Thursday, July 31, 2008

என்ன விலை அழகே - 7

அர‌ச‌னுட‌ன் வாதிட்டு, ஆழ்க‌ட‌லில் விழுந்து, பாருங்க‌. நீங்க‌ பிழ‌ச்சிட்டீங்க‌. ந‌ல்லா க‌ண்ண‌த் தொற‌ந்து பாருங்க‌ என்று அந்த‌ டாக்ட‌ர் சொல்லும் போது ச‌ட்டென‌ க‌ண் விழித்துப் பார்த்தான் கோவிந்த்.

கிருபாவும், கார்த்தியும் இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த‌ன‌ர். ஒன்ன‌ரை நாட்க‌ள் முழுக்க‌ வெளியில் சுற்றிய‌தில் அலுப்பு. நெட்டி, முறித்து எழுந்து சென்று சிறிது நீர் குடித்தான்.

ப‌ட‌த்துட‌ன் ஒன்றியிருந்தாள் இன்டி. என்னோட‌ க‌லெக்ஷ‌ண்ல‌ இருக்கு இந்த‌ப் பாட்டு என்று அசினோடு சேர்ந்து மெலிதாய் 'முகுந்தா முகுந்தா' பாடினாள். ஐ லைக் இட், வாட் எபௌட் யூ கோவிந்த் ?

ம்.ம்.மீ டூ

படம் முடிந்து செல்கையில், எங்காவது சாப்பிட்டு பிறகு உன்னை வீட்டில ட்ராப் பண்ணுகிறேன் என்றான்.

ஐ டோன்ட் ஃபீல் ஹ‌ங்ரி கோவிந்த். அம்மா குக் பண்றேன்னு வேற சொன்னாங்க. பிறகு பார்த்துக்கலாம். வீட்டில ட்ராப் பண்ணிடு என்னை.

அடையாறில் உங்க சொந்த வீடா ?

ஆமா. அம்மாவோட அப்பா வீடு. என்னை மாதிரியே அம்மாவும் ஒரே பொண்ணு. அடிக்கடி அப்பா இந்தியா வந்து போவார். அதுவும் இல்லாம, க்ராண்ட் பேரண்ட்ஸ் அசெட். எதுக்கு வித்துகிட்டுனு அம்மா சொல்லிட்டாங்க.

எவ்வளவு நாளா லண்டன்ல இருக்கீங்க ?

ஃப்ரம் வென் ஐ வாஸ் பார்ன். ஒரு நியர்லி ட்வெண்டி, ட்வெண்டிஃபை இயர்ஸ் இருக்கும்.

அனுமானித்த படியே அதே வயதிற்குள் தான் இன்டி இருந்தாள்.

இவ்வளவு நாள் வராம, இப்ப மட்டும் நீ எப்படி இந்தியா வர சம்மதிச்சே ?

எவ்ரிடைம் மை மாம் யூஸ் டு பெக் மீ. முடியாது என்று சொல்லிடுவேன். பட் இந்த முறை தெய் ஃபோர்ஸ்ட் மீ டு கம். அப்பாவுக்கு மதுரை பக்கத்தில வில்லேஜ்ல பெரிய நிலம் இருக்கு. அன்ட் தட் இஸ் ஆன் மை நேம். அதுல ஏதோ டாகுமெண்ட் வெரிஃபிகேஷன், பெர்ஸனலா வரணும் என்கிறார்கள் என்றார் அப்பா. அப்புறம் அம்மாவும், அவங்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அறிமுகப் படுத்தறதாவும் ப்ராமிஸ் பண்ணவே, வந்துட்டேன்.

சோ, நான் இல்லாம‌ல், இனோருவ‌ன் என்றால் கூட‌ சுற்றியிருப்பாய். ம‌ன‌துள் பேசிக் கொண்டான் கோவிந்த்.

கோவைச் செவ்வாயில் மெல்லிய‌ சிரிப்புட‌ன், ப‌ட் யூ நோ கோவிந்த். ஐ ஷுட் பீ க்ரேட்ஃபுல், த‌ட் நான் உன்னை மீட் பண்ணியது. ம‌ற்ற‌ ஃப்ரெண்ட்ஸ் கிடைத்திருந்தாலும், அவ‌ங்க‌ எப்ப‌டிப் ப‌ட்ட‌வ‌ங்க‌ என்று இப்ப‌ என‌க்கு ஒரு க‌வ‌லையும் இல்லை. ஐல் கால் யூ டுமாரோ ஈவ்னிங். ஓ.கே. சீ யா.

இவ்ளோ பேச‌றா, வீட்டுக்குள்ள‌ வாடானு சொல்லாம‌ விட்டாளே !

நாம தான் அவளை நெருக்கமா வச்சு நினைச்சுப் பார்க்கிறோமா ? அவளுக்கு அந்த எண்ணம் இருக்கா ? இல்ல சும்மா டேடிங் அவ்ள தானா ?

இதுவ‌ரை நான் இப்ப‌டி இல்லையே. வாட் இஸ் அட்ராக்டிங் மீ டூ கெட் க்ளோஸ் டு ஹெர். என்ன‌து ஆங்கில‌ம் நிறைய‌ வ‌ருது !!!

சாப்பிட்டது, சூப் கொட்டியது, ஐஃபோன் தருகையில் அவளது கண்களில் ஒரு மின்னல் மின்னியது, தியேட்டரில் விரல்கள் பற்றியது ....

இப்படியே யோசித்து, கைத்தலம் பற்ற கணாக் கண்டு மீண்டும் உறங்கிப் போனான் கோவிந்த்.

திங்கள் காலை, நுங்கம்பாக்கம்.

அமெரிக்காவில் ஹௌஸிங் இன்ட‌ஸ்ட்ரி ட‌ல்லா இருக்கு, இது உன‌க்கு தெரியும். ந‌ம்ம‌ க‌ம்பெனி எடுத்திருக்கற‌ ப்ராஜ‌க்ட்ல, அடுத்த‌ ஃபேஸுக்கு ஃபண்ட் அத‌ள‌பாதாள‌த்திற்கு கொற‌ச்சிட்டாங்க‌. இது ந‌ம்ம‌ க‌ம்பெனி ரெவின்யூவ‌ ரொம்ப‌ ரொம்ப‌ பாதிக்கும். ஜீரோ டெப்ட் ஃபார் த‌ லாஸ்ட் தெர்ட்டி க்வாட்ட‌ர்ஸ், இதும் உன‌க்குத் தெரியும்.

இந்த ப்ராஜ‌க்ட் விட்டு அவ்ளோ சீக்கிர‌ம் ந‌ம்மால‌ வெளில‌ வ‌ர‌வும் முடியாது. ஏன்னா ந‌ம்ம‌ க‌ம்பெனியும் இதில‌ கொஞ்ச‌ம் இன்வெஸ்ட்மென்ட் ப‌ண்ணிருக்கு. கான்ட்ராக்ட் சைன் ப‌ண்ணுங்க‌னு அமெரிக்காகார‌ன் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்த‌றான். இங்க‌ ந‌ம‌க்கு மேல‌ இருக்க‌ த‌லைங்க‌ ந‌ம்ம‌ள‌ ப‌டுத்த‌றாங்க‌.

புதன் நைட் பண்ணிரண்டு மணிக்கு ஃப்ளைட். கெள‌ம்ப‌றே, ப‌ட்ஜ‌ட்ல‌ கோட் ப‌ண்ண‌த எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி, பேசி முடிக்கற‌. தனது அறையில் கோவிந்திடம் சொல்லிமுடித்தார் ஹ‌ரி.

சீனிவாசன் அனுப்பியிருந்த ப‌வர் பாயிண்ட்டில், சார்ட் எல்லாம் சில மாற்றம் செய்து, அழுத்தமாக சில சிலைட்ஸ் க்ரியேட் பண்ணி, ஹரிக்கு அனுப்பும் போது மணி நாலு. ஹரியும், பெரும் தலைகள் சிலரும் சரிபார்த்து ப்ரசென்டேஸன் அப்ரூவ் பண்ண மாலை ஐந்தரை ஆகியிருந்தது.

முகுந்தா முகுந்தா, கிருஷ்ணா, முகுந்தா முகுந்தா என்று கோவிந்தின் செல் சிணுங்கிய‌து.

தொடரும் .....

Wednesday, July 30, 2008

என்ன விலை அழகே - 6

ஓ. எஸ். லவ்லி என‌ உற்சாக‌மானாள். ஓராயிர‌ம் ப‌ட்டாம் பூச்சிக‌ள் ப‌ட‌படத்துச் சிறகடிப்பதாய் உண‌ர்ந்தான் கோவிந்த்.

விபரத்தை கேட்டுக் கொண்டாள். கிவ் மீ யுஅர் செல் என அவன் பாக்கெட்டிலிருந்து செல்லை விரைந்தெடுத்து, சில அடிகள் நகர்ந்து, தந்தைக்கு விபரத்தை சொன்னாள்.

இஸ் தெ ஷோ அட் சிக்ஸ் தெர்ட்டி ? சரி அதுவரை என்ன பண்ணலாம் என்று கேட்டுக் கொண்டே செல்லைத் திணித்தாள்.

என்ன பண்ணலாம் ?! ம்ம்ம் வண்டியில் ஏறு.

கோவிந்த், ஐ லைக் தெ பெட்டல் பேக்.

வாட் ? ஓஓஓ பீடா. எதையும் சொல்லித் தந்த அம்மா இதை சொல்லவில்லையா ?

சொல்லியிருக்காங்க. சடன்லி ஐ ஃபர்காட் தெ நேம்.

அரை மணியில் ஸ்பென்சரில் பார்க் செய்தான் யமஹாவை. வா என் கூட ...

எங்கே கூட்டிட்டுப் போறே. ஓட்டமும், நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

இந்த ஃபார்ம் ஃபில் பண்ணுங்க சார்.

எ.கோவிந்த், எண் பதினைந்து, ஆதிமூலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை

பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், இல்ல ட்ரைவிங் லைசென்ஸ் காப்பி வேணும் சார்.

என்ன ப்ரீ பெய்ட் கார்டுக்கே இவ்ளோ டீடெய்ல் கேக்கறீங்க.

ஆமா சார். கம்பெனி உத்தரவு.

தங்கத் தாம்பளத்தில் வைத்த கருப்பு ரோஜா போல், சில நொடிகளில் இன்டியின் உள்ளங்கையில் அழகிய ஐஃபோன்.

ஹேய் எதுக்கு இவ்ளோ எக்ஸ்பென்ஸிவ்வா ....

பரவாயில்ல பிடி. இனிமேல் நோ லிமிட்டட் சாட்டிங்க். தோ வீ ஆர் அபார்ட், வீ ஷுட் பீ கனெக்ட்டட் ஆல்வேய்ஸ்.

வாட் டு யூ மீன் ?

கனெக்ட்டட் பை தெ ஃபோன்.

சத்யம் காம்ப்ளக்ஸ் கூட்டத்தில் மிதந்தது.

இட்ஸ் க்ரௌடட் எவ்ரிவேர் கோவிந்த். அதும் ச‌ண்டே ஈவ்னிங் ?!

சென்னை அப்ப‌டித்தான். இதெல்லாம் என்ன‌ கூட்டம் ?! ப‌ட‌ம் ரிலீஸ் ஆன‌ ச‌ம‌ய‌த்தில் வ‌ந்திருக்க‌ணும். நிற்க‌ கூட‌ இட‌ம் இல்லை.

அப்ப‌ ஏற்க‌ன‌வே இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்திட்டியா ? திரும்ப‌ பார்க்கிற‌ அள‌விற்கு ப‌ட‌ம் ந‌ல்லா இருக்கா ?

அப்படி சொல்ல முடியாது !

தென் ?

இது உனக்காக என்றான்.

தாங்க்ஸ், ஐம் ப்ளீ.....ஸ்ட். ஐ டோன்ட் நோ ஹௌ ஆம் ஐ கோயிங் டூ ரீபே ஆல் யுஅர் ஹெல்ப்ஸ் கோவிந்த் !

எதுவும் பண்ண வேணாம். இன்க்லூடிங் இந்த ஃபார்மாலிட்டீஸ். கொறச்சிக்கறியா ப்ளீஸ்

நீ மட்டும் என்னவாம் ... இஸ் 'ப்ளீஸ்' நாட் எ ஃபார்மாலிட்டி ? என்றாள் இன்டி.

நீரில் மின்னும் வெள்ளிப் பொட்டுக்களாய், இருவர் முகத்திலும் புன்முறுவல் தோன்றி மின்னியது.

தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த சிலர், இங்கு முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஈரைந்து விரல்கள் பின்ன‌, முதல் முறையாக‌ இறுகக் க‌ர‌ம் ப‌ற்றின‌ர் இருவ‌ரும்.

ஸீ த‌ க்ரௌட் இஸ் வாட்சிங் அஸ். அந்த‌ செக‌ப்பு ச‌ட்டை பாரு, ச‌ரியான‌ ஜொல்லன். ஆரஞ்சுக் காதோரம் கிசுகிசுத்தான் கோவிந்த்.

ஹீ இஸ் நாட் பெட்ட‌ர் தென் யூ என்று கோவிந்தை சீண்டிச் சிரித்தாள் அச்சு வெல்ல‌த் தொண்டையில் இன்டி.

வீட்டுக்கு போக நைட் லேட்டாகுமே, ஒன்னும் சொல்ல மாட்டாங்க ? புரியாத ஊரு, தெரியாத பையன் !!!

ஹேய், ஐம் நாட் எ கிட். அதுமில்லாம ஐ ஹேய்வ் பாஸிட்டிவ் ஜட்ஜ்மென்ட் ஆன் யூ, விச் ஐ கன்வேய்ட் டூ மை மாம் லாஸ்ட் நைட். அன்ட் ஷீ நோஸ் மீ வெல்.

'எகிறி குதித்தேன் அண்ட‌ம் இடிந்தது, அலையாய் அலையாய்' என்று வானில் ப‌ற‌ந்தான் கோவிந்த்.


தொடரும் .....

Tuesday, July 29, 2008

என்ன‌ விலை அழ‌கே - 5

ஞாயிறு மதியம் ரெசிடென்ஸியில் புஃபே. கூட்டத்தைப் போலவே உணவுகளும் நிறம்பி வழிந்தது. எதை விடுப்பது, எதை எடுப்பது, என ஒருவர் கூட சிந்திக்காமல் உணவு உட்கொள்வதில்லை எனலாம்.

இன்டி, கோவிந்தோடு ... கார்த்தியும், கிருபாவும்.

இந்தியச் சாயலும், ப்ரிடிஷ் ஆக்செண்ட்டும் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கோவிந்தைவிட கார்த்திக்கும், கிருபாவுக்கும் பரவசம் தாங்கவில்லை.

டேய் இருங்கடா, ரொம்ப வழிஞ்சு பயமுறுத்திடாதீங்க இன்டிய‌. நான் கை கழுவிட்டு வர்றேன். உங்களுக்குத் தான் அந்தப் பழக்கமே இல்லையே.

இன்டி, வாட் எபௌட் யூ ?

ஐ கேன் மேனேஜ் வித் ஃபோர்க் அன்ட் ஸ்பூன்.

நாங்களும் தான், ரிப்பீட்டினர் கிருபாவும், கார்த்தியும்.

சாரி கைஸ், எனக்கென்னவோ கையில சாப்பிட்டா தான் முழு திருப்தியே. சரி பேசிட்டு இருங்க, இதோ வந்திடறேன்.

சரியான நேரம் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என நினைக்கவில்லை இருவரும். சீக்கிரன்டா, அவன் வரதுக்குள்ள அவ கிட்ட காட்டு என கார்த்தியை அவசரப்படுத்தினான் கிருபா.

கோவிந்தின் ரெகார்டட் ஒலி, இன்டியின் பிஞ்சுக் காதுகளுக்குள் புகுந்து பஞ்சாய் மிதந்தது. அவளறிந்த சில தமிழ் பாடல்களுள், ஏனோ 'தேவதை வம்சம் நீயோ ....' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. மனம் லயிக்கையில் தாய்மொழி தான் துணையோ !?

எங்கே அவனுங்க என்றான் திரும்பி வந்த கோவிந்த்.

யாரோ 'மாயா'வாம். போன் பண்ணதா சொல்லி, கெளம்பிட்டாங்க‌. உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க.

தொலையறானுங்க. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். சரியான ஜொல்லனுங்க. டண் டண்ணா ஊத்திருப்பானுங்களே.

'தெய் ஆர் ... ஹிம்ம்ம்.' என்று மனதிற்குள் புன்னகைத்தாள்.

இந்த சாப்பாடெல்லாம் உங்க ஊருல கிடைக்குமா ?

யப் வீ காட் எ லாட், பட் எ லில் எக்ஸ்பென்ஸிவ்.

அப்புறம், இன்டி, ஒரு முக்கியமான செய்தி. அலுவல் சம்பந்தமா ஒரு வாரம் நான் யு.எஸ். போறேன். நீ மேனேஜ் பண்ணிப்பியா ? மறக்காம அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

ஒன் வீக் ... என க்ரீச்சிடும் ரயில் வண்டியாய் இன்டி கத்த, அவள் கையிலிருந்த ஃபோர்க் கோவிந்தின் சூப் கப்பில் விழ, சூப் தெரித்து, கோவிந்தின் பாக்கெட்டை நனைத்தது.

ஓ மை காட், ஸாரி ஃபார் தட், என எழுந்து துடைக்க வந்தவளை, கையமர்த்தி, பரவாயில்ல ... வேண்டும் என்றே பண்ணலை நீ, பின்னே எதுக்கு ஸாரி எல்லாம் என்றான் ?

என்ன இவ்வளவு ஈசியா எடுத்துக்கற. ஐம் ஸாரி, ரியலி ரியலி சாரி. என்ன இருந்தாலும் மேனர்ஸ் என்று இருக்கில்லையா என்றாள்.

இந்த ஃபார்மாலிடி கொஞ்சம் கூட பிடிக்கவில்லை கோவிந்துக்கு. ஒரு தூரத்தில் தான் இன்னும் அவள் இருக்கிறாள் என்ற நினைப்பு. ஆனாலும் அவள் கண்களில் தெரித்த வேதனை காட்டியது அவளது நெருக்கம். 'எகிறி குதித்தேன் வானம் இடிந்தது' என்ற பாடலுடன் உள்ளூர ஒரு குறுகுறுப்பு. அத்தோடு மேனேஜ் பண்ணிடுவியா என மீண்டும் நினைவூட்டினான்.

ஒரு வாரமா ... ஐயோ இதுக்கு நான் உன்னை மீட் பண்ணாமலே இருந்திருக்கலாமே. ஐ மைட் என்கேஜ் மைசெல்ஃப். ஹிம்ம்ம்ம். அம்மாவோட பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் இருக்கதா சொன்னாங்க. ஆஃப்டர் மெனி இயர்ஸ், திரும்ப அவங்கள்ல சிலர மீட் பண்றதாவும் சொன்னாங்க. அங்க யாராவது பையன் கிடைக்கறானானு பார்க்கிறேன் என்றாள், கோவிந்தின் கண்களைப் பார்த்துக் கொண்டே.

நல்லா கிடைக்கட்டும், மூனு வாரமும் அவன் கூடவே சுத்திக்கோ என்று சொல்ல நினைத்தாலும், காட்டிக் கொள்ளாமல், சினிமாலாம் பார்ப்பியா என்றான்.

திசை திருப்புகிறான் என்பதை உணர்ந்து, பார்க்காதவங்க யாராவது இருக்காங்களா என்ன ? என்றாள்.

ஐ மீன், தமிழ் படங்கள்.

ஓ யா. அம்மா நிறைய பார்ப்பாங்க. நல்ல படங்கள என்னையும் பார்க்க சொல்லுவாங்க. என்னோட தமிழ் இந்த அளவிற்கு இருப்பதற்கு முதலில் என் அம்மா, பின் தமிழ் சினிமா.

அப்படியே டிப்பிக்கல் ஆக்ட்ரஸ் மாதிரியே இருக்கு உன் டயலாக்

யூ மீன் ஐம் அன் ஆக்ட்ரஸ். ஆம் ஐ ஆக்டிங் ?

சீறும் பெண் சிங்கத்தின் முன் ஆண் (சிங்கம்) பாவம் தான் அல்லவா !

கூல் டவௌன். பேருலே கூல் வச்சிகிட்டா மட்டும் போதுமா. நிஜத்தில் இருக்கணும். என்ன மாதிரி.

மேல் டாமினேஷன் கூல் டவௌன் பத்தி பேசறான் ... ஹூம்ம்ம்ம்

சரி படம் பார்ப்ப, தமிழ் பாடல்கள் கேப்பியா ?

எ லாட். பெரிய கலெக்ஷனே வச்சிருக்கேன். ரீசன்டா 'நாக்க முக்க' வரைக்கும். தோ இட்ஸ் நாட் தட் மீனிங்ஃபுல், பட் ஐ லைக் இட். உனக்கு ?!!

அப்படிப் போடுடி என் லண்டன் சீமாட்டியே என மனதிற்குள் நினைத்து, யா யா மீ டூ என்றான்.

பேசிட்டே இருக்கோம். இன்னிக்கு ஈவினிங் ஷோ சினிமா போலாமா ? எப்போதும் தயங்காத, இன்று சற்றே தயக்கத்துடன் கோவிந்தின் கேள்வி !

தொடரும் .....

Monday, July 28, 2008

என்ன‌ விலை அழ‌கே - 4

நாளைக்கேவா ?! உடனே கெளம்பு என்றால் நான் என்ன செய்வேன் ?

என்னைய்யா எப்பவும் இல்லாம இப்ப இப்படி சொல்ற ? சரி எத்தன நாள் அவகாசம் வேண்டும் ? ரெண்டு மூனு நாள் ?

ப‌ழைய‌ கோவிந்தாய் இருந்தால் இந்நேர‌ம் பேக்கிங்கில் இற‌ங்கியிருப்பான். இன்டி மேல் அப்ப‌டி என்ன‌ ஈர்ப்பு ?! மாலினி, ந‌ந்தினி, ப‌த்மினி என‌ மினிமினிக்க‌ளுட‌ன் சுற்றும் போதெல்லாம், முத‌ல் முறை ப‌ர‌வ‌ச‌மாய் இருக்கும், அப்புறம் சே என்றாகி விடும். அதுபோல‌த் தான் இதுவுமா ? ஜ‌ஸ்ட் லைக் த‌ட் ? டைம் பாஸ் ?!

த‌ன‌க்குள் கேள்விப் பிர‌வாக‌மெடுக்க, க‌ளைப்பில் உற‌ங்கிப் போனான்.

முடியாது ஹ‌ரி சார். என்னை ல‌ண்ட‌னுக்கு வேணா அனுப்புங்க‌. இந்த‌ நேர‌த்தில் யு.எஸ். வேண்டாம்.

கோவிந்த் தூக்கத்தில் கொஞ்ச‌ம் உர‌க்க‌ பினாத்த‌வே, ப‌த‌றி எழுந்தான் கார்த்தி. கிருபாவை த‌ட்டி எழுப்பி, டேய் அங்க பாருடா ! நம்ம‌ ம‌ச்ச‌க்காரன ... புதுசா தூக்க‌த்தில் பித‌ற்ற ஆர‌ம்பிச்சிருக்கான். இன்னிக்கு அப்ப‌டி யாரு கூட‌ சுத்திட்டு வ‌ந்திருப்பான் ?! ல‌ண்ட‌னுக்கு அனுப்புங்க‌னு சொல்றான். நாளைக்கு பார்த்துக்க‌லாம் இவ‌ன‌.

வ‌ழ‌க்க‌ம் போல‌ முதலாவதாய் எழுந்து, வாய் கொப்ப‌ளித்து, முக‌த்தில் குளிர்ந்த‌ நீர் சில‌முறை தெளித்து, ப்ர‌ஷ் பண்ணலாம் என ப்ரஷ் எடுக்க‌ப்போன‌வன், அத‌ன‌ருகில் சிறு காகித‌த் துண்டு, இவ‌ன் க‌வ‌ண‌த்தைக் க‌வ‌ருவ‌து போல‌வே இருக்க‌, அத‌னை எடுத்து பிரித்தான்.

'next' என்று மட்டும் இருந்தது அதில். என்னதிது ?! சில விநாடிகள் யோசனையில், ஒன்னும் புரியல, என்று கசக்கி குப்பையில் போட்டான்.

கப்போர்ட் திற‌ந்து ஷேவிங் க்ரீம் எடுக்கப் போன இடத்தில், அதே போல் ஒரு காகித மடிப்பு. அதிலும் 'next' என்று மட்டும் இருந்தது.

அடடா ட்ரஷர் ஹண்ட் மாதிரியில்ல இருக்கு. யாரு வேலை இது ?! காலங்கார்த்தால என்ன பெரிய கண்டுபிடிப்பு பண்ண சொல்றானுங்க. டேய் எழுந்திரிடா என்று சுருண்டிருந்த கிருபாவை முதுகில் தட்டி, போர்வையை விரைந்து இழுத்தான்.

என்னடா 'next' 'next'னு பிட்டு பிட்டா அங்க அங்க போட்டு வச்சிருக்க. என்னாது இதெல்லாம் என கோவிந்த் கேட்க ...

நீ எந்த 'next'ல இருக்க இப்போ, இல்ல கடைசி 'next' வரைக்கும் போய்ட்டியா என்றான் கண்களை கசக்கிக் கொண்டே கிருபா.

டேய் அவனையே ஏன் வாட்டற. இந்தா உன் வாடலை இதுல கேளு என்று கார்த்தி தன் செல்லை கோவிந்தை நோக்கி வீசினான். ரெக்கார்ட‌ட் மெஸேஜ் போ, அதில‌ மூனாவ‌த கேளு.

"முடியாது ஹ‌ரி சார். ல‌ண்ட‌ன் வேணா போறேன் ...
...
இப்பணு பார்த்து யு.எஸ். போக சொல்றானே ... ஹேய் இன்டி ல‌ஞ்ச் வ‌ந்திரு அவசியம்."

மச்சி என்னடா இதெல்லாம் ? கோவிந்தா ... நீ தானாடா இப்படி ?!! த பாரு உனக்கு சொல்லணுமா என்ன ? இதெல்லாம் ஆரம்பத்திலேயே முற்று புள்ளி வச்சிரு. இல்ல புள்ளி வச்சி கோலம் போடலாம்னு நெனச்சே அது காம்ப்ளிகேட்டட் ஆகிடும் சொல்லிட்டோம்.

உன் லைஃப் தான் பெட்டர்னு நாங்க நெனச்சிட்டு இருக்கோம். நீ என்னடானா ... பாரு 'கிருபா'வ. ரெண்டு மாசம் தான் மாயா பின்னாடி சுத்தறான். உருகி ஓடா தேஞ்சிட்டான். ஒடிசலா தேமேனு இருந்தவ பளபளனு இருக்கா இப்ப.

உங்க கிட்ட நான் கேட்டனா ? இல்ல ஏதாவது சொன்னனா ? எனிவே தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃப்ரீ அட்வைஸ். 'டேய், டேய் ... எனக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்' என்று மெஸேஜை டெலிட் பண்ணப் போனான் கோவிந்த்.

சட்டென செல்லைப் பறித்த கார்த்தி, அதெப்படி ... அடுத்த முறை நீ லண்டன மீட் பண்ணும் போது நாங்களும் இருப்போம். சரின்னா சொல்லு, அதுக்கப்புறம் இத டெலிட் பண்ணிடலாம். இல்லேன்னா ...

இல்லேன்னா ?

முதல் சுற்று, உன் நெருங்கிய தோழிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்படும். துவம்சம் பண்ணிட மாட்டாங்க ?!

தொடரும் .....

Friday, July 25, 2008

என்ன விலை அழகே - 3

எதோ முக்கியம் என்று தெரிகிறது. அதான் இப்ப கால் பண்ணியிருக்கீங்க. ஒரு அரைமணி கழித்து திரும்ப அழைக்கவா ?

சரி, பரவாயில்லை. மறக்காம கால் பண்ணு.

ஓ.கே.

நன்றாக கருத்திருந்தது வானம், கோவிந்தின் மனம் போலே.

கெளம்பலாமா, உங்க வீட்டில் தேட மாட்டாங்களா ?

ஐ ஹேய்வ் டோல் யுஅர் டீடெய்ல்ஸ் டூ மை பேரண்ட்ஸ். அப்பா செல் வச்சிருக்கார்.

சரி நான் கரெக்டான இன்ஃபர்மேஷன் தான் தந்திருக்கேன் என்று எப்படி உனக்குத் தெரியும்.

வெரிஃபை பண்ணினே, நீ வண்டி ஸ்டார்ட் பண்ணும்போதே ... வண்டி கலர், வண்டி எண் எல்லாம். சரியா இருக்கத் தானே நிம்மதியாய் உன் பின் அமர்ந்தேன்.

தோடா ... செம கில்லாடி மா நீ .... திடீரென சென்னைத் தமிழுக்கு மாறினான்.

எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருந்தாலும், இவளிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தான். என்னவாயிருக்கும் ?! உடையா, நடையா, பேச்சா ....

வெள்ளைக்காரப் பெண்களுடன் சுற்றியதெல்லாம், ஜடப் பொருட்க‌ள் போலத் தெரிந்தது இப்போது கோவிந்துக்கு. ஏன் இங்க‌ கூட‌ சில டேட்டிங் ஃப்ரென்ட்ஷிப் இருக்காங்க அவனுக்கு. கொஞ்ச‌ம் ஜெல‌சி பெர்ச‌னாலிட்டீஸ், அத‌னால் த‌விர்த்து விடுவான்.

ஏறு, உன்னை வீட்டில ட்ராப் பண்ணிட்டு நான் ரூமுக்கு போறேன். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை, லஞ்ச் போலாம். சரியா ? இந்தா என் செல் நம்பர், மறக்காம நோட் பண்ணிக்கோ.

அவ‌ள் ல‌ஞ்சுக்கு ச‌ரி என்கிறாளா, இல்லையா என்ப‌து ப‌ற்றி எல்லாம் அவ‌ன் க‌வ‌லைப் ப‌ட‌வில்லை.

வீட்டருகே மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, வந்து படுக்கையில் படுத்தான்.

அதென்ன சாட்டிங்க்ல பேரு 'இஸ்கூல்' ... சென்னை பாஷையில அப்படினா பள்ளிக்கூடம் தெரியுமா ...

ஓஓஓ கூல்ல்ல்ல்ல் என்று, காற்றில் கேசத்தைப் பின் தள்ளி சிரித்தாள்.

ஃபர்ஸ்ட் டூ லெட்டர்ஸ் ஆர் மை இனிஷியல்ஸ். அதோட கூல் ஆட் பண்ணிகிட்டேன். எனக்கு இந்தப் புலம்பல், பிதற்றல் இதெல்லாம் அலர்ஜி மாதிரி. ஐ வான்ட் டு பீ ஆல்வேஸ் கூல்.

சுருக்கமான இனிஷியலுக்குள்ள ஒளிச்சிருக்கற அழகான பேரு தெரிஞ்சுக்கலாமா ?

'யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்' என்பதை விட இது பிடித்திருந்தது 'இன்டி'க்கு.

இந்திரா சுவாமிநாதன், 'இன்டி'னு கூப்பிடுவாங்க.

வாட் எ லவ்லி நேம், உன்னைப் போலவே.

நினைவுகளினூடே, திடீரென ஹரி நினைவுக்கு வந்தார். ஆஹா, கால் பண்ணச் சொன்னாரே ....

கோவிந்த், உங்க பி1 விஸா இன்னும் எவ்ளோ நாள் வேலிட் ?

இன்னும் ரெண்டு வருசத்துக்கு இருக்கும் ஹரி சார். சரியான டேட் வேண்டும் என்றால் பார்த்து சொல்லணும்.

வெரி குட். இது போதும். கலிஃபோர்னியால ஒரு ரிய‌ல் எஸ்டேட் ப்ராஜ‌க்ட். நம்ம‌ சீனிவாச‌ன் தான் லீட். ஏதோ பெர்ச‌ன‌ல் விச‌ய‌மா அவ‌ச‌ர‌மா இந்தியா வ‌ர‌ணும்னு சொல்றார். ப்ராஜ‌க்ட் க்ரிடிக‌ல் பொசிஷன்ல‌ இருக்கு. அவ‌ருக்கு ஈக்குவ‌லா நீங்க‌ தான் ச‌ரியான‌ ஸ்கில்ட் பெர்ச‌ன்.

எப்ப கிளம்பணும் ?

நாளைக்கே !


தொட‌ரும் .....

Thursday, July 24, 2008

என்ன விலை அழகே - 2

இரண்டாயிரத்து மூனோ, நாலோ சுனாமி வந்துச்சு தெரியுமா ?

ஆமா, இப்போ அதுக்கு என்ன‌ ?

யூ வோன்ட் பிலீவ், அதுக்கு முதல் நாள் இதே கடற்கரையில இந்த மாதிரி தான் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம் ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ர். அடுத்த‌ நாள் நான் யூ.எஸ் கெளம்பறேன். ப்ஃப்ளைட்ல‌ முப்ப‌து ம‌ணி உக்கார்ந்து போர‌டிச்சு, கீழ‌ இற‌ங்கின‌வுட‌ன், ஹோட்டலுக்கு டாக்சி பிடித்தேன். நான் இந்தியால இருந்து வர்ரேன் என்று சொன்னவுடன் டாக்சிகார‌ன் கேக்கரான் சுனாமி ப‌த்தி. முதலில் ஏதோ சின்ன டிஸாஸ்டரா இருக்கும் என்று நினைத்தால், அவன் சொல்ல சொல்ல எனக்கு திகிலெடுக்க ஆரம்பித்தது.

ஹோட்டலுக்குப் போய்ட்டு மொத வேலையா மளிகைக்கடைக்கு போன் அடிச்சேன். நண்பர்கள் நலமெல்லாம் விசாரித்து, நாங்க தினம் போற கடற்கரை ரோடெல்லாம் கடல் தண்ணிடானு பசங்க சொல்றது கேட்டு செம த்ரில்லிங். ந‌ல்ல‌ வேளை ம‌ளிகைக் கடை வீடு ஒரு நாலஞ்சு தெரு த‌ள்ளி தான் இருந்த‌து.

ச‌ரி இப்போ எதுக்கு அதுப‌த்தி சொல்ற‌.

கார‌ண‌ம் இருக்கு. சொல்லி முடிச்சுக்க‌றேன், அப்புற‌ம் பேசு.

'சுத்த‌ மேல் டாமினேஷ‌ன்' ம‌ன‌திற்குள் திட்டி, புன்ன‌கை பூத்தாள்.

நாங்க வந்த மறுநாள், நாம் நிக்க‌றோமே இங்கெல்லாம் ந‌ம‌க்கும் மேல‌ த‌ண்ணியாம். அடுத்த‌ நாள் இங்க‌ வ‌ந்திருந்தா என்ன‌ ஆகியிருக்கும் !

என்ன‌ ஆகியிருக்கும் ?!

என்ன, இன்னிக்கு உன்னைப் பார்த்திருக்க முடியாது என்றான் மெல்லிய‌ சிரிப்போடு. நானும் அதுக்கப்புறம் எத்தனையோ முறை இங்க வந்திருக்கேன். ஆனா இப்ப தான் சுனாமி ஞாபகம் வருது. ஆங். காரணம் சுனாமி தான்.

வாட் டூ யூ மீன்

அன்னிக்காவ‌து ம‌று நாள் சுனாமி வ‌ந்தத‌து. இன்னிக்கு, கூட‌வே வ‌ந்திருக்கே !

அன்னிக்கு வ‌ந்த‌ சுனாமி பெரிய‌ சேத‌த்தை ஏற்ப‌டுத்திய‌து. இன்னிக்கு வ‌ந்திருக்க‌ சுனாமி என்னுள் பெரிய‌ மாற்றத்தை ஏற்ப‌டுத்துது.

புரிய‌ல‌ ?!

ச‌ரி விடு, பெருசா ஒன்னும் இல்ல‌, அப்புற‌ம் பேச‌லாம் இது ப‌த்தி. நானே பேசிட்டு இருக்கேன். நீ ஒன்னும் சொல்ல‌ மாட்டேங்க‌றே ? ஆங்கிலம் கலந்த உன்னோட தமிழ் லவ்லி. அத கேக்கறதுக்காக காத்துகிட்டு இருக்கேன். தமிழ் நல்லா பேசற. படிக்கத் தெரியுமா ?

மேல் டாமினேஷன் என்று திட்டினாலும் கோவிந்தின் வரிகள் அவளை கிறங்கடித்தது.

ஓரளவுக்குத் தெரியும். அம்மா சொல்லித் தந்திருக்காங்க. லண்டன்ல சில நாவல்கள் வீட்டில வச்சிருக்கோம். கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் இவங்கள்ளாம் அம்மாவோட ஃபேவரிட்ஸ். என‌க்கு இதெல்லாம் அவ்வ‌ள‌வு இன்ட்ர‌ஸ்ட் இல்லை.

வேற‌ எதெல்லாம் இன்ட்ர‌ஸ்ட் ?

ஆர்ட். க‌லைக‌ள் பிடிக்கும்.

இங்க‌ இருந்து வாங்கிட்டு போற கலைப் பொருட்க‌ள் பெரிய‌ லிஸ்டே வ‌ச்சிருக்கேன்.

ப‌ர்ஸை தொட்டுப் பார்த்துக் கொண்டான் கோவிந்த்.

டெர‌கோட்டா ரொம்ப‌ ரொம்ப‌ பிடிக்கும். லிஸ்ட்ல‌ எது வாங்க‌ற‌னோ இல்லையோ டெர‌கோட்டா வாங்காம‌ப் போற‌தில்லை.

வாங்கிட்டாப் போச்சு, அப்புற‌ம் ?

நான் நெனச்சத விட சென்னை ரொம்ப ஹாட்டா இருக்கு. வந்து ரெண்டு நாள் தான் ஆகுது. சரியான போரு. எங்கயும் வெளியில போக முடியல. இன்னிக்கு என்னை இந்த அழகான கடற்கரைக்கு கூட்டிட்டு வந்ததற்கு ரொம்ப தாங்கஸ்.

அழகே அழகுனு சொல்லும்போது இன்னும் அழகாத் தான் இருக்கு என்று ம‌ன‌துள் நினைத்துக் கொண்டான் கோவிந்த்.

எப்ப‌டி இங்க‌ டைம் ஸ்பெண்ட் ப‌ண்ண‌ப் போறோம்னு த‌விச்சேன். இனி ஊருக்கு போர‌ வ‌ரைக்கும் என‌க்குக் க‌வ‌லை இல்லை.

என்னிக்கு ஊருக்குப் போறே ?

இன்னும் மூனு வார‌த்தில‌.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்.

ச‌ரி நாளைக்கு எங்க‌ போக‌லாம் ?

ரொம்ப‌ உரிமை எடுத்துக்க‌ற நீ. தின‌ம் எல்லாம் முடியாதும்மா. ரெண்டு மூனு நாளைக்கு ஒரு த‌ர‌ம் வேணா இதே போல‌ ஈவ்னிங் எங்காவ‌து போக‌லாம். ஓகே ?!

பேசிக் கொண்டிருக்கும் போதே கோவிந்தின் செல் சிணுங்கியது.

யாரு ... கார்த்தி இல்ல கிருபாவாத்தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் செல்லில் அவனது மேலாளர் ஹரி.

ஹரி சார் ... சொல்லுங்க ....


தொட‌ரும் .....

Wednesday, July 23, 2008

என்ன விலை அழகே - 1

கோவிந்த் எப்ப‌வும் அளவிற்கு அதிகமாய் சத்தத்துடன் பேசுவது வழக்கம். நண்பர்கள் கூடினால், யாரும் கொடுக்காமலேயே நாட்டாமை பதவியை எடுத்துக் கொள்பவன். அறிவில் கெட்டிக்காரன். பெண்க‌ள் விச‌ய‌த்தில் ஜொல்ல‌ன். மொத்த‌த்தில் குஜாலான பேர்வழி.

வேலை நிமித்தம் மேலைநாடுகள் பலவற்றில் பறந்து திரிபவன். கனடா சென்றால் கனடிய பெண்களுடனும், லண்டன் சென்றால் ஐரோப்பிய பெண்களுடனும், அமெரிக்காவில் அமெரிக்கப் பெண்களுடனும் ஊர் சுற்றுபவன். நண்பர்கள் அவனுக்கு வைத்த பெயர் 'மச்சக்காரன்'.

திருவல்லிக்கேணியில் ஒரு தெருவில், மளிகைக் கடைக்காரர் ஒருவர் முன்னே கடை வைத்து பின்னால் குடியிருந்தார். அந்தக் காலத்திலேயே, மாடியும் கட்டி, வாடைக்கு விட்டால் அதில் ஒரு நிரந்தர வருமானம் வருமே என்று உட்கார்ந்து யோசித்திருப்பார் போல.

பல பேச்சுலர்கள் வாழ்வில் முன்னேற இந்த மாடிப் படியில் ஏறி இறங்கியிருக்கின்றனர். தற்போதைய பேச்சுலர்கள் நம் கதாநாயகன் கோவிந்த் மற்றும் அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் குழு.

"மச்சக்காரா, எப்படிடா உன்னால மட்டும் முடியுது ?!" என்று வழக்கம் போல கேட்டனர் கார்த்தியும், கிருபாவும்.

இப்படி நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் வாழ்கையில் பெரிசா சாதித்த நினைப்பு எழும் கோவிந்துக்கு. உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல், சும்மா டைம் பாஸ்டா மச்சி என்று ந‌ழுவி விடுவான்.

'டைம் பாஸ்'னாலும் எல்லாருக்கும் கெடைக்குமா என்ன‌ ?

ஒக்காந்துட்டான்டா சாட்டிங்க்ல‌, அவ‌ன‌வ‌ன் ப்லாகிங்ல‌ எறங்கிட்டான், இவ‌ன் என்ன‌டான்னா இன்னும் சாட்டிங் விட‌ மாட்டேங்க‌றான் என்றான் கார்த்தி.

காதில் விழுவ‌தைக் கேழாத‌து போல் த‌ட்ட‌ச்சிட‌ ஆர‌ம்பித்தான் கோவிந்த்.

...

அப்பா, அம்மா ட்ரிடேனி போயிருக்காங்க. போரு நான் வரலைனு சொல்லி அனுப்பிட்டேன். எனக்கு யாரு கூடவாவது ஊர் சுத்தணும்.

ஏதேது, டைடானிக் மாதிரியில்ல சொல்ற. திருத்தணியா ?

அவனது ஆளுமையும், நகைச்சுவை சாட்டிங்கும் அவளுக்குப் பிடித்திருந்தது.

அமா. நாம டி.நகர்ல மீட் பண்ணலாமா ?

டி.ந‌க‌ர் எங்கே ?

ஐய‌ப்ப‌ன் கோவில்.

டி.ந‌க‌ரில் ஐய‌ப்ப‌ன் கோவிலா ? அது அடையாறில‌ இல்ல‌ இருக்கு, ஊருக்குப் புதுசா ?

ஆமா. ல‌ண்ட‌ன் செட்டில்டு. அப்பா, அம்மா பொற‌ந்த‌ ஊரு சென்னை. வெகேச‌னுக்காக இங்க வ‌ந்திருக்கேன். இது தான் முத‌ல் முறை இங்க‌ வ‌ர்ற‌து. கோவில் பக்கத்துல தான் வீடு.

போட்டுத் தாக்கு அப்ப‌டி, சூப்ப‌ர் தான் போ, எத்த‌னை ம‌ணிக்கு ?

சாய‌ந்திர‌ம் ஆறு ம‌ணிக்கு.

ல‌ண்ட‌ன் வாசி என்று அறிந்த‌வுட‌ன் குஷியாகி குஜாலாக‌ மெசேஜ் அனுப்பினான். அவ‌ளும் அவ்வாறே ப‌தில‌ளிக்க‌. வெய்யிலில் ஐஸ்க்ரீம் உருக‌லாய் ஆனான்.

தங்கள‌து உருவ‌ம், உடை நிற‌ம் எல்லாம் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர் இருவ‌ரும்.

தான் வரும் வண்டி, எண், அதன் கலர் எல்லாம் சொல்லி, ச‌ரி. மீட் யூ தேர் ஷார்ப்லி என்று சாட்டிங் விண்டோவை மூடினான்.

மாலை ஐந்து ம‌ணிக்கு குளித்து (!), நீட்டா அயர்ன் பண்ணின ட்ரெஸ், குச்சி செண்ட் லைட்டா ஒரு சின்ன‌ ஸ்ப்ரே அடித்து, யமஹாவின் கிக்க‌ரை லேசா அழுத்தி, உறுமிப் ப‌ற‌ந்தான் கோவிந்த் கோவிலுக்கு.

கெள‌ம்பிட்டான்டா, ஏதாவ‌து ஒரு வார்த்தை சொல்றானா பாரு. நல்லாருக்க‌ட்டும் என்று புல‌ம்பி வாழ்த்தின‌ர் கார்த்தியும், கிருபாவும்.

சாட்டிங்கில் சொன்னது போலவே நேரிலும் அழகா, மார்டனா இருக்கிறாளா, இல்ல உதாரா என்பதற்காகவே உஷாராக, சொன்ன இடத்திற்கு, சொன்ன நேரத்திற்கு போகாமல் கொஞ்சம் முன்னரே போய்விடுவான் கோவிந்த். இன்றும் அப்படித் தான். ஐந்தரைக்கெல்லாம் ஐயப்பன் கோவில் அருகில் இருந்தான்.

வண்டியை ஒரு ஓரமாக பக்கத்து கட்டிடத்தில் நிறுத்திவிட்டு, கொஞ்ச நேரம் அங்கு சுற்றி விட்டு, கோவிலுக்குள் நுழைந்தான். ஐந்து ஐம்பத்தைந்திற்கு நுழைவாயில் தெரியும் படி தூரத்தில், ஒரு தூணின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டான்.

அப்பட்டமா தெரியக்கூடாது என்பதற்காக கைத் தொலைபேசியை எடுத்து கிருபாவுடன் பேசினான்.

இப்ப‌ மட்டும் போன் பண்ணிடுவான். பார்ட்டி இன்னும் வந்திருக்காது என்று அலுத்துக் கொண்டான் கார்த்தி. ஏன்டா அவன் ஃபோன எடுக்கற. நெக்ஸ்ட் டைம் இந்த நேரத்தில போன் பண்ணினான்னா எடுக்காத டா என்று அத‌ட்டினான்.

"மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் என்னை" மனதிற்குள் வாலியின் பாடல் ஓட, மஹாபலிபுரம் நோக்கி ஈ.சி.ஆர் ரோட்டில் யமஹா ஓடியது.

தொடரும் .....

Monday, July 21, 2008

ரெட்வுட் சொல்லும் க(வி)தை



ஓங்கி உய‌ர்ந்த‌ காடு
அங்கே எங்க‌ள் வாழ்வு

சுற்றுலாத் த‌ல‌மாகும் காடு
ரெட்வுட் எங்க‌ள் பேரு

-----

நீண்டு வளர்ந்து,
நீண்ட காலமும் வ‌ள‌ரும்,

எம்மைப் பாரீர்
எம்கதை கேளீர்.

ஈராயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும் மேல்
எவற்றிலும் எமைக் காத்து,

முன்னூறு அடிவ‌ரைக்கும்
வான் முட்டி வ‌ள‌ர்வேன்.

பூமியில் என் பாத‌ம்,
ப‌ற்றி சுற்றி வ‌ந்து‌

சிற‌கெனக் கை பிடிக்க‌,
ப‌ற்றாது இருப‌த்தி ஐவ‌ர் !

வான் முட்டும் நானும்,
வ‌ந்த‌தொரு சிறு வித்தில்.

எமைப் போன்ற‌ சில‌ரும்
வ‌ந்த‌தெல்லாம் சிறு வித்தே !

சின்னஞ்சிறு செடி வேரும்
மண்ணைத் துளைக்கும் ப‌ல‌ தூர‌ம்,

எந்த‌ன் வேரின் ஆழ‌ம்
எத்தனை அடி அறிவீரோ ?!

ஆற‌டி ப‌ண்ணிர‌ண்டுக்கு உள்ளான,
ஆழ‌ம் தானிருக்கும் !

ஆழ‌ச் சென்றால் த‌னித்துவிடலாம்
என்றெண்ணி, பட‌ர்ந்திருக்கும்.

ம‌ண்ணில் சிலஅடி ஆழ‌த்தில்,
ப‌ட‌ர்ந்து ம‌ட்டும் இல்லாமல்,

ம‌ற்ற ம‌ர‌ வேர்க‌ளுட‌ன்
பின்னிப் பிணைந்து மிருக்கும்.

-----

சூறைக் காற்றின்
சீற்ற‌ம் தாங்கி,

காட்டுத் தீயின்
தாக்குத‌ல் காத்து,

இயற்கை சீற்ற‌ம்
எல்லாம் பொறுத்து,

நீண்டு நிற்க‌
என்றும் கார‌ண‌ம் ...

ம‌ண்ணில் ப‌ட‌ர்ந்து
ஒன்று பட்டு

எதையும் தாங்கும்
பின்னிய வேரே !

Wednesday, July 16, 2008

எங்கே நிம்மதி ... இங்கே ஓர் இடம் ...



ஹெட்மாஸ்டர் ஜெயபால் சைக்கிளை விட்டு இறங்க, அவருக்காகக் காத்திருந்த பியூன் சந்துரு, சைக்கிளைப் பிடித்துக் கொண்டார். ஹாண்ட்பாரிலிருந்து கைப் பையை எடுத்துக் கொடுத்து, காலை வணக்கத்தையும் சொல்ல, இரண்டையும் பெற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றார் ஜெயபால்.

மதுரையிலிருந்து நாற்பது, அம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளிக்கூடம் அது. ஓரளவுக்கு பெயர் பெற்றதும் கூட. பெரிய காம்பவுண்டு கேட்டினுள் நுழைந்தால் சில அடிகளில் நேரே தெரிந்தது பள்ளியின் மையக் கட்டிடம். ஆறேழு படிகள் அமைத்து அதன் உயரத்தில், நீண்டு அகன்று கம்பீரமாய் இருந்த‌து.

அதில் ஏறி இடப்புறம் திரும்பி, முதல் அறையான தனது அறைக்குச் சென்று அமர்ந்தார் ஜெயபால். அதற்குள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, பின்னாலேயே ஓடி வந்து மின்விசிறி பொத்தானை அழுத்தினார் சந்துரு.

கடக், கடக் என அல்ட்ரா க்ரைண்டர் போல ஆரம்பித்து, சட சடவென சங்குச் சக்கரம் போல் சுழன்றது மின்விசிறி. க‌ழுத்து விய‌ர்வையை க‌ர்சீப்பால் துடைத்துக் கொண்டு, கோப்புகள் சிலவற்றைப் பார்த்தார்.

கண்ணாடி போட்ட மேசை மேல் அடுக்கடுக்காய் பேப்பர்களும், கோப்புகளும். அவற்றினூடே சில புத்தகங்களும். அதில் ஒரு உள்ளங்கை அழைப்பு மணி ஒன்றும். அதை அழகாய் ஒரு தட்டு தட்ட உள்ளே வந்தார் சந்துரு.

ப்ரேயருக்கு நேரம் ஆச்சு, மணி அடிச்சிடுப்பா ...

சரிங்க ஐயா.

ஒன்ப‌து ம‌ணி ப்ரேய‌ர் முடித்து மீண்டும் இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்தார் ஜெய‌பால்.

மீண்டும் சில கோப்புகள். ஒரு சின்ன ரவுண்ட் பள்ளி வளாகத்தை. யாராவது பசங்க தெரிந்தால், நிறுத்தி "க்ளாசுக்கு போகம என்ன பண்ற இங்க ?" என்று கண்டிப்பு மிக்க கேள்வி. மற்ற ஆசிரிய‌ர்க‌ளுட‌ன் சிற்சிறிய உரையாட‌ல்க‌ள்.

தனது அறைக்குத் திரும்பியபோது மணி பத்தரை ஆகியிருந்தது. அழைப்பு மணியை அழுத்தி, சந்துருவை தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

பிறகு பள்ளி அலுவலகத்தில் நித்தம் நடைபெறும் சிறு கூட்டம். ஹாஸ்டல் பிரச்சனைகள், மாணவர் பிரச்சனைகள், வரப்போகும் ஆண்டு விழா பற்றிய ஏற்பாடுகள் மற்றும் பல பற்றி அலசும் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்புகையில் மதியம் பண்ணிரண்டரை ஆகியிருந்தது.

வீட்டிலிருந்து வந்த பெரிய அடுக்கு டிஃபன் கேரியர் பிரித்து, அவரது மேசையிலேயே தலைவாழை இலை போட்டு, எல்லாம் எடுத்து வைத்தார் சந்துரு.

வழக்கம் போல அளவாய் சாப்பிட்டு, அங்கே வைத்திருந்த குடுவையிலேயே கை கழுவி, சிறு துண்டில் முகம் துடைத்துக் கொண்டார். சந்துரு எல்லாவற்றையும் பேக் பண்ண, உட்கார்ந்த சேரிலேயே சரிந்து, கண்களை லேசாக மூடிக் கொண்டார் ஜெயபால்.

"டாட் எத்தனை முறை உங்களுக்கு சொல்வது. இன்னும் ஏன் இந்த பட்டிக்காட்டில் போய் உட்கார்ந்து, வயதான காலத்தில் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். சைக்கிள் மிதித்து, நடையாய் நடந்து, சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் நேரம் செலவழித்து ... இதெல்லாம் இல்லாம, இங்க வந்தா நிம்மதியா இருக்கலாமே ?!!!"

அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் ராஜ்பால் குரல் அப்படியே காதுகளில் ஒலித்தது அவருக்கு.

எதுப்பா நிம்மதி, ஊர் தெரியாத ஊரில் வந்து, தெருவில் நடந்தால் ஒரு நாலு பேரப் பார்த்துப் பேச முடியுதா. இல்ல பக்கத்து வீட்டுக்காரன் தான் யாருனு தெரியுதா. முடி வெட்டக் கூட அப்பாய்ண்ட்மென்ட் வாங்கற உங்க ஊரு, தலைவலி காய்ச்சல் என்றால் கூட உடனே டாக்டரைப் பார்க்க முடியாத நிலை ... நமக்குச் சரிப்பட்டு வராதுப்பா. வெளிப் பழக்கம் இல்லேன்னா எப்படி நிம்மதி இருக்கும். நமக்கு இது தான் நிம்மதி.

கட்டிய மணையாள் வீட்டில் என்றால், கட்டுப்பட்ட (தொழிலுக்கு) சந்துரு பள்ளிக்கூடத்தில். சுத்தி ஆளுங்க, நெனச்ச நேரம் வெளியில் போகலாம், வரலாம். இதுக்கும் மேல என்ன வேணும்.

ஜெயபாலின் உள்ளுணர்வு (டெலிபதி) அமெரிக்கா சென்றிருக்க வேண்டும், உறக்கத்தில் ராஜ்பால் எழுந்து இருமியதைப் பார்த்த அவர் மனைவி, கண்டதையும் நினைக்காம நிம்மதியா தூங்குங்க என்றாள் !

மார்ச் 25, 2009 யூத்ஃபுல் விகடனில்

Tuesday, July 15, 2008

ஹூஸ்டன் பயணம் - 4 - மூடிஸ் கார்டன்

ஜூலை 06, ஞாயிறு.

காலை எழுந்து ஹோட்டலிலேயே ப்ரேக்ஃபஸ்ட் முடிச்சாச்சு. எல்லாம் பேக் பண்ணி, ஒரு முறை எதும் மிஸ்ஸாகி இருக்கா என்று சரி பார்த்து, செக்‍அவுட் செய்து மூடிஸ் கார்டன் சென்றோம். மணி அப்பொழுதே காலை பதினொன்று ஆகியிருந்தது.

இங்கிருந்து ஊருக்குச் செல்ல பத்து மணி நேரம் ட்ரைவ். நண்பன் முன்னாடியே சொல்லியிருந்தான், ரெய்ன் ஃபாரஸ்ட் மிஸ் பண்ணக் கூடாது என்று. அப்புறம் 'டைட்டானிக்' பற்றி புதுசா காட்சிக் கூடம் ஆரம்பித்திருக்கிறார்கள் அதுவும் பார்க்கணும் என்று. ஊருக்கு ட்ரைவ் பண்ணும் நேரத்தைக் கணக்கிட்டு 'ரெய்ன் ஃபாரஸ்ட்' மட்டும் டிக்கட் வாங்கினோம்.

சிங்கையில் சென்டோசாவா, இல்ல‌ வேறு த‌னி இட‌மா என்று ச‌ரியே நினைவில் இல்லை. அதே போல் தான் இதுவும். ஆனால் இங்கு வெளித் தோற்றம் பெரிய கண்ணாடி பிரமிட் போன்றது. உள்ளே நிறைய‌ வ‌ண்ண‌ங்க‌ளில் பூக்கள், பறவைகள், த‌வ‌ளைக‌ள், பாம்புக‌ள், ஒரு மகாப் பெரிய‌ அனகோன்டா கூட‌.

தவளையைத் தொட்டால் எப்படி இருக்கும், அதன் பாதம் எப்படி இருக்கும் என்றெல்லாம் செயற்கையாய் செய்து வைத்து, நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இப்படித் தான் இருக்கும் என்று. இதை ஏன் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று ஒரு கேள்வி என்னுள். அப்புறம் தான் தெரிந்தது, இவர்கள் எங்கே நிஜத் தவளை பிடித்திருக்கப் போகிறார்கள் என.

சின்ன வயசில நாம பிடிக்காத தவளையா. அதும் மழைக் காலங்களில், சட்னியில் கொட்டிய தாளித்த கடுகு மாதிரி :), தெருவோரம் ஓடும் நீரில் எவ்வளவு குட்டி குட்டித் தவளைகள் மிதக்கும். சிலவற்றைப் பிடித்து கண்ணாடி டம்ளர்கள், தீப்பெட்டி டப்பாக்கள் என போட்டு வைப்போமே ! அதெல்லாம் மேற்கத்தியர்களுக்கு எட்டாக் கனி தானே.

இத‌னைக் க‌ட‌ந்து உள்ளே சென்றால், நெடுங் க‌ண்ணாடிக் கூரை. அங்கு ஏக‌ப்ப‌ட்ட‌ ப‌ற‌வையின‌ங்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ விட்டிருக்கிறார்க‌ள். பல வண்ணங்களில் மக்காவ்கள். இரு பஞ்சவர்ணக் கிளிகள். அணில்கள், வௌவால்கள், ஆமைகள், மீன்கள், பல்லிகள், பல விதமான‌ பறவைகள், மற்றும் பூக்கள்.

ஆங்காங்கே சில இளம் வயதினர் பாம்பையோ, பல்லியையோ வைத்து, அங்கு கூடும் மக்களுக்கு அதனைப் பற்றிய செய்திகள் கூறுகிறார்கள்.

பீச்சுக்கு அப்புறம் குட்டீஸ் விரும்பிய இடம் இந்த 'ரெய்ன் ஃபாரஸ்ட்'

நேரம் இருந்தால் நல்லா ஒரு நாள் செலவழிக்கலாம் இந்த கார்டனில். கார்டனுக்குள்ள நிறைய இருந்தாலும், நாங்க போகணும் என்று முடியாமல் போனது 'டைட்டானிக்', அப்புறம் 'பால்ம் பீச்'. என்ன குழந்தைகள் நல்லா நீரில் விளையாடி இருக்கும்.

ரெண்டு மணி நேரம் சுற்றி விட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒன்னரை மணிக்கு வண்டியைக் கிளப்பினோம். வழியில் சில ட்ராபிக் ஜாம்கள், சில நிறுத்தங்கள் எல்லாம் தாண்டி வீடு வந்து சேர அதிகாலை இரண்டு மணி.

தூங்கி எழுந்து அலுவலகம் ஓடணுமே என்று நினைக்கும்போது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.

கீழே படங்களைக் கண்டு ரசியுங்கள்.

-----


ரெய்ன் ஃபாரஸ்ட் பிரமிட்


ஆரஞ்சும் பச்சையும் போட்டி போடும் அழகு



பூவுக்குள் புல்


லேவண்டர் கோதுமை ?!


சொட்டும் நீரழகா, இப் பூ அழகா ?


லேவண்டர் ஆர்க்கிட்


ஆரஞ்சு ஆர்க்கிட்


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை


ப்ளாஸ்டிக் (போன்ற) டோட்


ட்ராகன் லிசார்ட்


ப்லூ டங் (நாக்க படம் எடுக்க எவ்வளவோ முயற்சித்தேன், முடியல :()


நானும் மரத்தில் தொங்குவேனே !


மலை (முழுங்கி) என பருத்து நீண்ட அனகோன்டா


நீரடியில் பஞ்சவர்ணத்தின் ரொமான்ஸ்


இன்னான்றே என்று சண்டையிடும் மக்காவ்


பூவில் தான் ஆரஞ்சு இருக்கணுமா, நாங்களும் தான்.

-----

நண்பர்களே, வ‌லையில் எனது முதல் பயணக் கட்டுரை இது (பள்ளிகளில் எழுதியதன் பின் இப்பொழுது தான் எழுதுகிறேன் :))). இதுவரை வந்து வாசித்து, ஸ்டார க்ளிக்கி, கருத்து சொல்லி, பல(வித‌)மாய் ஊக்குவித்த நல் உள்ளங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

Monday, July 14, 2008

ஹுஸ்ட‌ன் ப‌ய‌ண‌ம் - 3 - கேல்வ‌ஸ்ட‌ன் பீச்

ஜூலை 05, சனி.

நாசா விட்டு வெளியில் இர‌ண்டு ம‌ணி போல் வ‌ந்து, பீட்ஸா ஹ‌ட்டில் சாப்பிட்டுவிட்டு, ந‌ண்ப‌ன் வீட்ட‌ருகிலேயே நிறைய‌ ஹோட்டல்க‌ள் இருக்க‌, ச‌ரி ஒவ்வொன்றாய் விசாரிக்க‌லாம் என்று போனால், முத‌ல் ஹோட்ட‌லிலேயே ரூம் கிடைத்த‌து. கொஞ்ச‌ம் வாட‌கை தான் ஜாஸ்தி, கிடைத்த‌வ‌ரைக்கும் பெருமூச்சாக‌ இருந்த‌து.

நான்கு ம‌ணி போல் பீச்சுக்கு கிள‌ம்பினோம். 45 நிமிட‌ ட்ரைவ்.

காற்று சிலுசிலுவென‌ வீச‌, அலைக‌ள் காற்றோடு உருண்டு விளையாட, க‌ரையோர‌ம் ஸீக‌ல் ப‌ற‌வைக‌ளின் ந‌ட‌ன‌ம். நின்று கொண்டேயிருக்கும் அவை, அலை கிட்ட‌ வ‌ர‌, எகிறி குதித்து, காற்றில் மித‌ந்து, அலை உள் செல்லும்போது த‌ரை மிதித்து, ப‌ட‌ ப‌ட‌ வென‌ அங்குமிங்கும் சிறு பூச்சிக‌ள் தேடுவ‌து அப்ப‌டியே ஸீ‍டான்ஸ் போன்று இருந்த‌து.

ந‌ம்ம‌ ஊர் திரைய‌ர‌ங்குக‌ளில், க‌தாநாய‌க‌னைக் காட்டும் போது மேலிருந்து பறக்கும் காகித‌த் தூவ‌ல்க‌ள் போல் எக்க‌ச்ச‌க்க‌ ப‌ற‌வைக‌ள். ஸீக‌ல், பெலிக‌ன், நாரை ம‌ற்றும் ப‌ல‌. உடல் வெள்ளையாய் இருக்க, தலையை கருப்பு மை டப்பாவிற்குள் முக்கி எடுத்தது போல இருந்தது ஸீகல்லின் வண்ணம்.

பார்க்கிங் ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட்டோம், ஆனால் நினைத்ததை விட‌ மிக‌வும் எளிதாய் இருந்த‌து. ரோட்டிலேயே க‌ட‌லை ஒட்டி ஒரு லேன் பார்க்கிங்காக‌வே !!!

நிறைய இடங்கள் காலியாக இருக்க, வசதியான ஒரு இடம் பார்த்து வண்டியை நிறுத்தி, குழந்தைகளுக்கு உடுப்பு எடுத்துக் கொண்டு கீழிறங்கினோம். ரோட்டிலிருந்து கடலுக்கு இறங்க ஒரு பத்து பதினைந்து படிகள். அதன் வழியே கீழே பார்த்தால் நெடுகிலும் ஒரே பாறை கற்கள். நம்ம பாண்டிச்சேரி பீச் போலவே.

குழந்தைகள் தண்ணீரில் இறங்கணும் இப்பவே என்கிறார்கள். ரொம்ப தூரம் தள்ளிப் பார்த்தால் மண் இருப்பது போலத் தெரிந்தது. நிறைய மக்கள் தெரியவே, பொடி நடையாய் நடந்தோம்.

அங்கும் பாறைகள் தான். ஆனால் அதற்கும் மேலே மண் வந்து, நீரும் வந்திருந்தது. நீரில் ஆடி, மணல் வீடு கட்டி, சிப்பிகள் பொறுக்கி, குட்டீஸுக்கு ஏகப்பட்ட குஷி.

கரையோரம் நடந்து, நீரின் அலைகள் காலைத் தொட்டுச் செல்லும்போது மனம் ஒரு கனம் லேசாவது உணர முடிந்தது. 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்றால் அநேகருக்கு இந்தக் கரையோர நடை லிஸ்டில் முதலிடம் தான் இல்லையா ?!

நிறைய மக்கள் குடும்பம் குடும்பமாக, இக்கரையோரங்களில் டெண்ட் போட்டு கதையளந்து கொண்டிருக்கிறார்கள். வாலிபர்கள் சர்ஃபிங் பண்ண, குட்டீஸ்கள் மணல் வீடு கட்ட, நம்ம ஊரு போலவே இங்கும் சில அஞ்சா நெஞ்சர்கள் கரையை விட்டு வெகு தூரம் கடலுக்குள் செல்கின்றனர். அவர்களை விசில் அடித்து எச்சரிக்கும் லைஃப் கார்ட்.

பாறைகள் இருக்கும் இடங்களில் நிறைய மிச்சிகள் (மெக்ஸிகன்ஸ்). பாறை இடுக்குகளில் கயிறு விட்டுக் கொண்டு. ஒருவர் மேலே கயிறை எடுக்கும்போது பார்த்தால், இரண்டு விர‌ல் அளவிற்கு ஒரு கோழித் துண்டு கட்டியிருக்க, மீண்டும் வேறொரு இடுக்கில் உள்ளே விடுகிறார். எம்மாம் பெரிய மீனைப் பிடிப்பார் எனத் தெரியவில்லை. மீனுக்குத் தானா இல்ல வேற ஏதாவதுக்கா என்றும் தெரியவில்லை.

'ஆர் வி கோயிங் டு கம் பேக் ஹியர் ?'. கிளம்பலாமா என்று கேட்டதற்கு என் மகளின் எதிர் கேள்வி. 'லெட்ஸ் ஸீ' என்று சொல்ல, அரை மனதாய் இருந்த அவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

நாசாவில் சுற்றி, பீச்சில் ஆடிய‌ களைப்பில் குழந்தைகள் தூங்கிப் போயிருந்தார்கள். நாமும் தான்.

நீங்களும் தான். ரெஸ்ட் எடுங்க, அடுத்து 'மூடிஸ் கார்டன்' போகலாம்.

-----


கரையிலிருந்து கீழ இறங்கலாம் என பார்த்தால் .....


பீச் கரை ஓரம், எங்கள் நடை தொடரும் ...


அஞ்சா நெஞ்சர்கள் ...


தனியே, தன்னந் தனியே ...


சூரியக் கதிர்களை தாங்கிச் செல்லும் அலைகள் ...


ஸீ-கல்லின் நீர் நடனம் ...


காகிதத் தூவல்கள் ...


திஸ் இஸ் மை டர்ன் ...


சாக்லெட் கழுத்து ...


என் கால்த் தடங்களையா எடுக்கறீங்க ... (ஒரு ஸீ-கல்லின் முணுமுணுப்பு)


தொடரும் நீர் நடனம் ...


இந்த மாதிரி படம் எடுக்கணும் என்று ரொம்ப நாள் ஆசை ... கரை தொட்ட நீர் மீண்டும் கடலுக்குள் வழிந்தோடுவது ...


ஆர்ப்பரிக்கும் அலைகள் ...


நேராமாச்சு ... எல்லாரும் கெளம்பியாச்சு ...

Friday, July 11, 2008

ஹூஸ்ட‌ன் ப‌ய‌ண‌ம் - 2 - நாசா விண்வெளி அர‌ங்க‌ம்

கோவிலில் இருந்து 45 நிமிட ட்ரைவில் 'கீமா' எனும் இடத்திற்கு சாயந்திரம் ஏழு மணி போல் சென்று, பார்க்கிங் கிடைக்காமல் தவித்து, கூட்ட நெரிசலில் மிதந்து, நீண்ட வரிசையில் நின்று குழந்தைகளுக்கு சில ரைட் ஏற்றி, ஃபையர் வொர்க்ஸ் பார்த்து முடிக்க இரவு மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

சுற்றி இருபது, முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஹோட்டல்கள் எதிலும் இடம் இல்லை தங்குவதற்கு. ஆரம்பத்தில் இருந்தே அழைத்த நண்பனைத் தொல்லை பண்ண வேண்டாம் என நினைத்தால், கடைசியில் அவன் அப்பார்ட்மெண்ட்லேயே தங்கும்படி ஆகிவிட்டது.

ஜூலை 05, சனி.

நண்பனின் வீட்டின் வெகு அருகாமையிலேயே இருந்தது நாசா விண்வெளி அரங்கம். "முதலில் ட்ராம் டூர், மற்றதெல்லாம் பிறகு பாருங்கள், ஏனெனில் கூட்டம் அதிகமாகிவிடும்" என்றான் நண்பன். அதனால் முதலில் சென்றது ட்ராம் டூர். எங்களை நிற்கச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ராக்கெட் எல்லாம் பார்க்கப் போறோம் இல்லையா, அதனால் செக்யூரிட்டிக்காக என்று நினைத்துக் கொண்டோம்.

சிவப்பு மற்றும் ஊதா என இரு டூர் பிரிவுகள். என்ன‌ என்ன‌ இருக்கிற‌து என்று பார்த்து சிவ‌ப்புக்கான‌ வ‌ரிசையில் நின்றோம். நாங்க தான் ஃபர்ஸ்ட் :) ந‌ண்ப‌ன் கூறிய‌து போல் சில‌ நிமிட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌ம்.

ஏழெட்டு பெட்டிகள் கொண்டு நீட்டாக இருந்தது ட்ராம். ஓட்டுநர், மற்றும் நடத்துநர், ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கிறார்கள். ட்ராமின் பின்னால் அமர்ந்து மைக்கில் நடத்துனர் நமக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வருகிறார்.

நாசா வளாகமே ஒரு பெரிய ஊர் போல இருக்கிறது. உள்ளேயே ஏகப்பட்ட கட்டிடங்கள், சாலைகள், ட்ராஃபிக் லைட்டுகள் என. முதலில் ஒரு கட்டிடத்தில் இறக்கி விட்டனர். உள்ளே ஒரு வீடியோ காட்சி. எப்படி விண்வெளியில் போய் வேலை செய்வது என ப்ராக்டிஸ் செய்யும் 'டெஸ்ட் லாப்' மாதிரி இங்கே மண்ணிலேயே. அடடா வீடியோ பாக்கறதுக்கா இப்படி பில்டப் பண்ணி கூட்டி வருகிறார்கள் என நினைத்தால் ...

வீடியோ முடிந்தவுடன் மேலே கூட்டிச் செல்கிறார்கள். கண்ணாடி அடைப்பு வழி, பரந்து விரிந்த கூடத்தில், அத்தனையும் விண்வெளி வீரர்கள் பயிற்சி பெரும் கருவிகள், பங்கெடுக்கும் நாடுகளின் அறிவிப்புகள், விண்ணில் செலுத்திய கலங்களின் செய்திகள் என நம்மை பிரமிக்கச் செய்கிறார்கள்.

இங்கு காட்சியளிக்கும் அனைத்தையும் மாக்‍-அப் என்கிறார்கள். விண்ணுக்குச் செல்லும் விண்கலம் முதல், சர்வதேச விண்வெளிக் கூடத்தில் வசிப்பது வரை எல்லாமே இங்க செட்டிங்.

விண்ணில் இருப்பது போலவே செட்டிங் செய்து பயிற்சி பெற வேண்டும் எனும் போது, மண்ணிலும் ஒரு பொருளை '0 க்ராவிட்டியில்' பறக்கச் (மிதக்க) செய்வது போலவும் வேண்டுமல்லவா. அதற்கும் ஒரு ப்ரத்யேக அறை செய்திருக்கிறார்களாம் (அதைக் காட்டவில்லை :((). அதுவும் போக நீரிலும் இது போல சோதனைகள் மேற்கொள்வார்களாம்.

திரும்பவும் ட்ராமில் ஏறி, சிறிது தூரத்தில் அடுத்த கட்டிடம். இதன் வழியில் ஓரிடத்தில், சுற்றி வட்டமாக பதினாறு மரங்கள். அந்த‌ இடத்தில் ட்ராம் நிற்கிறது. "கொலம்பியா விண்கல விபத்தில் உயிர் துறந்தவர்களின் நினைவாய்" ப்ரெஸிடென்ட் புஷ்ஷின் ரெக்கார்டட் உரை, நம்மை ஒரு கனம் சிலிர்க்க வைக்கிறது. சில நொடிகள் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின் ட்ராம் நகர்கிறது.

கட்டிடத்தின் வெளியே பெரிதாய் இரு ராக்கெட்டுகள் நிற்க, அதை விடப் பெரிதாய் ஒன்றை கட்டிடத்தின் உள்ளே, மலைக்க வைக்கும் மலை போல் படுக்க வைத்திருக்கிறார்கள் !! ஆங்காங்கே செய்திக் குறிப்புகள்.

இதை முடித்து, ட்ராமில் ஏறிய இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். 45 நிமிடங்கள் போல் ஆகிறது இந்த டூருக்கு. கூடத்தினுள் நுழைகையில், அட நம்மை எடுத்த புகைப்படத்தை சில பல வடிவங்களில் ப்ரிண்ட் செய்து விற்பனை செய்கிறார்கள். 'செக்யூரிட்டி' என நினைத்ததை எண்ணி சிரித்துக் கொண்டோம்.

கூடத்தின் உள்ளே விண்வெளி பற்றி சில ஆவணப்படங்கள். விண்ணில் செலுத்தும் விண்கலம், அதைப் பார்த்து ரசிக்கும் மக்கள், டென்ஷனில் இருக்கும் அதிகாரிகள், வெற்றிகரமாக அமையும் போது அவர்கள் படும் ஆனந்தம்.

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவது, விளையாடுவது, தூங்குவது, என சில காட்சிகள். சர்வதேச விண்வெளி அரங்கம் பற்றி நிறைய பேசினார்கள். 'மார்ஸ்'க்கு மனிதனை அனுப்புவது பற்றி சொன்னார்கள். இன்னும் இருபது, அல்லது முப்பது ஆண்டுகளில் நிறைவேற்றபடும் என்றார்கள்.

பின் விண்ணிலிருந்து கொண்டு வந்த ஏகப்பட்ட பொருட்களை காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள்.

நாம் இங்கிருந்து நிலவினை பந்து போல பார்ப்பது மாதிரி, நிலவில் கால்வைத்த வீரர்களைப் போன்றும், அங்கிருந்து பூமிப் பந்து தெரிவது போலவும் செய்திருக்கும் விதம் வித்தியாசம்.

'டச் த மூன்' என்ற ஒரு கண்ணாடியினுள், ஒரு சிறு கல் போலத் தெரிந்ததில் கை வைத்துப் பார்த்தால், நம்ம ஊரு கல்லு மாதிரி தான் இருக்கு :))

குழந்தைகள் விளையாட நிறைய செய்திருக்கிறார்கள். குறிப்பாக 'பர்மீஸ் பன்ஜி (spider web)', ரங்கூன் ரோப்ஸ், மற்றும் பல‌. பெரியவர்களும் சேர்ந்து விளையாடலாம்.

ஒரு பெரிய உணவகமும் இருக்கிறது. ஒரு சுற்று நமக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்குதா என்று பார்த்தால். ம்.ஹூம்.

காலை சீக்கிரமே சென்று, ஒரு ஐந்தாறு மணி நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்து வெளியில் சென்று சாப்பிடுவது சிறந்தது.

இன்னும் ஏராளச் செய்திகள், காட்சிகள், ஆவணப் படங்கள் எனத் தாங்கி, வரும் பெருங் கூட்டத்தையும் சமாளிக்கிறது 'நாசா விண்வெளி அரங்கம்'.

நாசா படங்கள் பார்த்துட்டே இருங்க, அப்புறம் பீச்சுக்கு போகலாம், ரெடியா இருங்க.

-----


ட்ராம் உள்ளிருந்து


ட்ராம் வெளிப்புறம்


மாக்கப் விண்வெளிக் கூட‌ம்


மாக்க‌ப் விண்க‌லம்


க‌ம்பீர‌மாய் நிற்கும் இரு ராக்கெட்டுக‌ள்


ப‌டுத்திருக்கும் ராக்கெட் - பின் ப‌குதி


ப‌டுத்திருக்கும் ராக்கெட் - முன் ப‌குதி


கைய மேல தூக்கிக் காட்டுப்பா, பூமிப் பந்து அங்கே இருக்கு பாரு !


விண்வெளியில் உறங்கும் இடம்


விண்வெளிக் குளியலறை


விண்கலக் கட்டுப்பாட்டு அறை


விண்கலம் பயணிக்கும் பாதை, விண்வெளி வீரர்கள், மற்றும் மண்ணிலிருக்கும் கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் பற்றி விளக்கும் பெண்மணி.


ரங்கூன் ரோப்


பர்மீஸ் பன்ஜி

Thursday, July 10, 2008

ஹூஸ்டன் பயணம் - 1 - ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில்

வழக்கம் போல் இல்லாம இந்த முறை ப்ளான் பண்ணதாலோ என்னவோ சிகாகோ பயணம், சூழ்நிலைகளின் காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது.

கடந்த ஜூன் மாதம், மிசிசிபி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, மிசூரி மாகாணத்தில் பல இடங்களைச் சேதப்படுத்தியது. எங்க ஊரு பென்டன்வில்லில் இருந்து சிகாகோ செல்ல மிசூரி கடந்து தான் செல்ல வேண்டும். போன வாரம் வரை நிலவரம் இப்படியே இருக்கவே, தங்கமணி சொல்லிவிட்டார்கள், 'எதுக்கு ரிஸ்க்', அடுத்த முறை சிகாகோ பார்த்துக்கலாம்' என்று. அதனால் 'ப்ளான் B - ஹூஸ்டன்' ஆக்டிவ் ஆனது.

டெக்சாஸ் ஹூஸ்டனில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று ஒரு லிஸ்ட் தங்கமணியிடம் நண்பி ஒருவர் தந்திருந்தார். என் பள்ளி கால நண்பன் ஒருவன் பல ஆண்டுகள் ஹூஸ்டன் வாசம். அவனையும் தொடர்பு கொண்டு ஒரு ஷார்ட் லிஸ்ட் போட்டு மூன்று நாட்களில் ... மீனாஷி அம்மன் கோவில், நாசா, கேல்வஸ்டன் பீச், மூடிஸ் கார்டன், இந்தியக் கடைகள் (எங்க போனாலும் விடறாதாயில்லை :)) பார்க்க முடிவு செய்தோம்.

நாசாவிற்கு ஐந்து டாலரும், மூடிஸ் கார்டனுக்கும் இரண்டு டாலரும் ஆஃபர் இருப்பதாக நண்பன் சொன்னான். தனியே சென்றால் இந்த ஆஃபர், டீல் எல்லாம் பற்றி ரொம்ப யோசிப்பதில்லை ;) குடும்பமாக செல்லும்போது அது அத்தியாவசியமாகிறது. ஒரு இடத்தில் இருபது டாலர் மிச்சமாகிறது எனும்போது மகிழ்ச்சி தான் இல்லையா !

டிக்கட் அங்க போய் வாங்கணுமா, கூட்டம் ஜாஸ்தியா இருந்தா என்ன பண்றது என்றெல்லாம் யோசித்தால், இப்ப நிறைய இடங்களுக்கு வீட்டிலேயே டிக்கட் ப்ரிண்ட் பண்ணி எடுத்துச் செல்லும் அளவிற்கும் வசதி பண்ணியிருக்கிறார்கள். 'நாசா'வும் அதில் ஒன்று.

ஜூலை 03, வியாழன்.

சின்னஞ்சிறு வேலைகளாலே கிளம்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இர‌வு பதினோறு மணிக்கு டாலஸ். ஹைவே விட்டு வெளி வந்து, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் அவைலபிலிட்டி கேட்டால், அட நம்ம குஜ்ஜூஸ் நடத்தும் ஹோட்டல் ! இங்கு அமெரிக்காவில், ஹோட்டல் பிஸினஸில் கொடி கட்டிப் பறப்பவர்கள் குஜ்ஜூஸ் என்றால் மிகையாகாது !!! இங்கு நைட் ஸ்டே அடிச்சாச்சு.

ஜூலை 04, வெள்ளி.

டாலஸில் இருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ஒரு நாலு மணி நேரம் ட்ரைவ் ஹூஸ்டனுக்கு.

கல்லூரியில் 'ட்ராவலிங்க் சேல்ஸ்மேன் பாத்' என்று (ஒரு அறுவை :)) இருந்தது. பல இடங்களுக்கு ஒரே ட்ரிப் ஷார்ட்டா கண்டுபிடிக்கணும். அப்படி ஆச்சு இந்த‌ முறை. நேரா பீச் போய்ட்டு, கோவில் போலாமா. அல்ல‌து கோவில் போனால், அன்று முழுதும் வேறு எதுவும் செய்ய‌ முடியாது. நாசா பார்க்க‌ காலை தான் சிற‌ந்த‌ நேரம் (கூட்டம் குறைவாக இருக்குமென நண்பன் சொல்லியிருந்தான்), அதுவும் இன்று முடியாது.

இந்தக் குழப்பங்களிடையே நேரே பீச், மூடிஸ் கார்டன் பார்த்துட்டு, ஸ்டே. மறுநாள் நாசா, அப்புறம் கோவில் போகலாம் என்று முடிவு செய்தோம்.

விதி வலியது என்பார்கள். ஹூஸ்டன் நெருங்க நெருங்க, வானம் இருட்டிக் கொண்டு வந்தது. எப்ப‌டி என்னை வ‌ந்து க‌டைசியில் பார்க்க‌லாம் என‌ மீனாக்ஷி அம்ம‌ன் கோபித்து கொண்டாரோ என்ன‌வோ ! சட சட வென வெள்ளை அம்புகளாய், விண்ணிலிருந்து மண்ணைத் தாக்கி பெருமழை பொழிந்த‌து. முன்னாடி என்ன நடக்குதுனே தெரியல. ஹைவேல எல்லாரும் பத்து மைல் ஸ்பீட் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லிஸ்டில் க‌டைசியில் இருந்த‌ கோவில் இப்ப‌ முத‌லிட‌த்தில். ச‌ரி ரூட்ட‌ மாத்துனு, சிறு பொட்டிய‌த் த‌ட்டி கோவில் போனால், ச‌ரியான வெயில். ட்ராபிக், ம‌ழை எல்லாம் தாண்டி கோவில் வ‌ர‌ ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணி ஆன‌து.

ப‌ர‌ந்து விரிந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பில் அமைந்திருக்கிற‌து 'ஸ்ரீ மீனாக்ஷி அம்ம‌ன்' கோவில். சுற்றிலும் பெரிய மதில் சுவர். மதில் மேலே ஆங்காங்கே சிற்சில சிலைகள். கோவில் உள்ளேயும், வெளியேயும் நிறைய மரங்கள். பசும்புற் தரைகள். ராஜகோபுர‌ம் வ‌ழியே உள்ளே நுழைந்தால் ஒரு வெளிச் சுற்று பிர‌கார‌ம். நான்கு மூலைக‌ளில் ச‌ந்நிதிக‌ள். துர்கை, விநாய‌க‌ர், ஐய‌ப்ப‌ன், முருக‌ன், ராம‌ர், ல‌க்ஷ்ம‌ண‌ர், ந‌ட‌ராஜ‌ர், ந‌வ‌க்கிர‌ங்க‌ள் என‌.

நுழைவாயில் இருந்து நேரே அம்ம‌ன் ச‌ந்நிதி (அதன் எதிரே வெளியில், சிறிய‌ துவ‌ஜ‌ஸ்த‌ம்ப‌ம், குட்டி ந‌ந்தி ம‌ண்ட‌ப‌ம்). கோவிலின் உள்ளே ஒரு பெரிய ஹால் போன்ற பரப்பில் நடுவில் மீனாக்ஷி அம்மன், இட‌ப்புற‌ம் சிவ‌ன், வ‌ல‌ப்புற‌ம் வெங்க‌டாஜ‌ல‌ப‌தி. இன்ன‌பிற‌ சுவாமி சிலைக‌ள்.

நம்ம ஊரு கோவில் போல அட்டகாச வர்ணப்பூச்சு இல்லாத, வெண்மஞ்சளில், கோபுரம் முதல், மதில் சுவர் வரை ஒரே வர்ணம். கோவில் இன்டீரியர் விட எக்ஸ்டீரியர் அற்புதம். கோவிலில் பணிபுரிவோருக்கு, பின்னே வரிசையாய் குடியிருப்புக்கள். ஒரு புறம் தனிக் கட்டிடத்தில் மண்டபம், நூலகம், உணவகம். முன்னேயும், பின்னேயும் விசாலமான பார்க்கிங்க் லாட்.

ந‌ம்ம‌ ஊரு 'ஆன‌ந்த‌ ப‌வ‌ன்' போல் இருந்த‌து கோவில் கேஃப்டீரியா. இட்லி, பொங்க‌ல், ம‌சால் தோசை, பூரி, வ‌டை, ச‌ட்னி, சாம்பார். அட‌ அடா !!!

ஒரு ரூபாய் நாணய அளவுகளில் டோக்கன். மெஷினில் டாலர் போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொடுத்து உணவுகளைப் பெற வேண்டும். நல்லா ஆசுவாசமா உட்கார்ந்து சாப்பிட பெரிய ஹால். சைடில் ரெஸ்ட் ரூம்ஸ், வாட்டர் ஃபௌன்டெய்ன்.

சாப்டாச்சா, கீழே கோவில் படங்கள் பார்த்துட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. அடுத்த பதிவில் 'நாசா விண்வெளி அரங்கம்' செல்வோம்.

-----


கோவில் முகப்புத் தோற்றம்


அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்


ராஜ கோபுரம் ('மகாநதி' ஸ்டைல்ல இருக்கா ?, அதுக்கும் முன்னாடியே தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை இவ்வாறு எடுத்திருக்கிறேன் :))


ராஜ கோபுர நுழைவு வாயில்


நந்தி மண்டபம்


அம்மன் சந்நிதி


சிவன் சந்நிதி


வெங்கடாஜலபதி சந்நிதி


எண்ணெய் விளக்கு


கோவில் உள் பிரகாரம்


இடப்புற நுழைவு வாயில்


வெளிச் சுற்று மதில்