கிராமத்துக் குலதெய்வ வழிபாடு
அமெரிக்கால பொறந்தாலும்
ஆப்பிரிக்கால பொறந்தாலும்,
விடுப்பு எடுக்கையில
ஓடிப்போய் கிராமத்தில்,
ஊருசனம் பார்த்துபுட்டு
உறவுகளைச் சேர்த்துக்கிட்டு,
காரு, வேன்எடுத்து
கல்லுமுள்ளுப் பாதைதாண்டி,
சென்று சேருமிடம்
குலதெய்வச் சாமிகோவில்.
மண்குதிரை அணிவகுக்க
மலைக்கும் வரவேற்பு,
மஞ்சள் ஆடைஅணிந்த
மரக்கிளைகள் ஏராளம்.
படர்ந்த மரநிழலில்
உதறிப் பாய்விரித்து,
சின்னஞ்சிறு கதைகள்
சிரிப்புக் கும்மாளங்களில்,
சிலுசிலுக்கும் மரஇலைகள்
படபடக்கும் பட்சினங்கள்.
சண்டைகொண்டு விளையாடும்
சளைக்காத சிறுவர்கூட்டம்.
பொங்கலிட்டுக் குலவையிட
சங்கமிக்கும் பெண்டிர்.
சந்தனம் பொட்டிட்டு
விழிதெரியும் குலதெய்வம்.
உறவுகள் கூடிநிற்க
படபடப்பு ஆரம்பம் ...
மாமன் மடிஅமர்த்தி
மருளும் குழந்தைக்கு,
முடியிறக்கிக் காதுகுத்த
விக்கி விக்கிஅழும்.
தேம்பி அழும்செல்லம்
தேற்றிட திராணியற்று,
பெற்றோர் மருகியதில்
உற்றார் உருகிடுவர்.
இன்றுவரை நடைமுறை,
நாளை எப்படியோ ?
5 மறுமொழி(கள்):
சதங்கா,
நல்ல கவிதை. நடைமுறையில் பல கிராமங்களில் இவை இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடைசி வரியில் "இன்று வரை நடைமுறை நாளை எப்படியோ?" என்று கேட்டீர்கள். ஏற்கனவே "Online Puja" உள்ளது. இந்த சுட்டியை அழுத்தினால் லக்ஷ்மிக்கு ஆன் லைனில் தூபம் காட்டி, மலர் தூவி, மணி அடித்து பூஜை செய்யலாம். http://www.rudraksha-ratna.com/laxmipuja.htm
இந்த ரேட்டில் போனால் ஆன் லைன் காது குத்தல், ஆன் லைன் மொட்டை, ஆன் லைன் கிடா வெட்டல் என்று வந்து விடும் போலிருக்கு.
பரதேசி,
எல்லாத்துக்கும் ஒரு விடை இருக்கும்னு சொல்றது இது தானோ ?
ஆஹா அருமை. ஆக மொத்தத்தில இயற்கை கலந்த வெளித் தொடர்பு எல்லாம் detach ஆகி 15-17 inch-ல மட்டும் attach ஆகப்போகுது .... ஹ்ம்ம்ம்
இன்னும் கொஞ்சம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் சியர்ஸில் காதை மரக்கவைத்து ஒரு சின்ன துப்பாக்கி மாதிரி வைத்து டுபுய்க், டுபுய்க்! மாமனாவது, மச்சானாவது, மலையாவது.... :-)
நாகு,
//ஒரு சின்ன துப்பாக்கி மாதிரி வைத்து டுபுய்க், டுபுய்க்! மாமனாவது, மச்சானாவது, மலையாவது.... :-)//
படிக்கறதுக்கு நல்லா இருந்தாலும், உறவுகளை (ஏற்கனவே தொல்லை தாங்கல என்கிறீர்களள :)) இழக்கிறோமே ...
எங்க ஊரு ஞாபகம் வந்தது! நன்றி. இதெல்லாம் இருக்கும், இருந்துகிட்டே இருக்கும். கருப்பனும், அய்யனாரும், கொம்புக்காரனும் சமஸ்கிருத அர்ச்சனையைக் கேட்டு, பொங்கலும் பாயாசமும் சாப்பிட்டும் பொழச்சுக் கெடப்பாங்ய. என்னைக்காச்சும் அவனுகளுக்குக் கிடாயும், பூசாரி சாமியாட்டமும் கிடைக்கும்னு நம்பிக்கையோட.
Post a Comment
Please share your thoughts, if you like this post !