Saturday, September 22, 2007

டூரிங் டாக்கீஸ்



நாலு தெருவுக்கு
நாற்பது வீடுகள்
நடுவே எழும்பியது
நமது கலைக்கூடம்.

M.G.R., சிவாஜி
இவர்கள்போல் இன்னும் பலர்
உயிர் பெற்று இன்றைக்கும்
உலா வரும் நிழற்கூடம்.

புத்தம் புதுக் காப்பி
மெத்தப் பழைய படம்
நித்தம் வருகை தரும்
மொத்த ஊரு சனம்.

மின்னும் விளக் கொளியில்
மங்கல் மணல் வெளியில்
நரை குவியல் தலைகளோடு
தரை முழுதும் மக்கள்வெள்ளம்.

கயவாடும் வில்லனை
நயமாக வீழ்த்தி
நாயகியைக் கவரும்
நாயகனைக் காணுகையில்,

காதுகள் அடைபடக்
காற்றினில் விசில் பறக்கும்
காகிதங்கள் தூள் சிதறும்
காலமெல்லாம் அது நிலைக்கும் !

-----

2 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

கலக்கிட்டிங்க போங்க. அப்படியே பக்கத்து ஊரு(எங்க ஊரு டவுனாச்சே) டெண்டுல உக்காந்து படம் பாத்த ஞாபகம் வந்தது.

விசில் பறப்பது சரி - காகிதங்கள் தூள் சிதறும்தான் புரியலை.

பெங்களூருவில் நிறைய டெண்டுகள் உண்டு. அதில் ஒன்றில் சேரில் உட்கார்ந்து(மணலில் உட்கார உடன்போன நண்பனின் கௌரவத்தை இடம் கொடுக்கவில்லை) ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரிதான் கடைசியாக டெண்டுகோட்டா தரிசனம்.

சதங்கா (Sathanga)said...

நன்றி நாகு,

//விசில் பறப்பது சரி - காகிதங்கள் தூள் சிதறும்தான் புரியலை. //

நெசமாலுமே தெரியாமத் தான் கேக்கறீங்களா ? காகிதங்கள சிறு தூள்களா ஆக்கி, நாயகன் தோன்றும்போது மக்கள் அள்ளி வீசுவார்களே. திரையெல்லாம் புள்ளி புள்ளியா இருக்குமே ? அதான். இது டெண்ட் கொட்டாய் என்று இல்லை நவீன திரையரங்குகளிலும் கூட இன்றளவும் நடக்கிற காரியமாத் தான் இருக்கிறது !

//ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரிதான் கடைசியாக டெண்டுகோட்டா தரிசனம்.//

நானும் என்ன படம் பார்த்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ம் ஹூம் ... உங்கள் ஞாபகசக்திக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !