Wednesday, January 28, 2009

பெய்யெனப் பெய்யும் (ஆலங்கட்டி) மழையும், கொசுவர்த்தி சுருளும் ...


Photo: hodgman.org.jpg

மேற்கிலிருந்து கிழக்குவரை, அமெரிக்கா முழுதும் இப்ப ஹீரோ 'ஐஸ் ஸ்ட்ராம்' ஆலங்கட்டி அவர்கள் தான் !!!

திங்கள் மதியத்திலிருந்து ஆரம்பித்து, செவ்வாய் இரவு வரை ஆலங்கட்டியின் ஆதிக்கம், இன்று மென்பனியாய் (snow தாங்க) மாறி இன்னும் கொட்டுவதை செய்திகளில் பார்த்தால் எண்ணில் அடங்காது.

பாலம் பாலமாக, வீட்டுக் கூரையிலிருந்து, மரக் கிளைகள் படர்ந்து, தரையில் உதிர்ந்து, வெண் தார்ச் சாலை நிரப்பி ... (படங்கள் இங்கே)

வீட்டில் இணையம் வேலை செய்யாததால், இன்று ஆணிபுடுங்க அலுவலகத்துக்கு வரும்படி ஆகிவிட்டது. வழியெல்லாம் வெண்மை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' பாடல் தான் மனசுக்குள் மத்தாப்பாய். மெதுவே வண்டியை கராஜிலிருந்து எடுத்து, பின் ஐஸ்கட்டியிலேயே பயணித்து, பத்து பதினைந்துக்கு மேல் ஓட்ட முடியவில்லை. ஒரு சாலை விளக்கு நிறுத்தத்தில் எதிரே வந்த ஜீப், ப்ரேக் பிடிக்க, அப்படியே வழுக்கியதை பார்த்தபோது நமக்கு நெஞ்சம் உறைந்து போனது .... நல்ல வேளைக்கு ஒன்றும் ஆகவில்லை.

ரெண்டு நாளா வெளியில் எங்கும் போக முடியவில்லை (அலுவல் தவிர). வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. பத்தாதற்கு பவர் கட் வேற. முதல் வார்த்தை தங்க்ஸ் சொன்னது "ஐயோ ஃப்ரீஸர்ல‌ இருக்கதெல்லாம் என்னாகுமோ ?!!!" என :))) 'எதுக்குக் கவலைப் படறே, ஃப்ரிட்ஜை விட வெளியில் எடுத்துப் போட்டா இன்னும் பத்திரமா இருக்கும்' என்றேன். அந்த அளவிற்கு ஐஸ் வெளியே !!!!

'பட்டால் தான் தெரியும் பகலவனுக்கும் சூடு' என்பது போல். 'பவர் கெட்டால் தான் தெரியும் முன்னேற்பாடு' என்கிற மாதிரி (இதெல்லாம் யாரு சொன்னாங்கனு கேக்கக்கூடாது), நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி கூட சட்டுனு கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை :(((

வொய்ங் வொய்ங் வொய்ங் (டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள்கிறது) ...

ஊரில் ஹரிக்கன் விளக்கு இருக்கும். பாட்டி துடைச்சு துடைச்சு வைத்திருப்பார். தங்கம் போல் மினுமினுக்கும். கோடைகாலங்களில் (அப்ப இருந்தே) கரண்ட் போயிடும் என்று, சாயந்திரம் வெளிச்சம் குறையும் நேரத்தில் ஒரு நாலஞ்சு விளக்கு ஏற்றி, அங்கங்க‌ வைப்பார் தினம். காலை வரை எரியும் அவை.

சளைக்காம ஏத்தறாங்களே என்று பார்த்தால், பின்னர் புரிந்தது அவர்கள் காலத்தில் தான் தீப்பந்த விளக்குகளில் இருந்து மின்சார விளக்குகளுக்கு ட்ரான்ஸிசன் ஆனார்கள் என‌. அதனால் விளக்கு ஏற்றுவது அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்திருக்கிற‌து அவர்களுக்கு.

எங்க‌ள் ஊர் வீடுக‌ளில், உள் வாச‌ல் ந‌டுவில், ஒரு சிறு க‌ல்தூண் இருக்கும். மேலே சிறு குழியும் இருக்கும். ம‌ழைகால‌ங்க‌ளில் நீர் நிறைந்தும் இருக்கும். ப‌ள்ளி கால விடுமுறையில் ஊருக்கு போகும்போதெல்லாம், விளையாட்டில் அந்தத் தூணைச் சுற்றி சுற்றி வ‌ருவோம். அது ஏன் அங்க‌ நிற்கிற‌து என்றெல்லாம் தெரியாது.

அந்த‌கால‌த்து செய‌ல்க‌ளுக்கு எந்த‌கால‌த்திலும் ஒரு கார‌ண‌ காரிய‌ம் மெய்பிக்க‌லாம். ஆன்மிக‌ம் இதில் அடங்குமா என‌த் தெரிய‌வில்லை. அந்த‌ அள‌விற்கு எனக்கு இன்னும் வ‌ய‌தாக‌வில்லை :))) ஆனா இந்த‌ கால‌த்து செயல்க‌ளுக்கு ஒரே வார்த்தை, 'ஃபேஷ‌ன்' :)) ஏன், எதுக்கு எல்லாம் சுத்தமாத் தெரியாது.

'இது ஒவ்வொரு வீடுக‌ளுக்கு உள்ளும் உள்ள‌ விள‌க்குத் தூண்' என்று தாத்தா சொல்வார்க‌ள். மின்சாரம் வருவதற்கும் முன், பெட்ட‌ர்மாக்ஸ் விள‌க்கெல்லாம் வ‌ருமுன்னே, க‌ண்ணாடிக் குடுவையுள் விள‌க்கேற்றி, அதை இந்த‌த் தூணில், அந்தச் சிறு குழியில் நிறுத்தி விட்டால், வாச‌ல் முழுதும் இரவு பிர‌காசிக்குமாம்.

மின்சார விளக்குகளின் ஆதிக்கம் வந்த பின்னாளில், இத் தூண்க‌ள் துணி உல‌ர்த்தும் கொடி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌ட்ட‌து, ப‌டுகிற‌து :)))

பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌தைக‌ள் கேட்க‌ அப்பொழுது பொறுமையும் இல்லை, ஒரே இட‌த்தில் உட்கார்ந்திருக்க‌ வ‌ய‌தும் இல்லை. எப்ப‌ ந‌ம்மைப் பிடித்து உட்கார‌ வைத்தாலும், சில‌ நொடிக‌ளில் விடு ஜூட் தான். இருந்தாலும், பிடிக்குதோ இல்லையோ, நிறைய‌ சொல்லியிருக்கிறார்க‌ள். இன்று அவர்கள் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் ...

சின்னஞ் சிறுக‌தைக‌ள் பேசி
சிரித்து உற‌வாடி,
அன்பின் பெருக்கத்தில்
அரவணைக்கப் பெற்று,
சிந்தை ம‌கிழ்ந்து
செழிப்புற் றிருப்போம் ...

இந்த‌ ஒரு நெருக்க‌ம் அப்பா, அம்மாவிட‌ம் இல்லாதது இன்ற‌ள‌வும் ஆச்ச‌ரிய‌மே !!!!

Tuesday, January 27, 2009

எனையே நான் தொலைத்தேன் !!!

காதல் கவிதை எழுதி எம்புட்டு நாளாச்சு. அப்பாடா, இன்னிக்கு ஒரு நல்ல மாலை நேர இனிய மனநிலையில், கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க, இதோ கவிதை (?!!) ...

---


Photo: wikimedia.org

உலகத்து அழகெலாம்
ஒன்றாய் அணிசேர்த்து,
ஓவியமாய் உலாவரும்
உனைக் கண்டு மலைத்தேன்.

மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.

ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.

இடறி உள்விழுந்து
இம்மியும் பிசிறில்லா(த),
வெண்கலக் குரலில்
வெல்லமாய்க் கரைந்தேன்.

விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.

காண்கின்ற அனைத்திலும்
வான் வரை சென்று,
கன்னி உனைக் காண
எ(ன்)னையே நான் தொலைத்தேன் !!!

Sunday, January 25, 2009

எங்கள் ஊர்ப் பொங்கல் விழா

சென்றவார இறுதியில் எங்க ஊரில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுவா நம் நாட்டில்/ஊர்களில் இது போல கலைநிகழ்ச்சிகள் வைப்பது இல்லை. பண்டிகை நாட்களே விழாக்கள் போல இருப்பதால் தானோ ?!!!

இதுபோல விழாக்கள் எடுத்து சிறப்பாக நடத்தும் தமிழ்சங்க குழுவினருக்கு முதற்கண் பாராட்டுக்கள் !!!

ரூத் பார்கர் நடுநிலைப் பள்ளியின் கேஃபடேரியா, பொங்கல் விழாக் களமாக மாறியது. மேடையில் சின்ன அலங்கரிப்பு. பொங்கல் பானை, கரும்பு, மாடு என கலக்கியிருந்தார்கள்.

பதினோறு மணிக்கு விழா ஆரம்பம் என்றால், வழ‌க்க‌ம் போல‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சாவ‌காச‌மாக‌வே வ‌ந்தார்க‌ள். எங்கே போனாலும் இந்திய முத்திரை ப‌திப்போம்ல‌ :))

மக்கள் ஒவ்வொருவராக, குடும்பமாக வந்து சேர, ச‌ள‌ச‌ள‌வென‌ ஒரே பேச்சுக் குர‌ல்க‌ள்.

பதினொன்று முதல் ஒரு மணி வரை மதிய உணவு. பின் ஒன்றிலிருந்து நான்கு வரை கலைநிகழ்ச்சிகள். முடிந்தவர்கள் ஏதாவது சமைத்து எடுத்து வரலாம் என்றிருந்தார்கள். இட்லி, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ப்ரைட் ரைஸ், தயிர் சாதம், சட்னி, சாம்பார் என ஏகப்பட்ட வெரைட்டிகள். குட்டீஸுக்கு பீட்சா. பல வகை சோடாக்கள்.

உண்ட மயக்கத்தில் நாங்களெல்லாம் உரையாடிக் கொண்டிருக்க விழாத்த‌லைவ‌ர் பேச‌ ஆர‌ம்பித்தார், ம‌க்க‌ளும் பேச்சை நிறுத்துவ‌து போல் தெரிய‌வில்லை. அப்படி என்னத்த தான் சளசளனு பேசுவாங்களோ என நினைத்துக் கொண்டேன்.

க‌ரெக்டா ப‌தினோறு ம‌ணிக்கு போனாலும், ப‌ள்ளிக‌ளில் க‌டைசி பெஞ்ச் மாதிரி, இங்கும் க‌டைசி வ‌ரிசையில் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அம‌ர்ந்தோம். இரண்டு மூன்று குடும்பங்களாக அமர்ந்திருந்தோம்.

எங்களுடன் மேசையில் அமர்ந்திருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம். அட, மதுரைக்காரங்க .... அப்புறம் அவங்க சைடு தங்ஸும் எங்க தங்ஸும் நான்‍-ஸ்டாப். 'ச‌ள‌ச‌ள‌'விற்கு அர்த்த‌ம் புரிந்த‌து இப்போது :)))

நிறைய செய்திகள், படங்கள் சேகரித்து, பொங்கல் பற்றி ஒரு ஆவனப் படம் காட்டினார்கள். வெளிநாட்டினர் பார்த்து அறிந்து கொள்கிறார்களோ இல்லையோ, நம் அடுத்த சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற காட்சிப் படைப்புக்கள்.



முத‌லில் குழ‌ந்தைக‌ள் மாறுவேட‌ நிக‌ழ்ச்சி. வ‌ரிசையா வ‌ர்றாங்க‌ ... ல‌ஷ்மி, ச‌ர‌ஸ்வ‌தி, பார‌தியார் என்று. வ‌ழ‌க்க‌ம்போல‌ தான் என்றாலும், குழ‌ந்தைக‌ள் என்றைக்கும் தெய்வ‌ங்க‌ள் தானே !



எங்க‌ளுட‌ன் மேசையில் இருந்த மதுரைக்கார ந‌ண்ப‌ர் 'குமரேஷ்' குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வ‌ழங்கினார். "ஃபேய‌ட்வில், பென்ட‌ன்வில், ராஜ‌ர் ... போன்ற‌ ப‌தினெட்டுப் ப‌ட்டிக்குமான‌ நாட்டாமை வ‌ர்றார்" என்று அறிவித்த‌வுடன் அரங்கில் ஒரே க‌ர‌கோஷ‌ம். குட்டி நாட்டாமை வ‌ந்து க‌ல‌க்கிவிட்டார். அது வேறு யாருமல்ல, நண்பரின் மகன் தான்.

அடுத்து குட்டீஸின் டான்ஸ். நம் எதிர்பார்ப்பையும் மீறி அசத்திவிட்டனர். 'வில்லேய்ய் வில்லேய்ய்ய்'னு வந்து, குட்டி விஜய் மாதிரியே (அதே மானரிஸம்) ஆடி, பலத்த கரகோஷம் பெற்றான் சிறுவன் ஒருவன்.

ஆடலாகட்டும், பாடலாகட்டும் ... 'அவன மாதிரியே அசத்தறான் பையன் பாரு' என்று நாம சொல்வதற்கு, சினிமாக்காரர்களின் அவசியத்தை, இது போன்ற கலைநிகழ்சிகளில் உணரமுடிகிறது :)

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை உயர் நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தொகுத்து வழங்கினர். நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில், அது மாதிரி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, தமிழில் பேசினர். த‌மிழில் பேசிய‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளைப் பாராட்டியே ஆக‌வேண்டும்.

கொஞ்சம் பெரிய பசங்க எல்லாம் கீ‍போர்ட், கிடாரில் நம்ம ஊரு திரைப்படப் பாடல்களை வாசித்தனர். பெரியவர்களின் பாடல்கள், நாடகம், பட்டிமன்றம் என வரிசை கட்டி நிற்பதாக‌ நண்பர்கள் சொன்னார்கள்.

நேரம் ஆக ஆக‌, நம்ம வீட்டு குட்டீஸ் பொறுமை இழக்க, அதனால் நாமும் பொறுமை இழக்கும் முன்னால், அங்கிருந்து வீட்டுக்குக் ஜூட்.

Tuesday, January 20, 2009

துளித் துளியாய்: 5 - கலையாக கோலங்கள்


Photo: webshots.com

விடிந்தும் விடியாத
கருக்கல் வேளையிலே,
வளைந்தும் நெளிந்தும்
வரிவரியாய் கோலங்கள்.

தள்ளித் தள்ளி வைத்து
புள்ளிகளை இடிக்காமல்,
அள்ளி அள்ளி தொடர
பிறந்திடும் அற்புதங்கள்.

சுவாசத்தின் ஊடே
எண்ணத்தில் முளைத்து,
வாசலை நிறைக்கும்
வண்ணப் பூக்கள்.

மாக்கோலக் வரிசையிலே
எறும்புகளின் அணிவகுப்பு,
பூக்கோல வரிசையிலே
வண்டுக்களின் ஏமாற்றம் !

புள்ளி வைத்துக் கோலமிட
சொல்லி வைத்தார் போல்,
கச்சிதமாய் எப்புறமும்
கலையாக(க்) கோலங்கள்.

அச்சம் தவிர்த்து, தெருவில்
ஆட்களை புறம்தள்ளி,
கூச்சமும் தவிர்த்து, பெண்களை
மகிழ்விக்கும் கோலங்கள்.

அனுதினம் காலையில்
அலங்கரித்த கோலங்கள் அன்று,
பண்டிகை நாள்மட்டும்
பிறந்திடும் கோலங்கள் இன்று !!!

Thursday, January 8, 2009

அஞ்சறைப் பெட்டியும் எம்மா பாட்டியும்



காலையில் கண் விழித்ததும், ஸ்டேசிக்கு நினைவுக்கு வந்தது மகனின் குரல்.

"அம்மா, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த செமஸ்டருக்கான ஒரு பகுதி தொகையான பத்தாயிரம் டாலர் கட்ட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் என் படிப்பு பாதியில் நின்று விடும் !!!"

இது ஸ்டேசிக்கும் தெரியாமலில்லை. "கல்லூரிக் கடன் எடுத்து படிக்க வை, அப்ப தான் இந்தக் கால பிள்ளைகளுக்கு பொறுப்பு வரும் ...". அக்கம் பக்கம் குடியிருப்போர் ஸ்டேசிக்கு சொல்லாமலும் இல்லை.

ஜேசனுடன் வாழ்ந்த வரையில் இது பற்றி கொஞ்சம் கூட யோசிக்க வில்லை ஸ்டேசி. நல்ல வேலை, இரு சம்பளங்கள், வீடு, கார்(கள்) எனத் துளியும் கவலை இன்றி சென்றன நாட்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் புரிந்து கொள்ளலில் இடைவெளி அதிகமாக, முறைப்படி பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. வீட்டை விற்று, அபார்ட்மென்ட் குடியேறி, வேலை பிடிக்காம‌ல் வேறு அலுவ‌ல‌க‌ம் மாறி, புதுக் கார்க‌ளை விற்று ... என்று ச‌ரிவில் ப‌ய‌ணித்த‌ ஸ்டேஸிக்கு ஒரே ஆறுத‌ல் ம‌க‌னின் ப‌ட்ட‌ப்ப‌டிப்பு.

அதுக்கும் இப்பொழுது முற்று புள்ளி வந்து விடுமோ என, தனித்து வாழும் வாழ்வைக் காட்டிலும், பயத்தை பன்மடங்கு அதிகரித்தது.

வீட்டை விற்று, கார்களை விற்று, எல்லாம் வக்கீல்களுக்கும், விவாகரத்துக்குமே செலவான நிலையில், கடன் அட்டைகளும் ‍ பணமாய் எடுத்தால் பல் இளிக்கும் வட்டி விகிதமும், மனதைப் பிசைத்தது.

தலைவலிப்பது போல் இருக்க, இரவு சாப்பிடாமல் படுத்ததும் நினைவுக்கு வந்தது. பல் துலக்கி, ஏதாவது சாப்பிடலாம் என ஓட்ஸ் டப்பாவை எடுத்துக் கொண்டு சுடுநீர் வைத்தாள் ஸ்டேசி.

-----

எம்மா பாட்டியின் சகோதரி எலிசபெத் பாட்டி. ஒரு நாள் எலீசா அதிகாலையே வந்து, எம்மாவின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். "நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எல்லா இடத்திலயும் பண முடக்கமா இருக்குதே. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் கூட‌ திவாலாகிட்டு இருக்கு. அரசாங்கம் வேற பில்லியன் கணக்கில் உதவி பண்றதா சொல்றாங்க‌." என பணத்தைப் பற்றியே அவர்கள் பேச்சு முழுதும் இருந்தது அன்று.

"ஓய்வுகால நிதி, மற்றும் வங்கிகளில் உள்ள சேமிப்புகள் எல்லாம் அப்பப்ப சரிபார்த்துக்க. நடக்க முடியல, வண்டி ஓட்ட முடியல என்று சாக்கெல்லாம் சொல்லாதே. ரொம்ப முடியவில்லை என்றால் என்னைக் கூப்பிடு, நான் வந்து மாதத்துக்கு இரண்டொரு முறை உன்னை அழைத்துப் போகிறேன்" என்றார் எலீசா பாட்டி தன் தமக்கையிடம்.

"ஹாய் எலீசா, ந‌லமா ?" என்ற‌வாரே வீட்டிற்குள் நுழைந்தார் ஸ்காட். க‌டைக்குச் சென்று வ‌ந்திருக்கிறார் என‌ அவ‌ர் கைக‌ளில் இருந்த‌ ப்ளாஸ்டிக் பைக‌ளே சொல்லிய‌து.

"சில பொருட்க‌ளை திருப்பி அனுப்ப‌, த‌னியே வைத்திருந்தேன். அவ‌ற்றையும் க‌டையில் கொடுத்துவிட்டீர்க‌ளா ஸ்காட் ?" என்று கேட்டார் எம்மா.

"நீ சொல்லி நான் செய்யாம‌ல் இருந்திருப்பேனா, இந்த‌ நாற்ப‌து ஆண்டு கால‌ வாழ்வில் ... நேற்றே திருப்பிவிட்டேன் அனைத்தையும்" என்று, மூக்குக் கண்ணாடியை சற்று கீழிறக்கி, மெலிதாய் சிரித்தார் எலீசாவைப் பார்த்து.

"கடவுளின் அன்பு உங்கள் இருவருக்கும் என்னிக்கும் இருக்கணும்" என்று வாழ்த்தி, "சரி நான் போய்ட்டு இன்னொரு நாள் வர்றேன்" என்று எழுந்தார் எலீசா.

"ஏதாவது சாப்பிட்டு போ" என்ற தமக்கைக்கு, சரி, என்று அம‌ர்ந்தார்.

"அட்டைப் பெட்டி உண‌வு தான், ச‌ரியா ?!!!" என்று கேட்ட‌வாறு ச‌மைய‌ல‌றையில், உண‌வ‌க‌ அல‌மாறிக் க‌த‌வைத் திற‌ந்த‌வ‌ருக்கு ச‌ட்டென‌ நினைவுக்கு வ‌ந்த‌து ஒரு விஷ‌ய‌ம். அதிர்ச்சியில் ம‌ய‌ங்கி விழுந்தார்.

-----

புதிய டப்பாவைப் பிரித்து, முதலில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் போட்டுக் கொண்டவள், மூன்றாவது ஸ்பூன் எடுக்கையில் ஏதோ உள்ளே கெட்டியாக தட்டுப் பட்டது. ஓட்ஸ் கெட்டுவிட்டதா, என டப்பாவைத் திருப்பிப் பார்த்து இன்னும் நாட்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்டேசி.

நன்றாக குலுக்கி, சாய்த்துப் பார்க்கையில் கத்தையாக பேப்பர்கள். கைவிட்டு வெளியில் எடுத்தாள். அத்தனையும் மொட மொட வென நூறு டாலர் சலவைத் தாள்கள். நூறு நூறாய் ஐந்து கட்டுக்கள். அதிர்ச்சியில் மயங்கி விழாத குறையில் ஸ்டேசி இருந்தாள்.

'கடவுளே வந்து நம் கண்ணை திறந்து விட்டாரா ?!!! இல்லை, இது என் பணம் இல்லை. உரியவரிடம் சேர்க்கவேண்டும். இந்த பணத்திற்கு அவர் எவ்வளவு பாடு பட்டிருப்பார்.' என்று ஓட்ஸ் வாங்கிய கடையை தொலைபேசியில் அழைத்தாள்.

"அப்ப‌டியா, ஒரு நிமிட‌ம் இருங்க‌ ... அந்த‌ அட்டைப் பெட்டியில் இருக்கும் பார் கோட் எண் சொல்லுங்க"

...

"ம்ம்ம். இது கடைசியா ஒரு மாதம் முன்னர், போன‌ டெலிவ‌ரியில் வ‌ந்த‌து. கண்டு பிடிக்க ரொம்ப சிரமம் ஆச்சே. உற்பத்தி சாலைக்கு அழைத்து பேசும் முன்னால், இருங்க‌ ரிட்ட‌ர்ன்ஸ்ல‌ செக் பண்ணிக்க‌லாம்."

...

"க‌ண்டு பிடித்து விட்டோம், எம்மா என்ப‌வ‌ர் ரெண்டு வார‌ம் முன் வாங்கி இருக்கிறார். நேற்று திருப்பி இருக்கிறார். ஒன்னும் க‌வ‌லைப் படாதீங்க‌. அவ‌ர் ப‌ண‌த்தை அவ‌ரிட‌ம் சேர்த்து விட‌லாம். க‌ட‌வுளின் ஆசி உங்க‌ளுக்கு என்றும் உண்டு"

---

இங்கு சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன். கதை மாந்தர்கள், கதைக் களம் அனைத்தும் கற்பனையே !!!