Thursday, May 29, 2008

அகரம் என்றொரு (கையெழுத்துப்) பத்திரிகை


Photo: biotech.iitm.ac.in

அக்னி நட்சத்திரத்தின் பிரகாசமான ஒரு காலைப் பொழுது. ஆங்காங்கே, ஆடையின்றி எழுந்து நிற்கும் அழகிய செங்கற் கட்டிடங்கள் சில‌. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு பெயர். அதில் வரிசையாய் அறைகள். தரைகளில் நாசி துளைக்கும் சிமெண்ட் வாசனையும், ஜன்னல்களில் மணக்கும் பெயிண்ட் வாசனையும், காற்றில் கலந்து புதுப் பள்ளியின் வரவை அக்கிராமத்துக்கும், சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் மணம் வீசி, பரப்பிக் கொண்டிருந்தது.

சரியாக மணி ஒன்பது நாற்பத்தைந்திற்கு உள்ளே நுழைந்தார் தமிழையா ராமலிங்கம். "ஏறிய நெற்றி, அதில் நிறைய நீர், இரு புறமும் நரை கூடிய கேசம், பட்டையான கண்ணாடி ..." என இருப்பாரோ என எண்ணாதீர்கள்.

எண்ணை விட்டு, வாரிச் சீவிய கறுகறு கேசமும், முறுக்கு மீசையும், நெடிது வளர்ந்த உருவமும், வெண் பருத்திச் சட்டையும், கருப்புக் கால்சட்டையுமாக நாற்பது அகவையை நெருங்கும் வாலிபர்.

இலைகளோடு போட்டியிட்ட பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவியரின் சளசளப்பு நின்று, மழை பெய்து ஓய்ந்த நிசப்தம் நிலவியது வகுப்பறையில். கையில் வைத்திருந்த ஓரிரு புத்தகங்களை மேசையில் வைத்துவிட்டு, "நேற்று பாடத்தை எங்கே நிறுத்தினோம்" எனப் பொதுவாகக் கேட்டார்.

"ஐயா ... " என்று எழுந்து நின்ற கதிவரன் இழுத்தான்.

"ம்... எங்கே விட்டோம் என்று சொல்லையா" என்றார் ராமலிங்கம்.

"அதில்லை ஐயா, வெகு நாட்களாகவே ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்க‌லாம் என்று சொன்னீர்களே".

"ஆமாம், ஆமாம். சரி இன்றே அது பற்றி பேசுவோம்". பாடத்தை அதன் பின் தொடருவோம் என்றார். அக்னி நட்சத்திரப் பிரகாசிப்பு மாணவ மணிகளின் முகத்தில் மலர்ந்தது.

"ஐயா, முருகன் நல்லா கதை எழுதுவான்யா" என்றான் கதிர்.

அவன் கதை நன்றாக அல்லவா விடுவான், எழுதவும் செய்வானா என்றார் ராமலிங்கம். மாணவியர் பக்கம் இருந்து சிரிப்பொலி எழுந்து மறைந்தது.

சிரிப்பா சிரிக்கற, மாட்டி விடறேன் பார் என்று, "மாலதி கவிதை அருமையாக எழுதுவாள் ஐயா" என்றான் முருகன்.

"இப்பொழுது தானே கூறினேன், நீ கதை நன்றாக அளப்பாய் என, அதை உடனே நீருபிக்க வேண்டுமா முருகா" என்றார் தமிழையா.

சிதறிய சில்லரைகளாய் சிரித்தது வகுப்பறை.

ஒருவர் மாற்றி ஒருவர், தங்கள் படைப்புத்திறன் குறித்து ஒரே அரட்டையும், கும்மாளமுமாக‌ வழக்கத்தையும் விட கலகலப்பாக இருந்தது தமிழ் வகுப்பு.

எல்லாம் பேசி, தலைப்பும் 'அகரம்' என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

தாஜிதீன் கையெழுத்து நல்ல குண்டு குண்டாக இருக்கும். ஆனால் அடித்தும், திருத்தியும் எழுதும் பழக்கம் கொண்டவன்.

மல்லிகாவின் கையெழுத்து வளைந்து நெளிந்து ஒரு நானத்துடன் பெண்மையின் இலக்கணம் போல் இருக்கும். ஆங்காங்கே சேர்த்து எழுதும் பழக்கம் கொண்டவள்.

வையாபுரியின் கையெழுத்து முத்துப் போல் சீராக, மேலும் கீழும் அளவாக இடம் விட்டு அற்புதமாக இருக்கும்.

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பத்திரிகைக்கு வரும் கதை, கவிதை, கட்டுரைகள், இன்ன பிற எல்லாவற்றையும் எழுதுவது என்றும் உறுதி செய்தனர்.

வாரப் பத்திரிகையா, மாதம் ஒன்றா அல்லது மூன்று மாதங்களுக்கு ஒன்றா என்ற கேள்விக்கு, ஆர்வம் கொண்டவர்கள் வாரம் ஒன்று என்றும், நடுநிலையாளர்கள் மாதம் ஒன்று என்றும், வேற வேலை இல்லை இவங்களுக்கு என்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒன்றும், என்று மாற்றி மாற்றி கூறிக் கொன்டிருந்தனர்.

சிறிய சர்ச்சைக்குப் பின், மாதம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் என்று முடிவானது.

அதிலிருந்து மாண‌வ‌ர்க‌ளின் குதூக‌ல‌ம் பன்ம‌ட‌ங்கு அதிக‌ரித்த‌து. வ‌குப்பிலும், வெளியிலும், உண்ணும்போதும், உற‌ங்கும்போதும், அடுத்த மாதம் எப்ப வரும், முதல் பத்திரிகை எப்படி இருக்கும் என்பது ப‌ற்றியே அதிக‌ம் பேசின‌ர் ஆர்வ‌ம் கொண்ட‌ மாணவ மாணவியர்.

இத‌ற்கிடையே ப‌ள்ளியில் ஒரு நாள், பாரதி பிறந்த நாளை ஒட்டி, பேச்சுப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்ய‌ப் ப‌ட்டிருந்த‌து. அத‌ற்கு த‌லைமை தாங்கிய‌வ‌ர் இந்த‌ ஊரைச் சேர்ந்த காசியப்பன். ப‌க்க‌த்து ஊரில் ப‌டித்து வ‌ள‌ர்ந்து, த‌ற்போது அய‌ல்நாட்டில் வ‌சிக்கும் ம‌னித‌ர்.

பேச்சுப் போட்டி எல்லாம் ந‌ல்ல‌ வித‌மாக‌ முடிந்து செல்கையில், ப‌ள்ளித் த‌லைமை ஆசிரிய‌ர் ராஜ‌ன், காசிய‌ப்ப‌ன் அவ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

அண்ணாச்சி, இப்ப‌ எல்லாம் க‌ணினி யுக‌மா இருக்கு. உங்க‌ளுக்கு அத‌ நான் சொல்ல‌வும் அவ‌சிய‌ம் இல்லை. உங்க‌ளால‌ முடிஞ்சா ஒரு க‌ணினி அன்ப‌ளிப்பா கொடுத்தீங்க‌ என்றால், பள்ளிக்கு உபயோகமா இருக்கும், உங்களுக்கும் புண்ணிய‌மா இருக்கும். க‌வர்மெண்ட் கிட்ட‌ ம‌னு போட்டு மாச‌க்க‌ண‌க்கா ஆச்சு. இந்தா, அந்தா என்று ஒரே இழுவையா இருக்கு.

நானே உங்களிடம் ஏதாவது உதவி தேவையா என கேட்கலாம் என நினைத்தேன். உங்களிடம் எப்படி கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்லதாப் போச்சு என்றார் காசியப்பன்.

சில நாட்களில், ஒன்றுக்கு, ஆறாய் கணினியும், இரண்டு பிரிண்டர்களும் பள்ளிக்குத் தந்து பெருமைக்குரிய மனிதர் ஆனார். கணினி பயன்பாட்டு பயிற்சிக்கு, பெரு நகரங்களில் இருந்து வல்லுநர்களை அழைத்தும் வந்தார். பள்ளியில் இந்தப் பரபரப்பு வெகுநாட்க‌ள் குறையவே இல்லை.

பதினொன்றாம், பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அதிக நேரம் கணினி பயிற்சி அளிக்கப் பட்டது. புதுசா வந்த மவுசில், மாணவ மணிகளின் ம‌ன‌தை விட்டு கையெழுத்துப் பத்திரிகை சற்றே விலகியிருந்தது.

இருபது இருபத்தைந்து நாட்கள் ஆன நிலையில், "என்னையா, கையெழுத்து பத்திரிகை வருமா, வராதா" என்று யதார்த்தமாக நினைவூட்டினார் தமிழையா வகுப்பறையில்.

ஞாபகம் இருக்கிறது ஐயா. ஒரு சின்ன மாற்றம் மட்டும் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றியிருக்கிறது. புதிதாய் வந்திருக்கும் க‌ணினி எங்க‌ள் அனைவ‌ருக்கும் பிடித்திருக்கிற‌து. கையெழுத்து பத்திரிகையை அழித்து, திருத்தி கைக‌ளில் எழுதுவ‌தை விட‌, க‌ணினியில் த‌ட்ட‌ச்சிட்டு, அழ‌காக‌ பிர‌திக‌ள் எடுத்து விநியோகிக்க‌லாமே என்று யோசிக்கிறோம் என்ற‌ன‌ர் ஒருமித்த‌ குர‌லில் !!!

Wednesday, May 28, 2008

மாமரத்தில் ஊஞ்ச‌ல் க‌ட்டி ...



ஒட்டி உற‌வாடும்
குட்டிப்பூக் கூட்டம்,
பொறாமை கொள்ளும்
காற்றின் சீற்றம்.

உரசும் காற்றினில்
உதிரும் பிஞ்சுக‌ள்,
இருந்தும் கிளை தாழ்த்தி
தரை தொடும் காய்க‌ள்.

கொத்தாய் தொங்கும்
கிளிகளின் மூக்கு,
சத்தாய் விளையும்
சப்பட்டை நாக்கு.

பொன் நிற‌ மேனியில் ...
மென் பட்டு சேலையில் ...
ஊரே தேடிடும்
உன் கனி வண்ணம்.

முக்கனி மூன்றில்
முதன்மை உன்கனி,
சித்திரை வைகாசியில்
மணக்கும் மாங்கனி.

சுவைக்கும் க‌னிக‌ளில்,
எப்புற‌மும் துளையில்லை,
எப்ப‌டி உள் சென்றாய் ?
தொப்பென்று விழும் வண்டே !

எங்கெங்கிலும் மா காய்க்க‌,
இந்திய மா இனிது,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
உல‌க‌ம் சொல்லும் அதை.

மா உந்தன் கிளைகளில்
மர ஊஞ்சல் க‌ட்டி ஆட‌,
தேனான‌ இசைபோல‌
தென்ற‌லும் சேர்ந்துவ‌ர‌,

சிற்றெறும்புக் க‌டி ம‌ற‌ந்தேன்,
சின‌ம்கொள் ம‌ன‌ம் ம‌ற‌ந்தேன்,
ஊண் உண்ணவும் ம‌ற‌ந்தேன் ...
உலகையே ம‌ற‌ந்து நின்றேன் !

Friday, May 16, 2008

காட்டு வழி வாரீயளா ?


Photo: free-pictures.com

குளிர்ந்த காலையும்
தெளிந்த நீரோடையும்,
மொட்டவிழ்ந்த மலரும்
சொட்டும் இலைநீரும்.

உடைந்த‌ மூங்கிலில்
உட்புகும் தென்ற‌லும்,
குடைந்து விளையாடி
வெளிவ‌ரும் இசையும்.

ம‌ருந்து க‌ல‌ந்த‌
மூலிகைக் காற்றும்,
பனியில் குளித்த‌
பசும்புற் தரையும்.

சுருதி சேர்க்கும்
கானகத் தென்றலும்,
படபடத்து ரீங்கரிக்கும்
ம‌துஉண்ட‌ வ‌ண்டும்.

அருகருகாய் செல்லும்
எறும்புகள் வரிசையும்,
அசைந்தாடிச் செல்லும்
யானைகள் கூட்டமும்.

சிற்சிறு குன்றுகளாய்
கருங்கற் குவியலும்
ஆங்காங்கே தென்படும்
ஒற்றையடிப் பாதையும்.

ப‌ச்சைப் ப‌சேலென‌ப்
ப‌ல்வ‌கை ம‌ர‌ங்க‌ளும்,
நீண்டு தொங்கும்
விழுதுக‌ள் எங்கும்.

பதுங்கிப் பதுங்கிப்
பகலவன் வருவதும்,
விழுதுடன் போட்டியிட
விரைந்திற‌ங்கும் க‌திர்க‌ளும்.

காட்டுவழி நடக்கையில்
ரசிப்பதில் இன்பம்,
இதமாய் மனதில்
பதியும் நினைவாய்.

பள்ளியும், குட்டீஸும், கேள்விகளும்

ஆயிரம் தான் அமெரிக்காவைக் குறை கூறினாலும், சில விசயங்களுக்கு இவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் சொல்லில் அடங்காது.

சமீபத்தில் எனது மகன் பள்ளியில் இருந்து, உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் கொண்டு வந்து காண்பிக்கலாம், விண்ணப்பத்தில் இருக்கும் தேதிகளில், மூன்று தேதிகளைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். அதில் ஒன்றை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த நாளில் உங்கள் பிராணிகளை பள்ளிக்கு எடுத்து வரலாம் என்றிருந்தனர். இங்கிருக்கும் அநேக பள்ளிகளில் இது வருடந்தோரும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

"நானும் குட்டீஸை என் வகுப்பில் காண்பிக்கிறேனே" என்றான் . சரி கொண்டு போய் காட்டிட்டு தானே வரப்போறோம் என்று சரி என்றேன். நாள் நெருங்க நெருங்க என் மகனுக்கு ஏக குஷி. இந்த இரு குட்டீஸும் எங்க வீட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது.



இன்று ஒரு மணிக்கு கரெக்டா பள்ளியில் ஆஜர். கீழே அலுவலகத்தில் வருகைப் பதிவில் கையெழுத்து வாங்கி, இன்டெர்காமில் எனது மகனின் ஆசிரியையை அழைத்து உறுதி செய்து கொண்டு உள்ளே அனுப்பின‌ர்.

எனது மகன் வகுப்பின் அத்தனை குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்க்க, நடுவே ஒரு மேசை போட்டு அதில் கூண்டை வைக்கச் சொன்னார் ஆசிரியை.



சரி என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். "குழந்தைகளே இது 'சிவா'வுடைய பெட்ஸ். உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் !" என்றார் ஆசிரியை.

கொஞ்சம் கூட யோசனையின்றி ஆளாளுக்கு கையைத் தூக்கி, கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தன குட்டீஸ்கள். அப்பப்பா, அவர்களின் சில கேள்விகள் சிரிப்பாகவும், சில வேடிக்கையாகவும், சில சிந்திக்க வைக்கும் படியும் இருந்தது.

அவர்களின் கேள்விகள் சிலவற்றை படித்து மகிழுங்கள். எல்லாம் ஏழு, எட்டு வயதுச் சிறுவர், சிறுமியர்.

What do they eat ?
Do they lay down while sleeping ?
Do they date ?
Im serious, Do they like stake ?
Do they talk ?
When you let them out, will they listen to get back in ?
Will they have babies ?
Do they make noice ?
how do you get them out ?
how they eat ?
how they drink water ?
how do they kiss ?
what is that ?
What the cuttle bone is for ?
why do they bite ?
where do they bite ?
why they make lot of sound ?
are they playful ?
do they play video games ?
do they watch TV ?
what channel do they watch ?
do they faint ?
how they look like when they get sick ?
how do they have babies ?
how do you know their gender ?
how much do they weigh ?
when they get mad will they peck you really hard ?
do they eat onions ?
when they see onions, do they get tears on their eyes ?
do they cry ?
do they fly around the house ?
do they take bath ?
where do they peck ?

Thursday, May 15, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 2)



பெண்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவ்வகுப்பில் கலக்கிய ஆண்கள் சிலரின் பேச்சுக்களைப் பார்ப்போம்.

-----

"இருபது வருடங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து, தற்போது மாற்றலாகி இங்கு வந்திருக்கிறேன். வந்த சில மாதங்களாகவே எனது பதினேழு வயது மகன், தினம் என்னிடம், 'ஏன்ப்பா இங்க வந்தீங்க ? நம்ம பழைய வீட்டை மறக்க முடியவில்லை, எனது பழைய பள்ளியை மறக்க முடியவில்லை, பழைய நண்பர்களை மறக்க முடியவில்லை ... எனக்கு இங்கு இருக்க துளியும் பிடிக்கவில்லை' என முறையிடாத நாள் கிடையாது.

திடீரென்று அவன் ஒரு நாள் வந்து, "ஏன்பா இத்தனை நாள் இங்கு வராமல் இருந்தீர்கள்" எனக் கேட்க, என்னுள் தாளமுடியாத வியப்பு !!!

ஆமாம்பா, அவள் பெயர் ரோஸி. மிகவும் நல்லவள். என்னை ஆண் நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என அவன் மேலும் கூற, சந்தோசம் வீட்டை நிரப்பிய‌து.

சில மாதங்களுக்குப் பின், "Dad it got broken, she got a new boy friend" என விசும்பி விசும்பி சிறு குழந்தைபோல் அழ ஆரம்பித்து விட்டான். பதினேழு வயது வாலிப மக‌ன் அழுவதை என்னால் தாங்க முடியவில்லை. சொல்லுங்கள், எந்தத் தந்தையால் தான் தாங்க முடியும்.

பிறகு அவனுக்கு சில விளக்கங்கள் அளித்தேன். வாழ்வில் எதுவுமே நடைபெறலாம். எல்லாவற்றையும் எதிர் கொள்ளப் பழகிக் கொள். ரோஸி இல்லையென்றால் வாழ்வு நின்று போய்விடாது என அவனைத் தேற்றி ஆறுதல் படுத்தினேன்." என்றார் நாற்பதுகளின் முடிவில் இருக்கும் ஒருவர்.

-----

"பிறப்பால் அனாதையான (!) நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அது அந்தக் கடவுளின் கருணை தான் என ஆரம்பித்தார் ஒருவர். சிறு வயதில் ரோட்டோரங்களிலும், பாலங்களுக்கு கீழேயும் படுத்துறங்கி, பல நாட்கள் (ஒரு முறை தொடர்ந்து பத்து நாட்கள்) தண்ணீரை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு அலைந்தேன்.

நமக்கு வாழ்வே அவ்வளவு தான். இனி ஒன்னும் செய்வதற்கில்லை என்ற நிலையில் தான் இருந்தேன். ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என‌ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் பெரிய ஊரான டெக்ஸாசிற்கு வேலை தேடிப் போனேன். கையில் இருந்த சொற்ப பணமும் கறைந்து போனது தான் மிச்சம். படிக்காதவனுக்குப் பிடிப்பேது !!!

பின் எங்களூரில் இருக்கும் சர்ச்சில், ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கெஞ்ச, சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள். சர்ச்சுக்கு வரும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராவது பணம் கொடுப்பார்கள். எனக்கு எஞ்சினியரிங் படிக்க ஆசை. சர்ச் நிர்வாகமும் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பண உதவி செய்தது. அவற்றை சேர்த்து வைத்து, எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். நாள் ஒன்றுக்கு இருபது மணிநேரம் படிப்பிற்கு செலவிட்டேன். டிகிரி வாங்கி இப்போது இதோ நல்ல நிலையில் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்த இறைவன் எனக்கு இட்ட பிச்சை" என கலக்கலாக முடித்தார்.

-----

என் பெண் நண்பி ஒரு நாள் திடீரென்று கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார். டாக்டர்களோ, அவள் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்றார்கள். இடுப்பில் ஒரு ஸ்டீல் ப்ளேட் வைத்து முதுகெலும்பு வரைக்கும் சர்ஜரி வேறு. மனதொடிந்திருந்த நிலையில் இருந்த அவளுக்கு முடிந்த வரை அனைத்து உதவியும் செய்யலானேன். சில நாட்களிலேயே மெதுவாக என்னைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். தினமும் சில மைல் தூரங்களாவது ஓடாமல் இருக்க முடியாது என்னால். நடக்க ஆரம்பித்த என்னவளை மெல்ல ஜாகிங் வரை இழுத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக தினம் ஜாகிங் செய்து, இப்போது சில வாரங்களிலேயே, அவள் என்னுடன் சகஜமாக கூட ஓடி வருகிறாள் என்றார் முப்பதுகளில் இருக்கும் வாலிபர் ஒருவர்.

இது என்ன பெரிய விசயம் என்கிறீர்களா ? இந்த வாலிபர் ஊனமுற்றவர் (குறிப்பாக கால்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

-----

இது யாருக்கு யாரு போட்டி என்று இல்லாமல் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவே இந்த இரு பதிவுகளும். வந்து வாசித்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி. திருவிளையாடல் படம், சிவம், சக்தி ... இதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Friday, May 9, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 1)



Photo courtesy : electricwarrior.com

சமீப‌த்தில் அலுவல் மூலம் க‌ல‌ந்து கொண்ட‌ ஒரு வ‌குப்ப‌றையில், மற்றவர்களுக்கு நீங்கள், அல்லது உங்களுக்கு மற்றவர் inspiration-ஆக இருந்த தருணங்கள் ப‌ற்றி இர‌ண்டு நிமிட‌ம் பேச‌ வேண்டும் என்றனர். நாற்ப‌து பேர் கொண்ட‌ வகுப்பறை அது. பெண்க‌ளும், ஆண்க‌ளும் எண்ணிக்கையில் ச‌ம‌ விகித‌த்திலேயே இருந்த‌ன‌ர்.

அப்பா, தாத்தா, பாட்டி, க‌ண‌வ‌ன், ம‌னைவி, குழ‌ந்தைக‌ள் என‌ தங்க‌ள் inspiration ப‌ற்றி பெண்களும், ஆண்களும் சுவார‌சிய‌மாக‌ப் பேசினாலும், இங்கு வாழும் நிறைய‌ பெண்ம‌ணிக‌ள் ப‌ரிதாப‌த்திற்கு உரிய‌வ‌ர்க‌ளாக‌வே வாழ்கிறார்க‌ள் என‌லாம்.

பேசிய முக்கால்வாசி பெண்கள், திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள் !!! இதெல்லாம் இங்கே சகஜம் தானேப்பா என்பவர்கள் மேலும் பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பெண்களின் inspiration கதைகள் கூட்டத்தினரை வெகுவாகக் கட்டிப் போட்டது. பெயர்கள் தவிர்த்து, அவர்கள் கூறிய சம்பவங்களின் சாரம் கீழே.

-----

"எங்களுக்குத் திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. பத்து வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் இருக்கின்றனர். சில வருடங்கள் முன்பு என் கணவரின் நடத்தையில் சில மாற்றங்கள் உணர்ந்தேன். மெல்ல மெல்ல அவரை தொடர்ந்து கண்காணித்ததில், அவருக்கு ஒரு பெண் அல்ல, பல பெண்களின் சகவாசம் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனேன் !

எனக்குத் தெரிந்துவிட்டது என அவர் துளியும் கவலைப் படவில்லை. இப்ப என்ன செய்யணும் என்கிறாய் என விவாதித்து மிரட்டினார். அவர் வெளிப்படையாக அவரின் தொடர்புகளை என்றும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் எனது மகன்களுக்குத் துளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன செய்யலாம் எனப் பல மாதங்கள் யோசித்து, இருவரும் பேசி விவாகரத்து செய்யலாம் என முடிவு செய்தோம். முக்கியமாக எனது குழந்தைகளுக்கு அவரின் நடத்தை தெரிந்து விடக்கூடாது என அவரிடம் தீர்மானம் வாங்கிக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு, இது தான் காரணம் என, நானும் இதுவரை கூறவில்லை.

என் வாழ்வில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என் குழந்தைகள் தான் இனி என் உலகம். அவர்கள் வளர்ந்து பெரிவர்களாகி வாழ்வில் உயர நான் அவர்களுக்கு நல்ல‌ inspiration-ஆக இருப்பேன். நான் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறேன், மகன்களையும் சந்தோசமாய் வளர்த்து வருகிறென்." என முடித்தார் ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌யதுப் பெண்ம‌ணி.

-----

பின் ஒரு இளம்பெண் தனது கதையைக் கூறினார்.

"இரண்டு அக்காக்களுடனும், ஒரு தம்பியுடனும் பிறந்தேன். எனது பெற்றோர் சில ஆண்டுகள் முன்னர் விவகாரத்து செய்து கொண்டனர். அக்காக்களுக்கு திருமணம் ஆகி வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நானும் எனது தம்பியும் அம்மாவுடன் வசிக்கலானோம். சில மாதங்களில் அம்மா மறுமணம் செய்து கொள்ள, வழியறியாச் சிறுவர்களாக இருந்த எங்களை தந்தையே அழைத்துச் சென்றார்.

தாயில்லா இடத்தில், தம்பியின் வாழ்வு திசை திரும்பியது. சேரக்கூடாத சேர்க்கை, போதை வஸ்து, பள்ளிக்கு முறையாகச் செல்லாமல் வெளியேற்றம். இந்த நிலையில் தந்தை ஒருநாள் நோய்வாய்பட்டு கோமாவில் இறந்து போனார். அம்மாவிற்கு இது பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் எங்களைக் கவணித்துக் கொள்வார் என நம்பிக்கை இல்லை.

அப்பொழுது கல்லூரி முடித்து, ஒரு சிறிய அலுவலகத்தில் வேலையும் பார்த்தேன். தாய், தந்தையின் இழப்பைக் காட்டிலும் எனது தம்பியின் நிலை மிகுந்த மன வருத்தத்தை தந்து கொண்டே இருந்தது.

தந்தை இறந்த அன்று, அவனிடம் நீ இப்படியே இருக்க விரும்புகிறாயா அல்லது என்னுடன் வருகிறாயா ? என்றேன். அவனுக்கு அப்பொழுது பதினாறு வயதிருக்கும். சம்மதம் என்றான். சில நிபந்தனைகள் சொன்னேன். சரி என்றான்.

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டேன். கெட்ட நண்பர்களை வெட்டி எறியச் சொன்னேன். கிடைக்கும் வேலையை ஏற்கச் சொன்னேன்.

இன்று அவனுக்கு வயது இருபத்தி ஒன்று. கெட்ட பழக்கங்கள் துளியும் இல்லை. நல்ல வேலையில் இருக்கிறான், போன மாதம் திருமணம் கூட செய்து கொண்டான். ஒரு தாயாய், தந்தையாய் இருந்து தம்பிக்கு நல்ல inspiration-ஆக இருக்க நினைத்தேன், இருந்தும் காண்பித்தேன் " என டச்சிங்காக முடித்தார் அச்சகோதரி.

-----

"என் மாமியார் தான் எனக்கு inspiration" என்று அசத்தலாய் ஆரம்பித்தார் முன் ஐம்பதுகளில் இருந்த‌ மாது ஒருவர். சில நொடிகள் தான், பொல பொல என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவற்றை அடக்கிக் கொண்டு, தழுதழுத்த குரலில் தொடர்ந்தார்.

"என் பெற்றோர் விவாகரத்து செய்து கொள்ள, சிறு வயதிலேயே தனிமைப் படுத்தப்பட்டேன். திருமணமாகி இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றது. திருமணம் ஆன முதல் நாள் முதல் இன்று வரை என் கணவர் என்னிடம் அன்பாய் நடந்து கொண்டதில்லை. நிறைய அடிப்பார் (இந்த அமெரிக்கவிலா என சற்று வியப்படையச் செய்ய வைத்த சொற்கள்), சண்டை பிடிப்பார். எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டு அவருடன் வாழ்வதற்குக் காரணம் எனது மாமியார் தான்.

மிகுந்த depression-ல் பெற்றோரில்லாமல் தவித்த எனக்கு, குடும்பம், குழந்தைகள், சுற்றம், நட்பு என எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கி ஒரு தோழியாகவே வாழ்ந்தார். (இவருக்குப் போய் என் கணவர் குழந்தையாய் பிறந்தது இன்றும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.) புற்று நோயாளியான எனது மாமியார், அறுபத்தைந்து வயது வரை, பிறருக்கு சிரமங்கள் கொடுக்காமல், தாமாகவே எல்லா காரியங்களையும் செய்து, சில மாதங்கள் முன்னர் இறந்து போனார். நான் இடிந்து போனேன்" என நம்மையும் கலங்க வைத்தார்.

-----

மற்றும் சில பெண்கள், தங்கள் குழந்தைகளுக்காக‌ மறுமணம் செய்து கொள்ளாமலும், அவர் தம் கணவர்கள் மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இங்கு பேசிய பல ஆண்களின் கருத்துக்களும் வியப்படையவே செய்தன. பதிவின் நீளம் கருதி (நன்றி: சுப்பையா வாத்தியார்) அவை அடுத்த பகுதியில்.

Monday, May 5, 2008

எண்ணும் எழுத்தும் - எண் ஒன்பது


Image courtesy: fundraisingseeds.com

எந்த ஒரு ஒரு இலக்க எண்ணையும் ஒன்பதால் பெருக்கினால் வரும் விடையை, நம் கை விரல்களைக் கொண்டு எளிதாகக் கூறலாம். இது பற்றி கண்மனி டீச்சர் (இங்கு) படங்களுடன் எளிதாக, அருமையாக விளக்கியிருந்தார். என் எட்டு வயது மகனுக்கு அது ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. படிக்கவே அழுபவன், இப்ப கணிதம் என்றாலே துள்ளி எழுகிறான் :)

இணையத்தில் கொஞ்சம் அலசியதில் மேலும் சுவாரசியமான செய்திகள் கிடைத்தன. ஒன்பதாம் எண்ணை பெருக்குதல் போலவே வகுத்தலிலும் சில எளிய முறைகள் இருக்கின்றன.

எந்த ஒரு ஒரு இலக்க எண்ணையும் ஒன்பதால் வகுத்தால் வரும் விடை, தொடர்ந்து தசம எண்களாக அதே எண் தான்.

உதாரணத்திற்கு:

1/9 = 0.111111
2/9 = 0.222222
7/9 = 0.777777

இதை வைத்து பல இலக்கங்களைக் கொண்ட‌ எண்ணையும் எளிதாக வகுக்கலாம். எவ்வாறு ?

உதாரணத்திற்கு 23568 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்க எண்ணை ஒன்பதால் வகுக்கும்போது அதே எண் தான் தசமத்தில் வருகிறது எனப் பார்த்தோம் அல்லவா ?! அதனால் முதலில் இந்த உதாரண எண்ணை (நெருங்கிய முழு எண்களாக‌, ஒன்று, பத்து, நூறு என) கூறு போட்டு பிரித்துக் கொள்வோம், இவ்வாறு

20000

3000

500

60

8


பிரித்த எண்கள் ஒவ்வொன்றையும், எத்தனை இலக்கங்கள் வருகிறதோ (20000த்திற்கு ஐந்து இலக்கங்கள்), அதனோடு மேலும் ஒரு இலக்கம் சேர்த்து (ஆறு இலக்கங்கள்), அதே எண்ணை எழுதுவோம் (222222). பின் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கிறதோ (நான்கு), அத்தனை இலக்கம் தள்ளி புள்ளி இட்டுக் கொள்வோம் (2222.22). இது போல் அனைத்து எண்களையும் செய்து கொள்வோம்.

20000

2222.22

3000

333.33

500

55.55

60

6.66

8

0.88

23568

2618.64


மேற்க‌ண்ட‌வாறு கூறு போட்டு, புள்ளி வைத்து, இறுதியில் கூட்டினால், வருவது தான் விடை !

இந்த முறை மூலம் மிக மிக நெருக்கமான விடையைச் சொல்ல முடியும். மிகத் துல்லியமான விடை தேவையெனில் சில புள்ளிகளில் குறைவாக வித்தியாசம் வருகிறது. உங்களுக்குத் தெரிந்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் தொடர்ந்து அலசுகிறேன்.

மீண்டும் ஒரு எண்ணோடு சந்திப்போம் ...

Sunday, May 4, 2008

அனெக்ராம் என்னும் உயரிய கலை



'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய செய்திகள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.

பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்' விளையாடியிருப்போம். சிலர் அனெக்ராம் கூட விளையாடியிருக்கலாம் !!!

அனெக்ராம் பற்றி அறிய வாய்ப்பு கிட்டாதவர்களுக்கு : அனெக்ராம் என்பது, ஒரு சொல்லிலோ, வாக்கியத்திலோ இருக்கும் எழுத்துக்களை, சகட்டு மேனி மாற்றிப் போட்டு (இயன்றவரை பழைய சொல்லின் பொருளில்) புது சொல்லைக் கொண்டு வருவது.

குழப்புகிற மாதிரி இருந்தால், இந்தச் சிறு உதாரணத்தைப் பாருங்கள்.

"Camry" என்பதன் எழுத்துக்களை மாற்றி அமைத்து "My car" என்று அதே பொருள்படும் எளிய அனெக்ராம் .

1

2

3

4

5


C

a

m

r

y


3

5


1

2

4

M

y


C

a

r


இன்னுமொறு உதாரணத்தைப் பார்போம்:

'Eleven plus two' என்பதை 'Twelve plus one' என்று மாற்றி, இரண்டுக்குமே விடை பதின்மூன்று கிடைப்பது !

1

2

3

4

5

6


7

8

9

10


11

12

13

E

l

e

v

e

n


p

l

u

s


T

w

o

11

12

1

2

4

3


7

8

9

10


13

6

5

T

w

e

l

v

e


p

l

u

s


o

n

e


"Mother-in-law"-வை அனெக்ராம் முறையில் மாற்றினால் மருமகள்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி ? "Woman Hitler" என்று ;)

ப்ரென்சு அரசர்கள் பலர் தங்கள் அரசியல் முடிவுகளுக்கு அனெக்ராம் முறையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மந்திர சக்தி கொண்ட கலை என ஆத்மார்த்தமாக நம்பியும் இருந்திருக்கிறார்கள். க்ரேக்கர்கள், ரோமியர்கள், யூதர்கள், ஃப்ரென்ச்சுக்கள், ஐரோப்பியர்கள் என இக்கலை பரவலாகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.

அனெக்ராம் பற்றிய வாசிப்பு/பயன்பாடு ஒரு பெரும் கலையாகவே இருந்திருக்கிறது. 'ANAGRAMS' என்னும் ஆங்கில சொல்லை மாற்றி அமைத்து 'ARS MAGNA' என்ற சொல் தருவித்தால், இந்த லத்தீன் வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Great Art' என்கிறது வரலாறு.

எதற்காக அனெக்ராம் பயன்பட்டிருக்கிறது என்று பார்த்தால், அரசர்களும், படைப்பாளர்களும், பின்னாளில் இன்ன பிற அறிஞர்களும், வெகுவாக தங்கள் ரகசியங்களை (நாம பார்க்கும் வண்ணம் இருந்தாலும், என்னவென்று புரியாமல்) பாதுகாக்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Anagrams பற்றி நிறைய சுவையான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றது. மேல் விவரங்களுக்கு, சில சுட்டிகள்:

http://en.wikipedia.org/wiki/Anagram
http://www.experiencefestival.com/a/Anagram_-_History/id/608574
http://www.anagrammy.com/anagrams/faq1.html

உலகப் புகழ்பெற்ற அனெக்ராம்கள் சில :

Albert EinsteinTen elite brains
Leonardo da VinciO Draconian devil
George BushHe bugs Gore
A decimal pointI'm a dot in place
The public art galleriesLarge picture halls, I bet
DormitoryDirty room

கிராமத்துக் கோவில் திருவிழா


Photo courtesy: http://www.flickr.com/photos/balu/

இரவில் கசியும்
இறைச்சல் விளக்கொளி,
புரவி மீதே
புறப்படும் இறையவர்.

நாற்புறம் ஒலிக்கும்
நாதஸ்வர மேளதாளம்,
காதைக் கிழிக்கும்
தாரை தப்பட்டை.

பேச்சுப் போட்டிகள்,
சடுகுடு ஆட்டங்கள்,
நாட்டுப்புறக் கலைகள்,
பாட்டுக்கச்சேரி ஆரவாரங்கள்.

இவைஎல்லாம் நடுநிசியில்
சுவையோடு நின்றிருக்க,
விடியும்வரை தொடர்ந்திருக்கும்
அரிதாரத் தெருக்கூத்து.

அக்னி நட்சத்திரம்
அனலாய் கொதித்திருக்கும்.
கூரைக் கடைத்தெருவில்
வியாபாரம் சூடுபறக்கும் !

பஞ்சுமிட்டாய் கடிகாரம்,
பலூன்கேட்டு பரிதவிக்கும்
பிஞ்சுகளின் கூச்சல்களில்
பெற்றவர் பணம்கரையும்.

பொட்டுக் கடைகளும்,
புதுத்துணிக் கடைகளும்,
வளையற் கடைகளுமாய்
வளைய வந்து,

வண்டென ஆடும்
விழிகளில் வதைத்து,
மென்மையாய் உலவும்
தாவணிக் குயில்கள்.

அம்மன் தரிசனம்
தம்மில் கிடைத்திட
சற்றும் சளைக்காமல்
சுற்றிவரும் இளசுகள்.

சுவாமி புறப்பாடில்
சுற்றி வருகையில்,
தாகம் தணித்திடும்
நீர்மோர்ப் பந்தல்கள்.

விதவிதமாய் அலங்கரித்து
வீதிஉலா வந்த,
களைப்பினைப் போக்க
வனப்புமிகு தேரோட்டம்.

இரும்புச் சங்கிலியில்
விழுதுகள் இணைத்து,
வடம் பிடித்திழுக்க
தடதட வென,

உருண்டோடும் வண்ணப்
பெருந்தேர் காண,
ஊரே திரண்டிடும்
பெருந் திரளாக !