Monday, June 30, 2008

வலையில் விழுந்து விட்டேன்

சமீபத்தில் ராமலஷ்மி மேடம் அவர்களின் பதிவில் (மெகா முதலைகள்), அநேக மூத்த, இளைய பதிவர்கள் வலையில் விழுந்து விட்டோம் என்று சொன்னதைப் படித்து விளைந்த பாடல். பாடலைக் கீழ்க் கண்ட படத்தில் உள்ள பாடல் மெட்டில் படித்து இன்புறுங்கள்.

அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொன்னிங்கன்ன்னா, ப்லாகுல விழுந்த புண்ணியம் உங்களுக்கும் உண்டு :))

-----

படம்: (ஸ்டூடன்ட்) ப‌திவ‌ர்
பாடியவர்கள்: S.P.B.சரண், சித்ரா

-----

என் எழுத்துக்க‌ளைப் பிரசுரிப்பவன் நீ தான் என்று
ந‌ல்ல‌ ந‌ட்புக்க‌ளைத் தேடித் த‌ரும் தோழ‌ன் என்று

எனக்குத் தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
ப்லாகிற்குள்ளே ப‌திவ‌ர்க‌ளே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா
விழுந்து விட்டேன் ப்லாக் வ‌லையிலே !

நிஜம் தான் நிஜம் தான்
இங்கு பாச‌ங்க‌ளின் தொல்லை தாங்க‌ல‌

விழாமலே .....

ப்லாகுகுள்ளே உள்ள‌தென்ன‌ என்ன‌ ச‌க்தியோ
பக்கம் பக்கமாக பதிய‌ இழுக்கும் காந்த சக்தியோ

ஓஓஓஓஓ .....

ப‌திவின் த‌லைப்பினிலே வைக்க‌ வேண்டும் ம‌ந்திர‌ச் சொல்லோ
படித்தவுடன் வந்து விழும் பின்னூட்டங்களின் குவியலோ

ப்லாகு ஒரு ப‌ர‌ம‌ப‌த‌ம்
த‌ட்ட‌ச்சிட‌ ப‌திவு விழும்

ப்லாகு .....

பதிவு மேல பதிவு போட‌
பின்னூட்டங்கள் குவிந்திருந்தால்

விழாமலே .....

வாசகர் எண்ணிக்கை பெருகிடுமா என்று நினைத்தாலும்
பதிவுகளைப் பதியும் போது ஆனந்த நடனம்

ஓஓஓஓஓ .....

என் பதிவு உந்தன் மனதைத் தொட்டால் அற்புத நடனம்
பின்னூட்டங்களின் அணிவகுப்பில் கோடி சஞ்சலம்

பதிந்திருந்தால் வாழ்வு ருசி
பதிவருக்கு ஒரே குஷி

ப்லாகு வந்து வலையை விரிக்கும்
மாட்டிக் கொண்டு நீ பதி

விழாமலே .....

Friday, June 27, 2008

கிராமத்து தெருக் கூத்து

தலைகாணி பாயோடு
கயிற்றுக் கட்டிலோடு
ஊருசனம் உண்டபின்னே
வாரியோடும் கூத்துப்பார்க்க.
மைக் செட் கரகரக்க‌
ஆர்மோனியச் சத்தமும் கேட்க‌
ஆரம்பிச்சிட்டான்யா என்றே
நில்லாமல் ஓடும் சனம்
கூத்துப் பொட்டல் சேர்ந்தபின்னே
இருக்க இடம் தேடும்.

முக‌ப்பூச்சு வ‌ழுவ‌ழுக்க‌
மேலாடையும் சேர்ந்து வ‌ழுக்க‌
காற்றாடும் காரிருளில்
கான‌ம் பாடி வ‌ந்திடுவார்
க‌ல் நெஞ்சும் க‌றையும்ப‌டி
க‌ல‌க‌ல‌ப்பாய் க‌தை சொல்லி
வ‌ந்த சனத்தை
குந்தவும் வைப்பார்
வைய‌த்து செய்தி சொல்லும்
நாக‌ரீக‌க் கோமாளி.

வ‌ண்ண‌ப் பொடி தூவி
வ‌ட்ட‌ விள‌க்கு சுற்ற‌
வ‌ளைகை சுழ‌ற்றி
வெண் த‌ண்டை சினுசினுங்க‌
அச்சு வெல்ல‌த் தொண்டையில்
அழ‌காய் பாட்டுப் பாடி
காற்றிலாடி வந்திடுவார்
கான‌க் குயில் ஆன‌ ம‌யில்
நாய‌கியின் தோழியான‌
நங்கை ந‌ட‌னம‌ணி.

எம்.ஜி.ஆரு பாட்டுப் பாடி
எம்.ஆர்.ராதா பேச்சுப் பேசி
ஆர்மோனியம் அழுத்திக் கிட்டு
பக்க வாத்தியம் சேர்த்துக்கிட்டு
தங்களுக்கும் கூத்தில்
தனித்த இடம் இருக்குதென
இசைக்கும் இடிமுழ‌க்கி
இன்புற‌ கூட்டம் காட்டும்
ஆர்மோனியம் தபேலா
மோர்சிங் கலைஞர்கள்.

ஆலோல‌ம் பாடும்
மேயாத‌ மான் தேடி
வேட‌வ‌ராய் நாய‌க‌ரும்
விவாதிக்கும் நாய‌கியும்
விடியும் வ‌ரை
அது தொட‌ரும்
விடிந்த‌ பின்னே
மணம் புரிவர்
கூத்து பார்த்த‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம்
குதூகலமாய் விடை பெறுவ‌ர்.

மார்ச் 28, 2009 யூத்ஃபுல் விகடனில்

Thursday, June 26, 2008

கார் பார்க்கிங்கும் கார்களும்



நீண்ட நிலப் பரப்பில்
நிற்கும் வண்டுகள் போல்,
பல உருவில் கார்கள்
பார்க்கிங்கில் நின்றிருக்கும்.

தரையில் நீட்டி இழுக்க‌
உதிர்ந்த‌ சரவெடி போல்,
இருபுறம் அணிவகுத்து
ஆங்காங்கே நின்றிருக்கும்.

கட்டும் க‌த‌ம்ப‌ம் போல்
முட்டி மோதி இல்லாம‌ல்,
அளவாய் இட‌ம்விட்டு
வண்ண மயமாய் நின்றிருக்கும்.

எட்டி நின்று பார்த்திடவே
குட்டி குட்டிப் பூக்கள் போல்,
பல வண்ணத் தூவலாய்
ஒட்டி ஒட்டி நின்றிருக்கும்.

வரிசையாய் அருகருகே
வாழைப்பூ அடுக்கு போல்,
அடுக்குமாடிக் கட்டிடத்தில்
அடுக்கடுக்காய் நின்றிருக்கும்.

அரண் தாங்கும்
அணி வகுப்பு போல்,
பரந்த பொட்டலிலும்
பக்கத்தே நின்றிருக்கும்.

குட்டிக் கார்களும்,
அதை விஞ்சுவ‌து போல்,
கூடவே பெருங் கார்க‌ளும்
கூட்டம் கூட்ட‌மாய் நின்றிருக்கும்.

திட்டுத் திட்டாய் திரண்டு
உருளும் அலை போல்,
விட்டு இடம் தள்ளி
உருளாமல் நின்றிருக்கும்.

நீண்ட மீன் எலும்பின்
இருபுற முள் போல்
கிடைக்கும் இடைவெளியில்
குத்தாமல் நின்றிருக்கும்.

தலை கோதும் சிறு,
சீப்பின் பல் போல்,
இருக்கும் இடைவெளியில்
இணைத்து நின்றிருக்கும்.

Wednesday, June 25, 2008

ஆழ்ந்த சிந்தனை கொண்ட மிகச் சிறிய பதிவு

ஜூன் 25

ஒரு கேள்வி:

உலகில் அத்தனை பேரும் தங்கள் மொழிகளை 'தாய் மொழி' எனைக் கூறுவது ஏன் ?

மனதில் தோன்றுவதை சொல்லுங்கள். பதில் நாளை வெளியிடுகிறேன்.

-----

ஜூன் 26

லேபிலில் ஹாஸ்யம் என்று போட்டதால், பதில்:

"because Father seldom gets to speak"

-----

சீரியஸா பதில் சொன்னவங்களுக்கும், சிரிக்க வைக்க பதில் சொன்னவங்களுக்கும் மிக்க நன்றி.

Friday, June 20, 2008

ஓம் ப்லாகாய நமஹ !



சுருக்காக, நறுக்கென்று மணிரத்னத்தின் திரைக்கதை வசனங்கள் இருந்தாலும், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டா' என்பதை தமிழ்கூறு நல்லுலகம் மறக்க வாய்ப்பேயில்லை.

என்ன தான் மறுபாதி, என் உசுரு, செல்லம் என்றெல்லாம் நெய்யாய் உருகினாலும், தங்கமணி தனியா ஊருக்குப் போறாங்க என்றால் ரங்கமணிகளுக்கு வெண்ணெய் போல் கொண்டாட்டம் தான். உதாரணம் மேற்கூறிய திரைப் படத்தில், ஜனகராஜ் அவர்கள், ரங்கமணிகளின் மனோபாவத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்.

அது ஏன், எப்ப‌டி என்றெல்லாம் நாம் இங்கு அல‌சப் போவ‌து இல்லை. மாறாக‌ அவ‌ர்க‌ள் ஊருக்கு செல்லும்போது என்ன‌வெல்லாம் சொல்லிச் செல்வார்க‌ள் என‌க் கொஞ்சூண்டு பார்ப்போம். வழக்கம் போல,

  • மறந்திடாதீங்க யுடிலிட்டி பில், ஃபோன் பில் இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில கட்டணும்.
  • வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க.
  • ரெண்டு வாரத்துக்கு மாவு ஆட்டி ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஊத்திக்கங்க.
  • புளி, லெமன் இதெல்லாம் காய்ச்சி வச்சிருக்கேன். சாதம் மட்டும் வச்சிக்கிட்டாப் போதும்.
  • தினம் டாய்லட் வெறும் தண்ணில மாப் பண்ணுங்க, வாரம் ஒரு முறை சோப் போட்டு கழுவுங்க‌.
  • ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வேக்கு(வ)ம் போடுங்க.
  • இந்த அளவு தண்ணி, இந்த அளவு சோப்பு. அப்புறம் நார்மல் ட்ரை செலக்ட் பண்ணிக்கங்க வாஷிங்க் மெஷின்ல, உங்களுக்கு கொஞ்ச துணி தான் இருக்கும்.
  • தூங்கும்போது எல்லா லைட்டும் அனைச்சிருக்கோமா, அடுப்பெல்லாம் அனைச்சிருக்கோமானு ஒரு தரம் பாத்துட்டு படுங்க.
  • மறக்காம டி.விய ஆஃப் பண்ணிடுங்க.
  • (எந்த உள்குத்தும் இல்லாமல்) நான் இல்லையே என்று வருத்தமெல்லாம் படாதீங்க, கொஞ்ச நாள் தான், வந்திருவேன்.
இவ்வளவு வேலையும் செய்யும் தங்கமணிகள் தனியே ஊருக்குப் போகிறார்கள் என்றால் ரங்கமணிகள் வருத்தம் அல்லவா படவேண்டும் !!!! யோசிக்கணும் :)

இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம, வெளில போய் ஃப்ரெண்ட்ஸோட தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு, கொஞ்சம் வெளி உலகிலும் இருங்க என்று =;)

Thursday, June 19, 2008

மனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்



நம்ம ஊருல படம் போடறாங்க, டிக்கட் வேணுமாடா எனக் கேட்ட நண்பனை ஏற இறங்கப் பார்த்தேன்.

ஒரு டிக்கட் பதினைந்து டாலர், குழந்தைகளுக்கு அஞ்சு டாலர், அஞ்சு வயசுக்கு கீழே இலவசம்.

முப்பத்தி அஞ்சு டாலர் கொடுத்து படம் பார்க்கணுமா என்று தோன்றினாலும், சரி, தியேட்டர்கெல்லாம் போய் நாளாகிடுச்சே, அதனால போகலாம் என்று முடிவு செய்தோம்.

வழக்கம் போல கமலின் உழைப்பும், சிரத்தையும் நன்றாகவே இருந்தது.

'பத்து கேரக்டர்' என்று படித்த உடனேயே, படத்தில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்ற மனநிலை எப்பவோ வந்திருச்சு. நிறைய செலவு செய்திருக்கிறார்கள், படத்தின் கடைசியில் காட்டும் மேக்கப் காட்சிகளைப் பார்த்தாலே புரியும். இத்தனை செலவு, சிரத்தை எதற்காக ? என்ற கேள்வி எழாமல் இல்லை !!!

இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல் ? கயாஸ் தியரியில் ஆரம்பித்து, எல்லாத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு என்று சொல்லி, இத்தனை அவதாரங்களையும் காட்டி, கோடிகளை கொட்டி, பெருமாளைக் கட்டி, "சுவாமியே இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும்" என்று சொல்லி முடிப்பது வரை, இதுவும் ஒரு 'ஹே ராம்' டைப் ப‌ட‌ம் தான். ஐ மீன் 'புரியாத' டைப். மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌னாவ‌து காமெடி தூக்க‌லா இருந்தது எனலாம்.

காமெடி என்ற‌வுட‌ன் தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிறார், த‌ச‌த்தில் ஒன்றான‌ தெலுங்கு போலீஸ் அதிகாரி பல்ராம். அவ‌ரோடு வ‌ரும் அசிஸ்டென்ட் அப்பாராவும் அருமையாக‌ ந‌டித்திருந்தார்.

"சார் நோஸ் லாட் ஆஃப் லேங்குவேஜ‌ஸு, ஹீ ஸ்பீக்ஸு ஃபைவ் டிஃப‌ர‌ன்ட் தெலுகு" என்று சொல்வ‌து அட்டஹாஹாஹாசம். இது போல் ஆங்காங்கே ஜோக்ஸ் தூவியிருப்பது கலக்கல்.

ஆந்திராவில இருந்து வந்து தமிழ் படிச்சி, நானே இவ்ளோ நல்லா தமிழ் பேசறேன், நீ என்ன மொழியில பேசற என்று விஞ்ஞானி கமலைக் கேட்டு, நீங்களே இப்படி இருந்தா 'தமிழ' யாரு வாழ வைப்பாங்க என்று கேட்டதும்,

அதான் நீங்க இருக்கீங்களே வாழ வைக்க, என்று விஞ்ஞானி (தமிழ்) கமல் சொன்னவுடன், தியேட்டரில் ஏக‌ப்பட்ட கைதட்டல், விசில். ஒன்னும் புரியவில்லை சில நேரத்துக்கு. பின் சிறு இடை வேளையில், பல பக்கமிருந்தும், 'எட்ல உன்னாரு ?', 'பாகுன்னாரா ?'அன்ட்டே மல்லி, அள்ளி ....' என்றெல்லாம் ஒரே சுந்தரத் தெலுகு தான் தியேட்டர் வளாகத்தில் :)

சந்தான பாரதியுடன் போட்டிக்குப் போட்டியாய் மணல் மேட்டில் மல்லுக்கட்டுவதும், வாசுவுடன் தனியறையில் தர்க்கம் புரிவதும், ஒரு மாதிரி குச்சி போல் நெஞ்சு நிமிர்த்தி, பெல்ட்டில் கை வைத்து நடப்பதுமாய், இரு விழி உருட்டி, கரு உதட்டில் பொறிவதும், மிகத் தத்ரூபம். சபாஷ் பூவராகன் !!!

"போடா பாவி, நான் தரமாட்டேன். இது என் புள்ள அமெரிக்கால இருந்து எனக்கு அனுப்பினது டா" என்று பார்சலைத் தர மறுப்பதில் இருந்து, பல்ராமுடன் போலீஸ் ஜீப்பில் லூட்டி அடிப்பது வரை அடுத்த தத்ரூபம் கிருஷ்ணவேணி பாட்டி. பல அவதாரங்கள் கமலை உடனேயோ, சிறிது நேரத்திலேயோ அடையாளம் காட்டினாலும், இந்த பாட்டி, கமல் தானா என யோசிக்க வைத்தது பல நேரம். காரணம் குள்ள உருவம். சூப்பர் பாட்டி !

சில அவதாரங்களை குள்ளமாகவும், உயரமாகவும் காட்டிய விதம் கண்டிப்பாக பாராட்டத்தக்கது ! ஆனால் மேக்கப் மெனக்கெட்ட அளவிற்கு பல அவதாரங்களுக்கு ரிசல்ட் இல்லை என்று தான் சொல்லணும். மேக்கப் என்று தெரிந்தவுடன் அந்த கேரக்டரே உயிரற்றுப் போகிறதோ என்னவோ ?!


படம் குறித்து சில குறிப்புகள் :

தத்ரூபமாகப் பண்ணுகிறேன் பேர்வழி என்று உடலை வருத்தும் காட்சிகளை கமல் நிறுத்தினால் நன்றாக இருக்கும். மாற்று வழிகள் யோசித்து அதிலும் தத்ரூபம் காண்பிக்கலாமே ?!

கழுவில் ஏற்றுவது போன்ற காட்சியில், "ஹௌ டிட் ஹீ பியர்ஸ் ஹிஸ் லெக் லைக் தட்"

"அது சும்மா படம் தான் மகனே, டோன்ட் டேக் இட் சீரியஸ், ஆல் மேக்கப்"

என்று பல முறை சொன்னாலும், அந்த பதில் திருப்தி தருவதாய் இல்லை என் மகனுக்கு.

பாடகர் அவதாரின் கழுத்தில் குண்டு பட்டு, பிழைப்பது மாதிரி காட்டியது ஓ.கே. ஆனால் கழுத்தில் பட்ட குண்டு கான்ஸரை அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது என்று டாக்டர் போட்ட குண்டு கண்டு, நமக்கெல்லாம் மயக்கம் வராத குறை :)

இது தான் காமெடி என்றால், 'உலக நாயகன்'க்கு விளக்கம் வேறு. அதுவும் பாடல் வடிவில் ! கமல் தன்னை சுற்றியிருப்பவர்களை ஒரு சுற்று ஃபில்ட்டர் பண்ண வேண்டும் !!

பாவம் அழகிய அசின். பெருமாள், பெருமாள் என்று அலறவிட்டு, அழுகாச்சி அசின் ஆக்கிவிட்டார்கள் !

டீல் மா கண்ணு ! (Part - 4) - நிறைவுப் பகுதி


Photo : www.freefoto.com

சிறு முதலுதவி செய்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். அவர்களுடைய உடமைகளை சோதித்ததில் உங்களது தொலைபேசி எண்கள் கிடைத்தன. நீங்கள் தான் உங்கள் கம்பெனிக்கு, இங்கு தலைமை அதிகாரிகளா ? என வினவினார் டேவிட்.

ஆமாம். இப்ப எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் ? இந்தியாவில் இருந்து அதுக்குள்ள‌ ஏக‌ப்ப‌ட்ட‌ போன்கால்க‌ள், எங்க‌ளால என்ன சொல்லி சமாளிக்க வைக்கிறது தெரியல, சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் யமுனசாகர்.

ஆல் ரைட், ஆல் ரைட் என்றார் மிஸ்டர் ரைட். யாருக்கும் ஒன்னும் ஆகல. நாலு பேரு கோமால இருக்காங்க, ரெண்டு பேரு அதவிட கொஞ்சம் பெட்டர் பொஸிஸன்ல இருக்காங்க. உயிர் சேதம் எதும் இல்லை, ஆகவும் வாய்ப்பில்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க.

பெட்டரா இருக்க ரெண்டு பேருகிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணனும். டாக்டர்ஸோட அட்வைஸ்க்கு காத்துகிட்டு இருக்கோம்.

இன்னும் கொஞ்ச தூரம் தானே என்று ஆற அமற மெக்கில சாப்பிட்டுட்டு, பத்து மணிக்கு வெளில வந்து பார்த்தா, எங்கும் பனி. உள்ளே அரட்டை அடிச்சுக் கொண்டு சாப்பிட்டதில் வெளியே என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சரி லேசா தானே பனி பெஞ்சிருக்கு, போயிடலாம் என வண்டியை எடுத்தோம்.

எக்ஸிட்டிலிருந்து ஹைவே புடிக்க ரொம்ப சுத்திட்டோம். வெளியில் விசாரிக்க கூட யாருமில்லை. நேரம் வேற ஆகிறது, டீல் டைம் வேற ப்ரெஷ‌ர் கொடுக்க ஆரம்பித்து விட்டது. என்ன, ஒரு எக்ஸிட் எடுத்தாப் போதும் எனும் நிலை.

சுத்தி சுத்தி, ஏதோ ஒரு ரோட்டில போய்க்கிட்டே இருந்தப்ப தான், அந்த உடைந்த ரோடு, பக்கத்தில் இருந்த ஐஸ் ரிவரில் எங்களை இறக்கி விட்டது. கொஞ்சம் ஸ்பீடா வேற போனோம், ப்ரேக் புடிக்க, பனியில் ரொம்ப சருக்கி, வண்டிய கன்ட்ரோல் பண்ணவே முடியல.

வண்டி அப்படியே ஐஸ்குள்ள அமுங்குது. எங்களுக்கு என்ன செய்யறதுனே புரியல. குய்யோ, முய்யோனு ஆளாளுக்கு கத்திக்கிட்டு, கட்டிக்கிட்டு, சாமிய வேண்டிகிட்டு, பெத்தவங்கள நெனச்சிக்கிட்டு, 911 அழைத்தோம். அதுக்கப்புறம் என்ன நடந்ததுனே தெரியாது.

வருணும், தீபிகாவும் சொல்லச் சொல்ல மடிக் கணினியில் தட்டச்சிட்டுக் கொண்டார் டேவிட்டின் அசிஸ்டென்ட்.

"'ரோட் ப்ரோக்கன், டீடோர்' என்ற எச்சரிக்கை அட்டையை, அவர்கள் இருந்த பரபரப்பில் காணத்தவறிவிட்டனர்" என்ப‌தையும் சேர்த்துக் கொள்ள‌ச் சொன்னார் டேவிட் !

-----

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)


சமீபத்தில் இங்கு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை செய்தியில் படித்து, மனம் ஒரு கனம் அதிர்ச்சியுற்று, அறிவுரை என இல்லாமல், அன்பாக, அடக்கமாக ஒரு கதை வடிவில் சொல்ல நினைத்தேன்.

இளரத்தங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தெரியாத இடங்களில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை எப்பாடுபட்டாவது தவிர்த்து விடுங்கள்.

உண்மைச் சம்பவம் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்கள், மனதை திடப்படுத்திக் கொண்டு இங்கு க்ளிக் செய்து வாசியுங்கள்.

Wednesday, June 18, 2008

டீல் மா கண்ணு ! (Part - 3)


"வி ஹேவ் ஐடென்டிஃபைட் ஹூ தெய் ஆர். பட், திஸ் இஸ் டூ ஏர்லி டு டிஸ்க்ளோஸ் எனிதிங், கிவ் அஸ் டென், ஃபிஃப்டீன் மினிட்ஸ்", தீர்க்கமாக தொலைக்காட்சிகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார், வாஷிங்டன் டிஸி உயர் போலீஸ் அதிகாரி, ஜெனரல் டேவிட் ரைட்.

"அவங்க யாருனு ஐடென்டிஃபை பண்ணிட்டோம் என்கிறீர்கள். அதையாவது எங்களுக்கு ... இந்த உலகுக்கு, சொல்லலாம் அல்லவா ?" நிருபர்கள் விடுவதாய் இல்லை !

அதிகாலை பண்ணிரண்டு மணிக்கு, டி.ஸி. மெட்ரோவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வழக்கத்திற்கும் மாறாக இந்தியத் தலைகள் நிறையத் தென்பட்டன.

ஒரு குறிப்பிட்ட நுழைவு வாயிலில், போலீஸ் செக்யூரிட்டி என அச்சிட்ட மஞ்சள் ரிப்பன்கள் சுற்றிலும் கட்டியிருந்தது. அதனைத் தாண்டி, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் செக்கப் செய்து முடிக்க‌, காஞ்சனா மேடமும், யமுனசாகரும் மிகுந்த பரபரப்புடன் ஜெனரல் டேவிட்டை நெருங்கினர்.

கம்பெனி அடையாள அட்டை மற்றும் ட்ரைவர்ஸ் லைசென்ஸ் பரிசோதித்து, இருவரையும் உள்ளே தனியறைக்கு அழைத்து சென்றார் டேவிட்.

எப்படி ஆச்சு, என்ன ஆச்சு, வெளியே கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. யாருக்கும், எதுவும் ஆயிடலையே. மிகுந்த படபடப்புடன் பொறிந்த காஞ்சனாவை, "கொஞ்சம் அமைதியா நான் சொல்றத கேளுங்க", கதவைத் தாழிட்டு பேச்சினை ஆரம்பித்தார் டேவிட்.

சுமார் பதினோறு மணிக்கு 911க்கு ஒரு கால். மிகுந்த பரபரப்புடன், ஒரு மிரட்சித் தொனியுடன் ஒரு பெண்மணி தழுதழுத்தார். நீங்களே கேளுங்கள் என்று ஒரு ஒலி கோப்பை தட்டி விட்டார்.

அதில் விட்டு விட்டு,

"ஹெலோ 911, வீ ஆர் இன் ஹை டேஞ்சர்".

"அவர் வெகிக்கிள் காட் ஃபாலென் ஃப்ரம் எ ப்ரோகன் ரோட் அன்ட் என்ட்டெட் இன் அ ஐஸி ரிவெர் நியர் பை"

"அவர் வெகிக்கிள் இஸ் சன்கிங்க் இந்த ஐஸ்"

"வீ கேனாட் ஓபன் எனி ஆஃப் தி கார் டோர். ப்ளீஸ் ஹெல்ப் அஸ், ப்ளீஸ் ........"

ஓடிக் கொண்டிருந்த, ரெகார்ட் செய்யப்பட்ட உரையாடல் ஒலிக் கோப்பை நிறுத்தினார் டேவிட்.

எங்கேயிருந்து கால் வந்தது என அறிந்து, ஒரு ஹெலிகாப்டர், இரு ஆம்புலன்ஸ், நான்கு போலீஸ் வேன்கள் என சம்பவ இடத்தில், பத்தாவது நிமிடத்தில் இருந்தோம்.

ஹை பீம் லைட் எல்லாம் போட்டு சுற்றி முற்றி ஐஸ் ரிவரில் பார்த்தபோது, ஒரு இடத்தில் சிகப்பு வண்ணம் லேசாகத் தெரிந்தது. ரத்தக் கறை என நினைத்தோம் முதலில், பின் தான் தெரிந்தது அது அவர்கள் சென்ற வாகனம் என்று.

ஹெலிகாப்டர் உதவியுடன், காரை மேலே உயரத் தூக்கி, கரைக்கு கொண்டு வந்து அனைவரையும் வெளியே எடுத்தோம்.

தொப்பு தொப்பென கை கால்கள் விழ, மூச்சிருக்கிறதா எனச் சோதித்ததில், அனைவரது நாடியும் விட்டு விட்டு மெல்ல துடித்துக் கொண்டிருந்தது. அது குறைந்து கொண்டே வருவது போலவும் இருந்தது.

(அடுத்த பகுதியில் நிறைவுறும் ...)

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)

Tuesday, June 17, 2008

டீல் மா கண்ணு ! (Part - 2)


Photo: Thanks to Google maps

இரவு பதினோறு மணிக்கு நியூஜெர்ஸி அடைந்தனர். இவர்கள் வேலை செய்யும் இந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ராகுல், ப்ரசன்னாவின் அபார்மென்ட் களை கட்டியது. ஒரு பக்கம் ஆப்பிள் ஐபாட், ஸ்பீக்கரில் கனெக்ட் பண்ணி லேட்டஸ்ட் தமிழ் பாடல்கள் சினுங்க, மறுபுறம் டி.வி.ஓட, இது எதுவுமே கேட்காமல், பார்க்காமல், ஒரே பேச்சும், கும்மாளமும், செல் ஃபோன் அரட்டைகளும், அடி தடியும் என அமர்களப்பட்டது அந்த அபார்ட்மென்ட்.

புயலடித்து ஓய்ந்த அமைதியில் காலை மூனுமணிக்கு நித்திரைக்குச் சென்ற அனைவரும், ஏழு ஏழரைக்கெல்லாம் எழுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். பிரிட்ஜ் வாட்டர் டெம்பிள், வரிசையாய் இந்தியக் கடைகள் கொண்ட (சென்னை, மும்பை எனத் தோன்றும்) டைசன் வீதியில் ஒரு உலா, மற்றும் சில முக்கிய வீதிகளில் ஒரு சுற்று என்று அதுவே சாயந்திரம் வரை ஆனது.

வண்டியா ஓட்டறான். அருபத்தி அஞ்சுக்கு, அம்பதுல போறான் பாரு என டென்சனாகி, முன் சென்ற காரை ஓவர் டேக் செய்தான் ஞானம். ஊஊஊ என சந்தோசத்தில் இளரத்தங்கள் ஆர்ப்பரித்தன.

வெள்ளி இரவு நியூயார்க் நண்பர்களின் அப்பார்ட்மென்டை விழிக்க வைத்து, ஆட்டம் போட்டு, துயிலெழுந்தனர். மறுநாள் ட்ரைவ் செய்யவில்லை. உள்ளே லோக்கலில் பஸ் டிக்கட் எடுத்து, மாடி பஸ்ஸில் மேலே அமர்ந்து, பறவையாய்ப் பறந்து திரிந்தனர் நியூயார்க் நகர வீதிகளில்.

ம‌திய‌ம் பிட்ஸ்ப‌ர்க் புற‌ப்ப‌ட‌த் த‌யாராயின‌ர்.

லாவண்யா சொன்னாள், ஒரே டயர்டா இருக்கு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு நைட் கிளம்பலாம் என்று.

சும்மா வ‌ர்ற‌ உன‌க்கே ட‌ய‌ர்டுனா, ஓட்ட‌ற‌ எங்க‌ள‌ப் ப‌த்தி யோசிச்சீங்க‌ளா க‌ண்ணுக‌ளா ?!! இதுக்கு தான் இந்த பொன்னுங்கள ஆட்டையில சேர்த்துக்கவே கூடாது என்று ஆரம்பித்தான் ஞானம்.

லாவண்யா இப்ப கிளம்பினா தான் நைட் பிட்ஸ்பர்க் போய் சேரலாம். அப்புறம் நண்பர்கள் அரட்டை, கோவில் இதெல்லாம் முடிச்சி ஞாயிறு மதியம் அங்க இருந்து கிளம்பணும். நடுநிசிக்கு கார ட்ராப் செய்யனும். அதனால எதையும் தள்ளிப் போட வேண்டாம் என்றான் செந்தில்.

கச்சிதாமா ப்ளான் படி எல்லாம் முடித்து ஞாயிறு மதியம் பிட்ஸ்பர்கிலிருந்து கிளம்பினர். குளிர் காலம் ஆதலால் ஐந்து மணிக்கே வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. லேசான பனி பெய்யத் துவங்கியது. இப்ப வருகிற எக்ஸிட் எடு செந்தில், மெக்கியிலாவ‌து, 'சப்'பாவ‌து போய் டின்ன‌ர் கொட்டிக்க‌லாம் என்றான் வ‌ருண். அனைவ‌ரும் ஆமோதித்த‌ன‌ர்.

ம‌ணி எட்டு ஆகுது, இன்னும் ஒரு அறுப‌து அறுப‌த்தி அஞ்சு மைல்ல‌ நாம‌ ஊருல‌ இருப்போம். இப்பவாவது பொறுமையா உக்காந்து சாப்பிட்டுட்டு கிள‌ம்ப‌லாமா என்றாள் லாவ‌ண்யா !

ரெண்டு பார்ட்டோட முடிக்கலாம் என்று இருந்தேன், ஆனா அடுத்து ஒரு பார்ட் போற மாதிரி இருக்கவே, ரெண்டாவது பார்ட் தொடரும் .....

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)

Sunday, June 15, 2008

ஜிலேபி சுத்த வாரீயளா ?

ராமலக்ஷ்மி மேடம் கூப்பிட்டாஹ, ஜிலேபி சுத்த ரெடியானு. வல்லிம்மா அதெல்லாம் சதங்கா ரெடினு சொல்லிட்டாக, அப்புறம் மறுப்பேது ?!! இதோ எனது மொக்கை ....

-----

விருந்தினராக, கொங்கு நாட்டிற்கு வந்திருந்த மன்னர் சிவாஜி விடை பெறும் நிகழ்ச்சி. எந்த மன்னரின் விடைபெறுதலின் போதும், ஒரு பெரிய ஜிலேபி செய்து ஊரைக் கூட்டி, அங்கு வரும் சிறு குழந்தைகளுக்கு தருவது வழக்கமாக இருந்தது அங்கு.

அரண்மனையின் ஆஸ்தான சமையற்காரர் அந்தப் பணியை சிரமேற்கொண்டு, அழகிய சுருள் சுருளாக அற்புதமாக ஒரு ஜிலேபி சுற்றினார். அதை அழகிய தங்கத் தாம்பளத்தில் வைத்து போர்த்தி, பட்டத்து யானை மீதேற்றி அரண்மனைக்கு அனுப்பியும் வைத்தார்.

முக்கிய வீதிகளில் ஊர்கோலம் சென்ற யானை அரண்மனையை அடைந்தது. அழகிய பதுமைகள் இருவர் தாம்பளத்தை எடுத்துச் சென்று அரசரின் முன் வைத்து வணங்கினர்.

போர்த்திய துணிகளை விலக்கிய அரசர் அதிர்ச்சியுற்றார். ஜிலேபியைக் காணவில்லை.

அரசர் மந்திரிமார்களுக்கு கட்டளையிட்டார். இது யாரு வேலையா இருக்கும். இதைக் கண்டுபிடிக்கறவங்களுக்கு ஆயிரம் ஜிலேபி தருவதாக தண்டோராப் போடச் சொன்னார்.

இதோ நம்ம தருமி பாட்டோட வந்திட்டார் அரண்மனைக்கு,

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறிவளை போன்ற ஆரஞ்சின்
தேன்சுவை உடைய சுருள் வரிகள்-
சிவா சிவா இலேசிலே பி !

அரசருக்குப் புரிந்து விட்டது யாரு ஜிலேபிய எடுத்தது என்று. உங்களுக்கு ???? நம்ம தருமி சுத்தத் தமிழ்வாதி. 'ஜி' எல்லாம் சொல்ல மாட்டார்.

மராட்டியத்தில் இருந்து அரசியார் ஓலை அனுப்பியிருந்தார், மன்னர் சிவாஜிக்கு சுகர் இருக்கு, அதனால் இனிப்பு எதும் வழங்காதீர்கள் என்று. அந்த ஓலை நம்ம தருமிக்கு கிடைக்கவே, சூப்பராக பாட்டு (வாங்கி) கொண்டு வந்து கலக்கிவிட்டார்.

புரியலேனா மன்னிக்கவும். இவங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம். நான் அழைக்க விரும்புவது செல்வி ஷங்கர், நாகு, ஜெயகாந்தன்.

அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு இம் மூவருக்கும் இப்பதிவின் மூலம் நன்றி ஜொல்லிக்கறேன்.

என்ன ஜொல்றீக ?!!!! என்ன மாதிரி ஜொதப்பாம, ஜொல்லவர்றத தெளிவா ஜொல்லுங்க .... :)

Wednesday, June 11, 2008

வானமே எல்லை !


Photo courtesy: msn.com

ஹலோ பென், வணக்கம். என் பேரு ...

எந்த நுழைவு வாயிலுக்குப் போகணும் நீங்க.

மெயின் என்ட்ரன்ஸ்.

சரி, இப்படி வாங்க. என்ன பிடிச்சிக்கறீங்களா ?

ஓ, ரொம்ப தேங்க்ஸ்.

நுழைவு வாயிலுக்கு செல்ல எண்ணி, குச்சியைத் தட்டிக் கொண்டே வேறு திசையில் பயணித்து, தண்ணீர் பைப்பில் கால் தடுக்கிய போது, அவருக்கு சில நொடிகள் உதவ முடிந்தது என்னால்.

பார்வையற்ற சகோதரரான பென் போன்று நிறைய பேர் அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். ஆனால் இது போல் நுழைவு வாயிலுக்குச் செல்வதற்கு தயங்கி நான் பார்த்ததில்லை. புதிதாகச் சேர்ந்திருப்பார் என எண்ணிக் கொண்டேன்.

கதவை நெருங்குகிறோம், இப்படி வாங்க என்று நன்றாக கதவைத் திறந்து விட்டேன்.

சில அடிகளில் ம‌ற்றொரு க‌த‌வையும் தாண்டினோம்.

இப்ப செக்யூரிட்டிக்கு முன்னால இருக்கிறோம். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்.

இனி நான் போய்க் கொள்வேன். இந்த DVD ட்ராப் பண்ணிவிடுகிறீர்களா ?

ஓ, தாராளமாக என்றேன்.

அது வரை நின்று, மெஷின் க்ர்ர்ர், ச்ச்ச்க் என்ற DVD விழுங்கும் சத்தம் கேட்டு, மிக்க நன்றி நண்பரே என விடை பெற்றார் பென்.

எனக்குள் ஓராயிரம் கேள்விகள். ஒன்றே ஒன்று மட்டும் கேட்டேன் அவரிடம்.

தவறாக எண்ண வேண்டாம், பதில் சொல்ல இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களிடம் ஒரு கேள்வி கேக்கலாமா என்றேன்.

இந்த DVD எப்படி பார்ப்பீர்கள் என்றேன்.

பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு அவரிடமிருந்து.

நான் எப்படிப் பார்ப்பேன், என் குழந்தைகள் பார்ப்பார்கள் !!!

அப்ப உங்க மனைவி இந்த வேலை எல்லாம் செய்யலாமே ?

ஏன் ப‌ண்ணாம‌ல், இன்னிக்கு என்னோட‌ ட‌ர்ன் என்றார்.

பென்னின் மனைவியும் பார்வையற்றவர் என அறிந்து அதிர்ந்து நின்றேன்.

சில விநாடிகள் சிந்தனையில் மனம் பறந்தது ...

இதிலிருந்து, பென் ஒரு நிறைவான‌ வாழ்க்கை வாழ்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிற‌த‌ல்லவா ?!!!

நமக்கு எல்லாம் இருந்தும், நம்மை நாம் குறுக்கிக் கொள்கிறோமோ ?!! நான் இவ்வளவு தான், என்னால் இவ்வளவு தான் முடியும், இதுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பெர்சன்ட் கூட எதிர்பார்க்காதீங்க என்றெல்லாம் !!!!

டீல் மா கண்ணு ! (Part - 1)



டேய் இங்க பாரேன், என்டர்ப்ரைஸ்ல வீக்கெண்ட் டிஸ்கௌண்ட் போக இன்னும் 20% கம்மியா தர்றானாம் என்றாள் லாவன்யா.

நீ இன்னும் என்டர்ப்ரைஸ விடலயா ? 'பட்ஜட்' பாரு, பேருக்கேத்த மாதிரி டீல் தர்றான், இது வருண்.

டாலர், த்ரிஃப்டி என ஆளாளுக்கு கார் வாடகை டீலில் மூழ்கி அந்த அப்பார்ட்மென்ட் வீடு அல்லோல கல்லோலப்பட்டது !

செல்லில், பக்கத்து ப்ளாக்கில் இருந்து மதுமிதா அழைத்தாள். "அருண், செவன் சீட்டர் எடுக்கலாமா, இல்ல ரெண்டு வண்டியா புக் பண்ணிக்கலாமா ?"

எத்தன தடவை சொல்லியிருக்கேன். அருண் இல்ல, வருண் என்று. மெதுவாகத் தான் பேசினான்.

படபடவென எதிர்முனையில் சரவெடி. "என்ன தப்பா சொல்லிட்டேன். அது என் அண்ணா பேரு, உன்னை என் அண்ணன் மாதிரி அழைத்தது தப்பா. நானும் எத்தனை தடவ இத உன்னிடம் சொல்லியிருக்கிறேன்".

லாவன்யா, வருண், மதுமிதா, செந்தில், ஞானம், தீபிகா இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து பல ஆண்டுகள் ஆனதென நினைப்போம். இப்ப தான், சமீபத்தில் ஒருசில மாதங்கள் முன் வந்தவர்கள் தான். வந்த நாள் முதல் டீல் தான்.

எல்லாம் கல்லூரி முடித்து ஒரு வருடம் கூட இல்லை. அமெரிக்கா வந்தவுடன் ஒரு பரம சுதந்திரம் பெற்ற உணர்வு. பரந்து விரிந்த, யாரையும் எதற்குள்ளும் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரம். சென்ற ஆண்டு கல்லூரி முடித்த இள ரத்தங்கள், கேக்கவே வேண்டாம். ரெண்டு மூனு நாள் லீவு விட்டாப் போதும், மேலே பார்த்த நிலை தான்.

வாஷிங்டன் டி.ஸியில் இருந்து, மூன்று நாட்களில், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிட்ஸ்பெர்க் சுத்திட்டு வர்ற மாதிரி ப்ளான் இவர்களது.

போற இடமெல்லாம் பார்த்துப் போம்மா. அமெரிக்கால எல்லாமே ஈஸியாமே, அங்கலாய்த்தாள் தீபிகாவின் அம்மா. நான் என்ன கொழந்தையாம்மா, இன்னும் சின்ன பிள்ளையாவே பாக்கறீங்களே. இதே அமெரிக்கா என்றால் ....

இது தீபிகாவின் வீட்டு உரையாடல் மட்டும் இல்லை, அவள் வயதைக் கொண்ட மற்ற அனைவரின் பெற்றோரும் இதையே சொல்லி அனுப்பியிருந்தனர்.

இதுவரைக்கும் ஏழெட்டு ஸ்டேட் போய்ட்டு வந்திட்டோம். எல்லாம் ஃப்ளை பண்ணி. போரடிச்சுப் போச்சு, அதான் இப்ப இங்க ட்ரைவ் பண்ணலாம் என்று ப்ளான், என அடுக்கினான் ஞானம். ப்ளை பண்ணி, என்றவுடன் அதற்கான டீல், எப்படி டீல் பண்ணியிருப்பார்கள் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

செவன் சீட்டர் போய்டுச்சாம் பட்ஜட்ல. வேற எங்கயும் இல்ல. புதுசா ஒரு ரென்டல் கம்பெனி வந்திருக்கு, அவன் ஒரு மாதிரி டீல் சொல்றான். ஞாயிறு இரவு நடுநிசியில் கார ட்ராப் பண்ணிட்டா, மொத்த ரென்ட்டும் 35% கொடுத்தாப் போதும் என்றான் ஞானம். கொஞ்சம் லேட் ஆனாக் கூட முழுசா தரணுமாம்.

லேட்டாவாவது, லேட்டஸ்டாவாவது எல்லாம் இல்லை கரெக்டா கன் டயத்துக்கு வர்றோம். வண்டிய ட்ராப் பண்றோம் !

என்னடா கன், கின் என்று சொல்லிக்கிட்டு. எவனாவது போலீச கூப்பிடப் போறான் என்றான் செந்தில்.

ஆனா டீல், செம டீல். 'ஞானம் பேருல டீலு' என அனைவரும் கோரசாக வட்டமடித்து பங்கரா டான்ஸ் ஆடினர். தமிழ்மணத்தில தான் ஜிலேபி பிழியாறங்க என்றால் இங்கயுமா என்று புலம்பினாள் மது.

வியாழன் மதியம், சிகப்பு நிற ரென்டல் எஸ்.யூ.வியை பார்க் செய்தான் வருண். எல்லாம் பேக் பண்ணி, செக் பண்ணிக் கொண்டனர் ஆறு பேரும்.

எல்லா டைரக்ஷன் மேப் ப்ரிண்ட் இதுல இருக்கு, நீட்டினாள் தீபிகா. வாங்கி முன்னால் வைத்துக் கொண்டான் வருண்.

சிக்ஸ் சி.டி. ப்ளேயரா. அட அடா. இந்தா, புடி என கொத்து சிடிக்கள் கொண்ட பையை கொடுத்தாள் லாவன்யா. நல்ல பாட்டா போடப்பா என பின்னால் இருந்து கூவினான் ஞானம். 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' என பெங்களூர் ரமணியம்மா பாட அனைவரும் எச பாட்டுப் பாட, தடபுடலாய் அபார்ட்மென்ட் வளாகம் விட்டுப் பறந்தனர்.

க்ளிக், ஷ்ஷ்ஷ்ஷ்யூ என்று கேன் ஒபன் பண்ணியதில், அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா என்றாள் மது, ஞானத்தைப் பார்த்து.

ஹி. ஹி. அது ஒன்னும் இல்ல மது, நீ பரவா இல்ல, பேருலே கிக் இருக்கு, நாங்க பாவம் இல்லியா ?!! எனக்கும் ஒன்னு குடுடா என்றான் செந்தில்.

டேய் நிறுத்துங்கடா, முழுசா என்ன ஓட்ட விட்டுருவீங்க போல இருக்கே என பதறினான் வருண்.

தொடரும் ...

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)

Sunday, June 8, 2008

சிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்

என் இனிய இணைய தமிழ் பதிவர்களே ! வணக்கம் !!

வருகிற ஜூலை 4, விடுமுறையை முன்னிட்டு, சிகாகோ சுத்திப் பார்க்கலாம் என்று தங்கமணியின் யோசனையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று நாட்களில் என்ன என்ன பார்க்கலாம் என இணையக் கடவுளிடம் கேட்ட போது, அள்ளித் தெளிக்கிறார் அவர். அதிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது எனத் தெரியவில்லை.

சிகாகோ வாசிகளே, உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அள்ளித் தெளியுங்களேன்.

அட்வான்ஸ் நன்றிகள் பலப் பல.

Wednesday, June 4, 2008

எண்ணும் எழுத்தும் - Jacques Inaudi

இன்றைய பதிவில் குறிப்பிட்ட ஒரு எண் என்றில்லாமல் எண்கள் சம்பந்தப்பட்ட ஒரு நபரைப் பற்றி பார்க்கப் போகிறோம். இன்னாதி, இன்னாதி என்று நீங்கள் கேட்டால், ஆமாங்க இன்னாதி தான். லைட்டினிங்க் கால்குலேட்டர் வரிசையில் முதலிடத்தில் இருப்பவ‌ர் ஜாக்யூஸ் இன்னாடி.



கெமிலி ஃப்ள‌மேரிய‌ன் என்னும் வான‌சாஸ்திர‌ அறிஞ‌ர் இன்னாடி ப‌ற்றி நினைவுகூர்கையில்: "இர‌ண்டு ஐந்து இல‌க்க‌ எண்க‌ள் 70,846 & 88,875 கொடுத்து பெறுக்கி விடை கேட்ட‌ போது, அவ‌ர் எடுத்துக் கொண்ட‌ நேர‌ம் 55 விநாடிகள்" என்கிறார்.

இன்னாதி அவ்ளோ நேர‌மா ? என்று தான் எண்ணுவோம். இன்னாடி, கால்குலேட்டர் பயன்படுத்தியோ, எழுதிப் பார்த்தோ விடை கூற‌வில்லை. ம‌ன‌தில் க‌ணித்து விடை த‌ருகிறார் ம‌னுஷ‌ன்.

காகிதத்தில் எழுதாமல், மனதில் இருத்தி தருகிறார் என்று படித்தவுடனே உங்களுக்குப் புரிந்திருக்கும், இன்னாடி அவர்கள் அதிகம் படித்தவரில்லை என்று. உங்கள் கூற்று முற்றிலும் சரியே !

அக்டோபர் 15, 1867ம் ஆண்டு இத்தாலியில், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் இன்னாடி. ஆறேழு வயதிருக்கையில், ஆடு மேய்க்க, குடும்பத்தாரால் நியமிக்கப்பட்டார். ஆடுகளின் எண்ணிக்கை, அவை மேயும் புல் வெளிகளில் செடிகளின் எண்ணிக்கை, மரங்களின் எண்ணிக்கை, மலைகளின் எண்ணிக்கை என்று எண்களின் மேல் தீராக் காதல் கொண்டவர் ஆனார் அப்போதிருந்தே.

ஆடுகள் புல்களை மேய, இவர் மனம் எண்களை அசை போட்டது.

சிறு வயதில் சில்லரை வியாபாரிகளுக்கு கணக்கு, வழக்கு பார்த்து, காசும் பார்க்கிறார். இவர் புகழ் மெல்ல ஊர், உலகெலாம் பரவுகிறது. பல ஊர்களில், நிறைய கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.

ஒரு கூட்டத்தில், "என்னால் ஒரே நேரத்தில் இரு கேள்விகளுக்கு கணித்து விடை சொல்ல முடியும்" என்கிறார். கேள்விகளுக்கு சில நொடிகளில் விடையளிக்க வியப்பில் ஆழ்கிறது கூட்டம் (நம் ஊர் தசாவதானி, அஷ்டாவதானிகள் நினைவுக்கு வருகின்றனர்).

இன்ன‌ தேதியில் ஒருவ‌ர் பிற‌ந்தால், அந்தத் தேதி என்ன‌ கிழ‌மை என்ப‌த‌ற்கு ப‌தில் த‌ருகிறார். இல்லாத‌ தேதியை (29 Feb, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை தான் வ‌ரும் இல்லையா) ஒருவ‌ர் கேட்டால், ச‌ட்டென‌ இப்ப‌டி ஒரு தேதியே இல்லை என்று ப‌தில‌ளிக்கிறார்.

கூட்டங்களில் முன்னே நின்று கொள்வார். ஒருவர் கேள்வி கேட்க, கேள்விக்கான எண்களை மற்றொருவர் பின்னே பலகையில் எழுதிக் கொள்வார். அந்த நேரத்தில், கேள்வியை ம‌னதில் பதிந்து கொள்வார் இன்னாடி. எண்களை மனதில் வைத்தே (புகுந்து) விளையாடி சில நொடிகளில் விடையளிப்பார். ஒரு முறை கூட பின்னால் திரும்பி பலகையில் என்ன எழுதியிருக்கிறது என்று அவர் பார்ப்பதில்லை.

1800களில் இவரைப் பரிசோதித்து, "அளவிற்கதிமான நினைவாற்றலும், தனது கணிப்புத் திறனுக்கு, தொடர்ந்து மனதில் பயிற்சியும் எடுத்துக் கொள்பவர்" என்றும் கூறுகின்றனர்.

1950ம் ஆண்டு வரை வாழ்ந்து, உலகில் பல இடங்களுக்கு பயணித்து, பல அறிஞர்களின், சிக்கலான கணக்குகளுக்கு மனதார‌ விடையளித்து, மனிதக் கணினி எனப் பேர் பெற்றவர் ஜாக்யூஸ் இன்னாடி அவர்கள்.

மேலதிக தகவல்களுக்கு, இணையக் கடவுளிடம் "Jacques Inaudi" என்று முறையிடுங்கள்.

-----

"வைத்த‌தொரு க‌ல்வி ம‌ன‌ப் ப‌ழ‌க்க‌ம்" என்பார் ஔவையார். தொழில் நுட்ப‌ வ‌ள‌ர்ச்சியால் ப‌ல‌வ‌ற்றை இழ‌க்கின்றோம். எந்திர‌ வ‌ள‌ர்ச்சியில் ம‌ன‌த் த‌ந்திர‌ங்க‌ளை ம‌ற‌க்கின்றோம்.

காலே அரைக்கால், முக்காலே மூனு வீச‌ம் என்று என் பாட்டி போடும் மனக் க‌ண‌க்கு அலாதியான‌து. இத்த‌னைக்கும் அவ‌ர் ப‌டித்த‌து மூன்றாம் வ‌குப்பு வ‌ரை தான். இன்றைக்கு அரைக்கால், முக்கால் எல்லாம் இல்லாம‌ல் போக‌லாம். ஆனால் ம‌ன‌ம் இருக்க‌த் தான் செய்கிற‌து இல்லையா ? நாம் தான் (முறையாக‌) ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை !!!

கணித மேதைகள் என்றால் நம்ம ஊர்க்காரவுக இல்லாமலா ?!!! இன்னாடி போலவே நம்மூரிலும் ஒரு மேதை உண்டு. வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எண்களாலும் நல்ல எண்ணங்களாலும் முன்னேறி விண்வெளி அறிஞராய் பணியாற்றியவர். "பறவைகள் சுமந்து செல்லும் பெண்" என்று போற்றுதல் பெற்றவர். யாரென்று தெரிகிறதா ?

Sunday, June 1, 2008

தட்டான் பிடிக்க வாரீயளா ?



இறகென இல்லா
இறகை வைத்து,
பறவையாய் நீயும்
பறப்பது அழகு !

பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்,
உன்னைக் கண்டா
உலங்கு ஊர்தி* படைந்தான் ?!

மெல்லத் தரையிறங்கி
அல்லிப் பூ அமர,
மலரும் பிரகாசமாய்
மயக்கும் பூவழகும்.

வளைந்த புல்நுனியில்
வாகாய் நீ அமர,
உன்னோடு சேர்ந்தாடி
களிப்புறும் புல் அழகும்.

நீண்ட வால்பிடிக்க
நீழும் எம்கைகள்,
சட்டெனப் பறப்பாய்
எட்டி வான்மீதே !

வளைத்துச் சுழற்றும்
வட்ட முகத்தில்,
எப்புறம் கண்கள்
என்புறம் காணுதே !

காற்றிலே நின்று
மேலும் கீழுமாடி,
மெல்லவே மீண்டும்
அல்லியின் மீதமர்வாய்.

இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!

-----

* உலங்கு ஊர்தி = ஹெலிகாப்டர் -- நன்றி சீனா ஐயா, அன்புடன் குழுமம்.