Wednesday, March 19, 2008

தோப்பு


(Photo: Thanks to World of Stock)

நித்தம் குயில் கூவும்
சத்தம் எதிரொலிக்கும்

நிமிர்ந்து வான் நோக்கின்
நீண்ட தென்னை குடைபிடிக்கும்

வ‌கைவ‌கையாய்ப் பல‌ ம‌ர‌ங்க‌ள்
ச‌ல‌ச‌ல‌த்து நின்றிருக்கும்

கைக்கெட்டும் தூரத்தில் அதில்
காய்க‌ள் பல‌ காய்த்திருக்கும்

உதிர்ந்த இலை காய்ந்து
சருகுத் தரை சரசரக்கும்

ப‌ம்புசெட்டு சிமெண்டுத் தொட்டி
பளிங்கு போல‌ நீரோடும்

கோலமிடப் புள்ளி வெய்யில்
இலைகளின் வழி யிறங்கும்

இருள் சூழும் நேர‌த்தில்
ம‌ர‌ வ‌ண்டு ரீங்க‌ரிக்கும்

க‌ர‌க‌ர‌க் குர‌ல் நீட்டி
கண்படா த‌வ‌ளை க‌த்தும்

ஆளில்லா ஆழ் கிணற்றில்
பால் நிலா நீராடும் !

13 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

சதங்கா, நண்ப

கவிதை எனில் இதுதான் கவிதை. கண்டதை அப்படியே எழுதுவது எளிது. காண்பதை, உள் வாங்கி, இரசித்து, அந்த ரசனையை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவது எளிதல்ல.

அழகு தமிழ், எளிய சொற்கள், ரசிக்கும் அடிகள்.

நிலா நீராடும் கிணறு, நீர் பாயும் தொட்டி, கத்தும் தவளை, ரீங்கரிக்கும் வண்டு, கோலமிடும் வெயில், சரசரக்கும் இலை, காய்களுடன் மரங்கள், குயில் கூவும் தென்னஞ்சோலை - அடடா அடடா - இச்சூழ்நிலை வாய்த்தால் பிறவிப்பயன் எய்து விடலாம்.

மிகவும் இரசித்தேன் - உள மகிழ்ந் தேன். பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துகள்

cheena (சீனா)said...

இயற்கை தான் கற்பனைக்கவிக்கு கை கொடுக்கும். இறைவன் போல் தென்னஞ்சோலையில் மா வந்து காய்த்துத் தொங்கும். வெயில் நுழையா சோலையில் அடர்ந்த மரம் சலசலக்கும். அப்போது வெயில் புள்ளி வைத்துக் கோலம் தானே போடும். சுவையான கவிதை. சுருதியான ஓசை. குயிலும் வண்டும் இசைத்தால் நம் மிசைகள் இனிக்குமல்லவா.

நல்ல கவிதை. இயல்பான கற்பனை. இன்சுவை.

வாழ்த்துகளுடன் பாராட்டுகள்

செல்வி ஷங்கர்.
---------------
(என் துணைவியார் - சீனா)

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா & செல்வி ஷங்கர் மேடம்,

தம்பதி சமேதராய் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. ஐயா தான் என்று நினைத்தேன். வாழ்த்துவதில் நீங்களும் வல்லவராய் இருக்கிறீர்கள்.

//மிகவும் இரசித்தேன் - உள மகிழ்ந் தேன். பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துகள்//

//நல்ல கவிதை. இயல்பான கற்பனை. இன்சுவை.

வாழ்த்துகளுடன் பாராட்டுகள்//

இன்று மட்டும் ஒரு பத்து, பதினைந்து முறை உங்கள் இருவரின் பின்னூட்டமும் படித்து விட்டேன். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் நேரம் செலவழித்து வந்து வாசித்துப் பாராட்டியமைக்கு மீண்டும் நன்றி.

நாகு (Nagu)said...

ஆஹா - அப்படியே என் துவக்கப்பள்ளி மைதானம்/மாந்தோப்புக்கு போய்விட்டேன். எளிய இனிய கவிதை.

சீனா ஐயா குடும்பத்தினரின் பாராட்டை அப்படியே ரிபீட்டு...

Anonymoussaid...

மாங்காய் படம் போட்டுவிட்டு தேங்காய் மரம் பற்றி எழுதுகிறீர்களே. மாங்காய் பற்றி ஒரு வார்த்தையும் காணோமே?

புலவரின் கண்ணுக்கு மாங்காய் தேங்காயாகத் தெரிந்ததோ?

லதா நாகு.

cheena (சீனா)said...

லதா, கனவுலகில் சஞ்சரிக்கும் கவிஞனுக்கு மா தென்னை பலா எனக் கனவு வரும். குடும்ப நண்பர்களான லதா சதங்காவைச் சதாய்ப்பதில் தவறொன்றுமில்லை.

வாழ்த்துகள் லதா - நாகு

எனது துணைவியாரின் வலைப்பூ பக்கம் வாருங்களேன்

http://ennassiraku.blogspot.com

கவிநயாsaid...

அழகான கவிதை, சதங்கா!

//கோலமிடப் புள்ளி வெய்யில்
இலைகளின் வழி யிறங்கும்//

//ஆளில்லா ஆழ் கிணற்றில்
பால் நிலா நீராடும் !//

இவை எனக்குப் பிடித்த வரிகள்! அழகான ரசனை!

சதங்கா (Sathanga)said...

நாகு

//சீனா ஐயா குடும்பத்தினரின் பாராட்டை அப்படியே ரிபீட்டு...//

வாழ்த்துக்கு நன்றி.


லதா,

//மாங்காய் படம் போட்டுவிட்டு தேங்காய் மரம் பற்றி எழுதுகிறீர்களே. மாங்காய் பற்றி ஒரு வார்த்தையும் காணோமே?

புலவரின் கண்ணுக்கு மாங்காய் தேங்காயாகத் தெரிந்ததோ?//

மன்னிச்சிக்கோங்க. பலமரங்களில் மாமரமும் ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சரி, நாகு தானே தட்டச்சிருப்பாரு, எப்படி 'தேங்காய் மரம்' என்று எழுதினார். தென்னை மரம் என்று தானே வரும் ?

நாகுவ ஒரு உலுக்கு உலுக்கிறாதிங்க ப்ளீஸ் ;)

ஜீவிsaid...

"ஆளில்லா ஆழ்கிணற்றில்
பால் நிலா நீராடும்.."
--ஆஹா..என்ன ஒரு அழகான
கற்பனை?...மிகவும் ரசித்தேன்..
வாழ்த்துக்கள், சதங்கா!

தென்றல்sankarsaid...

தோப்பிற்கு சென்றதுபோல் இருந்தது.
சூப்பர்

சதங்கா (Sathanga)said...

கவிநயா, தென்றல் சங்கர்,

வாசித்தலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

ஜீவி,

//"ஆளில்லா ஆழ்கிணற்றில்
பால் நிலா நீராடும்.."
--ஆஹா..என்ன ஒரு அழகான
கற்பனை?...மிகவும் ரசித்தேன்..
வாழ்த்துக்கள், சதங்கா!//

ரொம்ப நாட்கள கழித்து நம் வலைப் பக்கத்திற்கு வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா. கவிஞரின் தோழர் பாராட்டு கிடைப்பதும் அளவிலா சந்தோசமே !

ஜீவிsaid...

அன்புள்ள சதங்கா,
தங்கள் பதிவுகளை அடிக்கடி படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.ஒரு திருத்தம். கவிஞரின் தோழர் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை. பலதடவை பார்த்துப் பேசியிருக்கிறேனே தவிர
தனிப்பட்ட முறையில் பழக்கம் என்கிற அளவில் பேறு பெறவில்லை.

Post a Comment

Please share your thoughts, if you like this post !