Tuesday, August 19, 2008

வானின் நிறம் நீலம் - 1

காலை மணி ஏழு பதினைந்து. 'ஜூரோங் ஈஸ்ட்' நோக்கி செல்லும் துரித ரயில் 'புக்கிட் பாத்தோக்' நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.

ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த‌ கூட்ட‌ம் ர‌யிலை நோக்கித் திரள, ப‌ருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, பட் பட்டென கதவுகள் திறக்க, வெளியில் நின்ற‌ கூட்ட‌ம் வ‌கிடு போல‌ வ‌ழி விட‌, சில‌ர் மட்டுமே துள்ளி இற‌ங்கின‌ர் !

நொடியும் தாம‌தியாம‌ல் வெளியில் நின்ற கூட்ட‌ம் த‌ள்ளாம‌ல் உள்ளேற‌, அகோரப் ப‌சிகொண்ட‌ கும்ப‌கர்ண‌ப் புழு அனைவ‌ரையும் விழுங்கி அடுத்த‌ நிலைய‌ம் நோக்கி விரைந்த‌து.

நெற்றியில் திர‌ண்ட‌ நீர் நேர் கோடாய் சொட்ட‌, கை தூக்கித் துடைக்க‌க் கூட‌ இட‌மில்லை ர‌யிலினுள்ளே. நேர் கோடு முதுகிலும் இறங்க, காலை வெம்மையும், ஜன நெருக்கத்தின் புழுக்கமும், 'ஏன் தான் தினம் இப்படி இருக்கோ' என்ற அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், சில‌ நிமிட‌ங்க‌ளில் ர‌யிலின் குளிர்ச்சியை உண‌ர்ந்த‌ செல்வ‌குமார், 'ந‌ல்ல‌ வேளை இன்றும் நேரத்துக்கு ட்ரெயின‌ப் பிடிச்சாச்சு' என்று ம‌கிழ்ச்சி கொண்டான்.

உயர்ந்த நீள் பாலத்தில் பறந்த ரயிலுனிலுள்ளே வழக்கம் போல, தமிழ் உள்பட நான்கு அரசு மொழிகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வர, 'ஜூரோங்க் ஈஸ்ட்டில்' இற‌ங்கி, அடுத்து 'ராஃபிள்ஸ் ப்ளேஸ்' ர‌யிலைப் பிடிக்க‌ வேண்டுமே என்று ம‌ன‌ம் எண்ணுகையில் இவ்விரு நிமிட நிம்மதியும் குறைவ‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

ஜூரோங்க் ஈஸ்ட்டில் ஏழு இருப‌த்தி ஐந்தை விட்டால், அதோ க‌தி தான் செல்வாவுக்கு. நேரம் ஆக ஆக கூட்டமும் அதிகம் சேரும் நேரம். டாக்ஸி பிடித்தால் கூட எட்டு ம‌ணி அலுவ‌ல‌க‌த்திற்கு செல்ல முடியாது. சில நிமிடங்கள் லேட்டானாலே போதும், 'மேன‌ஜ‌ரி'யின் செல்ல‌த்துக்கு ஆளாக‌ நேரிடும். இத‌ற்காக‌வே ஒரு ஐந்து ப‌த்து நிமிட‌ங்க‌ள் முன்னால் கிள‌ம்ப‌ணும் என்று நினைத்துக் கொள்வான். இன்று வ‌ரை அது தொட‌ர்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

ராஃபிள்ஸ் பக்கம் எங்கேயாவது தான் அடுத்து வாடகைக்கு வீடு எடுக்கணும் என்ற எண்ணத் தொடரில் மூழ்கி, அத்தனை கூட்டத்திலும் ஒருவர் மேல் ஒருவர் உரசாமல் நிற்பது கண்டு அதிசயித்து ஜன்னல் வழி வேடிக்கை பார்த்து வந்தான் செல்வா.

அணிலின் வரிகளாய் மூன்று தடங்களில், நடுவே ரயில் நிற்க, கரை தொட்ட அலை மீண்டும் கடலுக்குள் செல்வது போல், ஒரு கூட்டத்தை இறக்கி, மறு கூட்டத்தை இருபுறமும் ஏற்றிக் கொண்டிருந்தது செல்வா வந்த ரயில் ஜூரோங்க் ஈஸ்ட்டில்.

