Sunday, March 30, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

சிலருக்கு கவிதை பிடிக்கும், கதை எழுதினால் வாசிக்க மாட்டார்கள். சிலருக்கு கவிதையா, அது சுத்தப் பொய் என்று எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். சிலர் கட்டுரையோடு நின்று கொள்வார்கள். சிலர் சிலர் என்று சொல்லிய சிலருள் நானும் ஒருவன் தான்.

இந்த மூன்று தரப்பினருக்கும் பிடித்த மாதிரி, நம் தளத்திற்கு வரச் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்து விளைந்த கரு இது. மூன்று செடிகளையும் வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----
முதல் செடி (கவிதை)


Photo courtesy: largePhoto12_ownerdriver.com.au

முத‌ன் முத‌லில் காரோட்டி
முழுதும் அறியுமுன்

நெடுஞ்சாலை சேருகையில்
நீளமாய் வருமுன்னை

ப‌க்க‌மே வ‌ருகிறானே என
படபடக்க‌ மனம் பதறி

கையுத‌ற‌க் காலுதற
கண்டபடி உனைத் திட்டி

சிறு காரோட்ட பயந்திருக்க‌
பெருந் தேரோட்டிப் பறந்திடுவாய்.

நாள் செல்ல‌ச் செல்ல‌
நான் க‌ற்றேன் ந‌ன்றாக‌

குறுந் தெருக்க‌ளில் கூட‌
அருகினில் நீ வ‌ர‌

முன்னிருந்த‌ ப‌ய‌மில்லை
ப‌ட‌ப‌ட‌ப்புத் துளியுமில்லை

குட்டித் திமிங்கிலமாய்
ஒட்டியே வந்திடுவேன்.

எச்சூழ‌லும் ச‌மாளிக்கும்
இப்பெரிய‌ ஊர்தியோட்டி

அச்சிறு தெருவில்
எங்ஙன‌ம் வ‌ளைவாய் என‌

யோசித்து முடிக்குமுன்
லாகவமாய் வளைந்து செல்வாய் !

-----

இரண்டாம் செடி (கதை)


Photo courtesy: driverscdlstaffing.com

லூசி, எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் ஜன்னல் வழியா குதிக்காதே என்று. கதவு வழியா இறங்கு என்று செல்லமாகச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார் பேட்ரிஷியா.

மறுநாள் பயணத்தைத் துவங்கினர்.

இரவு எழு நெருங்கி வானம் கருக்கத் துவங்கியிருந்தது. சிரம பரிகாரம் முடித்து, வெண்டிங் மெஷினில் இருந்து மேத்யூ காஃபி எடுத்துக் கொண்டார். பேட்ரிஷியா தனது பர்ஸில் இருந்து சில்லரைகள் பொருக்கி, பக்கத்தில் இருந்த மற்றொரு வெண்டிங்க் மெஷினில் போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டார். அறுபது, அறுபத்தி ஐந்து வயதிருக்கும் இருவருக்கும்.

அந்த ரெஸ்ட் ஏரியாவின் வெளியில் வந்து வரிசையாக இருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர். காற்று சிலு சிலுவென வீசியது. நாம் இங்கிருந்து நியூயார்க் செல்ல இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். வண்டியைப் பற்றி ஒரு குறையும் இல்லை, இயற்கை அன்னை சோதிக்காமல் இருக்கணுமே என்று பேட்ரிஷியா சொல்ல, ஏதோ சிந்தனையின் ஊடே இருந்த மேத்யூ தலையை லேசாக ஆட்டி, ஆமாம் என்று ஆமோதித்தார்.

சிறிது நேரம் கழித்து பேட்ரிஷியா, டார்லிங்க், நான் போய் லூசிய அழைத்து வருகிறேன் என்று எழுந்தார்.

உள்ளே, லூசி வழக்கமாகத் தூங்கும் ஸ்லீப்பரில் காணவில்லை !

லூசி ... ஸ்வீடி ... என்று சில முறை மெதுவே அழைத்துப் பார்த்தார், ஒரு பதிலும் இல்லை.

போன ஸ்ப்ரிங்கின் போது, ஒரு அனாதை இல்லத்திலிருந்து அவளைத் தத்தெடுத்துக் கொண்டனர் மேத்யூவும், பேட்ரிஷியாவும். அவர்களின் வளர்ப்புப் பிள்ளையானாலும், சொந்தப் பிள்ளை போலவே பார்த்துக் கொண்டனர் இருவரும்.

