மனைவி இவரிடம் தான் ட்ரைவிங் கற்றிருக்கிறார். தம்பதியர் வசிப்பதோ கிராமம் போன்ற பகுதி. என்ன வந்திரப்போகுது என இன்ஸூரன்ஸில் மனைவியின் பெயரை சேர்ப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் செய்திருக்கிறார் கணவர். சொல்லி வைத்தது போல ஒரு நாள் ஒரு திருப்பத்தில் ஒரு காரை இடித்துவிட்டார் அம்மணி. காரை ஓட்டி வந்தது ஆறடிக்கும் மேல பீன்ஸ் கொடி போல நெடு நெடுனு இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். நம்ம ஊரு சினிமா வில்லன் பானியில, 'போலீஸுக்கு போனா, கோர்ட் கேஸுனு அலைக்கழிச்சிருவாய்ங்க. நமக்குள்ள டீல் பண்ணிகிட்டா உனக்கு தான் நல்லது. அப்புறம் உன் இஷ்டம்' என்றெல்லாம் டயலாக் சொல்லி, முடிந்த வரைக்கும் இரண்டாயிரம் டாலர் வரை கறந்து சென்றாராம். அவர் கிட்டயும் இன்ஸுரன்ஸ் இல்லை என்பது தனி கதையாம். (கிராமமானாலும் இன்ஸூரன்ஸ் வேண்டும் !)

நீங்க என்ன தான் காரியத்தில் கண்ணனாகவோ,கண்ணகியாகவோ இருந்தாலும் சில நேரம் சில காட்சிகள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இப்படித்தான் ஒரு வெள்ளைக்காரம்மா மேக்கப் போட்டுக்கிடே வண்டி ஓட்ட, 'இதென்ன கொடுமை சரவணா'னு பராக் பார்த்த ஒருத்தர் ரோட்ட விட்டு பள்ளத்தில் இறங்கி, தேங்கிய நீரில் படகு சவாரி செய்தார். மேக்கப் அம்மணியோ அசராது தொடர்ந்து கொண்டிருந்தார். (ஆரியக் கூத்தாடினாலும் ...)

ஃப்ரீவேயில் போகும் போது, புயலாய் பறக்கும் கறுப்புக் குதிரைகளைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் புண்ணியம் கிட்டவில்லை எனில் கிழக்கு மாகான‌ங்களுக்குப் போகவும். அப்படி சர்ரு சர்ருனு லேன் மாத்தி மாத்தி, ஓவர் டேக் என்ன ஓவர் டேக், அதுக்கு மேல டேக் எல்லாம் எடுத்து பின்னிப் பெடலெடுக்குங்க. அதைப் பார்த்து உற்சாகமாகி நீங்களும் ஆரம்பித்தால் அதோ கதி தான். தாவாங்கட்டையில் கைய வச்சு 'ட்ரிப்பிள் ஏ' கூப்பிட்டுக் காத்திருக்கணும். (முடியுது ஓட்டறா ! நமக்கேன் ?)

பைக்காரர்களைக் கண்டால் சகலபுலண்களையும் திறந்து வையுங்கள். சமயத்தில் பைத்தியக்காரர்களாக்கிவிடுவார்கள் நம்மை. ஹாய்னு அவங்களப் பார்த்துப் பரவசமாகியோ, இல்ல அங்க தான வர்றான், அதற்குள் நாம வளைந்து நெளிந்து லேன் மாறி போய்விடுவோம் என்று யோசித்தாலோ ஃபன் அவனுக்கு மட்டும் இல்ல நமக்கும் தான் :) (உருவத்தைப் பார்த்து எடை போடாதே !)

இன்னும் 'யீல்ட் ஆன் க்ரீன்' கதை எல்லாம் இருக்கு. அனுமார் வால் போல் பதிவு நீள்வதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Friday, August 14, 2009

சுபாஷ் தந்திர போஸ் (Based on a True story !)
"எதைப் பற்றியும் கவலை இல்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தச் சாத்தானுடனும் கை கோர்ப்பேன் !!" என்ற போஸின் ஆணித்தரமான உரைகளில் உறைந்து போனார்கள் காந்தியும், நேருவும், ம‌ற்ற காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளும்.

"அஹிம்ஸா முறையிலே தான் நாம் போரிட வேண்டும். உங்களது போக்கு மிகவும் தவறானது" என்றார் காந்தி. கூடியிருந்த‌ அனைவ‌ரும் காந்தியின் க‌ருத்தை ஆமோதித்த‌ன‌ர்.

போஸ் தன் நிலையில் இருந்து சற்றும் பின் வாங்குவதாய் இல்லை. "என‌து நாட்டில் வேரூன்றி, என‌து ம‌க்களைச் சித்திர‌வ‌தை செய்வ‌தை, அவ‌ர் த‌ம் பொருட்க‌ளைக் கொள்ளை அடிப்ப‌தை, பெண்க‌ளை மான‌ப‌ங்கப்ப‌டுத்துவ‌தை, போததற்கு 'இரண்டாம் உலகப் போரில் இந்தியாவும் கலந்து கொள்ளும்' என்று நம்மிடம் கேட்காமல் முடிவு செய்ததை, இதை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்ப‌டி அஹிம்ஸா முறையில் வெள்ளையருடன் போரிட‌லாம் என்கிறீர்க‌ள். என்னால் முடியாது. பிரிடிஷ் அரசுக்கு ஆறு மாத‌ கால‌ அவ‌காச‌ம் த‌ருவோம். அத‌ன் பின்னும் அவ‌ர்க‌ள் அன்னை பூமியை ந‌ம் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்காவிட்டால், க‌டுமையான‌ போர் தொட‌ர‌லாம் !".

போஸின் மேல் க‌டுங்கோப‌ம் கொண்ட‌ன‌ர் கூடியிருந்த‌ த‌லைவ‌ர்க‌ள். "ஒரு அமைப்பின் தலைவனாக இருந்து கொண்டு துடுக்குத்தனமாகப் பேசுவது பெரும் தவறு. நீங்கள் அறிவாற்றால் கொண்டவர் தான். வீரர் தான். வீரத்தையும் விவேகமாகக் காட்ட வேண்டும். கொஞ்ச‌ம் பொறுங்க‌ள், முதன் முறையாக விவேக‌ன‌ந்த‌ரின் சீட‌ர் 'ப‌க‌வான்ஜி'யும் இன்றைக்கு கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார். உங்க‌ளுக்கு விவேகான‌ந்த‌ரைப்பிடிக்கும் எனில் ப‌க‌வான்ஜி அவ‌ர்க‌ளையும் பிடிக்கும். அவ‌ர் சொன்னாலாவ‌து கேட்பீர்கள் தானே ?!" என‌ முக‌ம் சுழித்த‌ன‌ர்.

குஞ்சுத‌னைக் காக்க‌ க‌ழுகிட‌ம் சின‌ம்கொள்ளும் கோழியின் சீற்ற‌‌மும், கட்டி வைத்த யானையின் அதகள ஆக்ரோஷ‌மும், கூடைக்குள் சுருண்டுருளும் கருநாகச் சீற்றமும், கொட்டடியில் அடைபட்ட கோவில் காளையின் மூர்க்கமும், என‌ ஏதோ ஒரு பிடிமான‌த்தின் கீழ் இருந்து க‌ட்டுண்டு தன்நாட்டை நயவஞ்சகர்களிடம் இருந்து காக்கமுடியாது உளன்றான் இளைஞன் போஸ்.

"வீதியில் வியாபாரம் செய்ய வந்தவனை வீட்டுக்குள் அழைத்து, பொறுப்பையும் தந்த நீங்கள், அஹிம்சை அஹிம்சை என்றால், விடுதலை என்பது வான் உள்ளளவும் எட்டாத காரியமாகி விடும். நீங்க‌ள் ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌மாட்டீர்க‌ள். என் முடிவை நானே எடுக்கிறேன் ! இந்தப் பதவியினால் தானே என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை !" என‌ த‌ன‌து காங்கிர‌ஸ் தலைவர் ப‌த‌வியை ராஜினாமா செய்து கூட்ட‌த்தை விட்டு வெளியேறினான்.

'போராடிப் பெறுவதே விடுதலை, அதுவே தமது குறிக்கோள்' என்று இளைஞர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்தான். க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளுக்குட்ப‌ட்டு ப‌ல‌முறை சிறை சென்றான். எந்திர‌த்தின் முடுக்குத‌லில் இறுகும் இரும்பென‌, மேலும் இறுகி உறுதியான‌து போஸின் எண்ண‌மும், செய‌லும்.

'ப‌க‌த் சிங்கைத் தூக்கிலிடுவான். ஜாலிய‌ன் வாலா பாகில் அப்பாவி ம‌க்களைப் பொசுக்கித் த‌ள்ளுவான். அவ‌ன் ஜென்டில்மென், நாம‌ காட்டுமிராண்டிகள் ! இவற்றை எல்லாம் தட்டிக் கேட்டால் என் நாட்டிலேயே என்னைச் சிறையில் தள்ளுகிறான். என் தலைவர்களையே என்மேல் வெறுப்பு கொள்ள வைக்கிறான். எங்கிருந்தோ வந்து, எவ்வளவு தந்திரமாக ந‌ம் ஆட்க‌ளையே ஏவி விட்டு, த‌ள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான். அவனைப் போல தந்திரக்காரனாகத் தான் போரிட வேண்டும். அதற்கு எல்லைகளற்ற அறிவும் ஆதரவும் வேண்டும். இங்கிருப்பதால் தானே எதுவும் செய்ய முடியவில்லை. நம் எதிரியின் எதிரி நமக்கு நண்பன்.' ... எண்ண‌ அலைக‌ளில் மித‌ந்து ஜெர்ம‌னி சென்றான்.

அங்கிருந்து வானொலியில் போஸ் உரையாற்ற, 'இங்கே சிறையிலடைக்க அங்கே எப்படி அவன்?!' என அதிர்ந்து போன‌து பிரிடிஷ் அர‌சு. அதுவும் சென்ம‌ப் ப‌கைய‌னான‌ ஜெர்மானிய‌னினுட‌ன். 'அஹிம்சா முறை' ஆட்டுவிக்காத‌ வித்தையை, முதன்முறையாகத் த‌ந்திர‌ம் ஆட்டுவித்த‌து.

கால் க‌டுக்க‌ ந‌ட‌ந்து, ம‌லைக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்து, நீரடியில் மித‌ந்து, ஊண் உற‌க்க‌ம் ம‌ற‌ந்து, ஜெர்ம‌னியில் இருந்து ஜ‌ப்பான், சிங்க‌ப்பூர், ப‌ர்மா, ஸோவியத் ரஸ்யா என‌ப் பல திசைகளிலும் ப‌ய‌ணித்தான். ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினான். வழக்கம் போல் வானொலியில் உரையாற்ற‌வும் த‌வ‌றுவ‌தில்லை. செல்லும் இட‌மெல்லாம் சேர்ந்த‌து இளைஞ‌ர் பட்டாளம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என‌ ஆங்காங்கே அணிக‌ள். ம‌லைத்துப் போன‌து பிரிடிஷ் அர‌சாங்க‌ம்.

ந‌ரியின் த‌ந்திர‌ம் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுக்குச் சொல்லியா த‌ர‌ணும். உள்ளூரில் ஒடுக்குமுறையை ஆர‌ம்பித்த‌து பிரிட்டிஷ் அர‌சு. ப‌ல‌ சார‌ண‌ர் இய‌க்க‌ங்க‌ளைத் த‌டை செய்த‌து. வெள்ளைச் ச‌ட்டைச் சுதேசிகளை அடித்துத் துவைத்த‌து. ச‌ந்தேக‌த்திற்குரிய‌வ‌ரை அந்த‌மானில் கொடும் சிறைக்கு அனுப்பிய‌து.

எண் திசைகளில் இருந்தும் ஏராளச் செய்திக‌ள் வ‌ந்து குவிய‌, போஸின் ம‌ன‌ப்பாறை லேசாக‌ ஆடிய‌து. லாவாக் கொப்புள‌மாய் உதிர‌ம் கொதிக்க‌, வெடிக்க‌த் தாயாரான‌து எரிம‌லை.

"ஆளும் அதிகார‌ம் சிறிதும் இல்லாத வியாபாரியான வெள்ளையன் உட‌ன‌டியாக‌ எம் ம‌ண்ணை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவ‌ன‌து நாட்டுக்குள் புகுந்து துவ‌ம்ச‌ம் செய்வேன். ஏராள‌மான‌ போர்க் க‌ப்ப‌ல்க‌ளும், போர் விமான‌ங்க‌ளும், ஆள் ப‌ல‌மும், நாடுக‌ள் ப‌ல‌மும் உங்கள் நாட்டின் திசை நோக்கி நிற்கிறது. எந்த நேரமும் அவை புறப்படலாம். ஜெர்ம‌னி வானொலி மூல‌ம் இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அர‌சுக்கு நான் விடுக்கும் உறுதியான இறுதிக‌ட்ட‌ எச்ச‌ரிக்கை !" என்று சீறினான்.

இவ‌னை உயிரோடு இன்னும் விட்டு வைத்தால், அது பிரிட்டிஷ் அரசை பேராப‌த்தில் கொண்டு விடும். இனியும் தாம‌திக்க‌லாகாது என ரகசிய‌ கூட்ட‌ம் போட்டு க‌ட்ட‌ம் க‌ட்டிய‌து பிரிட்டிஷ் அர‌சு.

க‌ட‌ந்த‌ சில வாரங்க‌ளில், தாய்வானில் இருந்து ஜ‌ப்பான் நோக்கி சென்ற‌ விமானம் நொறுங்கி விழுந்ததில், ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் அனைவ‌ரும் உயிரிழ‌ந்த‌ன‌ர் என்றும், அவ‌ர்க‌ளில் போஸும் ஒருவ‌ர் என்ற‌ செய்தியும் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌வ‌, பிரிட்டிஷ் அர‌சின் க‌ண்க‌ளில் ப‌ர‌வ‌ச‌ம் மின்னிய‌து.

"செத்தொழிந்தான் எதிரி !" என்று பிரிட்டிஷார் மார்தட்ட முடியா வண்ணம், போஸ் ம‌றைந்தாலும் அவ‌ர் விட்டுச் சென்ற பட்டாளம் மறையாது, தொட‌ர்ந்து ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து வெள்ளைய‌ரை எதிர்த்துப் போராடிய‌து. ப‌ல போராட்டங்களுக்குப் பின், அடிதடிகளுக்குப் பின், ஆச்சரியங்களுக்குப் பின், பணிந்தனர் வெள்ளையர். "உங்க‌ள் நாட்டிற்கு சீக்கிர‌மே விடுத‌லை கொடுப்போம் !" என்று உறுதி அளித்தனர்.

போஸ் ம‌றைந்து இர‌ண்டாண்டுக‌ளில், 1947 ஆக‌ஸ்ட் மாத‌ம் 15ம் தேதி விடுத‌லை பெற்ற‌து இந்திய‌த் தாய் நாடு. நாடுமுழுக்க வெற்றிக் கனியைச் சுவைத்துக் கொண்டிருக்க‌, 'இதைக் காண‌ ந‌ம் த‌லைவ‌ன் இன்று இல்லையே !' என‌ ஏங்கிய‌ ப‌ட்டாள‌த்தார்க‌ளுக்கு ம‌த்தியில், காங்கிரஸ் த‌லைவ‌ர்களுக்கு ந‌டுவில், விடுத‌லை விருந்தில் க‌ல‌ந்திருந்தார் 'ப‌க‌வான்ஜி' !!!!!

யூத்ஃபுல் விகடன் - ஆகஸ்ட் 15 சுதந்திரதின சிறப்புப் பக்கத்தில்


விகடன் முகப்பில்

Monday, August 10, 2009

சிறந்த நட்புக்குரிய பதிவர்களும், விருதும் !


'சிறந்த நட்புக்குரிய பதிவர்' என்ற தொடரில் நானும் ! என்று எண்ணுகையில் உள்ளம் உவகை கொள்கிறது. வலையில் மார்க்கண்டேயர் என்று புகழப்படும் 'சீனா ஐயா'விடம் இருந்து இவ்விருது எனும் போது, அதை விவரிக்க வானளவும் வெள்ளைத் தாள் போதாது !!

முதலில் நட்பு என்பது வீட்டுக்குள் உருவாக வேண்டும். "எங்க அப்பா கூடவும் அம்மா கூடவும் சண்டை. பேசியே பல வருஷம் ஆச்சு. அனா, எங்க சித்தப்பா கூடவும், மாமா கூடவும் அப்பிடி" என்று 'பட்டிமன்ற புகழ் லியோனி' மாதிரி சொன்னா, அவர் வரவழைக்கின்ற சிரிப்பு தான் நமக்கு வரும்.

ச‌ரி, வீட்டுக்குள்ள முதலில் ந‌ட்பு எனும் போது, இந்த‌ வ‌லையையும் ந‌ம‌து வீடு என்று சொல்ல‌லாமா ?

எது தான் ஊரோ ?
என்ன‌ தான் பேரோ ?
ப‌ந்த‌ங்க‌ளும் பாச‌ங்க‌ளும்
பதிவுகளில் தான் குறைவோ ?!

சில நேரங்களில் சில பதிவுகளில் அடித்துக் கொள்வதும் நடக்கத் தான் செய்கிறது. இதை ச‌ற்று த‌ள்ளி வைப்போம். குடும்ப சண்டை மாதிரி, வரும் போகும். இதையெல்லாம் மீறி அநேக‌ம் ப‌திவுக‌ள் ந‌ட்பு பாராட்டித் தான் ப‌திய‌ப்ப‌டுகிற‌து. "ப்லாக‌ர் ஃபாலோஅர்" உதார‌ண‌ம் ஒன்றே போதுமே !

என்ன‌ தான் இரண்டரை ஆண்டுகளாக வ‌லையில் (டிஜிட்ட‌ல்) குப்பை கொட்டிக் கொண்டிருந்தாலும், எனது ந‌ட்பு வ‌ட்ட‌ம் க‌டுக‌ள‌வே ! முழுமுத‌ற் கார‌ண‌ம் நேர‌மின்மை. ஆனாலும் அவ்வ‌ப்போது ப‌டிக்கும் ஒரு சில ப‌திவுக‌ளுக்கும் ம‌றுமொழி இட‌த் த‌வ‌றுவ‌தில்லை.

அவ‌ர்க‌ளையும் ம‌ன‌தில் கொண்டு, வ‌ழ‌க்க‌ம் போல‌ வ‌ந்து வாசித்து நம்மை(யும்) பாராட்டும் சில‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் க‌ண‌க்கில் கொண்டு, அவ‌ர்க‌ள் வ‌லைப் பூவையெல்லாம் நுழைந்து பார்த்தால், எங்கெங்கு காணினும் விருது ம‌யம் !!! என்ன‌ செய்வ‌தென‌த் த‌விக்குது எந்த‌ன் ம‌ன‌ம் ???விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


எப்பொழுதுமே 'தொட‌ர்' எனும் போது, முதலில் ம‌ன‌தில் தொட‌ர்வ‌து இவ‌ரின் எண்ண‌மே. கார‌ண‌ம் ப‌திவுல‌கையும் தாண்டி(ய) ந‌ட்பான‌து. ந‌ட்புக்கு ஒரு சிற‌ந்த எடுத்துக் காட்டும் கூட‌. இந்த விருதை முதலில் இவருக்கு அளிக்கிறேன். உல‌கில் 99 விழுக்காடு ஒருவித‌ எதிர்பார்ப்புட‌ன் தான் ந‌டைபோடுகிற‌து ந‌ட்பு. ஏதாவ‌து ஒருவித‌த்தில‌ உத‌வியா இருப்பார்கள் என்று இருபுறமும் இருக்கும்‌ செல்ஃபிஷ்னெஸ் என்றும் சொல்ல‌லாம். வ‌லையிலும் கூட‌ பாருங்க‌ள், இட்டால் தான் கிடைக்கும் ம‌றுமொழியும் :)). ஆனால் இந்த‌ ந‌ண்ப‌ரைப் பொறுத்த‌ அள‌வில் எந்த‌வித‌ எதிர்பார்ப்பும் இன்றி, எங்களுக்கு எப்பொழுது எந்த உதவி தேவை என்றாலும் தயங்காது முன்நிற்பார். இத்த‌னைக்கும் நாங்க‌ள் இருக்கும் தொலைவோ ஆயிர‌த்து இருநூறு மைல்க‌ளுக்கும் அப்பால். உடன் வரும் பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ளே ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் கூற‌, இவ‌ரின் உத‌வி க‌ண்டு திகைப்பது உள்ள‌ம். இத்தனைக்கு இவரைக் கடந்த சில வருடங்களாகத் தான் தெரியும். அவர் வேறு யாரும‌ல்ல, ரிச்ம‌ண்ட் த‌மிழ் ச‌ங்க‌த்தின் முன்னாள் பிர‌ஸிடென்ட் ஐயா நாகு அவ‌ர்க‌ளே. (நாகு: உங்க‌ வீட்டுப் ப‌க்கம் யாராவ‌து க்யூ க‌ட்டி நின்னா நான் பொறுப்பு கிடையாது :)))

'எதிர்பார்ப்ப‌ற்ற‌ ந‌ட்பு என்றும் நிலைக்கும் !'. மேலே சொன்ன‌வ‌ருக்கு ச‌ற்றும் குறைந்த‌வ‌ர‌ல்ல‌ இவ‌ர். நான் யார், ஊர் எது, படிப்பு எது, பார்க்கும் வேலை எது ... இப்ப‌டிப் ப‌ல‌ 'எது'க்க‌ள் தெரியாது. எழுத்தின் மூல‌ம் அறிமுக‌மே, அது இன்றும் தொட‌ர்கிற‌து. இவ‌ர் அதிக‌ம் ப‌திவ‌துமில்லை, ஆனாலும் இவர் சேர்த்த நட்புக்களின் குவியும் மறுமொழி கண்டு அல‌ட்டிக் கொள்வ‌தும் இல்லை. 'தொட‌ர்' அப்ப‌டி என்றாலே 'வேண்டாம்பா ஆள‌விடுங்க‌' என்று தொட‌ர்ந்து ஓடிக் கொண்டிருப்ப‌வ‌ர். இந்த‌ முறை பிடித்து நிற்க‌வைத்துப் பார்ப்போம் :)) இந்தாங்க, ராம‌ல‌ஷ்மி அக்கா பிடிங்க‌ உங்க‌ விருதை. இதுவரை ஏராள‌மானோர் கொடுத்திருந்தாலும் என‌து விருதையும் ஏற்று கொள்ளுங்க‌ள்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த, இன்னும் ஒலிக்கின்ற‌ வரிகளுக்குச் சொந்தக்காரரின் புதல்வர். இவ‌ரிட‌ம் என‌க்குப் பிடித்த‌து இவ‌ரது எளிமை. பொஸ‌ஸிவான‌ ந‌ண்ப‌ரும் கூட‌. ப‌திவுல‌கில் இருந்து ச‌ற்று வில‌கி சில‌ ஆண்டுக‌ள் ஆகிற‌து. சென்ற‌ முறை சிங்கை சென்ற‌ போது, தொலைபேசி அழைப்பில், "எங்கேடா இத‌ற்கெல்லாம் நேர‌ம் இருக்கிற‌து. அதுவுமில்லாம‌ல் ப்லாக்குள்ள‌ புகுந்தா வெளியே வ‌ர‌ ரொம்ப‌ சிர‌மாக‌ இருக்கிற‌து. குடும்ப‌ம், குழ‌ந்தைக‌ளுக்கு நேர‌ம் செல‌வ‌ழிக்கிற‌து குறைந்து போச்சு. அதான் இப்ப‌ல்லாம் ப்லாக் ப‌க்க‌மே வ‌ருவ‌தில்லை" என்றார். அவரை, வீக்கென்ட் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ம‌ட்டும்ங்கிற மாதிரி ஒரு அட்ட‌வ‌னை போட்டுக்க‌ சொல்லி மீண்டும் வ‌லைக்குள் அழைத்து வ‌ர‌ இந்த‌ விருதை வழங்குகிறேன். ந‌ன் அதெர் த‌ன் க‌விய‌ர‌ச‌ரின் க‌டைக்குட்டி வெங்கட் கண்ணதாசன்.

