இந்தியா என் பார்வையில் - 2008 - சிங்கத்தை சந்தித்தோம் ...
இம்முறை இந்தியாவிற்கு சென்ற போது, என்ன வேலை இருந்தாலும் சரி, தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு சிறந்த மனிதரையும் அவரது துணைவியாரையும் சந்திக்காமல் திரும்பக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.
முதல் இரண்டு வாரங்கள் நேரம் சாத்தியப்படவில்லை. மதுரை சுப்ரமணியபுரத்தில் (படம் இல்லை, நிஜ இடம்) ஒரு கணினி மையத்தில் தமிழே இல்லை, தமிழ்மணம் பார்த்ததற்கான சாத்தியம் சிறிதும் இல்லை. மூன்றாவது வாரம் அவருக்கு இங்கிருந்து ஆங்கிலத்தில் மின்மடல் அனுப்பினேன். தந்தி போல "we are here" என்று.
சாயந்திரம் அவரிடம் இருந்து தவறாது தொலைபேசி அழைப்பு. ஏற்கனவே அவரது குரலை இணையத்தில் கேட்டிருந்ததால், "ஹலோ" எனும் போதே கண்டுகொண்டேன். அட நம்ம "சீனா ஐயா".
ஒரு சிறு பரிசோதனைக்காக மதுரை அப்போலோ சென்றபோது, இரண்டு நாட்கள் அங்கு செலவு செய்யும்படி ஆகிவிட்டது (இது பற்றி கூட ஒரு தனிப் பதிவு போடலாம் !). அங்கிருந்து அவர்கள் வீடு பக்கம் என்பதால், பரிசோதனையின் முடிவில் சீனா ஐயாவின் வீட்டுக்கு வருவதாகக் கூறினோம்.
இன்முகமாய் வரவேற்றனர் சீனா ஐயாவும் அவர் துணைவியார் செல்வி ஷங்கர் அம்மாவும்.
இந்தியாவின் தலைசிறந்த வங்கி ஒன்றில் உயர்ந்த பதவியில், பணியில் இருப்பவர் சீனா ஐயா. சென்னையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாய் பள்ளி ஆசிரியையாக இருந்து, கணவருக்காக வி.ஆர்.எஸ் வாங்கி மதுரைக்கு வந்த செல்வி ஷங்கர் அம்மா. இருப்பினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நம்மைப் போன்ற சாதரண மனிதராய் இருப்பது இவர்கள் இருவரின் சிறப்பு.
இணையத்தினால் அறிமுகம் நிறைய இருந்ததால், அதுபற்றி அதிகம் பேசவில்லை யாவரும்.
புதுமனை புகுந்து சில நாட்களே ஆனதால், கொஞ்சம் அதுபற்றி பேசினோம். ஆல்பம் காண்பித்தனர். சொந்தங்களைக் காட்டி மகிழ்வது போல, அதில் வந்திருந்த இணைய நட்புக்களையும் காட்டி ஆனந்தித்தனர் இருவருமே. "இவர் நந்து. தன் குட்டிப் பெண் நிலாவின் போட்டோக்கள், பல ஆயிரங்கள் பதிந்திருக்கிறார். இவர் சிவமுருகன், பல தளங்கள் வைத்திருக்கிறார், தற்போது பங்களூரில் வசிக்கிறார்", மேலும் பாசமலர் வந்திருந்தாங்க என இணைய நட்புக்களைச் சொல்லச் சொல்ல வியப்பு மேலிடத்தான் செய்கிறது.
வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். அழகாக, அடக்கமான ஒரு அப்பார்ட்மென்ட் வீடு. இங்க பக்கத்தில, அது இருக்கு, இது இருக்கு என்றாலும் எங்களுக்கு மிகவும் பிடித்தது, அப்படியே அருகில் ஓடும் வைகை ஆறு தான். அப்படியே இங்க இழுத்து வந்து எங்க அப்பார்ட்மென்ட் பக்கதில ஓட வைக்க ஆசை. ஹிம்ம்ம்ம்.
லண்டனில் வசிக்கும் தம் இரு மகள்களின் குடும்பத்தாரையும் போட்டோவில் அறிமுகம் செய்து வைத்தனர். இப்ப தான் வந்திட்டு போனார்கள். "கலகலனு இருந்தது வீடு. இப்ப பாருங்க எவ்ளோ அமைதியா இருக்கு". இருந்த சில மணி நேரங்களில் பிள்ளைகள் பற்றி அதிகம் பேசினர். "யாரும் அருகில் இல்லாமல், பாவம் கஷ்டப்படுகிறார்கள். சீக்கிரம் அங்கு சென்று அவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும்." இந்த உறுதி அவர்கள் பேச்சில் உணரமுடிந்தது.
எல்லோருக்கும் இவர்கள் போல் பெற்றோர் கிடைத்தால் எப்படி இருக்கும் !!! சரி, ரொம்ப பேராசை எல்லாம் வேண்டாம். இவர்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
4 மறுமொழி(கள்):
//இவர்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.//
இணையத்தில் இருக்கும் எல்லோரையும் தங்கள் பிள்ளைகளாகவே பாவிக்கும் அவர்களுக்கும் அவர்களைப் பற்றி அருமையாக எழுதியிருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அப்போ நாம எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்தான், என்ன நான் சொல்வது சரிதானா சதங்கா?
ஆம் சதங்கா - இணையத்தில் இருக்கும் எல்லோருமே எங்கள் உறவுதான்
சந்திப்பு பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள் - நாம் அதிகம் பேசவில்லை - இணையம் பற்றி
அடுத்த சந்திப்பில் (??) தூள் கிளப்பிடுவோம்
சேரியா
நல்வாழ்த்துகள்
மனைவி மக்களுக்கு எங்கள் அன்பினைத் தெரிவிக்கவும்
ராமலஷ்மி மேடம்,
//இணையத்தில் இருக்கும் எல்லோரையும் தங்கள் பிள்ளைகளாகவே பாவிக்கும் அவர்களுக்கும் அவர்களைப் பற்றி அருமையாக எழுதியிருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அப்போ நாம எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்தான், என்ன நான் சொல்வது சரிதானா சதங்கா?//
ஆமா. மிகச் சரி. பணம் கூட சுலபமாக கொடுக்கிற காலம் இது. ஆனா, பாராட்டு கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. அதைத் தருவதற்கும் ஒரு குணம் வேண்டும். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது கண்டு மிக்க மகிழ்ச்சி.
சீனா ஐயா,
//சந்திப்பு பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள் - நாம் அதிகம் பேசவில்லை - இணையம் பற்றி
அடுத்த சந்திப்பில் (??) தூள் கிளப்பிடுவோம்
சேரியா//
நிச்சயமா. இன்னொரு ரெண்டு வருஷம் பொறுத்துக்கங்க :))
Post a Comment
Please share your thoughts, if you like this post !