Thursday, August 21, 2008

வானின் நிறம் நீலம் - 2

சிங்கை வ‌ந்த நான்கு மாத‌த்தில், அது வரை இந்தியாவில் வாழ்ந்த‌ இருப‌த்தி ஐந்து வய‌து வாழ்க்கை முறை மாறியே போன‌து செல்வாவிற்கு. முதன் முதலாய் ஐந்த‌ரை ம‌ணிக்கு எழ‌ க‌ற்றுக் கொண்டான். கொஞ்ச‌ லேட்டா எழலாம் என‌ நினைத்தால் போதும், பாத்ரூம் ப்ராப்ள‌ம் ப்ரதான‌மாய் இருக்கும் அந்த‌ ப‌த்தாவ‌து த‌ள‌த்தின் அடுக்குமாடி வீட்டில்.

மூன்று அறை கொண்ட வீடு அது. அறைக்கு இருவராய் மொத்த‌ம் அறுவ‌ர். அதுமில்லாம‌ல் இவ‌ன் தான் நெடுந்தூர‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டும். ம‌ற்ற‌ நண்ப‌ர்க‌ள் ப‌க்க‌த்தில், சில‌ என்ஜினிய‌ரிங் நிறுவ‌ன‌ங்க‌ளில் பணிபுரிந்த‌ன‌ர்.

வெளியே எங்கிலும் வானுய‌ர்ந்த அடுக்குமாடி வீடுக‌ளும், சுத்த‌மான‌ தெருக்க‌ளும், எவ்வ‌ள‌வு கூட்ட‌த்திலும் இடிக்காத‌ ம‌க்க‌ளும், எம்.ஆர்.டி யா இருக்க‌ட்டும், ஏ.டி.எம் மா இருக்க‌ட்டும், காஃபி க‌டையா இருக்கட்டும், எங்கிலும் முறையே வ‌ரிசையில் நிற்ப‌தும், ப‌த்தாத‌ற்கு ரயிலிலோ, பஸ்ஸிலோ கூச்ச‌மே ப‌டாம‌ல் க‌ட்டிப் பிடித்துக் க‌ருத்தொருமித்த‌ காத‌ல‌ர்க‌ள் வ‌ரிசையாக‌ட்டும் ... எல்லாம் இந்த‌ நான்கு மாத‌ங்க‌ளில் ப‌ழ‌கிவிட்டாலும், இன்னும் ஆச்ச‌ரிய‌ம் தீர்ந்த‌பாடில்லை செல்வாவிற்கு.

குளித்து, காஃபி போட்டுக் கொண்டு, அன்றைய முக்கிய செய்திகள், சிறிது நேர‌ம் டி.வி.யில் பார்த்து விட்டு, நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத்துக் கொண்டு, காலை உணவாக‌ சீரிய‌ல் சாப்பிட‌வும் க‌ற்றுக் கொண்டான். இந்தியாவில் இருந்த‌ வ‌ரை, அம்மா ச‌மைய‌ல் சாப்பிட்டு ஒரு முறை கூட‌ பாராட்டி சொல்லாத‌வ‌ன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் த‌ள்ளினான்.

ஏழு ம‌ணிக்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தால், கால் ம‌ணி நேர‌த்தில் ர‌யில் நிலைய‌த்தில் இருப்பான். ஊரில் முக்கு கடைக்கு போறது கூட சும்மா ச‌ள் சள்ளென்று பைக்கில் சுற்றிய‌வ‌ன், இங்கு லொங்கு லொங்கென்று நெடுந்தொலைவு ந‌ட‌க்க‌வும் க‌ற்று கொண்டான். காலை நேரமா ?!, ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளிலேயே சிட்டி ப‌ஸ் பிடிக்காத‌வ‌ன், தின‌ம் போராடி ர‌யிலேற‌வும் க‌ற்றுக் கொண்டான்.

இவை எல்லாமே ப‌ழ‌கிவிட்டாலும் ஏதோ ஒன்று ம‌ட்டும் குறைவ‌தாய் உண‌ர்ந்தான் இன்று வ‌ரை. அதுவும் சில‌ நொடிக‌ள் வ‌ரை. இங்குள்ள‌ வாலிபிக‌ளிட‌ம் ஒரு செய‌ற்கை த‌ன‌ம் இருப்ப‌தாய் உண‌ர்ந்த‌தாலோ என்ன‌வோ, ம‌ஞ்ச‌ள் மேனி பாவையாக‌ட்டும், க‌ருப்பு தேவ‌தைக‌ளாக‌ட்டும், ம்.ஹிம். திரும்பிக் கூட‌ பார்க்க‌ மாட்டான்.

