பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)
மீசைக் கவி -- முண்
டாசுக் கவி -- கருங்
கோட்டுக் கவி -- பயமிலாப்
பாட்டுக் கவி -- எங்கள்
பாரதி !
-----
பாருக்குப் பா தந்து
பருத்த யானைக்குப் பழம் தர
பார்த்தசாரதி கோவில் சென்றாய்
பக்தர் வெள்ளமங்கே !
-----
கரிய நிறத்தந்த யானை
கண்கள் சிவந்து நிற்கக் கண்டீர்
முரசென அகன்றதன் காதுகள்
பட படக்கக் கண்டீர்
சுருண்டு நீளும் துதிக்கை மீண்டும்
சுருண்டு நீளக் கண்டீர்
பெரிய அதன் உருவம்
சரிந்து சரிந்தாடக் கண்டீர்
கூரிய அதன் விழிகள் கவியைக்
கூட்டத்தில் கீறித்தேடக் கண்டீர்
குழந்தையாய்க் கவியும் அதனருகே
கொஞ்சிச் செல்லக் கண்டீர்
-----
பயம் கொள்ளாப்
பா(க்கள்) எழுதிப்
பார் உயரப்
பாடுபட்டு
பாவரசன் ஆனாய் !
பாவரசன் உன்னை
பதம் பிரிக்கத் தெரியா
மதம் கொண்ட யானை
மிதித்துக் கொன்றதுவோ ?!
-----
பொருள் மாறும் காரணத்தால்
பாவரசன் நீக்கி
பாவிற்கதிபதி
பாரதி நீ என
பயந்த யானையிடம்
பார்ப்போர் சொல்லியிருந்தால் ...
இன்று நின்னுயிர்
நின்றிருக்குமோ எங்களுடன் !
ஏராளப் பாடல்கள்
இன்னும் கிடைத்திருக்கும் !
4 மறுமொழி(கள்):
சதங்கா,
கவிதை மிக மிக அருமை.
என்ன ஒரு வார்த்தை விளையாடல்.
கரிய நிறத்தந்த யானை
கரிய நிற யானை
கரிய நிற தந்த யானை
கரிய நிறம் அந்த யானை. அபாரம்.
நல்ல ஒரு கற்பனை, இப்படித்தான் அந்த நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை, ஆனால் அப்படி கவி புனைய எந்தத் தடையும் இல்லை.
நன்கு ரசித்தேன்.
அன்புடன்,
முரளி.
வாங்க முரளி.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்கள் அற்புதமான ரசிகர் என்று உங்கள் பின்னூட்டம் சொல்கிறது. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
ஆகா ஆகா சதங்கா
அருமைக் கவிதை - மீசைக்கவிஞன் முண்டாசுக் கவிஞன் பாரதியைப் பற்றிய அழகுக் கவிதை
ரசித்தேன் - நல்வாழ்த்துகள்
Cheena ( சீனா )
//இன்று நின்னுயிர்
நின்றிருக்குமோ எங்களுடன் !
ஏராளப் பாடல்கள்
இன்னும் கிடைத்திருக்கும் !//
அடிக்கடி மிகுந்த ஆதங்கத்துடன் நான் நினைப்பது.
கவிதை வெகு அருமை!
Post a Comment
Please share your thoughts, if you like this post !