Thursday, March 13, 2008

கிராமத்து நடவு


(Photo courtesy: http://www.trekearth.com/)

ஏரின் கூர்இறங்க‌
இழுக்கும் காளைகள்
பிளக்கும் கரிசலில்
புரளும் மண்புழுக்கள்

சேற்றைப் பிசைந்து
சோற்றுக்கு வழிவகுக்கும்
மண்ஆடை நீர்வழிய‌
மகத்தான உழவர் மக்கள்

வகிடெடுத்து அடுக்கடுக்காய்
வரப்புகளின் நடுவில்
சிதறிப் பரவிக் கிடக்கும்
சிறுகொத்து நாற்றுக்கள்

மண் வணங்கிக்
கண் அளந்து
காற்றாட‌ நாற்றுநடும்
கலகலப் பெண்கள்

நீர் நிரம்பி வரப்பு தொட‌
நீந்தி விளையாடும்
ஊர்வலம் செல்லும்
நீலமேகக் கூட்டம்

மஞ்சள் மேனியில்
பச்சைத் தாவணியாய்
சிலுப்பிக் கொண்டிருக்கும்
சேற்று நாற்றுக்கள்

வரப்போர மரக்கிளையில்
வாகாய்த் தூளிகட்டி
தாலேலோப் பாட்டுக் கேட்டுத்
தூளியில் பிஞ்சுறங்கும்.

8 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

அனைத்து நாற்று வரிகளும் அமர்க்களம்!

//மஞ்சள் மேனியில்
பச்சைத் தாவணியாய்
சிலுப்பிக் கொண்டிருக்கும்
சேற்று நாற்றுக்கள்//

simply superb!

என்ன கொஞ்ச நாளாய் மஞ்சள் மேனி, பொன்னிற மேனி என்று போய்க்கொண்டிருக்கிறது? :-)

சதங்கா (Sathanga)said...

//simply supஎர்ப்!//

நன்றி நாகு.

//என்ன கொஞ்ச நாளாய் மஞ்சள் மேனி, பொன்னிற மேனி என்று போய்க்கொண்டிருக்கிறது? :‍) //

அதான் நீங்களும், சீனா ஐயாவும் சேர்ந்து பழைய நினைவைத் தூண்டிவிட்டீர்களே !!!

Kavinayasaid...

//மஞ்சள் மேனியில்
பச்சைத் தாவணியாய்
சிலுப்பிக் கொண்டிருக்கும்
சேற்று நாற்றுக்கள்//

எனக்கும் பிடித்த வரிகள்! நல்லாருக்குங்க சதங்கா.

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

அருமையாக இருக்கிறது, படமும் அருமை.
தொடருங்கள்...!

அன்புடன்,
ஜோதிபாரதி.

cheena (சீனா)said...

சதங்கா, கவிதை அருமை - கிராமப்புற நாற்று நடுதலை அழகாகப் படம் எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள். பாராட்டுகள் - வாழ்த்துகள். நாற்று நடும் போது, ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளைக் கூட விட்டு விடாமல் கவிதையில் எழுதியது நன்று. கரிசல் மண்புழுக்கள், ஆடை நீர் வழியும் உழவர்கள், வரப்பில் கிடக்கும் நாற்றுகள், நாற்று நடும் பெண்களின் கண்கள், மேகக்கூட்டங்கள், தூளியில் உறங்கும் மழலைச் செல்வங்கள் - அடடா அடடா - கஞ்சிக் கலயங்கள் மட்டும் மிஸ்ஸிங்

நல்ல கவிதை - நல் வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

//
//மஞ்சள் மேனியில்
பச்சைத் தாவணியாய்
சிலுப்பிக் கொண்டிருக்கும்
சேற்று நாற்றுக்கள்//

எனக்கும் பிடித்த வரிகள்! நல்லாருக்குங்க சதங்கா.//

மிக்க நன்றி கவிநயா.

சதங்கா (Sathanga)said...

//அருமையாக இருக்கிறது, படமும் அருமை.
தொடருங்கள்...!//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜோதிபாரதி, தொடர்கின்றேன், எல்லாம் உங்களைப் போன்ற உள்ளங்களின் ஆசி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

இதுக்குத் தான் உங்கள் பின்னூட்டம் வேண்டும் என்கிறது. நிறை/குறைகளை அப்படியே சொல்லுவதில் நீங்கள் வல்லவர்.

//அடடா அடடா - கஞ்சிக் கலயங்கள் மட்டும் மிஸ்ஸிங்//

சாப்பாட்டுத் தூக்கு என்று மட்டும் சிந்தனையில் இருந்தது, அது இசை போடுவது போல முயற்சி செய்தேன் வரிகள் அமையவில்லை, அதனால் அப்படியே பதிவிட்டு விட்டேன். சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

//நல்ல கவிதை - நல் வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

Post a Comment

Please share your thoughts, if you like this post !