Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, February 14, 2010

வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)


"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."

...

"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"

...

"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"

...

"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க‌ நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."

...

"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".

***

"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன‌ ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.

***

'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.

இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.

"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க‌. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.

"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று ப‌தில‌டித்தாள் ஷாலினி.

"உட‌ல் ம‌ண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."

"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ர‌ஸ்ட் ..."

"வ‌ட்ட‌க்க‌ரிய‌ விழி க‌ண்ண‌ம்மா ‍‍ என்னை
வாட்டி வ‌தைக்கிற‌தே !
கிட்ட நெருங்கிவரக் க‌ண்ண‌ம்மா ‍‍ புயலாய்
கிற‌ங்க‌(வும்) வைக்கிற‌தே !"


"பாவன்டா பார‌தியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா ப‌ண்ணி சொன்னாலும் ந‌ல்லாத் தான் இருக்கு. ஏன் அவ‌ரு, இவ‌ருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உன‌க்கு என்று எதுவும் சொல்ல‌த் தெரியாதா ?" என்று சீண்டினாள்.

"விளையாடாதே ஷாலு. ஐம் சீரிய‌ஸ்"

"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"

"போதும் ... உங்க‌ அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் த‌ள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க‌ வீட்டில் பார்க்கும் எந்த‌ அழ‌கான‌ பெண்ணையாவ‌து நான் திரும‌ண‌ம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் த‌ந்த‌ மாதிரி ஆகிவிடும்."

"என்ன மிரட்டறியா ? அப்ப‌டியாவ‌து ஆள‌ விடு சாமீ. அட‌க்க‌மா அழ‌கா எங்க‌ வீட்டில‌யும் எனக்குப் பைய‌ன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"

'இன்னிக்கு என்னாச்சு இவ‌ளுக்கு. ரொம்ப‌வே பொங்குது புயல். சூராவ‌ளி ஆக‌ற‌துக்கு முன் த‌டுக்க‌ணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ஹேய் ஷாலு, நான் கெளம்ப‌‌றேன். என்ன‌டி அர‌ட்டை அங்க‌ இன்னும் கிள‌ம்பாம‌ல் ?!" என்று ஷாலினியின் க‌ணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு த‌மிழ் வார்த்தை என்ன‌வா இருக்கும் ?) லதா.

"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த‌ வாரு வாருறியா ? இதோ இப்ப‌வே போய் ராஜேஷ் கிட்ட‌ எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புய‌லாய்க் கிள‌ம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.

"அவ‌ளைத் த‌டுத்து என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புட‌ன் வ‌ந்த ராஜேஷை, "என்ன‌து மறைந்து நின்றுகொண்டு அந்த‌க்கால‌ க‌தாநாய‌கன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி ட‌ய‌லாக் விட்டுகிட்டு வ‌ர்றே" என்று வாருத‌லைத் தொடர்ந்தாள் ஷாலினி.

"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வ‌ர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, க‌ங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாக‌ரீக‌மாக‌ ந‌க‌ன்றாள் லதா.

அலுவ‌ல‌க‌த் த‌ள‌த்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவ‌ர் மட்டும் என்று உண‌ர்ந்த‌து முத‌லாய் அண்ண‌லும் அவ‌ளும் நோக்கிய‌தில், அந்த‌க் க‌ட்டிட‌த்தில் இருந்த‌ எல்லா விள‌க்குக‌ளும் ப‌ட்டு ப‌ட்டென்று விட்டுப் பிரகாசித்தது.

இனிய‌ மாலை நேர‌த்தில் மெரீனாவை நோக்கி ப‌ய‌ணித்த‌து தென்ற‌ல். வ‌ழியில் செடி, கொடி, ம‌ர‌ம், ம‌க்க‌ள் என‌ எல்லோரும் சிலிர்த்த‌ப‌டி ர‌சிக்க‌, மெரீனாவில் க‌ட‌ல்நீரில் கால்ந‌னைத்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர் ராஜேஷும் ஷாலினியும்.

"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.

"ஆச்சார‌ம், அனுஷ்டான‌ம் இதெல்லாம் இந்த‌க்கால‌ப் பிள்ளைக‌ள் எங்கே பாக்க‌ற‌து. அதாவது ப‌ரவாயில்ல‌, ஒரு குல‌ம் கோத்ர‌மாவ‌து பாக்க‌ப்ப‌டாதா ? அபிஷ்டுக்க‌ள் இதெல்லாம் எங்கே போய் முடிய‌ப்போற‌தோ. ஈஸ்வ‌ரா ..." என்றார் அப்பா.

"குல‌ம் கோத்ர‌ம் பார்த்தால் ஆச்சார‌ம் அனுஷ்டான‌ம் தன்னால வ‌ந்திடாதா என்ன ? என்ன‌ பேச‌றேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.

"கமலம், நீ என்ன‌ பேச‌றேனு புரிஞ்சு தான் பேச‌றியா ? நீயே ந‌ம்ம‌ ஷாலுவ‌ப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்ப‌டையான்னு அந்த‌ ராஜேஷ் கையில‌ கொடுத்திடுவ‌ போல் இருக்கு"

"நான் புரிஞ்சுண்டு தான் பேச‌றேன். 'இந்த‌ப் பைய‌ன‌ப் பிடிச்சிருக்கு. இவ‌ன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவ‌ன‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌றேன்'னு ந‌ம்ம‌ கிட்ட‌ வ‌ந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வ‌ள‌வு ச‌ந்தோஷ‌மா இருக்கு. அத்த விட்டுட்டு ..."


"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என‌. சில‌நேர‌ வாக்குவாத‌த்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த‌ பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.

பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.

"இவ்ளோ ஈஸியா ச‌ம்ம‌த‌ம் வாங்கிட்டே. இத‌ முன்னாடியே செய்திருக்க‌லாமே ?" என்றான் ராஜேஷ்.

'உன்ன‌ ந‌ல்லாத் தெரிஞ்சுக்க‌ டைம் வேண்டாமாடா ம‌டையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.

என்ன‌தான் க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ர் ப‌தவியில் மிடுக்குட‌ன் வ‌ளைய‌ வ‌ந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழ‌ந்தையாய் ஆகிவிடும் ஆண்க‌ளில், ராஜேஷ் ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌ ?

சேலைத்த‌லைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு ந‌ட‌ந்திருப்பான். சுடிதாரில் 'துப்ப‌ட்டாவைப் பிடித்தால் கையோடு வ‌ந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி ந‌ட‌ந்தான் ராஜேஷ்.

"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷ‌ர்ட் விட‌ இந்த‌ சுடிதார்ல‌ நீ எவ்வளவு அழ‌கா இருக்க‌ தெரியுமா ? ... அதையும் விட‌ சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று த‌த்துவ‌ம் சிந்தினான்.

ஷாலினி அப்ப‌டி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழ‌கு எல்லாம் இல்லை. அது அவ‌ளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வ‌ரிக‌ளை வெகுவாக‌ ர‌சித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் ப‌லா அல்லவா அவ‌ள்.

"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.

"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...

வட்ட‌விழி விட்ட வழி
சுற்றுதடி நெஞ்சம்,
விட்டிடாது பற்றி அதை
சுற்றிவந்தே கெஞ்சும்.

சுட்டுவிடும் ஈர இதழ்
முத்தம்தர அஞ்சும்,
தட்டித்தட்டி நீயும் சென்று
காட்டுகிறாய் க‌‌ஞ்சம்.

கட்டவிழ் காளை நானும்
அடையணுமே தஞ்சம்,
ப‌ட்டுத்தொட்டு நீயும் என்று
தீர்த்திடுவாய் பஞ்சம் ?"

"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.

ஷாலினியின் பாத‌ங்க‌ளுக்குக் கொலுசாய் வ‌ந்து சுற்றிய‌ நுரை த‌ள்ளிய‌ அலையை ர‌சிக்க‌வும் முடியாம‌ல், ர‌சிக்காம‌ல் இருக்க‌வும் முடியாம‌ல் த‌வித்திருந்தான் ராஜேஷ்.

***

இர‌வு, உண‌வு வேளையில் பேச்சை ஆர‌ம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க‌ கிட்ட‌ ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் பேச‌ணும். இப்ப‌ பேச‌லாமா ?" என்றான்.

"இருப்பா, அம்மாவும் வ‌ந்திர‌ட்டும்" என்று சொல்லி, "சார‌தா, கொஞ்ச‌ம் இங்க‌ வ‌ர்றியா ..." என்றார்.

"என்ன‌ங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வ‌ந்து உண‌வு மேசையில் அம‌ர்ந்தார் சாரதா.

"அதெல்லாம் ச‌ரியாவே இருக்கு. ந‌ம்ம‌ ஜூனிய‌ர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவ‌து சொல்லி ந‌ம்ம‌ வ‌யிற்றில் புளிய‌க் க‌ரைக்காம‌ல் இருந்தால் ச‌ரி" என்றார் விஸ்வ‌நாத‌ன்.

"தோளுக்கு மேல் வ‌ள‌ர்ந்த‌வ‌னை, அதுவும் ஒரு ஐ.டி. க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ரா இருக்க‌ புள்ளைகிட்ட‌ இப்படியா சர்க்காஸ்டிக்கா பேச‌ற‌து ..." என்றார் சாரதா.

'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ச‌ரி, நானே நேரா விஷ‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காத‌லிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவ‌ள் பேர‌ழகி எல்லாம் இல்லை. என் ம‌ன‌திற்குப் பிடித்திருக்கிற‌து. அவ‌ளுக்கும் என்னைப் பிடித்திருக்கிற‌து. நாங்க‌ள் இருவ‌ரும் சேர்ந்து வாழ‌லாம் என்று நாங்க‌ள் எடுத்த‌ முடிவிற்கு, உங்க‌ள் ஒத்துழைப்புத் தேவை...' என்ன‌டா, ச‌ரியா சொல்லிட்ட‌னா" என்று மகனைப் நோக்கிவிட்டு ம‌னைவியைப் பார்த்துக் க‌ண் சிமிட்டினார்.

'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உன‌க்கு ம‌ரும‌க‌ வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்‍அப் ?"

"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். என‌க்கெதுக்குப்பா வேலைக்குப் போற‌வ‌ள‌ப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.

"முன்ன‌ரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷ‌யத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.

"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உன‌க்கு ஒரு கான்ஃபிட‌ன்ட் வ‌ந்து, நீயா எங்க‌கிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த‌ பிப்ர‌வ‌ரி 14 வ‌ச்சிக்க‌லாமா ?" என்று குறுந‌கை பூத்தார் விஸ்வ‌நாத‌ன்.

மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.

***

படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.
பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்

Thursday, October 29, 2009

கட்டழகி ...


Photo Credit: Bernat Casero

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

Thursday, October 1, 2009

நெல்லி மரம் !


Photo credit: indiamike.com

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.

வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.

சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.

***

"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா ? உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.

'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.

"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.

"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌..."

'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.

காலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.

'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.

பூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.

"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.

'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.

கார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.

இவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.

"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை ?

என்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.

அப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.

காற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.

சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்ப‌டியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.

கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.

"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.

வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உன‌க்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.

'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.

"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு ? உங்க‌ தாத்தோவோட‌ ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொட‌ர்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.

"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா ? அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்த‌ள்ளினான்.

"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.

பலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.

கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.

ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

எதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.

***

"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.

அண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.

***

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.

Thursday, September 24, 2009

நடுச்சாம‌ம் - 2


Photo Credit: allposters.com


To read Part 1 click here.

நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.

தரையின் பிசுபிசுப்பு, சுவ‌ற்றிலும், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிக‌ளிலும், க‌த‌வுக‌ளிலும் ப‌ட‌ர்ந்து கான்க்ரீட் கூரை வ‌ரை அப்பி கறுத்திருந்த‌து. நான்கு மூலைக‌ளிலும் ஆளுய‌ர‌த்துக்கு இருந்த‌ ஐந்து முக‌ விள‌க்குக‌ளில், த‌வ‌ழும் குழ‌ந்தையாய், நெய்யூரிய‌ திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுட‌ர்.

அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர‌ அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்த‌து நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்க‌ளிலும் எண்ணை அப்பிய‌ ப்ரேமிற்குள், மிர‌ள‌ வைக்கும் ப‌ல்வேறு அம்ம‌ன்க‌ளின் ஆக்ரோஷ‌ காட்சிக‌ள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்த‌து. வெகுநாட்க‌ள் திற‌க்காம‌ல் இருந்த‌த‌ற்கான‌ அடையாள‌மாக‌ சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல் சாட்சிய‌ம் கூறிய‌து.

மேடையின் ஒருபுறத்தை ஆக்கிர‌மித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுக‌ளாய் நீண்டிருந்த‌து அந்த‌ப் புற்று. அதைச் சுற்றிலும் ம‌ஞ்ச‌ளும் குங்கும‌மும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்ச‌மாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள‌ வைக்கும்ப‌டி இருந்த‌து. அறைக்கதவை ந‌ன்கு திற‌ந்துவிட்டாலும் வெளிச்ச‌ம் ப‌டாவ‌ண்ண‌ம் இருந்த‌து மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாக‌ம் வ‌ள‌ர்க்க சதுரமாக‌ மூன்ற‌டுக்கு உயரத்தில் செங்கல் மதில்.

'குளிக்க‌ப் போன‌ சாமியார் ச‌ற்று நேர‌த்தில் வ‌ந்துவிடுவார், உள்ளே அம‌ர்ந்திருங்கள்' என்றிருந்தாள் வாசலில் கோல‌மிட்ட‌ ப‌ணிப்பெண்.

ஒருசில‌ நிமிட‌ங்க‌ள் கூட‌ உள்ளே இருக்க‌ முடிய‌வில்லை. ப‌ட‌ப‌ட‌க்கும் காகித‌ங்க‌ள் கூட‌ ப‌ய‌த்தை ஏற்ப‌டுத்தின‌. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுப‌டுத்திய‌து. 'உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிற‌தா ? எத்த‌னை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வ‌ந்துவிட்டால் என்ன‌ செய்வ‌து ?" என‌ அடுக்குக் கேள்விக‌ளில் திகைத்து எவ‌ரும் அறையில் இன்றி த‌னிய‌னாய் காத்திருந்தான் த‌மிழ‌வ‌ன்.

விரிச‌டை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உட‌லும், கையில் கைத்தடியுமாக வ‌ருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த‌ த‌மிழ‌வ‌னுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், க‌ழுத்தில் சிறு ருத்ராட்ச‌ மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ள‌ரிப் ப‌ட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் ப‌ழ‌மாய் அதில் குங்கும‌ப் பொட்டும் என வ‌ந்த நடுத்தர வயது சாமியாரைக் க‌ண்டு சிறிது அதிச‌யித்தான்.

அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச‌ மாலைக‌ளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அம‌ர்ந்து, சிறிது நேர‌ம் க‌ண்க‌ளை மூடிக் கொண்டார்.

ச‌ள‌ச‌ள‌த்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குர‌ல்க‌ள். 'ஆறு அற‌ரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியார‌ப் பாக்க‌ற‌து சுல‌ப‌ம்' என்ற பாலாவின் வார்த்தைக‌ள் அர்த்த‌ம் பொதிந்து காண‌ப்ப‌ட்ட‌து. ஒரு நேர‌த்தில் ஒருவ‌ர் தான். அவ‌ருக்கு எத்த‌னை நேர‌ம் ஆனாலும், அதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர் வெளியில் காத்திருக்க‌ வேண்டும். முத‌ல் ஆளாய் வ‌ந்த‌தில் சிறிது கர்வமும் கொண்டான் த‌மிழ‌வ‌ன்.

"சொல்லுங்க‌, என்ன‌ விஷ‌ய‌மா வ‌ந்திருக்கீங்க‌ ?!" என்றார் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ சாமியார் த‌மிழ‌வ‌னை நோக்கி.

வடநாட்டு சாமியான அவர் உடைந்த‌ த‌மிழில் பேசுவார் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, அவ‌ர‌து இய‌ல்பு த‌மிழ் தொடக்கம் புதிதாய் இருந்த‌து. வாளின் கூர்மையில் அறுப‌டும் க‌திராய் உண‌ர்ந்தான் அவ‌ர‌து பார்வையில். தூசி விழாத‌ பாலில் மித‌க்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திக‌ழ்ந்த‌து அவ‌ர‌து விழிக‌ள். துவைத்து அணிந்த‌ ஆடைக‌ள். குளித்த‌ தூய‌ மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !

"நான் சென்னையில் இருந்து வ‌ருகிறேன். என் பேரு த‌மிழார்வ‌ன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே கால‌ப்போக்கில் த‌மிழ‌வ‌ன் என்றாகிவிட்ட‌து. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்" என்று த‌மிழ‌வ‌ன் தொட‌ர‌, போக்குவ‌ர‌த்து போலீஸ் போல‌ கைகாட்டி நிறுத்துமாறு கூறிய‌ சாமியார், "ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க‌" என்றார்.

தமிழார்வ‌ன் சொல்ல‌ச் சொல்ல‌ ...

'அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ .... உத்தரவு வாங்கிய‌ பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?' என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.

"ஓம் ச‌ர்வேஷீ
ஓம் த‌ர்மேஷீ
ஓம் நாகேஷீ
க்லீம் ஜ்லீம் ந்லீம்
ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்
நாகேஷ்வ‌ரீஈஈஈ"

என்று உச்ச‌ரித்த‌ சாமியாரின் மேனி விய‌ர்வையில் வ‌ழிந்த‌து. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுட‌ர்க‌ள் ப‌ட‌ப‌ட‌த்த‌ன‌. புத்த‌க‌த் தாள்க‌ள் ச‌ட‌ச‌ட‌த்தன‌. கையில் ருத்ராட்ச‌ மாலையை விடாது உருட்டினார் சாமியார்.

ச‌ற்றைக்கெல்லாம் ம‌யான‌ அமைதி நில‌விய‌து அறையில்.

ந‌ட‌ப்ப‌து எதுவுமே புரியாம‌ல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் த‌மிழார்வ‌ன்.


தொடரும் .....


To read Part 1 click here.

Tuesday, September 22, 2009

(ச‌ரியான‌ லூசுப்) பசங்க ...


Photo credit: comcast.net

"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்ன‌ஞ்ச‌ல், டிவிட்ட‌ர் என்று க‌ல‌க்கிக் கொண்டிருந்த‌ன‌ர் க‌ணினியால் இணைந்த‌ ந‌ண்ப‌ர்கள்.

சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க‌ ஆர‌ம்பித்த‌ வானோடு, புக‌ழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்ட‌து.

"இல்ல‌ மாப்ள, அவ்ளோ தூரம் வ‌ர‌முடியாது சொன்னா கேளுங்க‌டா. வெளியில் ந‌ல்ல‌ ம‌ழை வேற‌. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆள‌விடுங்க‌ சாமிகளா" என்று க‌ம்ப‌ளிக்குள் சுருண்டு ப‌டுத்துக்கொண்டான். 'இந்த‌ ம‌ழையில‌ எவ‌னாவ‌து வெளிய‌ல‌ சுத்துவானா, ச‌ரியான‌ லூசுப் ப‌ச‌ங்க‌' என்று நினைத்து கோழித் தூக்க‌த்தைத் தொட‌ர்ந்தான்.

அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், ம‌றுப‌க்க‌ம் பொட்ட‌ல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவ‌ற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வ‌ருவ‌து போல‌ இருந்த‌து.

மீண்டும் செல்லோசை. 'லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே' என்று நினைத்தான். ஆனால், சிணுங்கிய‌து ர‌ம்யா.

"ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜ‌க்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவ‌ன் த‌ர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு" என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

ர‌ம்யா எப்ப‌வும் யாருட‌னும் அதிக‌ம் பேச‌ மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அத‌னாலேயே புக‌ழிற்கு ர‌ம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவ‌ளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.

பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.

'என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே' என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.

எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க‌, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.

கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் 'சோ'வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.

தூரத்தே, சாலை விள‌க்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகன‌ங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர‌ மறுப்பது போல, இப்போதைக்கு வாகன‌ங்கள் ந‌க‌ருவதாய் தெரிய‌வில்லை.

'இன்னிக்கு என்று பார்த்தா இப்ப‌டி ந‌ட‌க்க‌ணும். அழைக்காத‌வ‌ள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேர‌ம் இங்கேயே நிற்க‌ப்போகிறேனோ ? ச‌ரியா அவ‌ சொன்ன‌ நேர‌த்துக்குப் போக‌முடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை' என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.

யாரோ ஒரு புண்ணிய‌வான் 'ஒன்ப‌து ஒன்று ஒன்று' அழைத்திருக்க‌ வேண்டும். ம‌ழை வெள்ள‌த்தில் ஒளி வெள்ள‌ம் சிந்தி, சீறி வ‌ந்த‌து சீருடைக் காவ‌ல‌ர் வாகன‌ங்க‌ள். சில‌ நிமிட‌ங்க‌ளில் போக்குவ‌ர‌த்து ச‌ரிசெய்ய‌ப்ப‌ட‌ சிட்டாய் ப‌ற‌ந்தான் ர‌ம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.

ஏழ‌ரை மணி போல் ர‌ம்யாவின் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினான்.

ஹாப்பி ப‌ர்த்டே அட்டைக‌ள், பல வண்ணப் ப‌லூன்க‌ள், சிலந்தி வலைக் க‌ல‌ர் காகித‌ங்க‌ள், அல‌ங்கார‌ கேக், என்றெல்லாம் எதிர்பார்த்த‌வ‌னுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த‌ ர‌ம்யாவின் அபார்ட்மென்ட் க‌ண்டு திகைத்தான்.

செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.

"ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?"

"தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உன‌க்காக‌த் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?"

புக‌ழ் சொல்ல‌ச் சொல்ல‌, "ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்."

"என்ன சொல்றே ரம்யா ?" என்றான் புகழ் இடிந்து போன குரலில்.

"ஐம் ரிய‌லி சாரி புக‌ழ். ப‌ழைய‌ இட‌த்திலிருந்து ஒரு ப‌தினைந்து நிம‌ட‌ ட்ரைவ் தான்"

"சரி, புது அட்ரஸ் சொல்லு ..."

ம‌ழையிலும் வாடி வ‌த‌ங்கிய‌ செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன‌ புக‌ழேந்தி, எதிரே வ‌ரிசையில் த‌ன் ந‌ண்பர்களோடு ரம்யாவும் நிற்பது க‌ண்டு ட‌ன் ட‌ன்னாய் வ‌ழிந்தான் அசடை.

'யாருடா லூசு' என்ப‌து போல‌ இருந்த‌து ஒவ்வொருவ‌ரின் பார்வையும்.

ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.

'மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ' என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.

Thursday, September 10, 2009

நடுச்சாமம் - 1


Photo Credit: i.dailymail.co.uk

"இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, 'அட போங்கையா'னு ரொம்ப ஆர்வமா போச்சுங்க. போயி அரை நாழி இருக்காது..." என்று சற்று நிறுத்தினார் ராமமூர்த்தி .....

"வந்தது வந்துட்டோம், எனக்கு பேயப் பார்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை" என்று தங்குமிடம் திரும்பிய வனிதா சொல்ல, "எனக்கும் தான், எனக்கும் தான் !" என்று அனைவரும் குஷியானார்கள். "இன்னிக்கு நடுச்சாமத்துல போய் அந்தப் பேயப் பார்க்கிறோம்" என்று தோழிகள் அனைவரும் செயலில் இறங்கினர்.

அடர்ந்த இருளில் படர்ந்த கொடிகள் விலக்கி, நிலவில் ஒளியில் மெல்ல அடி எடுத்து நகர்ந்தனர் சிவகாமியும் தோழிகளும். தூரத்தே பள்ளத்தாக்கில் தெரிந்தது பலரைப் பழிவாங்கியதாகச் சொல்லப்பட்ட‌ அந்த பாழடைந்த பங்களா.

கொடிகளோடு விரிசல்கள் பின்னிய‌ நான்கு உயர்ந்த தூண்கள் கொண்ட முகப்பு. தலைக்கு மாட்டிய தொப்பி போல் சரிந்து கிடந்தது மாடியின் முக‌ப்பு அறை. கீரைப் பொட்டலத்தில் ஆங்காங்கே வெளித்தெரியும் தண்டுகள் போல நீட்டி வெளித்தெரியும் உத்திரங்கள். மொட்டை மாடி முழுதும் இடிந்து விழுந்த ஓட்டைத் தாழ்வாரம். அலைகடல் பாசி அப்பியது போன்று தரையில் எங்கும் பசுமை. நெச‌வாளியின் அறையாய் எங்கும் சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல்.

பாம்பா ? கொடியா ? எதோ ஒன்று கால்களில் இடற "ஐயோ, அம்மா, என்ன விட்டுருங்க, நான் வர‌ல, ரூமுக்குப் போறேன்" என்று அலறிய வனிதாவை, "ஏய் என்னாச்சு ?" என்று தோழிகளும் சேர்ந்து அலறினர்.

"ரூமில் இருந்த வரைக்கும், 'பயமா ? எனக்கா ? இதுக்கெல்லாம் போயி பயப்படறீங்க ?' என்று நீ தானே முதலில் கிளம்பினே" என்றாள் ஸ்வப்னா.

"அதில்லடி. நான் பேய்க்கெல்லாம் பயப்படல. பாம்பு திரியுது இங்க. சர்ருனு இப்ப தான் என் காலத் தொட்டுப் போகுது !" என்று சிலிரித்தாள்.

"நம்ம வனிதாவைப் பயமுறுத்திய பாம்பப் பாருங்கடி" என்று பக்கத்தில் கிடந்த பழைய சைக்கிள் டயரை எடுத்துக் காண்பித்து, ஸ்வப்னா சிரித்தாள்.

"ஏய், கீழ போடு. எல்லாம் காரியத்துக்கு வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான் பங்களாவை அடைந்து விடுவோம். யார் யாரு என்ன என்ன பண்ணனும்னு ஞாபகம் இருக்கு தானே ?! கெளம்புங்க கெளம்புங்க" என்று துரிதப்படுத்தினாள் சிவகாமி.

பழைய தெம்பு வரப் பெற்ற தோழிகள், பயம் களைந்து தொடர்ந்து பயணித்தனர். பங்களாவின் கிட்டே நெருங்க நெருங்க, ஏனோ ஒரு வித பயம் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. சரியாக அப்போது "ஊவ்வ்வ்வ்" என்று எங்கிருந்தோ ஒரு நாய் கத்த, அடைபட்ட கூண்டு திறக்க, விடுபட்டுப் பறந்த குருவிகளாய், எட்டுத் திக்கும் பறந்து மறைந்தனர் தோழிகள்.

சற்றைக்கெல்லாம் மயான அமைதி. சுற்றிலும் பார்த்தாள் சிவகாமி. தன்னைத் தவிர அங்கும் யாரும் இல்லை ! முதன்முறையாய் உதிரம் உதரலெடுக்க ஆரம்பித்தது அவளுள்.

"சரியா ராத்திரி பண்ணெண்டு மணிக்கு தான் அந்தப் பேய் வெளிய வரும் !" என்ற‌ ராமமூர்த்தியின் வாச‌க‌ங்க‌ள், நெஞ்சுக் குழிக்குள் டைப் அடிக்க‌, க‌டிகார‌த்தைப் பார்த்தாள். மணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி எட்டு. 'அவர் சொன்ன‌ போது, ஏதோ ஸ்கூல் பசங்க அடிக்கும் ஜோக் போல‌ இருந்த‌து. ஆனால் இப்ப‌ நிலைமையே வேறு ! இருந்து பார்த்து விடுவோமா ? அல்ல‌து தோழிக‌ள் போல அடித்துப் பிடித்து ஓடிவிடுவோமா ?' என்று சிந்தித்து மீண்டும் க‌டிகார‌த்தைப் பார்த்தாள். ம‌ணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி ஒன்ப‌து !

ப‌ங்க‌ளாவின் வெகு அருகாமையில் இருந்தாள் சிவகாமி. ருபெக் ருபெக் என்று த‌வ‌ளைக் க‌த்த‌லும், கீச் கீச் என‌ சில் வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌மும், மெலிதாய் தீண்டிச் செல்லும் தென்ற‌லும், அடர்ந்த செடிகொடிகளுக்கு மத்தியில் நிலவொளியில் மிளிறும் பழைய வெள்ளைக் கட்டிடமும், ஒரு ர‌ம்மிய‌மான‌ சூழ‌லைத் த‌ந்திருக்க‌, ஏனோ ப‌ய‌மே மேலோங்கிய‌து.

தென்ற‌ல் காற்று மெல்லச் சீற‌ ஆர‌ம்பித்த‌து. ஷ்யூயூயூஊஊஊய்ய்ய்ய் என்று சுழன்ற காற்றின் ச‌த்த‌த்தில், அண்ட‌மே சுழ‌லுவ‌தாய் உண‌ர்ந்தாள் சிவ‌காமி.

ம‌ணி ப‌ண்ணிரெண்டு !

ப‌ங்க‌ளாவின் வாச‌லில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புக‌ள் எறிவ‌து போல‌ அப்ப‌டி ஒரு பிர‌காச‌ம். த‌லையில் முக்காடு போட்ட‌து போன்ற‌ வெள்ளை உடுப்பில் ஓர் உருவ‌ம். மெல்ல‌ சிவ‌காமி இருந்த‌ திசை நோக்கி முன்னேறிய‌து.

சிப்பிக்குள் சுருளும் நத்தை போல புத‌ருக்குள் நன்கு புதைந்து கொண்டாள்.

ஒருவித‌ ம‌ல்லிகை வாச‌னை காற்றில் மித‌ந்த‌து. கால்க‌ள் இருக்கிற‌தா என‌ப் பார்த்தாள், த‌ரை ப‌ட‌ர்ந்து வ‌ந்த‌ சேலையில் ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை. இர‌ண்டு கைக‌ள் இருப்ப‌தை உறுதிப்ப‌டுத்திக் கொண்டாள். கிட்டே நெருங்க‌ நெருங்க‌, அழ‌கான‌ தேவ‌தை போல‌ காட்சி த‌ந்தது அவ்வுருவ‌ம்.

தோளில் தொங்கிய‌ டிஜிட்ட‌ல் கேமிராவைத் த‌ட்டுத் த‌டுமாறி எடுத்து, க்ளுக்கிய‌ ச‌த்த‌த்தில், திரும்பிப் பார்த்த‌து அவ்வுருவ‌ம். தேவதை முகம் மாறி, குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், குவியிழ‌ந்த‌ நாசியும், க‌றை ப‌டிந்த‌ ப‌ற்க‌ளும், கூரிய‌ ந‌க‌க் க‌ர‌ங்க‌ளுமாக‌ காட்சி அளித்த‌து உருவ‌ம். 'ச‌ந்தேக‌மே இல்லை, பேய் பேய்ய்ய்ய் பேயே தான் !' என்று மென்று விழுங்கிய‌ எச்சில் தொண்டைக்குழிக்குள் இற‌ங்காம‌ல் ப‌டுத்திய‌து. 'தெரியாம‌த் தான் வ‌ந்துவிட்டோம். ராம‌மூர்த்தி அத்த‌னை சொல்லியும் கேக்காம‌ வ‌ந்து விட்டோமே !' என்று ப‌ட‌ப‌ட‌க்க‌, விய‌ர்த்துக் கொட்டி முதுகுத் த‌ண்டில் வ‌ழிந்தோடிய‌து.

"அதான் பார்த்துவிட்டாய் அல்லவா ? வெளியில் வா !" என்ப‌து போல‌ சிவ‌காமியை நோக்கி த‌ன் உலர்ந்த க‌ர‌ங்க‌ளை நீட்டிய‌து. ம‌ர‌ப்ப‌ட்டை பிரிந்து வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌க்கிளை போல‌ இருந்த‌ அத‌ன் கரும்பச்சைக் க‌ர‌ம் மேலும் திகிலூட்டிய‌து.

"வேண்டாம். நான் இனிமே இங்க‌ வ‌ர‌ல‌. என்ன‌ விட்டுடு...." என்று ப‌ய‌த்தில் க‌த்தி பின்னோக்கி த‌வ‌ழ்ந்து, அருகில் இருந்த‌ கிண‌ற்றில் தலை குப்புற விழுந்தாள் சிவ‌காமி.

கிணற்றின் உடைந்த மதிலில் அமர்ந்திருந்த காட்டுப்பூணை ஒன்று மியாவ் என்று கத்தி குதித்தோடியது.

தொடரும் .....

Click here to read part 2

Wednesday, September 9, 2009

சென்னை - 2020ல் ஒரு நாள்


Photo credit: wikimedia.org

"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.

தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது ச‌ந்தீப்புக்கு.

மனைவியும் பிள்ளைகளும் அவர்கள் அம்மா வீட்டில் திருச்சியில் இருக்க, சென்னை அண்ணா சாலையில் அதுவும் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நடந்திருந்தான் சந்தீப்.

இருபது வருடங்கள் அயலகத்தில் எல்லாவற்றையும் ஆன்லைனில் பண்ணி அலுத்துப் போனதால், சொந்த ஊரில், நேரில் சென்று ஒவ்வொரு இடமாகப் பார்க்கவும் இன்று எண்ணியிருந்தான். புர‌சைவாக்க‌ம் வீட்டில் இருந்து கிள‌ம்பி, நண்பன் ஸ்ரீராம் அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகில் ட்ராப் செய்தான். அங்கு கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, மெதுவே நடந்தான். முதலில் விகடன் அலுவலகம். இருபது ஆண்டுகள் முன்னர் எத்தனை முறை சர் சர்ரென்று பைக்கில் இந்த அண்ணா சாலையில் ப‌ய‌ணித்திருப்பான். ஒரு நாள் கூட‌ உள்ளே சென்று பார்க்க‌த் தோன்றிய‌தில்லை. எதிர்பார்ப்பை விட மிக‌ எளிதாக‌வே இருந்த‌து அலுவ‌ல‌க‌ம். இங்கே, இப்ப‌டி, மேலே என‌ ப‌ல‌ர் வ‌ழிகாட்ட‌ ஒவ்வொரு அறையாக‌க் க‌ட‌க்கையில் 'எங்க‌ ம‌த‌ன் உட்கார்ந்திருப்பாரு ? இது ஆசிரிய‌ர் அறையா இருக்குமோ ? யாராவ‌து எழுத்தாள‌ர்க‌ள் பார்க்க‌ முடியுமோ ?' என்றெல்லாம் எண்ணி ந‌ட‌ந்த‌வ‌னுக்கு எதிர்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌டித்த புத்தகங்களில் கணக்கெழுதும் பெரிய‌வ‌ர்களோ அல்லது கையில் சில‌ தாள்க‌ளுட‌ன் அங்கும் இங்கும் சுழ‌ன்ற‌ ஆபிஸ் பாய்க‌ளோ தான். "என்ன‌ங்க‌ அமெரிக்கா ரிட்ட‌ர்ன் மாதிரி இருக்கீங்க‌. புத்த‌க‌ம் வாங்க‌ இங்க‌ வ‌ந்தேங்க‌றீங்க‌. இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சார்" என்றார் ஒரு ஊழிய‌ர்.

அத‌ன் பின் ஹிக்கின்பாத்த‌ம்ஸ். பழைய கட்டடத்தை, சில பல வர்ணங்கள் பூசி புதுப்பித்திருந்தார்கள். 'ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், மிஸ்டரி, ஹாரர்' என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பர அட்டைகள் வைத்து ஒழுங்குபடுத்தி பயமுறுத்தியிருந்தார்கள். 'கிட்ஸ்' செக்ஷன் சென்று ஏழெட்டு வ‌ய‌துப் பிள்ளைக‌ளுக்கான‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை அள்ளிக் கொண்டான். "சார், இதெல்லாம் ரெஃப‌ர‌ன்ஸ் ஒன்லி. உங்க‌ளுக்கு வேண்டும் எனில் ஆன்லைனில் ஆர்ட‌ர் ப‌ண்ணுங்க‌ள்" என்றார் ஏர்ஹோஸ்ட‌ஸ் போல‌ இருந்த‌ இளம் காஷிய‌ர்.

அடுத்து 'எல்.ஐ.சி'யா 'ஸ்பென்ஸரா' என யோசித்தான். 'எல்.ஐ.சி. போனாலும் இதே கதை தான் சொல்வார்களோ ? எதுக்கும் போய் பார்ப்போம், அதன்பின் ஸ்பென்ஸர் சென்று மதிய உணவு முடிக்கலாம்' என எண்ணினான். முத‌ல் மாடியிலேயே, "அதான் ஆன்லைனில் எல்லா விப‌ர‌ங்க‌ளும் இருக்கே !" என்று அனுப்புவ‌திலேயே குறியாய் இருந்த‌ன‌ர். சில‌ மாடிக‌ள் சென்று, த‌ன்னுடைய‌ இருப‌த்திஐந்தாண்டு பாலிஸி ப‌ற்றி சில விபரங்கள் கேட்க, "ஏம்பா, இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ பாலிஸி வ‌ந்து போச்சே, நீ எந்த‌ப் பாலிஸி ப‌ற்றி சொல்றே ?!" என்றார் த‌டித்த‌ ப்ரேம் க‌ண்ணாடிக்குள், த‌வ‌ழும் கோலிகுண்டு க‌ண்க‌ள் கொண்ட‌ பெரிய‌வ‌ர். பாலிஸி எண்ணைச் சொன்னான். குனிந்து நிமிர்ந்து, மானிட‌ரையும், விசைப்ப‌ல‌கையையும் பார்த்து ஒற்றை விர‌லில் ஏதோ த‌ட்டினார். "தெரிய‌ல‌ த‌ம்பி, நீங்க‌ எதுக்கும் ஆன‌லைனில் செக் ப‌ண்ணுங்க‌, ட‌புள்யூ, ட‌புள்யூ....னு அடிச்சு, என்கொயரி ப‌ட்டன் அழுத்தி, உங்க‌ கேள்விக‌ளைக் கேளுங்க, பதில் சொல்வாங்க‌" என்று, ஏழாவ‌து மாடியிலிருந்து த‌ள்ளிவிடாத‌ குறையாக‌ ச‌ந்தீப்பை அனுப்பி வைத்தார்.

ஸ்பென்ஸ‌ர் க‌ஃபேயில் எதிர்பார்த்து வ‌ந்த‌ வெஜி ப‌ஃப் இல்லை, மினி இட்லி இல்லை, வெரைட்டி ரைஸ் இல்லை. எங்கு நோக்கினும், பீட்ஸா, ப‌ர்கர். 'இருபது வருடங்களாக சாப்பிட்டு அலுத்துப் போய், திரும்பவும் இவையா ?' என்று ஒதுக்கி, ம‌ன‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளிலேயே நாட்டம் கொள்ள‌, 'முகுந்தன் இட்லி கடை' ப‌ற்றி ஏற்க‌ன‌வே கேள்விப் ப‌ட்டிருந்தான். அப்போதே நிறைய‌ கிளைக‌ள் தோன்றின‌ சென்னையில்.

ஸ்பென்ஸருக்கு எதிரில் சற்று தள்ளி 'முகுந்தன்' என்று தான் பெயர் பலகை பார்த்தான். உள்ளூர கல்யாண சமையல் ஓட்டமெடுத்தது. சில தூரம் நடந்து, ட்ராஃபிக் லைட்டில் க்ராஸ் பண்ண சாகசம் இன்றி, மேலும் நடந்து, அன்டர்க்ரௌண்ட் கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலும் இருட்டாகவே இருந்தது. வாரயிறுதியில் எப்படியோ, இப்போது கூட்டம் அதிகம் இல்லை. மேசையில் அமர்ந்து காத்திருந்தான். வழக்கம் போல தண்ணீர் டம்ளர் வைத்து, 'ஆர்டர் என்ன சார் ?' என்றார் சீருடை சர்வர். இருபது வருடத்திற்கு அப்புறமும் அப்படியே இருக்கே இந்த முறை. நல்ல வேளை இங்கேயும் ஆன்லைன் என்று சொல்லி அனுப்பிவிடவில்லை என வியந்து மகிழ்ந்தான்.

"ரெண்டு இட்லி கொடுங்க முதலில்" என்றவனை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஏற இறங்கப் பார்த்த சர்வர், "அதெல்லாம் இல்லை சார் என்றார்"

"சரி, தோசையாவது இருக்கா ?" என்றவனுக்கு "இல்லை" என்றே பதிலளித்தார்.

'ம‌திய‌ நேர‌த்தில் வ‌ந்து இட்லி, தோசை கேட்டு இம்ஸை பண்றானே' என்ப‌து போல இருந்த‌து ச‌ர்வ‌ரின் பார்வை.

"சரி என்ன தான் இருக்கு ?" என்றான் ச‌ற்று கோப‌மாக‌.

"பீட்ஸா, பர்கர், லசானியா, ஸ்பெகத்தி, பாஸ்டா, பார்மஜானா சிக்கன், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் டீ, ஹெர்ப் டீ, கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், டாக்ட‌ர் பெப்ப‌ர் ..." என்று சர்வரின் பட்டியலில், கிர் என்று தலைசுற்றி கீழே விழாத குறையில் 'முகுந்தன் பீட்ஸா கடை' மேசையில் சரிந்தான் சந்தீப்.

Thursday, September 3, 2009

அந்த ஃபாரினர் தான் !


Photo Credit: olx.in

"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.

"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?" என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், "கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்" என்று ஓடினாள் அருள்மொழி.

"இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி... என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்..." என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.

ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.

"இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி" என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.

"க்ரேட்... இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ" என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.

"எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!" என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.

இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.

"மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, 'க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்'னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்." என்றான் ர‌வி.

"அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்." என்றாள் த‌மிழ‌ர‌சி.

"வர்றவன் எப்படிப்பட்டவனோ ?" என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.

"யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு" என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.

"என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?" என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.

"அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, அந்த ஃபாரினர் தான் !" என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து.

Wednesday, July 29, 2009

தங்கக் கலசம்


Photo Credit: wikimedia.org

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தியின், கற்பனைக் கதையாக்கம்.

***

"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்க‌ல் ஷாப்பிலிருந்து செல்வி.

"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி போயிட்டே. கண்டுக்கவே மாட்டேங்கிற இப்பல்லாம்" என்றார் எலக்ட்ரிக் கடை மாணிக்கம், செய்தித்தாள் வாசிப்பினூடே.

"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே. நம்ம தம்பி, சின்னத்தா மகென் கணேசன், விசா கெடச்சு துபாய்க்கு போனாப்ல. அதேன் சென்னைக்குப் போயி ப்ளைட் ஏத்திவிட்டு வந்தேன். ந‌ம‌க்கு இதேன் கெதினு இந்தா திரும்பி வ‌ந்திட்டேன்ல‌ !!!" என்றான் ஏகாம்ப‌ர‌ம்.

இது அவருக்கும் தெரியாமலில்லை, இருந்தும் ஒரு சின்ன வெரிஃபிகேஷன்.

செவ்வூர் பிஸின‌ஸ் ம‌ட்டும் ப‌த்தாது, ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் எல‌க்ட்ரிக் ச‌ப்ளை மாணிக்க‌ம் தான். அத‌னால‌ பட்டனத்துல செய்யும் ஆர்டர், ந‌டுநிசி சரக்கு ர‌யில்ல வந்து ப‌க்க‌த்து ட‌வுன்ல‌ இற‌ங்கும். அதை எப்போதும் கையோடு எடுத்து வ‌ந்துவிடுவார் மாணிக்க‌ம். போத‌த‌ற்கு ஆடு,மாடு,விவ‌சாய‌ம் என‌ ப‌ல்துறைக‌ளிலும் கால் ப‌தித்திருப்ப‌வ‌ர்.

"ச‌ரி ச‌ரி, ம‌ற‌க்காம‌ சாய‌ந்திர‌ம் ந‌ம்ம‌ தோட்ட‌துக்கு வ‌ந்திரு. நாளைக்கு ஆட்டுச் ச‌ந்தைக்கு ஆடுக‌ள‌ ரெடி ப‌ண்ண‌னும். வ‌ந்துருவியா, இல்ல‌ போன் போட்டுச் சொல்ல‌ணுமா ?" என்ற மாணிக்க‌ம் அண்ண‌னின் ந‌க்க‌லுக்கு, சிறிதும் கோப‌ப்ப‌டாம‌ல் "கவலப்படாதீங்க, வ‌ந்திர்றேண்ணே !" என்றான் ப‌வ்விய‌மாக.

இதே போல‌ எடுப்பார் கைப்பிள்ளையாக‌ எல்லோருக்கும் வேலை பார்க்கும் "மாது" தான் ந‌ம்ம‌ ஹீரோ ஏகாம்ப‌ர‌ம்.

வான் முட்டும் தென்னையும் ப‌னையும், நெருக்கி வளரும் நெல் க‌திரும், அடர்ந்து வளரும் க‌ரும்பு வ‌ய‌ல்க‌ளும், ஆங்காங்கே மோட்டார் பம்பு செட்டுகளும், அல்லி பூத்த குளத்தங்க‌ரைக‌ளும், கோவில் மண்டபப் ப‌டித்துறைக‌ளும், ஆற்றோட்ட‌ப் பாதை என‌ வ‌ளைந்து நெளிந்த‌ வீதிக‌ளும், அதில் ப‌ல‌ வீடுக‌ளும், ஊருக்கோர் க‌டைவீதியும் என‌, பெரிய‌ குறை என்று எதுவும் சொல்ல‌ முடியாத‌ அள‌வில் திக‌ழ்ந்த‌து செம்மண் புழுதி பறக்கும் செவ்வூர்.

"ஆத்தாவுக்கு கோவில் க‌ட்டி ப‌ன்னெண்டு வ‌ருச‌ம் ஆச்சு. ஒரு கும்பம் வச்சு, கும்பாபிஷேகம் பண்ணனும்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், யாராவ‌து கேக்க‌ணுமே... இந்த‌க் க‌ட்டை போற‌துக்குள்ள‌யாவ‌து க‌ட்டுமான‌த்த‌ பாருங்க‌ப்பூ, நானும் இருந்து பார்த்துட்டுப் போறேன்" என்று பொக்கை வாய் திற‌ந்தார் என்ப‌து வ‌ய‌து அர்ச்சுன‌ன், குள‌த்த‌டி மீட்டிங்கில் ஒரு நாள்.

"என்ன‌த்த‌ ஆண்டு அனுப‌விச்சாலும் போற‌துக்கு யாருக்கு தான் மனசு வருது. இங்கேயே இருப்பதற்கு ஏதாவ‌து சாக்கு வேற‌ ! என்ன‌ பெருசு ?!" என்றார் ரைஸ்மில் முத்து.

குவ‌ளைத் தேனீரை, குட‌ம் குட‌மாய் கொட்டிய‌து போல த‌க‌த‌கத்த‌து குள‌ம். ந‌ண்டும் சிண்டுமாய் சில‌ வாண்டுக‌ள் வ‌ந்து த‌ப‌த‌ப‌வென‌ நீரில் குதித்த‌ன‌. ப‌ட்டாம்பூச்சியென‌ நீந்தி ஆட்ட‌மும் போட்ட‌ன‌. க‌ரையோர‌ நிழ‌ல் ம‌ர‌ங்க‌ள் காற்றில் க‌விதை பாடின‌. சற்று தள்ளி, ஒரு சுற்று த‌னைச் சுற்றி, ம‌றுமுனை முள்ளில் மாட்டி, சில‌ அடிக‌ள் ந‌ட‌ந்து வ‌ந்து, சேலைத‌னைக் காய‌வைத்தாள் செம்ப‌க‌ப் பாட்டி.

'அருணா ஆடியோஸ்' என்று சிகப்பில் பெரிதாக எழுதிய பச்சைக் குழாய்களை கழுவி எடுத்துக் க‌ரை ஏறினான் ஏகாம்பரம்.

"யாருய்யா அது, ஏகாம்பர‌ம் தான‌ ?" என அவளைக் கடந்த ஏகாம்பரத்தை நிறுத்தினாள் பாட்டி.

"என்ன‌ கெழ‌வி, நாந்தேன். என்ன‌ விச‌ய‌ம் தெரிய‌ணும் உன‌க்கு இப்ப‌ ?" என்றான் கிழ‌வியின் எதிர்பார்ப்பறிந்த‌ ஏகாம்ப‌ர‌ம்.

"இந்த‌ ஆம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌மோ பேசிக்கிறாக‌ளே, என்ன‌து அது ?" என்றாள்.

"ஹிம்... பொம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌ பேசிக்கிறாக‌ளோ அதே தேன்" என்றான்.

"அதில்ல‌டா, கோவில் கும்பாபிஷேக‌ம்னு ஏதோ காதில‌ விழுந்த‌தே !"

"காரியத்தில குறியா இருப்பியே. ஏன், நீயும் இருந்து அதெல்லாம் பார்த்துட்டு போக‌ணுமாக்கும் ?!"

"அதிலென்ன‌ த‌ப்பு ! நீந்தேன் எல்லோரு வீட்டுக்கும் போறியே. அப்ப‌டியே சொல்ல‌ வேண்டிய‌வங்க‌ கிட்ட‌யும் சொல்லி, கும்பாபிஷேக‌ம் ந‌ட‌த்த‌ வ‌ழிய‌ப் பாருப்பூ. புண்ணிய‌மாப் போகும் உனக்கு !"

ஏகாம்ப‌ர‌மும் செல்லும் இட‌மெல்லாம் சேதி ப‌ர‌ப்ப‌, ம‌துரை மீனாட்சி கோவில் ப‌ட்ட‌ர் தியாக‌ர‌ஜ‌னை வைத்து ப‌ட்டென்று கும்பாபிஷேக‌ தேதியும் குறித்த‌ன‌ர். தேரடியில் ஊர் கூடி ஒரு கூட்டமும் போட்டனர்.

"ஏய்யா ப‌ண்ற‌து ப‌ண்றோம். த‌ங்க‌த்தில‌ ஒரு கும்ப‌ம் செஞ்சு, கொஞ்ச‌ம் விம‌ரிசையா கும்பாபிஷேக‌த்த‌ ந‌ட‌த்துவோமே ! ப‌க்க‌த்து ப‌ட்டி தொட்டி எல்லாம் போக‌ ப‌ட்ட‌ன‌த்து ஆளுக‌ளும் அப்ப‌ தான் ப‌டை எடுக்கும் நம்ம கோவிலுக்கு !" என்றார் அர்ச்சுன‌ன்.

'கேக்க நல்லாத்தேன் இருக்கு ! அவ்வ‌ள‌வு த‌ங்க‌த்துக்கு எங்க‌ போற‌து ?' என வாய் பிளந்தது கூட்டம்.

'மெல்லிசா தகடு போல செஞ்சு கும்பத்துல சுத்திருவோம்' என்று முடிவு செய்தனர்.

சிறுக‌ச் சேக‌ரிக்கும் சிறு குருவியின் தானிய‌மாய், த‌ங்க‌த்தை சேக‌ரிக்க‌ ஒரு சிறு குழுவும் உருவான‌து.

செம்ப‌க‌ம் - க‌ம்ம‌ல், சுமார் ஒரு கிராம்
அர்ச்சுன்ன‌ன் - மோதிர‌ம், கா ப‌வ‌ன்
முத்து - தாய‌த்து, அரை ப‌வ‌ன்
செல்வி - மூக்குத்தி (க‌ல்லு வ‌ச்ச‌து), தோராய‌மா ஒன்ன‌ரை கிராம்
...

குழுத்த‌லைவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ நோட்டில் எழுதிக் கொண்டான் ஏகாம்ப‌ர‌ம்.

நாள‌டைவில் தேவையான‌ அள‌வுக்கு த‌ங்க‌ம் சேர, அவற்றை தங்கப்பன் ஆசாரியிட‌ம் கொண்டு ஒப்ப‌டைத்தான் ஏகாம்ப‌ர‌ம். அவ‌ரும் எல்லாவ‌ற்றையும் வாங்கி, ச‌ரி பார்த்து, எடை போட்டு, 'நாப்ப‌த்தி நால‌ரை வ‌ருதுடாப்பா' என்றவர், ச‌ரி, நான் ஒரு அரை ப‌வ‌ன் போட்டு நாப்ப‌த்தி அஞ்சாக்கிக்க‌றேன் என்றும் சொன்னார்.

கும்பாபிஷேக‌ச் செய்தி ஈமெயில் இல்லாம‌லேயே ப‌ர‌வ‌, அப்போதிருந்தே கூட்ட‌ம் க‌ளை க‌ட்ட‌த் தொட‌ங்கிய‌து செவ்வூரில்.

யானை மீதேற்றி, மிக்க‌ ம‌ரியாதையோடு வீதி உலா வ‌ர‌ச் செய்து, க‌ற்ப‌கிர‌க‌ கோபுர‌த்தில் த‌ங்க‌க் கலச‌‌‌த்தை வைப்ப‌தாக செய்திருந்த‌ ஏற்பாடும் பக்கதில் ப‌ல‌ ஊர்க்கார‌ர்க‌ளின் புருவ‌ங்க‌ளை வில்லென‌ உய‌ர்த்திய‌து !

வழக்கம் போல‌ ஒரு நடுநிசியில் ச‌ர‌க்கை எடுத்துக் கொண்டு திரும்பினார் மாணிக்கம். ஊருக்குள் நுழைகையில், சைக்கிளின் பின்னால் சாக்குப் பையுடன் ஓருருவம் கடந்து செல்வதைப் பார்த்து, "ஏய் யாருய்யா இது இந்த நேரத்தில ?" என்று கேட்டார்.

உருவ‌த்திட‌ம் இருந்து ஒரு ப‌திலும் இல்லை.

த‌ன‌து ய‌மாஹாவை உருவ‌த்தின் திசையில் திருப்பி, வெளிச்சத்தில் பார்க்க‌, "நீ செவ்வூர்கார‌ன் இல்லியே ! யாருய்யா நீ ?" என்று அத‌ட்டினார்.

"யாராயிருந்தால் என்ன" என்ப‌து போல முறைத்து, "ஏன், ப‌க்க‌த்து ஊருதேன் ந‌ம‌க்கு. எங்க‌ அக்கா வீட்டுக் போயிட்டு இப்ப‌ எங்க‌ ஊர‌ப் பார்த்துப் போறேன்" என்றான்.

"ச‌ரி, சைக்கிள்ல‌ பின்னாடி என்ன‌ வ‌ச்சிருக்கே ?" என்றார் மாணிக்க‌ம்.

"எல்லாத்தையும் உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ணுமாக்கும். நீங்க‌ என்ன‌ போலீஸா ?" என்று சீறினான்.

"சொல்ல‌ வேணாம். ஆனா நேர‌ம் கால‌ம்னு ஒன்னு இருக்கில்ல‌. நீ எந்த‌ ஊர்க்கார‌னோ. ஊருக்குள்ள‌ ஒரு விஷேஷ‌ம்னு ந‌ட‌க்கும்போது, அர்த்த ராத்திரியில வெளியூர்க்கார‌ன் வ‌ந்தா கேக்க‌த்தேன் செய்வோம் !" என்று ஸ்டாண்ட் போட்டு நிறித்தினார் ய‌மாஹாவை.

"நீயா சொல்றியா, இல்ல நான் வ‌ந்து பாக்க‌வா ?" என்று ச‌ற்று க‌டுமை காட்டினார் குர‌லில் மாணிக்க‌ம்.

ஒரு ப‌திலும் இல்லாம‌ல் தொட‌ர்ந்த‌ வெளியூர்க்கார‌னை, "சொல்லிகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே ..." என்று அதிவேக‌ ந‌டையில் அவன் சைக்கிள் கேரியரைப் பிடித்து நிறுத்தினார்.

பேல‌ன்ஸ் த‌டுமாறி சைக்கிள் ச‌ரிய‌, சாக்கு மூட்டையும் ச‌ரிய‌, க‌ட்டு பிரிந்து, க‌ரு க‌ருவென்று உருண்டோடிய‌து ப‌ன‌ங்காய்க‌ள்.

ச‌ட்டென்று சிந்த‌னை சிற‌க‌டிக்க, அவனை எட்டிப் பிடித்து, த‌ன் மேல் துண்டால் அவ‌ன் கைக‌ளைப் பின் த‌ள்ளி ந‌றுக்கென்று க‌ட்டியும் போட்டார்.

"என்ன‌ங்க‌ ப‌ண்றீங்க‌. இதெல்லாம் ந‌ல்ல‌துக்கில்ல‌. நாங்க‌ யாருனு தெரியும்ல‌. நாளைக்கு காலையில் பாரு, இங்க‌ அத‌க‌ள‌ம் ஆக‌ப்போகுது !" என்று திமிறிய‌வ‌னின் வாயில் த‌ன் கைக்குட்டையைத் திணித்தார்.

"என்ன‌ அத‌க‌ள‌ம் ஆனாலும் ச‌ரி. நான் சொல்ற‌த‌ ந‌ல்லா கேட்டுக்க‌. ஒரு ச‌ந்தேக‌த்தின் பேருல‌ தான் உன்னைக் க‌ட்டி வ‌ச்சிருக்கேன். உன் மேல‌ ஒரு த‌ப்பும் இல்லேண்ணா உன்னை விட்டுருவோம். இல்ல‌, ம‌வ‌னே அத‌க‌ள‌ம் உன‌க்குத்தேன். நாஞ்சொல்ற‌து புரியுதுல்ல‌ !!!" என்றார் மாணிக்கம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌.

இருட்டோடு இருட்டாய் அவனை தன் வீட்டுக்கு இழுத்தும் வந்தார்.

"உன் பேரு என்னய்யா ?" என்ற மாணிக்கத்தின் கேள்விக்கு 'இப்படி வாயில துணிய வச்சி பேரு கேட்டா நான் என்னனு சொல்றது' என்பது போல விழித்தான் அழ‌க‌ர்.

கடைவீதிக்கு சென்று மெடிக்கல் ஷாப் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த‌ ஏகாம்ப‌ர‌த்தைத் த‌ட்டி எழுப்பினார் மாணிக்க‌ம்.

"எலேய் எழுந்திரிடா. போயி ஊருக்குள்ள‌ எல்லார் வீட்டுல‌யும் ந‌கை, பொருள் ஏதாவ‌து காணாம‌ போயிருக்கானு பாக்க‌ச் சொல்லு. ஏதாவ‌து த‌ப்புத் த‌ண்டா ந‌ட‌ந்திருந்தா அவுங்க‌ள‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு உடனே வ‌ர‌ச் சொல்லு. ம்ம்ம் சீக்கிர‌ம். ஓடு, ஓடு. மொதல்ல ஆசாரி வீட்டுக்குப் போ..." என்று விர‌ட்டினார்.

நினைத்த‌து போல‌வே மாணிக்க‌ம் வீட்டுக்கு ஆசாரி ப‌த‌றி அடித்து ஓடி வ‌ந்தார். "இப்ப‌த்தேன் க‌ல‌ச‌த்தைப் பார்த்துட்டு ச‌த்த‌ க‌ண் அச‌ந்தேன், அதுக்குள்ள‌ காணாம‌ போச்சே... ஏதாவ‌து சாமி குத்த‌மால்ல ஆக‌ப்போவுது" என்று அழுது புல‌ம்பினார்.

காற்றின் வருகையில் சடசடக்கும் சருகுகளாய், மாணிக்கம் வீட்டில் உரையாடிச் சேர்ந்தது ஊரே ! அவர் வீட்டு மாட்டுக் கொட்ட‌கையின் மூலையில் கால் ம‌ட‌க்கிச் ச‌ரிந்திருந்தான் அழ‌க‌ர்.

கறுந்திரை வில‌க்கி வெண்திரை ச‌ரிய ஆரம்பிக்கையில், போலீஸோடு ஆஜ‌ரானான் ஏகாம்ப‌ர‌ம்.

"ராத்திரில திருடுனத ஒடனே எடுத்துகிட்டு போனா, யாருட்டயாவது மாட்டிக்குவோம். எங்கேயாவ‌து வ‌ச்சிட்டு ப‌கல்ல‌ வ‌ந்து எடுத்துக்க‌லாம்னாலும் சிக்க‌ல்தேன். அதான் ராவோடு ராவா ப‌னைம‌ர‌த்துல‌ ஏறி ப‌துக்கிட்டு, அதுல‌ கெட‌க்க‌ற‌ காய்க‌ள‌ வெட்டி சாச்சுட்டு, மூட்டையில‌ அத‌க் க‌ட்டி ஊருக்கு போற‌ மாதிரி போயிட்டு, ம‌றுநா வ‌ந்து, பொருள எடுத்துகிட்டு, கூட்ட‌த்தோட‌ கூட்ட‌மா க‌ல‌ந்து வெளியேறிருவோம் !" என்று ப‌ன‌ங்காட்டில் வைத்து அழ‌க‌ரின் வாக்குமூல‌த்தை ப‌திவு செய்த‌து போலீஸ்.

Monday, July 27, 2009

ஊஞ்சல்


Photo Credit: photographersdirect.com

தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர்.

நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் தான் அவனை நிறுத்தி வைக்கும். முக்கால்வாசி நாள், அதில் கால் நீட்டி, ஒரு ப‌க்க‌ க‌ம்பியில் தலைகாணி வைத்து, அதில் சாய்ந்து, மெல்ல ஆடிக் கொண்டு, பேப்ப‌ர் வாசித்துக் கொண்டிருப்பார், ரிடைய‌ர்ட் தாத்தா ப‌த்ம‌நாப‌ன். பேப்ப‌ர் ப‌டிக்கிற‌ மாதிரி, வீதியில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து, ஏது ந‌ட‌க்கிற‌து என‌வும் நோட்ட‌ம் விடுவார், என்பார்க‌ள் அவ‌ரை.

அன்று ஒரு நாள் தாத்தாவைக் காணோம். ஓடிப் போய் ஒரு முறையாவது ஊஞ்ச‌லில் உட்கார்ந்து பார்த்துவிட‌ணும் என்று நினைத்தான். ஆனால், ஆளுய‌ர அல்ஷேஷ‌ன், க‌ம்பி கேட்டினுள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது கண்டு ப‌ய‌ந்து பின் வாங்கினான்.

அன்றிர‌வு, சாப்பிட்டு விட்டு அம்மாவின் ம‌டியில் த‌லை சாய்த்து படுத்திருந்தான் சௌந்த‌ர். ஊஞ்ச‌ல் அவ‌ன் ம‌ன‌தை விட்டு அக‌லுவ‌தாய் இல்லை.

"தூங்கு சௌந்தர். நேரம் ஆச்சு பாரு. நாளைக்கு ஸ்கூலுக்கு போக சீக்கிரம் எந்திரிக்க வேணாம் ?!" என்றாள் அம்மா.

"அம்மா அந்தத் தாத்தா வீட்டுல ஒரு ஊஞ்சல் இருக்கு பாத்திருக்கியா ? எனக்கும் அதுமாதிரி ஒன்னு வாங்கித் தாயேன் ?!"

"ஊஞ்ச‌லா ... இந்த‌ குட்டியூண்டு வீட்டுல‌ எப்ப‌டி, எங்க‌ மாட்டுவே ?அதெல்லாம் வேண்டாம். பேசாம தூங்கு" என்றாள்.

"ஏதாவது கதை சொல்லும்மா. ஊஞ்சல் கதையாவது சொல்றியா ?!" என்றான்.

"அதென்னடா ஊஞ்சல் கதை ? எனக்கு பாட்டி கதை, நரி கதை, வாத்து கதை தான் தெரியும்" என்றாள் அம்மா.

நெருப்பில் விழும் புழுவாய்த் துடித்த மகனிடம், "சரி சரி சொல்றேன்" என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்.

"ஒரு ஊருல ஒரு அப்பா, அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு மூனு பசங்களாம். அவங்க வீட்டுல ஒரு அழகான ஊஞ்சல் இருந்துச்சாம். தின‌ம் ப‌ச‌ங்க‌ அதில் ஆட்டம் போட்டு விளையாடிட்டு, ப‌டிக்க‌ மாட்டேன்கிற‌துங்கனுட்டு, அவ‌ங்க‌ அப்பா, ஊஞ்ச‌ல‌ மாடியில் ஒரு ரூமில் போட்டு பூட்டி வ‌ச்சிட்டாராம் !"

"ச்சோ ச்சோ, அப்புற‌ம் என்ன‌ம்மா ஆச்சு ?" என்று ப‌ரிதாபப்ப‌ட்டான் சௌந்த‌ர்.

"அப்புற‌ம் என்ன‌. ப‌ரீட்சைக்கு லீவு விட்டா ம‌ட்டும், ஊஞ்ச‌ல‌ கீழ‌ இற‌க்கி, உத்திரத்தில மாட்டித் த‌ருவாராம் அப்பா. லீவு முழுக்க‌ ஆட்ட‌ம் தான். ரெண்டு பேரு உக்காந்துக்க‌, ஒருத்த‌ர் கீழ‌ இருந்து த‌ள்ளணும். கொஞ்ச கொஞ்ச நேரத்துக்கு ஆள் மாத்திகுவாங்க. இது தான் அவ‌ங்க‌ ஊஞ்ச‌ல் விளையாட்டுக்கு வ‌ச்சிக்கிட்ட‌ சின்ன‌ விதி."

"விதின்னா என்ன‌ம்மா ?" என்றான்.

"விதின்னா ... ஏய் கதைய விட்டு வேற எங்க போற ? கதைய மட்டும் கேளு. விதின்னா என்னான்னு அப்புறம் சொல்றேன்."

"அப்புற‌ம் அந்த‌ வீட்டில‌ ப‌ச‌ங்க‌ வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ எல்லோரும் ஊஞ்ச‌ல‌ ம‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ளாம். ஹிம்ம்ம்" என்று நிறுத்தினாள் அம்மா.

'கால்க‌ள் த‌ரையிலும் ப‌டாம‌ல், மேலே வானிலும் ப‌ற‌க்காம‌ல், ஒரு வித‌ உய‌ர‌த்தில் பாதுகாப்பாய் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்ப‌து தான் எத்த‌னை சுக‌ம். நாம தான் ஆடுகிறோம் என்பதை மறந்து, உத்த‌ர‌ம் ஆடுவ‌தாய், வாச‌ல் ஆடுவ‌தாய், வீடே ஆடுவ‌தாய், ஏன் உல‌க‌மே ஆடுவ‌தாய் தோன்றும் சில‌ நேர‌ங்க‌ளில். இனி வ‌ருமா அத்தருண‌ங்க‌ள் ?!!!'

"ஏம்மா க‌தையை நிறுத்திட்ட ?! ... " ப‌ட‌க்கென்று த‌லையைத் தூக்கி கேட்டான் சௌந்தர்.

"அப்புற‌ம் எல்லோரும் பெரிய‌வ‌ங்க ஆகி, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டு த‌னித் த‌னியா போய்ட்டாங்க‌"

"ஊஞ்ச‌ல் என்ன‌ம்மா ஆச்சு ?!"

"சொல்றேன் இரு. குறுக்கே குறுக்கே பேச‌க்கூடாதுனு சொல்லிருக்கேன்ல ?!" என்று அன்பாய்க் க‌டிந்து கொண்டாள்.

"அவங்க அப்பா திடீர்னு ஒரு நாள் சாமி கிட்ட போய்ட்டாரு. அப்ப, 'இப்பல்லாம் எங்ககேயும் இப்படி ஒரு ஊஞ்சல் கிடைக்காது, அதனால என‌க்கு தான் ஊஞ்சல் வேணும், எனக்குத் தான் ஊஞ்சல் வேணும்'னு அவ‌ங்க பசங்களுக்குள்ள‌ சரியான போட்டி."

"க‌டைசிய‌ல் யாரு ஜெயிச்சாங்க ?!" என்று ஆர்வ‌மானான்.

"யாரும் ஜெயிக்க‌லேப்பா. பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஆளாளுக்கு சொல்லிப் பார்த்தும் யாரும் ஒத்துக்கலை. அதனால அப்படியே போட்டு, யாருக்கும் பயனில்லாமப் போச்சு அந்த ஊஞ்சல் !" என்று முடித்தாள்.

"எனக்கு இந்தக் கதை பிடிக்கலம்மா..." என்று தேம்பினான்.

"தம்பீ... ராத்திரில தூங்கறதுக்கு முன்னாடி அழக்கூடாது. பாரு, சமத்துல்ல, உங்க அப்பா வரட்டும், உனக்கு ஒரு ஊஞ்சல் வாங்கித் தரச் சொல்றேன். பேசாமத் தூங்கு" என்று ஆறுதல்படுத்தினாள்.

"நீ தான் இந்த குட்டியூண்டு வீட்டுல மாட்ட எடம் இல்லேன்னுட்டியே ! எனக்கு ஊஞ்சலே வேணாம்." என்று தூங்கிப் போனான் சௌந்தர்.

ஜூலை 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

Monday, July 20, 2009

ஏம்மே அயுதுனுகீற ?!


Photo Thanks: bhopal.net

தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வ‌ழ‌க்க‌ம் போல‌ அன்றும் வீராச்சாமியுட‌ன் விவாத‌ம்.

"ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற..." என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.

"கௌலீ ழீ ழல்லா இலுக்கனு...." என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட‌ நெருங்கி நாசித் துவார‌த்தில் விர‌ல் வைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !' என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.

குடிசை மூலையில், ஏதோ நிக‌ழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த‌ இல‌வ‌ச‌ டி.வி.யை அணைத்தாள்.

ச‌ட்டைப் பொத்தான்க‌ளை அவிழ்த்து விட்டு, அங்கே கிட‌ந்த‌ ஓலை விசிறியில் லேசாக‌ விசிறி விட்டாள்.

"இந்தாம்மே கௌரீ...வூட்டுல தான் கீறியா ?" என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.

க‌த‌வைத் திற‌ந்த‌ கௌரி, "யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா..." என த‌ன் க‌ண‌வ‌னின் நிலை குறித்துப் புல‌ம்பினாள்.

"இப்ப‌டி வாய் பேசாத‌ இருந்துகினா, அது (வீராச்சாமி) வாய‌டைக்கிற‌து க‌ஷ்ட‌ங்க‌ண்ணு"

"யக்கா, நீ வேற‌, ஏய்யா இப்டி குட்சிட்டு வ‌ந்து க‌லாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்கா‌த‌ சுருண்டுகிச்சி" என்றாள் கௌரி.

"அய்யே அடிச்சியாக்கும்... ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட‌ சுத்தி சுத்தி வ‌ரும் பாரு !" என்று ஒரு யோச‌னையும் சொன்னாள் கோம‌ள‌வ‌ல்லி.

"சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !"

"மெய்யாலுமே தாங் க‌ண்ணு, செஞ்சி தான் பாரேன்."

***

இர‌ண்டொரு வார‌ங்க‌ளில் ந‌ல்ல‌ மாற்ற‌ம் இருந்த‌து வீராச்சாமியிட‌ம். நேர‌த்துக்கு க‌ட‌லுக்குப் போவ‌தும், மீன் அள்ளி வ‌ருவ‌தும், குழ‌ந்தைக‌ளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வ‌தும் என‌ ஆளே மாறிப்போனான்.

"இன்னாம்மே... எப்டிகீற‌ ? அய்யே மூஞ்சீல‌ சிரிப்ப‌ப்பாரு ..." என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோம‌ள‌வ‌ல்லி.

ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அட‌க்க‌ முடிய‌வில்லை.

"ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !" என்று ந‌ம‌ட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோம‌ள‌வ‌ல்லி.

***

வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோம‌ள‌வ‌ல்லி அப்ப‌டி என்ன‌ யோசனை சொல்லி இருப்பார் ? உங்க‌ள் எண்ண‌ங்க‌ளைப் பின்னூட்டுங்க‌ள்.

இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))

ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.

***

ரெண்டு நாளாச்சுபா ... உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,

கோமளவல்லியின் ரோசனை:
'எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்'னு சொல்லிப் பாரு கண்ணு :)))))

ஆகஸ்ட் 19 யூத்ஃபுல் விகடனில்


விகடன் முகப்பில்

Tuesday, July 14, 2009

நீங்க தான் ஜட்ஜ் !



அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...

உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.

"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா ..." என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி.

என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு பாக்காதீங்க, ப்ளீஸ் கோ அஹெட்.... :)

***

"சார், நீங்க ஒரு ரெண்டு மூணு படத்தில, நாலஞ்சு ஷாட்ல வந்திருக்கீங்க. உத்து கவனிச்சா தெரியும், அது நீங்க தான்னு. எல்லோரும் கரெக்டா சொல்லிடுவாங்க !!! அந்த‌ அனுப‌வ‌ம் போதும் இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு வ‌ர்ற‌துக்கு" என்றார் நிகழ்ச்சியின் த‌யாரிப்பாள‌ர் ச‌பாப‌தி.

"ஆமாமா, உங்க நிகழ்ச்சி கூட தான் தமிழ்நாடே பாக்குது. சோறு தண்ணி இல்லாம (போட்டா தானே !) பாக்குற நிகழ்ச்சினா அது இது ஒன்னு தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக்கு என்னை அழைத்த‌தில் ரொம்ப‌ பெருமையா இருக்கு !" என்றான் ராஜு.

அந்த நேரம் பார்த்து, சபாபதியின் உதவியாளர் மைக்கேல் வந்து, "சார், ஒரு முக்கியமான விஷயம்" என்று சபாபதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

"கொஞ்சம் இருங்க ராஜு... இதோ வர்றேன்" என்று எழுந்து சென்றார் சபாபதி.

"அப்ப‌டி என்னைய்யா த‌ல‌ போற‌ அவ‌ச‌ர‌ம்..." என்று இழுத்தார் ச‌பாப‌தி.

"த‌ல போற‌து தான் சார் அவசரமே ! ந‌ம்ம 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு ரெண்டு ஜ‌ட்ஜ்ல ஒருத்த‌ர் திடீர்னு வ‌ர‌முடியாதுனு ப்ர‌ச்ச‌னை ப‌ன்றாரு. இன்னும் நாலு எப்பிசோட் பென்டிங் இருக்கு. அது வேணும், இது வேணும்னு ஒரே அடாவ‌டி ப‌ண்றார் சார். உங்க கிட்ட பேசணுமாம்" என்று, உள்ளங்கையில் அழுத்திப் பொத்திய‌ ரீசீவ‌ரை ரிலீஸ் செய்து, சபாபதியிடம் நீட்டினான் மைக்கேல்.

'மொத‌ல்ல‌ ஜ‌ட்ஜ‌ மாத்த‌ற‌னோ இல்லியோ, இவன மாத்தணும் !' என்று நினைத்து, ரிசீவரைத் திரும்பவும் அடைக்குமாறு சைகையில் தெரிவித்தார்.

"ஏய்யா, நான் வீட்டுல இருக்கேனு சொன்னியா ? சரியான .... சரி, சரி, அவசர வேலையா இப்ப தான் கெளம்பினாரு, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்புறம் பேசுங்கனு சொல்லித் தொலை".

"சார், நான் மறக்கறதுக்கு முன்னே சொல்லிடறேன். இதே போல 'போடா போடி' நிகழ்ச்சியிலயும் ஜட்ஜ் ப்ரச்சனை சார்" என்றான் மைக்கேல்.'சரியான நேரங்காலம் தெரியாதவன் !' என்று திட்டி "சரி அப்புறம் பேசறேன்" என்று ராஜுவிடம் வந்தார் சபாபதி.

பணிவாய் அமர்ந்திருந்தான் ராஜு. பார்த்த கணமே யோசனையிலும் ஆழ்ந்தார் சபாபதி.

"ராஜு, நீங்க 'அமெரிக்கன் ஐடல்' ப்ரோக்ராம் பாத்திருக்கீங்களா ?"

"பார்த்திருக்கேன் சார். உலகமே பார்த்த ப்ரோக்ராம் ஆச்சே. நான் பார்க்காமல் இருப்பேனா ?!" என்றான் ராஜு.

"நல்லதா போச்சு. அதுல ஜட்ஜ் சைமன் பத்தி என்ன நினைக்கறீங்க ?"

"அத்த‌னை போட்டியாள‌ர்க‌ளுடைய‌ வெறுப்பையும், பார்வையாள‌ர்க‌ள் வெறுப்பையும் சேர்த்து ச‌ம்பாதித்தவ‌ர் சார்" என்றான்.

"ஆனா, உல‌க‌மே அவ‌ர‌ப் ப‌த்தியும், அந்த‌ நிக‌ழ்ச்சி ப‌த்தியும் பேசுது. இது எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ம்பாத்திய‌ம் ந‌ம்மைப் போன்றோருக்கு !" என்றார் ச‌பாப‌தி.

"சார், நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு புரிஞ்ச‌ மாதிரியும் இருக்கு, புரியாத‌ மாதிரியும் இருக்கு !"

"அதே தான் ராஜு. 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு அடுத்த‌ ஜ‌ட்ஜ் நீங்க‌ தான் ! 'டி.வி.ஜட்ஜ் இன்டென்ஸிவ் ட்ரெய்னிங்' ஒரு ரெண்டு நாள் எடுத்துக்க‌ங்க‌. ட்ரெய்னிங் என்றவுடன் பயந்துறாதீங்க. ரொம்ப சிம்பிள். சைமனோட அனுகுமுறை, சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க.... மைக்கேல் இங்க‌ வா, அந்த‌ கான்ட்ராக்ட் பேப்ப‌ர்ஸ் எடுத்து வ‌ந்து சார் கிட்ட‌ கையெழுத்து வாங்கிக்கோ." என்றுவிட்டு அடுத்த‌ நிக‌ழ்ச்சியின் ஜ‌ட்ஜ் வேட்டைக்கு ஆய‌த்த‌மானார் ச‌பாப‌தி !

***

டிஸ்கி: இக்கதை யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்தும் நோக்கில் எழுத‌ப்ப‌ட‌வில்லை. முழுக்க‌ ந‌கைச்சுவைக்காவே .....

ஜூலை 20, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, July 12, 2009

லெச்சுமி அக்கா ...


Photo: baby-sang-http-www.indianhindunames

'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.

மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.

வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.

அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.

எனது திருமணத்திற்கு வந்தபோது, "டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?" என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.

ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.

'போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா ... கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ....'

'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. "ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!" என்று அம்மாவை நோக்குகையில் ...

"லெச்சுமி வாம்மா ..." என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். 'அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்' என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.

'அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!' என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, 'வாடா செல்லம்...' என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !

Friday, July 10, 2009

பரவால்ல விடுங்க பாஸூ ...


Photo Thanks: www.apexwealthmgmt.net

அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !

'இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்' என்று நினைத்திருந்தான் மூர்த்தி.

வெள்ளைக்கார‌ர்க‌ள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்ட‌ன‌ர்.

மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் "அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க‌. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க‌. ஆங்..." என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் ச‌ர‌வ‌ண‌ன்.

இந்தியர்ளோடு வேலை செய்வ‌து தான் க‌டின‌மோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேச‌வும் செய்வாங்க‌, கேட்க‌வும் செய்வாங்க‌. தாமரை இலை நீராய் இல்லாமல், ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏன் இப்ப‌டி எல்லாத்தையும் பெர்ச‌ன‌லா சொன்ன‌ மாதிரி எடுத்துக் கொள்கிறார்க‌ள் !

"சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் ப‌ண்றோம் !" என்றான் ராப‌ர்ட்.

"ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வ‌தும் ச‌ரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் ப‌ண்ணிடுங்க" என்றாள் கேத்தி.

"ச‌ர‌வ‌ண‌ன் என்ன பெரிய ஆளா ? அவர்‌ ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு ச‌ரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ ச‌ரி ப‌ண்ணிக் கொடுனு சொல்ல‌னும். அத‌விட்டுட்டு ஏன் இப்ப‌டி மீட்டிங்கில் எறிந்து விழ‌ணும். நல்ல வேளை 'நக்கீரன்' மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! " என்று வெளியே வந்து புல‌ம்பினான் மூர்த்தி த‌ன் ந‌ண்ப‌ன் அனீஷிட‌ம்.

"இன்னிக்கு நேத்து க‌தையா. அவ‌ன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற ... ப‌ர‌வால்ல விடுங்க‌ பாஸு" என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.

***

"ராப‌ர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க‌. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்த‌ப் ப‌ச‌ங்க‌ எத்த‌னை வ‌ருஷ‌மா இருக்காங்க‌னு தெரியுமா ? இவ‌ங்க‌ அடிச்சிக‌றாங்க‌ளேனு, த‌ய‌வு செய்து உள்ளே புகுந்து ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌லாம் என்று ம‌ட்டும் நெனைக்காதீங்க‌. ந‌ல்ல‌ வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்க‌ள்."

"என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்ப‌டி இவங்க அடிச்சிக்க‌ற‌து க‌ம்பெனி வ‌ள‌ர்ச்சியை பாதிக்கும்" என்றான் ராப‌ர்ட்.

"இந்திய‌ர்க‌ள் எப்ப‌வுமே உண‌ர்ச்சி பூர்வ‌மான‌வ‌ர்க‌ள். அவங்க‌ போக்கிலேயே விட்டு தான் போக‌ணும். க‌ம்பெனியுடைய‌ வ‌ள‌ர்ச்சி அவ‌ங்களுடைய‌ வ‌ள‌ர்ச்சி தான். இதையும் அவங்க‌ கிட்ட‌ சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்க‌ளோ என்ன‌வோ. ப‌ர‌வால்ல‌ விடுங்க‌ பாஸு..." என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய‌ த‌லைமுறையைத் தேற்றினாள் கேத்தி.

ஜூலை 13, 2009 யூத்ஃபுல் விகடனில்


ஜூலை 13, 2009 விகடன் முகப்பில்

Thursday, June 25, 2009

அன்புள்ள ஆனந்திக்கு ...

உயிரோடை லாவண்யா ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார். முன்பு போல அவ்வளவாக போட்டிகளில் ஆர்வம் இல்லை எனினும், அவரது அன்புக்கு இணங்கி இதோ எனது கதை ...

---

அன்புள்ள ஆனந்திக்கு ...




குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட‌ போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்ற‌வ‌ளை வைத்த‌ க‌ண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான் தியாகேஷ்.

"மொத‌ டேக்லேயே ஓ.கே. ப‌ண்ணிட்ட‌ம்மா. சூப்ப‌ர், ஆஸ‌ம், கார்ஜிய‌ஸ்" என்று அமெரிக்கர்களை போல நம்ம ஊரு டி.வி.ஜ‌ட்ஜுக‌ள் ஆர்ப்ப‌ரிக்கும் வார்த்தைக‌ளில் ரிஷ்காவை புக‌ழ்ந்து த‌ள்ளிய‌ இள‌ம் டைர‌க்ட‌ர் ருத்ரன், கையோடு "பேக்கப்" என்று மைக்கில் கத்தினான்.

படிக்கிற காலம் தொட்டு, பாடங்களை விட படங்களில் தான் நாட்டம் அதிகம் தியாகேஷுக்கு. டிகிரி முடித்து முதன் முதலாய் வந்திறங்கியது கோடம்பாக்கம் தான். கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌ டைர‌க்ட‌ர் ஆகும் க‌ன‌வுட‌ன். அறைக‌ளில் த‌னித்து, வீதிக‌ளில் வாழ்ந்து, அங்கே இங்கே என்ற‌லைந்து க‌டைசியில் சேர்ந்த‌து ருத்ர‌னிட‌ம் உத‌வி இய‌க்குன‌ராக‌.

அப்ப‌டி என்ன‌ ம‌ந்திர‌ ச‌க்தியோ 'பேக்க‌ப்' என்ற‌ வார்த்தைக்கு. ஆயிர‌மாயிர‌ம் ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌ட‌ப‌ட‌ப்ப‌தாய் ஆன‌து மொத்த‌ யூனிட்டும். எல்லோரும் வெளியே கிள‌ம்ப‌, ரிஷ்காவின் கேர‌வ‌னுக்குள் நுழைந்தான் ருத்ர‌ன்.

த‌த்ரூப‌ம் கொண்டு வ‌ருகிறேன் பேர்வ‌ழி என, வெட்ட‌ வெளி என்றும் பாராமல், அங்க‌ தொட்டு, இங்க‌ தொட்டு, என ஏற்க‌ன‌வே நொந்திருந்த ரிஷ்கா, இப்ப‌டி உள்ளே நுழைவான் இவனென‌ ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை.

'வெளியே போடா நாயே !' என‌ சொல்ல‌ நினைத்து, இய‌லாமையில் குறுகி, எழுந்து நின்றாள்.

"எதுக்கு எழுந்து நின்னுகிட்டு, உட்கார் உட்கார்... பாரு இந்த‌ ப‌ட‌ம் வெளிவ‌ர‌ட்டும் த‌மிழ்நாடே எழுந்து நிற்கும் உன்னைக் க‌ண்டா. அதில நானும் சேர்த்தி தான்" என்றான் ந‌ம‌ட்டு சிரிப்புட‌ன்.

"அப்ப‌டிலாம் சொல்லாதீங்க‌ சார். நீங்க‌ எவ்ளோ பெரிய‌ ஆளு !" என்று ருத்ர‌ன் எதிர்பார்த்த‌ப‌டி ப‌தில‌ளித்தாள்.

இத்த‌னைக்கும் ருத்ர‌னுக்கும் இது தான் முத‌ல் ப‌ட‌ம் டைர‌க்ட‌ராக‌. டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ளில் சாம‌ர்திய‌சாலி, அதிக‌ம் செல‌வு செய்யாத‌ ப‌ட்ஜெட், கொஞ்ச‌ம் க‌தை, ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ள் தேர்வு. இது தான் ருத்ர‌ன் ஃபார்முலா. ப‌ட‌த்தயாரிப்பாளருக்கு இதைவிட‌ என்ன‌ வேண்டும்.

ரிஷ்காவிற்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் நாயகியாக வந்தும், சில காரணங்களால் த‌டைப‌ட்டு பாதியிலேயே நின்றும் போன‌து. ருத்ரனின் க‌தை அவ்வ‌ளாக‌ பிடிக்காவிட்டாலும், வ‌ந்த‌ வாய்ப்பை விடாம‌ல் ஏற்று கொண்டாள்.

படம் வளர வளர அடுத்த‌டுத்த‌ ப‌ட‌ப்பிடிப்புக‌ளிலும் ருத்ர‌னின் தொல்லையும் வ‌ள‌ர‌, ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ட‌த்தை விட்டு ஓடிவிட‌லாமா என்று கூட‌ நினைத்தாள். ஆணாதிக்க‌ சினிமாவில் அவ‌ர்க‌ளை மீறி த‌ன்னால் ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லையே என எல்லாவற்றையும் பொறுத்திருந்தாள். நாள‌டைவில் ருத்ர‌னின் செய்கைக‌ளுக்கு எதுவும் பெரிய‌ எதிர்ப்பு காட்டுவ‌தையும் த‌விர்த்திருந்தாள்.

"மேட‌ம் அடுத்தது, ரெண்டு நாள் முன்னாடி எடுத்ததோட‌ க‌ன்டினியூட்டி ஷாட். ஸீ க்ரீன் ஸாரி க‌ரெக்ட், ஆனா உங்க‌ தோடு நீங்க‌ மாத்த‌ணும்" என்றான் தியாகேஷ்.

"சரி" என்று கேர‌வ‌னுக்குள் நுழைந்து தேடினாள். "தியாகேஷ், கொஞ்ச‌ம் நீங்க‌ளும் தேடுங்க‌ளேன். இங்க‌ தான் வ‌ச்சேன், இப்ப‌ காணோம்" என்றாள் கொஞ்(சசு)ம் த‌மிழில்.

"இன்னும் ரெண்டு நிமிஷ‌ம் தான் இருக்கு. ரெடியாம்மா ?" என்று உள்ளே நுழைந்தான் ருத்ர‌ன். ரிஷ்காவின் பின்னால் சென்று வழக்கம் போல அப்ப‌டியே க‌ட்டியும் அணைத்தான்.

குனிந்திருந்து "இங்க‌ இருக்குங்க‌ மேடம் !" என்று எழுந்த‌ தியாகேஷைக் க‌ண்டு திகைத்தான் ருத்ர‌ன். "இங்க‌ என்னையா ப‌ண்ணிகிட்டு இருக்கே ?! உன்னை நம்பி ஷூட்டிங்கே கொடுத்திருக்கேன். ஸ்பாட்டுல‌ எல்லாம் ரெடி ப‌ண்ணிட்டு இருப்பேனு பார்த்தால் ..."

"சார் வ‌ந்து ... மேட‌ம் தான்..." என்று வெல‌வெல‌த்துப் போனான் தியாகேஷ்.

"ச‌ரி, ச‌ரி. பார்த்த‌து பார்த்திட்டே. ப‌ம்மிகிட்டுப் போ. வெளியில‌ ஏதாவ‌து காமிசிச்சுக்கிட்டே.... அப்புறம்... சரி, வேணாம். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று தியாகேஷை எச்சரித்து அனுப்பினான் ருத்ர‌ன்.

'வந்தா எல்லாம் ஒன்னா வரும்' என்பது போல அன்றைக்கு தியாகேஷுக்கு இரட்டை மகிழ்ச்சி.

"இனிமே நீங்க‌ என்னை மேட‌ம்னு கூப்பிடாதீங்க‌. ம‌ல்லிகானு சொந்த‌ பேரைக் கூப்பிட்டா ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவேன்" என்றாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ருத்ரன் இல்லாத ஒரு நாளில். க‌ண்க‌ளில் மை போல சோகமும் அப்பியிருந்த‌து.

'நான் இன்னும் ஒன்றும் சாதித்துவிட‌வில்லை. என்னைப் போயி...' என்று நினைத்தாலும், ரிஷ்காவின் வார்த்தைக‌ளில் ம‌கிழ்ந்து போனவ‌னின் செல் சிணுங்கிய‌து.

"சார் ! நீங்க‌ளா ? சொல்லுங்க‌ சார். இதோ, இப்ப‌வே கெளம்பறேன் சார்" என்று அடித்துப் பிடித்து, கேமிராவைத் த‌ள்ளி ஓடிய‌வ‌னை, கால‌ரைப் பிடித்து நிறுத்தினான் கேமிராமேன் பாலு.

"ம‌ச்சி எதுக்காக‌ இத்த‌னை நாள் காத்திருந்தேனோ, அந்த‌க் க‌ன‌வு ந‌ன‌வாக‌ப் போகுது. என்ன மாதிரி ஆளுங்க தவமா தவம் கிடக்கிற தயாரிப்பாளர் கிட்ட இருந்து தான் போன். இதுக்கு மேல‌ கேக்காத‌, போய்ட்டு வ‌ந்து விப‌ர‌ம் சொல்றேன்" என்று காற்றில் க‌ரைந்தான் தியாகேஷ்.

'கடவுளாவது கத்தரிக்காயாவது !' என்று சொல்கிற‌ முன்ன‌னி ந‌டிகர் ஒருவர் வ‌ந்து குத்து விள‌க்கேற்ற‌, அம‌ர்க்க‌ள‌மாக‌ பூஜை போட்டு, ஆர‌ம்ப‌மான‌து தியாகேஷின் 'த‌லைப் பிர‌ச‌வ‌ம்'.

சோக‌ம் அப்பிய‌ க‌ண்க‌ள் கொண்ட‌வ‌ள் தான் க‌தாநாய‌கியாக‌ சித்த‌ரித்து வைத்திருந்தான். ரிஷ்காவின் பாதிப்பாக‌க் கூட‌ இருக்க‌லாம். கதாநாயகிக்கு அவ‌ளையே த‌யாரிப்பாளரிடம் சிபாரிசும் செய்து, போராடி ஒப்புத‌லும் வாங்கினான்.

சினிமாத் துறையில் ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் பட்ட‌ க‌ஷ்ட‌ங்க‌ளும், சினிமா பற்றி க‌ற்ற‌ பாட‌ங்க‌ளும் சேர்த்து வைத்து, சின்ன‌ சின்ன‌ விஷ‌ய‌த்துக்கு கூட‌ முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தனுமே என்று கிட்ட‌த் த‌ட்ட‌ ப‌ட‌த்தை செதுக்கினான் என்றே சொல்ல‌லாம்.

ருத்ரனின் படமும் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக தியாகேஷின் ப‌ட‌ம் வ‌சூலில் ச‌க்கைப் போடு போட, ஊரெல்லாம் தியாகேஷுக்கு போஸ்டர் ஒட்ட, அவனைத் தன் மனதில் சிக்கென‌ ஒட்டிக் கொண்டாள் ரிஷ்கா.

"ரெண்டு பேரோட‌ வ‌ள‌ர்ச்சிக்கும், இப்போதைக்கு திரும‌ண‌ம் என்ப‌து த‌டையா இருக்கும். அத‌னால‌ கொஞ்ச‌ கால‌ம் போக‌ட்டும், பொறுத்திரு !" என்றான் ரிஷ்காவின் திரும‌ண‌ யோச‌னைக்கு.

"உங்க‌ளுக்கு என்னைப் பிடிக்க‌லை. அதான் சாம‌ர்த்தியமா என் யோச‌னையைத் த‌ள்ளிப் போட‌றீங்க !" என்று சிறு குழ‌ந்தையாய் தேம்ப‌ ஆர‌ம்பித்தாள்.

சினிமா போலவே, ஒரே இரவில் தியாகேஷின் வாழ்வும் முற்றிலும் மாறிப் போனது. கார், பங்களா, காவலாளி என்றும் ஆனது.

"புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றியே ! இப்ப‌ தான் ரெண்டாவ‌து ப‌ட‌ம் ப‌ண்ண‌ப் போறேன். பாரு, ஹாலில் க்யூ க‌ட்டி த‌யாரிப்பாள‌ர்க‌ள் உட்கார்ந்திருப்பதை. இவ‌ங்க‌ள‌ இப்ப‌ விட்டா அப்புற‌ம் எப்ப‌வும் பிடிக்க‌ முடியாது" என்றான்.

தியாகேஷ், ரிஷ்கா, இருவ‌ருக்கும் ஏராள‌மான‌ வாய்ப்புக‌ள் குவிந்தாலும், இருவ‌ருக்கும் பிடித்த‌மாதிரி ஒரு க‌தையைத் தேர்ந்தெடுத்து, 'அன்புள்ள ஆனந்திக்கு...' என்றும் தலைப்பிட்டு, த‌யாரிப்பாள‌ரைத் தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளரைத் தேர்ந்தெடுத்து என வ‌ரிசையாய் இவ‌ர்க‌ள் செல‌க்ஷ‌ன் தான் அனைத்தும்.

"சரி, ஊரறிய‌ வேண்டாம். உங்க‌ கூட‌வே இருக்கேன்ல ! யாருக்கும் தெரியாம ஒரு தாலியாவ‌து க‌ட்டிடுங்க. வேண்டாம், வேண்டாம் ஒரு மோதிரம் போதும். பிற்பாடு ஒரு நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஊரே விய‌க்கும் ப‌டி க‌ல்யாண‌ம் செய்துக்குவோம்" என்றாள்.

"பேசாம‌ ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக்குவோமே !"என்றான் தியாகேஷ்.

"இத‌ விட‌ வேறு செய்தி வேணுமா ந‌ம்ம‌ ப‌த்திரிகைகார‌ங்க‌ளுக்கு !! ந‌ம‌க்குள்ள‌ ம‌ட்டும் இருக்க‌ட்டும். 'இந்தாங்க, இந்த‌ மோதிரத்தை என‌க்குப் போட்டுவிடுங்க‌'" என்று த‌யாராய் வைத்திருந்த‌ மோதிர‌த்தை தியாகேஷிட‌ம் நீட்டினாள் ரிஷ்கா.

வீடு, ம‌னை, வாக‌ன‌ம், வ‌ங்கிக்க‌ண‌க்கு என‌ எல்லாவற்றையும் இருவ‌ர் பெய‌ரிலும் ப‌திந்து கொண்டார்க‌ள். வெளியில் அதிக‌ம் நெருக்க‌ம் காட்டிக் கொள்வதில்லை இருவ‌ரும். ஆனால், த‌னித்திருக்கையில் சுனாமியே வ‌ந்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. 'முளை விட்ட‌ பூ, வெடித்துக் காய்ப்ப‌து போல்' இவ‌ர்க‌ளின் நெருக்க‌ம், நெருக்க‌மான‌வ‌ர்க‌ளால் வெளியில் வெடித்துக் கசிய‌வும் செய்த‌து.

ராஜ‌ர் ஃபெட‌ரரிட‌ம் டென்னிஸ் விளையாடி நாம‌ ஜெயிச்சுட்டோம் என்றால் எப்ப‌டி ந‌ம்ப‌ முடியாதோ, அந்த‌ அள‌விற்கு ஆச்சரியப்படும்படி தியாகேஷின் இர‌ண்டாவ‌து பட‌ம் ப‌டு தோல்வியைச் ச‌ந்தித்த‌து.

பங்களாவில் ஹால் வெறிச்சோடிய‌து. இவ‌ன் தொலைபேசி என்றால் ம‌றுமுனையில் உத‌வியாள‌ருட‌ன் இணைப்பு முறிந்து விடும். ரிஷ்காவின் நிலையும் அதுவே. இருவ‌ருக்கும் வாய்ப்புக‌ள் 'க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பான‌' க‌தையான‌து !

வெளியில் செல்லவே கூசினான் தியாகேஷ். "எங்காவது கொஞ்ச நாளைக்கு போய் இருந்துட்டு வ‌ர‌லாம். கிராமத்துக்குப் போனா நல்லது" என்றான்.

ரிஷ்காவிற்கு சுத்த‌மாக‌ இதில் இஷ்ட‌மில்லை. "நீங்க வேணா போய் இருந்துட்டு வாங்க. நான் இங்க இருந்து பாத்துக்கறேன்" என்றாள்.

இந்நிலையில் சினிமாவில் ந‌ன்றாக‌ பெய‌ர் வாங்கியிருந்தான் ருத்ர‌ன். கைராசி டாக்ட‌ர் மாதிரி, கைராசி டைர‌க்ட‌ர் என்றார்க‌ள் தயாரிப்பாளர்கள் ருத்ர‌னை.

"'அடுத்த‌ ப‌ட‌த்துக்கு நீ தான் ஹீரோயின் ! என்ன சொல்றே'னு ருத்ர‌ன் கேட்கிறார். என்ன‌ சொல்ல‌ ?" என்றாள் ரிஷ்கா தியாகேஷிட‌ம்.

"உன‌க்காவ‌து வாய்ப்பு வ‌ருதே ! எதுக்கு வேண்டாம் என்று சொல்லிகிட்டு. எடுத்து பண்ணு. நான் இங்க இருக்க விரும்பலை. நீ தனியா இருக்க, ஜாக்கிறதையா இருந்துக்க‌" என்று சொல்லிச் சென்றான்.

இர‌ண்டொரு வார‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ நிலையில், ரிஷ்காவின் மேக்கப் அறைக்குள் நுழைந்தான் ருத்ர‌ன். அவ‌ள் திடுக்கிட‌வில்லை. முன்பு போல‌வே க‌ட்டிப் பிடித்து காதுக‌ளில் கிசு கிசுத்தான், 'எத்த‌னை நாள் தான் உன‌க்காக‌ த‌வ‌மிருப்பேன்' என்று. அப்ப‌டியே ப‌டுக்கையில் சாய்த்தவ‌னை சேர்த்திழுத்தாள் ரிஷ்கா.

'ம்ம்ம். நீ முன்பு போல‌ இல்லையே. ரொம்ப‌ தேறிட்ட‌ !' என்று முன‌கினான். ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை ருத்ர‌ன். அப்ப‌டியே அவ‌னைப் புர‌ட்டி, அவ‌ன் மேலேறி ... விட்டாள் ஒரு குத்து ! பொல‌ பொல‌வென்று சிறுமூக்கு உடைந்து ர‌த்த‌ம் சித‌றிய‌து !!!

"ஆம் நான் முன்பு போல‌ இல்லை தான் ! ரொம்ப‌வே தேறிட்டேன் !!" என்று சொல்லி திராட்சைக் கொத்தாய் முன் விழுந்த சுருள் முடிகளைப் பின் தள்ளி கொண்டையிட்டு விறுவிறுவென‌ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினாள் ரிஷ்கா !!!


Tuesday, June 16, 2009

கல்விச் செல்வம் - அரைப் பக்க கதை

"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?"

அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. 'ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க' என்பது போல இருந்தது அவள் பார்வை.

"பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு" என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.

இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.

லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.

"நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்" என்றார்கள்.

"ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க" என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.

"ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?" என்றார் ரைட்டர்.

"ரேஷ்மா"

"எந்த க்ளாஸ் ?"

"எல்.கே.ஜி. !"

Tuesday, June 9, 2009

கோழித் திருடன்



மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி.

கோழியைத் தூக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். 'நல்ல வேளை யாரும் பார்க்கலை' என்று திரும்பு முன், அவன் தலையைச் சுற்றி இறுக்கியது ஒரு துண்டு. அவன் கைபிடி நழுவ, பக் பக் என்று விழுந்து பறந்தது கோழி.

"அடியேய்ய்ய்.. ராக்காயீ, மூக்காயி, கருப்பாயீ, வெள்ளையம்மா ... எல்லாரும் ஓடியாங்கடியோய் ... ரொம்ப நாளா நம்ம ஊர்ல கோழி திருடிகிட்டிருந்த திருடன் மாட்டிக்கிட்டான்" என்று செவந்தி கூவிய கூவலில் ஊரே திரண்டது.

முதலில் திமிறினாலும், சனங்களின் முனகலில், ஊரே திரண்டதை அறிந்து உறைந்தான் மாயாண்டி. 'வ‌ச‌மா மாட்டிக்கிட்ட‌மே இப்ப‌டி ! கொஞ்ச‌ம் கூட‌ த‌ப்பிக்க‌ முடியாது போல‌வே' என்று சிந்தித்த‌வ‌னை, பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் கட்டினர், வாட்ட‌சாட்ட‌மாக‌ இருந்த‌ இர‌ண்டு இளைஞ‌ர்க‌ள்.

"வெத்தியூருக்கு வாக்க‌ப்ப‌ட்டு போயி, ரெண்டாம் வ‌ருச‌மே திரும்பி வ‌ந்தாளே ம‌ர‌க‌தம்..... அவ‌ ம‌க‌ந்தாம்லா கோழித் திருடனாம் !!! நாமெல்லாம் புதுசா வந்த சோசியக்காரன்னுல நெனச்சுகிட்டு இருந்தோம் ! மாயாண்டிய புடிச்சு ம‌ர‌த்துல‌ க‌ட்டிவ‌ச்சிருக்காக‌லாம். வா, ஒரு எட்டு போயி பாத்துட்டு வ‌ர‌லாம்" என‌க் கிள‌ம்பின‌ர் கிழ‌விய‌ர் இருவ‌ர்.

"பண்ணையாரு வரட்டும். அவரு ஊட்டுல வேல பாக்குறாங்கறதுக்காக சும்மா விட்டாலும் விட்டிருவாரு. இந்த மாதிரி பசங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கச் சொல்லணும். இனி ஒரு பய உன்ன மாதிரி ஊருக்குள்ள திறியப்படாது" என்று காரி உமிழ்ந்தார் பெரியவர் ஒருவர்.

வயல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் மரகதம் செல்ல, கவனிப்பாரற்று வளர்ந்த மாயாண்டி... படிப்பும் ஏறாமல், பட்டி தொட்டி எங்கும் சுற்றித் திரிந்தவனைத் தன்னுடன் சேர்த்து, தனக்கு உதவியாக தன் வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார் பண்ணையார்.

யேசுபிரானைப் போல ஒரு பக்கம் தலை சாய்த்து, கன்னங்கள் வீங்கி, கை கால்கள் எல்லாம் சிராய்த்துச் சோர்ந்திருந்தான் மாயாண்டி.

"ப‌ண்ணையாரு ஊட்டுல‌ வேலைக்கு இருந்துகிட்டே இத்த‌ன‌ ப‌ண்ணியிருக்கியா ? உன‌க்கு இதுவும் வேணும், இன்ன‌மும் வேணுன்டா" என்று, இர‌ண்டு போடு போட்டு ஒதுங்கி நின்றான், அந்த‌ப் ப‌க்க‌ம் சைக்கிளில் வ‌ந்த‌ ஒருவ‌ன்.

நைந்த‌ நூலாய்த் தொய்ந்து போனான் மாயாண்டி. 'ஒரு கோழிக்கு இத்தன ரகளை பண்றானுங்களே ! தெரிஞ்சிருந்தா கை வைச்சிருக்க மாட்டேனே ! எல்லாம் இப்ப யோச்சிச்சு என்ன பண்றது !!' என்று சிந்தனைச் சிதறல்கள் அவனுள்.

"ஏலேய். வெல‌கு வெல‌கு. ப‌ண்ணையாரு வாராரு" என்று ஆளாளுக்குச் சொல்லி வ‌ழிவிட்ட‌ன‌ர்.

"அடப் பாவ‌மே ! நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ இத்த‌ன‌ ப‌ண்ணிட்டீங்க‌ளா ? மொத‌ல்ல‌ க‌ட்ட‌ அவுத்து விடுங்கையா" என்றார் ப‌ண்ணையார்.

வார்த்தைக‌ளில் வ‌ழிந்த‌ க‌னிவு, முத‌ன் முறையாய் அவ‌னுள் குளிர்ச்சியூட்டிய‌து. கூட்டத்திடம் இருந்து மெல்ல‌ ப‌ய‌ம் வில‌கியிருந்த‌து.

"ஏன்டா, கேட்டிருந்தா நம்ம ஊட்டு கோழி ரெண்ட அடிச்சு சாப்பிடச் சொல்லிருப்பேன்ல. என்னத்துக்கு ஊராம்வீட்டுல கைய வைக்கிறே ? சரி, சரி. இன்னும் ப‌தின‌ஞ்சு நாளைக்குள்ள நூத்திஓரு ரூபா அப‌ராத‌ம் க‌ட்டிரு. இல்ல‌ ஊரார் கால்ல அம்பத்தோரு முறை விழுந்து எந்திரி. என்னையா, ச‌ரி தான ?" என்று கூட்ட‌த்தாரைப் பார்த்தார் ப‌ண்ணையார்.

ஒருவ‌ரும் எதிர்த்துப் பேச‌வில்லை.

'திருட்டுக் கோழியத் தெரக்கித் தின்னா ... ஆயுசு கெட்டியாகும், ஆன்ம பலம் பெருகும், வீடு வாசல் விருத்தி அடையும் !' என்ற ஜோசியக்காரனுக்கும், மாயாண்டிக்கும் மட்டுமே தெரியும் யார் உண்மையான திருடன் என்று !!!

ஜூன் 13, 2009 யூத்ஃபுல் விகடனில்