Sunday, June 1, 2008

தட்டான் பிடிக்க வாரீயளா ?



இறகென இல்லா
இறகை வைத்து,
பறவையாய் நீயும்
பறப்பது அழகு !

பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்,
உன்னைக் கண்டா
உலங்கு ஊர்தி* படைந்தான் ?!

மெல்லத் தரையிறங்கி
அல்லிப் பூ அமர,
மலரும் பிரகாசமாய்
மயக்கும் பூவழகும்.

வளைந்த புல்நுனியில்
வாகாய் நீ அமர,
உன்னோடு சேர்ந்தாடி
களிப்புறும் புல் அழகும்.

நீண்ட வால்பிடிக்க
நீழும் எம்கைகள்,
சட்டெனப் பறப்பாய்
எட்டி வான்மீதே !

வளைத்துச் சுழற்றும்
வட்ட முகத்தில்,
எப்புறம் கண்கள்
என்புறம் காணுதே !

காற்றிலே நின்று
மேலும் கீழுமாடி,
மெல்லவே மீண்டும்
அல்லியின் மீதமர்வாய்.

இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!

-----

* உலங்கு ஊர்தி = ஹெலிகாப்டர் -- நன்றி சீனா ஐயா, அன்புடன் குழுமம்.

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

வாரோம் வாரோம்! சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் செடிக்குச் செடி தாவும் தட்டான்களைப் பிடிக்க முயன்று தோற்றிருக்கிறோம். எத்தனை முறை தோற்றாலும் அவற்றைத் துரத்துவது ஒரு குதூகலமாய் இருந்திருக்கிறது. நீங்கள் ஜெயித்தீர்களா எனப் படித்துக் கொண்டே வருகையில்...
//இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!//
:-))))))))))))))))))!

கடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.

Kavinayasaid...

//உன்னைக் கண்டா
உலங்கு ஊர்தி* படைந்தான் ?!//

அப்படித்தான் போல!

//இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!//

ரசித்தேன்! :)))

cheena (சீனா)said...

சதங்கா

அருமை அருமை - தட்டானைக்கண்டா உலங்கூர்தி படைத்தான் - என்ன ஒரு அருமையான கற்பனை. அழகு தமிழ்ச் சொற்கள் - எளிமையான அடிகள்.

வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா ?

சிறந்த கவிதை - நல்வாழ்த்துகள் சதங்கா

சதங்கா (Sathanga)said...

வாங்க வாங்க ராமலஷ்மி மேடம்,

சிறு வயது ஆர்வம் இப்பவும் நினைவில் வைத்து நீங்கள் காட்டுவது ஆனந்தம்.

//கடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.//

நான் ரசித்த வரிகள் :) பாராட்டுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

உங்கள் ரசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா ?//

உங்கள் வர்ணனையையும் ரசித்தேன். நன்றாக இருக்கிறது.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !