Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?


Image Courtesy pbase.com

காலை வேளையிலே
கால் கடுக்க நடக்குமவள்

மனச்சுமை கீழிறக்க
தலைச் சுமை ஏற்றிடுவாள்.

பனையில் கள்ளிறக்கி
சுண்ணாம்பு சிறிது சேர்த்து

வெள்ளை நிறத்துக்
கள்ளினைத் திரிக்க

பானையில் அதைக்கலக்கி
வீதிமுனை வந்து நிற்பாள்.

பனைஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி

ஆழாக்கு எடுத்தே
ஆள் ஆளுக்கு அளந்திடுவாள்.

இருகைப் பிடித்து
இமை மூடிப் பருகிட

தேனான பதநீர்
தித்திப்பாய் உள் இறங்கும்.

தெவிட்டாத நீரதனால், பதநீர்
நம் உடலுக்கு என்றும் இதநீர் !

-----

பதநீர் குடிப்பது போல படம் போடலாம் என்று, வழக்கம் போல கூகிளாரிடம் முறையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பனை ஓலை :))

15 மறுமொழி(கள்):

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா நல்ல சித்திரை பதனி போல் உங்கள் கவிதை நல்ல சுவை.. அந்த நொங்கு போடுவாகளே அத விட்டிட்டியளே...

சதங்கா (Sathanga)said...

கிருத்திகா,

வரவுக்கு நன்றி.

உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதை போலுள்ளது.

//அந்த நொங்கு போடுவாகளே அத விட்டிட்டியளே...//

அதைத் தனியாய் ஒரு கவிதையில் குடிக்க, மன்னிக்க வடிக்கிறேன் :)

கபீரன்பன்said...

இயல்பான வார்த்தைகள். அழகான கவிதை. வாழ்த்துகள்.
பதநீர் குடிப்பது போல படம் போடலாம் என்று, வழக்கம் போல கூகிளாரிடம் முறையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பனை ஓலை
கூகிளாரிடம் toddy என்று முறையிட்டிருந்தால் தந்திருப்பாரே :)
நீங்கள் என்ன சொல்லி கேட்டீர்கள் ?

சதங்கா (Sathanga)said...

வருகைக்கும், வாழ்த்துக்களும் நன்றி கபீரன்பன்.

//கூகிளாரிடம் toddy என்று முறையிட்டிருந்தால் தந்திருப்பாரே :)
நீங்கள் என்ன சொல்லி கேட்டீர்கள் ?//

பதநீர், கள்ளு, பனை, மட்டை, palm products, palm tree, palm leaves ... இப்படி எனது தேடலில் நிறைய 'தென்னை' தான் கிடைத்தது. அதே போல 'toddy' என்று நீங்கள் சொல்லியதிலும் நிறைய தென்னை தான் தருகிறார் கூகிளார்.

துளசி கோபால்said...

பனையோலைக் கிண்ணத்தில் குடிச்ச ருசி, நம்ம காதி கிராஃப்டில் ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைச்சு விற்கும் ரகத்தில் இல்லை.

நம்ம 'கயித்துக்கட்டிலில்' உக்கார்ந்து குடிச்சுப்பார்க்கணும்:-)

சதங்கா (Sathanga)said...

டீச்சர்,

சரியாகச் சொன்னீர்கள். பனையோலை, கயித்துக் கட்டில் ... அப்படியே வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்து .... அடா அடா .... இந்த எளிய சுற்றுப்புறம் இனிமை, எந்த 5-7 star hotel-ம் கிடைக்காது ...

நாகு (Nagu)said...

அருமையான பதநி. பதநி போல சுவையாக இருக்கு என்று சொல்லவந்தேன். ஞாபகம் வந்தது - நான் பதநீரே குடித்ததில்லை. ஒருமுறை நண்பனின் தோப்பில் பானையை இறக்கியவுடன் பார்த்தேன். அதில் இருந்த பூச்சிகளைப் பார்த்ததில் இருந்து பதநியைப் பாத்தாலே கலக்கும் :-) ஆனால் உங்கள் கவிதையைப் படிக்கும்போது கலக்கவில்லை. நீங்கள் கலக்கியிருப்பதுதான் தெரிந்தது :-)

கிருத்திகா - நொங்கை எல்லாம் ஞாபகப்படுத்தாதீங்க...

நானானிsaid...

ஏப்ரல் முதல் ஜுலை வரை பதநீர் மரம் இறங்கும் காலம்.பபோது ஊரிலிருந்தால் காலைப்பதநீர்,மாலைப்பதநீர் என்று அடிச்சு மொழக்குவேன்.அழகான பனையோலை பௌலில் பதநீர் ஊற்றி அதில் இளம் நொங்கு சீவிப்போட்டு குடித்தால்..ஆஹா! நாம் ரசித்து குடிப்பதைப் பார்த்து இளநீர்க்காரன் மேலும் மேலும் இளநீர் ஊற்றி இளம் நொங்காக சீவிசீவிப் போட்டுக்கொண்டேயிருப்பான்.அருமையான காலை உணவு!!ஹூம்ம்!ஞாபகப்படுத்தீட்டீங்களே.....!இப்ப நான் என்ன செய்ய?

நாகு (Nagu)said...

என்ன நானானி? குடிச்சது பதநீரா இல்லை மத்த சமாச்சாரமா? நடுவுல பதநி இளநி ஆயிடுச்சி... :-)

சதங்கா (Sathanga)said...

நாகு,

/அதில் இருந்த பூச்சிகளைப் பார்த்ததில் இருந்து பதநியைப் பாத்தாலே கலக்கும் :-)//

இப்ப தான் தெரியுது உங்களுக்கு vitamin-E ஏன் கொறச்சலா இருக்குனு ;)

//ஆனால் உங்கள் கவிதையைப் படிக்கும்போது கலக்கவில்லை. நீங்கள் கலக்கியிருப்பதுதான் தெரிந்தது :-)//

மிக்க நன்றி, நன்றி.

சதங்கா (Sathanga)said...

நானானி,

வருகைக்கு மிக்க நன்றி.

நாகுவின் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது. ஒருவேளை இளநீரும், நுங்கும் விற்பது ஒரே ஆளோ ?

//இப்ப நான் என்ன செய்ய?//

ஏப்ரல் வரை பொருத்திருங்கள் ;)

சதங்கா (Sathanga)said...

டெல்பின் மேடம்

//ம்ம்ம்...இதெல்லாம் குடிச்சு ரொம்ப நாளாச்சு...//

நீங்க சென்னையில தானே இருக்கீங்க. april வந்தா கெடைக்குமே :)

//ஆனால் உங்க கவிதை.. கள்ளு குடிச்சமாதிரில்ல இருக்கு!
நல்ல கவிதை...summer-ல் போட்டிருக்கலாமோ!//

மிக்க நன்றி. சம்மர்ல போடலாம், ஏதோ நினைவில் தோன்றியதில், உடனே கை பரபரவென்று எழுதி, அதை சம்மர் வரை பாதுகாக்க மனம் வரவில்லை. அதான் உடனே பதிஞ்சிட்டேன் :)

நானானிsaid...

சென்னையில் அடிக்கடி இளநீர் குடிப்பதால்..அதுவே ஆசையோடு வந்து விழுந்துவிட்டது. நான் என்ன செய்ய? வீட்டு வாசலில்தானே அருந்தினேன், பனைமரத்தடியில் அல்லவே!

யோகன் பாரிஸ்(Johan-Paris)said...

//பனைஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி//

இதை ஈழத்தில் பிளா என்பர், இப்படி செய்து வயலில் சாப்பாடு பரிமாறுவார்கள். கூழ்,கஞ்சி குடிக்கவும் அந்த நாட்களில் பயன்படுத்துவோம்.
பதனீர் குடித்ததில்லை..ஈழத்தில் கருப்பனி என்போம்

மெளலி (மதுரையம்பதி)said...

கவிதை நல்லா இருக்கு சதங்கா. படிச்ச் உடனே எனக்கு தோணின பழமொழி 'பனைமரத்தின் கீழ் இருந்து பால் குடித்தாலும்".....ஹிஹிஹி

Post a Comment

Please share your thoughts, if you like this post !