Sunday, March 30, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

சிலருக்கு கவிதை பிடிக்கும், கதை எழுதினால் வாசிக்க மாட்டார்கள். சிலருக்கு கவிதையா, அது சுத்தப் பொய் என்று எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். சிலர் கட்டுரையோடு நின்று கொள்வார்கள். சிலர் சிலர் என்று சொல்லிய சிலருள் நானும் ஒருவன் தான்.

இந்த மூன்று தரப்பினருக்கும் பிடித்த மாதிரி, நம் தளத்திற்கு வரச் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்து விளைந்த கரு இது. மூன்று செடிகளையும் வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----
முதல் செடி (கவிதை)


Photo courtesy: largePhoto12_ownerdriver.com.au

முத‌ன் முத‌லில் காரோட்டி
முழுதும் அறியுமுன்

நெடுஞ்சாலை சேருகையில்
நீளமாய் வருமுன்னை

ப‌க்க‌மே வ‌ருகிறானே என
படபடக்க‌ மனம் பதறி

கையுத‌ற‌க் காலுதற
கண்டபடி உனைத் திட்டி

சிறு காரோட்ட பயந்திருக்க‌
பெருந் தேரோட்டிப் பறந்திடுவாய்.

நாள் செல்ல‌ச் செல்ல‌
நான் க‌ற்றேன் ந‌ன்றாக‌

குறுந் தெருக்க‌ளில் கூட‌
அருகினில் நீ வ‌ர‌

முன்னிருந்த‌ ப‌ய‌மில்லை
ப‌ட‌ப‌ட‌ப்புத் துளியுமில்லை

குட்டித் திமிங்கிலமாய்
ஒட்டியே வந்திடுவேன்.

எச்சூழ‌லும் ச‌மாளிக்கும்
இப்பெரிய‌ ஊர்தியோட்டி

அச்சிறு தெருவில்
எங்ஙன‌ம் வ‌ளைவாய் என‌

யோசித்து முடிக்குமுன்
லாகவமாய் வளைந்து செல்வாய் !

-----

இரண்டாம் செடி (கதை)


Photo courtesy: driverscdlstaffing.com

லூசி, எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் ஜன்னல் வழியா குதிக்காதே என்று. கதவு வழியா இறங்கு என்று செல்லமாகச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார் பேட்ரிஷியா.

மறுநாள் பயணத்தைத் துவங்கினர்.

இரவு எழு நெருங்கி வானம் கருக்கத் துவங்கியிருந்தது. சிரம பரிகாரம் முடித்து, வெண்டிங் மெஷினில் இருந்து மேத்யூ காஃபி எடுத்துக் கொண்டார். பேட்ரிஷியா தனது பர்ஸில் இருந்து சில்லரைகள் பொருக்கி, பக்கத்தில் இருந்த மற்றொரு வெண்டிங்க் மெஷினில் போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டார். அறுபது, அறுபத்தி ஐந்து வயதிருக்கும் இருவருக்கும்.

அந்த ரெஸ்ட் ஏரியாவின் வெளியில் வந்து வரிசையாக இருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர். காற்று சிலு சிலுவென வீசியது. நாம் இங்கிருந்து நியூயார்க் செல்ல இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். வண்டியைப் பற்றி ஒரு குறையும் இல்லை, இயற்கை அன்னை சோதிக்காமல் இருக்கணுமே என்று பேட்ரிஷியா சொல்ல, ஏதோ சிந்தனையின் ஊடே இருந்த மேத்யூ தலையை லேசாக ஆட்டி, ஆமாம் என்று ஆமோதித்தார்.

சிறிது நேரம் கழித்து பேட்ரிஷியா, டார்லிங்க், நான் போய் லூசிய அழைத்து வருகிறேன் என்று எழுந்தார்.

உள்ளே, லூசி வழக்கமாகத் தூங்கும் ஸ்லீப்பரில் காணவில்லை !

லூசி ... ஸ்வீடி ... என்று சில முறை மெதுவே அழைத்துப் பார்த்தார், ஒரு பதிலும் இல்லை.

போன ஸ்ப்ரிங்கின் போது, ஒரு அனாதை இல்லத்திலிருந்து அவளைத் தத்தெடுத்துக் கொண்டனர் மேத்யூவும், பேட்ரிஷியாவும். அவர்களின் வளர்ப்புப் பிள்ளையானாலும், சொந்தப் பிள்ளை போலவே பார்த்துக் கொண்டனர் இருவரும்.

பலமுறை அழைத்தும் பதில் வராமல் போகவே, மழை பொழியும் மேகம் போல் மனம் கருத்து, தூறலாய்க் குரல் தழுதழுத்தது பேட்ரிஷியாவுக்கு. ஸ்வீட்டீ .... என்று மயங்கி விழாத குறை.

இதுக்கு முன்னால் எக்ஸிட் 45 கிட்ட இருக்கின்ற ரெஸ்ட் ஏரியாவில் நிறுத்தினேன். பார்த்தேன், நீயும், லூசியும் ஸ்லீப்பரில் நல்ல உறக்கத்தில் இருந்தீர்கள். மெதுவே உங்கள் இருவரையும் அழைத்துப் பார்த்தேன். ஆறு மணி நேரம் ஓட்டிய களைப்பில் நீ அயர்ந்து உறங்கவே, உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணினேன். நான் மட்டும் கீழிறங்கிச் சென்று வந்தேன். நீயும், லூசியும் இருப்பதை உறுதி செய்து கொண்டு வண்டியை எடுத்து வந்து இப்ப இங்க இருக்கிறோம் என்றார் மேத்தியூ.

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. முன்னால் நீங்கள் நிறுத்திய இடத்தில் லூசியும் இறங்கியிருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஐயோ என் நெஞ்சே பதறுதே, பாவம் சிறு பிள்ளை, என்ன பண்ணுதோ, எங்க இருக்குதோ ... என்று பதறி, வண்டிய எடுங்க, நாம திரும்ப எக்ஸிட் 45க்கு போவோம் என்றார் பேட்ரிஷியா அழுது கொண்டே.

நிறுத்தங்களில் எப்போதுமே ஜன்னல் கண்ணாடிகளை நன்றாக மூடுவதில்லை. முன்னர் சரி, இப்போது தான் லூசி இருக்கிறாளே. எத்தனை முறை சொல்லியிருப்பேன். அதில் தாவிக் குதித்து இறங்க சிறு பிள்ளைக்குச் சொல்லியா கொடுக்கணும். அதுவும் இது சமத்து, அழகாகக் தாவி இறங்கி விடுவாளே. சமத்துப் பிள்ளையாக வாய்த்தது கூட தவறோ, ஐயோ என்று அழுது, மேத்யூவை விரைவு படுத்தினார்.

இந்தப் பக்கமே பேசிக் கொண்டிருந்து விட்டு, வண்டியை எடுக்க இடப்புறம் சென்ற மேத்யூ ஒரு கணம் திகைத்து நின்றார்.

"பேட்", "பேட்" என்று உணர்ச்சிவசப்பட்டு அழைத்தார் மேத்யூ. நாம் வெகு தூரம் போகத் தேவையில்லை, லூசி இங்கு தான் எங்காவது இருப்பாள். பார், ஜன்னல் கண்ணாடி சரியாக மூடாமல் இருக்கிறது.

அப்பொழுதும் பேட்ரிஷியாவிற்கு முழு மனது வரவில்லை. "ஏன் இது அங்கேயே இப்படி இருந்து, லூசி இறங்கியிருந்தால்" என்று இழுத்தார். இல்லையே, நான் தான் ஓட்டும் போது, ரொம்ப குளிருகிறது என்று கண்ணாடியை நன்றாக ஏற்றிவிட்டிருந்தேனே. இங்க இறங்கும் போது தானே லேசா இறக்கிவிட்டேன் என்று பதிலலித்தார் மேத்யூ.

இவர்களின் உரையாடலுக்குத் தடை போடுவது போல‌, எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, பேட்ரிஷியாவின் மேல் தொற்றி, மூச்சிறைக்க அவரது கைகளை நக்கி, சுற்றிச் சுற்றி ஓடி வந்தாள் லேப்ரடார் ரிட்ரைவர் இனத்தைச் சேர்ந்த கறுப்பு லூசி.

லூசி காணவில்லை என்றவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணாடிக் கதவு சரியா இருக்கிற‌தா என்று கூட பார்க்கத் தோன்றவில்லை பாருங்கள் என்று தன்னை நொந்து கொண்டார் பேட்.

-----

மூன்றாம் செடி (கட்டுரை)


Photo courtesy: truck1a_johnsantic.com

இங்கு வந்த புதிதில் ட்ரைவிங் பழகியது நம்ம ஊரு பயிற்சியாளர் ஒருவர் மூலம். ஒரு ட்ரைவிங் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு, பார்ட் டைம் ஆக வெளி ஆட்களுக்கும் கற்றுத் தருகிறார். ட்ரைவிங் போது ஏதாவது பேசிக் கொண்டே வருவார். அப்படி அவர் பேசியதில் வெகுவாக என்னைக் கவர்ந்த ஒன்று இங்கு செல்லும் ட்ரக்குகள் பற்றி. எந்த ஸ்டேட்டாக இருக்கட்டும், ஒரு ஹைவே எடுத்தால் எண்ணில் அடங்காத ட்ரக்குகள்.

"ட்ரக் ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்கறது ரொம்ப கடினம். நாலைந்து test எடுக்கணும். எல்லாம் ஒரே தடவை என்று இல்லை, பல பாகங்களாகப் பிரித்து எடுக்கலாம். நிறையத் தம்பதிகளாகத் தான் ட்ரக் ஓட்டுகிறார்கள். நியூயார்க்கிலிருந்து, கலிஃபோர்னியா வரை போகிறதெல்லாம் சர்வ சாதாரணம்.

வண்டியில் இருக்கும் பொருட்களைப் பொருத்து அவர்கள் காலம் கருத வேண்டும். சில நேரம் காய்கறி, பழங்கள் போன்றவை குறிப்பிட்ட காலத்தில் deliver செய்ய வேண்டும், அதனால் கணவன் ஓட்டுகையில் மனைவி ஓய்வெடுப்பதும், பின் மனைவி ஓட்டுகையில் கணவர் ஓய்வெடுத்தும் மாறி மாறி செலுத்துவார்கள். ஆங்காங்கே சில நிமிடங்கள் நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொள்வதோடு சரி."

இங்கிருக்கும் மக்கள் எல்லாத்திலும் ஒரு crazy-யா இருப்பது போலத் தான் ட்ரக் ட்ரைவிங்கும் செய்கிறார்கள் என்று எண்ணினேன். ஆனால் இதன் வருமானம் முக்கிய காரணமாக இருக்கிறது.

இவர்கள் ஓட்டும் ஹைவே மைல்கள் கூடக் கூட, சம்பளமும் கூடுகிறது. நீங்கள் இங்கு பல ஹைவேக்களில் இது போன்று விளம்பர அட்டைகள் பார்த்திருக்கலாம். "Experienced truck drivers needed, 45 - 70 cents per mile".

குறைந்த காலத்தில் நிறைந்த‌ வருமானம். நிறைய நாட்கள் ஓய்வெடுப்பது. அதுபோக இன்சென்டிவ், போனஸ், இத்தியாதி எனப் பல சலுகைகள்.

ஒரு ஓட்டுனர் இத்தனை மணி நேரம் தொடர்ந்து ஓட்டலாம். அதன் பின் கட்டாய ஓய்வு இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும் என அமெரிக்க "Federal Motor Carrier Safety Administration" நிறுவனம் "hours of service" என்று வரையறை வகுத்துள்ளது. அதன்படி ஒருவர் தொடர்ந்து பதினோறு மணி நேரங்கள் ஓட்டலாம். அதன் பின் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று விதிக்கிறது.

சீரான போக்குவரத்து, காலநிலை இருந்தால், ஒரு நாளில், இரு ஓட்டுனர்கள், குறைந்தது 600 லிருந்து 1000 மைல் வரை செல்கின்றனர்.

இவர்கள் சந்திக்கும் தொல்லைகள்: தட்பவெப்பம், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், ப்ரேக் டவுன், உடல் நலக் குறைவு, மற்றும் சில.

-----

மேல் விபரங்களுக்கு:

http://www.fmcsa.dot.gov/rules-regulations/topics/hos/hos-2005.htm
http://en.wikipedia.org/wiki/Trucking_industry_in_the_United_States

Tuesday, March 25, 2008

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

க‌ழுத்தில் உருள் கருக‌ மணி
காதில் ஆடும் பொன் கம்மல்

கரம் குலுங்கும் கை வளை
விர‌ல் ந‌க‌த்தின் வர்ண இழை

இடை நீளும் கருங் கூந்தல்
அதில் வ‌ள‌ர் குண்டு ம‌ல்லி

முத்த‌ மிடும் சிறு பிள்ளை
மார் தழுவும் சில புத்தகங்கள்.

இமை மூடி இவ்வுலகை
இனிதாய் ரசித்திடவே !

இவற்றில் நானொன்றாய்
இருந்திடக் கூடாதா ?

இவையெல்லாம் சிறுபொழுதே
இனிமேலும் எண்ணாதே

என்னோடு எப்பொழுதும்
இவ்வாறிரு என்றாயே !

விழி காக்கும் இமை முடியாய்
விழும் கன்னச் சிறு குழியாய்

பட படக்கும் கரு விழியாய்
பச் சரிசிப் பல் அழகாய்

இளஞ் சிவப்புச் செந் நாவாய்
இனிக்கும் தேன் செவ் விதழாய்

முத்து உருளும் மணிக் கழுத்தாய்
முழுதும் அலங்கரித்த பொன் உடலாய்

உன்னிலே என்னை
உள்ளுள் சேர்த்தாயே

உதிரம் இருக்கும்வரை
உன்னை மறவேனே !

Wednesday, March 19, 2008

தோப்பு


(Photo: Thanks to World of Stock)

நித்தம் குயில் கூவும்
சத்தம் எதிரொலிக்கும்

நிமிர்ந்து வான் நோக்கின்
நீண்ட தென்னை குடைபிடிக்கும்

வ‌கைவ‌கையாய்ப் பல‌ ம‌ர‌ங்க‌ள்
ச‌ல‌ச‌ல‌த்து நின்றிருக்கும்

கைக்கெட்டும் தூரத்தில் அதில்
காய்க‌ள் பல‌ காய்த்திருக்கும்

உதிர்ந்த இலை காய்ந்து
சருகுத் தரை சரசரக்கும்

ப‌ம்புசெட்டு சிமெண்டுத் தொட்டி
பளிங்கு போல‌ நீரோடும்

கோலமிடப் புள்ளி வெய்யில்
இலைகளின் வழி யிறங்கும்

இருள் சூழும் நேர‌த்தில்
ம‌ர‌ வ‌ண்டு ரீங்க‌ரிக்கும்

க‌ர‌க‌ர‌க் குர‌ல் நீட்டி
கண்படா த‌வ‌ளை க‌த்தும்

ஆளில்லா ஆழ் கிணற்றில்
பால் நிலா நீராடும் !

Tuesday, March 18, 2008

எண்ணும் எழுத்தும் (Fibonacci Series)

90களில் நம்ம மார்க்குக்கு இயற்பியல் கிடைக்கவே ரொம்ப கஷ்டமாகப் போனதென்றால், எவ்வளவு பெரிய அறிவாளி என்று ஊகித்துக் கொள்ளுங்கள் :D கணிதம் தருகிறோம் என்றார்கள். இத்தனைக்கும் நான் கணிதத்தில் வாங்கிய மார்க், Just pass ! அறிவியலிலாவது நூற்றுக்கும் மேலே !!!

கணிதத்தைப் போயா படிக்கிறது என்ற மனநிலை இல்லை. நமக்கு மிகவும் கடினமாச்சே, எப்படிப் படிச்சு டிகிரி வாங்கறது என்ற கவலை. +2வில் ஒரு பேப்பர் தான், இங்கு அத்தனையும் கனிதம் என்றால் ... தலை சுத்திக் கீழே விழாத குறை ;)

அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கணிதத்தில் இருந்து, அப்புறம் ரெகமண்டேசன் பிடித்து இயற்பியல் மாறி, அதுக்கப்புறம் கல்லூரியே மாற்றி கணினி எடுத்தது எல்லாம் பெரிய கதை.

கணினியிலும் கணிதம் வரவே, சற்று பயம். ஆனால் ப்ராக்டிகல்ஸ் ஒரு ஈடுபாடு தந்தது. ஆசிரியர் ஒரு ப்ரோக்ராம் எழுதி, அதை அப்படியே நாங்கள் கணினியில் எழுதி, கணினி விடை சொல்லும்போது ஒரு சிறு குழந்தை போல அனைவரும் 'ஆ' வென்று பார்த்து ரசிப்போம்.

அப்படி ஒரு உதாரணப் ப்ரோக்ராம் தான் நம் தலைப்பின் நாயகன் ஃபிபோனாச்சி. தற்சமயம் பாடத்திட்டம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் 90களில் கணினி முதல் பாடமாக எடுத்தவர்கள் அனைவரும் அறிந்தது இந்த ஃபிபோனாச்சி முறை. இத‌ன் ஃபார்முலா மிக எளிது. பூஜ்ஜியம், ஒன்று என்று துவங்கி, இந்த‌ இரு எண்களைக் கூட்டி மூன்றாவது. பின் இரண்டாவதையும், மூன்றாவதையும் கூட்டி நான்காவது, என்று முடிவில்லாமல் சீரீஸ் நீழும்.

உதாரணம்: 0,1,1,2,3,5,8,13,21,34 ....

சரி இப்படியே கூட்டிக் கொண்டே போனால் தான் என்ன. நமக்கும், நம் வாழ்விற்கும் தொடர்பிருக்கிறதா என்று கேட்டால், விடை வானத்தைப் போல விரிகிறது. முயல், தேனீ, மனிதன் என இன்னபிற பிறப்புக்களிலும், பூக்களின் அடுக்குகளிலும், அன்னாசி போன்ற பழங்களின் தோல்களிலும், பைன் கோன்களிலும், ஃபிபோனாச்சி முறை அறியப்படுகிறது என்கிறது விஞ்ஞானம் !!


ஃபிபோனாச்சியின் ஆர்க் (நன்றி: விக்கிபீடியா). நத்தைக் கூடு போல் இருக்கிறதல்லவா ?!



பூக்களின் விதை அடுக்குகளில் இடது (55), வலது (34) என்று ஃபிபோனாச்சி எண்கள்.



பைன்கோன்களில் இடது ஆர்க்குகள் (13), வலது ஆர்க்குகள் (8) என்று ஃபிபோனாச்சி எண்கள்.


கணிதம் என்றால் இந்தியாவிற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்பதை இந்த ஃபிபோனாச்சி முறையும் நிரூபிக்கின்றது :

http://en.wikipedia.org/wiki/Brahmagupta-Fibonacci_identity
http://en.wikipedia.org/wiki/Fibonacci_number#Origins


மேல் விபரங்களுக்கு:

http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/fibnat.html - படங்களுடன் அருமையாக‌ விளக்கியிருக்கிறார்கள்.
http://www.branta.connectfree.co.uk/fibonacci.com - இங்கு முயல், தேனீ எல்லாம் தாண்டி சஸ்பென்சன் ப்ரிட்ஜ், CD, சேவிங்க்ஸ் அக்கௌண்ட் என்று விரிகிறது ஃபிபோனாச்சி.
http://video.google.com/videoplay?docid=7179950432887640376 - ஃபிபோனாச்சி காட்சி வடிவிலும்.


இது கணித வகுப்பு அல்ல. நீங்கள் கணிதமும் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. கணிதம் ஒரு கலையாக‌ வாழ்வோடு எவ்வளவு தொடர்புடையதாய் இருக்கிறது என்பதைக் கண்டு அதிசயிக்கவே இந்தப் பதிவு. இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் மீண்டும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே !

சுட்டிகளுக்குள் சென்று பார்க்கும்போது, அப்பப்பா கண்ணக் கட்டுதே ... மீண்டும் சந்திப்போம்.

Thursday, March 13, 2008

கிராமத்து நடவு


(Photo courtesy: http://www.trekearth.com/)

ஏரின் கூர்இறங்க‌
இழுக்கும் காளைகள்
பிளக்கும் கரிசலில்
புரளும் மண்புழுக்கள்

சேற்றைப் பிசைந்து
சோற்றுக்கு வழிவகுக்கும்
மண்ஆடை நீர்வழிய‌
மகத்தான உழவர் மக்கள்

வகிடெடுத்து அடுக்கடுக்காய்
வரப்புகளின் நடுவில்
சிதறிப் பரவிக் கிடக்கும்
சிறுகொத்து நாற்றுக்கள்

மண் வணங்கிக்
கண் அளந்து
காற்றாட‌ நாற்றுநடும்
கலகலப் பெண்கள்

நீர் நிரம்பி வரப்பு தொட‌
நீந்தி விளையாடும்
ஊர்வலம் செல்லும்
நீலமேகக் கூட்டம்

மஞ்சள் மேனியில்
பச்சைத் தாவணியாய்
சிலுப்பிக் கொண்டிருக்கும்
சேற்று நாற்றுக்கள்

வரப்போர மரக்கிளையில்
வாகாய்த் தூளிகட்டி
தாலேலோப் பாட்டுக் கேட்டுத்
தூளியில் பிஞ்சுறங்கும்.

Monday, March 10, 2008

அடி பெண்ணே !

சுவாமி தரிசனங்களில் மனம்
உன்னையே காணுதடி

லேசாய் நீ புன்னகைத்தால்
தேசமே சுழலுதடி

புன்னகைக்க நீ மறுத்தாலோ
பூகம்பமே வெடிக்குதடி

தெத்துப்பல் உன் முகம்
உள்ளத்தில் பதிந்ததடி

உன் கன்னக் குழிகளில்
நின்றே விழுந்தேனடி

இடைவரைக் கூந்தலில்
இறுக்கியே முடிந்தாயடி

பொன் நிறத் தேகத்தில்
என்னையே இழந்தேனடி

விழி வழி உரையாடி
நாளும் ஈர்த்தாயடி

சினம் கொள் நேரத்தில்
சிணுங்கியே கவர்ந்தாயடி.

‍‍‍‍‍-----

முடிவில் ஒருநாள் உன்
திருமணத் தேதியைச் சொன்னாயடி

குடும்பத்து சூழ்நிலை
வேறு வழியில்லை என்றாயடி

முந்தானைத் தாவணியில்
முகம் புதைத்து அழுதாயடி

கலமெனக் காற்றிலாடி
பின் மனம் தெளிந்தேனடி.

------

வீதியில் ஒருநாள்
எதேச்சையாய் உனைச் சந்திக்க‌

யாரந்த ஆண்ட்டி என‌
என் பிள்ளை உனைக் கேட்டான்

உன் பிள்ளை பேர் சொல்லி
அவள் அம்மா என்றேன் நான் !

ஒரே பள்ளி எனத் தெரியும்
ஆனால் இருவர்களும் நண்பர்களாமே !!!

Thursday, March 6, 2008

PIT - மார்ச் 08 - புகைப்படப் போட்டி - பிம்பம்

இந்த அருமையான தலைப்பிற்கு எங்க ஊர்ல இல்லாமல் போய்ட்டனே என்று வருத்தமாக இருக்கிறது. குளத்தையும், கண்மாயையும், வயலையும் .... சரி விடுங்க.

இங்க கட்டிடங்களத் தான் எடுக்க முடியுது. ஏதாவது ஏரி குளம் என்று போனாலும் ஒரு செயற்கை தனம் தெரிகிறது. அதனால எங்க அப்பார்ட்மென்ட் தான் இந்த சப்ஜெக்ட்டுக்கு சரியாப் பட்டுது.

நம்ம வாகனத்தில் விழும் இந்த பிம்பங்கள் பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு நாளும் தோன்றியதில்லை. படம் எடுக்கலாம் என்று தோன்ற வைத்த PIT குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இரண்டு நாள் முன்னர், காலையில் எழுந்து கண் விழித்துப் பார்த்தால், வெளியே எங்கும் அப்படி ஒரு பனி. ரோஜா படத்தில் "ஒரு வெள்ளை மழை" காட்சி போல். அதில் எடுத்த ஒரு புகைப்படம் போட்டிக்கான முதல் படம்.

படம் 1: நாம் எல்லாம் கண்ணாடி பார்த்து அரிதாரம் பூசுவோம். இங்கே கண்ணாடியே அரிதாரப் பூச்சில் பளபளக்க, அதில் தன்னைப் பார்க்கும் அபார்ட்மென்ட்.




படம் 2: அபார்ட்மென்ட் புகைப்படம் எடுக்கப் போறேன் என்றவுடன், அதற்கு வந்த வெட்கத்தில் காருக்குள்ள போய் பதுங்கிக் கொண்டது :)



படங்களை க்ளிக்கிப் பெரிதாய்ப் பாருங்க என்று உங்களுச் சொல்லவும் வேண்டுமா என்ன ?!! :)

Monday, March 3, 2008

அபார்ட்மென்ட் எண் 26



மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ?

என்ன‌டா விசேச‌ம் ?

நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம்.

இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட நம்ம‌ வீட்டுக்கு விருந்துக்கு வர‌ சொல்லுங்க" என்று ர‌ம்யா சொன்னா !

எதுக்குடா இந்த பார்மாலிட்டி எல்லாம் !

அதெல்லாம் ஒன்னும் இல்ல. சரி சரி மறக்காம‌ சனிக்கிழமை ஆறு மணி போல வந்திரு. திருப்பியும் உனக்கு ரெண்டொரு நாள் முன்னால ஞாபகப்படுத்தறேன்.

வெள்ளிக்கிழமை அலுவலக நேரத்தில், சந்துருவைக் கூப்பிட்டு நாளை விருந்தை நினைவு படுத்தினேன்.

இந்தா இது தான் எனது அபார்ட்மென்ட் முகவரி. நேரா ஏர்போர்ட் ரோடுல வந்து, ஒரு ரெண்டு மைல் தள்ளி, இடது பக்கம் திரும்பும் "க்ரீன் மெடோஸ்" சாலைல திரும்பி ஒரு அரை மைலில், வலது புறம் இருக்கு அபார்ட்மென்ட். அபார்மென்ட்‍ உள்ள, அப்படியே கடைசி வரை வந்து வலது புறம் ...

நிறுத்து, நிறுத்து. வண்டிய விட வேகமா சொல்லிக்கிட்டே போறே ! நாங்க பத்து வருசம் இருக்க ஊர்ல, இப்ப வந்திட்டு, எங்களுக்கேவா !!!

இல்லடா, எதுக்கும் உனக்கு சுளுவா இருக்கட்டும்னு தான். நீ வ‌ந்திட்டு கால் ப‌ண்ணு, நான் வெளியில‌ வ‌ந்து நிக்க‌றேன்.

அடப்போடா ! நாங்கள்ளாம் எத்தன அபார்ட்மென்ட் பார்த்திருப்போம் ! நீ கவலைப்படாத, அதெல்லாம் நாங்க கரெக்டா வந்திருவோம்.

சனிக்கிழமை வழக்கத்தையும் விட குளிர் கடுமையாக இருந்தது. குளிர்காலம் ஆதலால் வெளிச்சம் சீக்கிரமே விடைபெற்று, சாயந்திரம் ஆறு மணிக்கே, கரியாய் அப்பியது இருள்.

ஏழு மணியாகியும், சந்துருவையும் அவன் குடும்பத்தாரையும் காணவில்லை. வீட்டில் பிள்ளைகள், கதவுப் பக்கம் ஒரு கண்ணும், தொலைக் காட்சியில் மற்றொரு கண்ணும் வைத்து, "சந்துரு மாமா எப்ப வருவாரு" என்று சதா நைத்துக் கொண்டிருந்தன.

இந்திய நேரப்படி ஆறு மணி என்பது, ஒரு எட்டு அல்லது ஒன்பது என்று நினைத்து வருவான் போல என்று எண்ணினேன்.

செல்லில் சந்துருவை அழைத்து, என்ன மாப்ள இன்னும் ஆளக் காணமே என்றேன். "இதோ வந்திட்டோம், அபார்ட்மென்ட் உள்ள வந்திட்டே இருக்கோம்" என்றான்.

*****

காரிருளில், ஆங்காங்கே மினுக் மினுக் என்று சிறிய ஒளிக் கசிவில், பரந்திருந்தது அபார்ட்மென்ட். நினைத்ததை விட அதன் வளாகம் பெரிதாய் இருப்பதை உணர்ந்தான் சந்துரு. நேரா வந்து, கடைசியில் வலது புறம் திரும்ப சொன்னானே ! திரும்பியாச்சு, அதோ அங்கே இருக்கு கட்டிடம் 4908. ஒரு ஓரமாக வசதியாய், பார்க் செய்தான் சந்துரு.

படபடக்கும் குளிர் காற்றில் மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் கட்டிடத்தின் நான்கு வாயில்களில், மூன்றாவது வாயில் வரை, மூன்று மாடிகளையும் ஏறிப் பார்த்துக் களைத்து ...

*****

"என்னடா பண்ற ?, ஏழு மணிக்கே அபார்ட்மென்ட் வந்திட்டேன் என்று சொன்னாயே ! கால் மணி நேரத்திற்கும் மேல ஆச்சு, எதாச்சும் ப்ரச்சனையா ?" என்று சந்துருவைக் கேட்டேன் செல்லில்.

படக்கென்று செல்லைக் கைப்பற்றி, "ஏங்க, உங்க விலாசத்துக்கு சரியா எப்படி வர்றது என்று சொல்றதில்லையா ?" என்று கோபித்துக் கொண்டாள் சந்துருவின் மனைவி கமலா.

இப்ப எங்க இருக்கீங்க ?

...

ஓ, அது அப்படியே பின்னாடி இருக்க பாதை. சரி கீழ இறங்கி வாங்க‌

...

4908 முன்னால வந்து, இடது மூலைல, கதவு எண் ஆறு, பார்கறீங்களா

...

அதுக்கு மேல பாருங்க, மங்கலான வெளிச்சத்தில் பதினாறு

...

அதுக்கும் மேல இருக்க இருபத்தி ஆறு தான்.

...

இதோ இங்க, என்று கதவைத் திறந்து கைகாட்டினேன். கீழே சந்துருவை கமலா கொஞ்சுவது மேலிருந்து தெளிவாகத் தெரிந்தது.