இருப்பினும் செல்வா செல்லும் அடுத்த ரயிலுக்கு காத்திருப்போர் எண்ணிக்கையும், ராணுவ அணிவகுப்பாய் அடுக்கடுக்காய் நின்றிருந்தது. சரியா ஏழு இருபத்திஐந்து ரயில் வந்து நிற்க, முன்னின்ற பலர் ஏற, சில நொடிகளில் கதவு மூட, வெளி நின்ற பலருள் செல்வாவும் ஒருவன்.

என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றுகையில், கூடவே ஒரு மின்னலும் தோன்றியது. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி, விலகும் செல்வாவைத் தாண்டி ப்ளாஃபாரத்தின் அருகில் சென்று நின்றிருந்தாள்.

வெண் ப‌ருத்தி உடையில் முழ‌ங்கை வ‌ரை மேலாடை. 'வி' க‌ழுத்தில் ஓர‌மே எம்ப்ராய்ட‌ரி செய்த‌ க‌ரும‌ஞ்ச‌ள் பூக்கள். வான் நீல‌த்தில் ஜீன்ஸ். போனி டெய்ல், அதில் அழ‌கிய‌ ஜீன்ஸ் க‌ல‌ருக்கு ஏற்ற‌ ஹேர்பேன்ட். அதே ஊதா வ‌ண்ண‌ங்க‌ளில் இழுத்து விட்ட‌ டைம‌ன்ட் போல‌ காத‌ணிக‌ள். வெண் ம‌ஞ்ச‌ள் மேனி எல்லாம் இல்லை. வெய்யிலில் கருத்த வெள்ளைக் காரர்கள் நிறம் எனலாம். மெல்லிய‌ ஆர‌ஞ்சு உத‌ட்டுச் சாய‌ம். CK ஹேன்பேக் ஒரு புறம் தொங்க, மறுபுறம் கையிடுக்கில் கோப்பு ஒன்றை வைத்திருந்தாள்.

அழகிய பதுமைப் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆயிரமாயிரம் நின்றாலும், மின்னலின் வரவு அங்கிருந்த அனைவரையும் ஈர்த்திருக்க வேண்டும். அந்த இடத்தில் அனைவரும் அவளை ஒரு முறையாவது பார்க்கத் தவறவில்லை.

தின‌ம் வ‌ருகிறாளா ? இல்லை இன்றைக்கு தான் பார்க்கிறோமா ? யாரிவ‌ள் ? சீன‌ச்சியா, த‌மிழ‌ச்சியா, வெள்ளைக்காரியா ?!!! எந்த‌ நாட்டுக்காரிய‌ ம‌ன‌தில் வைத்துப் பார்த்தாலும், அந்த‌ நாட்டுக்காரி மாதிரியே இருக்கிறாளே !!! என‌ ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எறிய, செல்வாவின் எண்ண‌ அலைக‌ளின் ஊடே அடுத்த‌ ர‌யிலும் வ‌ந்து நின்ற‌து.

தொடரும் .....

8 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

\\வெளியில் நின்ற‌ கூட்ட‌ம் வ‌கிடு போல‌ வ‌ழி விட‌, சில‌ர் மட்டுமே துள்ளி இற‌ங்கின‌ர் !

நொடியும் தாம‌தியாம‌ல் வெளியில் நின்ற கூட்ட‌ம் த‌ள்ளாம‌ல் உள்ளேற‌, அகோரப் ப‌சிகொண்ட‌ கும்ப‌ர்க‌ண‌ப் புழு அனைவ‌ரையும் விழுங்கி அடுத்த‌ நிலைய‌ம் நோக்கி விரைந்த‌து.
\\


உவமை எல்லாம் மிக மிக அருமை சதங்கா ரொம்ப நல்லா ஆரம்பிச்சிருக்கு :) தொடர்ந்து கலக்குங்க

ராமலக்ஷ்மிsaid...

கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலாய் ஒரு தொடக்கம், அதிரடியாய் ஒரு 'தொடரும்'. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

//சில நிமிடங்கள் லேட்டானாலே போதும், 'மேன‌ஜ‌ரி'யின் செல்ல‌த்துக்கு ஆளாக‌ நேரிடும்.//

ரசித்தேன்.

// இத‌ற்காக‌வே ஒரு ஐந்து ப‌த்து நிமிட‌ங்க‌ள் முன்னால் கிள‌ம்ப‌ணும் என்று நினைத்துக் கொள்வான்.//

எல்லோரும் நினைப்பதுதான்:)!

// இன்று வ‌ரை அது தொட‌ர்ந்து கொண்டுதானிருக்கிற‌து.//

எவருமே பின் பற்றியதாய் சரித்திரமே இல்லைதான்:)!

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//உவமை எல்லாம் மிக மிக அருமை சதங்கா ரொம்ப நல்லா
ஆரம்பிச்சிருக்கு :) தொடர்ந்து கலக்குங்க//

மிக்க நன்றிங்க‌. ரொம்ப சந்தோசம் உங்க பின்னூட்டம் பார்த்து.

சதங்கா (Sathanga)said...

ராம‌ல‌ஷ்மி மேட‌ம்,

//கவிதையாய் ஒரு தலைப்பு, கலக்கலாய் ஒரு தொடக்கம், அதிரடியாய் ஒரு 'தொடரும்'. தொடரட்டும் வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

//எல்லோரும் நினைப்பதுதான்:)!

எவருமே பின் பற்றியதாய் சரித்திரமே இல்லைதான்:)!//

அலாரம் வைத்தால் கூட, அதன் தலையில் தட்டி அமைதியாக்கிடுவோமே :)) ஆமா, All sailing in the same boat :))

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

உவமைகளும் வர்ணனைகளும் நிறைந்த அழகான கதையின் அருமையான தொடக்கம். தினசரி நிகழும் நிகழ்வுகளை இவ்வளவு அருமையாகக் கூர்ந்து கவனித்து, சிந்தித்து, அழகாக எழுதி இருக்கும் விதம் பாராட்டத் தக்கது.

சாதாரணமாக தினந்தினம் பயணம் செய்யும் புகைவண்டியினை இப்படியும் ரசிக்க முடியுமா ?

கற்பனை சக்தியும், தமிழ்ச் சொற்களும், இயல்பான எளிமையான நடையும் கதையினை மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிறது

நல்வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

//கற்பனை சக்தியும், தமிழ்ச் சொற்களும், இயல்பான எளிமையான நடையும் கதையினை மறுபடி மறுபடி படிக்கத் தூண்டுகிறது//

ஆஹா, பல முறை படித்தேன் இவ்வரிகளை. இன்னும் நல்லா எழுதணும் என்று ஒவ்வொரு பதிவிற்கு அப்புறமும் யோசிப்பேன். அந்த முன்னேற்றதிற்கு உழைப்பது நான் மட்டுமல்ல, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்க சக்திக்குத் தான் முதலிடம்.

வல்லிசிம்ஹன்said...

சிங்கப்பூரா இப்போது களம்?
சதங்கா அதிசயிக்க வைக்கிறீர்கள். எத்தனை இளைஞர்கள் மனதில் புகுந்து புறப்பட்டு இருக்கிறீர்கள் தெரியவில்லையே. வெகு சுவாரஸ்யமாய் இருக்கிறது.
செல்வாவுக்கு மின்னல் கிடைத்து விடதா. இனி அமர்க்களம்தான்.
ஓ அந்தக் காதல் நாட்கள் சொல்ல வைக்கிறீர்கள்:0)

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//சிங்கப்பூரா இப்போது களம்?//

ஆமாம். ரொம்ப நாளாவே சிங்கப்பூரை வைத்து எழுதணும் என்று ஆசை. இப்பொழுது நிறைவேறுகிறது.

//சதங்கா அதிசயிக்க வைக்கிறீர்கள். எத்தனை இளைஞர்கள் மனதில் புகுந்து புறப்பட்டு இருக்கிறீர்கள் தெரியவில்லையே. வெகு சுவாரஸ்யமாய் இருக்கிறது.//

உங்களைப் போன்றவர்களின் சுவாரஸ்யம் தான் என்னை எழுத வைக்கிறது வல்லிம்மா.

//செல்வாவுக்கு மின்னல் கிடைத்து விடதா. இனி அமர்க்களம்தான்.//

ஆமா, இல்லை. இப்பவே சொல்லிவிட்டால் அப்புறம் கதையில் சுவாரஸ்யம் இருக்காது.

//ஓ அந்தக் காதல் நாட்கள் சொல்ல வைக்கிறீர்கள்:0)//

கொசுவத்தி சுத்த வச்சிட்டனா ... ஹிம் ... :)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !