Monday, December 8, 2008

நான் சிரித்தால் தீபாவளி

சென்ற சனிக்கிழமை எங்க கிராமத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பரேட். முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரின் முகத்திலும் ஒரு உற்சாகம். தனி மனிதராகவோ, பர்சனல் டீமாகவோ, பள்ளிக் குழந்தைகள் குழுவாகவோ, அல்லது நிறுவனங்களின் குழுவாகவோ ... அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வண்ண வண்ண ஆடைகள், அலங்கார வண்டிகள், ஆடிப்பாடும் சிறுவர்கள், மிட்டாய்கள் தூவிச் செல்லும் பெரியவர்கள்.

இந்தியாவிலும், சிங்கையிலும் இருந்த வரையில், கிறுஸ்டியானிட்டி என்றால், எங்கே நம்மையும் மதம் மாத்திடுவாங்களோ என்ற நினைப்பு கூடவே இருக்கும், அது சார்ந்த மனிதர்களுடன் பழகும்போது. கறுப்பு வெள்ளை உடுப்பில் அந்நிய தேசத்தார் நம் பக்கம் வந்து பேச்சுக் கொடுப்பர். பொது நல விசாரணைக்குப் பின், மெதுவே மதம் சார்ந்து பேச்சு செல்லும், முடிந்த வரையில் இங்கு பை சொல்லிவிடுவேன்.

வேடிக்கையாக என் நண்பன் ஒருவனின் செயல் இன்று நினைத்தாலும் ஆச்சரியம் தரும். இவனிடமும் இருவர் ரயிலில் பேச்சுக் கொடுத்து வந்து, இந்த வார இறுதியில், இந்த சர்ச்சில், இந்த நிகழ்ச்சி இருக்கு, வந்து தான் பாருங்களேன் என்றிருக்கின்றனர். அவனோ, ஒரு கோவில் முகவரி சொல்லி, இங்கு, இத்தனை மணிக்கு ஒரு நிகழ்ச்சி, நீங்க வந்து பாருங்க என்றிருக்கிறான். அவர்கள் இருவரும் இவ‌னுக்கு பை சொல்லிக் கிள‌ம்பிவிட்ட‌ன‌ராம்.

அமெரிக்கா வரும் முன் வரை, இங்கும் மதம் சார்ந்து தான் கிறிஸ்டியானிட்டி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. மதத்திற்கும் அப்பாற்பட்டு, ஒரு கலாச்சர உணர்வு தான் கிடைக்கிறது. ஊர்வலம் கூட ஒரு மதம் சார்ந்த ஊர்வலம் போல் அல்லாது, கலாச்சார ஊர்வலமாகவே தோன்றியது. அத்தனை வண்டிகள், குழுக்களிலும் கூட மதம் சார்ந்த படங்கள் ஒன்று கூட இல்லை.

வித விதமாய் குழுக்கள் ஊர்திகளில் வந்தாலும், எங்களைக் கவர்ந்த சில ...

கை படப் பெட்டியில் படம் பிடித்துக் கொண்டே இருந்த போது, சட்டெனக் கவர்ந்தது ஒரு ஊர்தியில் எழுதியிருந்த வாசகம். "மிஸ் நார்த் வெஸ்ட் ஆர்க்க‌ன்ஸா". அவர் கையில் இருந்த குட்டி நாய்க்குட்டியும் கூட அழகாய் இருந்தது :)) அட‌ அழ‌கிக‌ள் கூட‌ க‌ல‌ந்துக்குவாங்க‌ளா என‌ அதிச‌யிக்க‌, தொட‌ர்ந்து, "மிஸ் பென்ட‌ல்வில்", "மிஸ் பென்ட‌ன் கௌன்ட்டி", "மிஸ் ..." எனத் தெருவாரியாக (கொஞ்சம் மிகைப் படுத்தியிருக்கிறேன் :)) வ‌ரிசையாய் அழ‌கிக‌ள் ஊர்திக‌ளில்.

நாய்(க்குட்டி)கள் பிடித்த படி ஒரு தொண்டு நிறுவனக் குழு உறுப்பினர்கள். ம்ம்ம். இதுவும் வித்தியாசமா இருக்கே எனப் பார்த்தால், அவற்றின் சட்டை (போன்ற உடை)யில் "அடாப்ட் மீ" என வாசகம்.

எங்கள் மூத்த மகன் பள்ளியிலிருந்து "ஸ்வாம்ப் பேன்ட்" என்ற இசைக் குழு. நாற்பதுக்கும் மேல் குழந்தைகள். ரெகார்டர் எனும் (புல்லாங்குழல் போன்றது) வாத்தியத்தில் ஐந்தாறு கிறிஸ்துமஸ் பாடல்கள் ஊர்வ‌ல‌த்தில் இசைக்க‌.

ஒன்ப‌த‌ரைக்கெல்லாம் மைதான‌த்துக்கு வ‌ந்துவிடுங்க‌ள் என‌ப் ப‌ள்ளியில் இருந்து அறிவிப்பு வ‌ந்திருந்த‌து. பைய‌னுக்காக‌ ச‌னிக்கிழ‌மை காலைத் துயிலைப் புற‌க்க‌ணித்து சீக்கிர‌ம் எழுந்து தயாரானோம். குளிர் என்றால் அப்படி ஒரு நடுக்கம். கோட் எல்லாம் போட்டு நமக்கே நடுக்கம் தாங்கலை. பையன் நாலைந்து உடை அடுக்குகள் தாண்டி, பேன்ட் டிஷ‌ர்ட் போட்டு வந்தான். டிஷ‌ர்ட் வெளிய‌ தெரிய‌ணுமாம்.

அவ‌ங்க‌ இசை ஆசிரியையிட‌ம், செக்-இன் ப‌ண்ணி, பையனை அவன் டீமில் விட்டு, அங்கு கொஞ்ச‌ நேர‌ம் மைதான‌த்தை நோட்ட‌ம் விட்டோம். அப்பப்பா என்ன‌ ஒரு கூட்ட‌ம். எல்லா டீமும் தயார‌கிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர் ஊர்வ‌ல‌த்திற்கு. அதைப் பார்த்து என் ம‌க‌ளுக்கு ஒரே வ‌ருத்த‌ம். நானும் அண்ணா கூட‌ப் போறேன் என‌ப் பிடிவாத‌ம் :((

இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பண்டிகை நாள். ஆங்காங்கே பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து, ஆடிப் பாடி மகிழும் பண்டிகை. குழந்தைகளின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு, என்ன பரிசு நம்ம வீட்டில் நமக்குக் காத்திருக்கிறது என. சாண்ட்டா எங்கே அதை ஒளிச்சு வ‌ச்சிருப்பாரு என‌. இங்கே வ‌ள‌ர்வ‌தால் என்ன‌வோ ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு ம‌ன‌தில் ஒரு ஏமாற்றம், கேள்விக‌ள். "ஏன் நாம‌ கிறிஸ்தும‌ஸ் கொண்டாடுவ‌து இல்லை, எதாச்சும் கிஃப்ட் வாங்கி குடுப்பீங்க‌ளா ?, என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் அங்க போறாங்க, இங்க போறாங்க (தாத்தா பாட்டி வீடுகள்). நாம் ஏன் எங்கேயும் போவதில்லை" என்றெல்லாம்.

ஊர்வலம் முடிவில் "ஓல்ட் ஹை" பள்ளியில் வந்து பையனை பிக்கப் செய்து கொண்டோம்.

மெர்ரி கிறிஸ்மஸ் என்று பலரும் பலருக்கும் சொல்லிய வண்ணம், ஊர்வ‌ல‌ம் முழுதும், ஏராளமான கிறிஸ்தும‌ஸ் பாட‌ல்க‌ள். எல்லோரும் பாடுகிறார்க‌ள்.

இங்கே, மனதில் சில கேள்விக் கணைகள் !!! ந‌ம் ஊரில் இல்லாத பண்டிகைகளா ? அதற்கு விடாத விடுமுறைகளா ? தீபாவ‌ளிக்கோ, பொங்க‌லுக்கோ சிற‌ப்புப் பாட‌ல்க‌ள் ஏதாவ‌து இருக்கிற‌தா ? இருந்தால் அநேகருக்குத் தெரியாமல் போனது ஏன் ? இங்கே "ஜிங்கில் பெல்ஸ் ..." என்று ஆர‌ம்பித்தால் பிஞ்சுக்க‌ள் முத‌ல் பெரியவ‌ர் வ‌ரை த‌லையாட்டிப் பாட‌ முடிவ‌து எப்ப‌டி ?

என‌க்குத் தெரிந்து "நான் சிரித்தால் தீபாவ‌ளி" என்று நாய‌க‌ன் ப‌ட‌த்தில் வரும் பாட‌ல் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து !!!

சிவாவும் பள்ளிக் குழுவினரும், பாடல் ஒத்திகை பார்க்கும் காட்சி:

12 மறுமொழி(கள்):

ILA (a) இளாsaid...

எங்களுக்கு இந்த ஊரில் ஒரு விழா இருந்துச்சு.. கிட்டதட்ட உங்க எல்லா வரிகளும் என் மனசுல வந்துட்டுப் போயிருச்சு .

ராமலக்ஷ்மிsaid...

கடைசி இரண்டு பத்திகளில் வைத்தீர்களே தீபாவளி வேட்டு! உண்மைதான். முன்னராவது தீபாவளி பொங்கல் என்பதை உறவினர் நண்பர் வீடுகளுக்கு சென்று வாழ்த்து சொல்லி.. போன்ற வழக்கங்களாவது இருந்தது. இப்போது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி முன்னர் பொங்கலும் தீபாவளியும் கரைந்தே காணாமல் போகிறது. சரி பண்டிகை தவிர்த்து சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்களிலும் சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிக் கொண்டாட்டங்களே. தேசிய கீதம் பாடி நாட்டுக் கொடிக்கு மரியாதை செய்பவர்கள் எத்தனை பேர்?

நிறைய கேள்விகளை எழுப்புகிறது பதிவு.

ராமலக்ஷ்மிsaid...

வீடியோ க்ளிப்பிங் பிற்சேர்க்கையா:)?
முதலில் இல்லையே? மகனும் நண்பர்களும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

அருமை அருமை - கொண்டாட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை. கூடிக் களிப்பதே சுகந்தானெ ! நாம் ஏன் கூட மறுக்கிறோம் ? உறவின் வீடுகளுக்குச் செல்வதே அரிதாகி விட்டதே ! ஆனால் இன்னும் நமது கிராமப்புறங்களில் கூட்டம் கூடுகிறார்கள் போல் இருக்கிறது.

ம்ம்ம்ம்

செல்வன் சிவாவிற்கு நல்வாழ்த்துகள் - படம் சூப்பர்

நானானிsaid...

நம்ம நாட்டிலும் இது போல் கொண்டாட்டங்கள் இல்லாமல் இல்லை, உதாரணமாக பொங்கலுக்கு மறுநாள் வரும் 'காணும் பொங்கல்'.
எதை காணப் போகிறோம் என்ற இலக்கு இல்லாமல் மக்கள்,குறிப்பாக கிராமத்துமக்கள் எல்லோரும் வண்டி கட்டிக்கொண்டு..அதை அலங்காரமும் செய்து கொண்டு பெண்டு பிள்ளைகளோடு சென்னையை வலம் வரும் காட்சியைக் காணும் போதெல்லாம் அந்த உல்லாசம் நம்மையும் தொத்திக் கொள்ளும். ஆனால் நகர மக்களுக்கு....? அந்த ஆசையே இருப்பதேயில்லை. விடுமுறை என்றால் இழுத்து போத்திக் கொண்டு உறங்குவதில்தான் உல்லாசமிருக்கிறது. யாராவது ஆரம்பித்தால் சேர்ந்து கொள்வார்கள். யார் மணி கட்டுவது?
உங்களது நியாயமான ஆதங்கம் சதங்கா! நானும் இதில் உங்களோடு உடன் படுகிறேன்.

நாகு (Nagu)said...

உங்களூர் ஊர்வலமும் அதில் குழந்தைகளின் வாசிப்பும் அருமை. பையன் கலக்குகிறான். நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டான். கொஞ்சம் உங்களைப் போல இருக்கிறான்(அது நல்லதா?) :-)

நம் நாட்டில் கும்பலாக பாடும் வழக்கம் பஜனை சார்ந்த பாடல்களுக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன். அதுவும் ராமலஷ்மி சொல்வது போல் கும்பலாக வெளியே போவது (போனாலும் பலகாரம் கொடுக்க, தீபாவளி ரிலீஸ் படம் பார்க்க..)குறைந்துவிட்டதோ. இந்த உருப்படாத பட்டிமன்றங்கள் - எரிச்சலூட்டும் பட்டிமன்ற தலைவர்களின் இடைஇடையே காமெண்டுகள்... பட்டிமன்றத்துக்கும் stand-up comedyக்கும் குழப்பம்!

இங்கே அனைத்து விழாக்களிலும் தேசிய கீதம் பாடாமல் ஆரம்பிப்பதில்லை. அனைத்து பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் நாட்டின் உறுதிமொழி எடுக்காமல் இருப்பதில்லை. நம்மில் யார் யார்க்கெல்லாம் 'இந்தியா என் தாய்நாடு' ஞாபகமிருக்கிறது?

சதங்கா - சரியான குஜால் பார்ட்டி ஓய் நீர். உமக்கு ஏன் பலான செட்டிங்கில் அமைந்த 'நான் சிரித்தால் தீபாவளி' பாட்டு ஞாபக ம் வருது?

சதங்கா (Sathanga)said...

ILA said...

// எங்களுக்கு இந்த ஊரில் ஒரு விழா இருந்துச்சு.. கிட்டதட்ட உங்க எல்லா வரிகளும் என் மனசுல வந்துட்டுப் போயிருச்சு .//

வாங்க விவசாயி. இதைப் பற்றி கூட பதிவு பதிவாக போடலாம். ஒரு யூனிஃபார்மிட்டி ... எங்க போனாலும் ஒரே மாதிரி கடைபிடித்தல் இவங்களுடைய சிறப்பு.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// கடைசி இரண்டு பத்திகளில் வைத்தீர்களே தீபாவளி வேட்டு! //

டைமிங்கா வெடிச்சு தூள் கிளப்பீட்டீங்க :))

//இப்போது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி முன்னர் பொங்கலும் தீபாவளியும் கரைந்தே காணாமல் போகிறது.//

இவங்க டாமினேஷன் தாங்க முடியல. என்ன செய்யறது, அந்த குறுகிய அங்குல பெட்டிக்குள், நம் மக்களின் வாழ்க்கையை அடைத்துவிட்டன, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் :((

//சரி பண்டிகை தவிர்த்து சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்களிலும் சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிக் கொண்டாட்டங்களே. தேசிய கீதம் பாடி நாட்டுக் கொடிக்கு மரியாதை செய்பவர்கள் எத்தனை பேர்?//

நாகுவும் இதையே தான் சொல்றார் பாருங்க. நாம பசங்களா இருந்தப்ப இருந்தே, 'தேசீய கீதம் பாடினா, மிட்டாய் கொடுப்பாங்க' என்று மட்டும் ஆக்கிவிட்டார்கள்.

//வீடியோ க்ளிப்பிங் பிற்சேர்க்கையா:)?
முதலில் இல்லையே? மகனும் நண்பர்களும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

ஆமா. யு.டியூபில் ஏற்ற கொஞ்ச நேரம் பிடித்தது. சரி பதிவ முதல்ல போட்டுவிடுவோம், பிறகு சேர்த்துக்கலாம் என்று சேர்த்தேன். பையன் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லிட்டான் உங்களுக்கு :))

துளசி கோபால்said...

என்னங்க செய்றது? இவுங்களுக்கு ஒரே ஒரு பண்டிகை விழா என்பதாலும்,
நாடு முழுசும் ஒரே மொழி என்பதாலும்
ஜமாய்ச்சுப்புடராங்க.

எங்க ஊரிலும் வருசாவருசம் சாண்ட்டா பரேடு உண்டு. இந்த வருசத்துக்கானது முந்தாநாள் ஞாயிறு பகல் நடந்துச்சு. தனியாப் போய்வரச் சோம்பல் பட்டுக்கிட்டுப் போகலை.

எங்கூர்லே என்ன விசேஷமுன்னா, நம்ம ஹரே கிருஷ்ணா கோவில் தேரும் இந்த ஊர்வலத்தில் வரும். சின்மயானந்தா குழுவினரும் அட்டகாசமாப் புடவையெல்லாம் கட்டிக்கிட்டு வருவாங்க.

சீனாவில் தடை செய்யப்பட்ட ஃபலூன் டாஃபா குழு கூட அலங்காரம் செஞ்ச வண்டியில் பாடிக்கிட்டு வருவாங்க.

கடைசியில் கிறிஸ்மஸ் தாத்தாவும் நகரமக்களை வாழ்த்திக்கிட்டு வருவார்.

நீங்க சொன்னதுபோல இது மதம் சம்பந்தப்பட்ட விழாவா மட்டும் இல்லாம, ஒரு மல்ட்டி கல்ச்சுரல் விழாவாத்தான் இருக்கு.

நமக்குப் பண்டிகை நாளுன்னா சினிமாக்காரர் வந்து வாழ்த்துனாத்தான் சரிப்படுது(-:

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா)said...

// அன்பின் சதங்கா

அருமை அருமை - கொண்டாட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை. கூடிக் களிப்பதே சுகந்தானெ !//

மிக்க நன்றி. ஆமா என்ன ஒரு குதூகலம் அவங்க எல்லார் கிட்டயும். நமக்கும் சேர்த்து தான் :)

// நாம் ஏன் கூட மறுக்கிறோம் ? உறவின் வீடுகளுக்குச் செல்வதே அரிதாகி விட்டதே ! ஆனால் இன்னும் நமது கிராமப்புறங்களில் கூட்டம் கூடுகிறார்கள் போல் இருக்கிறது.//

டி.வி., பொருளாதரம், நாகரிக வளர்ச்சி (?!!!) இதெல்லாம் தான் காரணங்களா இருக்குமோ ?!!

// செல்வன் சிவாவிற்கு நல்வாழ்த்துகள் - படம் சூப்பர்//

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சதங்கா (Sathanga)said...

நானானி said...

//குறிப்பாக கிராமத்துமக்கள் எல்லோரும் வண்டி கட்டிக்கொண்டு..அதை அலங்காரமும் செய்து கொண்டு பெண்டு பிள்ளைகளோடு சென்னையை வலம் வரும் காட்சியைக் காணும் போதெல்லாம் அந்த உல்லாசம் நம்மையும் தொத்திக் கொள்ளும்.//

ஹை, இதே அனுபவம் தான் இங்க எங்களுக்கும் கிடைச்சது.

// ஆனால் நகர மக்களுக்கு....? அந்த ஆசையே இருப்பதேயில்லை. விடுமுறை என்றால் இழுத்து போத்திக் கொண்டு உறங்குவதில்தான் உல்லாசமிருக்கிறது. யாராவது ஆரம்பித்தால் சேர்ந்து கொள்வார்கள். யார் மணி கட்டுவது?//

ராமலஷ்மி அவர்களும், நாகுவும் சொல்வது போல டி.வி.காரங்க ராஜ்ஜியம் வேறு. நகர மக்கள், நகரா மக்களா அல்லவா அகிடறாங்க :))

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

// உங்களூர் ஊர்வலமும் அதில் குழந்தைகளின் வாசிப்பும் அருமை. பையன் கலக்குகிறான். நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டான். கொஞ்சம் உங்களைப் போல இருக்கிறான்(அது நல்லதா?) :-)//

நன்றி. நன்றி. என்னைப் போலனா ? துறு துறுனு ?!! :))) பிடிக்காதே உங்களுக்கு :)))

//நம்மில் யார் யார்க்கெல்லாம் 'இந்தியா என் தாய்நாடு' ஞாபகமிருக்கிறது?//

சரியான கேள்வி. அப்படி ஒரு உறுதிமொழி இருக்கா என்று அடுத்த தலைமுறையினர் கேட்கும் அளவிற்கு இருக்கிறது.

// சதங்கா - சரியான குஜால் பார்ட்டி ஓய் நீர். உமக்கு ஏன் பலான செட்டிங்கில் அமைந்த 'நான் சிரித்தால் தீபாவளி' பாட்டு ஞாபக ம் வருது?//

சீன விடுங்க, அட்லீஸ்ட் இந்த பாட்டாவது இருக்கேனு நெனச்சேன் :)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !