Thursday, June 26, 2008

கார் பார்க்கிங்கும் கார்களும்



நீண்ட நிலப் பரப்பில்
நிற்கும் வண்டுகள் போல்,
பல உருவில் கார்கள்
பார்க்கிங்கில் நின்றிருக்கும்.

தரையில் நீட்டி இழுக்க‌
உதிர்ந்த‌ சரவெடி போல்,
இருபுறம் அணிவகுத்து
ஆங்காங்கே நின்றிருக்கும்.

கட்டும் க‌த‌ம்ப‌ம் போல்
முட்டி மோதி இல்லாம‌ல்,
அளவாய் இட‌ம்விட்டு
வண்ண மயமாய் நின்றிருக்கும்.

எட்டி நின்று பார்த்திடவே
குட்டி குட்டிப் பூக்கள் போல்,
பல வண்ணத் தூவலாய்
ஒட்டி ஒட்டி நின்றிருக்கும்.

வரிசையாய் அருகருகே
வாழைப்பூ அடுக்கு போல்,
அடுக்குமாடிக் கட்டிடத்தில்
அடுக்கடுக்காய் நின்றிருக்கும்.

அரண் தாங்கும்
அணி வகுப்பு போல்,
பரந்த பொட்டலிலும்
பக்கத்தே நின்றிருக்கும்.

குட்டிக் கார்களும்,
அதை விஞ்சுவ‌து போல்,
கூடவே பெருங் கார்க‌ளும்
கூட்டம் கூட்ட‌மாய் நின்றிருக்கும்.

திட்டுத் திட்டாய் திரண்டு
உருளும் அலை போல்,
விட்டு இடம் தள்ளி
உருளாமல் நின்றிருக்கும்.

நீண்ட மீன் எலும்பின்
இருபுற முள் போல்
கிடைக்கும் இடைவெளியில்
குத்தாமல் நின்றிருக்கும்.

தலை கோதும் சிறு,
சீப்பின் பல் போல்,
இருக்கும் இடைவெளியில்
இணைத்து நின்றிருக்கும்.

10 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

குறிப்பிட்டு இது என சொல்ல முடியாதபடி அத்தனை உவமானங்களும் வெகு அருமை! வெகுவாகு ரசித்தேன் சதங்கா!

cheena (சீனா)said...

கார்கள் நிற்கும் அழகினை இவ்வளவு அழகாகச் சொல்லவும் முடியுமா ? அருமை அருமை !

வண்டுகள். சரவெடி, கதம்பம், பூக்கள், வாழைப்பூ, அணிவகுப்பு, அலை, மீனின் எஅலும்பு, சிறு சீப்பின் பல் - அடடா அடடா ! இத்தனை உவமைகளா சிற்றுந்துகளுக்கு !

அழகு! சிந்தனை அழகு !

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவாsaid...

:)

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//குறிப்பிட்டு இது என சொல்ல முடியாதபடி அத்தனை உவமானங்களும் வெகு அருமை! //

மிக்க நன்றி

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//அழகு! சிந்தனை அழகு !//

இதுவும் அழகு. மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

சிவா,

வெறும் ஸ்மைலி மட்டும் தானா ? :)))

Sanjai Gandhisaid...

சென்ற ஆண்டு இறுதியில் தாய்லாந்து போன போது பார்த்தேன்.. ஆங்காங்கே பெரும் ஹோட்டல்களுக்கு இணையான கட்டிடங்கள். கார் பார்க் பண்ணுவதற்கு கட்டி இருக்கிறார்கள். பெரும்பாலான ஹோட்டல்ளில் கார் பார்க் செய்ய பல அடுக்குமாடி கட்ட்டங்கள் தனியாக இருக்கு..

சதங்கா (Sathanga)said...

சஞ்சய்,

//ஹோட்டல்ளில் கார் பார்க் செய்ய பல அடுக்குமாடி கட்ட்டங்கள் தனியாக இருக்கு..//

ஆமா. இன்னும் ஜப்பான்ல அதவிட. மனிதனுக்கு லிஃப்ட் மாதிரி, கார் பார்க்கிங்க்கும் அப்படித் தான். நேரே கார அப்படியே லிஃப்ட்ல விட்டு, எத்தனாவது மாடில இடம் காலியா இருக்கோ அங்க போயிரும். திரும்ப வரும்போது, பட்டனத் தட்டினாப் போதும், கார் லிஃப்ட்ல கீழ வந்திரும். டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ சோ மச் இல்லியா ? :))

நாகு (Nagu)said...

என்ன ஆஃபிஸ்ல பார்க்கிங் லாட் பாத்த சீட்டா? பார்க்கிங் லாட் பார்த்தே உமக்கு இப்படி கவிதை கிளம்புகிறதே, அங்கே ஆணி புடுங்கும் எங்குலப் பெண்களைப் பார்த்தால் என்ன எல்லாம் எழுதுவீரோ? ஜமாயும்! நான் உம்ம தங்கமணி/ரங்கமணி(டீச்சருக்காக :-) கிட்ட சொல்லவில்லை.

சதங்கா (Sathanga)said...

நாகு,

//எங்குலப் பெண்களைப் பார்த்தால் என்ன எல்லாம் எழுதுவீரோ? //

பின்னிவிடுவார்கள் !!! ஏனெனில் இங்கு உம் குலப் பெண்கள் அநேகர் தங்கமணிகள் :)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !