குறளில் கதையெழுத, செல்விஷங்கர் அம்மா பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். நாமும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றெண்ணி தோன்றிய கதை. கதை பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டுங்கள் :)
-----
அலுவலகத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.
"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ..." என்று இழுத்தாள் ராகினி.
அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் உற்பத்தி முழுக்க முழுக்க சென்னை என்று ஆகிப் போனது. அதன் முக்கிய பொறுப்பில், அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜேம்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜேம்ஸின் "ம்ம் ..." என்ற தலையாடலுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடர்ந்தாள் ராகினி.
"எனக்கு வேற ப்ராஜக்ட் மாத்திக் கொடுக்கறீங்களா ப்ளீஸ் ..."
"ப்ராஜக்ட்ல என்ன ப்ரச்சனை உனக்கு ?"
"ப்ராஜக்ட்ல ப்ரச்சனை இல்ல, அதில் கூட வேலை செய்யற நகுலன் தான் ப்ரச்சனை. அவன் சுத்த பொறுக்கி. ஏற்கனவே அவன் கூட வேலை செய்த போத அவன் டார்ச்சர் தாங்கலை. எனக்கு அவன் செய்கைகள் சுத்தமா பிடிக்கலை. எவ்வளவு நல்லா பண்ணினாலும், ஏதாவது குறை கண்டுபிடிச்சு கொண்ணுடுவான். இந்த முக்கியமான ப்ராஜக்ட், அவனோட சேர்ந்து எனக்கு செய்ய இஷ்டமில்லை. தினம் தினம் அவன் கூடவா சேர்ந்து செய்யப் போறோம்னு நினைச்சாலே நடுக்குது."
"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.
"டேய் மச்சான், அங்க பாரு ராகினிய ... செம திக் ஆகிட்டு வர்றாடா அந்த ஜி.யு.போப் கூட ..." என்ற பாபுவின் வாசகங்கள், நகுலனை மூச்சடைக்க வைத்தது.
அன்றிரவு, ரெசிடென்ஸி முதல் மாடியில், குளு குளு பாரில் நகுலன் மற்றும் நண்பர்கள் சூழ ஜேம்ஸும் அவர்களோடு. முதல் சுற்று ஊற்றி முடித்த பின்னர், ஆரம்பித்தான் நகுலன், "ஜேம்ஸ், மன்னிக்கணும். எனக்கு இந்த ப்ராஜக்ட்ல ராகினியோட சேர்ந்து வேலை செய்யப் பிடிக்கலை. அவ சுத்த அமுங்குளி. அமைதியா எல்லா காரியத்தையும் சாதிச்சுடுவா. ஏதாவது தப்பு சொல்லிட்டா அவளால தாங்கிக்க முடியாது. இன்னும் அழ மட்டும் தான் செய்யலை. அவ டார்ச்சர் தாங்கலை. எனக்கு வேற ப்ராஜக்ட் மாத்திக் கொடுத்திடுங்க" என்று நீட்டி முழக்கினான்.
"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.
மறுநாள், ஜேம்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் ராகினியும், நகுலனும் அவர் அறைக்கு வந்தனர். இருவரிடமும் "திருக்குறள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?" என்று பொதுவாய்க் கேட்டார்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, 'இவருக்கு தெரிஞ்சதால, நமக்குத் தெரியாது என்று நினைக்கிறாரா ?' என்று முகம் சுறுக்கினர்.
"ஏன் கேட்கறீர்கள் ?! நல்லாவே தெரியும். சிறுவயதில் பள்ளியில் ஆரம்பித்து, இன்றும் அரசுப் பேருந்துகளில் கூட படிக்கிறோமே" என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.
"இதைத் தான் எதிர்பார்த்தேன், அப்ப இனி இது தேவையில்லை" என்று தயாராய் வைத்திருந்த "திருக்குறள் புத்தகத்தை" அவர்கள் கண் முன்னே எரித்து விட்டார்.
ஒரு கணம் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இனி நீங்கள் செல்லலாம் என்று அவர்களிருவரையும் அனுப்பி வைத்தார்.
எப்படி இவர் இப்படி செய்யலாம். ஒரு புனித நூலை, இரண்டாயிரம் வருடத்து பாரம்பரியத்தை, அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதை. அதுவும் எங்கிருந்தோ வந்து நம்ம ஊரிலேயே, நமது புனிதத்தை எரிக்கலாம். கொதித்தெழுந்தனர் ராகினியின் சுற்றமும், நகுலனின் சுற்றமும். இதை சும்மா விடக்கூடாது. மேலிடத்துக்கு எடுத்து செல்லணும்.
"மேலிடம் என்ன மேலிடம். திரும்பவும் அவனுங்க ஆட்கள் தானே" என்றாள் சுமிதா. அதுவும் சரி தான், ஜி.யு.போப் கிட்டே பேசுவோம் என ஒன்று திரண்டு ஜேம்ஸின் அறை நிறைத்தனர் அனைவரும்.
"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி" 89/888
என்றவாறே அனைவரையும் ஒரு சுற்று பார்த்தார் ஜேம்ஸ்.
"இந்தப் பாடலில் வள்ளுவர் என்ன சொல்ல வர்றார் என்றால் ..."
"அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க பண்ணின காரியத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க" வழக்கம் போலவே துடுக்காய் கேட்டான் ப்ரகாஷ்.
"ஹேய், என்ன இது, கல்லூரியில் இருப்பது போலவே இருக்கீங்க. மொத்தமா கும்பலா வந்து கலாட்டா பண்றீங்க" என்று அதிர்வது போல பாவலா காண்பித்தார் ஜேம்ஸ்.
"இரண்டாயிரம் வருஷம் பழமை என்று இன்று வரை சொல்லி, கற்று வந்து, அதன்படி யாருமே நடப்பதில்லையே ஏன் ? காலம் காலமாக பாடம் மட்டும் படித்து என்ன பயன் ? இன்னும் சூது, வாது, கயமை, பகைமை, கோள் சொல்லுதல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதெல்லாம் வளர வளர ... நான் மேலெ சொன்ன குறளை நினைவில் கொள்ளுங்கள்
எனக்கு ரொம்ப வருடங்களாகவே திருக்குறள் மீது ஈடுபாடு,பற்று அதிகம். அதனைக் கற்று அதன்படி நடக்கணும் என்று இன்று வரை அதைக் கடைபிடிக்கிறேன்."
ராகினியையும், நகுலனையும் பார்த்து, "உங்கள் இருவரையும் ஒன்றாய் அழைத்துப் பேசியது கூட குறள் மூலம் நான் கற்றதே.
நான் எரித்தது வெளியில் திருக்குறள் என்று எழுதிய வெறும் நாட்குறிப்பு புத்தகமே ! இந்த செயலில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல உங்கள் ஒற்றுமை என்றும் தொடருட்டும். நமது மென்பொருட்களின் தன்மை பெறுகட்டும்." என்று வாழ்த்தி அனைவரையும் அனுப்பி வைத்தார்.
-----
உங்களுக்கு விருப்பம் இருப்பின், நீங்களும் ஒரு குறள் கதை எழுதிப் பதியலாமே ?!
மார்ச் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்