Tuesday, July 24, 2007

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - M.S.சுப்புலக்ஷ்மி

இந்தப் பாடல் எவ்வளவு பிரசித்தம் என்று வலையில் கூகளிட்டபோது வியந்து தான் போனேன். ஆசையோடு நம் பதிவில் இடலாம் என்றால், தமிழ் வலைப்பதிவுகளிலேயே ஏகப்பட்ட பேர் பதிந்திருக்கிறார்கள். ஆதலால், ஒரு சிறு வித்தியாசம் செய்து, M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் வீடியோவுடன், ராஜாஜி அவர்களின் வரிகளும் சேர்த்து இங்கே பதிவிடுகிறேன்.

M.S. அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.



Thanks to navarasan for the youtube

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

(குறையொன்றும்)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

பி.கு. குமரன், எளிமையான பாடல் வரிசையில் இப்பாடலும் வருவதால், விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன் ! :)

9 மறுமொழி(கள்):

குமரன் (Kumaran)said...

:-)

சதங்கா. இந்தப் பாடலுக்கு ஏற்கனவே விளக்கம் தந்தாகிவிட்டது. :-)

இந்த இடுகைகளைப் பாருங்கள்.

http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

SurveySansaid...

My favourite song of MS, after suprabhatham :)

thanks for sharing this.

சதங்கா (Sathanga)said...

குமரன்,

நன்றி. படித்துவிட்டுச் சொல்கிறேன். கூகள் தேடலில் உங்கள் இடுகைகள் வரவில்லையே. மீண்டும் ஒருமுறை தேடிப் பார்க்கிறேன் :)

சதங்கா (Sathanga)said...

சர்வேசன்,

//My favourite song of MS, after suprabhatham :)

thanks for sharing this.//

எனக்கும் அப்படியே. அதான் தேடிப் பிடித்து போட்டிருக்கிறேன்.

நாகு (Nagu)said...

ராஜாஜியின் அற்புதமான பாடல். எளிய அருமையான பாடல். இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஞாபகம் வருவது பிட்ஸ்பர்க். ஒருமுறை பிட்ஸ்பர்க் கோவிலுக்கு சென்றிருந்தபோது சாப்பாட்டு வரிசையில் நின்றிருந்தபோது ஒலிபெருக்கியில் கேட்டேன் - ஒரு மாமி இந்த பாட்டை படுத்தியெடுத்தார் பாருங்கள். எளிய இந்த வரிகளை மறந்து இஷ்டத்துக்கு புகுந்து விளையாடினார். குன்றின் மேல் நிற்கின்ற... என்று இழுத்தார். அடுத்து வரும் பெயர் மறந்து விட்டது. கொஞ்சம் இழுத்து விட்டு ஒரு கீழ் சுருதியில் கண்ணா என்று சேர்த்தார் பாருங்கள் - சிரித்தால் யாராவது அடிக்கப் போகிறார்கள் என்று பயந்து வெளியே ஓடிவிட்டேன். எனக்கு அந்த பாடலில் மிகப் பிடித்தது அந்த இடம்தான். அந்த இடத்தை யாராவது பாடுகிறவர்கள் மறப்பார்களா?

சதங்கா (Sathanga)said...

வாங்க நாகு,

இதிலும் ஒரு flashback-ஆ ... நீங்கள் ஒரு தகவல் பெட்டகம் என்று தான் சொல்லவேண்டும் :)

ஜீவிsaid...

எத்தனை தடவைக் கேட்டால் தான்
என்ன? ஒவ்வொருதடவை கேட்கும்
போதும் புத்துணர்ச்சிக் கொடுக்கின்ற
மனசில் இலயித்து மயக்குகிற பாட்டு.
இந்த பாட்டில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா?..
எல்லோரும் கடவுளைக் கும்பிடுகிற
போது, ஒரு தேவை- அல்லது நல்லவை நடக்க வேண்டி- ஏதாவது
ஒரு வேண்டுகோளோடு தான் கும்பிடுவார்கள். இது மனுஷ இயல்பு.
ஆனால், மூதறிஞ்ர் கோத்த இந்தப் பாடலில் அடிக்கடி "எனக்குக் குறையொன்றுமில்லை..குறையொன்றுமில்லை.." என்ற வரிகள் வந்து,
'நீ இருக்கையில், எனக்கு எப்படிப்பா
குறைவரும்' என்கிற அன்பில் நனைந்து பாடல் நீள்கையில், ஒரு
மனோதத்துவ அடிச்சரடு பாடல் பூராவும் நிறைந்து இருப்பது புரிகிறதா?
இருப்பதாக நினைத்து வருந்தாமல்,
'இல்லை,இல்லை' என்றே நினைத்து
இருக்கும் குறைகளை வெல்லல்--அல்லது வெல்லுவதற்குரிய மனோசக்தியைப் பெறுதல்--என்கிற
மனோதத்துவம் பாடல் பூராவும் விரவி
இருக்கிறமாதிரி நான் நினைக்கிறேன்.
இந்தப் பாடல் இசைக்கும் தருணங்களிலெலாம், அப்படித்தான்
நானும் நினைத்து எனக்கு சக்தியூட்டில்
கொள்வதால், உங்களுக்கும் சொன்னேன்.

நானானிsaid...

சதங்கா!
எம்.எஸ்.அம்மாவின் சிறப்பே தான் மட்டும் லயிக்காமல் கேட்போரையும் லயிக்கவைக்கும் திறம்தான்.
அம்மாவின் மறைவுக்குப்பிறகு வந்த
டிசம்பர் கச்சேரிகளில் சொல்லிவைத்தாற்போல் எல்லா கச்சேரிகளிலும் அன்னாருக்கு அஞ்சலியாக இந்தப்பாடலைத்தான்
பாடி கண்ணிர்வழியவைத்தார்கள்.
ஆனாலும் அம்மா..அம்மாதான்!

Anonymoussaid...

மிகவும் அருமையான பாடல்

Post a Comment

Please share your thoughts, if you like this post !