Monday, December 15, 2008

[வர|குறை]தட்சணை !


Photo: weblivecasting.com

பொண்ணு, கட்டின பொடவையோட (?!!) வந்தா போதும். வேறெதுவும் எனக்கு வேண்டாம். சும்மா அது வேணும், இது வேணும் என்று கேட்டு பொண்ணு வீட்டுக்காரங்கள தொந்தரவு பண்ணாதீங்க." தீர்க்கமாய் சொன்னான் அருண் (எ) அருணாசலம்.

அம்மா சொன்னாள். "அட‌ புரியாத‌வ‌னே, இந்த‌ கால‌த்தில‌யும் இப்ப‌டி ஒரு புள்ளையானு யாரும் அதிச‌யிக்க‌ மாட்டாங்க‌. மாறாக‌, உன் கிட்டயோ, அல்ல‌து நம்ம‌ வீட்டுல‌யோ ஏதோ கொறை இருக்குனு தான் நெனைப்பாங்க‌டா" என்று !!!

தொலைக்காட்சியில் ச‌ங்கீத‌ நிக‌ழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த‌ அப்பா, த‌லையை ஆட்டி ர‌சித்துக் கொண்டிருந்தார். வ‌ழ‌க்க‌ம் போல‌ அம்மாவின் சொல்லுக்குமாய் இருந்த‌து அது.

'இவ‌ங்க‌ திருந்த‌வே மாட்டாங்க‌' என்று பொது ஜ‌ன‌த்தையும் சேர்த்து திட்டினான். "என‌க்கு இதில் உட‌ன்பாடு இல்லை. நீங்க‌ இப்ப‌டித் தான் செய்ய‌ணும் என்றால், என‌க்குக் க‌ல்யாண‌மே வேண்டாம்."

இதுவ‌ரையில் அருண் சொல்லாத‌ வார்த்தையைக் கேட்ட‌ அம்மா, நிலைகுத்தின‌ தேர் போல‌ ஆடாது உறைந்தாள்.

"என்ன‌ க‌ம‌ல‌ம், உன் புள்ள‌ யாரையாவ‌து ல‌வ், கிவ் ப‌ண்றானோ ? இவ்ளோ ஸ்டராங்கா இருக்கான்" என்று ச‌ப்த‌மின்றி ம‌னைவியின் காதுக‌ளில் கிசுகிசுத்தார் லஷ்மணன்.

"இன்னும் மெதுவா பேசுங்க‌. அப்ப‌ தான் என் காதுக‌ளில் விழாது. ல‌வ் பண்ணா, உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ என‌க்கு என்ன த‌ய‌க்க‌ம். ந‌ம்ப‌வே மாட்டீங்களே, அம்மா நீயாவ‌து சொல்லேன் அப்பாவுக்கு" என்று சிடுசிடுத்தான் அருண்.

"அவ‌ என்ன‌த்த‌ சொல்ற‌து. அதான் முன்னரே சொல்லிட்டாளே. உனக்கு, ஃப்ரெண்ட்ஸ் தான் சரியில்லை. ஒவ்வொருத்தனையும் பாரு, ஏதோ பார்பர் ஷாப்ல பாதில அனுப்பிச்ச மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல். தெருவப் பெருக்கற மாதிரி கால்சட்டை. தலைமுதல், கால் வரை ஏதாவது வித்தியாசம் பண்றேனு வெவஸ்த கெட்டு திரியாறனுங்க. ஹீம்ம்ம்... நீயும் வித்தியாசம் பண்றேனு, அதை உன் கல்யாணத்தில் காண்பிக்க விரும்பற. அப்புற‌ம் உன் இஷ்ட‌ம்." என்று, இசைக் க‌ச்சேரியில் மெய்ம‌ற‌ந்தார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"அருண், உன‌க்குப் புரியாத‌ வ‌ய‌சில்லை. எங்க‌ கால‌த்தில் எல்லாம், பெத்த‌வ‌ங்க எதிரில் நிற்க‌ கூட‌ ப‌ய‌ப்ப‌டுவோம். அப்படி இருக்க‌, அவ‌ங்க‌ சொல்ற‌து தான் வேத‌ வாக்கு. இப்ப‌ கால‌ம் அப்ப‌டியா இருக்கு. பாரு, நாங்க‌ளே உன்னை எவ்வ‌ள‌வு சுத‌ந்திர‌மா வ‌ள‌ர்திருக்கோம். நாங்க‌ சொல்ற‌து இது தான். இப்ப இருக்கற நிலைமைல கொஞ்ச‌மாவ‌து டிமான்ட் ப‌ண்ணினா தான் ம‌திப்பு இருக்கும். கால‌ம் இதே போல‌வா இருக்க‌ப் போகுது. உன் கால‌த்தில், நீ என்ன‌ செய்ய‌ நினைக்க‌றியோ, அதைச் செய்" என்று முடித்தார் க‌ம‌ல‌ம்.

லீவு நாளும் அதுவுமா கொஞ்ச‌ நேர‌ம் வீட்டில‌ நிம்ம‌தியா இருக்க‌ விட‌மாட்டீங்க‌ளே. ச‌ரி ஏதோ ப‌ண்ணுங்க‌. ஆனா ஒன்னு. அவ‌ங்க‌ளா எதெது த‌ர்றேனு சொல்றாங்க‌ளோ அது போதும். அதை விட்டு டிமான்ட் ப‌ண்ணினீங்க‌ என்றால், அப்புற‌ம் அது தான் க‌டைசி பெண் பார்க்கும் ப‌ட‌ல‌மா இருக்கும்" என‌ எச்ச‌ரித்தான்.

த‌லைகுனிந்தே வ‌ந்தாள். முக‌ம் ச‌ரியாகத் தெரியவில்லை அருணுக்கு. குனிந்தே காஃபி ப‌ரிமாறினாள். குனிந்த‌ த‌லை நிமிராம‌ல் அடுக்க‌ளைக்குள் புகுந்தாள்.

"வாம்மா மின்ன‌ல்" ஜோக் ஏனோ ஞாப‌க‌ம் வந்தது, மெல்ல‌ச் சிரித்துக் கொண்டான். 'மின்ன‌லை விட‌ வேக‌மாக‌ அல்ல‌வா வ‌ந்து சென்றுவிட்டாள்.'

"பைய‌னோட‌ மேனிமொழி பார்த்தா புடிச்ச‌ மாதிரி தான் இருக்கு. அப்புற‌ம் என்ன‌, ம‌த்த‌தெல்லாம் பேசி முடிச்சிட‌லாமா ?" என்று வெண் மீசையை வ‌ருடி ஒரு பெரிசு ஆர‌ம்பித்து வைத்தார்.

"ஒரு நிமிஷ‌ம், நான் பொண்ணோட‌ கொஞ்ச‌ம் த‌னியா பேச‌ணும்" என்றான் அருண்.

ச‌ட‌ச‌ட‌க்கும் ச‌ருகுக‌ளாய் ச‌ள‌ச‌ள‌த்த‌து பெண் வீடு.

நாலைந்து குட்டிப் ப‌ச‌ங்க‌ள் பாதுக்காப்புட‌ன் ந‌ந்தினியின் அறை நுழைந்தான் அருண்.

"டேய் ப‌ச‌ங்க‌ளா, இங்கேயே இருங்க‌, நான் ஒன்னும் ந‌ந்தினிய‌ பிச்சுத் தின்னுட‌ மாட்டேன், ஓ.கே. ச‌ம‌த்தா இருந்தீங்க‌னா, ஆளுக்கு ஒரு சாக்லேட்" என்ற‌வுட‌ன், எல்லாம் அல‌ர்ட் ஆகி வாச‌ல் அருகிலேயே அம‌ர்ந்து கொண்ட‌ன‌ர்.

"ந‌ந்தினி குனிந்த‌ த‌லை நிமிர‌வேயில்லை"

அவ‌ள் அருகில் சென்று, ஜ‌ன்ன‌ல் ஓர‌ம் க‌த‌வுக‌ளில் லேசாய் த‌ட்ட‌, ம்ம்ம்... என்று நிமிர்ந்து நோக்கினாள்.

அல்ட்ரா மாடர்ன் என்றும் சொல்லமுடியாத, அடக்க ஒடுக்கம் என்று சொல்ல முடியாத ஒருவித அழகில் தெரிந்தாள் நந்தினி.

"க‌‌ட்டினால் உன்னை தான் க‌ட்டுவேன். க‌ட்டின‌ புட‌வையுட‌ன் நீ வ‌ந்தால் போதும்" என்று உண‌ர்ச்சிப் பிழ‌ம்பானான்.

வெளியில் வந்து, "பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. க‌ட்டின‌ புட‌வையுட‌ன் அனுப்புங்க, அது போதும் !" என்று பெற்றோருக்குக் காத்திராம‌ல் சொல்லியும் வைத்தான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பெண் வீட்டார். சிறிது நேர அமைதிக்குப் பின் "நான் ஒன்னு கேட்டா த‌ப்பா நெனைக்க‌ மாட்டீங்க‌ளே ?" என்றார் பெரிசு.

"சொல்லுங்க‌" என்றார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"பையனுக்கு கை, காலு எதும் குறை இல்லையே ? ம‌த்த‌ ச‌க‌வாச‌ம் ?!! உங்க‌ வீட்டுல‌ யாருக்காவ‌து மெடிக்க‌ல் ப்ராப்ள‌ம் ?"

ஒன்னு என்று சொல்லி ஒன்ப‌துக்கும் மேல் கேள்விக‌ளை அடுக்கிக் கொண்டே போனார் பெரிசு.

"இந்த‌க் கால‌த்துப் ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் இன்ஸ்ட‌ன்டா ந‌ட‌க்க‌ணும். அதான் சொல்லித் தானே கூட்டி வ‌ந்தோம். நீ என்ன‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை மாதிரி, வித்தியாச‌ம் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று... இப்ப‌ பாரு, வீராப்பா எழுந்து வ‌ந்தாச்சு" என‌ வ‌ழிமுழுக்க‌ தாயும், த‌ந்தையும் ம‌ன‌ம் குமுறின‌ர்.

"ச‌ரி உங்க‌ இஷ்ட‌ம் போல‌ ஒரு பொண்ணை பாருங்க‌" என்று யோச‌னையில் ஆழ்ந்தான் அருண்.

11 மறுமொழி(கள்):

thevanmayamsaid...

"இந்த‌க் கால‌த்துப் ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் இன்ஸ்ட‌ன்டா ந‌ட‌க்க‌ணும். அதான் சொல்லித் தானே கூட்டி வ‌ந்தோம். நீ என்ன‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை மாதிரி, வித்தியாச‌ம் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று... இப்ப‌ பாரு, வீராப்பா எழுந்து வ‌ந்தாச்சு" என‌ வ‌ழிமுழுக்க‌ தாயும், த‌ந்தையும் ம‌ன‌ம் குமுறின‌ர்.

உண்மையில் நடப்பதுதான்!
உங்களுக்கு என் முதல் ஒட்டு!!!

துளசி கோபால்said...

பேச்சிலர்களுக்கு ஒரு எச்சரிக்கையா 'கதை' நல்லா இருக்கு.

ஆனா............ நெசமாவே 'கட்டுன புடவை (?!!!) டயலாக் சொல்வாங்கன்னு நினைக்கிறீங்க?


நோ ச்சான்ஸ்(-:

அதிரை ஜமால்said...

வந்தேன்

அதிரை ஜமால்said...

\இந்த‌ கால‌த்தில‌யும் இப்ப‌டி ஒரு புள்ளையானு யாரும் அதிச‌யிக்க‌ மாட்டாங்க‌. மாறாக‌, உன் கிட்டயோ, அல்ல‌து நம்ம‌ வீட்டுல‌யோ ஏதோ கொறை இருக்குனு தான் நெனைப்பாங்க‌டா\\


இதுவும் உண்மையே

அதிரை ஜமால்said...

\\"வாம்மா மின்ன‌ல்" ஜோக் ஏனோ ஞாப‌க‌ம் \\

ஹா ஹா ஹா

அதிரை ஜமால்said...

\\"ச‌ரி உங்க‌ இஷ்ட‌ம் போல‌ ஒரு பொண்ணை பாருங்க‌" என்று யோச‌னையில் ஆழ்ந்தான் அருண்\

யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

ஆனாலும், இதுதான் சாக்கு என்று மாறிவிட கூடாது.

ராமலக்ஷ்மிsaid...

நிதர்சனம் இதுதான்:)!

வர இருக்கும் தட்சணையை வாங்கிக்கணும் போல:). தரத் தேவையில்லை என்றால் ‘குறை’ இருக்கா எனச் சந்தேகிக்கிறது சமுதாயம்:(!

நல்ல தலைப்பு. நல்ல கதை!

சதங்கா (Sathanga)said...

thevanmayam said...

// உண்மையில் நடப்பதுதான்!
உங்களுக்கு என் முதல் ஒட்டு!!!//

வாசித்தலுக்கும், ஒற்றுமையுடைய கருத்துக்கும் நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

// பேச்சிலர்களுக்கு ஒரு எச்சரிக்கையா 'கதை' நல்லா இருக்கு.//

மிக்க நன்றி.

// ஆனா............ நெசமாவே 'கட்டுன புடவை (?!!!) டயலாக் சொல்வாங்கன்னு நினைக்கிறீங்க?

நோ ச்சான்ஸ்(-://

ஏதாவது ஒரு விதத்தில், பெண்ணை இப்படியே அனுப்புங்க என்று சொல்வதில்லையா ?? அதுக்கு புடவைய யூஸ் பண்ணிகிட்டாங்களோ என்னவோ.

காலப்போக்கில், போட்டுருக்கற ஜீன்ஸ், பேண்ட்டோட அனுப்புங்க என்று சொல்லுவாங்க போல :)))

சதங்கா (Sathanga)said...

அதிரை ஜமால்,

வந்து, ரசித்து, யோசித்து, அறிவுரையும் சொல்லி அசத்திவிட்டீர்கள்.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// நிதர்சனம் இதுதான்:)!//

ஆமா. எத்தனை வீடுகளில் பார்க்கிறோம்.

// வர இருக்கும் தட்சணையை வாங்கிக்கணும் போல:). தரத் தேவையில்லை என்றால் ‘குறை’ இருக்கா எனச் சந்தேகிக்கிறது சமுதாயம்:(!

நல்ல தலைப்பு. நல்ல கதை!//

சமுதாயம் என்ற பேரில் நம்ம மக்கள் பண்ணும் இது போன்ற கலாட்டாக்கள் குறையணும். அப்ப தான் வரதட்சணை வாங்குவதும் குறையும். சரி தானே ?!!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !