Wednesday, July 16, 2008

எங்கே நிம்மதி ... இங்கே ஓர் இடம் ...ஹெட்மாஸ்டர் ஜெயபால் சைக்கிளை விட்டு இறங்க, அவருக்காகக் காத்திருந்த பியூன் சந்துரு, சைக்கிளைப் பிடித்துக் கொண்டார். ஹாண்ட்பாரிலிருந்து கைப் பையை எடுத்துக் கொடுத்து, காலை வணக்கத்தையும் சொல்ல, இரண்டையும் பெற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றார் ஜெயபால்.

மதுரையிலிருந்து நாற்பது, அம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தின் பள்ளிக்கூடம் அது. ஓரளவுக்கு பெயர் பெற்றதும் கூட. பெரிய காம்பவுண்டு கேட்டினுள் நுழைந்தால் சில அடிகளில் நேரே தெரிந்தது பள்ளியின் மையக் கட்டிடம். ஆறேழு படிகள் அமைத்து அதன் உயரத்தில், நீண்டு அகன்று கம்பீரமாய் இருந்த‌து.

அதில் ஏறி இடப்புறம் திரும்பி, முதல் அறையான தனது அறைக்குச் சென்று அமர்ந்தார் ஜெயபால். அதற்குள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, பின்னாலேயே ஓடி வந்து மின்விசிறி பொத்தானை அழுத்தினார் சந்துரு.

கடக், கடக் என அல்ட்ரா க்ரைண்டர் போல ஆரம்பித்து, சட சடவென சங்குச் சக்கரம் போல் சுழன்றது மின்விசிறி. க‌ழுத்து விய‌ர்வையை க‌ர்சீப்பால் துடைத்துக் கொண்டு, கோப்புகள் சிலவற்றைப் பார்த்தார்.

கண்ணாடி போட்ட மேசை மேல் அடுக்கடுக்காய் பேப்பர்களும், கோப்புகளும். அவற்றினூடே சில புத்தகங்களும். அதில் ஒரு உள்ளங்கை அழைப்பு மணி ஒன்றும். அதை அழகாய் ஒரு தட்டு தட்ட உள்ளே வந்தார் சந்துரு.

ப்ரேயருக்கு நேரம் ஆச்சு, மணி அடிச்சிடுப்பா ...

சரிங்க ஐயா.

ஒன்ப‌து ம‌ணி ப்ரேய‌ர் முடித்து மீண்டும் இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்தார் ஜெய‌பால்.

மீண்டும் சில கோப்புகள். ஒரு சின்ன ரவுண்ட் பள்ளி வளாகத்தை. யாராவது பசங்க தெரிந்தால், நிறுத்தி "க்ளாசுக்கு போகம என்ன பண்ற இங்க ?" என்று கண்டிப்பு மிக்க கேள்வி. மற்ற ஆசிரிய‌ர்க‌ளுட‌ன் சிற்சிறிய உரையாட‌ல்க‌ள்.

தனது அறைக்குத் திரும்பியபோது மணி பத்தரை ஆகியிருந்தது. அழைப்பு மணியை அழுத்தி, சந்துருவை தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

பிறகு பள்ளி அலுவலகத்தில் நித்தம் நடைபெறும் சிறு கூட்டம். ஹாஸ்டல் பிரச்சனைகள், மாணவர் பிரச்சனைகள், வரப்போகும் ஆண்டு விழா பற்றிய ஏற்பாடுகள் மற்றும் பல பற்றி அலசும் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்புகையில் மதியம் பண்ணிரண்டரை ஆகியிருந்தது.

வீட்டிலிருந்து வந்த பெரிய அடுக்கு டிஃபன் கேரியர் பிரித்து, அவரது மேசையிலேயே தலைவாழை இலை போட்டு, எல்லாம் எடுத்து வைத்தார் சந்துரு.

வழக்கம் போல அளவாய் சாப்பிட்டு, அங்கே வைத்திருந்த குடுவையிலேயே கை கழுவி, சிறு துண்டில் முகம் துடைத்துக் கொண்டார். சந்துரு எல்லாவற்றையும் பேக் பண்ண, உட்கார்ந்த சேரிலேயே சரிந்து, கண்களை லேசாக மூடிக் கொண்டார் ஜெயபால்.

"டாட் எத்தனை முறை உங்களுக்கு சொல்வது. இன்னும் ஏன் இந்த பட்டிக்காட்டில் போய் உட்கார்ந்து, வயதான காலத்தில் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். சைக்கிள் மிதித்து, நடையாய் நடந்து, சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் நேரம் செலவழித்து ... இதெல்லாம் இல்லாம, இங்க வந்தா நிம்மதியா இருக்கலாமே ?!!!"

அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் ராஜ்பால் குரல் அப்படியே காதுகளில் ஒலித்தது அவருக்கு.

எதுப்பா நிம்மதி, ஊர் தெரியாத ஊரில் வந்து, தெருவில் நடந்தால் ஒரு நாலு பேரப் பார்த்துப் பேச முடியுதா. இல்ல பக்கத்து வீட்டுக்காரன் தான் யாருனு தெரியுதா. முடி வெட்டக் கூட அப்பாய்ண்ட்மென்ட் வாங்கற உங்க ஊரு, தலைவலி காய்ச்சல் என்றால் கூட உடனே டாக்டரைப் பார்க்க முடியாத நிலை ... நமக்குச் சரிப்பட்டு வராதுப்பா. வெளிப் பழக்கம் இல்லேன்னா எப்படி நிம்மதி இருக்கும். நமக்கு இது தான் நிம்மதி.

கட்டிய மணையாள் வீட்டில் என்றால், கட்டுப்பட்ட (தொழிலுக்கு) சந்துரு பள்ளிக்கூடத்தில். சுத்தி ஆளுங்க, நெனச்ச நேரம் வெளியில் போகலாம், வரலாம். இதுக்கும் மேல என்ன வேணும்.

ஜெயபாலின் உள்ளுணர்வு (டெலிபதி) அமெரிக்கா சென்றிருக்க வேண்டும், உறக்கத்தில் ராஜ்பால் எழுந்து இருமியதைப் பார்த்த அவர் மனைவி, கண்டதையும் நினைக்காம நிம்மதியா தூங்குங்க என்றாள் !

மார்ச் 25, 2009 யூத்ஃபுல் விகடனில்

11 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

உண்மையிலேயே இதுதான் இன்றைய அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் பலபேரின் எண்ணிலடங்கா பெற்றோரின் எண்ண ஓட்டம். அதை அற்புதமாகக் கதை வடிவில் தந்துள்ளீர்கள் சதங்கா.

சம்பத், பாஸ்டன்said...

கதை நல்ல வந்திருக்கு.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

அருமையான கதை - கதைக் கரு உண்மை வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. தந்தையின் எண்ணங்கள் மகனை டெலிபதி மூலம் சென்றடைய, மருமகள் கண்டதையும் நினைக்காதீங்க எனக் கூறுவது யதார்த்தமான உண்மை.

இயல்பான சொற்களில் அருமையான கதை.

கடைநிலை ஊழியர் சந்துருவையும் மரியாதையாக நடத்தி, அவர் இவர் என விவரித்திருப்பதற்கு தனிப்பட்ட பாராட்டுகள்.

நல்வாழ்த்துகள்

நாகு (Nagu)said...

நல்ல யதார்த்தமான கதை. என்ன - அப்பா இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?

அப்பறம் சீன் செட்டிங் எல்லாம் சரிதான். ஆனால் சின்ன கிராமத்து பள்ளியில் ஹாஸ்டல் பிரச்சினையா??

இன்னொன்னு... டாட்?

RamyaRamanisaid...

நல்ல கரு..அழகா படம் பிடிச்சு காட்டினமாதிரி இருக்கு :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

வழக்கம் போல வந்து ஊக்கம் தந்ததற்கு நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

நன்றி சம்பத்

சதங்கா (Sathanga)said...

வழக்கம் போல வந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தந்தமைக்கு நன்றி சீனா ஐயா.

சதங்கா (Sathanga)said...

நாகு,

//அப்பறம் சீன் செட்டிங் எல்லாம் சரிதான். ஆனால் சின்ன கிராமத்து பள்ளியில் ஹாஸ்டல் பிரச்சினையா??//

ஏன் இல்லை. இன்ஃபாக்ட் பள்ளி சீன் அப்படியே நான் படித்த பள்ளி பற்றி தான். நமக்கு சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல் வாஸம் தான் :)) அங்கு நடந்தவைகளை, கொஞ்சம் கதைப் படுத்தி, கருவை இணைத்து கொடுத்திருக்கிறேன்.

//இன்னொன்னு... டாட்?//

Dadனு எழுதியிருக்கலாமோ. இல்ல கிராமத்தான எவன்டா Dadனு கூப்பிடுவானு கேக்கறீங்களா ? :)) ஊரு எங்கேயோ போயிருச்சு ஓய் ...

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம், சீனா ஐயா போலவே, நீங்களும் ரம்யா. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

நாகு (Nagu)said...

ஊரு எங்கேயோ போனாலும் நாம அப்படியா மாறிட்டோம்?

நான் சின்ன வயசுல(யும்) நல்ல பையன்... அதான் ஹாஸ்டல்ல எல்லாம் போடல :-) அதனால இந்த டாட் எனக்கு இன்னும் பிடிபடலை!!

ஆனா ஒன்னு. கிராமத்துல ஜமீந்தார் மகன் பட்டணத்துல போயி (இல்ல ஒரு குக்கிராமத்து ஹாஸ்டல்) படிச்சிட்டு ஊருக்கு வந்து டாட் மாம்னு அலம்பல் சினிமாவுலதான் பாத்துருக்கேன். நீங்க மைனர்... செஞ்சே இருக்கலாம் :-)

Post a Comment

Please share your thoughts, if you like this post !