இத‌ற்கு மாறாக‌ இன்று க‌ண்ட‌வ‌ளை எண்ணி அதிச‌யித்து வ‌ந்த‌வ‌னை, மீண்டும் 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி அவ‌னைக் க‌ட‌ந்து இற‌ங்கினாள். பார்த்தால் அட 'ராஃபிள்ஸ் ப்ளேஸ்' வ‌ந்திட்ட‌தா என்று கதவு மூடு முன் அல‌றி அடித்து இற‌ங்கினான்.

வ‌ழக்கமாக‌ கார்ட் அடித்து வ‌ல‌து புற‌ம் செல்ப‌வ‌ன், எப்புற‌ம் செல்வ‌து என‌க் குழ‌ம்பி நின்ற‌வ‌ளைக் க‌ண்டு தானும் நின்றான். "ஏதாவ‌து உத‌வி வேணுமா உங்க‌ளுக்கு" என்ற‌வ‌னை உதாசீனித்து, கௌண்டரில் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

இருக்க‌ வேண்டிய‌து தான், எத‌ற்காக இத்த‌னை திமிர். தேவையில்லை என்றாவ‌து சொல்லியிருக்க‌லாமே !! பெண்க‌ளே இப்ப‌டித் தான். ஆண்கள் என்றாலே ஏ.இ.கொ.வெ. ? ஒரு புற‌ம் டென்ஷ‌ன் அதிக‌ரித்தாலும், 'ஏற்க‌ன‌வே லேட்டு ராசா நீ' என்று, அடுத்த‌ ர‌யிலில் வ‌ந்த‌ கூட்ட‌ம் நினைவூட்டிய‌து.

அடித்துப் பிடித்து ப‌டிக‌ளேறி, வ‌ளைந்து நெளிந்து, மேலே வ‌ந்து சில நொடிகள் வெளிக் காற்றை சுவாசித்தான். ஓடு ஓடு என்று ம‌ன‌ம் த‌ள்ள‌, ஓடிய‌வ‌ன் எதிரில் சிலர் வர, அவர்கள் மேல் மோதாம‌ல் இருக்க‌ வேண்டுமே என‌ எண்ணி ச‌ற்று வில‌கிய‌வ‌ன், சாலைக் க‌ம்ப‌த்தில் இடித்து கீழே விழுந்தான்.

இடுப்பில் கை வைத்து எழுந்தவனுக்கு, பறக்கும் காகித‌ங்களையும் சாப்பாடு ட‌ப்பாவையும், வ‌ரிந்து எடுத்துக் கிள‌ம்ப‌ சில‌ நிமிட‌ங்க‌ள் பிடித்த‌து.

இவ‌ன் இருக்கும் அலுவ‌ல‌க‌க் க‌ட்டிட‌த்தில் நுழைந்து, எஸ்க‌லேட்ட‌ரில் உய‌ரே போய்க் கொண்டிருந்தவளை செல்வா காணத் தவறவில்லை. 'இந்த வழியே தான் வந்திருக்கிறாள். என்னைக் கடந்து தான் போயிருக்கணும். ஜ‌ஸ்ட் லைக் த‌ட் ஒரு ஹெல்ப் ப‌ண்ணியிருக்க‌லாமே !' என்று நொந்து எஸ்க‌லேட்ட‌ரில் ஏறினான்.

நேரம் கடப்பதை உணர்ந்தவன், ஏறியதோடு நிற்காம‌ல், ப‌ட‌ ப‌ட‌வென‌ ஓடும் எஸ்க‌லேட்ட‌ரில் ஓடி ஏறினான். வ‌ல‌ப்புற‌ம் திரும்பி, இட‌ப்புற‌ம் இர‌ண்டாவ‌து அறையில் நுழைந்த‌வ‌ன் வாய் பிள‌ந்து நின்றிருந்தான்.

'மேன‌ஜ‌ரி'யுட‌ன், வளை குலுங்க கை குலுக்கி, ச‌ரியும் ஹேன்பேக்கை இழுத்து மேல் விட்டு, எடுப்பான பல் வரிசை, எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !

தொடரும் .....

10 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

\\நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத்துக் கொண்டு, காலை உணவாக‌ சீரிய‌ல் சாப்பிட‌வும் க‌ற்றுக் கொண்டான். இந்தியாவில் இருந்த‌ வ‌ரை, அம்மா ச‌மைய‌ல் சாப்பிட்டு ஒரு முறை கூட‌ பாராட்டி சொல்லாத‌வ‌ன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் த‌ள்ளினான்.
\\

யப்பா படம் பிடிச்சு காட்டறீங்களே..ஒரெ பீலிங்கஸ்-ஆ போச்சு...


ஹிம்ம் பேருக்கே இரண்டாவது பார்ட் போயிடுச்சு..சூப்பர்..நீங்க சொல்ற விதத்திலேயே காட்சி விரியுது சதங்கா :)

ராமலக்ஷ்மிsaid...

//அம்மா ச‌மைய‌ல் சாப்பிட்டு ஒரு முறை கூட‌ பாராட்டி சொல்லாத‌வ‌ன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் த‌ள்ளினான்.//

அருமை அப்பதான் புரியும்:)!

//இங்கு லொங்கு லொங்கென்று நெடுந்தொலைவு ந‌ட‌க்க‌வும் க‌ற்று கொண்டான். காலை நேரமா ?!, ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளிலேயே சிட்டி ப‌ஸ் பிடிக்காத‌வ‌ன், தின‌ம் போராடி ர‌யிலேற‌வும் க‌ற்றுக் கொண்டான்.//

ஆமாமாம் கற்றுத்தான் ஆகணும், தன் காலில் நிற்க ஆரம்பிக்கையில் இதையெல்லாம். எல்லா அனுபவமும் சேர்த்துதான் ஒருவனை வாழ்க்கையிலே நிலை நிறுத்தும்.

//'இந்த வழியே தான் வந்திருக்கிறாள். என்னைக் கடந்து தான் போயிருக்கணும். ஜ‌ஸ்ட் லைக் த‌ட் ஒரு ஹெல்ப் ப‌ண்ணியிருக்க‌லாமே !' என்று நொந்து எஸ்க‌லேட்ட‌ரில் ஏறினான்.//

ஆசை ஆசை...

//எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !//

அப்படிப் போடுங்க "தொடரும்"யை...:)!

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//யப்பா படம் பிடிச்சு காட்டறீங்களே..ஒரெ பீலிங்கஸ்-ஆ போச்சு...//

ஊர விட்டு வந்து படும் கஷ்டங்கள் லிஸ்ட் எடுத்தா, இதான நம்ம லிஸ்ட்ல முதல் வருது. இன்னும் இந்த உணவு விசயங்கள் பற்றி அங்கங்க தூவலாம் என்றும் எண்ணியிருக்கிறேன்.

//ஹிம்ம் பேருக்கே இரண்டாவது பார்ட் போயிடுச்சு..சூப்பர்..நீங்க சொல்ற விதத்திலேயே காட்சி விரியுது சதங்கா :)//

நன்றி ! நன்றி !! உங்களின் ரசிப்பு அடுத்த பாகத்தை இப்பவே எழுதுடா என்கிற அளவிற்கு பிடித்துத் தள்ளுகிறது :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//ஆசை ஆசை...//

ஆமா, இந்த ஆசை தான் கதைய நகர்த்தப் போகுது :))

//எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !//

அப்படிப் போடுங்க "தொடரும்"யை...:)!//

பின்னே. நானும் ரொம்ப யோசிச்சேன். எங்க தொடரும் போடறது என்று தானேனு நீங்க நினைப்பீங்க. ஆனா, பேரு என்ன வைக்கலாம் என :)))

ராமலக்ஷ்மிsaid...

//எங்க தொடரும் போடறது என்று தானேனு நீங்க நினைப்பீங்க. ஆனா, பேரு என்ன வைக்கலாம் என :)))//

ஹா ஹா இன்னும் அத முடிவு பண்ணலயா நீங்க:)?

சதங்கா (Sathanga)said...

//ஹா ஹா இன்னும் அத முடிவு பண்ணலயா நீங்க:)?//

பண்ணியாச்சு :)) அடுத்த பாகமும் போட்டாச்சு. படிச்சிட்டு சொல்லுங்க.

cheena (சீனா)said...

பிளாக்கர் சதி செய்கிறது

வர்ணனை அதிகம் இல்லாத பதிவு - நன்று நன்று -
தாயகத்தில் அனுபவித்தற்கு மாற்றாக அயலகத்தில் வேறு விதமான அனுபவங்கள்

பெயர் அறிய ஒரு பதிவு

நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்said...

இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவளைக் காதலிக்கப் போறானா. தெரியலையே சாமி.
அதென்ன அந்தப் பொண்ணுக்கு அத்தனை வேகம். கூட வர பையனைக் கண்டுக்காம. பாவம் செல்வா.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//தாயகத்தில் அனுபவித்தற்கு மாற்றாக அயலகத்தில் வேறு விதமான அனுபவங்கள்//

ஆமா. ஆனால் அதே காதல், அதே மனிதர்கள். சரியா ?!!!!

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவளைக் காதலிக்கப் போறானா. தெரியலையே சாமி.//

ஐ கேன் ஸே எஸ் ....

//அதென்ன அந்தப் பொண்ணுக்கு அத்தனை வேகம். கூட வர பையனைக் கண்டுக்காம. பாவம் செல்வா.//

கொஞ்சம் இன்டர்வியூ டென்ஷன். அதுமில்லாமல் கதையில் முக்கிய டர்னிங் பாய்ண்ட் வரும்போது விளக்கமா சொல்லலாம்னு இருக்கேன். பொறுத்திருங்களேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !