வானின் நிறம் நீலம் - 9
Photo: http://www.panoramio.com/
அம்பு விடுமுன் வளைந்த வில்லை சரியாகக் கவனித்த செல்வா, "சரிங்க நிர்மலா ... வந்து ... சாரிங்க நிர்மலா, இல்ல ! தனியா போறீங்களே, ஒரு கம்பெனி தரலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன், சரி நான் ஆபீஸ் கெளம்பறேன்".
'அப்பாடா, நல்ல வேளை' என நினைத்துக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக, தோபிகாட் ரயில் நிலையத்தில், எதிர் திசையில் சென்று நின்ற செல்வாவை உறுதி செய்து கொண்டாள் நிர்மலா.
படியேறி சிறிது தூரம் நடந்து, சிராங்கூன் நோக்கி செல்லும் ரயில் தடத்திற்கான எஸ்கலேட்டரில் இறங்கினாள். அவளுக்காகவே அங்கு காத்திருந்தான் மகேஷ். அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கீழிழுத்து சென்றான். தூரத்திலிருந்து செல்வா இக்காட்சியை காணாமலில்லை. விளையாட்டு மைதானத்தில் விளையாடுபவர்களைத் தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பு இருக்குமே, அதே போன்ற நிலையில் இருந்தான் செல்வா. 'இல்லை, நான் பார்வையாளனா இருந்திடக் கூடாது, என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று நிர்மலா சென்ற திசையில் ஓடினான்.
ஏதோ வாக்குவாதம் பண்ணுவது போலவே இருந்தது அவர்கள் இருவரின் மேனிமொழி. இரண்டு பெட்டிகள் தள்ளி நின்று கொண்டான் செல்வா. லிட்டில் இந்தியா நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, இவனும் இறங்கிக் கொண்டான். அவளைத் தொடர்வதை அவள் கண்டுவிடக் கூடாதே என்று, நன்றாக இடம் விட்டுத் தொடர்ந்ததில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழுவது போலில்லை.
அதற்குள் செல்பேசி அழைப்பில் ப்ரஷாந்த். "டேய் செல்வா, எங்கிருக்க ?! உன்ன க்ரிஸ்டினா தேடிட்டு இருக்காங்க" என்றான்.
'போச்சுடா, இங்க ஒரு பரபரப்பு என்றால், அங்க என்ன விறுவிறுப்போ ?!' என்றெண்ணி, "இதோ வந்திட்டே இருக்கேன், பதினைஞ்சு நிமிடத்தில் இருப்பேன்" என்று போனை வைத்தான். எது என்னவானா என்ன, நமக்கு நம்ம வேலை முக்கியம் என்று வந்த வழியே திரும்பினான் செல்வா.
'இன்னும் மலேஷியா போகலையா ?! எதுக்கு அவசரமா நிர்மலாவுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்க வர சொல்லியிருக்காங்க ? நம்மை வேறு தேடறாங்க !!!' என்று ஏகப்பட்ட கேள்விகளுடன், செல்வாவையும் சுமந்து சென்றது அந்த கம்ஃபர்ட் டாக்ஸி.
"எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை இப்படி வந்து பார்த்து டார்ச்சர் பண்ணாதேன்னு" என்று தீபாவளிப் பட்டாசாய் வெடித்தாள் நிர்மலா.
"இதுக்கே கோவிச்சுக்கறே. இதே வாய் கொண்டு தான், அன்பே, ஆருயிரே என்றெல்லாம் கூட சொன்னே, இப்ப மட்டும் மட்டமா போய்டனா ?!!!!"
"அதுக்காக அந்த வாயை வெட்டி எறிஞ்சிருவேன்னு நினைச்சியா ?!!! உடலே ரணமானதுக்கப்புறம் ...." சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு, உடல் விம்மினாலும், மனம் இறுகி, உறுதியானாள்.
"இதோ பார், இது கடைசி தடவையா இருக்கட்டும், இனி ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வராத, நானும் உன் வழியில் வரமாட்டேன்"
"அவ்வளவு ஈ.ஸியா போயிடுச்சு உனக்கு. அது சரி !!! எல்லாம் உன் கைல தான் கண்ணு இருக்கு. எத்தனை நாளைக்கு தான் நீயும் பிடிவாதமா இருக்கிறாய் எனப் பார்ப்போம்."
ஒற்றை அருவியாய் ஓட எத்தனித்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள். "இதுக்கு மேலயும் தொந்தரவு செய்தால், அப்புறம் போலீஸுக்கு தான் போவேன்".
"போ ... போடி ... இப்படி எல்லார் வீட்டுப் பிரச்சனையும் தீர்க்க தான் போலீஸ் இருக்கு என்ற நினைப்பு !!!!"
'இங்க எங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, முன்ன பின்னே போயிருந்தா அல்லவா தெரியும் !! யாருகிட்டயாவது கேட்கலாமா ? கேட்கும் சூழ்நிலையிலா இருக்கிறோம். என்ன செய்யலாம். பின் தொடர்ந்த செல்வாவையும் வேறு திட்டாத குறையாக அனுப்பிவிட்டோம்' எண்ணங்கள் சுழல ஒரு முடிவுக்கு வந்தாள் நிர்மலா.
"சரி இப்ப என்ன பண்ணலாம்ன்ற ?!" என்றாள்.
"அப்படி வா வழிக்கு. யூ ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ் நிர்மலா. வா, நடந்துகிட்டே பேசலாம்"
ரயில் நிறுத்தத்திலிருந்து வெளி வந்து சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். வெய்யில், மழையையும் பொருட்படுத்தாமல், ஓரளவுக்கு அந்த நேரத்திலும் ஜனத்தொகை அடர்த்தியாகவே இருந்தது. சிராங்கூன் சாலை, தீபாவளி அலங்காரத்தில் மின்னியது. சாலையின் ஒரு முனையில் ஆரம்பித்து, சில அடி இடைவெளியில் வரிசையாக வண்ணத் தோரணங்கள் சாலையின் மறுமுனை வரை. எவ்வளவு தூரம் இந்த அலங்காரங்கள் தொடருகிறது என சாலையின் ஓரத்தில் நின்று கவனித்தால், கடைசியில் ஒரு புள்ளி போல தான் தோன்றும்.
நடைபாதையில் நிர்மலா நடக்க, சில அடி இடைவெளி கொண்ட அலங்கார வளைவுகளை, ரோட்டில் இறங்கி பின் நடைபாதையில் ஏறி, எனத் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ். "ரொம்ப சிம்பிள் நிர்மலா. முதலில் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்க, யாராவது நான் உன்னைத் தொந்தரவு செய்யறேன்னு நெனச்சிடப் போறாங்க ! ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம்!"
தொடரும் .....
2 மறுமொழி(கள்):
சஸ்பென்ஸாகவே இருந்த நிர்மலாவின் சோகத்துக்கான காரணம் இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. செல்வாவின் அதீத பதட்டம் அவனுக்கே புரியாத புதிராக இருக்குமே?
Body language- இதை 'மேனிமொழி' என விளித்திருப்பது அருமை.
அப்பாடி, வந்திட்டீங்களா கதைக்கு. நிர்மலாவுக்கு இப்படி ஒரு சோகமா. அட்டப்பாவமே.
சாதுர்யமாய் தீர்க்கட்டும் பிரச்சினையை.
Post a Comment
Please share your thoughts, if you like this post !