Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, February 14, 2012

ஆதலினால், காதல் செய்வீர் !





ப‌ழகிய‌ சில‌ கால‌மே
ஈருடல் ஓருயிராய் இணைந்தோம்

இன்னார்க்கு இன்னாரென்று
எழுதியா வைத்தான் இறைவ‌ன் ?

அன்று, இன்னார் இன்னார் என்றறிந்தே
காத‌லித்துக் க‌ர‌ம்பிடித்தோம் !

இங்கே ஏது காத‌ல் ?

பகல் இர‌வாய் உழைத்து
ம‌னை ஊர்தி ம‌க்க‌ள் பெற்றோம்

உணவத‌னை வாய் விழுங்கி
தொலைக்காட்சியை க‌ண் விழுங்க‌

மனை வாழ்வை ம‌ற‌ந்தோம்
ம‌ற்ற‌ ம‌னை அறியோம்

இங்கே ஏது காத‌ல் ?

ப‌க‌ல‌வ‌ன் யாரென்றும்
குளிர் நில‌வை ஏனென்றும்

இய‌ற்கையை அறிவ‌த‌ற்கு
இணைய‌த்தை அணுகுகிறோம்

நான்கு சுவ‌ர்க‌ளுக்குள்ளே
தொலைத் தொட‌ர்பை வ‌ள‌ர்த்தோம்.

இங்கே ஏது காத‌ல் ?

பெற்ற‌ பிள்ளை கிட்டே வ‌ர‌
கீரியாய்ச் சீறுகின்றோம்

க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் க‌ன‌க்க‌
க‌டுஞ்சொற்கள் காட்டுகின்றோம்

மூன்றே வ‌ருட‌த்தில்
முட்டி நின்றோம் இருபுறமும்.

இங்கே ஏது காத‌ல் ?

இன்றுவ‌ரை எல்லாம் நல‌மே
சென்று சேருமிட‌ம் அறிந்தால்
என்றும் எல்லாம் ந‌ல‌மே !

முட்டி நின்றாலும் விட்டுக் கொடுப்பீர்
தடிக்கும் சொற்க‌ளை தள‌ர்த்திக் கொள்வீர்
வாய் நிறுத்த‌ கை உய‌ர்ந்தால்
துணையைப் ப‌ற்றி அணைப்பீர்

ம‌ற்ற‌ ம‌னை அறிவோம்
சுற்றம் சூழ‌ வாழ்வோம்
ஒற்றுமையை வ‌ள‌ர்ப்போம்

பெற்றோரைப் போற்றிடுவோம்
பெற்ற‌ பிள்ளை வ‌ள‌ரும‌ழ‌கை ர‌சிப்போம்
க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் இனிக்க‌க் க‌னிவாய் பேசிடுவோம்

இவ‌ற்றை எல்லாம் காத‌லிப்போம்.

காத‌லின்றி நாளையேது ?
ஆதலினால், காதல் செய்வீர் !


காதல் சிறப்பிதழ் அதீதத்தில் ஆதலினால், காதல் செய்வீர் !


(படம்: நன்றி இணையம்)

Sunday, February 14, 2010

வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)


"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."

...

"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"

...

"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"

...

"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க‌ நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."

...

"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".

***

"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன‌ ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.

***

'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.

இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.

"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க‌. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.

"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று ப‌தில‌டித்தாள் ஷாலினி.

"உட‌ல் ம‌ண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."

"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ர‌ஸ்ட் ..."

"வ‌ட்ட‌க்க‌ரிய‌ விழி க‌ண்ண‌ம்மா ‍‍ என்னை
வாட்டி வ‌தைக்கிற‌தே !
கிட்ட நெருங்கிவரக் க‌ண்ண‌ம்மா ‍‍ புயலாய்
கிற‌ங்க‌(வும்) வைக்கிற‌தே !"


"பாவன்டா பார‌தியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா ப‌ண்ணி சொன்னாலும் ந‌ல்லாத் தான் இருக்கு. ஏன் அவ‌ரு, இவ‌ருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உன‌க்கு என்று எதுவும் சொல்ல‌த் தெரியாதா ?" என்று சீண்டினாள்.

"விளையாடாதே ஷாலு. ஐம் சீரிய‌ஸ்"

"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"

"போதும் ... உங்க‌ அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் த‌ள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க‌ வீட்டில் பார்க்கும் எந்த‌ அழ‌கான‌ பெண்ணையாவ‌து நான் திரும‌ண‌ம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் த‌ந்த‌ மாதிரி ஆகிவிடும்."

"என்ன மிரட்டறியா ? அப்ப‌டியாவ‌து ஆள‌ விடு சாமீ. அட‌க்க‌மா அழ‌கா எங்க‌ வீட்டில‌யும் எனக்குப் பைய‌ன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"

'இன்னிக்கு என்னாச்சு இவ‌ளுக்கு. ரொம்ப‌வே பொங்குது புயல். சூராவ‌ளி ஆக‌ற‌துக்கு முன் த‌டுக்க‌ணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ஹேய் ஷாலு, நான் கெளம்ப‌‌றேன். என்ன‌டி அர‌ட்டை அங்க‌ இன்னும் கிள‌ம்பாம‌ல் ?!" என்று ஷாலினியின் க‌ணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு த‌மிழ் வார்த்தை என்ன‌வா இருக்கும் ?) லதா.

"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த‌ வாரு வாருறியா ? இதோ இப்ப‌வே போய் ராஜேஷ் கிட்ட‌ எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புய‌லாய்க் கிள‌ம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.

"அவ‌ளைத் த‌டுத்து என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புட‌ன் வ‌ந்த ராஜேஷை, "என்ன‌து மறைந்து நின்றுகொண்டு அந்த‌க்கால‌ க‌தாநாய‌கன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி ட‌ய‌லாக் விட்டுகிட்டு வ‌ர்றே" என்று வாருத‌லைத் தொடர்ந்தாள் ஷாலினி.

"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வ‌ர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, க‌ங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாக‌ரீக‌மாக‌ ந‌க‌ன்றாள் லதா.

அலுவ‌ல‌க‌த் த‌ள‌த்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவ‌ர் மட்டும் என்று உண‌ர்ந்த‌து முத‌லாய் அண்ண‌லும் அவ‌ளும் நோக்கிய‌தில், அந்த‌க் க‌ட்டிட‌த்தில் இருந்த‌ எல்லா விள‌க்குக‌ளும் ப‌ட்டு ப‌ட்டென்று விட்டுப் பிரகாசித்தது.

இனிய‌ மாலை நேர‌த்தில் மெரீனாவை நோக்கி ப‌ய‌ணித்த‌து தென்ற‌ல். வ‌ழியில் செடி, கொடி, ம‌ர‌ம், ம‌க்க‌ள் என‌ எல்லோரும் சிலிர்த்த‌ப‌டி ர‌சிக்க‌, மெரீனாவில் க‌ட‌ல்நீரில் கால்ந‌னைத்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர் ராஜேஷும் ஷாலினியும்.

"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.

"ஆச்சார‌ம், அனுஷ்டான‌ம் இதெல்லாம் இந்த‌க்கால‌ப் பிள்ளைக‌ள் எங்கே பாக்க‌ற‌து. அதாவது ப‌ரவாயில்ல‌, ஒரு குல‌ம் கோத்ர‌மாவ‌து பாக்க‌ப்ப‌டாதா ? அபிஷ்டுக்க‌ள் இதெல்லாம் எங்கே போய் முடிய‌ப்போற‌தோ. ஈஸ்வ‌ரா ..." என்றார் அப்பா.

"குல‌ம் கோத்ர‌ம் பார்த்தால் ஆச்சார‌ம் அனுஷ்டான‌ம் தன்னால வ‌ந்திடாதா என்ன ? என்ன‌ பேச‌றேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.

"கமலம், நீ என்ன‌ பேச‌றேனு புரிஞ்சு தான் பேச‌றியா ? நீயே ந‌ம்ம‌ ஷாலுவ‌ப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்ப‌டையான்னு அந்த‌ ராஜேஷ் கையில‌ கொடுத்திடுவ‌ போல் இருக்கு"

"நான் புரிஞ்சுண்டு தான் பேச‌றேன். 'இந்த‌ப் பைய‌ன‌ப் பிடிச்சிருக்கு. இவ‌ன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவ‌ன‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌றேன்'னு ந‌ம்ம‌ கிட்ட‌ வ‌ந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வ‌ள‌வு ச‌ந்தோஷ‌மா இருக்கு. அத்த விட்டுட்டு ..."


"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என‌. சில‌நேர‌ வாக்குவாத‌த்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த‌ பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.

பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.

"இவ்ளோ ஈஸியா ச‌ம்ம‌த‌ம் வாங்கிட்டே. இத‌ முன்னாடியே செய்திருக்க‌லாமே ?" என்றான் ராஜேஷ்.

'உன்ன‌ ந‌ல்லாத் தெரிஞ்சுக்க‌ டைம் வேண்டாமாடா ம‌டையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.

என்ன‌தான் க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ர் ப‌தவியில் மிடுக்குட‌ன் வ‌ளைய‌ வ‌ந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழ‌ந்தையாய் ஆகிவிடும் ஆண்க‌ளில், ராஜேஷ் ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌ ?

சேலைத்த‌லைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு ந‌ட‌ந்திருப்பான். சுடிதாரில் 'துப்ப‌ட்டாவைப் பிடித்தால் கையோடு வ‌ந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி ந‌ட‌ந்தான் ராஜேஷ்.

"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷ‌ர்ட் விட‌ இந்த‌ சுடிதார்ல‌ நீ எவ்வளவு அழ‌கா இருக்க‌ தெரியுமா ? ... அதையும் விட‌ சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று த‌த்துவ‌ம் சிந்தினான்.

ஷாலினி அப்ப‌டி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழ‌கு எல்லாம் இல்லை. அது அவ‌ளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வ‌ரிக‌ளை வெகுவாக‌ ர‌சித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் ப‌லா அல்லவா அவ‌ள்.

"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.

"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...

வட்ட‌விழி விட்ட வழி
சுற்றுதடி நெஞ்சம்,
விட்டிடாது பற்றி அதை
சுற்றிவந்தே கெஞ்சும்.

சுட்டுவிடும் ஈர இதழ்
முத்தம்தர அஞ்சும்,
தட்டித்தட்டி நீயும் சென்று
காட்டுகிறாய் க‌‌ஞ்சம்.

கட்டவிழ் காளை நானும்
அடையணுமே தஞ்சம்,
ப‌ட்டுத்தொட்டு நீயும் என்று
தீர்த்திடுவாய் பஞ்சம் ?"

"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.

ஷாலினியின் பாத‌ங்க‌ளுக்குக் கொலுசாய் வ‌ந்து சுற்றிய‌ நுரை த‌ள்ளிய‌ அலையை ர‌சிக்க‌வும் முடியாம‌ல், ர‌சிக்காம‌ல் இருக்க‌வும் முடியாம‌ல் த‌வித்திருந்தான் ராஜேஷ்.

***

இர‌வு, உண‌வு வேளையில் பேச்சை ஆர‌ம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க‌ கிட்ட‌ ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் பேச‌ணும். இப்ப‌ பேச‌லாமா ?" என்றான்.

"இருப்பா, அம்மாவும் வ‌ந்திர‌ட்டும்" என்று சொல்லி, "சார‌தா, கொஞ்ச‌ம் இங்க‌ வ‌ர்றியா ..." என்றார்.

"என்ன‌ங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வ‌ந்து உண‌வு மேசையில் அம‌ர்ந்தார் சாரதா.

"அதெல்லாம் ச‌ரியாவே இருக்கு. ந‌ம்ம‌ ஜூனிய‌ர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவ‌து சொல்லி ந‌ம்ம‌ வ‌யிற்றில் புளிய‌க் க‌ரைக்காம‌ல் இருந்தால் ச‌ரி" என்றார் விஸ்வ‌நாத‌ன்.

"தோளுக்கு மேல் வ‌ள‌ர்ந்த‌வ‌னை, அதுவும் ஒரு ஐ.டி. க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ரா இருக்க‌ புள்ளைகிட்ட‌ இப்படியா சர்க்காஸ்டிக்கா பேச‌ற‌து ..." என்றார் சாரதா.

'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ச‌ரி, நானே நேரா விஷ‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காத‌லிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவ‌ள் பேர‌ழகி எல்லாம் இல்லை. என் ம‌ன‌திற்குப் பிடித்திருக்கிற‌து. அவ‌ளுக்கும் என்னைப் பிடித்திருக்கிற‌து. நாங்க‌ள் இருவ‌ரும் சேர்ந்து வாழ‌லாம் என்று நாங்க‌ள் எடுத்த‌ முடிவிற்கு, உங்க‌ள் ஒத்துழைப்புத் தேவை...' என்ன‌டா, ச‌ரியா சொல்லிட்ட‌னா" என்று மகனைப் நோக்கிவிட்டு ம‌னைவியைப் பார்த்துக் க‌ண் சிமிட்டினார்.

'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உன‌க்கு ம‌ரும‌க‌ வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்‍அப் ?"

"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். என‌க்கெதுக்குப்பா வேலைக்குப் போற‌வ‌ள‌ப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.

"முன்ன‌ரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷ‌யத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.

"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உன‌க்கு ஒரு கான்ஃபிட‌ன்ட் வ‌ந்து, நீயா எங்க‌கிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த‌ பிப்ர‌வ‌ரி 14 வ‌ச்சிக்க‌லாமா ?" என்று குறுந‌கை பூத்தார் விஸ்வ‌நாத‌ன்.

மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.

***

படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.
பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்

Thursday, October 29, 2009

கட்டழகி ...


Photo Credit: Bernat Casero

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

Thursday, October 1, 2009

நெல்லி மரம் !


Photo credit: indiamike.com

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.

வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.

சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.

***

"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா ? உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.

'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.

"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.

"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌..."

'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.

காலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.

'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.

பூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.

"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.

'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.

கார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.

இவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.

"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை ?

என்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.

அப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.

காற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.

சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்ப‌டியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.

கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.

"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.

வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உன‌க்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.

'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.

"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு ? உங்க‌ தாத்தோவோட‌ ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொட‌ர்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.

"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா ? அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்த‌ள்ளினான்.

"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.

பலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.

கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.

ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

எதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.

***

"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.

அண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.

***

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.

Tuesday, January 27, 2009

எனையே நான் தொலைத்தேன் !!!

காதல் கவிதை எழுதி எம்புட்டு நாளாச்சு. அப்பாடா, இன்னிக்கு ஒரு நல்ல மாலை நேர இனிய மனநிலையில், கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க, இதோ கவிதை (?!!) ...

---


Photo: wikimedia.org

உலகத்து அழகெலாம்
ஒன்றாய் அணிசேர்த்து,
ஓவியமாய் உலாவரும்
உனைக் கண்டு மலைத்தேன்.

மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.

ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.

இடறி உள்விழுந்து
இம்மியும் பிசிறில்லா(த),
வெண்கலக் குரலில்
வெல்லமாய்க் கரைந்தேன்.

விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.

காண்கின்ற அனைத்திலும்
வான் வரை சென்று,
கன்னி உனைக் காண
எ(ன்)னையே நான் தொலைத்தேன் !!!

Thursday, December 11, 2008

உத்தரவின்றி உள்ளே வா !


Photo: inmagine.com

"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"

கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது.

கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள்.

'ம்... இவளென்ன சிரித்துச் செல்கிறாள்'. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான்.

"டேய் ... உன்னைத் தான் ... பகல் கனவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்த‌தில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில், சரிந்து யோசனையில் இருந்த‌ ஜீவா சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

ரயில் கிளம்பும் முன் இருக்கும் பரபரப்பில் இருந்தது வகுப்பறை. சள சள வென ஒரே பேச்சுக் குரல்கள். இங்கும் அங்கும் சிலர் நடந்தோடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் கல்லூரி. முதுகலை கணிப்பொறி இரண்டாம் ஆண்டு. முதலில் ஹெச்.ஓ.டி. வந்து, பொதுவாக‌ சில செய்திகள் சொல்லி விட்டுச் சென்றார். பலர், பலருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், பல புதுமுகங்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

"ஃபர்ஸ்ட் இயர் என்று நினைக்கறேன்" என்றான் ஜீவா.

"டேய் நாம இப்ப செகண்ட் இயர்" என்றான் விக்கி.

"அத சொல்லலடா, அவள சொல்றேன்"

"எங்களுக்கும் புரியாம‌ இல்ல‌ ... விள‌க்க‌ம் வேற‌ சொல்ல‌ வ‌ந்திட்டான்டா .. டேய் .. டேய் .. எல்லாம் இங்க‌ வாங்க‌" என்று விக்கி கூவ‌, குவிந்த‌ தாம‌ரை மொட்டாய் வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள்.

என்ன ??? என்ன ??? என்று எல்லோர் க‌ண்க‌ளிலும் குறுகுறுவென‌ ஒரு ஆவ‌ல்.

"சொல்றா விக்கி ... மேட்டர் என்னா ?" என்றாள் ராக‌வி.

"என்ன‌ மாமே, 'இன்னிக்கு குளிச்சிட்டு வ‌ந்திட்டேன்' என்று சொன்னே ... ம‌வ‌னே ர‌த்த‌த்தில‌ குளிப்பாட்டிருவேன்" மிர‌ட்ட‌லாய் மோபினின் குர‌ல்.

"ப்ளீஸ், இன்னிக்காவ‌து நான் சொல்ற‌த‌ ந‌ம்புங்க‌டா" கெஞ்சும் குர‌லில் விக்கி. "ந‌ம்ப‌ ஹீரோ, அதான் க‌ல‌ர்ப‌ட‌க் க‌தாநாய‌க‌ன், இது நாள் வரைக்கும் இல்லாம, ந‌ம்ம‌ ஜீவா, இப்ப ஜில்பான்ஸ்ல‌ இற‌ங்கிட்டான். பொண்ணு யாருனா ..."

ச‌ட‌ன் ப்ரேக் போட்ட‌ ர‌யில் வ‌ண்டியாய் இழுத்து நிறுத்தினான்.

"வாத்தி யாராவ‌து வ‌ருமுன், சீன‌ முடி ராசா ... நேர‌ம் ஆவுதில்ல‌ ..." அனைவ‌ரின் ம‌ன‌திலும் இவ்வ‌ரிக‌ள்.

"யாருனா ... யாருனா .. யா..." என்று சுருதி குறைத்தான் விக்கி. மார்போடு அனைத்த‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன், வெளிர் ப‌ச்சைப் புட‌வையில், (க‌ண்க‌ளுக்கு மேட்சிங்காக‌ இருக்கும்) உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.

'அட‌ ந‌ம்ம‌ க்ளாஸ் தானா ?!' என்று யோசிக்கும்போதே, ஆசிரியருக்கான மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து, "குட் மார்னிங், ஐ ஆம் ஸ்ருதி ..." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, விக்கியும், ஜீவாவும் உறைந்து தான் போனார்க‌ள்.

"இங்க திருச்சில, செயின்ட் ஜோச‌ப்பில் முதுக‌லை க‌ணிப்பொறி. பின் சென்னையில் சில‌ மாத‌ங்க‌ள் வேலை. ஆசிரிய‌த் தொழிலின் மீது ஆரம்பத்தில் இருந்தே ப‌ற்று. அத‌னால் வேலையைத் துறந்து இங்கு வ‌ந்துவிட்டேன்" என்று சுருதி பிஸ‌காம‌ல் ஸ்ருதி சொல்லிக் கொண்டே போக‌, இவை எதும் ஜீவாவின் காதுக‌ளில் விழுந்த‌ன‌வாக‌த் தெரியவில்லை.

"ம‌ச்சான், சும்மா சொல்ல‌க் கூடாது ... உன் லெவ‌லே த‌னி தான். அவங்க டீச்ச..ரா..மா ... சும்மாவே மார்க் நல்லா வாங்குவோம், இதில இவங்கள வேற பகச்சிகிட்டோம் அவ்ளோ தான். இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌லபா." என்று ச‌ற்று த‌ள்ளி அம‌ர்ந்தான் விக்கி.

"இருக்கட்டுமே ... நம்மை விட‌ ஒரு வ‌ய‌சு ... மிஞ்சிப் போனா ரெண்டு வ‌ய‌சு தான் கூட‌ இருக்கும் ... இதெல்லாம் ஒரு பிர‌ச்ச‌னையா. இன்னிக்கு சாய‌ந்திர‌ம் க‌ல்லூரி விட்டுப் போகும் போது, அவ‌சிய‌ம் இவ‌ கிட்ட‌ பேச‌ப் போறேன் பாரு. கூட‌ நீ வர்ரே" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிமுடித்தான் ஜீவா.

"டேய் நான் மார்க்க‌ ப‌த்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா வ‌ய‌ச‌ப் ப‌த்தி பேசற. உன் புரியாத விளையாட்டுக்கு என்னை ஏன் பலிகடா ஆக்கறே" என்று விழி பிதுங்கினான் விக்கி.

'பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்த‌க் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த‌ முகம் கொண்ட‌‌
செம் மேனிப் பெண்ண‌ழகி

காந்தமாய் எனை ஈர்த்த‌
பூனைக் க‌ண்ண‌ழ‌கி.'

என்று மெதுவே விக்கியின் காதுகளில் பாடினான் ஜீவா.

"ச‌ரியாப் போச்சு ... நீ திருந்த‌ மாட்ட‌டா, போ க‌ன‌வுல‌க‌ க‌ன்டினியூ ப‌ண்ணு, நான் பாட‌த்தை க‌வ‌னிக்க‌றேன்." என்றான் விக்கி

"குட் மார்னிங்க், குட் மார்னிங்க் ... ப‌ச‌ங்க‌ளா எப்ப‌டி இருக்கீங்க‌ ... மன்னிக்கணும், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. விடுமுறை எல்லாம் எப்ப‌டி இருந்துச்சு" என்ற‌வாறு உள்ளே வ‌ந்தார் க‌ணித‌ ஆசான் ச‌பார‌த்தின‌ம்.

அடித்து பிடித்து, முட்டி மோதி கிடைத்த‌ இட‌த்தில், ஜீவாவின் அருகில் அம‌ர்ந்தாள் ஸ்ருதி.

சிறு பரபரப்புக்குப் பின், ர‌யில் சென்ற‌வுட‌ன் ஏற்ப‌டும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து அங்கே.

ஆசானை முகம் பார்த்தாலும், 'என்ன நடக்குது இங்கே' என மனம் பக்கத்தில் இருந்த ஸ்ருதியைப் பார்த்தது. 'விக்கியை நோக்கி என்னடா, என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே' என்றும் முறைத்தது.

ஆட்காட்டி விரலை உயர்த்தி, ஒரு கண்ணைச் சிமிட்டினாள் ஸ்ருதி விக்கியைப் பார்த்து.

"டேய் என்னடா" என்று முறைத்தான் ஜீவா.

"ஃபர்ஸ்ட் இயர் சென்னையில முடிச்சிருக்கா, அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, சொந்த ஊருக்கே எல்லோரும் வந்துட்டாங்களாம். இவள ஹாஸ்டல்ல இருக்க சொல்லிருக்காங்க. முடியாதுனு அப்பா பின்னாடியே வந்துட்டாளாம்.

எங்க தெரு தான். இந்த லீவு முழுக்க இங்க தான் இருந்தா. இவ கிட்ட‌ பேசப் பேச, உன்னைப் மாதிரி ஒருத்தன தான் தேடிட்டு இருக்கானு தோணுச்சு. முதலில் எனக்கும் காதல் எண்ணம் இருந்தது. என் கிட்ட என்ன பழகினாலும், ஒரு டிஸ்ட‌ன்ஸ் மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌தை நானும் உண‌ராம‌ல் இல்லை. அத‌னால் ஒதுங்கிட்டேன்.

ஃப்ரெண்ட்ஸ் ப‌த்தி பேசும் போதெல்லாம், உன்னைப் ப‌த்தி சொல்ல‌ச் சொல்ல‌ .. அப்ப‌டியா ... இந்த‌ வ‌ய‌சு வ‌ரைக்கும் யாரையும் காத‌லிக்க‌லையா ?? த‌ம், த‌ண்ணி எதுவும் கிடையாதா ?? ரொம்ப‌ ஜோவிய‌லான‌ டைப்போ ?? என்றெல்லாம் ஆர்வ‌மா கேட்டுட்டிருப்பா.

உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்கா, லீவில் ஒரு நாள் ம‌லைக் கோட்டைக்கு போனோமே. நானும், நீயும் ம‌ட்டும் இல்லை. ஸ்ருதியும் வ‌ந்திருந்தா. உன்னைப் பார்க்க‌ணும் என்றாள், அதான். தப்பித்தவறி கூட பக்கத்தில வந்திராத என்று உத்தரவாதம் வாங்கித் தான் வரச் சொன்னேன்.

இது போல பட இடங்கள், பல சந்தர்ப்பங்களில் உன்னை தொடர்ந்து, உன்னை பிடிச்சும் போச்சு அவளுக்கு. முத‌ன் முத‌ல் உன்னை நேரில் ச‌ந்திக்குபோது ஒரு ஷாக் கொடுக்க‌ணும் என்று சொன்னா. அதான் இந்த 'டீச்ச‌ர்' நாட‌க‌ம்.

நேரம் இருந்தா உன்னை எழுந்திருக்க‌ சொல்லி கேள்வி எல்லாம் கேட்க‌லாம் என்று திட்ட‌ம். அதுக்கு கொடுப்பினை இல்லாமப் போச்சு. இருந்தாலும் ஆப‌ரேஷ‌ன் ச‌க்ஸ‌ஸ்" என்று சொல்லி முடித்தான் விக்கி.

விக்கித்து ல‌யித்திருந்தான் ஜீவா.


மார்ச் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Wednesday, December 10, 2008

மின்னல் கவிதைக‌ள்: 1 - கழுத்துக் கறுப்பேறி


Photo: static.panoramio.com

கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.

பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.

சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?

வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.

கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,

உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?

மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான‌ வச்சிக்கடி,

ம‌திம‌ய‌ங்கிக் கிறங்கையிலே
மொத்த‌மா வளைச்சுக்க‌டி !!!

Tuesday, July 1, 2008

வேல் காக்கும் வெண் சோலை



பாற்கடலில் விழுந்த‌
பட படக்கும் வண்டே

வெண்பூவை மொய்த்து
சுற்றி வரும் வ‌ண்டே

விரியும் சிப்பிக்குள்
உருளும் க‌ருமுத்து வ‌ண்டே

வேல் காக்கும் வெண்சோலையில்
சிறைப்பட்ட சிறு வண்டே

வெண்பனியில் ஓடியாடி
விளையாடும் க‌ரு வண்டே

கற்பானையில் க‌த‌க‌த‌ப்பாய்
நீந்தும் க‌ரு வ‌ண்டே

அப்பார்வையிலே ம‌ய‌ங்கி
பூ மொய்க்கும் வ‌ண்டை

என்றென்றும் எண்ணி
என் ம‌ன‌ம் மொய்க்க‌லான‌தே !

Monday, April 14, 2008

எதிலும் உன் நினைவாய் !



வெற்றிலை இதழ் சிவப்பும்,
மருதாணி நகச் சிவப்பும்,
முன்கோப முகச் சிவப்பும்,

மெல்லிய இடைச் சிவப்பும்,
உள்ளங் கைச் சிவப்பும்,
உன்பாத விரல் சிவப்பும்,

உள்ளத் துள் கரைந்து
உருகும் இரும் பென‌
உன்நினைவால் நான் சிவந்தேன்.

பச்சரிசிப் பல் சிரிப்பும்,
எளிற்தெரியும் வெளிர் சிரிப்பும்,
நகக்கீற்றுப் புன் சிரிப்பும்,

மயக்கும் மன்மதச் சிரிப்பும்,
மணக்கும் மல்லிகைச் சிரிப்பும்,
கலகலக்கும் வெண்கலச் சிரிப்பும்,

உள்ளத் துள் நிறைந்து
சலசலக்கும் அருவி யென‌
உன்நினைவால் நான் சிரித்தேன்.

உருகும் மனச் சிறப்பும்,
உதவும் குணச் சிறப்பும்,
மிதமான மொழிச் சிறப்பும்,

நேர்கொண்ட நடைச் சிறப்பும்,
கண்பேசும் காந்தச் சிறப்பும்,
விண்போற்றும் மதிச் சிறப்பும்,

எதிலும் உன் நினைவாய்
இதயம் சிந்திக்க‌,
உன்நினைவால் நான் சிறந்தேன் !

Tuesday, March 25, 2008

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

க‌ழுத்தில் உருள் கருக‌ மணி
காதில் ஆடும் பொன் கம்மல்

கரம் குலுங்கும் கை வளை
விர‌ல் ந‌க‌த்தின் வர்ண இழை

இடை நீளும் கருங் கூந்தல்
அதில் வ‌ள‌ர் குண்டு ம‌ல்லி

முத்த‌ மிடும் சிறு பிள்ளை
மார் தழுவும் சில புத்தகங்கள்.

இமை மூடி இவ்வுலகை
இனிதாய் ரசித்திடவே !

இவற்றில் நானொன்றாய்
இருந்திடக் கூடாதா ?

இவையெல்லாம் சிறுபொழுதே
இனிமேலும் எண்ணாதே

என்னோடு எப்பொழுதும்
இவ்வாறிரு என்றாயே !

விழி காக்கும் இமை முடியாய்
விழும் கன்னச் சிறு குழியாய்

பட படக்கும் கரு விழியாய்
பச் சரிசிப் பல் அழகாய்

இளஞ் சிவப்புச் செந் நாவாய்
இனிக்கும் தேன் செவ் விதழாய்

முத்து உருளும் மணிக் கழுத்தாய்
முழுதும் அலங்கரித்த பொன் உடலாய்

உன்னிலே என்னை
உள்ளுள் சேர்த்தாயே

உதிரம் இருக்கும்வரை
உன்னை மறவேனே !

Monday, March 10, 2008

அடி பெண்ணே !

சுவாமி தரிசனங்களில் மனம்
உன்னையே காணுதடி

லேசாய் நீ புன்னகைத்தால்
தேசமே சுழலுதடி

புன்னகைக்க நீ மறுத்தாலோ
பூகம்பமே வெடிக்குதடி

தெத்துப்பல் உன் முகம்
உள்ளத்தில் பதிந்ததடி

உன் கன்னக் குழிகளில்
நின்றே விழுந்தேனடி

இடைவரைக் கூந்தலில்
இறுக்கியே முடிந்தாயடி

பொன் நிறத் தேகத்தில்
என்னையே இழந்தேனடி

விழி வழி உரையாடி
நாளும் ஈர்த்தாயடி

சினம் கொள் நேரத்தில்
சிணுங்கியே கவர்ந்தாயடி.

‍‍‍‍‍-----

முடிவில் ஒருநாள் உன்
திருமணத் தேதியைச் சொன்னாயடி

குடும்பத்து சூழ்நிலை
வேறு வழியில்லை என்றாயடி

முந்தானைத் தாவணியில்
முகம் புதைத்து அழுதாயடி

கலமெனக் காற்றிலாடி
பின் மனம் தெளிந்தேனடி.

------

வீதியில் ஒருநாள்
எதேச்சையாய் உனைச் சந்திக்க‌

யாரந்த ஆண்ட்டி என‌
என் பிள்ளை உனைக் கேட்டான்

உன் பிள்ளை பேர் சொல்லி
அவள் அம்மா என்றேன் நான் !

ஒரே பள்ளி எனத் தெரியும்
ஆனால் இருவர்களும் நண்பர்களாமே !!!

Sunday, December 16, 2007

நச்சுனு ஒரு காதல் கதை

"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".

Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.

ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ஆனந்த் ஆறு வருடமாகவும், ரவி இரண்டு வருடமாகவும் ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவி வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, தாயகத்தில் குப்பைகள் அகற்ற (!) மற்றும் பெற்றோர்களுக்காக (!!) இந்தியா வந்து இந்த நைப்ரோ எனும் MNC கம்பெனியில் சேர்ந்திருக்கிறான்.

டேய் தினம் அவளப் பத்தித் தான பொலம்பறேன். அதான் அந்த எதிர்க்க இருக்க பில்டிங்கில் HR-ல வேலை செய்யறாளே பானு, அவளப் பத்தித் தான். லுக்கு தான் ஜாஸ்தியா இருக்கே தவிர்த்து பேசவே மாட்டேன்ங்கறா. இன்னிக்குக் காலைல 'வழக்கம் போல' கொஞ்சம் லேட்டா வந்தனா, வண்டிய பார்க் பண்ணிட்டு, அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்து lift எடுத்தா எதிர்த்தாப்புல நிக்கறா. அதே கண்ணு, அதே பார்வை ! அப்படியே தேவதை மாதிரி !!

அந்தப் பரபரப்பில் lift-ல் நீ இருந்தத கூட நான் கவணிக்கலை. காலரப் பிடிச்சு இழுத்தியே, நியாபகம் இருக்கா. மச்சி உன் கிட்ட தான்டா பொலம்ப முடியும். தப்பா எடுத்துக்காத டா.

என் கிட்ட மட்டுமா பொலம்பறே ! பக்கத்து cube பாஸ்கர் கிட்ட கூட தினம் அலுத்தக்கறியே டா. போன வாரம் அருண் வந்து 'உன் தொல்லை தாங்க முடியல'னு சொல்லி அவன் பொலம்பிட்டுப் போறான். "சரி இப்ப என்ன செய்யனும்" என்றான் ரவி

எனக்குத் தனியாப் போகப் பயமா இருக்கு. அவ கிட்ட இன்னிக்கு எப்படியாவது பேசிடனும்னு இருக்கேன். நீதான்டா ரவி அதுக்கு ஏதாவது நச்சுனு idea பண்ணி help பண்ணனும்.

"இந்தக் காலத்திலயும் இப்படி ஒரு புள்ளையா ?" டேய் அவனவன், காலைல சைன் போட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்ல பிட் போட்டு, லன்ச்சுல பன்ஞ்ச் வச்சு, டின்னர்-ல பின்னி பெடலெடுக்கறான். பேசப் பயமா இருக்காம், போடாங்க ....

இதான் நச்சா ... நல்லாத் தான் இருக்கு, எப்படி work-out பண்றது ?

ரெண்டு cube தள்ளி இருந்த அனு அங்கு வந்து, "ரவி இன்னிக்கு டின்னர் போறோமே, ஆனந்தும் வரட்டும்" என்று சொல்லி ரவியின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அடப்பாவி, எனக்கு idea-ன்ற பேர்ல சும்மா அளந்துவிடறேனு பார்த்தால், உண்மையாவே டின்னெர் வரை போய்டியா. அது சரி, நான் வரேன். பானு எப்படி வருவா என்றான் ஆனந்த்.

அதப் பத்தின கவலய விடுறா. அனு பார்த்துப்பா என்றான் ரவி.

சாயந்திரம் ஆனந்தப் பிக்கப் செய்து கொண்டு "லீ மெரிடியன்" நோக்கி வண்டியைச் செலுத்தினான் ரவி.

"டேய் பானு கண்டிப்பா வருவாளாடா ?" என்று பொலம்பிக் கொண்டே வந்தான் ஆனந்த்.

hotel வரவேற்பறை படு பயங்கரமாய் இருந்தது. "நவரத்னா"விற்கு வழி கேட்டுச் சென்றனர் இருவரும். ஆனந்தின் படபடப்பைச் சொல்லி மாளாது. பாவம் ரவி, எல்லாப் பொலம்பலையும் சேர்த்து கேட்டு வந்து கொண்டிருக்கிறான்.

சற்று தொலைவில், நால்வர் அமரும் மேசையில் பானுவும், அனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆனந்த், மென்று விழுங்கினான். லேசாகத் தன்னைக் கிள்ளிப் பார்த்து, "thanks டா ரவி" என்று மெலிதாகச் சொல்லிக் கொண்டான்.

மேசையை நெருங்கி இருவரும் அமர்ந்தனர்.

என்ன order பண்ணலாம் என்றான் ரவி. ஆனந்திற்கு எரிச்சலாய் இருந்தது. இப்ப என்ன order பத்திப் பேசறான். பானு கிட்ட எப்ப, எப்படி, என்ன பேசறது என்று மனதுள் குமைந்து கொண்டிருந்தான்.

முகவரி படித்து, டேய் என்னமோ பேசனும்னு சொன்னியேடா பானுவிடம், பேசு என்றான் ரவி.

என்னது காட்டான் மாதிரி போட்டு ஒடைக்கறான். இப்படியா எல்லார் முன்னாலயும் சொல்றது என்று ரவியை முறைத்தான் ஆனந்த்.

சரி ரொம்ப tension ஆகத என்ற ரவி, "பானு, உன்கிட்ட ஏதோ ஆனந்த் பேசனுமாம், அந்த private room இப்ப காலியாத் தான் இருக்கு, போய் ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க என்றான்.

நல்ல காரியம் பண்ணேடா ரவி இப்பவாவது என்றான் ஆனந்த்.

private room. மடை திறந்தோடும் வெள்ளமென ரத்த ஓட்டம் இருப்பதை உணர்ந்தான் ஆனந்த்.

அவன் எப்படிப் என்ன பேசுவது யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பானு பேச ஆரம்பித்தாள். எங்க வீட்டுல love marriage-க்கு ரொம்ப against. விசயம் வெளில தெரிஞ்சா ரொம்ப ப்ரச்சினை ஆயிடும். ரவி வீட்டுலயும் அப்படித் தான். அதான் ரெண்டு பேரும் இவ்ளோ நாள் அமைதியா இருந்திட்டோம். அனு வந்து என் கஸின் சிஸ்டர். அவ அப்பா கிட்ட மட்டும் விசயத்த சொல்லியிருந்தோம். அவர் இன்னிக்கு எங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி, ஒரு வழியா எல்லோர் சம்மதமும் கிடைச்சிருச்சு. இந்த நிலமையில தான் ரவி இன்னிக்கு உங்களப் பத்தி சொன்னாரு. நானே உங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிடறேன்னு ரவி கிட்ட சொல்லி, நான் தான் உங்கள கூட்டி வரச்சொன்னேன் என்றாள் பானு.

-----

வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே. இந்தக் கதை சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' போட்டிக்காக எழுதி பதிந்திருக்கிறேன். ஒரு வரி பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தினால் சந்தோசமாய் இருக்கும்.

Friday, August 24, 2007

கனவு மெய்ப்பட வேண்டும்

அந்தக் காலத்தில் தான் தலைவன் வரவை எதிர் பார்த்து தலைவி காத்திருந்ததாக நிறையப் படித்திருக்கிறோம். தற்போது உள்ள கால மாற்றத்தில், நிறைய தலைவர்கள் காத்திருக்கிறார்கள் ;-) அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நில வதன் ஒளி
ஒளி படர் வெளி
வெளி அதில் மதில்
மதில் அதில் நீ.

நீ காக்கும் நேரம்
நேரம் கடத்தி நான்
நான் வரச் சினம்
சினம் கொள் மனம்.

மனம் அதில் அலை
அலை ஒடுங்கிய நிலை
நிலை கொண்ட மண்
மண் அதில் செடி.

செடி அதில் கொடி
கொடி அதை ஒடி
ஒடித் ததைப் பிடி
பிடித் ததில் அடி.

அடித் தெனை அனை
அனைத் தெனை வளை
வளைத் தெனை இழு
இழுத் தெனை முகர்.

முகர் உன் சுவாசம்
சுவாசம் அதில் நேசம்
நேசம் நித்தம் பொளி
பொளி வது அருள்.

அருள் அது பெற்று
பெற் றதைப் பேணி
பேணி உனை நாணி
நாணும் எனைக் காண்.

காணும் உனை மறவேன்
மறவா துனை இருக்க
இருப்பில் நித்தமும் கனவு
கனவு மெய்ப்பட வேண்டும் !

(எழுத்துப் பிழை இருப்பின் சொல்லுங்க நண்பர்களே !)

Monday, July 30, 2007

உரையாடும் விழிகள்



இன்று அவள் பெயரை
எப்படியும் அறிந்துகொள்ள

ஏகாந்தமாய் உடையணிந்து
இங்குமங்கும் அலைகையில்

கடைவீட்டு ஜன்னல்வழி
கருகரு இரு விழிகள் !

மொய்க்கும் வண்டாய்
படபடக்கும் விழியிதழ்கள்

இமைமூடும் நொடிப்பொழுதும்
சளசளக்கும் சிந்தனைகள்

வழியும் வார்த்தைகள்
பளபளக்கும் இமைவழியே

சீர்செய்யும் கேசமது
சருக்கி முன்விழ

சிறிய இடைவெளியில்
தெரியும் விழிகண்டு

தடுக்கித் தடுமாறும்
அதனழகில் எந்தன் உயிர்

அசையும் விழிகளிலே
ஆயிரம் சேதிகள்

அற்புதங்கள் பல கலந்து
கலகலப்பாய் கதைக்கும் விழி

விரல்நுனியால் மையிட்ட அவள்
வேகத்திலே நிதானம்

காணும் என் விழிகள்
நாணித் தணிந்திருக்க

கயலூ... என்றவள் அம்மாவின்
காதடைக்கும் சத்தத்தில்

தேனினும் இனிதாய்த்
தெரிந்தது அவள் பெயர் !

அழகே உன்பெயரே
துள்ளும் விழி தானா ?!