பலமுறை அழைத்தும் பதில் வராமல் போகவே, மழை பொழியும் மேகம் போல் மனம் கருத்து, தூறலாய்க் குரல் தழுதழுத்தது பேட்ரிஷியாவுக்கு. ஸ்வீட்டீ .... என்று மயங்கி விழாத குறை.

இதுக்கு முன்னால் எக்ஸிட் 45 கிட்ட இருக்கின்ற ரெஸ்ட் ஏரியாவில் நிறுத்தினேன். பார்த்தேன், நீயும், லூசியும் ஸ்லீப்பரில் நல்ல உறக்கத்தில் இருந்தீர்கள். மெதுவே உங்கள் இருவரையும் அழைத்துப் பார்த்தேன். ஆறு மணி நேரம் ஓட்டிய களைப்பில் நீ அயர்ந்து உறங்கவே, உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணினேன். நான் மட்டும் கீழிறங்கிச் சென்று வந்தேன். நீயும், லூசியும் இருப்பதை உறுதி செய்து கொண்டு வண்டியை எடுத்து வந்து இப்ப இங்க இருக்கிறோம் என்றார் மேத்தியூ.

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. முன்னால் நீங்கள் நிறுத்திய இடத்தில் லூசியும் இறங்கியிருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஐயோ என் நெஞ்சே பதறுதே, பாவம் சிறு பிள்ளை, என்ன பண்ணுதோ, எங்க இருக்குதோ ... என்று பதறி, வண்டிய எடுங்க, நாம திரும்ப எக்ஸிட் 45க்கு போவோம் என்றார் பேட்ரிஷியா அழுது கொண்டே.

நிறுத்தங்களில் எப்போதுமே ஜன்னல் கண்ணாடிகளை நன்றாக மூடுவதில்லை. முன்னர் சரி, இப்போது தான் லூசி இருக்கிறாளே. எத்தனை முறை சொல்லியிருப்பேன். அதில் தாவிக் குதித்து இறங்க சிறு பிள்ளைக்குச் சொல்லியா கொடுக்கணும். அதுவும் இது சமத்து, அழகாகக் தாவி இறங்கி விடுவாளே. சமத்துப் பிள்ளையாக வாய்த்தது கூட தவறோ, ஐயோ என்று அழுது, மேத்யூவை விரைவு படுத்தினார்.

இந்தப் பக்கமே பேசிக் கொண்டிருந்து விட்டு, வண்டியை எடுக்க இடப்புறம் சென்ற மேத்யூ ஒரு கணம் திகைத்து நின்றார்.

"பேட்", "பேட்" என்று உணர்ச்சிவசப்பட்டு அழைத்தார் மேத்யூ. நாம் வெகு தூரம் போகத் தேவையில்லை, லூசி இங்கு தான் எங்காவது இருப்பாள். பார், ஜன்னல் கண்ணாடி சரியாக மூடாமல் இருக்கிறது.

அப்பொழுதும் பேட்ரிஷியாவிற்கு முழு மனது வரவில்லை. "ஏன் இது அங்கேயே இப்படி இருந்து, லூசி இறங்கியிருந்தால்" என்று இழுத்தார். இல்லையே, நான் தான் ஓட்டும் போது, ரொம்ப குளிருகிறது என்று கண்ணாடியை நன்றாக ஏற்றிவிட்டிருந்தேனே. இங்க இறங்கும் போது தானே லேசா இறக்கிவிட்டேன் என்று பதிலலித்தார் மேத்யூ.

இவர்களின் உரையாடலுக்குத் தடை போடுவது போல‌, எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, பேட்ரிஷியாவின் மேல் தொற்றி, மூச்சிறைக்க அவரது கைகளை நக்கி, சுற்றிச் சுற்றி ஓடி வந்தாள் லேப்ரடார் ரிட்ரைவர் இனத்தைச் சேர்ந்த கறுப்பு லூசி.

லூசி காணவில்லை என்றவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணாடிக் கதவு சரியா இருக்கிற‌தா என்று கூட பார்க்கத் தோன்றவில்லை பாருங்கள் என்று தன்னை நொந்து கொண்டார் பேட்.

-----

மூன்றாம் செடி (கட்டுரை)


Photo courtesy: truck1a_johnsantic.com

இங்கு வந்த புதிதில் ட்ரைவிங் பழகியது நம்ம ஊரு பயிற்சியாளர் ஒருவர் மூலம். ஒரு ட்ரைவிங் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு, பார்ட் டைம் ஆக வெளி ஆட்களுக்கும் கற்றுத் தருகிறார். ட்ரைவிங் போது ஏதாவது பேசிக் கொண்டே வருவார். அப்படி அவர் பேசியதில் வெகுவாக என்னைக் கவர்ந்த ஒன்று இங்கு செல்லும் ட்ரக்குகள் பற்றி. எந்த ஸ்டேட்டாக இருக்கட்டும், ஒரு ஹைவே எடுத்தால் எண்ணில் அடங்காத ட்ரக்குகள்.

"ட்ரக் ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்கறது ரொம்ப கடினம். நாலைந்து test எடுக்கணும். எல்லாம் ஒரே தடவை என்று இல்லை, பல பாகங்களாகப் பிரித்து எடுக்கலாம். நிறையத் தம்பதிகளாகத் தான் ட்ரக் ஓட்டுகிறார்கள். நியூயார்க்கிலிருந்து, கலிஃபோர்னியா வரை போகிறதெல்லாம் சர்வ சாதாரணம்.

வண்டியில் இருக்கும் பொருட்களைப் பொருத்து அவர்கள் காலம் கருத வேண்டும். சில நேரம் காய்கறி, பழங்கள் போன்றவை குறிப்பிட்ட காலத்தில் deliver செய்ய வேண்டும், அதனால் கணவன் ஓட்டுகையில் மனைவி ஓய்வெடுப்பதும், பின் மனைவி ஓட்டுகையில் கணவர் ஓய்வெடுத்தும் மாறி மாறி செலுத்துவார்கள். ஆங்காங்கே சில நிமிடங்கள் நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொள்வதோடு சரி."

இங்கிருக்கும் மக்கள் எல்லாத்திலும் ஒரு crazy-யா இருப்பது போலத் தான் ட்ரக் ட்ரைவிங்கும் செய்கிறார்கள் என்று எண்ணினேன். ஆனால் இதன் வருமானம் முக்கிய காரணமாக இருக்கிறது.

இவர்கள் ஓட்டும் ஹைவே மைல்கள் கூடக் கூட, சம்பளமும் கூடுகிறது. நீங்கள் இங்கு பல ஹைவேக்களில் இது போன்று விளம்பர அட்டைகள் பார்த்திருக்கலாம். "Experienced truck drivers needed, 45 - 70 cents per mile".

குறைந்த காலத்தில் நிறைந்த‌ வருமானம். நிறைய நாட்கள் ஓய்வெடுப்பது. அதுபோக இன்சென்டிவ், போனஸ், இத்தியாதி எனப் பல சலுகைகள்.

ஒரு ஓட்டுனர் இத்தனை மணி நேரம் தொடர்ந்து ஓட்டலாம். அதன் பின் கட்டாய ஓய்வு இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும் என அமெரிக்க "Federal Motor Carrier Safety Administration" நிறுவனம் "hours of service" என்று வரையறை வகுத்துள்ளது. அதன்படி ஒருவர் தொடர்ந்து பதினோறு மணி நேரங்கள் ஓட்டலாம். அதன் பின் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று விதிக்கிறது.

சீரான போக்குவரத்து, காலநிலை இருந்தால், ஒரு நாளில், இரு ஓட்டுனர்கள், குறைந்தது 600 லிருந்து 1000 மைல் வரை செல்கின்றனர்.

இவர்கள் சந்திக்கும் தொல்லைகள்: தட்பவெப்பம், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், ப்ரேக் டவுன், உடல் நலக் குறைவு, மற்றும் சில.

-----

மேல் விபரங்களுக்கு:

http://www.fmcsa.dot.gov/rules-regulations/topics/hos/hos-2005.htm
http://en.wikipedia.org/wiki/Trucking_industry_in_the_United_States

7 மறுமொழி(கள்):

கபீரன்பன்said...

பிரட், கோதுமை கஞ்சி, பிஸ்கட் எல்லாத்துக்கும் கோதுமை ஆதாரம் ஆனாலும் ஒவ்வொருத்தர் ருசி ஒவ்வொரு மாதிரி. நல்லா இருக்கு நீங்க ட்ரக்கை மையமா வைச்சு பண்ணின 'மூன்று செடி' கான்ஸெப்ட். மூணும் பிடிச்சு இருக்கு :)))

சதங்கா (Sathanga)said...

கபீரன்பன்,

//பிரட், கோதுமை கஞ்சி, பிஸ்கட் எல்லாத்துக்கும் கோதுமை ஆதாரம் ஆனாலும் ஒவ்வொருத்தர் ருசி ஒவ்வொரு மாதிரி.//

ஆஹா, ஒரே வரியில் அற்புதமா சொல்லியிருக்கீங்க. சூப்பர்.

//நல்லா இருக்கு நீங்க ட்ரக்கை மையமா வைச்சு பண்ணின 'மூன்று செடி' கான்ஸெப்ட். மூணும் பிடிச்சு இருக்கு :)))//

படிக்க ஆனந்தமா இருக்கு. மிக்க நன்றி.

நாகு (Nagu)said...

கவிதை அருமை! காரோட்ட ஆரம்பித்த தினங்களில் என்னதான் டிரக்கைப் பார்த்து பயப்படவில்லை என்கிற மாதிரி மனதுக்கு பட்டாலும், டிரக் கடந்து சென்று சில நிமிடங்கள் வரை ஸ்டியரிங் வீலை எவ்வளவு இறுக்க பிடித்திருக்கிறோம் என்பதில் தெரியும் மனதுக்குள் இருக்கும் பீதி! அப்பா அது தெளிய எவ்வளவு நாளாயிற்று...

இப்போது நான் செய்யும் வேலை டிரக் சம்பந்தப்பட்டதுதான். அமெரிக்கா வாழ்வதே டிரக்குகளினால் என்பார்கள். அனைத்து உணவு வகைகளும் நமக்கு வருவது டிரக்குகளினால். ஓட்டுனர்கள் எவ்வளவு நேரம் ஓட்டலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிய driver fatigue என்று கூகுளில் தேடிப் பாருங்கள். டிரைவர்கள் வேலையில் தக்க வைத்துக் கொள்வதுதான் இந்த தொழிலில் ஒரு பெரிய தலைவலியாம். இந்த கம்பெனிகளில் ஆண்டுக்கு 60% மேலே டிரைவர்கள் வேலையை விடுகிறார்கள். அவர்கள் வண்டி ஓட்டும்போதுதான் சம்பளமாம். வண்டி ரிப்பேர் ஆகிவிட்டால் சம்பளம் கிடையாது. அதனால் டிரைவர் நடையைக் கட்டி விடுவாராம். வண்டி சரி செய்தபின் வேறு ஒரு டிரைவருக்காக காத்திருப்பது அடிக்கடி நடக்குமாம்.

துளசி கோபால்said...

நடுவராவே இருந்து பழகி(??)ட்டதால் நடுவிலே இருக்கும் செடிதான் ரொம்பப் பிடிச்சது. அதுக்காக மத்த செடிகளைப் பிடிக்கலைன்னு இல்லை:-)

துளசி கோபால்said...

ட்ரக்ஸ் படங்கள் சூப்பர்

சதங்கா (Sathanga)said...

நாகு,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

//டிரக் கடந்து சென்று சில நிமிடங்கள் வரை ஸ்டியரிங் வீலை எவ்வளவு இறுக்க பிடித்திருக்கிறோம் என்பதில் தெரியும் மனதுக்குள் இருக்கும் பீதி!//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். குறிப்பாக வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் பீதி பற்றி கேட்கவே வேண்டாம்.

மற்றும் ட்ரக் பற்றிய தகவல்களுக்கும் நன்றிகள் பல. இது பற்றி விளக்கமாக ஒரு குட்டி புதினம் அளவுக்கு எழுத ஆசை. அப்பொழுது உங்களை விடுவதாய் இல்லை :))

சதங்கா (Sathanga)said...

துளசி டீச்சர்,

// நடுவராவே இருந்து பழகி(??)ட்டதால் நடுவிலே இருக்கும் செடிதான் ரொம்பப் பிடிச்சது. //

எனக்குத் தெரியும் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கும் என்று. உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் பற்றி ஒரு பதிவில் (புகைப்படம்) படித்தேன், பின் கபீரன்பன் அவர்களிடம் உங்கள் பூனையை வரையச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். சரிதானே ?

//அதுக்காக மத்த செடிகளைப் பிடிக்கலைன்னு இல்லை:‍)//

டீச்சரம்மா ஸ்டைல் :) இது பிடிச்சிருக்கு.

//ட்ரக்ஸ் படங்கள் சூப்பர்//

படங்கள் இணையத்தில் இருந்து எடுத்தது. புகைப்படக் கலைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்கள் சேரட்டும்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !