Tuesday, October 7, 2008

இ.எ.பா - 2008 - ஓடு, ஓடு, ஓடு ... ஓடு போட்ட வீடு ...

எல்லோரும் திண்ணைப் பதிவுகள் போட்டு, படித்துத் திளைத்து, மற்ற வேலைகளில் மூழ்கியிருக்க ... நான் தூசி தட்டி ஓடு அடுக்குகிறேன்.

நம்ம ஊரில், பொதுவா கிராமப்புறங்களில் ஓட்டு வீடு நிறையப் பார்க்கலாம். எங்க ஊரில் உள்ள பழைய வீடுகள், முக்கால்வாசி ஓட்டு வீடுகள் தான்.

நாட்டு ஓடு, சீமை ஓடு என்று இரு வகையில் ஓடுகள் வேய்ந்து அழகுற இருக்கும் வீடுகள். பெரீய்ய்ய்ய வீடுகளாக இருந்தால் இவ்விருவகை ஓடுகளும் இருக்கும். முன் பக்கம் சீமை ஓடும், அதிகம் புழக்கம் இல்லாத பகுதிகள் நாட்டு ஓடுகளிலும் இருக்கும். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே ?! ஆம், நாட்டு ஓடு விலை குறைவு, சீமை ஓடு விலை அதிகம்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌, இப்போழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.

இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ :)) ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

எங்கள் வீட்டில் வளவுப் பகுதியில் முன்னர் நாட்டு ஓடுகள் தான் போட்டிருந்தார்கள். பின்னர், சீமை ஓடுகள் தாத்தா இருக்கும்போது (பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்) போடப்பட்டது. பகுதி பகுதியாகப் பிரித்து ஓடு அடுக்குவார்கள். ஒரே நாளில் பிரித்துவிட்டால், வானம் கூரையைப் பிய்க்காமலே ஏதாவது கொட்டிவிட்டது என்றால், என்ன செய்யறது ?!! :)) அதான் முன் ஜாக்கிரதையாக.

என்னது வரிசையா எடுத்து ஒன்னு மேல ஒன்னா அடுக்கறது தானே என்று தோணும். ஆனால் இந்த நான்கு மூலைகளில் அடுக்கும்போது தான், தொழில் திறமை மேம்படும். மழை நீர் சேகரிக்க வகிடுபோல் இடம் விட்டு, ஓடுகளை வெட்டி அடுக்க வேண்டும். நல்ல ஒரு ஆள் கிடைக்கவில்லை என்றால் கோணல் மாணலாகி விடும். இப்பல்லாம் அதையும் கலையா ஆக்கிட்டாங்க. வளைந்து நெளிந்து ஒரு பழைய காலத்து சொம்பு இருந்தா, பல ஆயிரங்கள் கொடுக்க வியாபாரிகள் ரெடி !!!

எப்படியும் வீடு முழுக்க ஓடுகள் மாத்த கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும். எப்படா முடிப்பாங்க என்று இருக்கும். ஒரு பக்கம் பழைய ஓடுகள பிரித்து அடுக்கியிருப்பார்கள், இன்னொரு பக்கம் புது ஓடுகள். அத்தோடு பத்தாதற்கு குப்பையும், தூசியும் சேர்ந்து கொள்ளும். அந்த வயதில் அதைக் கூடத் தாங்க முடியவில்லை. இப்ப என்னடான்னா, ஊர் முழுக்க renovation என்ற பெயரில் கட்டுமாணம் களை கட்டுகிறது. சென்னையில இருந்து மதுரை போறதுக்குள்ள, அப்பப்பா பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்).

எங்கள் வீட்டின் எதிர்வீடுகள் அனைத்தும் நாட்டு ஓடுகள் கொண்டவை. இது அன்று. இன்று எல்லோரும் வீட்டை கொஞ்சம் alter செய்து புதுப்பித்து விட்டார்கள். எதிர் வீட்டு திண்ணையில் தான் அதிகம் விளையாடியது. இந்த முறை ஊருக்குச் சென்றபோது, அது காணாமல் போயிருந்தது. ரோடு போடுகிறேன் என இத்தனை ஆண்டுகள் மேலும், மேலும் போட்டு, திண்ணை இன்று அண்டர் க்ரௌண்டினுள் :(

அதேபோல அநேக வீட்டுப் படிகளையும் மண் விழுங்கி, மன்னிக்கவும், ரோடு விழுங்கிக் கொண்டுள்ளது. இங்க எல்லாம் ரோடு புதுப்பிக்கையில, பழைய ரோடை பெயர்த்து எடுத்துவிட்டு, அதே அளவில் புதிய ரோட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ஊரில் கதையே வேறு. ஆறேழு படிகள் கொண்ட வீடுகளில் எல்லாம் ஒன்றிரண்டு படிகள் மட்டுமே இருக்கிறது. இதே ரேஞ்சுல போனால், மழை காலங்களில் படகெடுத்து தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் :))

சரி ஓட்டிலிருந்து தாவி எங்கெங்கோ போகிறது பதிவு. இவ்ளோ எழுதிட்டு படம் காட்டலேன்னா நல்லா இருக்காது. அதனால, இங்க சில ஓடுகள் படங்கள். மேலும் படங்களுக்கு கொஞ்சம் பொறுத்திருங்கள், மூன்றாம் கண் தளத்தில் பதிந்து, பின்னர் இங்கு சுட்டி தருகிறேன்.


வீட்டு மாடியில் இருந்து ஒரு புறம்.


மாடிப் பகுதி. மாடிக்கு வரும் வழி சற்று தள்ளி தெரிகிறது பாருங்கள்.


மேல் மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் வளவுப் பகுதி ஓடுகள்.

10 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

எங்க பள்ளிக்கூடத்தில் ஓட்டிலிருந்து வெயில் காலத்தில் தேள் எல்லாம் விழும் :-) ஓட்டின் அழகும் குளுமையுமே தனி இயற்கையான வெண்டிலேஷன்.

cheena (சீனா)said...

haa haa அது சரி - நம்ம வூட்டு ஓடுகளெல்லாம் படத்துலேயா ? ஓக்கே ஓக்கே ! நல்லாருக்கு பதிவு

நல்வாழ்த்துகள்

துளசி கோபால்said...

நான் சொல்ல நினைச்சதை நம்ம நாகு சொல்லிட்டார் பாருங்க:-))))

மழைக்காலங்களில் ஓட்டில் விழும் நீர் சரிஞ்சு ஒரு 'குற்றாலம்'விழுமே அதுதான் ஜோர். வீட்டுலே இருக்கும் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் அப்பத்தான் தேய்ச்சு மினுக்குவாங்க. மழைத் தண்ணியில் தேய்ச்சாச் சீக்கிரம் கருக்காதாம்!!!

Kavinayasaid...

நம்ம ஊரு வீடுகளையும் ஓடுகளையும் நினைச்சா வர்றது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும்தான் :(

ஜாக்கிறதையா==ஜாக்கிரதை

ராமலக்ஷ்மிsaid...

ஓடுகளைப் பற்றி இத்தனை விரிவான தகவல்களுக்கு நன்றி சதங்கா. படங்களின் கோணங்களும் அருமை.

சிறுவயதில் நாங்கள் வசித்த வீட்டில் மாடி அறைகள் நீங்கள் காட்டியவாறு ( ) இந்த மாதிரி ஓடுகள் வேயப்ப்பட்டவை. அதை எனது கூழ்சறுக்கு[நகைச்சுவை] பதிவிலுள்ள படத்தில் காணலாம். நடுவிலே ஒரு படிக்கட்டு உண்டு. அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்தால் இன்னோரு மேல்தட்டட்டி (மொட்டை மாடி) வரும். ரொம்ப அட்வென்ச்சரெஸ்ஸாக இருக்கும் அப்படியெல்லாம் குதிப்பது:))!. அதே போல கல்யாண பாத்திரங்களுக்காக தனி அறையும், நெல்மூட்டைகள் அடுக்க நெல் குதிரோடு ஒரு அறையும் கீழ்தட்டட்டியில் ஓடு வேயப்பட்டவையே.

ஆனால் வீட்டில் ஓட்டைப் பிரித்து மாற்றியதாக ஞாபகமேயில்லை:(.

சதங்கா (Sathanga)said...

நாகு,

//எங்க பள்ளிக்கூடத்தில் ஓட்டிலிருந்து வெயில் காலத்தில் தேள் எல்லாம் விழும் :-) ஓட்டின் அழகும் குளுமையுமே தனி இயற்கையான வெண்டிலேஷன்.//

பள்ளிகள் பற்றி நினைவுபடுத்தியதற்கும், கருத்துக்கும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

// haa haa அது சரி - நம்ம வூட்டு ஓடுகளெல்லாம் படத்துலேயா ? ஓக்கே ஓக்கே ! நல்லாருக்கு பதிவு//

ஆமா. கால ஓட்டத்தில் கறைந்துவரும் சூழலை (எதிர் வீடுகள் எல்லாம் மார்டன் மயம்) கண்டு ஒரு பிரமிப்பு. அதைச் சேகரித்து வைக்க இந்தப் பதிவு.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//நம்ம ஊரு வீடுகளையும் ஓடுகளையும் நினைச்சா வர்றது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும்தான் :(//

ஆமாங்க. இன்னும், சீனா ஐயாவிற்கு சொன்ன பதில் தான். அழகா இருந்தாலும், பராமரிப்பதும் ரொம்ப கஷ்டமா இருக்குன்றதால, அநேக வீடுகள் புதுப்பித்து விட்டார்கள்/வருகிறார்கள்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//ரொம்ப அட்வென்ச்சரெஸ்ஸாக இருக்கும் அப்படியெல்லாம் குதிப்பது:))!.//

இதுவும் சொல்ல மறந்திட்டேன். எங்க வீட்டு மாடியிலிருந்து (இதுவே செங்குத்தா ஏறும், இறங்கும் போது நீங்க சொன்ன அதே அட்வென்ச்சரெஸ்ஸ் மனநிலை தான்) மொட்டை மாடி ஏற மரப்படிகள். வளைந்து செல்லும் அதில் எறுவதற்கே பயந்த சிறுவயது நாட்கள் உண்டு.

பதிவினைப் படித்து மகிழ்ந்து, உங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

துளசி டீச்சர்,

//மழைக்காலங்களில் ஓட்டில் விழும் நீர் சரிஞ்சு ஒரு 'குற்றாலம்'விழுமே அதுதான் ஜோர். //

இதை எழுதணும் என்று யோசித்திருந்தேன். விடுபட்டதை கரெக்டா சொல்லிட்டீங்க. சாதாரண மழையில் கூட, நான்கு மூலைகளில் இருந்தும் நாலருவி மாதிரி நீர் கொட்டும். அந்த நேரத்தில் வாசலில் நீர் தேங்கி, ஒரு நீச்சல் குளம் போன்ற நிலையில் அழகாக இருக்கும். சிறுவர்களாய் இருக்கும் போது அடித்துப் பிடித்து நீரில் விளையாடுவோம். அது ஒரு காலம் !!!

நான்கு மூலைகளில் இருந்து விழும் மழை நீரை, எங்கள் வீடுகளில் பெரிய்ய்ய்ய அண்டாக்களில் சேகரித்து வைப்போம். சமையலுக்கும் பயன்படுத்துவோம். நாகரீக வளர்ச்சியில் இதுவும் நைந்து வருகிறது இப்போது.

Post a Comment

Please share your thoughts, if you like this post !