Sunday, August 2, 2009

வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் !


Photo Credit: wikimedia.org


உலகத்தில் எத்தனையோ பானங்கள் இன்றைய தேதியில் இருந்தாலும், புத்துணர்ச்சி என்ற விகிதத்தில் 'காஃபி' தான் முதலிடம் வகிக்கிறது.

அலுவ‌ல‌க‌த்தில், திண்ணைப் பேச்சில், வ‌ய‌ல்காட்டில், போர‌டிக்கும் மீட்டிங்கில், பாட‌ல் காட்சிக‌ளில் சினிமா கொட்ட‌கைக‌ளில், நான்கு ந‌ண்ப‌ர்க‌ள் சந்திக்கையில் ... இப்படி ஏதாவது ஒரு நிகழ்வில், 'வாங்க காஃபி சாப்பிட்டு வரலாம்' என்ற‌வுட‌னே ப‌ல‌ருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். இது உல‌க‌றிந்த‌ உண்மை !

'காஃபி' என்ற‌ பெய‌ர் எப்ப‌டி வ‌ந்த‌து ? எங்கு தோன்றிய‌து ? உல‌கிற்கு எங்ங‌ன‌ம் ம‌ன‌ம் ப‌ர‌ப்பிய‌து ? காஃபி அதிக‌ம் விளையும் நாடு எது ? இத‌ற்கு ம‌ருத்துவ‌ குணங்கள் இருக்கிற‌தா ? காஃபியில் என்ன‌லாம் செய்ய‌லாம் ?

இப்படிப் பல கேள்விக‌ள் ந‌ம் ம‌ன‌தில் எப்போதாவ‌து தோன்றியிருக்க‌லாம். ப‌ல‌ருக்கு விடையும் தெரிந்திருக்க‌லாம். சில‌ர், "அட போய்யா சும்மா போரடிக்காத‌. நான் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வ‌ர்றேன்" என்று எழுந்தும் செல்ல‌லாம்.

உல‌க‌ அள‌வில், காலையில் எழுந்தவுடன் அநேகம் பேர் அருந்தும் பானம் 'காஃபி' என்று பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன‌. நம்மூர்ல பெட் காஃபி என்கிற பெயரில் பல்லுத்தேய்க்காமல் (உவ்வே) கூட காஃபி உறிஞ்சுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஒன்பதாம் நூற்றாண்டுகளில், முதன்முதலில் எத்தியோப்பாவில், கஃப்ஃபா என்ற இடத்தில் தோன்றியது காஃபி என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. அரேபியாவில் ப‌திமூன்றாம் நூற்றாண்டில் ப‌ர‌வி, இந்தியாவில் ப‌தினாறாம் நூற்றாண்டுகளில் கடத்திவரப்படுகிறது காஃபி. இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 'பாபா' என்கிற ஞானி, ஏழு காஃபிக் கொட்ட‌களைத் த‌ன் ப‌ய‌ண‌த்தில் ப‌துக்கி வந்து, இந்தியாவில் சிக்மகளூரில் ப‌யிரிட்டிருக்கிறார். இன்றும் இங்கு தரமான காஃபி விதைகள் உற்பத்தியாகின்றன. உல‌கின் இன்றைய‌ ப‌ல‌ காஃபி ம‌ர‌ங்க‌ளுக்கும் இவை தான் மூதாதைய‌ர்க‌ள்.

காஃபி உற்ப‌த்தியில் ப்ர‌ஸீல் நாடு முத‌லிட‌ம் வ‌கிக்கிற‌து. 2007 ஆய்வின் ப‌டி, 17 மில்லிய‌ன் ட‌ன் காஃபி உற்ப‌த்தி செய்திருக்கிற‌து பிர‌ஸீல். காஃபி தோன்றிய‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ எத்தியோப்பியா 1 மில்லிய‌ன் ட‌ன் உற்ப‌த்தியில் ஐந்தாவ‌து இட‌த்திலும், இந்தியா 9 ல‌ட்ச‌ம் ட‌ன் உற்ப‌த்தியில் ஏழாவ‌து இட‌த்திலும் இருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

காஃபிக் காய்க‌ளை மேய்ந்த‌ ஆடுக‌ள், புத்துண‌ர்ச்சியுட‌ன் ந‌ட‌ன‌மிட்டு ப‌ல‌ம் கொண்ட‌வைக‌ளாக‌ திக‌ழ‌, காஃபியில் 'க‌ஃபெய்ன்' இருப்ப‌தை முத‌ன்முத‌லில் ஆட்டிடைய‌ர்க‌ள் தான் க‌ண்டுகொண்ட‌ன‌ர் என்கிறார்க‌ள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள். 'க‌ஃபெய்ன்' அள‌வைப் பொருத்தே ம‌ருத்துவ‌ குண‌ம் ம‌திப்பிட‌ப்ப‌டுகிற‌து.

காஃபிக்கு ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள் இருக்கிற‌தென்றும், அதெல்லாம் இல்லை அத‌னால் தொல்லை தான் என்றும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ர் குடித்துக் கொண்டு, ம‌ன்னிக்க‌ ... அடித்துக் கொண்டு இருக்கின்ற‌ன‌ர்.

இதன் நிறை/குறைகளை கலக்கி வடித்து, 'அள‌வோடு அருந்தினால் வளமான வாழ்வே' என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹார்வ‌ர்ட் ப‌ள்ளி இருப‌த்தி இர‌ண்டாண்டுக‌ள் 'காஃபி' ப‌ற்றி ஆராய்ச்சி செய்கின்ற‌து என‌ விக்கிபீடியா‌ மூல‌ம் அறிய‌லாம்.

ப‌ல‌ நோய்க‌ளின் வீரிய‌த்தைக் குறைக்கும் த‌ன்மை காஃபிக்கு இருக்கிற‌தென‌வும், அவ‌ற்றில் 'இத‌ய‌ நோய்' குறைய‌ வாய்ப்பு இருக்கிற‌து என்ப‌தும் (அளவான‌) காஃபி பிரிய‌ர்க‌ளுக்கு ஒரு ம‌கிழ்வான‌ செய்தியே !

உங்களுக்கு காஃபி கலக்கத் தெரியுமா ? அல்லது கலக்க ஆர்வம் இருக்கிறதா ? அல்லது காஃபி நன்றாக கலக்குவீங்களா ?! கீழே வீடியோவில், இவர் எப்படி 'கலக்கறாரு'னு பாருங்க. 'செம கலக்கல்' அப்படினு நிச்சயம் நீங்க சொல்லுவீங்க. பேப்பர், துணி, தகரம், கல்லுனு பல ஸ்ட்ராங்கான சர்ஃபேஸ்ல கலைகளைச் செய்யவே கடினமாக இருக்கும்போது, எந்த வித பிடிமானமும் இல்லாமால், கலக்கலாய் காஃபியில் கலைகளைச் செய்யும் இவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள். இன்ஸ்ட‌ன்ட் காஃபி போல, இன்ஸ்ட‌ன்ட் (காஃபி) க‌லை.