எண்ணும் எழுத்தும் - Jacques Inaudi
இன்றைய பதிவில் குறிப்பிட்ட ஒரு எண் என்றில்லாமல் எண்கள் சம்பந்தப்பட்ட ஒரு நபரைப் பற்றி பார்க்கப் போகிறோம். இன்னாதி, இன்னாதி என்று நீங்கள் கேட்டால், ஆமாங்க இன்னாதி தான். லைட்டினிங்க் கால்குலேட்டர் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஜாக்யூஸ் இன்னாடி.
கெமிலி ஃப்ளமேரியன் என்னும் வானசாஸ்திர அறிஞர் இன்னாடி பற்றி நினைவுகூர்கையில்: "இரண்டு ஐந்து இலக்க எண்கள் 70,846 & 88,875 கொடுத்து பெறுக்கி விடை கேட்ட போது, அவர் எடுத்துக் கொண்ட நேரம் 55 விநாடிகள்" என்கிறார்.
இன்னாதி அவ்ளோ நேரமா ? என்று தான் எண்ணுவோம். இன்னாடி, கால்குலேட்டர் பயன்படுத்தியோ, எழுதிப் பார்த்தோ விடை கூறவில்லை. மனதில் கணித்து விடை தருகிறார் மனுஷன்.
காகிதத்தில் எழுதாமல், மனதில் இருத்தி தருகிறார் என்று படித்தவுடனே உங்களுக்குப் புரிந்திருக்கும், இன்னாடி அவர்கள் அதிகம் படித்தவரில்லை என்று. உங்கள் கூற்று முற்றிலும் சரியே !
அக்டோபர் 15, 1867ம் ஆண்டு இத்தாலியில், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் இன்னாடி. ஆறேழு வயதிருக்கையில், ஆடு மேய்க்க, குடும்பத்தாரால் நியமிக்கப்பட்டார். ஆடுகளின் எண்ணிக்கை, அவை மேயும் புல் வெளிகளில் செடிகளின் எண்ணிக்கை, மரங்களின் எண்ணிக்கை, மலைகளின் எண்ணிக்கை என்று எண்களின் மேல் தீராக் காதல் கொண்டவர் ஆனார் அப்போதிருந்தே.
ஆடுகள் புல்களை மேய, இவர் மனம் எண்களை அசை போட்டது.
சிறு வயதில் சில்லரை வியாபாரிகளுக்கு கணக்கு, வழக்கு பார்த்து, காசும் பார்க்கிறார். இவர் புகழ் மெல்ல ஊர், உலகெலாம் பரவுகிறது. பல ஊர்களில், நிறைய கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
ஒரு கூட்டத்தில், "என்னால் ஒரே நேரத்தில் இரு கேள்விகளுக்கு கணித்து விடை சொல்ல முடியும்" என்கிறார். கேள்விகளுக்கு சில நொடிகளில் விடையளிக்க வியப்பில் ஆழ்கிறது கூட்டம் (நம் ஊர் தசாவதானி, அஷ்டாவதானிகள் நினைவுக்கு வருகின்றனர்).
இன்ன தேதியில் ஒருவர் பிறந்தால், அந்தத் தேதி என்ன கிழமை என்பதற்கு பதில் தருகிறார். இல்லாத தேதியை (29 Feb, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும் இல்லையா) ஒருவர் கேட்டால், சட்டென இப்படி ஒரு தேதியே இல்லை என்று பதிலளிக்கிறார்.
கூட்டங்களில் முன்னே நின்று கொள்வார். ஒருவர் கேள்வி கேட்க, கேள்விக்கான எண்களை மற்றொருவர் பின்னே பலகையில் எழுதிக் கொள்வார். அந்த நேரத்தில், கேள்வியை மனதில் பதிந்து கொள்வார் இன்னாடி. எண்களை மனதில் வைத்தே (புகுந்து) விளையாடி சில நொடிகளில் விடையளிப்பார். ஒரு முறை கூட பின்னால் திரும்பி பலகையில் என்ன எழுதியிருக்கிறது என்று அவர் பார்ப்பதில்லை.
1800களில் இவரைப் பரிசோதித்து, "அளவிற்கதிமான நினைவாற்றலும், தனது கணிப்புத் திறனுக்கு, தொடர்ந்து மனதில் பயிற்சியும் எடுத்துக் கொள்பவர்" என்றும் கூறுகின்றனர்.
1950ம் ஆண்டு வரை வாழ்ந்து, உலகில் பல இடங்களுக்கு பயணித்து, பல அறிஞர்களின், சிக்கலான கணக்குகளுக்கு மனதார விடையளித்து, மனிதக் கணினி எனப் பேர் பெற்றவர் ஜாக்யூஸ் இன்னாடி அவர்கள்.
மேலதிக தகவல்களுக்கு, இணையக் கடவுளிடம் "Jacques Inaudi" என்று முறையிடுங்கள்.
-----
"வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்" என்பார் ஔவையார். தொழில் நுட்ப வளர்ச்சியால் பலவற்றை இழக்கின்றோம். எந்திர வளர்ச்சியில் மனத் தந்திரங்களை மறக்கின்றோம்.
காலே அரைக்கால், முக்காலே மூனு வீசம் என்று என் பாட்டி போடும் மனக் கணக்கு அலாதியானது. இத்தனைக்கும் அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை தான். இன்றைக்கு அரைக்கால், முக்கால் எல்லாம் இல்லாமல் போகலாம். ஆனால் மனம் இருக்கத் தான் செய்கிறது இல்லையா ? நாம் தான் (முறையாக) பயன்படுத்துவதில்லை !!!
கணித மேதைகள் என்றால் நம்ம ஊர்க்காரவுக இல்லாமலா ?!!! இன்னாடி போலவே நம்மூரிலும் ஒரு மேதை உண்டு. வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எண்களாலும் நல்ல எண்ணங்களாலும் முன்னேறி விண்வெளி அறிஞராய் பணியாற்றியவர். "பறவைகள் சுமந்து செல்லும் பெண்" என்று போற்றுதல் பெற்றவர். யாரென்று தெரிகிறதா ?
7 மறுமொழி(கள்):
சகுந்தலாவா ? ராமானுஜருக்கு அடுத்து சகுந்தலா தானே - சரியா
//இன்றைக்கு அரைக்கால், முக்கால் எல்லாம் இல்லாமல் போகலாம். ஆனால் மனம் இருக்கத் தான் செய்கிறது இல்லையா ? நாம் தான் (முறையாக) பயன்படுத்துவதில்லை !!!//
முழுக்க முழுக்க உண்மை! அரைக்கால் மனது, முக்கால் மனது என்று வைக்காமல் முழு மனதை வைத்தால் முடியாதது என்பதே இல்லை. இல்லையா சதங்கா?
'இன்னாடி'யே அதற்கு அத்தாட்சி!
தெரியாத தகவல்களைத் தெரிய வைத்தமைக்கு நன்றி, சதங்கா!
சீனா ஐயா,
மிகச் சரியான பதில். சகுந்தலா தேவி அவர்களே தான்.
ராமலஷ்மி மேடம்,
//முழு மனதை வைத்தால் முடியாதது என்பதே இல்லை. இல்லையா சதங்கா?//
மிகச் சரி, நிச்சயமாக.
மனதிற்கு பயிற்சி தருகிற மாதிரி நம்ம தாத்தா, பாட்டி காலத்தில இருந்த மாதிரி இல்லாம, இப்போ ரொம்ப கொறஞ்சு போச்சு இல்லையா. இப்ப வளருகிற சிறுசுகள், ரெண்டும், ரெண்டும் எத்தனை என்று கேட்டால், "Where is the Calculator ?" என்னும் நிலை.
வாசித்து, கருத்துக்களுக்கு மிக்க நன்றி கவிநயா.
சதங்கா said://இப்ப வளருகிற சிறுசுகள், ரெண்டும், ரெண்டும் எத்தனை என்று கேட்டால், "Where is the Calculator ?" என்னும் நிலை.//
ஆமாம் சதங்கா. 'அந்த நிலையையும் மாற்றிக் காட்டுகிறோம். கணைக்கிலே சிறுசுகளின் மூளையை வளர்க்கிறோம்' என இப்போது தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை, முளைத்து நிற்கின்றன அபகஸ் சென்டர்கள். நம்ம தாத்தா பாட்டி குன்னி முத்துக்களையும், சோவிகளையும் வைத்துச் சொல்லிக் கொடுத்ததை இவர்கள் காசை வாங்கிக் கொண்டு மாடர்னாக சொல்லித் தருகிறார்கள்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !