Thursday, October 2, 2008

சிங்கப்பூர் 2008 என் பார்வையில்


Photo: http://www.carolin-witzke.de/Webcard/Subpages/Travel/Singapore.html

மூன்றாண்டுகள் கழித்து சிங்கப்பூர் செல்கிறோம். சாதாரண இடங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவுமில்லை. அதே H.D.B. அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதே ஹாக்கர் சென்டர்கள், அதே அலுவலகங்கள். வழக்கம் போல ஊரைச் சுற்றி எங்கிலும் கட்டுமானப் பணிகள்.

நீண்ட நாட்களாக, வருகிறது எனச் சொல்லிவந்த கஸினோ விரைவில் திறக்கப் படும் என்கிறார்கள். பின்னே ! எல்லோரும் ஜென்டிங்கில் அல்லவா இன்றுவரை பணத்தை அவிழ்க்கின்றனர். சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்திருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா டாக்ஸி ஓட்டுநர் கேட்டார். அவற்றை காணும் வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.

அனைத்து M.R.T. நிலையங்களிலும் ஜன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ஹிந்தி அதிகம் காதில் விழுகிறது எங்கிலும். ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்றால், பாதிக்கும் மேல் நம்ம இந்திய மக்கள் தான். குறிப்பாக ஹிந்திக்காரர்கள்.

ஆன்லைனில் விசா தருகிறார்கள். அள்ளி அப்புகிறது ஜனத்தொகை. முன்னர் வெகு சிரத்தை எடுத்து நிரந்தரக் குடியுரிமை பெறவேண்டும். இப்போது வெகு சுலபமாக இருக்கிறது. தீப்பெட்டி வீடுகள் விலை ஏற்றத்தினால், விற்கலாம் என்று இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் ஏறட்டும் என்று விற்காமல் இருக்கிறார்கள்.

சீனர்களின் முகத்தில் வழக்கம் போல சிரிப்பில்லை. ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))

சீன இளைஞர்களிடம் ரொமான்ஸ் கொறஞ்ச மாதிரி தோன்றுகிறது ! சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது.

முன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன.

குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.

எவ்வளவோ ஆயிரங்களில் டாக்ஸி ஓடினாலும், இன்றும் குறிப்பிட்ட நேரங்களில் டாக்ஸி பிடிப்பது ஒரு சாகசமாகவே இருக்கிறது. அதற்காக சொந்தமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிகையும் குறைந்தபாடில்லை. எல்லோரும் புதிதாக வாங்கதான் விரும்புகிறார்களாம். யாருக்கும் பயன்படுத்திய கார் வாங்க விருப்பம் இல்லையாம். எல்லாம் மெர்ஸிடிஸ், லெக்ஸஸ் போன்றவை. பாருங்க இதோ, அதோ என்று டாக்ஸி ஓட்டுநர் நமக்குக் காட்டுகிறார்.

ஞாயிறு மாலைகளில், தேக்கா மார்க்கெட் செல்ல எந்த ஒரு டாக்ஸிகாரரும் வரமாட்டார். இன்றும் அதே நிலை தான். நாங்கள் சென்று இறங்கியது ஞாயிறு மதியம். 'அங் மோ கியோ'விலிருந்து மாலை சிராங்கூன் செல்லலாம் என டாக்ஸிக்கு நின்றால், பச்சை தலை எழுத்து இருந்தாலும், நம்மைப் பார்த்தவுடன் (கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(

ரயிலில் கூட்டத்தோடு பயணித்து சென்றால், இறங்கிய பின்னும் நடக்க முடியாத அளவிற்கு எங்கும் மக்கள் வெள்ளம். காய்கறி வியாபரம் கொடி கட்டிப் பறக்கிறது. வரிசையாக நகைக் கடைகள் அழகாக ஜொலிக்கிறதே அன்றி வாங்குவோரைக் காணவில்லை.

கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. முஸ்தாபா ஷாப்பிங் பற்றி கேட்கவே வேண்டாம். வார நாட்களிலும், பகல் என்ன, இரவென்ன கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் ... நகை செக்ஷன் பக்கம் யாரும் அதன் அழகை பார்க்க கூட போக மாட்டேன் என்கிறார்கள். மூன்று ஆண்டுகள் முன்னர், ஒரு கிராம் 19 வெள்ளி, இப்போ கிட்டத்தட்ட 40 வெள்ளி.

தேக்கா மார்க்கெட்டும் கட்டுமானப் பணிகளில் மூடிக் கிடக்க, வங்கி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்க ரொம்ப சிரமமாகப் போய்விட்டது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு ஏ.டி.எம். அதுவும் குட்டி இந்தியக் கடை அடுக்குகளுக்குள், அனுமார் வால் போல நீண்ட க்யூ வேறு.

காந்தி, பனானா லீஃப் போன்ற உணவகங்கள் வழக்கம் போல கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆந்திரா கரி, கோமளாஸ் போன்ற உணவகங்கள் காற்று வாங்குகிறது. யீஷுன் பனானா லீஃபிலும் க்யூ கட்டி வாங்குகின்றனர் இன்றும்.

படப் பொட்டியை எடுத்துச் சென்றும், நேரமின்மை காரணத்தால் பொறுமையாக அனுபவித்து சிங்கப்பூரைச் சுட முடியவில்லை. அங்கிருப்பவர்கள் போல நம்மையும் பி.ஸி.ஆக ஆக்கிவிட்டார்கள் :))

8 மறுமொழி(கள்):

சி தயாளன்said...

haha...!

இப்போது அதிகரித்து வரும் கட்டுமான பணி, மற்றும் கணினி வேலைவாய்ப்புகள் காரணமாக வெளிநாட்டவர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம். அதனை தொடரூந்து நிலையங்களில் peak hours ல் நிக்கும் கூட்டத்தை வைத்து எடை போடலாம்

இயந்திர வாழ்க்கை தான்.. ஆனால் என்ன செய்வது..நிம்மதி, அமைதி இஞ்ச தானே கிடைக்கிறது..?

ராமலக்ஷ்மிsaid...

உங்கள் பார்வையில் சிங்கப்பூர் மட்டும்தான் எங்கள் பார்வைக்கா அல்லது பார்த்த மற்ற இடங்கள் யாவும் கூட வருமா:)?

ஜோசப் பால்ராஜ்said...

பதிவும் சிங்கப்பூர் வாழ்க்கையப் போல ரொம்ப பரபரன்னு இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

யாழ் Yazhsaid...

சிங்கபூர் பார்வை நச் சுருக்கம்! இதையும் சேர்த்து கொள்ளவும்...
குறிப்பாக போதைபுழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிற்து. குடியிருப்புகளின் கிழே பசை நுகரும் பதிண்ம வயதினரை பார்த்தால் பயமாக இருக்கிறது.
இந்திய பெற்றோர்களுக்கு இதுவே தற்போதய பிரச்சினையாக இருக்கிறது.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

எப்பொழுதும் கண்ணையும் காதையும் டிறந்தே வைத்திருப்பதுதான் தங்களீன் எழுத்துக்கு அடிப்படை என நினைக்கிறேன். பார்த்தௌடன் மனதில் நிறுத்தி பின்ன அதைப் பயன்படுத்தும் விதம் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறது.

சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்திருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா ? டாக்ஸி டிரைவர் கேட்டது அழகான விரிவுரையுடன் பதியப்படுகிறது. இதுதான் சதங்கா

இந்தி(ய) மக்கள் - விசா - தீப்பெட்டி வீடுகள் - விற்பனைக்குக் காத்திருக்கும் - சிரிப்பு மற்றும் காதல் குறைந்த சீனர்கள் - ( உங்களுக்கு வயசாச்சுன்னு அர்த்தம்) - சுத்தமில்லாத ஊர் ( எனக்க்கு மகிழ்ச்சி - எப்பப்பாரு - சிங்கப்பூர்னா சுத்தம்பா - கேட்டுக் கேட்டு சலிச்சுப்போச்சு)

//குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.//

அய்யோ என்ன உவமை! என்ன உவமை! அருமை அருமை !

பச்சை தலை எழுத்து, வர மறுக்கும் டாக்ஸி - கூட்டம் கூட்டம் - ஒரே ஒரு ஏடிஎம் ( இந்தியாவிலே திட்டறாங்க - (என்னாயா பாங்கு - ஒரு ஏடிஎம் தான் வச்சிருக்கானுங்க ).....

கோமளாஸ் காத்து வாங்கறதா - பலே பலே

நல்லா இருந்திச்சி - படம் தான் இல்ல - பரவா இல்ல

சதங்கா (Sathanga)said...

'டொன்'லீ, ராமலஷ்மி மேடம், ஜோசப் பால்ராஜ், யாழ், சீனா ஐயா,

அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

கிரிsaid...

//ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))//

:-)))))))))))))))

//சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது//

:-((((((((((((((

//முன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன//

முன்பு எப்படி என்று தெரியவில்லை, இப்போது எனக்கு நீங்கள் கூறியபடி தான் தெரிகிறது.

//குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்//

நல்ல கூறி இருக்கீங்க :-) நம்ம ஊர்லயும் இதே தான்

//கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(//

:-))))

சதங்கா சிறப்பா கூறி இருக்கீங்க..குறிப்பா சுவாரசியமாக :-) வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

கிரி,

ஆஹா, அத்தனையும் படிச்சு, அழகாக பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !