Thursday, October 29, 2009

கட்டழகி ...


Photo Credit: Bernat Casero

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

Tuesday, October 20, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2நீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around !' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க ராம‌ல‌ஷ்மி அக்கா. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே !!! :))


 1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

  தமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....


 2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

  ஒவ்வொரு வருடமும் தீபாவ‌ளி அன்று அதிகாலை நாலு நால‌ரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து ? எழுப்பிவிட‌ப்ப‌ட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன‌ முறை ம‌ஞ்ச‌ள் ஜாஸ்தி வ‌ச்சிட்டீங்க‌, இந்த‌ த‌டவை கொஞ்ச‌மா வைங்க'னு அட‌ம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக‌ விழுந்து, புத்தாடைக‌ளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, ச‌மைய‌ல்க‌ட்டில் பிஸியாக‌ இருக்கும் பாட்டி, அம்மா, ப‌ணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்க‌ள் சொல்லி, (இப்ப‌ அவ‌ங்க‌ளை நினைத்தால் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்ல‌ப்பிள்ளைக‌ள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, ப‌க்க‌த்தில் இருக்கும் உற‌வின‌ர் வீடுக‌ளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப‌ சாய‌ந்திர‌ம் ஆகும். இவையெல்லாம் ப‌தினைந்து இருப‌து வ‌ருட‌த்து முந்தைய‌ க‌தை.


 3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

  பென்டன்வில் ‍ ஆர்கென்ஸா, அமெரிக்கா.


 4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

  நாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள‌ வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.


 5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

  கோல்ஸ், வால்மார்ட்


 6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

  ரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன‌ பிற‌...

  இதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...


  இந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா ? இல்லேன்னாலும் அதாங்க‌ உண்மை :)))

  அம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.


 7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

  மின்னஞ்சல், தொலைபேசி


 8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

  ரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.


 9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

  பண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.


 10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

  'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். 'சக்கரவர்த்தினிகள்' என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.

  இதோ இங்கே:

  கவிநயா : http://kavinaya.blogspot.com/2009/10/2009.html
  நானானிம்மா : http://9-west.blogspot.com/2009/10/2009.html
  துளசி டீச்சர் : http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html
  வல்லிம்மா : http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html

Wednesday, October 14, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009

வலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வைப்போம்.

முக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்க‌ள். பண்டிகை அல்லாத நாட்க‌ளிலேயே அவ‌ர் அறுப‌து, இவ‌ர் ஐம்ப‌து என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவ‌ளி என்றால் கேட்க‌வும் வேண்டுமோ ?

நம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா ? :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் ? நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா ? அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே ?

வழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.

விதிமுறைகள்:


 1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

 2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

 3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

 4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

 5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.

ரொம்ப ஈஸீல்ல ? இப்ப, கேள்விகள்:


 1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

 2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

 3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

 4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

 5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

 6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

 7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

 8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

 9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

 10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?*****

க‌டைசி கேள்வி எப்ப‌வுமே க‌ஷ்ட‌ம் தான் ந‌மக்கெல்லாம். அத‌னால‌ அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வ‌லைய‌க‌ ஜாம்ப‌வான்களை அன்போடு அழைக்கிறேன் :))


 1. துள‌சி டீச்ச‌ர் - http://thulasidhalam.blogspot.com/

 2. நானானிம்மா - http://9-west.blogspot.com/

 3. வ‌ல்லிம்மா - http://naachiyaar.blogspot.com/

 4. கவிநயா - http://kavinaya.blogspot.com/*** அனைவருக்கும் னி தீபாளி வாழ்த்துக்ள் ***

Thursday, October 1, 2009

நெல்லி மரம் !


Photo credit: indiamike.com

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.

வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.

சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.

***

"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா ? உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.

'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.

"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.

"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌..."

'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.

காலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.

'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.

பூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.

"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.

'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.

கார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.

இவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.

"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை ?

என்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.

அப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.

காற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.

சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்ப‌டியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.

கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.

"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.

வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உன‌க்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.

'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.

"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு ? உங்க‌ தாத்தோவோட‌ ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொட‌ர்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.

"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா ? அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்த‌ள்ளினான்.

"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.

பலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.

கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.

ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

எதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.

***

"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.

அண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.

***

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.