Wednesday, December 31, 2008

இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !

"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் ..." என்றவாறு இழுத்தாள் ரமா.

"என்னடி சொல்றே" என்று கேட்டுக் கொண்டே காலணிகளை கழட்டி விட்டு, ரமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் அவளது தோழி ரமணி.

"எதை எல்லாம் செய்யாதீங்க என்று சொல்றோமோ, கரெக்டா அதைத் தான் செய்யறாரு, சொன்னா கேட்கறதே இல்லை !!! ரொம்ப கஷ்டமா இருக்கு".

"தண்ணி, தம் எல்லாம் இல்லனு சொல்லுவியே !, இப்ப என்ன ??"

"பாரு ரமணி, புதுவருசமும் அதுவுமா காலைல சீக்கிரமே எழுந்து, குளிச்சு, ஸ்வீட் எல்லாம் செஞ்சு, இட்லி, வடை, சாம்பார்னு ஒன்னுவிடாம பண்ணி, பத்தாதற்கு குழந்தைகளையும் பார்த்து ... என்னை ஒரு வேலை செய்ய விடறதில்லை ..."

"நீ சொல்றது கரெக்ட் தான் ரமா. இந்த (காலத்து) ஆம்பிளைங்களே இப்படித் தான் !!!!" என்று ரமாவுடன் சேர்ந்து கொண்டாள் ர‌ம‌ணி.

-----

ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன் வ‌ந்து 'நிஜ‌மா க‌தையா ?' என்றும், நாகு வ‌ந்து 'என்னையா வீட்டுல‌ இப்ப‌டித் தானா ?' என்றும், இல்ல தங்க்ஸே வந்து, 'ஏங்க‌ ஒரு வேலை வீட்டில் பார்ப்பது இல்லை, நல்லா கதை விடறீங்களே' என்றும் யாராவ‌து வ‌ந்து கொடி பிடித்து, மைக் பிடிக்க‌ற‌து முன்னாடி எஸ்கேப்ப்ப்ப் ... அடுத்த‌ வ‌ருஷ‌ம் ச‌ந்திப்போம் ந‌ண்ப‌ர்க‌ளே.

வ‌ழ‌க்க‌ம் போல‌ வித்தியாச‌மான ஆண்டாக, வரும் 2009 ஆண்டும் அமைய, அனைவருக்கும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

Saturday, December 27, 2008

இசை இல்லாத மார்கழியா .....

ஜாதி, மதம், இனம், மொழி ... இப்படி எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத ஒன்றை இசை என்று சொல்லலாமா ?

சின்னப் புள்ளையா இருந்த காலத்தில் இருந்து, இந்த தாளங்களை நம்மை அறியாமலேயே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டில் இருந்து, கோவில் விசேடங்கள், கல்யாண வைபவங்கள், என எல்லாம் கடந்து கடைசி மூச்சுக்கு அப்புறமும் இசையை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம்.

சின்ன வயதில் யாராவது ச,ரி,க,ம ... என்று சாதகம் பண்ணினாலோ, அல்லது ஊரில் பக்கத்து தெருவில் குடியிருந்த மேளகாரர், டம்மு, டும்முனு அடித்து (தவிலை தான் :))) ப்ராக்டிஸ் செய்வதைப் பார்த்தாலோ ரொம்ப பாவமா இருக்கும். ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று :))) வயதாக ஆக, நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று நினைத்து உண்டு, இன்று வரை.

அதுக்காக நம்ம புள்ளையவாவது இசை மேதையா ஆக்கலாம்னு பியானோ க்ளாஸ் சேர்த்தோம் .... கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.

சென்னை சபாக்கள் நிறம்பி வழிவதால், இங்க ஒரு கச்சேரி பண்ணலாம், யூ டியூபின் துணையுடன் :))

ஒரு கல்யாண வீட்டுக்குள்ள நுழையும் போது, டக்கடக்க ... என்று விரல் உருள எழும் ஒலியில், நம் மனம் கரைவது நிச்சயம். இல்லையா ?!! இங்க ஒரு வெளிநாட்டுக்காரர், நம்ம ஊருக்கு எப்படி தேடி வந்து, தவில் மேல் காதல் கொண்டு (இப்படி தான் சொல்லணும் அவரின் வாசிப்பு லயிப்பைப் பார்த்து), முறைப்படி கற்றுக் கொண்டு ... நீங்களே பார்த்து மகிழுங்கள்.



பன்னாட்டுக் கலைஞர்கள் ஒரு ட்ரூப்பா சேர்ந்து, பாடும் பாடலும், இசையும் அருமை.



நம்ம ஊரு ஆட்கள் இல்லாமல் கச்சேரியா ? :))) டூயட் படம் பார்த்ததிலிருந்து, கத்ரி கோபால்நாத் அவர்களின் பல்லாயிரக்கான ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். இதோ அவருடைய இசைக் காட்சி

Saturday, December 20, 2008

துளித் துளியாய்: 4 - சிலந்தியும் வலையும்


Photo: sheltoweetrace.com

முட்டி மோதி
விட்டம் ஏறி
மூலைகள் இணைத்து
வலைகள் பின்னி

அசையாப் பொருளாய்க்
காத்திருந்து
வலையில் விழும் இரை
உண்டு வளர்வாய்.

***

பென்டுலம் போலே
நூலில் ஆடி

வாலாய் நூலை
வளைத்து நெளித்து

குறுக்கும் நெடுக்கும்
குறும்புதிர் போலே

ஏற்ற இற‌க்க‌மில்லா(ம‌ல்)
இடைவெளி விட்டு

வ‌லையைப் பின்ன‌
எங்கு க‌ற்றாய் ?!

***

துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்

தூரிகை ஓவிய‌மாய்
துயிலும் தூளியாய்

துள்ளித் துள்ளி
வ‌லை பின்ன‌ ...

க‌ண்ணாடி நூலிழையில்
காண்போர் க‌ண்ப‌டும்

க‌லை ஒத்த‌ க‌ட்டுமான‌ம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!

***

ஓட்டுக் கூரையிலும்
வீட்டுத் தோட்ட‌த்திலும்

வ‌லை பின்னும்
க‌லை அறிய‌

உனைத் தொட‌ர்ந்தேன்
ப‌ல‌ முறை

எங்கு ஆர‌ம்பித்து
எப்ப‌டி முடித்தாய் என‌

க‌ண்ட‌தில்லை ஒரு முறையும்
இன்று வ‌ரை விய‌ப்பே !!!

***

ஊரு உல‌கெலாம்
தெரியுது வ‌லை - அதில்,
விஞ்ஞான மருத்துவங்கள்
விவாதக் கட்டுரைகள்,

அற்புத‌ங்க‌ள் ப‌ல‌கொண்ட‌
ஏராள‌ச் செய்திக‌ள்,
அன்றாட வாழ்வின்
அங்க‌மாய் ஆன‌துவே.

இது தான் இன்றைய நிலை
இப்ப‌டி ...
நாங்களும் பின்னூவோம் வலை !

***

Friday, December 19, 2008

வானின் நிறம் நீலம் - 14 - நிறைவுப் பகுதி !


Photo: concierge.com

ஃபுல்ல‌ர்ட‌ன் ஹோட்ட‌லில் கீழ்த‌ள‌த்தில், "ஹேய்ய்ய்ய்ய்...." என்று ஆட்ட‌ம் பாட்ட‌த்துட‌ன் க‌ளை க‌ட்டிய‌து அந்த‌ ஆண்டு, அலுவ‌ல‌க‌ ஆண்டு விழாக் கொண்டாட்ட‌ம்.

ம‌கேஷ், அப்ப‌ தான் அங்கு சேர்ந்த‌ புதிது. என்னோட‌ பி.எம்.க்கு சொந்த‌ம்னு நினைக்கிறேன். அவ‌ங்க‌ ரெண்டு பேருமே வெளியில் அதைக் காட்டிக்கிட்ட‌து இல்லை.

பேரு தான் பி.எம். முழுக்க‌ முழுக்க‌ எங்க‌ க‌ண்ட்ரோல் தான் ப்ராஜ‌க்ட் எல்லாம். அவ‌ரும் ரொம்ப‌ ஃப்ரென்ட்லி. நேர‌த்துக்கு வேலை முடிச்சிட்டோம்னா, மீதி நேரம் ஜாலி தான், அர‌ட்டை தான்.

எங்க‌ டீமே அப்ப‌டி இருக்க‌த‌ பார்த்து ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எல்லாம் பொறாமையா இருக்கும். வெளிப்ப‌டையாவே சில‌ர், உங்க‌ளுக்கு என்ன‌ப்பா கொறைச்ச‌ல் என்று ஆத‌ங்க‌ப்ப‌ட‌வும் செய்வார்க‌ள்.

ம‌கேஷ் ந‌ல்லா ஸ்பான்டேனிய‌சா பேசுவான். அவ‌ன் வ‌ந்தாலே க‌ளை க‌ட்டும். ந‌ம்ம‌ கிட்ட பேசிக்கிட்டு இருக்க‌வ‌ங்க‌ கூட‌, அவ‌ன் கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌. நாள் போக‌, போக‌ என‌க்கு ஒரு பொஸ‌சிவ்நெஸ் வ‌ந்திருச்சு.

ஆண்டுவிழா அர‌ங்கில், கேம் ஷோவில் ப‌ல‌ பெண்க‌ளும் அவ‌னுட‌ன் சேர்ந்து ந‌ட‌ன‌மாட‌ பிரிய‌ப்ப‌ட‌, என‌க்கு ஒரு வேக‌ம் வ‌ந்து, அவ‌னைப் பிடிச்சு த‌ர‌ த‌ர‌னு இழுத்து வெளியே வ‌ந்து, ச‌த்த‌மின்றி (நீண்ட) முத்த‌மிட்டேன்.

அன்று நிலை குலைந்த‌வ‌ன், எதுவென்றாலும் என்னிட‌ம் கேட்டு தான் செய்வான்.

ம‌கேஷ் ப‌ற்றி அண்ண‌னிட‌ம் சொல்ல‌. அவ‌ருக்கும், அண்ணிக்கும் ரொம்ப‌வே ச‌ந்தோச‌ம். தொலைபேசியில் ஜாடையாக சொல்லிய போது, அப்பா, அம்மாவிற்கு துளியும் விருப்ப‌மில்லை. அத‌னால் கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ட்டும் என்றார் அண்ண‌ன்.

நாள் செல்ல‌ச் செல்ல‌ இர‌ண்டு வீட்டாரும், அவர்கள் இஷ்டத்துக்கு அலையன்ஸ் பார்த்து ஃபோர்ஸ் ப‌ண்ண‌, இங்கேயே ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக் கொண்டோம். இதில் அண்ண‌னுக்கும், அண்ணிக்கும் துளியும் விருப்ப‌மில்லை.

அடிக்கடி என்னைப் பார்க்க வருகிறேன் என்று, நான் இல்லாத நேரங்களில் கூட வந்து, அண்ணியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். ஏதாவது சண்டையில் அண்ணி இதை சொல்லும் போதெல்லாம் அவங்க ஏதோ காரணத்துக்காக இப்படி சொல்றாங்களே என்று, மகேஷ் மேல் துளியும் சந்தேகம் இல்லை.

உறவில் கொஞ்ச‌ம் விரிச‌ல் விழ, நேரம் பார்த்து, "ந‌ம‌க்கென்று ஒரு வீடு இருந்தால் ந‌ல்லா இருக்குமே" என்றான் மகேஷ். 'பாசிர் ரிஸ்'ஸில் ஒரு வீடும் வாங்கினோம்.

அங்கு குடிபோன சில‌ மாத‌ங்க‌ளில், என் வ‌யிற்றில் ரோஷினியும், ம‌கேஷ் ம‌ன‌தில் ம‌ரிய‌மும் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்ந்தேன்.

இவ‌னுக்கு எங்க அலுவலகத்திலேயே இருக்கும், ம‌ரிய‌ம் கூட‌ முன்னரே தொட‌ர்பு இருந்திருக்குனும் தெரிஞ்ச‌து. ஒரு நாள், செமினாருக்கு போறவன், தற்செயலா என்னோட‌ தொலைபேசிய‌ மாத்தி எடுத்திட்டுப் போக‌, இவ‌னோட‌த நான் எடுத்துப் போக‌ வேண்டிய‌தாப் போச்சு.

என் வாய் சொல்ல‌க் கூசுது. அப்ப‌டி அசிங்க‌ அசிங்க‌மா டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப‌றா ம‌ரிய‌ம். நான் கூட‌ முத‌லில் த‌வ‌றுதலா அனுப்பி இருப்பானு பார்த்தால், ம‌கேஷ், ம‌கேஷ்னு ஒரே உருக‌ல்.

கொஞ்ச‌ நேர‌த்தில் ம‌கேஷ் கிட்ட‌ இருந்த என் போனில் இருந்து ஃபோன், "நிமி எங்க‌ இருக்க‌, போன‌ மாத்தி எடுத்து வ‌ந்திட்டேன்.... செக‌ன்ட் ஃப்ளோர்ல‌ இருக்கியா, அங்கேயே இரு, நான் வரேன்".

"ப‌ரவாயில்லை, எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்" என்றேன். "ஹிம்ம்ம் ... இல்ல இல்ல, இப்பவே வ‌ரேன்" என்று பரபரத்தான்.

எல்லாம் தெளிவாகி, என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.

முத‌லில் ம‌றுத்த‌வ‌ன், "இவ‌ளுக்கு தெரிஞ்சு போச்சு, இனி ம‌றுத்து இவ‌ள் என்ன‌ செய்து விட‌ப் போகிறாள்" என்று தைரிய‌மாய் என்னை எதிர்கொண்டான்.

ந‌ட‌க்கும் யாவையும் அண்ண‌னுக்கோ, அண்ணிக்கோ சொல்லாம‌லே இருந்தேன். இது மேலும் விரிச‌லை தான் ஏற்ப‌டுத்திய‌தே த‌விர‌ வேறெத‌ற்கும் உத‌வ‌வில்லை.

ச‌ண்டையும், ச‌ச்ச‌ர‌வுமாய் நாட்க‌ள் க‌ழிய, ரோஷிணியும் பிற‌ந்தாள். ச‌ரி இனியாவ‌து ம‌கேஷ் ச‌ரியாகிவிடுவான் என‌ப் பார்த்தால், வீட்டிற்கே ம‌ரிய‌த்தை கூட்டி வ‌ர‌ ஆர‌ம்பித்தான்.

எல்லை மீறி எல்லாம் செல்கையில், "இனி அவ‌ளா, நானா ? என்று முடிவு ப‌ண்ணிக்க‌. அப்ப‌டி அவ‌ தான்னா, இந்த‌ வீட்ட‌ விட்டு வெளிய‌ போயிடு" என்றேன்.

அங்க‌ ஆர‌ம்பித்த‌து அடுத்த‌ எரிம‌லை. "இந்த‌ வீட வாங்கும்போது நானும் காசு போட்டிருக்கேன். நீ வெளியே போ" என்றான்

அவ‌ன் ப‌ங்கு சொற்ப‌ ஆயிர‌ங்க‌ள். அதைத் த‌ந்துவிடுகிறேன், வெளியே போ என்ற‌த‌ற்கு அவ‌ன் ஒத்துழைக்க‌வில்லை.

உன்னால‌ முடியாது என்றால், என்னால‌யும் முடியாது என்று சொல்லி, ஒரு முடிவுக்கு வ‌ரும் வ‌ரை யாரு இங்க தங்க கூடாது என்று ஆளுக்கு ஒரு பூட்டை போட்டு, நான் என் அண்ண‌ன் வீட்டிலும், என் ம‌க‌ள் காப்ப‌க‌த்திலும் இருக்க‌லானோம்.

ச‌ந்த‌ர்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் ம‌கேஷ் தொல்லை த‌ர‌வே, வேலையை ராஜினாமா செய்தேன். அப்ப‌டியும் வெளியில் எங்காவ‌து பார்த்து இம்சித்துவிடுவான்.

இன்னிக்கு தான் அவ‌ன் கேட்ட‌ விவாக‌ரத்துப் பத்திரத்திலும், வீட்டுப் ப‌த்திர‌த்திலும் கையெழுத்துப் போட்டு விட்டு நிம்ம‌தியாய் இருக்கிறேன். இதை முன்னாடியே செய்திருந்தால் கொஞ்ச‌ம் என‌ர்ஜியாவ‌து இருந்திருக்கும்."

எல்லாம் சொல்லிக் களைத்து, தண்ணி தண்ணி என்று மீண்டும் ச‌ரிந்து செல்வாவின் தோளில் சாய்ந்தாள்.

சாயத் தோள் தந்த செல்வா, நீர் த‌ந்து, நிர்ம‌லாவிற்கு நல்ல வாழ்வும் த‌ந்தான்.


!!! முற்றும் !!!

Thursday, December 18, 2008

வானின் நிறம் நீலம் - 13


Photo: museums.com.sg

"குழந்தை இப்ப‌ ஒரு காப்ப‌க‌த்தில் வ‌ள‌ருது. யூ வோன் பிலிவ் ஐம் எ மாம் நௌ", என்று நிறுத்தினாள். உங்களை சந்தித்தது "டூ லேட் செல்வா" என்று அதிச‌யித்தாள் !!

"மேக‌ மூட்ட‌மா, கொஞ்ச‌ம் புரிஞ்சும், கொஞ்ச‌ம் புரியாம‌லும் மாதிரி இருக்கு. அப்போ, அன்னிக்கு ர‌யிலில் உங்க‌கூட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணின‌வ‌ர் உங்க‌ க‌ண‌வ‌ர் ! ச‌ரியா ?"

"அவ‌ர் இவ‌ர்னு, ஏன் ம‌ரியாதை எல்லாம் கொடுக்க‌றீங்க‌. ஆமா, அவ‌னே தான் !!!"

சாட்டைய‌டி போன்ற‌ தொனியில் நிர்ம‌லாவின் குர‌ல், அவ‌ளின் வேத‌னையை பிர‌திப‌லித்த‌து.

"நிர்ம‌லா, உங்க‌ளுக்கு ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லையே. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட‌ சொல்லுங்க‌. என்னால் முடிந்த உதவி செய்றேன்"

'இவ‌ன் என்ன‌ உத‌வி செய்றேன், உத‌வி செய்றேன் என்று சொல்லிகிட்டே இருக்கான். ந‌ம்ப‌லாமா ?'

"என்னை ந‌ம்ப‌லாம்ங்க‌ற‌துக்கு நான் என்ன‌ உத்திர‌வாத‌ம் த‌ர‌ணும், சொல்லுங்க‌" என்றான்.

'ம‌ன‌தைப் ப‌டிக்கிறானே ? எல்லா ஆம்பிளைங்க‌ளும் இப்ப‌டித்தானே ந‌ம் ம‌ன‌தைக் க‌ரைத்துவிடுகின்ற‌ன‌ர்'

"ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லை செல்வா. எல்லாம் முடிஞ்சு போச்சு." என்றாள்.

செல்வா விடுவ‌தாய் இல்லை. "இல்லைங்க‌, உங்க‌ முக‌ம் சொல்லுது ப‌ல‌ க‌தைக‌ள்" என்றான். "ச‌ரி, உங்க‌ளுக்கு இஷ்ட‌ம் இல்லை எனில் நான் தொல்லை ப‌ண்ண‌ விரும்ப‌வில்லை" என்று நிறுத்திக் கொண்டான்.

'பேச‌ணும் என்றும் இருக்கு. ஆனா இவ‌னை எப்ப‌டி ந‌ம்ப‌ற‌துனும் இருக்கு. என்ன‌ இது புதுக் குழ‌ப்பம்' என்ற‌ யோச‌னையில், யார் தோளிலாவ‌து சாய்ந்து அழ‌ வேண்டும் போல் இருந்தது.

முழுக்க‌ அலைந்து, மனமும் தளர்ந்து, உட‌ல் சோர்வுற்று, முறையாக‌ உண்ணாம‌ல், நேர‌ம் த‌வ‌றி அருந்திய‌ காஃபி, வ‌யிற்றை க‌ல‌க்கிய‌து நிர்ம‌லாவிற்கு. நெற்றியில் நீர் திர‌ள‌, க‌ண்க‌ள் இருட்டி ம‌ய‌ங்கி விழாத‌ குறை. சில‌ நொடிக‌ள் என்ன‌ ந‌ட‌க்கிதென்றே புரிய‌வில்லை அவ‌ளுக்கு.

"செல்வா, என‌க்கு என்ன‌வோ போல‌ இருக்கு, ப்ளீஸ், ஒரு டாக்ஸி பிடிங்க‌, என்ன‌ வீட்டில‌ ட்ராப் ப‌ண்ணிடுங்க‌, ஐ வான் டு டேக் ச‌ம் ரெஸ்ட்" என்று ச‌ரிந்து விழுந்தாள்.

ப‌ட்டென்று எழுந்த‌ செல்வா, கைத் தாங்க‌லாய் நிர்ம‌லாவைப் பிடித்துக் கொண்டான். பேர‌ர் பெண்ம‌ணியிட‌ம், த‌ண்ணீர் கொண்டு வ‌ர‌ச் சொன்னான். ச‌ரிந்த‌வ‌ளை ச‌ற்று நிமிர்த்தி விசிறி விட்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்த‌ன‌ரே அன்றி, யாரும் எதுவும் உத‌வி வேண்டுமா என‌க் கேட்க‌வில்லை.

"நிர்ம‌லா, கொஞ்ச‌ம் எழுந்திரிங்க‌ ... மெதுவா ந‌ட‌ந்து வாங்க‌ ... இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், இதோ டாக்ஸி ஸ்டான்ட் வ‌ந்திடும்" கைத்தாங்க‌லாய் அணைத்துச் சென்று, டாக்ஸியிலும் ஏ(ற்)றினான்.

"கொஞ்ச‌ம் பின் க‌ண்ணாடி க‌த‌வை திற‌ந்துக்க‌ட்டுமா, ஷீ நீட் ச‌ம் ஃப்ரெஷ் ஏர்" என்றான் ஓட்டுன‌ரிட‌ம்.

"லில் பிட் ஹான் ..." என்று எந்த‌ வித‌ உண‌ர்ச்சியும் இல்லாம‌ல் ஓட்டுன‌ர் சொன்னார்.

ச‌ட‌ச‌ட‌வென‌ காற்ற‌டிக்க‌, மெல்ல‌க் க‌ண்க‌ள் திற‌ந்தாள் நிர்ம‌லா.

வெளியே வான‌ம் ப‌ளிச்சென்று இருந்த‌து.

"செல்வா, தேங்க்ஸ் எ லாட் அன்ட் ஸாரி ஃபார் த‌ ட்ர‌பில்"

"என்ன‌ங்க‌ பெரிய‌ வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. இனி ஒரு வாட்டி ஸாரி சொன்னீங்க‌ன்னா, அப்புற‌ம், இப்ப‌டியே இற‌ங்கிப் போயிடுவேன்" என்று ப‌ய‌ம் காட்டுவ‌தாய் பாவ‌லா காட்டினான்.

"உள்ளூர‌ ர‌சித்தாள். உட‌னே அழுதாள்"

கட்டிடங்களும், மரங்களும், மனிதர்களும் பின்னோக்கிச் செல்ல, நிர்மலாவின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.

"ரொம்ப‌ நாளா ம‌ன‌சுக்குள்ளே வ‌ச்சு ஆர‌ப்போட்டுகிட்டு இருந்தேன். முடிய‌ல‌. யாருகிட்ட‌யாவ‌து சொல்லி அழ‌லாம் என்றால் அண்ண‌ன் தான். இப்ப‌ அவ‌னும் அண்ணி பின்னால‌."

"நீங்க‌ தைரியமா என் கிட்ட‌ ப‌கிர்ந்துக்க‌லாம் நிர்ம‌லா. மேல‌ சொல்ல‌லாம் என்றால் சொல்லுங்க‌ என்றான்"


தொட‌ரும் .....

Wednesday, December 17, 2008

வானின் நிறம் நீலம் - 12


Photo: farm4.static.flickr.com

"சில‌ நொடிக‌ளில், ச‌ரிங்க‌ உங்க‌ இஷ்ட‌ம்" என்றான்

'ச‌ரி ரொம்ப‌த் தொல்லை ப‌ண்ண‌ வேண்டாம் இவ‌னை' என்று, "எதுக்குங்க‌ உங்க‌ளுக்கு வீண் சிர‌ம‌ம், நானே அங்க‌ வ‌ர்றேன். 'டோம்ஸ் காஃபியில்' மீட் ப‌ண்ண‌லாம்"

முத‌ன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் ப‌ற‌ப்ப‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

"ம்...வ‌ந்து...ஐ ஹேவ் டு கோ டூ ராபிள்ஸ் திஸ் டைம். திஸ் இஸ் ஃபைன‌ல் ஃபார் ஸ்யூர்" என்று குழைவாய் விண்ண‌ப்பித்தாள்.

க்ரீச்ச்ச்ச் என்ற ப்ரேக்கில், சில‌ அடிக‌ள் இழுத்து நின்ற‌து டாக்ஸி. திரும்பி எல்லாம் பார்க்க‌வில்லை ஓட்டுன‌ர். "நாட் எனி மோ. பே மீ செவ‌ன் டால‌, தேட்டி சென்" க‌டுக‌டுத்த‌ குர‌லில் ஓட்டுன‌ர்.

'இது என்ன‌ இட‌ம். இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் இங்க‌ல்லாம் வ‌ந்த‌தே இல்லியே. சிங்க‌ப்பூர் குட்டியூண்டு தான், இருந்தாலும், முழுதும் பார்க்க‌ இய‌ல‌வில்லையே'. ஆனா ஒன்னு, அதே ஆரஞ்சுக் கலர் பஸ் ஸ்டாப்கள், ஹாக்கர் சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒன்றும் புரிய‌வில்லை நிர்ம‌லாவுக்கு. எதிர் திசையில் சென்று ம‌ற்றொரு டாக்ஸி பிடித்தாள்.

டோம்ஸில் அவ்வ‌ள‌வாக‌க் கூட்ட‌மில்லை. இருவ‌ர் அம‌ரும் மேசையை தேர்வு செய்து அம‌ர்ந்து கொண்டாள். ஆர்ட‌ர் கேட்ட‌ இள‌ம்பெண்ணிற்கு, "ஐம் வெய்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட், ஐ வில் கால் யூ, தாங்க்ஸ்" என்று அனுப்பி வைத்தாள்.

தொலைபேசியில் "செல்வா நான் டோம்ஸ் வ‌ந்திட்டேன், நீங்க‌ வேலை முடிச்சு வாங்க‌, ஒன்னும் அவ‌ச‌ர‌மில்லை, பை"

கைக‌ள் ப‌ர‌ப‌ர‌க்க‌, கால்க‌ள் குறுகுறுக்க‌ அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌ம், நிர்ம‌லாவின் எதிரில் செல்வா.

"ஹேய் என்ன‌து. ஆபீஸா இல்ல வீடா ?!! நென‌ச்ச‌ நேர‌ம் போறீங்க‌, வ‌ர்றீங்க‌."

"ரொம்ப‌ முக்கிய‌மா இப்ப‌ அதெல்லாம். ச‌ரி என்ன‌ சொல்ல‌ணும் ?"

"நான் இன்னும் ஒன்னும் சொல்ல‌லை, உங்க‌ளுக்கு தான் வெய்டிங்"

"அதான் வ‌ந்திட்டேன்ல‌ சொல்லுங்க‌"

கைய‌சைத்து வெய்ட்ர‌ஸ்ஸை அழைத்தாள் நிர்ம‌லா.

"இப்ப‌ சொல்றேன்" என்றாள்.

கிர்ர்ர்ர் என்று முறைத்தான் செல்வா

எஸ்ப்ர‌ஸோ, காப்புசீனோ, லாட்டே ...

"ம்...எது...சீக்கிர‌ம் சொல்லுங்க‌, பாவ‌ம் பொண்ணு நிக்குது பாருங்க‌" என்று உசுப்பேத்தினாள்.

"இர‌ண்டு லாட்டே, எக்ஸ்ட்ரா ஹாட் சொன்னார்க‌ள்."

"ந‌ல்ல‌ வேளை ம‌கேஷ் தொல்லை ஒழிஞ்ச‌து இன்னிக்கோட‌. என்கிட்ட‌ ஒன்னும் இல்ல‌ இல்லியா, இனி வ‌ர‌மாட்டான். ஆனா அண்ணி பழைய மாதிரி பேசுவாங்களா தெரியலையே ?!!" என்று நிறுத்தினாள்.

'அப்பாடா, லைன் க்ளிய‌ர்' என்று ம‌ன‌ம் குட்டிக் க‌ர‌ண‌ம் அடித்த‌து.

"என்ன‌வோ தெரிய‌ல‌ செல்வா, ம‌ன‌சுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு. யாருகிட்ட‌யாவ‌து பேசினா ரிலாக்ஸ்டா ஃபீல் ப‌ண்றேன். அண்ணன் கூட நான் சொல்வதை காதில் போட்டுக்க மாட்டார். இப்ப‌ யாருமே இல்லை, அதான் உங்க‌ கிட்ட‌ ... த‌ப்பா எடுத்துக்காதீங்க‌."

"ஓ.மை.காட். இன் ஃபாக்ட் சொல்ல‌ப் போனா, உங்க‌ள‌ முத‌ன்முத‌லில் பார்த்த‌ப் இருந்தே என‌க்கு பிடித்துவிட்ட‌து. அக‌ அழ‌கு ம‌ட்டும‌ல்லாது, உங்க‌ள‌து செய்ல‌க‌ளும் சேர்த்து. " "அத‌னால‌ ..."

"அத‌னால‌ ..."

"ஐ ல‌வ் யூ நிர்ம‌லா" என்று அவ‌ள் க‌ண்க‌ளை நோக்கினான்.

சோக‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால‌ அருவியாய் ச‌ட‌ ச‌ட‌வென‌ சிரிக்க‌லானாள் ....

"என‌க்கு ...ஏற்க‌ன‌வே ....க‌ல்யாண‌ம் ...ஆகிடுச்சுங்க ....செல்வா" என்று சிரிப்பினூடே விட்டு விட்டு சொன்னாள்.

சற்று அமைதியாகி, "ஒரு குழ‌ந்தை வேறு இருக்கு".... என்றாள்


தொடரும் ....

வானின் நிறம் நீலம் - 11


Photo: image14.webshots.com

முத‌ன் முறையாய் செல்வாவின் அக்க‌றை, பிடிப்ப‌தாய் (தேவைப்படுவதாய்) உண‌ர்ந்தாள்.

சில நொடிகளில்,

'ஐயோ, இந்த‌ ஆண்க‌ளின் ச‌க‌வாச‌ம் வேண்ட‌வே வேண்டாம். ஒரு எல்லையில் நிறுத்துவ‌து தான் ந‌ல்ல‌து. ம‌கேஷிட‌ம் ப‌ட்ட‌தே போதும்'.

"சாரி, 'ராஃபில்ஸ்' வேண்டாம் 'புக்கிட் பாத்தோக்' போங்க". என்றாள் ஓட்டுனரிடம்.

திரும்பி முறைப்ப‌து போல் பார்த்தார் ஓட்டுன‌ர். கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வேற‌ எங்காவ‌து சொல்லுவாளோ என்று அவ‌ர் முக‌த்தில் கிலி அப்பிய‌து.

"புக்கி பாத்தோக் ஆ, லேட்ட டோன் சேஞ் டூ ச‌ம் அத‌ ப்ளேஸ் ஓ.கே ஹான்..." என்று க‌ட்ட‌ளை இட்டார் ஓட்டுன‌ர்.

'போயா போயா' என்று ம‌ன‌துள் சொல்லி "யா ஸ்யூர்" என்றாள் திட‌மாய்.

க‌ண்ணாடி வ‌ழி வெளியே சிறிது நேர‌ம் வேடிக்கை பார்த்து வ‌ந்தாள். சில‌ ப‌ல‌ சிந்த‌னைகள், பின் செல்லும் பொருட்க‌ளோடு போட்டி போட்டு பிம்பங்களாய்ச் சென்ற‌ன‌. என்ன‌து இவ்ளோ நேர‌ம் ஆகியும் ஒரு ஃபோன் கூட‌வா வரலை என்று யோசித்து, பையிலிருந்து செல்லை எடுத்துப் பிரித்தாள். சைலன்ட் மோடில் இருந்தது செல்.

"1 மிஸ்ட் கால்" காட்டிய‌து திரை. என்ன‌து புது ந‌ம்ப‌ரா இருக்கு. திரும்ப‌ கால் ப‌ண்ண‌லாமா, வேண்டாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று சிவ‌ப்பு பொத்தானை அழுத்த‌, "1 வாய்ஸ் மெய்ல்" என்ற‌து செல்திரை. அழுத்திக் கேட்டாள். செல்வாவின் குர‌ல் ... "நிர்ம‌லா, உங்க‌ பெர்ச‌ன‌ல் விச‌ய‌த்தில‌ குறுக்கே வ‌ர்றேனு நினைக்காதீங்க‌. ஒரு ஆளுட‌ன் நீங்க‌ வாக்குவ‌தும் ப‌ண்ற‌ மாதிரியும் தெரிந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர் உங்க‌ளுக்கு ந‌ன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌வ‌ர் என்றும் புரிந்த‌து. ச‌ரினு விட்டுட‌ முடிய‌ல‌. கார‌ண‌ம், உங்க‌ முக‌த்தில் ஒரு வாட்ட‌மும், கோபமும் இருந்த‌து. அதான், உங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வினா, த‌ய‌ங்காம‌ என்கிட்ட‌ கேளுங்க‌, இதான் என் நம்ப‌ர், டேக் கேர்"

'அட‌ப் பாவிங்க‌ளா ... ஏன்டா ஒரு பொண்ணோட‌ ம‌ன‌ச‌ இப்ப‌டி நோக‌டிக்க‌றீங்க‌' என்று நொந்து கொண்டாள்.

'உண்மையாவே இவ‌ன் அக்க‌றை காட்டுகிறானா என்று ஏன் யோசிக்க‌ மாட்டேன்க‌ற‌' என்ற‌து ம‌ன‌ம்.

'இல்லை வேண்ட‌வே வேண்டாம். எல்லாம் போதும்'

'என்ன‌ போதும். எல்லோருமே ம‌கேஷ் மாதிரி இருப்பாங்க‌ன்ற‌து என்ன‌ நிச்ச‌ய‌ம்'

சில‌ நொடிக‌ள் யோசித்தாள். செல்லில் ...

"செல்வா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். உங்க‌ கிட்ட‌ சொல்ல‌லாமா, வேண்டாமா என்று தெரிய‌வில்லை. ஆனா ம‌ன‌சு கெட‌ந்து அடிச்சிக்குது"

'நானே உன் கிட்ட‌ ஒன்னு சொல்ல‌ணும் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா.' "ச‌ரி, எப்போ எங்கே பேச‌லாம் ?"

ம‌ணி பார்த்தாள், திருப்பி போட்ட ஏழாய், மணி ரெண்ட‌ரை காட்டியது.

"நீங்க‌ செர‌ங்கூன்ல‌ தான‌ இருக்கீங்க‌. அங்கேயே இருங்க‌, ஆபீஸ் முடிச்சு அஞ்சு அஞ்சரைக்கா நான் வ‌ர்றேன். அங்க‌ எங்காவ‌து மீட் ப‌ண்ண‌லாம். அதுவ‌ரைக்கும் முஸ்தாபா, ஹ‌னிஃபானு ஷாப்பிங்க்ல‌ இருங்க‌". என்றான்

"இல்ல‌ வேண்டாம். எங்காவ‌து லைப்ர‌ரில‌ மீட் ப‌ண்ண‌லாம்".

"ச‌ரி எந்த‌ லைப்ர‌ரி சொல்லுங்க‌ ?"

'எல்லாத்துக்கும் ச‌ரி என்கிறானே. உண்மையா ? ந‌டிக்கிறானா ??'

"இன்னிக்கு வேணாம். நாள‌ நாள‌ன்னைக்கு பார்க்க‌லாம்".

எதிரில் மௌனம்

தொடரும் ....

Tuesday, December 16, 2008

வானின் நிறம் நீலம் - 10

நாளைக்கு ஒன்று (அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒன்று) என்று விரிந்து சென்ற 'வானின் நிறம் நீலம்' தொடர் சில காரணங்களால் தொடர முடியாமல் போனதற்கு முதற்கண் மன்னிக்கணும்.

அதை மறக்காம ஞாபகம் வைத்து அக்கறையுடன், யோசனையும் சொன்ன ராமலஷ்மி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. முடிந்த வரையில் அவர்கள் யோசனையை (முழுத்தொடரையும் தட்டச்சிட்டு பாகங்களாகப் பதிவது) இனி வரும் தொடர்களிலும் நடைமுறை படுத்தப் பார்க்கிறேன். நேரம் தான் ஒத்துழைக்கணும் :))

இந்தத் தொடர் முழுதும் தட்டச்சிட்டு ரெடி. பாகங்கள் பிரித்து, இன்னும் மூன்று அல்லது நான்கு பாகங்களில் முடியும்.

recap
-----
நிர்மலா, அண்ணன் வீட்டில் தங்கிக் கொண்டு சிங்கையில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். நண்பர்களுடன் தங்கி சிங்கையில் வேலை பார்க்கும் செல்வா. சில காரணங்களால், அண்ணி வெறுக்க, மன வேதனையில் உழலும் நிர்மலா. பார்த்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி, செல்வாவின் அலுவலகத்திலேயே நிர்மலா சேர, செல்வா அவளின் அழகில் மயங்கி, அவளைப் பின் தொடர, ஏற்கனவே மகேஷ்ஷுடன் தொடர்பிருப்பதை பார்த்து அதிர்ந்து ...

பொறுத்த நெஞ்சங்கள் பலவற்றிக்கும் நன்றிகள் பல. மேல படிங்க, கருத்து சொல்லுங்க.

முழு கதையையும் வாசிக்க இங்கு க்ளிக் பண்ணுங்க‌

---

வானின் நிறம் நீலம் - Part 10


Photo: panoramio.com


"சரி ஃபார்ம கொடு"

"ஹ‌ன்ன்ன் ... ரோட்டுலயா ... வேண்டாம். எங்காவ‌து உட்கார்ந்து பேச‌லாம்"

"சொன்ன‌தையே திருப்பி திருப்பி சொல்ற‌, என‌க்குப் பிடிக்கலை"

"என‌க்குப் பிடிச்சிருக்கே. அந்த‌ வீடு பிடிச்சிருக்கு, ம‌ரிய‌த்தை பிடிச்சிருக்கு. நீ கையெழுத்துப் போட்டா தான் எல்லாமே ந‌ட‌க்கும் க‌ண்ணு."

வ‌ரும் ஆத்திர‌த்தில் அப்ப‌டியே ரோட்டில் அவ‌னைப் பிடித்து த‌ள்ளிட‌லாமா என்று கூட‌ யோசித்தாள் நிர்ம‌லா. சே, அந்த‌ பாவ‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்று ம‌ன‌ம் பின்வாங்கிய‌து.

வீர‌மாகாளி அம்ம‌ன் கோவில் அருகில் இருந்தன‌ர்.

எங்கேயாவ‌து உட்கார‌ணும், அவ்ளோ தானே. இங்கே உட்கார‌லாம் என்று அவனை (எதிர்)பாராது, கால‌ணிக‌ளை க‌ழ‌ட்டி, பாத‌ங்க‌ளை சுத்த‌ம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.

உச்சிகால‌ பூசை முடிந்து, உச்சி வெய்யிலுக்கு உள்ளே சில‌ர் குளிர்காய்ந்து கொண்டிருந்த‌ன‌ர். ஆள் அதிக‌ம‌ற்ற‌ ராம‌ர் ச‌ன்னிதியின் பின், கொட்டகையில் நிர்ம‌லாவும், ம‌கேஷும் அம‌ர்ந்த‌ன‌ர்.

"கொண்டா பேப்பரை" என்றாள்.

பேக் பேக்கிலிருந்து சில‌ தாள்க‌ளை உருவினான் ம‌கேஷ்

'செத்துத் தொல‌ ச‌னிய‌னே' என்று திட்டி "இந்தா பிடி, இனி ஒரு முறை கூட‌ என் எதிரில் வ‌ந்திடாத" என்று இரு கர‌ம் கூப்பி த‌லை குனிந்தாள்.

இவ்வ‌ள‌வு எளிதில் காரிய‌ம் முடியும் என்று ம‌கேஷ் எண்ண‌வில்லை.

நீ எப்ப‌வுமே ஸ்மார்ட் நிமி. இந்த‌ ம‌ரிய‌ம் ம‌ட்டும் குறுக்கே வ‌ல்லேன்னா இப்ப‌டி ஆயிருக்காது...

'இந்த‌ மாதிரி எத்த‌னை பேரு கிட்ட‌ சொன்னியோ, சொல்ல‌ப் போறியோ. ந‌ல்ல‌ வேளை என்னை விட்டியே அதுவே நான் செய்த‌ பாக்கிய‌ம்' என்று க‌ண்க‌ள் மூடி யோசித்தாள்.

இனி எதுவும் பேச‌ மாட்டாள் என, வெற்றி க‌ளிப்புடன் அங்கிருந்து ந‌க‌ர்ந்தான் ம‌கேஷ்.

வாய்க்கும், வ‌யிற்றுக்கும் இடையில் என்ன‌வோ செய்த‌து. இன‌ம் புரியாத‌ ஒரு சோக‌ம் அப்பிக் கொண்ட‌து. ச‌ன்ன‌தியில் சாய்ந்து க‌ண்மூடினாள். உல‌க‌மே சூறாவ‌ளியில் சுழ‌ல்வ‌து போல‌ இருந்த‌து. காற்றின் ச‌ட‌ச‌ட‌ப்பில் எல்லாம் பிய்த்துக் கொண்டு ப‌றந்த‌து. வீட்டுக் கூரைக‌ள், மர‌ங்க‌ள், வாக‌ன‌ங்க‌ள், மனிதர்கள் எனப் பாகுபாடு இல்லாம‌ல் எல்லாம் காற்றின் ஆதிக்க‌த்தில் சுழ‌ன்ற‌து. இடி இடித்து வானம், அழ‌த் தொட‌ங்கிய‌து. சொட் சொட் என்று கொட்ட‌கையில் இருந்து வ‌டிந்த‌ நீர், நிர்ம‌லாவின் மேல் விழ‌, ப‌ட்டென்று க‌ண்விழித்தாள். த‌ன‌க்காக‌ வான‌ம் அழுகிறதோ என‌ சிறிது ம‌கிழ்ந்தாள்.

துப்ப‌ட்டாவை த‌லைக்கு போர்த்திக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வ‌ந்து டாக்ஸி பிடித்தாள். 'புக்கிட் பாத்தோக்' என்று சொல்ல‌ வ‌ந்த‌வ‌ள், 'ராஃபில்ஸ் ப்ளேஸ்' என்றாள் டாக்சி ஓட்டுன‌ரிட‌ம் ...


தொடரும் .....

Monday, December 15, 2008

[வர|குறை]தட்சணை !


Photo: weblivecasting.com

பொண்ணு, கட்டின பொடவையோட (?!!) வந்தா போதும். வேறெதுவும் எனக்கு வேண்டாம். சும்மா அது வேணும், இது வேணும் என்று கேட்டு பொண்ணு வீட்டுக்காரங்கள தொந்தரவு பண்ணாதீங்க." தீர்க்கமாய் சொன்னான் அருண் (எ) அருணாசலம்.

அம்மா சொன்னாள். "அட‌ புரியாத‌வ‌னே, இந்த‌ கால‌த்தில‌யும் இப்ப‌டி ஒரு புள்ளையானு யாரும் அதிச‌யிக்க‌ மாட்டாங்க‌. மாறாக‌, உன் கிட்டயோ, அல்ல‌து நம்ம‌ வீட்டுல‌யோ ஏதோ கொறை இருக்குனு தான் நெனைப்பாங்க‌டா" என்று !!!

தொலைக்காட்சியில் ச‌ங்கீத‌ நிக‌ழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த‌ அப்பா, த‌லையை ஆட்டி ர‌சித்துக் கொண்டிருந்தார். வ‌ழ‌க்க‌ம் போல‌ அம்மாவின் சொல்லுக்குமாய் இருந்த‌து அது.

'இவ‌ங்க‌ திருந்த‌வே மாட்டாங்க‌' என்று பொது ஜ‌ன‌த்தையும் சேர்த்து திட்டினான். "என‌க்கு இதில் உட‌ன்பாடு இல்லை. நீங்க‌ இப்ப‌டித் தான் செய்ய‌ணும் என்றால், என‌க்குக் க‌ல்யாண‌மே வேண்டாம்."

இதுவ‌ரையில் அருண் சொல்லாத‌ வார்த்தையைக் கேட்ட‌ அம்மா, நிலைகுத்தின‌ தேர் போல‌ ஆடாது உறைந்தாள்.

"என்ன‌ க‌ம‌ல‌ம், உன் புள்ள‌ யாரையாவ‌து ல‌வ், கிவ் ப‌ண்றானோ ? இவ்ளோ ஸ்டராங்கா இருக்கான்" என்று ச‌ப்த‌மின்றி ம‌னைவியின் காதுக‌ளில் கிசுகிசுத்தார் லஷ்மணன்.

"இன்னும் மெதுவா பேசுங்க‌. அப்ப‌ தான் என் காதுக‌ளில் விழாது. ல‌வ் பண்ணா, உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ என‌க்கு என்ன த‌ய‌க்க‌ம். ந‌ம்ப‌வே மாட்டீங்களே, அம்மா நீயாவ‌து சொல்லேன் அப்பாவுக்கு" என்று சிடுசிடுத்தான் அருண்.

"அவ‌ என்ன‌த்த‌ சொல்ற‌து. அதான் முன்னரே சொல்லிட்டாளே. உனக்கு, ஃப்ரெண்ட்ஸ் தான் சரியில்லை. ஒவ்வொருத்தனையும் பாரு, ஏதோ பார்பர் ஷாப்ல பாதில அனுப்பிச்ச மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல். தெருவப் பெருக்கற மாதிரி கால்சட்டை. தலைமுதல், கால் வரை ஏதாவது வித்தியாசம் பண்றேனு வெவஸ்த கெட்டு திரியாறனுங்க. ஹீம்ம்ம்... நீயும் வித்தியாசம் பண்றேனு, அதை உன் கல்யாணத்தில் காண்பிக்க விரும்பற. அப்புற‌ம் உன் இஷ்ட‌ம்." என்று, இசைக் க‌ச்சேரியில் மெய்ம‌ற‌ந்தார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"அருண், உன‌க்குப் புரியாத‌ வ‌ய‌சில்லை. எங்க‌ கால‌த்தில் எல்லாம், பெத்த‌வ‌ங்க எதிரில் நிற்க‌ கூட‌ ப‌ய‌ப்ப‌டுவோம். அப்படி இருக்க‌, அவ‌ங்க‌ சொல்ற‌து தான் வேத‌ வாக்கு. இப்ப‌ கால‌ம் அப்ப‌டியா இருக்கு. பாரு, நாங்க‌ளே உன்னை எவ்வ‌ள‌வு சுத‌ந்திர‌மா வ‌ள‌ர்திருக்கோம். நாங்க‌ சொல்ற‌து இது தான். இப்ப இருக்கற நிலைமைல கொஞ்ச‌மாவ‌து டிமான்ட் ப‌ண்ணினா தான் ம‌திப்பு இருக்கும். கால‌ம் இதே போல‌வா இருக்க‌ப் போகுது. உன் கால‌த்தில், நீ என்ன‌ செய்ய‌ நினைக்க‌றியோ, அதைச் செய்" என்று முடித்தார் க‌ம‌ல‌ம்.

லீவு நாளும் அதுவுமா கொஞ்ச‌ நேர‌ம் வீட்டில‌ நிம்ம‌தியா இருக்க‌ விட‌மாட்டீங்க‌ளே. ச‌ரி ஏதோ ப‌ண்ணுங்க‌. ஆனா ஒன்னு. அவ‌ங்க‌ளா எதெது த‌ர்றேனு சொல்றாங்க‌ளோ அது போதும். அதை விட்டு டிமான்ட் ப‌ண்ணினீங்க‌ என்றால், அப்புற‌ம் அது தான் க‌டைசி பெண் பார்க்கும் ப‌ட‌ல‌மா இருக்கும்" என‌ எச்ச‌ரித்தான்.

த‌லைகுனிந்தே வ‌ந்தாள். முக‌ம் ச‌ரியாகத் தெரியவில்லை அருணுக்கு. குனிந்தே காஃபி ப‌ரிமாறினாள். குனிந்த‌ த‌லை நிமிராம‌ல் அடுக்க‌ளைக்குள் புகுந்தாள்.

"வாம்மா மின்ன‌ல்" ஜோக் ஏனோ ஞாப‌க‌ம் வந்தது, மெல்ல‌ச் சிரித்துக் கொண்டான். 'மின்ன‌லை விட‌ வேக‌மாக‌ அல்ல‌வா வ‌ந்து சென்றுவிட்டாள்.'

"பைய‌னோட‌ மேனிமொழி பார்த்தா புடிச்ச‌ மாதிரி தான் இருக்கு. அப்புற‌ம் என்ன‌, ம‌த்த‌தெல்லாம் பேசி முடிச்சிட‌லாமா ?" என்று வெண் மீசையை வ‌ருடி ஒரு பெரிசு ஆர‌ம்பித்து வைத்தார்.

"ஒரு நிமிஷ‌ம், நான் பொண்ணோட‌ கொஞ்ச‌ம் த‌னியா பேச‌ணும்" என்றான் அருண்.

ச‌ட‌ச‌ட‌க்கும் ச‌ருகுக‌ளாய் ச‌ள‌ச‌ள‌த்த‌து பெண் வீடு.

நாலைந்து குட்டிப் ப‌ச‌ங்க‌ள் பாதுக்காப்புட‌ன் ந‌ந்தினியின் அறை நுழைந்தான் அருண்.

"டேய் ப‌ச‌ங்க‌ளா, இங்கேயே இருங்க‌, நான் ஒன்னும் ந‌ந்தினிய‌ பிச்சுத் தின்னுட‌ மாட்டேன், ஓ.கே. ச‌ம‌த்தா இருந்தீங்க‌னா, ஆளுக்கு ஒரு சாக்லேட்" என்ற‌வுட‌ன், எல்லாம் அல‌ர்ட் ஆகி வாச‌ல் அருகிலேயே அம‌ர்ந்து கொண்ட‌ன‌ர்.

"ந‌ந்தினி குனிந்த‌ த‌லை நிமிர‌வேயில்லை"

அவ‌ள் அருகில் சென்று, ஜ‌ன்ன‌ல் ஓர‌ம் க‌த‌வுக‌ளில் லேசாய் த‌ட்ட‌, ம்ம்ம்... என்று நிமிர்ந்து நோக்கினாள்.

அல்ட்ரா மாடர்ன் என்றும் சொல்லமுடியாத, அடக்க ஒடுக்கம் என்று சொல்ல முடியாத ஒருவித அழகில் தெரிந்தாள் நந்தினி.

"க‌‌ட்டினால் உன்னை தான் க‌ட்டுவேன். க‌ட்டின‌ புட‌வையுட‌ன் நீ வ‌ந்தால் போதும்" என்று உண‌ர்ச்சிப் பிழ‌ம்பானான்.

வெளியில் வந்து, "பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. க‌ட்டின‌ புட‌வையுட‌ன் அனுப்புங்க, அது போதும் !" என்று பெற்றோருக்குக் காத்திராம‌ல் சொல்லியும் வைத்தான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பெண் வீட்டார். சிறிது நேர அமைதிக்குப் பின் "நான் ஒன்னு கேட்டா த‌ப்பா நெனைக்க‌ மாட்டீங்க‌ளே ?" என்றார் பெரிசு.

"சொல்லுங்க‌" என்றார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"பையனுக்கு கை, காலு எதும் குறை இல்லையே ? ம‌த்த‌ ச‌க‌வாச‌ம் ?!! உங்க‌ வீட்டுல‌ யாருக்காவ‌து மெடிக்க‌ல் ப்ராப்ள‌ம் ?"

ஒன்னு என்று சொல்லி ஒன்ப‌துக்கும் மேல் கேள்விக‌ளை அடுக்கிக் கொண்டே போனார் பெரிசு.

"இந்த‌க் கால‌த்துப் ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் இன்ஸ்ட‌ன்டா ந‌ட‌க்க‌ணும். அதான் சொல்லித் தானே கூட்டி வ‌ந்தோம். நீ என்ன‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை மாதிரி, வித்தியாச‌ம் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று... இப்ப‌ பாரு, வீராப்பா எழுந்து வ‌ந்தாச்சு" என‌ வ‌ழிமுழுக்க‌ தாயும், த‌ந்தையும் ம‌ன‌ம் குமுறின‌ர்.

"ச‌ரி உங்க‌ இஷ்ட‌ம் போல‌ ஒரு பொண்ணை பாருங்க‌" என்று யோச‌னையில் ஆழ்ந்தான் அருண்.

Friday, December 12, 2008

மின்னல் கவிதைகள்: 2 - மாடு மேய்க்கப் போகையிலே


Photo: wikimedia.org

மாடு மேய்க்கப் போகையில‌
மந்தகாசக் குரலினிலே
பாட்டெடுத்து நீர்பாட‌
பாரெலாம் கேக்குதையா !

ஓடோடி வ‌ரும் என்னை
உயிராய் எதிர் பார்ப்பீரு
உத‌ட்டோர‌ம் சின்ன‌தாய்
புன்முறுவ‌ல் உதிர்ப்பீரு.

க‌ட்டிக்க‌லாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க‌ என்றேன்.
தொட்டுக்க‌லாம் என்ற‌த‌ற்கோ
தேர்வை முடிக்க‌ சொன்னேன்.

ப‌டிப்பும் முடிச்சீரு
ப‌ய‌ண‌ம் ப‌ற‌ந்தீரு
ப‌ட்டிக்காட்டுப் பெண் ம‌ன‌தை
க‌ட்டிப்போட்டுச் சென்றீரு.

காடு மேடெல்லாம்
காவ‌ல் காத்து நானிருந்தேன்
க‌ட்டிக்க‌ என்றாவ‌து ...
கறுத்த‌ ம‌ச்சான் வ‌ருவாருன்னு !!

வ‌ருஷ‌ம் ப‌ல‌ ஆகிப் போச்சு ...
காடும் இல்லை, மேடும் இல்லை
கான‌கத்தில் ம‌ர‌மும் இல்லை
கானக்குரல் ஒலியும் இல்லை.

எங்கே இருக்கீரு ?
இன்று வ‌ரை சேதியில்லை - உம‌க்கு,
புள்ளை குட்டி இருக்க‌ற‌தா
புளுகுறாக ஊருக்குள்ளே.

பாத‌க‌த்தி நான் இங்கே
ப‌ரித‌விச்சு நிக்க‌ற‌னே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!

Thursday, December 11, 2008

உத்தரவின்றி உள்ளே வா !


Photo: inmagine.com

"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"

கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது.

கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள்.

'ம்... இவளென்ன சிரித்துச் செல்கிறாள்'. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான்.

"டேய் ... உன்னைத் தான் ... பகல் கனவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்த‌தில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில், சரிந்து யோசனையில் இருந்த‌ ஜீவா சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

ரயில் கிளம்பும் முன் இருக்கும் பரபரப்பில் இருந்தது வகுப்பறை. சள சள வென ஒரே பேச்சுக் குரல்கள். இங்கும் அங்கும் சிலர் நடந்தோடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் கல்லூரி. முதுகலை கணிப்பொறி இரண்டாம் ஆண்டு. முதலில் ஹெச்.ஓ.டி. வந்து, பொதுவாக‌ சில செய்திகள் சொல்லி விட்டுச் சென்றார். பலர், பலருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், பல புதுமுகங்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

"ஃபர்ஸ்ட் இயர் என்று நினைக்கறேன்" என்றான் ஜீவா.

"டேய் நாம இப்ப செகண்ட் இயர்" என்றான் விக்கி.

"அத சொல்லலடா, அவள சொல்றேன்"

"எங்களுக்கும் புரியாம‌ இல்ல‌ ... விள‌க்க‌ம் வேற‌ சொல்ல‌ வ‌ந்திட்டான்டா .. டேய் .. டேய் .. எல்லாம் இங்க‌ வாங்க‌" என்று விக்கி கூவ‌, குவிந்த‌ தாம‌ரை மொட்டாய் வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள்.

என்ன ??? என்ன ??? என்று எல்லோர் க‌ண்க‌ளிலும் குறுகுறுவென‌ ஒரு ஆவ‌ல்.

"சொல்றா விக்கி ... மேட்டர் என்னா ?" என்றாள் ராக‌வி.

"என்ன‌ மாமே, 'இன்னிக்கு குளிச்சிட்டு வ‌ந்திட்டேன்' என்று சொன்னே ... ம‌வ‌னே ர‌த்த‌த்தில‌ குளிப்பாட்டிருவேன்" மிர‌ட்ட‌லாய் மோபினின் குர‌ல்.

"ப்ளீஸ், இன்னிக்காவ‌து நான் சொல்ற‌த‌ ந‌ம்புங்க‌டா" கெஞ்சும் குர‌லில் விக்கி. "ந‌ம்ப‌ ஹீரோ, அதான் க‌ல‌ர்ப‌ட‌க் க‌தாநாய‌க‌ன், இது நாள் வரைக்கும் இல்லாம, ந‌ம்ம‌ ஜீவா, இப்ப ஜில்பான்ஸ்ல‌ இற‌ங்கிட்டான். பொண்ணு யாருனா ..."

ச‌ட‌ன் ப்ரேக் போட்ட‌ ர‌யில் வ‌ண்டியாய் இழுத்து நிறுத்தினான்.

"வாத்தி யாராவ‌து வ‌ருமுன், சீன‌ முடி ராசா ... நேர‌ம் ஆவுதில்ல‌ ..." அனைவ‌ரின் ம‌ன‌திலும் இவ்வ‌ரிக‌ள்.

"யாருனா ... யாருனா .. யா..." என்று சுருதி குறைத்தான் விக்கி. மார்போடு அனைத்த‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன், வெளிர் ப‌ச்சைப் புட‌வையில், (க‌ண்க‌ளுக்கு மேட்சிங்காக‌ இருக்கும்) உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.

'அட‌ ந‌ம்ம‌ க்ளாஸ் தானா ?!' என்று யோசிக்கும்போதே, ஆசிரியருக்கான மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து, "குட் மார்னிங், ஐ ஆம் ஸ்ருதி ..." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, விக்கியும், ஜீவாவும் உறைந்து தான் போனார்க‌ள்.

"இங்க திருச்சில, செயின்ட் ஜோச‌ப்பில் முதுக‌லை க‌ணிப்பொறி. பின் சென்னையில் சில‌ மாத‌ங்க‌ள் வேலை. ஆசிரிய‌த் தொழிலின் மீது ஆரம்பத்தில் இருந்தே ப‌ற்று. அத‌னால் வேலையைத் துறந்து இங்கு வ‌ந்துவிட்டேன்" என்று சுருதி பிஸ‌காம‌ல் ஸ்ருதி சொல்லிக் கொண்டே போக‌, இவை எதும் ஜீவாவின் காதுக‌ளில் விழுந்த‌ன‌வாக‌த் தெரியவில்லை.

"ம‌ச்சான், சும்மா சொல்ல‌க் கூடாது ... உன் லெவ‌லே த‌னி தான். அவங்க டீச்ச..ரா..மா ... சும்மாவே மார்க் நல்லா வாங்குவோம், இதில இவங்கள வேற பகச்சிகிட்டோம் அவ்ளோ தான். இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌லபா." என்று ச‌ற்று த‌ள்ளி அம‌ர்ந்தான் விக்கி.

"இருக்கட்டுமே ... நம்மை விட‌ ஒரு வ‌ய‌சு ... மிஞ்சிப் போனா ரெண்டு வ‌ய‌சு தான் கூட‌ இருக்கும் ... இதெல்லாம் ஒரு பிர‌ச்ச‌னையா. இன்னிக்கு சாய‌ந்திர‌ம் க‌ல்லூரி விட்டுப் போகும் போது, அவ‌சிய‌ம் இவ‌ கிட்ட‌ பேச‌ப் போறேன் பாரு. கூட‌ நீ வர்ரே" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிமுடித்தான் ஜீவா.

"டேய் நான் மார்க்க‌ ப‌த்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா வ‌ய‌ச‌ப் ப‌த்தி பேசற. உன் புரியாத விளையாட்டுக்கு என்னை ஏன் பலிகடா ஆக்கறே" என்று விழி பிதுங்கினான் விக்கி.

'பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்த‌க் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த‌ முகம் கொண்ட‌‌
செம் மேனிப் பெண்ண‌ழகி

காந்தமாய் எனை ஈர்த்த‌
பூனைக் க‌ண்ண‌ழ‌கி.'

என்று மெதுவே விக்கியின் காதுகளில் பாடினான் ஜீவா.

"ச‌ரியாப் போச்சு ... நீ திருந்த‌ மாட்ட‌டா, போ க‌ன‌வுல‌க‌ க‌ன்டினியூ ப‌ண்ணு, நான் பாட‌த்தை க‌வ‌னிக்க‌றேன்." என்றான் விக்கி

"குட் மார்னிங்க், குட் மார்னிங்க் ... ப‌ச‌ங்க‌ளா எப்ப‌டி இருக்கீங்க‌ ... மன்னிக்கணும், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. விடுமுறை எல்லாம் எப்ப‌டி இருந்துச்சு" என்ற‌வாறு உள்ளே வ‌ந்தார் க‌ணித‌ ஆசான் ச‌பார‌த்தின‌ம்.

அடித்து பிடித்து, முட்டி மோதி கிடைத்த‌ இட‌த்தில், ஜீவாவின் அருகில் அம‌ர்ந்தாள் ஸ்ருதி.

சிறு பரபரப்புக்குப் பின், ர‌யில் சென்ற‌வுட‌ன் ஏற்ப‌டும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து அங்கே.

ஆசானை முகம் பார்த்தாலும், 'என்ன நடக்குது இங்கே' என மனம் பக்கத்தில் இருந்த ஸ்ருதியைப் பார்த்தது. 'விக்கியை நோக்கி என்னடா, என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே' என்றும் முறைத்தது.

ஆட்காட்டி விரலை உயர்த்தி, ஒரு கண்ணைச் சிமிட்டினாள் ஸ்ருதி விக்கியைப் பார்த்து.

"டேய் என்னடா" என்று முறைத்தான் ஜீவா.

"ஃபர்ஸ்ட் இயர் சென்னையில முடிச்சிருக்கா, அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, சொந்த ஊருக்கே எல்லோரும் வந்துட்டாங்களாம். இவள ஹாஸ்டல்ல இருக்க சொல்லிருக்காங்க. முடியாதுனு அப்பா பின்னாடியே வந்துட்டாளாம்.

எங்க தெரு தான். இந்த லீவு முழுக்க இங்க தான் இருந்தா. இவ கிட்ட‌ பேசப் பேச, உன்னைப் மாதிரி ஒருத்தன தான் தேடிட்டு இருக்கானு தோணுச்சு. முதலில் எனக்கும் காதல் எண்ணம் இருந்தது. என் கிட்ட என்ன பழகினாலும், ஒரு டிஸ்ட‌ன்ஸ் மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌தை நானும் உண‌ராம‌ல் இல்லை. அத‌னால் ஒதுங்கிட்டேன்.

ஃப்ரெண்ட்ஸ் ப‌த்தி பேசும் போதெல்லாம், உன்னைப் ப‌த்தி சொல்ல‌ச் சொல்ல‌ .. அப்ப‌டியா ... இந்த‌ வ‌ய‌சு வ‌ரைக்கும் யாரையும் காத‌லிக்க‌லையா ?? த‌ம், த‌ண்ணி எதுவும் கிடையாதா ?? ரொம்ப‌ ஜோவிய‌லான‌ டைப்போ ?? என்றெல்லாம் ஆர்வ‌மா கேட்டுட்டிருப்பா.

உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்கா, லீவில் ஒரு நாள் ம‌லைக் கோட்டைக்கு போனோமே. நானும், நீயும் ம‌ட்டும் இல்லை. ஸ்ருதியும் வ‌ந்திருந்தா. உன்னைப் பார்க்க‌ணும் என்றாள், அதான். தப்பித்தவறி கூட பக்கத்தில வந்திராத என்று உத்தரவாதம் வாங்கித் தான் வரச் சொன்னேன்.

இது போல பட இடங்கள், பல சந்தர்ப்பங்களில் உன்னை தொடர்ந்து, உன்னை பிடிச்சும் போச்சு அவளுக்கு. முத‌ன் முத‌ல் உன்னை நேரில் ச‌ந்திக்குபோது ஒரு ஷாக் கொடுக்க‌ணும் என்று சொன்னா. அதான் இந்த 'டீச்ச‌ர்' நாட‌க‌ம்.

நேரம் இருந்தா உன்னை எழுந்திருக்க‌ சொல்லி கேள்வி எல்லாம் கேட்க‌லாம் என்று திட்ட‌ம். அதுக்கு கொடுப்பினை இல்லாமப் போச்சு. இருந்தாலும் ஆப‌ரேஷ‌ன் ச‌க்ஸ‌ஸ்" என்று சொல்லி முடித்தான் விக்கி.

விக்கித்து ல‌யித்திருந்தான் ஜீவா.


மார்ச் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Wednesday, December 10, 2008

மின்னல் கவிதைக‌ள்: 1 - கழுத்துக் கறுப்பேறி


Photo: static.panoramio.com

கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.

பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.

சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?

வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.

கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,

உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?

மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான‌ வச்சிக்கடி,

ம‌திம‌ய‌ங்கிக் கிறங்கையிலே
மொத்த‌மா வளைச்சுக்க‌டி !!!

Monday, December 8, 2008

நான் சிரித்தால் தீபாவளி

சென்ற சனிக்கிழமை எங்க கிராமத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பரேட். முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரின் முகத்திலும் ஒரு உற்சாகம். தனி மனிதராகவோ, பர்சனல் டீமாகவோ, பள்ளிக் குழந்தைகள் குழுவாகவோ, அல்லது நிறுவனங்களின் குழுவாகவோ ... அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வண்ண வண்ண ஆடைகள், அலங்கார வண்டிகள், ஆடிப்பாடும் சிறுவர்கள், மிட்டாய்கள் தூவிச் செல்லும் பெரியவர்கள்.

இந்தியாவிலும், சிங்கையிலும் இருந்த வரையில், கிறுஸ்டியானிட்டி என்றால், எங்கே நம்மையும் மதம் மாத்திடுவாங்களோ என்ற நினைப்பு கூடவே இருக்கும், அது சார்ந்த மனிதர்களுடன் பழகும்போது. கறுப்பு வெள்ளை உடுப்பில் அந்நிய தேசத்தார் நம் பக்கம் வந்து பேச்சுக் கொடுப்பர். பொது நல விசாரணைக்குப் பின், மெதுவே மதம் சார்ந்து பேச்சு செல்லும், முடிந்த வரையில் இங்கு பை சொல்லிவிடுவேன்.

வேடிக்கையாக என் நண்பன் ஒருவனின் செயல் இன்று நினைத்தாலும் ஆச்சரியம் தரும். இவனிடமும் இருவர் ரயிலில் பேச்சுக் கொடுத்து வந்து, இந்த வார இறுதியில், இந்த சர்ச்சில், இந்த நிகழ்ச்சி இருக்கு, வந்து தான் பாருங்களேன் என்றிருக்கின்றனர். அவனோ, ஒரு கோவில் முகவரி சொல்லி, இங்கு, இத்தனை மணிக்கு ஒரு நிகழ்ச்சி, நீங்க வந்து பாருங்க என்றிருக்கிறான். அவர்கள் இருவரும் இவ‌னுக்கு பை சொல்லிக் கிள‌ம்பிவிட்ட‌ன‌ராம்.

அமெரிக்கா வரும் முன் வரை, இங்கும் மதம் சார்ந்து தான் கிறிஸ்டியானிட்டி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. மதத்திற்கும் அப்பாற்பட்டு, ஒரு கலாச்சர உணர்வு தான் கிடைக்கிறது. ஊர்வலம் கூட ஒரு மதம் சார்ந்த ஊர்வலம் போல் அல்லாது, கலாச்சார ஊர்வலமாகவே தோன்றியது. அத்தனை வண்டிகள், குழுக்களிலும் கூட மதம் சார்ந்த படங்கள் ஒன்று கூட இல்லை.

வித விதமாய் குழுக்கள் ஊர்திகளில் வந்தாலும், எங்களைக் கவர்ந்த சில ...

கை படப் பெட்டியில் படம் பிடித்துக் கொண்டே இருந்த போது, சட்டெனக் கவர்ந்தது ஒரு ஊர்தியில் எழுதியிருந்த வாசகம். "மிஸ் நார்த் வெஸ்ட் ஆர்க்க‌ன்ஸா". அவர் கையில் இருந்த குட்டி நாய்க்குட்டியும் கூட அழகாய் இருந்தது :)) அட‌ அழ‌கிக‌ள் கூட‌ க‌ல‌ந்துக்குவாங்க‌ளா என‌ அதிச‌யிக்க‌, தொட‌ர்ந்து, "மிஸ் பென்ட‌ல்வில்", "மிஸ் பென்ட‌ன் கௌன்ட்டி", "மிஸ் ..." எனத் தெருவாரியாக (கொஞ்சம் மிகைப் படுத்தியிருக்கிறேன் :)) வ‌ரிசையாய் அழ‌கிக‌ள் ஊர்திக‌ளில்.

நாய்(க்குட்டி)கள் பிடித்த படி ஒரு தொண்டு நிறுவனக் குழு உறுப்பினர்கள். ம்ம்ம். இதுவும் வித்தியாசமா இருக்கே எனப் பார்த்தால், அவற்றின் சட்டை (போன்ற உடை)யில் "அடாப்ட் மீ" என வாசகம்.

எங்கள் மூத்த மகன் பள்ளியிலிருந்து "ஸ்வாம்ப் பேன்ட்" என்ற இசைக் குழு. நாற்பதுக்கும் மேல் குழந்தைகள். ரெகார்டர் எனும் (புல்லாங்குழல் போன்றது) வாத்தியத்தில் ஐந்தாறு கிறிஸ்துமஸ் பாடல்கள் ஊர்வ‌ல‌த்தில் இசைக்க‌.

ஒன்ப‌த‌ரைக்கெல்லாம் மைதான‌த்துக்கு வ‌ந்துவிடுங்க‌ள் என‌ப் ப‌ள்ளியில் இருந்து அறிவிப்பு வ‌ந்திருந்த‌து. பைய‌னுக்காக‌ ச‌னிக்கிழ‌மை காலைத் துயிலைப் புற‌க்க‌ணித்து சீக்கிர‌ம் எழுந்து தயாரானோம். குளிர் என்றால் அப்படி ஒரு நடுக்கம். கோட் எல்லாம் போட்டு நமக்கே நடுக்கம் தாங்கலை. பையன் நாலைந்து உடை அடுக்குகள் தாண்டி, பேன்ட் டிஷ‌ர்ட் போட்டு வந்தான். டிஷ‌ர்ட் வெளிய‌ தெரிய‌ணுமாம்.

அவ‌ங்க‌ இசை ஆசிரியையிட‌ம், செக்-இன் ப‌ண்ணி, பையனை அவன் டீமில் விட்டு, அங்கு கொஞ்ச‌ நேர‌ம் மைதான‌த்தை நோட்ட‌ம் விட்டோம். அப்பப்பா என்ன‌ ஒரு கூட்ட‌ம். எல்லா டீமும் தயார‌கிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர் ஊர்வ‌ல‌த்திற்கு. அதைப் பார்த்து என் ம‌க‌ளுக்கு ஒரே வ‌ருத்த‌ம். நானும் அண்ணா கூட‌ப் போறேன் என‌ப் பிடிவாத‌ம் :((

இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பண்டிகை நாள். ஆங்காங்கே பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து, ஆடிப் பாடி மகிழும் பண்டிகை. குழந்தைகளின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு, என்ன பரிசு நம்ம வீட்டில் நமக்குக் காத்திருக்கிறது என. சாண்ட்டா எங்கே அதை ஒளிச்சு வ‌ச்சிருப்பாரு என‌. இங்கே வ‌ள‌ர்வ‌தால் என்ன‌வோ ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு ம‌ன‌தில் ஒரு ஏமாற்றம், கேள்விக‌ள். "ஏன் நாம‌ கிறிஸ்தும‌ஸ் கொண்டாடுவ‌து இல்லை, எதாச்சும் கிஃப்ட் வாங்கி குடுப்பீங்க‌ளா ?, என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் அங்க போறாங்க, இங்க போறாங்க (தாத்தா பாட்டி வீடுகள்). நாம் ஏன் எங்கேயும் போவதில்லை" என்றெல்லாம்.

ஊர்வலம் முடிவில் "ஓல்ட் ஹை" பள்ளியில் வந்து பையனை பிக்கப் செய்து கொண்டோம்.

மெர்ரி கிறிஸ்மஸ் என்று பலரும் பலருக்கும் சொல்லிய வண்ணம், ஊர்வ‌ல‌ம் முழுதும், ஏராளமான கிறிஸ்தும‌ஸ் பாட‌ல்க‌ள். எல்லோரும் பாடுகிறார்க‌ள்.

இங்கே, மனதில் சில கேள்விக் கணைகள் !!! ந‌ம் ஊரில் இல்லாத பண்டிகைகளா ? அதற்கு விடாத விடுமுறைகளா ? தீபாவ‌ளிக்கோ, பொங்க‌லுக்கோ சிற‌ப்புப் பாட‌ல்க‌ள் ஏதாவ‌து இருக்கிற‌தா ? இருந்தால் அநேகருக்குத் தெரியாமல் போனது ஏன் ? இங்கே "ஜிங்கில் பெல்ஸ் ..." என்று ஆர‌ம்பித்தால் பிஞ்சுக்க‌ள் முத‌ல் பெரியவ‌ர் வ‌ரை த‌லையாட்டிப் பாட‌ முடிவ‌து எப்ப‌டி ?

என‌க்குத் தெரிந்து "நான் சிரித்தால் தீபாவ‌ளி" என்று நாய‌க‌ன் ப‌ட‌த்தில் வரும் பாட‌ல் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து !!!

சிவாவும் பள்ளிக் குழுவினரும், பாடல் ஒத்திகை பார்க்கும் காட்சி:

Friday, December 5, 2008

சிலந்திக்கும் இருக்கு வாலு (குழந்தைகள் கவிதை)


Photo: medicalimages.allrefer.com

குட்டிச் சிலந்திக்கு
எட்டுக் காலு.

கொழு கொழு சிலந்திக்கும்
எட்டுக் காலு.

சிலந்திக்கும் இருக்குது
நீள வாலு.

வலை பின்ன உதவும்
நூல் வாலு.

தத்தியும் தாவியும்
நடக்கும் பாரு.

பிறர் தொட்டால் பயந்து
ஏறிடும் சுவரு.