Monday, March 3, 2008

அபார்ட்மென்ட் எண் 26



மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ?

என்ன‌டா விசேச‌ம் ?

நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம்.

இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட நம்ம‌ வீட்டுக்கு விருந்துக்கு வர‌ சொல்லுங்க" என்று ர‌ம்யா சொன்னா !

எதுக்குடா இந்த பார்மாலிட்டி எல்லாம் !

அதெல்லாம் ஒன்னும் இல்ல. சரி சரி மறக்காம‌ சனிக்கிழமை ஆறு மணி போல வந்திரு. திருப்பியும் உனக்கு ரெண்டொரு நாள் முன்னால ஞாபகப்படுத்தறேன்.

வெள்ளிக்கிழமை அலுவலக நேரத்தில், சந்துருவைக் கூப்பிட்டு நாளை விருந்தை நினைவு படுத்தினேன்.

இந்தா இது தான் எனது அபார்ட்மென்ட் முகவரி. நேரா ஏர்போர்ட் ரோடுல வந்து, ஒரு ரெண்டு மைல் தள்ளி, இடது பக்கம் திரும்பும் "க்ரீன் மெடோஸ்" சாலைல திரும்பி ஒரு அரை மைலில், வலது புறம் இருக்கு அபார்ட்மென்ட். அபார்மென்ட்‍ உள்ள, அப்படியே கடைசி வரை வந்து வலது புறம் ...

நிறுத்து, நிறுத்து. வண்டிய விட வேகமா சொல்லிக்கிட்டே போறே ! நாங்க பத்து வருசம் இருக்க ஊர்ல, இப்ப வந்திட்டு, எங்களுக்கேவா !!!

இல்லடா, எதுக்கும் உனக்கு சுளுவா இருக்கட்டும்னு தான். நீ வ‌ந்திட்டு கால் ப‌ண்ணு, நான் வெளியில‌ வ‌ந்து நிக்க‌றேன்.

அடப்போடா ! நாங்கள்ளாம் எத்தன அபார்ட்மென்ட் பார்த்திருப்போம் ! நீ கவலைப்படாத, அதெல்லாம் நாங்க கரெக்டா வந்திருவோம்.

சனிக்கிழமை வழக்கத்தையும் விட குளிர் கடுமையாக இருந்தது. குளிர்காலம் ஆதலால் வெளிச்சம் சீக்கிரமே விடைபெற்று, சாயந்திரம் ஆறு மணிக்கே, கரியாய் அப்பியது இருள்.

ஏழு மணியாகியும், சந்துருவையும் அவன் குடும்பத்தாரையும் காணவில்லை. வீட்டில் பிள்ளைகள், கதவுப் பக்கம் ஒரு கண்ணும், தொலைக் காட்சியில் மற்றொரு கண்ணும் வைத்து, "சந்துரு மாமா எப்ப வருவாரு" என்று சதா நைத்துக் கொண்டிருந்தன.

இந்திய நேரப்படி ஆறு மணி என்பது, ஒரு எட்டு அல்லது ஒன்பது என்று நினைத்து வருவான் போல என்று எண்ணினேன்.

செல்லில் சந்துருவை அழைத்து, என்ன மாப்ள இன்னும் ஆளக் காணமே என்றேன். "இதோ வந்திட்டோம், அபார்ட்மென்ட் உள்ள வந்திட்டே இருக்கோம்" என்றான்.

*****

காரிருளில், ஆங்காங்கே மினுக் மினுக் என்று சிறிய ஒளிக் கசிவில், பரந்திருந்தது அபார்ட்மென்ட். நினைத்ததை விட அதன் வளாகம் பெரிதாய் இருப்பதை உணர்ந்தான் சந்துரு. நேரா வந்து, கடைசியில் வலது புறம் திரும்ப சொன்னானே ! திரும்பியாச்சு, அதோ அங்கே இருக்கு கட்டிடம் 4908. ஒரு ஓரமாக வசதியாய், பார்க் செய்தான் சந்துரு.

படபடக்கும் குளிர் காற்றில் மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் கட்டிடத்தின் நான்கு வாயில்களில், மூன்றாவது வாயில் வரை, மூன்று மாடிகளையும் ஏறிப் பார்த்துக் களைத்து ...

*****

"என்னடா பண்ற ?, ஏழு மணிக்கே அபார்ட்மென்ட் வந்திட்டேன் என்று சொன்னாயே ! கால் மணி நேரத்திற்கும் மேல ஆச்சு, எதாச்சும் ப்ரச்சனையா ?" என்று சந்துருவைக் கேட்டேன் செல்லில்.

படக்கென்று செல்லைக் கைப்பற்றி, "ஏங்க, உங்க விலாசத்துக்கு சரியா எப்படி வர்றது என்று சொல்றதில்லையா ?" என்று கோபித்துக் கொண்டாள் சந்துருவின் மனைவி கமலா.

இப்ப எங்க இருக்கீங்க ?

...

ஓ, அது அப்படியே பின்னாடி இருக்க பாதை. சரி கீழ இறங்கி வாங்க‌

...

4908 முன்னால வந்து, இடது மூலைல, கதவு எண் ஆறு, பார்கறீங்களா

...

அதுக்கு மேல பாருங்க, மங்கலான வெளிச்சத்தில் பதினாறு

...

அதுக்கும் மேல இருக்க இருபத்தி ஆறு தான்.

...

இதோ இங்க, என்று கதவைத் திறந்து கைகாட்டினேன். கீழே சந்துருவை கமலா கொஞ்சுவது மேலிருந்து தெளிவாகத் தெரிந்தது.

2 மறுமொழி(கள்):

Thamiz Priyansaid...

அப்பார்மெண்ட் கதை :)

சதங்கா (Sathanga)said...

தமிழ் பிரியன்,

வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றி !

Post a Comment

Please share your thoughts, if you like this post !