Thursday, June 11, 2015

நரியைப் பரியாக்கி

ஆவுடையார் கோயில்

குதிரை வாங்கச் சென்ற அமைச்சனைக் காணாது வருந்தினான் மன்னன்.  ‘யாரங்கே?’ என்று உரக்கக் கூவியதில், அருகில் இருந்த இரு காவலர்கள் பதறியடித்துப் பயபக்தியோடு மன்னனை நெருங்கினர்.  அமைச்சன் சென்ற வழியில் சென்று தகவல் அறிந்து வரப் பணித்தான் வீரர்கள் இருவரையும்.  மன்னனின் கட்டளைக்கேற்ப, இருவரும் தத்தம் குதிரைகளில் தாவி ஏறி, அமைச்சன் சென்ற வழித்தடத்தில் பயணிக்கலாயினர்.  மதுரையில் இருந்து தொண்டி மீமிசல் நோக்கிய பயணம்.  சென்ற வேகத்தில் அதே தினத்தில் திரும்பிய வீரர்கள் இருவரும் தாம் கண்டதை மன்னனிடம் விவரிக்க, விறகடுப்புச் செங்கணலாய் விரிந்தன அவன் விழிகள்.

மேலும் சினந்து, ’மன்னனின் கட்டளை மீறிய அமைச்சனை இழுத்து வாருங்கள்’ என்று ஒரு சிறு படையை, வீரர்கள் இருவரோடும் அனுப்பினான்.  

அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையில், ‘குருந்த மரத்து நிழலில் குருவின் திருவடியில்’ உலகப் பற்றறுத்து பேரின்பத்தில் திளைத்திருந்த அமைச்சருக்கு, ‘தான் எதற்காக இங்கு வந்தோம்!’ என்று நினைவூட்டினர் சிறு படையோடு வந்த வீரர்கள் இருவரும்.  ‘நிச்சயமற்ற வாழ்வின்’ நினைவிற்கு மீண்டு வந்த அமைச்சர் மிகவும் வருந்தினார்.  மன்னனின் கட்டளை மீறியதை எண்ணி மனம் நொந்து கொண்டார்.  குருவின் காலடியில் விழுந்து கதறினார்.  நின்பால் அன்பு கொண்டு, ‘நமச்சிவாய வாழ்க’ என்று நின்னைச் சரணைடைந்த எனக்கு, இதற்கும் வழிகாட்ட வேண்டும் என்று மனமுருக வேண்டினார்.

‘ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் மன்னனை வந்து சேரும் எனச் சொல்’ என்று திருவாய் மலர்ந்தருளினார் குரு அமைச்சரிடம்.  அமைச்சரும் அவ்வாறு சொல்ல, குதிரை வீரர்கள் மன்னனிடம் செய்தியை எடுத்துச் சென்றனர்.


நரியைப் பரியாக்கி, பரிகள் மீண்டும் நரிகளாய் காட்டுக்குள் ஓடி, அமைச்சனை மன்னன் பல வகையிலும் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வரச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து, கரையை அடைக்காமல் போக்கு காட்டி, மன்னனால் முதுகில் பிரம்படி பட்டு, அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து - கிழவி வந்தி; அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

குருந்த மரத்தடியில் உபதேசம் கேட்ட அமைச்சர் மணிவாசகர் அப்படி என்ன செய்தார் அங்கே என்று பார்த்தால், குருவாய் வந்த ஆவுடையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்.  குருவாய் வந்த சிவனின் கட்டளைக்கேற்ப, சிவகணங்களை வைத்து ஓரே இரவில் கோயில் கட்டப்பட்டதாகவும் இவ்வட்டார மக்கள் சொல்கின்றனர்.  இன்றும் சில தூண்களில் சிற்பங்கள் முழுமை பெறாமல் பாதியில் நிற்பதை, கோயில் எழுப்பிக் கொண்டிருக்கையில், பொழுது விடிய ஆரம்பிக்கும் பொழுது சிவகணங்கள் அப்படியே விட்டுச் சென்றதால் தான் என்று நம்பப்படுகிறது.  

இக்கோயிலின் சிறப்புக்கள் என்று சொன்னால், சொல்லில் சொல்லி மாளாது.  எடுத்த எடுப்பிலேயே நான்கைந்து மானுடர் உயரத்தில் எழுப்பிய மண்டபம்.  மண்டபத்தைத் தாங்கும் நுண்ணிய வேலைப்பாடுடைய தூண்கள்.  தூண்களில் ஆளுயரச் சிலைகள்.  மணிவாகர், நரியைப் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாக ஓட்டிச் சென்ற சிவபெருமான், மன்னன் அரிமர்த்தனன் ஆகியோருக்கு கற்சிலைகள் உள்ளன.  பக்கத்தே ‘கொடுங்கை’ கூரை.   வரிசையாய் அடுக்கிய மரச் சட்டங்கள், அதைத் கோர்த்திருக்கும் கம்பிகள், இவற்றைத் தாங்கும் ஆணிகள், என வியந்து மேலே பார்த்தால், அனைத்தும் கல்லிலே!!  வெள்ளைகாரன் காலத்தில், ‘இது மரமா, கல்லா?’ எனச் சுட்டுப் பார்த்தததில், அதில் ஏற்பட்ட ஓட்டையைக் கூரையில் இன்றும் காணலாம்.  

பல சிற்பங்கள் எங்கும் காணாத அளவிற்கு தத்ரூபமகாவும், மிகுந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுவது வெகு சிறப்பு.  ஒரு தூணில் இருக்கும் சிலையை எடுத்துக் கொண்டால், தலையில் கொண்டையும், நெற்றியில் பட்டையும், முகத்தில் முருக்கிய அல்லது படர்ந்து பரந்த மீசையும், புன்முறுவலும், கழுத்தில் மணிமாலைகளும், வணங்கும் கைகளும், விரல் நகங்களும், இடையில் வாளும், வேலைப்பாடுகள் பல கொண்ட சுருள் சுருள் அங்கவஸ்திரங்களும், காலில் தண்டையும், இப்படி விவரித்து கொண்டே போகலாம்.  எல்லாச் சிற்பங்களுக்கும் இது பொருந்தும்.   எங்கும் தூண்கள், எதிலும் சிலைகள்.  ‘தாவும் பரியையும் வீரனையும்’ பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.   கடிவாளத்தில் கயிற்றையும், கம்பியையும், கல்லிலே காணலாம்.  

’ஒரு நாள் போதுமா? ’ இக்கோயிலை தரிசிக்க நிச்சயம் போதாது!  பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் ஒரு கலைப் பொக்கிஷம்.  இன்றைக்கும் கோயில் திருப்பணியில் ஈடுபடும் ஸ்தபதிகள், ஆவுடையார் கோயில் அளவிற்கு வேலைப்பாடுகள் எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கையொப்பம் இட்டுத் தங்கள் பணிகளை ஆரம்பிப்பதாகக் கூற்று இன்றும் உண்டு.

மணிவாசகருக்குப் பின், பல சோழர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் இக்கோயிலை விஸ்தாரித்தாகச் சொல்லப்படுகிறது.  பின்னால் எழுப்பிய பல மண்டபங்களே இதற்கு சாட்சி.  மணிவாசகர் கட்டியதாக இதுகாறும் செவி வழியாக நம்பப்பட்டு வந்தது.  சமீபத்தில் அகல்வாராய்ச்சியினர், கோயில் கல்வெட்டு ஒன்றின் மூலம், மணிவாசகர் தான் கட்டினார் என்று நிரூபனம் செய்திருக்கிறார்கள்.  செய்தித் தாள்களிலும் இச் செய்தி வந்திருக்கிறது.

எனது சொந்த ஊருக்கு வெகு அருகாமையில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலை இத்தனை காலம் தரிசிக்காமல் இருந்திருக்கிறேனே என்று என்னை நானை வியந்து கொண்டேன்!  சமீபத்தில் இக்கோயிலுக்குச் சென்று நானிருந்த ஒரு சில மணி நேரங்கள், என் கண்களுக்குப் புலப்பட்ட காட்சிகள் இங்கே புகைப்படங்களாக.