Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

Wednesday, September 9, 2009

சென்னை - 2020ல் ஒரு நாள்


Photo credit: wikimedia.org

"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.

தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது ச‌ந்தீப்புக்கு.

மனைவியும் பிள்ளைகளும் அவர்கள் அம்மா வீட்டில் திருச்சியில் இருக்க, சென்னை அண்ணா சாலையில் அதுவும் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நடந்திருந்தான் சந்தீப்.

இருபது வருடங்கள் அயலகத்தில் எல்லாவற்றையும் ஆன்லைனில் பண்ணி அலுத்துப் போனதால், சொந்த ஊரில், நேரில் சென்று ஒவ்வொரு இடமாகப் பார்க்கவும் இன்று எண்ணியிருந்தான். புர‌சைவாக்க‌ம் வீட்டில் இருந்து கிள‌ம்பி, நண்பன் ஸ்ரீராம் அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகில் ட்ராப் செய்தான். அங்கு கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, மெதுவே நடந்தான். முதலில் விகடன் அலுவலகம். இருபது ஆண்டுகள் முன்னர் எத்தனை முறை சர் சர்ரென்று பைக்கில் இந்த அண்ணா சாலையில் ப‌ய‌ணித்திருப்பான். ஒரு நாள் கூட‌ உள்ளே சென்று பார்க்க‌த் தோன்றிய‌தில்லை. எதிர்பார்ப்பை விட மிக‌ எளிதாக‌வே இருந்த‌து அலுவ‌ல‌க‌ம். இங்கே, இப்ப‌டி, மேலே என‌ ப‌ல‌ர் வ‌ழிகாட்ட‌ ஒவ்வொரு அறையாக‌க் க‌ட‌க்கையில் 'எங்க‌ ம‌த‌ன் உட்கார்ந்திருப்பாரு ? இது ஆசிரிய‌ர் அறையா இருக்குமோ ? யாராவ‌து எழுத்தாள‌ர்க‌ள் பார்க்க‌ முடியுமோ ?' என்றெல்லாம் எண்ணி ந‌ட‌ந்த‌வ‌னுக்கு எதிர்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌டித்த புத்தகங்களில் கணக்கெழுதும் பெரிய‌வ‌ர்களோ அல்லது கையில் சில‌ தாள்க‌ளுட‌ன் அங்கும் இங்கும் சுழ‌ன்ற‌ ஆபிஸ் பாய்க‌ளோ தான். "என்ன‌ங்க‌ அமெரிக்கா ரிட்ட‌ர்ன் மாதிரி இருக்கீங்க‌. புத்த‌க‌ம் வாங்க‌ இங்க‌ வ‌ந்தேங்க‌றீங்க‌. இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சார்" என்றார் ஒரு ஊழிய‌ர்.

அத‌ன் பின் ஹிக்கின்பாத்த‌ம்ஸ். பழைய கட்டடத்தை, சில பல வர்ணங்கள் பூசி புதுப்பித்திருந்தார்கள். 'ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், மிஸ்டரி, ஹாரர்' என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பர அட்டைகள் வைத்து ஒழுங்குபடுத்தி பயமுறுத்தியிருந்தார்கள். 'கிட்ஸ்' செக்ஷன் சென்று ஏழெட்டு வ‌ய‌துப் பிள்ளைக‌ளுக்கான‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை அள்ளிக் கொண்டான். "சார், இதெல்லாம் ரெஃப‌ர‌ன்ஸ் ஒன்லி. உங்க‌ளுக்கு வேண்டும் எனில் ஆன்லைனில் ஆர்ட‌ர் ப‌ண்ணுங்க‌ள்" என்றார் ஏர்ஹோஸ்ட‌ஸ் போல‌ இருந்த‌ இளம் காஷிய‌ர்.

அடுத்து 'எல்.ஐ.சி'யா 'ஸ்பென்ஸரா' என யோசித்தான். 'எல்.ஐ.சி. போனாலும் இதே கதை தான் சொல்வார்களோ ? எதுக்கும் போய் பார்ப்போம், அதன்பின் ஸ்பென்ஸர் சென்று மதிய உணவு முடிக்கலாம்' என எண்ணினான். முத‌ல் மாடியிலேயே, "அதான் ஆன்லைனில் எல்லா விப‌ர‌ங்க‌ளும் இருக்கே !" என்று அனுப்புவ‌திலேயே குறியாய் இருந்த‌ன‌ர். சில‌ மாடிக‌ள் சென்று, த‌ன்னுடைய‌ இருப‌த்திஐந்தாண்டு பாலிஸி ப‌ற்றி சில விபரங்கள் கேட்க, "ஏம்பா, இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ பாலிஸி வ‌ந்து போச்சே, நீ எந்த‌ப் பாலிஸி ப‌ற்றி சொல்றே ?!" என்றார் த‌டித்த‌ ப்ரேம் க‌ண்ணாடிக்குள், த‌வ‌ழும் கோலிகுண்டு க‌ண்க‌ள் கொண்ட‌ பெரிய‌வ‌ர். பாலிஸி எண்ணைச் சொன்னான். குனிந்து நிமிர்ந்து, மானிட‌ரையும், விசைப்ப‌ல‌கையையும் பார்த்து ஒற்றை விர‌லில் ஏதோ த‌ட்டினார். "தெரிய‌ல‌ த‌ம்பி, நீங்க‌ எதுக்கும் ஆன‌லைனில் செக் ப‌ண்ணுங்க‌, ட‌புள்யூ, ட‌புள்யூ....னு அடிச்சு, என்கொயரி ப‌ட்டன் அழுத்தி, உங்க‌ கேள்விக‌ளைக் கேளுங்க, பதில் சொல்வாங்க‌" என்று, ஏழாவ‌து மாடியிலிருந்து த‌ள்ளிவிடாத‌ குறையாக‌ ச‌ந்தீப்பை அனுப்பி வைத்தார்.

ஸ்பென்ஸ‌ர் க‌ஃபேயில் எதிர்பார்த்து வ‌ந்த‌ வெஜி ப‌ஃப் இல்லை, மினி இட்லி இல்லை, வெரைட்டி ரைஸ் இல்லை. எங்கு நோக்கினும், பீட்ஸா, ப‌ர்கர். 'இருபது வருடங்களாக சாப்பிட்டு அலுத்துப் போய், திரும்பவும் இவையா ?' என்று ஒதுக்கி, ம‌ன‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளிலேயே நாட்டம் கொள்ள‌, 'முகுந்தன் இட்லி கடை' ப‌ற்றி ஏற்க‌ன‌வே கேள்விப் ப‌ட்டிருந்தான். அப்போதே நிறைய‌ கிளைக‌ள் தோன்றின‌ சென்னையில்.

ஸ்பென்ஸருக்கு எதிரில் சற்று தள்ளி 'முகுந்தன்' என்று தான் பெயர் பலகை பார்த்தான். உள்ளூர கல்யாண சமையல் ஓட்டமெடுத்தது. சில தூரம் நடந்து, ட்ராஃபிக் லைட்டில் க்ராஸ் பண்ண சாகசம் இன்றி, மேலும் நடந்து, அன்டர்க்ரௌண்ட் கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலும் இருட்டாகவே இருந்தது. வாரயிறுதியில் எப்படியோ, இப்போது கூட்டம் அதிகம் இல்லை. மேசையில் அமர்ந்து காத்திருந்தான். வழக்கம் போல தண்ணீர் டம்ளர் வைத்து, 'ஆர்டர் என்ன சார் ?' என்றார் சீருடை சர்வர். இருபது வருடத்திற்கு அப்புறமும் அப்படியே இருக்கே இந்த முறை. நல்ல வேளை இங்கேயும் ஆன்லைன் என்று சொல்லி அனுப்பிவிடவில்லை என வியந்து மகிழ்ந்தான்.

"ரெண்டு இட்லி கொடுங்க முதலில்" என்றவனை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஏற இறங்கப் பார்த்த சர்வர், "அதெல்லாம் இல்லை சார் என்றார்"

"சரி, தோசையாவது இருக்கா ?" என்றவனுக்கு "இல்லை" என்றே பதிலளித்தார்.

'ம‌திய‌ நேர‌த்தில் வ‌ந்து இட்லி, தோசை கேட்டு இம்ஸை பண்றானே' என்ப‌து போல இருந்த‌து ச‌ர்வ‌ரின் பார்வை.

"சரி என்ன தான் இருக்கு ?" என்றான் ச‌ற்று கோப‌மாக‌.

"பீட்ஸா, பர்கர், லசானியா, ஸ்பெகத்தி, பாஸ்டா, பார்மஜானா சிக்கன், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் டீ, ஹெர்ப் டீ, கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், டாக்ட‌ர் பெப்ப‌ர் ..." என்று சர்வரின் பட்டியலில், கிர் என்று தலைசுற்றி கீழே விழாத குறையில் 'முகுந்தன் பீட்ஸா கடை' மேசையில் சரிந்தான் சந்தீப்.

Wednesday, January 28, 2009

பெய்யெனப் பெய்யும் (ஆலங்கட்டி) மழையும், கொசுவர்த்தி சுருளும் ...


Photo: hodgman.org.jpg

மேற்கிலிருந்து கிழக்குவரை, அமெரிக்கா முழுதும் இப்ப ஹீரோ 'ஐஸ் ஸ்ட்ராம்' ஆலங்கட்டி அவர்கள் தான் !!!

திங்கள் மதியத்திலிருந்து ஆரம்பித்து, செவ்வாய் இரவு வரை ஆலங்கட்டியின் ஆதிக்கம், இன்று மென்பனியாய் (snow தாங்க) மாறி இன்னும் கொட்டுவதை செய்திகளில் பார்த்தால் எண்ணில் அடங்காது.

பாலம் பாலமாக, வீட்டுக் கூரையிலிருந்து, மரக் கிளைகள் படர்ந்து, தரையில் உதிர்ந்து, வெண் தார்ச் சாலை நிரப்பி ... (படங்கள் இங்கே)

வீட்டில் இணையம் வேலை செய்யாததால், இன்று ஆணிபுடுங்க அலுவலகத்துக்கு வரும்படி ஆகிவிட்டது. வழியெல்லாம் வெண்மை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' பாடல் தான் மனசுக்குள் மத்தாப்பாய். மெதுவே வண்டியை கராஜிலிருந்து எடுத்து, பின் ஐஸ்கட்டியிலேயே பயணித்து, பத்து பதினைந்துக்கு மேல் ஓட்ட முடியவில்லை. ஒரு சாலை விளக்கு நிறுத்தத்தில் எதிரே வந்த ஜீப், ப்ரேக் பிடிக்க, அப்படியே வழுக்கியதை பார்த்தபோது நமக்கு நெஞ்சம் உறைந்து போனது .... நல்ல வேளைக்கு ஒன்றும் ஆகவில்லை.

ரெண்டு நாளா வெளியில் எங்கும் போக முடியவில்லை (அலுவல் தவிர). வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. பத்தாதற்கு பவர் கட் வேற. முதல் வார்த்தை தங்க்ஸ் சொன்னது "ஐயோ ஃப்ரீஸர்ல‌ இருக்கதெல்லாம் என்னாகுமோ ?!!!" என :))) 'எதுக்குக் கவலைப் படறே, ஃப்ரிட்ஜை விட வெளியில் எடுத்துப் போட்டா இன்னும் பத்திரமா இருக்கும்' என்றேன். அந்த அளவிற்கு ஐஸ் வெளியே !!!!

'பட்டால் தான் தெரியும் பகலவனுக்கும் சூடு' என்பது போல். 'பவர் கெட்டால் தான் தெரியும் முன்னேற்பாடு' என்கிற மாதிரி (இதெல்லாம் யாரு சொன்னாங்கனு கேக்கக்கூடாது), நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி கூட சட்டுனு கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை :(((

வொய்ங் வொய்ங் வொய்ங் (டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள்கிறது) ...

ஊரில் ஹரிக்கன் விளக்கு இருக்கும். பாட்டி துடைச்சு துடைச்சு வைத்திருப்பார். தங்கம் போல் மினுமினுக்கும். கோடைகாலங்களில் (அப்ப இருந்தே) கரண்ட் போயிடும் என்று, சாயந்திரம் வெளிச்சம் குறையும் நேரத்தில் ஒரு நாலஞ்சு விளக்கு ஏற்றி, அங்கங்க‌ வைப்பார் தினம். காலை வரை எரியும் அவை.

சளைக்காம ஏத்தறாங்களே என்று பார்த்தால், பின்னர் புரிந்தது அவர்கள் காலத்தில் தான் தீப்பந்த விளக்குகளில் இருந்து மின்சார விளக்குகளுக்கு ட்ரான்ஸிசன் ஆனார்கள் என‌. அதனால் விளக்கு ஏற்றுவது அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்திருக்கிற‌து அவர்களுக்கு.

எங்க‌ள் ஊர் வீடுக‌ளில், உள் வாச‌ல் ந‌டுவில், ஒரு சிறு க‌ல்தூண் இருக்கும். மேலே சிறு குழியும் இருக்கும். ம‌ழைகால‌ங்க‌ளில் நீர் நிறைந்தும் இருக்கும். ப‌ள்ளி கால விடுமுறையில் ஊருக்கு போகும்போதெல்லாம், விளையாட்டில் அந்தத் தூணைச் சுற்றி சுற்றி வ‌ருவோம். அது ஏன் அங்க‌ நிற்கிற‌து என்றெல்லாம் தெரியாது.

அந்த‌கால‌த்து செய‌ல்க‌ளுக்கு எந்த‌கால‌த்திலும் ஒரு கார‌ண‌ காரிய‌ம் மெய்பிக்க‌லாம். ஆன்மிக‌ம் இதில் அடங்குமா என‌த் தெரிய‌வில்லை. அந்த‌ அள‌விற்கு எனக்கு இன்னும் வ‌ய‌தாக‌வில்லை :))) ஆனா இந்த‌ கால‌த்து செயல்க‌ளுக்கு ஒரே வார்த்தை, 'ஃபேஷ‌ன்' :)) ஏன், எதுக்கு எல்லாம் சுத்தமாத் தெரியாது.

'இது ஒவ்வொரு வீடுக‌ளுக்கு உள்ளும் உள்ள‌ விள‌க்குத் தூண்' என்று தாத்தா சொல்வார்க‌ள். மின்சாரம் வருவதற்கும் முன், பெட்ட‌ர்மாக்ஸ் விள‌க்கெல்லாம் வ‌ருமுன்னே, க‌ண்ணாடிக் குடுவையுள் விள‌க்கேற்றி, அதை இந்த‌த் தூணில், அந்தச் சிறு குழியில் நிறுத்தி விட்டால், வாச‌ல் முழுதும் இரவு பிர‌காசிக்குமாம்.

மின்சார விளக்குகளின் ஆதிக்கம் வந்த பின்னாளில், இத் தூண்க‌ள் துணி உல‌ர்த்தும் கொடி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌ட்ட‌து, ப‌டுகிற‌து :)))

பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌தைக‌ள் கேட்க‌ அப்பொழுது பொறுமையும் இல்லை, ஒரே இட‌த்தில் உட்கார்ந்திருக்க‌ வ‌ய‌தும் இல்லை. எப்ப‌ ந‌ம்மைப் பிடித்து உட்கார‌ வைத்தாலும், சில‌ நொடிக‌ளில் விடு ஜூட் தான். இருந்தாலும், பிடிக்குதோ இல்லையோ, நிறைய‌ சொல்லியிருக்கிறார்க‌ள். இன்று அவர்கள் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் ...

சின்னஞ் சிறுக‌தைக‌ள் பேசி
சிரித்து உற‌வாடி,
அன்பின் பெருக்கத்தில்
அரவணைக்கப் பெற்று,
சிந்தை ம‌கிழ்ந்து
செழிப்புற் றிருப்போம் ...

இந்த‌ ஒரு நெருக்க‌ம் அப்பா, அம்மாவிட‌ம் இல்லாதது இன்ற‌ள‌வும் ஆச்ச‌ரிய‌மே !!!!

Friday, June 20, 2008

ஓம் ப்லாகாய நமஹ !



சுருக்காக, நறுக்கென்று மணிரத்னத்தின் திரைக்கதை வசனங்கள் இருந்தாலும், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டா' என்பதை தமிழ்கூறு நல்லுலகம் மறக்க வாய்ப்பேயில்லை.

என்ன தான் மறுபாதி, என் உசுரு, செல்லம் என்றெல்லாம் நெய்யாய் உருகினாலும், தங்கமணி தனியா ஊருக்குப் போறாங்க என்றால் ரங்கமணிகளுக்கு வெண்ணெய் போல் கொண்டாட்டம் தான். உதாரணம் மேற்கூறிய திரைப் படத்தில், ஜனகராஜ் அவர்கள், ரங்கமணிகளின் மனோபாவத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்.

அது ஏன், எப்ப‌டி என்றெல்லாம் நாம் இங்கு அல‌சப் போவ‌து இல்லை. மாறாக‌ அவ‌ர்க‌ள் ஊருக்கு செல்லும்போது என்ன‌வெல்லாம் சொல்லிச் செல்வார்க‌ள் என‌க் கொஞ்சூண்டு பார்ப்போம். வழக்கம் போல,

  • மறந்திடாதீங்க யுடிலிட்டி பில், ஃபோன் பில் இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில கட்டணும்.
  • வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க.
  • ரெண்டு வாரத்துக்கு மாவு ஆட்டி ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஊத்திக்கங்க.
  • புளி, லெமன் இதெல்லாம் காய்ச்சி வச்சிருக்கேன். சாதம் மட்டும் வச்சிக்கிட்டாப் போதும்.
  • தினம் டாய்லட் வெறும் தண்ணில மாப் பண்ணுங்க, வாரம் ஒரு முறை சோப் போட்டு கழுவுங்க‌.
  • ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வேக்கு(வ)ம் போடுங்க.
  • இந்த அளவு தண்ணி, இந்த அளவு சோப்பு. அப்புறம் நார்மல் ட்ரை செலக்ட் பண்ணிக்கங்க வாஷிங்க் மெஷின்ல, உங்களுக்கு கொஞ்ச துணி தான் இருக்கும்.
  • தூங்கும்போது எல்லா லைட்டும் அனைச்சிருக்கோமா, அடுப்பெல்லாம் அனைச்சிருக்கோமானு ஒரு தரம் பாத்துட்டு படுங்க.
  • மறக்காம டி.விய ஆஃப் பண்ணிடுங்க.
  • (எந்த உள்குத்தும் இல்லாமல்) நான் இல்லையே என்று வருத்தமெல்லாம் படாதீங்க, கொஞ்ச நாள் தான், வந்திருவேன்.
இவ்வளவு வேலையும் செய்யும் தங்கமணிகள் தனியே ஊருக்குப் போகிறார்கள் என்றால் ரங்கமணிகள் வருத்தம் அல்லவா படவேண்டும் !!!! யோசிக்கணும் :)

இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம, வெளில போய் ஃப்ரெண்ட்ஸோட தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு, கொஞ்சம் வெளி உலகிலும் இருங்க என்று =;)

Wednesday, June 11, 2008

வானமே எல்லை !


Photo courtesy: msn.com

ஹலோ பென், வணக்கம். என் பேரு ...

எந்த நுழைவு வாயிலுக்குப் போகணும் நீங்க.

மெயின் என்ட்ரன்ஸ்.

சரி, இப்படி வாங்க. என்ன பிடிச்சிக்கறீங்களா ?

ஓ, ரொம்ப தேங்க்ஸ்.

நுழைவு வாயிலுக்கு செல்ல எண்ணி, குச்சியைத் தட்டிக் கொண்டே வேறு திசையில் பயணித்து, தண்ணீர் பைப்பில் கால் தடுக்கிய போது, அவருக்கு சில நொடிகள் உதவ முடிந்தது என்னால்.

பார்வையற்ற சகோதரரான பென் போன்று நிறைய பேர் அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். ஆனால் இது போல் நுழைவு வாயிலுக்குச் செல்வதற்கு தயங்கி நான் பார்த்ததில்லை. புதிதாகச் சேர்ந்திருப்பார் என எண்ணிக் கொண்டேன்.

கதவை நெருங்குகிறோம், இப்படி வாங்க என்று நன்றாக கதவைத் திறந்து விட்டேன்.

சில அடிகளில் ம‌ற்றொரு க‌த‌வையும் தாண்டினோம்.

இப்ப செக்யூரிட்டிக்கு முன்னால இருக்கிறோம். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்.

இனி நான் போய்க் கொள்வேன். இந்த DVD ட்ராப் பண்ணிவிடுகிறீர்களா ?

ஓ, தாராளமாக என்றேன்.

அது வரை நின்று, மெஷின் க்ர்ர்ர், ச்ச்ச்க் என்ற DVD விழுங்கும் சத்தம் கேட்டு, மிக்க நன்றி நண்பரே என விடை பெற்றார் பென்.

எனக்குள் ஓராயிரம் கேள்விகள். ஒன்றே ஒன்று மட்டும் கேட்டேன் அவரிடம்.

தவறாக எண்ண வேண்டாம், பதில் சொல்ல இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களிடம் ஒரு கேள்வி கேக்கலாமா என்றேன்.

இந்த DVD எப்படி பார்ப்பீர்கள் என்றேன்.

பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு அவரிடமிருந்து.

நான் எப்படிப் பார்ப்பேன், என் குழந்தைகள் பார்ப்பார்கள் !!!

அப்ப உங்க மனைவி இந்த வேலை எல்லாம் செய்யலாமே ?

ஏன் ப‌ண்ணாம‌ல், இன்னிக்கு என்னோட‌ ட‌ர்ன் என்றார்.

பென்னின் மனைவியும் பார்வையற்றவர் என அறிந்து அதிர்ந்து நின்றேன்.

சில விநாடிகள் சிந்தனையில் மனம் பறந்தது ...

இதிலிருந்து, பென் ஒரு நிறைவான‌ வாழ்க்கை வாழ்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிற‌த‌ல்லவா ?!!!

நமக்கு எல்லாம் இருந்தும், நம்மை நாம் குறுக்கிக் கொள்கிறோமோ ?!! நான் இவ்வளவு தான், என்னால் இவ்வளவு தான் முடியும், இதுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பெர்சன்ட் கூட எதிர்பார்க்காதீங்க என்றெல்லாம் !!!!

Thursday, May 15, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 2)



பெண்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவ்வகுப்பில் கலக்கிய ஆண்கள் சிலரின் பேச்சுக்களைப் பார்ப்போம்.

-----

"இருபது வருடங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து, தற்போது மாற்றலாகி இங்கு வந்திருக்கிறேன். வந்த சில மாதங்களாகவே எனது பதினேழு வயது மகன், தினம் என்னிடம், 'ஏன்ப்பா இங்க வந்தீங்க ? நம்ம பழைய வீட்டை மறக்க முடியவில்லை, எனது பழைய பள்ளியை மறக்க முடியவில்லை, பழைய நண்பர்களை மறக்க முடியவில்லை ... எனக்கு இங்கு இருக்க துளியும் பிடிக்கவில்லை' என முறையிடாத நாள் கிடையாது.

திடீரென்று அவன் ஒரு நாள் வந்து, "ஏன்பா இத்தனை நாள் இங்கு வராமல் இருந்தீர்கள்" எனக் கேட்க, என்னுள் தாளமுடியாத வியப்பு !!!

ஆமாம்பா, அவள் பெயர் ரோஸி. மிகவும் நல்லவள். என்னை ஆண் நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என அவன் மேலும் கூற, சந்தோசம் வீட்டை நிரப்பிய‌து.

சில மாதங்களுக்குப் பின், "Dad it got broken, she got a new boy friend" என விசும்பி விசும்பி சிறு குழந்தைபோல் அழ ஆரம்பித்து விட்டான். பதினேழு வயது வாலிப மக‌ன் அழுவதை என்னால் தாங்க முடியவில்லை. சொல்லுங்கள், எந்தத் தந்தையால் தான் தாங்க முடியும்.

பிறகு அவனுக்கு சில விளக்கங்கள் அளித்தேன். வாழ்வில் எதுவுமே நடைபெறலாம். எல்லாவற்றையும் எதிர் கொள்ளப் பழகிக் கொள். ரோஸி இல்லையென்றால் வாழ்வு நின்று போய்விடாது என அவனைத் தேற்றி ஆறுதல் படுத்தினேன்." என்றார் நாற்பதுகளின் முடிவில் இருக்கும் ஒருவர்.

-----

"பிறப்பால் அனாதையான (!) நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அது அந்தக் கடவுளின் கருணை தான் என ஆரம்பித்தார் ஒருவர். சிறு வயதில் ரோட்டோரங்களிலும், பாலங்களுக்கு கீழேயும் படுத்துறங்கி, பல நாட்கள் (ஒரு முறை தொடர்ந்து பத்து நாட்கள்) தண்ணீரை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு அலைந்தேன்.

நமக்கு வாழ்வே அவ்வளவு தான். இனி ஒன்னும் செய்வதற்கில்லை என்ற நிலையில் தான் இருந்தேன். ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என‌ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் பெரிய ஊரான டெக்ஸாசிற்கு வேலை தேடிப் போனேன். கையில் இருந்த சொற்ப பணமும் கறைந்து போனது தான் மிச்சம். படிக்காதவனுக்குப் பிடிப்பேது !!!

பின் எங்களூரில் இருக்கும் சர்ச்சில், ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கெஞ்ச, சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள். சர்ச்சுக்கு வரும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராவது பணம் கொடுப்பார்கள். எனக்கு எஞ்சினியரிங் படிக்க ஆசை. சர்ச் நிர்வாகமும் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பண உதவி செய்தது. அவற்றை சேர்த்து வைத்து, எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். நாள் ஒன்றுக்கு இருபது மணிநேரம் படிப்பிற்கு செலவிட்டேன். டிகிரி வாங்கி இப்போது இதோ நல்ல நிலையில் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்த இறைவன் எனக்கு இட்ட பிச்சை" என கலக்கலாக முடித்தார்.

-----

என் பெண் நண்பி ஒரு நாள் திடீரென்று கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார். டாக்டர்களோ, அவள் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்றார்கள். இடுப்பில் ஒரு ஸ்டீல் ப்ளேட் வைத்து முதுகெலும்பு வரைக்கும் சர்ஜரி வேறு. மனதொடிந்திருந்த நிலையில் இருந்த அவளுக்கு முடிந்த வரை அனைத்து உதவியும் செய்யலானேன். சில நாட்களிலேயே மெதுவாக என்னைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். தினமும் சில மைல் தூரங்களாவது ஓடாமல் இருக்க முடியாது என்னால். நடக்க ஆரம்பித்த என்னவளை மெல்ல ஜாகிங் வரை இழுத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக தினம் ஜாகிங் செய்து, இப்போது சில வாரங்களிலேயே, அவள் என்னுடன் சகஜமாக கூட ஓடி வருகிறாள் என்றார் முப்பதுகளில் இருக்கும் வாலிபர் ஒருவர்.

இது என்ன பெரிய விசயம் என்கிறீர்களா ? இந்த வாலிபர் ஊனமுற்றவர் (குறிப்பாக கால்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

-----

இது யாருக்கு யாரு போட்டி என்று இல்லாமல் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவே இந்த இரு பதிவுகளும். வந்து வாசித்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி. திருவிளையாடல் படம், சிவம், சக்தி ... இதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Friday, May 9, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 1)



Photo courtesy : electricwarrior.com

சமீப‌த்தில் அலுவல் மூலம் க‌ல‌ந்து கொண்ட‌ ஒரு வ‌குப்ப‌றையில், மற்றவர்களுக்கு நீங்கள், அல்லது உங்களுக்கு மற்றவர் inspiration-ஆக இருந்த தருணங்கள் ப‌ற்றி இர‌ண்டு நிமிட‌ம் பேச‌ வேண்டும் என்றனர். நாற்ப‌து பேர் கொண்ட‌ வகுப்பறை அது. பெண்க‌ளும், ஆண்க‌ளும் எண்ணிக்கையில் ச‌ம‌ விகித‌த்திலேயே இருந்த‌ன‌ர்.

அப்பா, தாத்தா, பாட்டி, க‌ண‌வ‌ன், ம‌னைவி, குழ‌ந்தைக‌ள் என‌ தங்க‌ள் inspiration ப‌ற்றி பெண்களும், ஆண்களும் சுவார‌சிய‌மாக‌ப் பேசினாலும், இங்கு வாழும் நிறைய‌ பெண்ம‌ணிக‌ள் ப‌ரிதாப‌த்திற்கு உரிய‌வ‌ர்க‌ளாக‌வே வாழ்கிறார்க‌ள் என‌லாம்.

பேசிய முக்கால்வாசி பெண்கள், திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள் !!! இதெல்லாம் இங்கே சகஜம் தானேப்பா என்பவர்கள் மேலும் பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பெண்களின் inspiration கதைகள் கூட்டத்தினரை வெகுவாகக் கட்டிப் போட்டது. பெயர்கள் தவிர்த்து, அவர்கள் கூறிய சம்பவங்களின் சாரம் கீழே.

-----

"எங்களுக்குத் திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. பத்து வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் இருக்கின்றனர். சில வருடங்கள் முன்பு என் கணவரின் நடத்தையில் சில மாற்றங்கள் உணர்ந்தேன். மெல்ல மெல்ல அவரை தொடர்ந்து கண்காணித்ததில், அவருக்கு ஒரு பெண் அல்ல, பல பெண்களின் சகவாசம் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனேன் !

எனக்குத் தெரிந்துவிட்டது என அவர் துளியும் கவலைப் படவில்லை. இப்ப என்ன செய்யணும் என்கிறாய் என விவாதித்து மிரட்டினார். அவர் வெளிப்படையாக அவரின் தொடர்புகளை என்றும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் எனது மகன்களுக்குத் துளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன செய்யலாம் எனப் பல மாதங்கள் யோசித்து, இருவரும் பேசி விவாகரத்து செய்யலாம் என முடிவு செய்தோம். முக்கியமாக எனது குழந்தைகளுக்கு அவரின் நடத்தை தெரிந்து விடக்கூடாது என அவரிடம் தீர்மானம் வாங்கிக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு, இது தான் காரணம் என, நானும் இதுவரை கூறவில்லை.

என் வாழ்வில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என் குழந்தைகள் தான் இனி என் உலகம். அவர்கள் வளர்ந்து பெரிவர்களாகி வாழ்வில் உயர நான் அவர்களுக்கு நல்ல‌ inspiration-ஆக இருப்பேன். நான் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறேன், மகன்களையும் சந்தோசமாய் வளர்த்து வருகிறென்." என முடித்தார் ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌யதுப் பெண்ம‌ணி.

-----

பின் ஒரு இளம்பெண் தனது கதையைக் கூறினார்.

"இரண்டு அக்காக்களுடனும், ஒரு தம்பியுடனும் பிறந்தேன். எனது பெற்றோர் சில ஆண்டுகள் முன்னர் விவகாரத்து செய்து கொண்டனர். அக்காக்களுக்கு திருமணம் ஆகி வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நானும் எனது தம்பியும் அம்மாவுடன் வசிக்கலானோம். சில மாதங்களில் அம்மா மறுமணம் செய்து கொள்ள, வழியறியாச் சிறுவர்களாக இருந்த எங்களை தந்தையே அழைத்துச் சென்றார்.

தாயில்லா இடத்தில், தம்பியின் வாழ்வு திசை திரும்பியது. சேரக்கூடாத சேர்க்கை, போதை வஸ்து, பள்ளிக்கு முறையாகச் செல்லாமல் வெளியேற்றம். இந்த நிலையில் தந்தை ஒருநாள் நோய்வாய்பட்டு கோமாவில் இறந்து போனார். அம்மாவிற்கு இது பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் எங்களைக் கவணித்துக் கொள்வார் என நம்பிக்கை இல்லை.

அப்பொழுது கல்லூரி முடித்து, ஒரு சிறிய அலுவலகத்தில் வேலையும் பார்த்தேன். தாய், தந்தையின் இழப்பைக் காட்டிலும் எனது தம்பியின் நிலை மிகுந்த மன வருத்தத்தை தந்து கொண்டே இருந்தது.

தந்தை இறந்த அன்று, அவனிடம் நீ இப்படியே இருக்க விரும்புகிறாயா அல்லது என்னுடன் வருகிறாயா ? என்றேன். அவனுக்கு அப்பொழுது பதினாறு வயதிருக்கும். சம்மதம் என்றான். சில நிபந்தனைகள் சொன்னேன். சரி என்றான்.

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டேன். கெட்ட நண்பர்களை வெட்டி எறியச் சொன்னேன். கிடைக்கும் வேலையை ஏற்கச் சொன்னேன்.

இன்று அவனுக்கு வயது இருபத்தி ஒன்று. கெட்ட பழக்கங்கள் துளியும் இல்லை. நல்ல வேலையில் இருக்கிறான், போன மாதம் திருமணம் கூட செய்து கொண்டான். ஒரு தாயாய், தந்தையாய் இருந்து தம்பிக்கு நல்ல inspiration-ஆக இருக்க நினைத்தேன், இருந்தும் காண்பித்தேன் " என டச்சிங்காக முடித்தார் அச்சகோதரி.

-----

"என் மாமியார் தான் எனக்கு inspiration" என்று அசத்தலாய் ஆரம்பித்தார் முன் ஐம்பதுகளில் இருந்த‌ மாது ஒருவர். சில நொடிகள் தான், பொல பொல என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவற்றை அடக்கிக் கொண்டு, தழுதழுத்த குரலில் தொடர்ந்தார்.

"என் பெற்றோர் விவாகரத்து செய்து கொள்ள, சிறு வயதிலேயே தனிமைப் படுத்தப்பட்டேன். திருமணமாகி இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றது. திருமணம் ஆன முதல் நாள் முதல் இன்று வரை என் கணவர் என்னிடம் அன்பாய் நடந்து கொண்டதில்லை. நிறைய அடிப்பார் (இந்த அமெரிக்கவிலா என சற்று வியப்படையச் செய்ய வைத்த சொற்கள்), சண்டை பிடிப்பார். எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டு அவருடன் வாழ்வதற்குக் காரணம் எனது மாமியார் தான்.

மிகுந்த depression-ல் பெற்றோரில்லாமல் தவித்த எனக்கு, குடும்பம், குழந்தைகள், சுற்றம், நட்பு என எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கி ஒரு தோழியாகவே வாழ்ந்தார். (இவருக்குப் போய் என் கணவர் குழந்தையாய் பிறந்தது இன்றும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.) புற்று நோயாளியான எனது மாமியார், அறுபத்தைந்து வயது வரை, பிறருக்கு சிரமங்கள் கொடுக்காமல், தாமாகவே எல்லா காரியங்களையும் செய்து, சில மாதங்கள் முன்னர் இறந்து போனார். நான் இடிந்து போனேன்" என நம்மையும் கலங்க வைத்தார்.

-----

மற்றும் சில பெண்கள், தங்கள் குழந்தைகளுக்காக‌ மறுமணம் செய்து கொள்ளாமலும், அவர் தம் கணவர்கள் மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இங்கு பேசிய பல ஆண்களின் கருத்துக்களும் வியப்படையவே செய்தன. பதிவின் நீளம் கருதி (நன்றி: சுப்பையா வாத்தியார்) அவை அடுத்த பகுதியில்.

Monday, March 3, 2008

அபார்ட்மென்ட் எண் 26



மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ?

என்ன‌டா விசேச‌ம் ?

நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம்.

இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட நம்ம‌ வீட்டுக்கு விருந்துக்கு வர‌ சொல்லுங்க" என்று ர‌ம்யா சொன்னா !

எதுக்குடா இந்த பார்மாலிட்டி எல்லாம் !

அதெல்லாம் ஒன்னும் இல்ல. சரி சரி மறக்காம‌ சனிக்கிழமை ஆறு மணி போல வந்திரு. திருப்பியும் உனக்கு ரெண்டொரு நாள் முன்னால ஞாபகப்படுத்தறேன்.

வெள்ளிக்கிழமை அலுவலக நேரத்தில், சந்துருவைக் கூப்பிட்டு நாளை விருந்தை நினைவு படுத்தினேன்.

இந்தா இது தான் எனது அபார்ட்மென்ட் முகவரி. நேரா ஏர்போர்ட் ரோடுல வந்து, ஒரு ரெண்டு மைல் தள்ளி, இடது பக்கம் திரும்பும் "க்ரீன் மெடோஸ்" சாலைல திரும்பி ஒரு அரை மைலில், வலது புறம் இருக்கு அபார்ட்மென்ட். அபார்மென்ட்‍ உள்ள, அப்படியே கடைசி வரை வந்து வலது புறம் ...

நிறுத்து, நிறுத்து. வண்டிய விட வேகமா சொல்லிக்கிட்டே போறே ! நாங்க பத்து வருசம் இருக்க ஊர்ல, இப்ப வந்திட்டு, எங்களுக்கேவா !!!

இல்லடா, எதுக்கும் உனக்கு சுளுவா இருக்கட்டும்னு தான். நீ வ‌ந்திட்டு கால் ப‌ண்ணு, நான் வெளியில‌ வ‌ந்து நிக்க‌றேன்.

அடப்போடா ! நாங்கள்ளாம் எத்தன அபார்ட்மென்ட் பார்த்திருப்போம் ! நீ கவலைப்படாத, அதெல்லாம் நாங்க கரெக்டா வந்திருவோம்.

சனிக்கிழமை வழக்கத்தையும் விட குளிர் கடுமையாக இருந்தது. குளிர்காலம் ஆதலால் வெளிச்சம் சீக்கிரமே விடைபெற்று, சாயந்திரம் ஆறு மணிக்கே, கரியாய் அப்பியது இருள்.

ஏழு மணியாகியும், சந்துருவையும் அவன் குடும்பத்தாரையும் காணவில்லை. வீட்டில் பிள்ளைகள், கதவுப் பக்கம் ஒரு கண்ணும், தொலைக் காட்சியில் மற்றொரு கண்ணும் வைத்து, "சந்துரு மாமா எப்ப வருவாரு" என்று சதா நைத்துக் கொண்டிருந்தன.

இந்திய நேரப்படி ஆறு மணி என்பது, ஒரு எட்டு அல்லது ஒன்பது என்று நினைத்து வருவான் போல என்று எண்ணினேன்.

செல்லில் சந்துருவை அழைத்து, என்ன மாப்ள இன்னும் ஆளக் காணமே என்றேன். "இதோ வந்திட்டோம், அபார்ட்மென்ட் உள்ள வந்திட்டே இருக்கோம்" என்றான்.

*****

காரிருளில், ஆங்காங்கே மினுக் மினுக் என்று சிறிய ஒளிக் கசிவில், பரந்திருந்தது அபார்ட்மென்ட். நினைத்ததை விட அதன் வளாகம் பெரிதாய் இருப்பதை உணர்ந்தான் சந்துரு. நேரா வந்து, கடைசியில் வலது புறம் திரும்ப சொன்னானே ! திரும்பியாச்சு, அதோ அங்கே இருக்கு கட்டிடம் 4908. ஒரு ஓரமாக வசதியாய், பார்க் செய்தான் சந்துரு.

படபடக்கும் குளிர் காற்றில் மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் கட்டிடத்தின் நான்கு வாயில்களில், மூன்றாவது வாயில் வரை, மூன்று மாடிகளையும் ஏறிப் பார்த்துக் களைத்து ...

*****

"என்னடா பண்ற ?, ஏழு மணிக்கே அபார்ட்மென்ட் வந்திட்டேன் என்று சொன்னாயே ! கால் மணி நேரத்திற்கும் மேல ஆச்சு, எதாச்சும் ப்ரச்சனையா ?" என்று சந்துருவைக் கேட்டேன் செல்லில்.

படக்கென்று செல்லைக் கைப்பற்றி, "ஏங்க, உங்க விலாசத்துக்கு சரியா எப்படி வர்றது என்று சொல்றதில்லையா ?" என்று கோபித்துக் கொண்டாள் சந்துருவின் மனைவி கமலா.

இப்ப எங்க இருக்கீங்க ?

...

ஓ, அது அப்படியே பின்னாடி இருக்க பாதை. சரி கீழ இறங்கி வாங்க‌

...

4908 முன்னால வந்து, இடது மூலைல, கதவு எண் ஆறு, பார்கறீங்களா

...

அதுக்கு மேல பாருங்க, மங்கலான வெளிச்சத்தில் பதினாறு

...

அதுக்கும் மேல இருக்க இருபத்தி ஆறு தான்.

...

இதோ இங்க, என்று கதவைத் திறந்து கைகாட்டினேன். கீழே சந்துருவை கமலா கொஞ்சுவது மேலிருந்து தெளிவாகத் தெரிந்தது.

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

அலை கடலெனக் கூட்டம் திரண்டு கலை கட்டுகிறது மாட்டுச் சந்தை. மக்களின் கூச்சலோடு, மாக்களின் கத்தலும் காதை அடைக்கிறது. கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் ... மன்னிக்கவும், கேட்டால், வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு.

"இந்தச் சந்தையிலயாவது நாம ஒன்னு ரெண்டு மாடாவது வாங்கிப்புடணும்ணே" என்று கூவிக் கொண்டு, அக்கூட்டத்திலும் செல்வராஜை விடாது பின் தொடர்ந்தான் வேலப்பன்.

தூரத்தே ராமதுரை இரு காங்கேயம் காளைகளுடன் நின்றிருந்தார். உழைத்துக் களைத்த மாடுகளாய் நின்று கொண்டிருந்தன அவை. ஏண்ணே, ஒழச்சதெல்லாம் பத்தாதுன்னு, விக்க வேற வந்திட்டிங்களா ? பாருங்க எவ்வளவு பாவமா நிக்குதுக ரெண்டும் என்று ஆரம்பித்தான் செல்வராஜ்.

அதற்கு ராமதுரை, "ஒனக்கு ஏன்டாப்பா இத்தன அக்கற ? இந்த வெரைட்டி ஒழைக்கறதுக்குனே பொறந்ததுகடா. மத்த ஜாதி மாதிரி இத்தன வருசமினு இல்ல, சாகறவரைக்கும் ஒழைக்குமாக்கும்" என்றார் பெருமிதத்துடன் !

"அப்புறம் எதுக்கு விக்கறீங்க" என்று கிடைத்த கேப்பில் சிந்து பாடினான் வேலப்பான்.

ராமண்ணே, எம்புட்டு போகுது என்று நடந்து கொண்டே கேட்டாள் சின்னத்தாயி. ஏத்தா, ஒங்க ஊட்டுல இல்லாத மாடுகளா, நீ என்னாத்துக்கு கேக்குற என்றார்.

அதானே, நாங்கள்லாம் அப்புறம் எப்ப....டி மாடு வாங்குறது என்று இழுத்தான் செல்வராஜ்.

எப்ப 'டி'யா ? சந்தைக்குள்ள வந்து என்ன இடிச்சி தொந்தரவு பண்றேனு ஒரு வார்த்த சொன்னப் போதும், என்ன நடக்குமினு தெரியுமில்ல ... என்று மிரட்டினாள். மாட்ட வாங்க வந்தமா, போனமானு இருக்கனும். சண்டை பிடிச்சிக்கிட்டு இருந்தா வேற எவனாவுது வாங்கிட்டு போய்டுவான், இது கூட தெரியாம ... அய்யே.... என்று இழுத்தாள் சின்னா.

அப்போது அங்கு வந்த கணேசன், ராமதுரையுடன் துண்டில் கை மறைத்து விலைபேசி முடித்துவிட்டார்.

-----

மேலே உள்ள கதையை இப்போதுள்ள நடைமுறை வாழ்வில் ஒரு துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதா ?

உங்கள் ஒப்பிடுதலுடன் வந்த துறையுடன், கீழுள்ள வெண்பா (மாதிரி) பொருந்துகிறதா என்று பாருங்கள்.

பணம் பண்ணப் பணிந்து நல்ல
மனம் தன்னை இழந்து - கண்ட
காட்சி தனில் மிதந்து அன்பிலா
மாட்சியில் மறையுதே குணம்.

-----

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !