Monday, July 30, 2007

உரையாடும் விழிகள்



இன்று அவள் பெயரை
எப்படியும் அறிந்துகொள்ள

ஏகாந்தமாய் உடையணிந்து
இங்குமங்கும் அலைகையில்

கடைவீட்டு ஜன்னல்வழி
கருகரு இரு விழிகள் !

மொய்க்கும் வண்டாய்
படபடக்கும் விழியிதழ்கள்

இமைமூடும் நொடிப்பொழுதும்
சளசளக்கும் சிந்தனைகள்

வழியும் வார்த்தைகள்
பளபளக்கும் இமைவழியே

சீர்செய்யும் கேசமது
சருக்கி முன்விழ

சிறிய இடைவெளியில்
தெரியும் விழிகண்டு

தடுக்கித் தடுமாறும்
அதனழகில் எந்தன் உயிர்

அசையும் விழிகளிலே
ஆயிரம் சேதிகள்

அற்புதங்கள் பல கலந்து
கலகலப்பாய் கதைக்கும் விழி

விரல்நுனியால் மையிட்ட அவள்
வேகத்திலே நிதானம்

காணும் என் விழிகள்
நாணித் தணிந்திருக்க

கயலூ... என்றவள் அம்மாவின்
காதடைக்கும் சத்தத்தில்

தேனினும் இனிதாய்த்
தெரிந்தது அவள் பெயர் !

அழகே உன்பெயரே
துள்ளும் விழி தானா ?!

0 மறுமொழி(கள்):

Post a Comment

Please share your thoughts, if you like this post !