Wednesday, August 13, 2008

பெண்ணின் மனதைத் தொட்டு

என்னடி, வந்ததும் வராததுமா லபோ திபோனு குதிக்கறே !!! வழக்கம்போல நாப்பத்தியேழு ஏ கூட்டமா தானே இருந்திருக்கும், தினம் என்ன சலிப்பு. சரி, சரி ட்ரெஸ் மாத்திட்டு, முகம் கழுவிட்டு வா. சூடா காஃபி போட்டு வைக்கிறேன். சரளமான பேச்சோடு, வேலையிலும் மும்மரமாக‌ இருந்தார் மல்லிகா.

ஆடையின்றித் திறிந்த போதும்
காமமின்றி கண்ட கண்கள்
நாகரீகம் வளர்ந்த போது(ம்)
நஞ்சு போலக் காணுதே !!!

இருகரம் பற்றி துண்டால் முகத்தைத் துடைத்து முணுமுணுத்துக் கொண்டே வந்த சிவ‌ர‌ஞ்சனி, ஹாலில் ஃபேனைப் போட்டு, டிவியை தட்டி விட்டு, காலை ஆங்கில எழுத்து 'Z' போல மடித்து ஷோபாவில் அமர்ந்தாள்.

அம்மாடி !! என்ன‌ பாட்டு பலமா இருக்கு ?! வார்த்தைகள் விட்டுத் தெறிக்குது பட்டாசாய், காஃபியோடு சிவரஞ்சனியின் அருகில் வந்தமர்ந்தார் மல்லிகா.

பொத்தாம் பொதுவா ஏன் சிவா எல்லாரையும் திட்ட‌றே ?! உன் க‌வ‌னத்தை இதில் ஏன் முன்னிருத்தற ? ஏதோ சொல்லுவாங்களே !!, துஷ்ட‌னைக் க‌ண்டால் தூர‌ வில‌குனு ... அது மாதிரி நம்ம‌ பாட்டுக்கு வேலைக்கு போன‌மா, வ‌ந்த‌மானு மட்டும் இருக்க‌லாம்ல.

துஷ்ட‌னைக் க‌ண்டால் வில‌கி போயிட‌லாம், துஷ்ட‌ர்க‌ளா அல்ல‌வா நிறைய‌ பேர் இருக்கிறார்க‌ள். பெண் என்றால் ஏன் இத்த‌னை இள‌க்கார‌ம் ?!! ஒரு பெண் த‌னித்து வாழ்ந்தால் அவ்வ‌ள‌வு தான். ப‌க்க‌த்து வீட்டுப் பெண்ணே போதும், களமிறங்காமலேயே ப‌ந்தாட‌ !!!

ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க‌னு சொல்லிட்டே இருக்கேன். கொஞ்ச நாள் போகட்டும், போகட்டும்னு சொல்லி ரயில் தண்டவாளம் மாதிரி நீட்டிக்கிட்டே இருக்க‌. க‌ல்யாண‌ வ‌ய‌தெல்லாம் தாண்டி ப‌ல‌ வ‌ருடங்கள் ஆச்சு.

உடல் நிலை போல மனதோடும் போராடும் சித்தி ப‌டும் க‌ஷ்ட‌ம் போதாதா. சித்த‌ப்பா பாதி நாள் வீட்டுக்கே வ‌ர்ற‌தில்லை. கார்த்திகாவுக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிட்டு, அவ‌ளும் சென்னையில தான் இருக்கா. ஒரு நாள் கூட‌ அம்மாவ‌, வ‌ந்து பார்க்கிற‌தோ, இல்ல அம்மாவ‌ வீட்டுக்கு கூட்டிப் போற‌தோ இல்லை. கேட்டா, என் கணவர், குழந்தைகளை கவணிக்கவே நேர‌ம் ச‌ரியா இருக்குனு சொல்றா.

என் அம்மாவை இந்த‌ மாதிரி விட்டுப் போக‌ ம‌ன‌மில்லை. எத‌ற்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டு, அப்புற‌ம் கார்த்திகா மாதிரி நானும் ஆகிட்டேன்னா. அந்த‌ ப‌ய‌ம் தான். போதுமா ?!!! இனிமேலாவ‌து க‌ல்யாண‌ப் பேச்சை எடுக்காம‌ல் இருக்கிறாயா .... எதுக்காக‌ நாள் க‌ட‌த்துறேனு இத்தனை நாள் உன‌க்குப் புரியவே இல்லையா ?

இந்த‌க் கால‌த்துப் புள்ளைங்க‌ என்ன‌மா யோசிக்குது ? ந‌ம்ம‌ கால‌ம் மாதிரியா இருக்கு. தன் வாழ்வை தியாகம் செய்யும் பெத்த‌ ம‌க‌ளின் பாச‌ம் ஒரு புற‌ம் ம‌கிழ்வைத் த‌ந்தாலும், அவ‌ளின் வ‌ரும் நாட்க‌ள் வேத‌னையை அளித்த‌து ம‌ல்லிகாவுக்கு.

எல்லாம் ச‌ரிதாம்மா. நான் இன்னும் கொஞ்ச நாள் இருப்பேனா ?!! என‌க்கு நீ இருக்க மாதிரி, அப்புற‌ம் உனக்கு யாரும்மா இருக்கா ?

சிமெண்டு சுவ‌ற்றில் அடித்த‌ ஆணி போல் தலையில் இற‌ங்கிய‌து தாயின் சொற்க‌ள்.

எல்லோருமே கெட்ட‌வ‌ங்க‌ இல்லை சிவா. அதுக்காக எல்லோரையும் நம்பிவிடவும் செய்யாதே !!! இன்னும் சில‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ இருக்க‌த் தான் செய்கிறார்க‌ள். இந்த‌ சில‌ர் இன்னும் பெருக‌ணும். அதுக்கு உன்னைப் போல‌ இருக்க‌வ‌ங்க‌ க‌ண்டிப்பா க‌ல்யாண‌ம் செய்துக்க‌ணும், குழ‌ந்தைக‌ள் பெத்துக்க‌ணும். என்னைப் ப‌ற்றின‌ க‌வ‌லையை விடு. என‌க்கு அவ‌ர் த‌ந்து சென்ற‌ தைரிய‌த்தை விட‌, உன் செய‌ல் த‌ரும் தைரிய‌ம் ப‌ண்ம‌ட‌ங்கா தெரியுது.

அமெரிக்கா, ல‌ண்ட‌ன்ல‌ இருந்து நிறைய‌ வ‌ர‌ன்க‌ள் இருக்கும்மா. எல்லாம் இந்தியால‌ இருக்க‌ பொண்ணு தான் வேணும்கிறாங்க‌. பொண்ணு ஓரளவு படிச்சிருந்தா போதும், வரதட்சணை என்ற பெயரில் ஒரு பைசா தேவையில்லை, மிடில் க்ளாஸா இருந்தா போதும் .... அடுக்க‌டுக்காய் சொல்லிக் கொண்டே போனார் புரோக்க‌ர் வேதாச‌ல‌ம்.

அதெல்லாம் வேண்டாம், சென்னையிலேயே ந‌ல்ல‌ குடும்ப‌த்தில‌ இருந்து வ‌ர‌ன்க‌ள் வ‌ந்தா சொல்லுங்க‌ என்று சிவ‌ர‌ஞ்ச‌னி சொல்வ‌தை, ம‌ல்லிகா ஆவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்தார் !!!

15 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

ஆஹா சுருக்கமா ஒரு கதை..நல்லா இருக்கு சதங்கா..

நீங்க சொல்றாப்புல நல்லவங்களும் இருக்காங்க..எல்லாமே பார்க்கும் நம்முடைய கண்ணைப்பொருத்தது.."நாம எந்த கண்ணாதி போட்டு உலகத்த பார்க்கிறோமோ அப்படித்தான் தெரியும் உலகம்"

Jayakanthan - ஜெயகாந்தன்said...

//என‌க்கு நீ இருக்க மாதிரி, அப்புற‌ம் உனக்கு யாரும்மா இருக்கா ?//

//எல்லோருமே கெட்ட‌வ‌ங்க‌ இல்லை சிவா. அதுக்காக எல்லோரையும் நம்பிவிடவும் செய்யாதே //

BOLD font'ல் பதிக்க வேண்டியவை.

Anonymoussaid...

ஒரு திருத்தம்

.."நாம எந்த கண்ணாடி போட்டு உலகத்த பார்க்கிறோமோ அப்படித்தான் தெரியும் உலகம்"

ராமலக்ஷ்மிsaid...

இப்படி யோசிக்கும் பெண் அம்மாவை என்றைக்கும் விட்டு விட மாட்டாள். அதே போல
எந்த அம்மாவும் தன் பெண்ணை தனி மரமா வாழ என்றைக்கும் விட்டு விட மாட்டார்.

அம்மாவின் மனதைத் தொட்ட பெண்ணின் மனதை தன் அறிவுரையால் அம்மாவும் தொட்டு விட்டார்.

வாழ்த்துக்கள் சதங்கா.

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

வாங்க. வாங்க.

//ஆஹா சுருக்கமா ஒரு கதை..நல்லா இருக்கு சதங்கா..//

நீண்ட தொடர் எழுதும் போது, அதில வர்ணனைகள் போட்டு இழுத்திடலாம், ஆனால் சுருக்கமா ஒரு கதை எழுதறது அப்படி செய்ய முடியாதில்லையா ? அதனால் முயற்சிப்போம் என்று செய்த சிறு முயற்சி.

படித்து, கருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜெய்,

//BOLD font'ல் பதிக்க வேண்டியவை.//

'நச்'சுனு சொல்லியிருக்கீங்க. நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அம்மாவின் மனதைத் தொட்ட பெண்ணின் மனதை தன் அறிவுரையால் அம்மாவும் தொட்டு விட்டார்.//

ஆஹா, தலைப்பு வைக்கும்போது, பொருந்துதா இல்லையானு ஒரே யோசனை. உங்கள் வரிகள் படித்தவுடன் ஒரே சந்தோசம், யோசனை காற்றில் பறந்தது.

cheena (சீனா)said...

ம்ம்ம் - என்ன இப்ப கதை கதைன்னு இறங்கியாச்சு - வாழ்க - நல்லாத்தானிருக்கு - நல்வாழ்த்துகள் -

Kavinayasaid...

//.."நாம எந்த கண்ணாடி போட்டு உலகத்த பார்க்கிறோமோ அப்படித்தான் தெரியும் உலகம்"//

ரிப்பீட்டேய்!

நல்ல சிறுகதை.

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

நல்லா இருக்கு சதங்கா!
வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ம்ம்ம் - என்ன இப்ப கதை கதைன்னு இறங்கியாச்சு //

அது ஒரு கதை !!! சமீபத்தில ஒரு மோதிரக் கையிடம் குட்டு வாங்கிய அனுபவம். அதை விரிவா சொன்னா விளம்பரப் படுத்தற மாதிரி ஆகிவிடும். அதனால் வேண்டாம். அவர் எனது கவிதைகள் (கவிதையா இது என்று கேட்காமல் !) விட கதைகள் நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லிட்டார் :))

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//நல்ல சிறுகதை.//

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ஜோதிபாரதி,

//நல்லா இருக்கு சதங்கா!
வாழ்த்துக்கள்!!//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

வல்லிசிம்ஹன்said...

இத்தனை அறிவான அம்மா இருக்கும்போது அந்தப் பொண்ணு சிவாவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் நிச்சயமாய்.
நல்ல கருத்தான இந்த சமயத்துக்கு வேண்டிய கதை.சதங்க,. அருமை.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நல்ல கருத்தான இந்த சமயத்துக்கு வேண்டிய கதை.சதங்க,. அருமை.//

கதையை வாசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !