அதிகாலை இரண்டு மணிக்கு ட்வின் சிட்டி எனப்படும் மினியாபோலிஸ் - செயின்ட்பால் விமான நிலையத்தில் தரையிறங்கியது நார்த் வெஸ்ட் ஏர்லயன்ஸ் விமானம்.
சிங்கப்பூரிலிருந்து எட்டு மணி நேரம் கழித்து ஜப்பானில் ஒரு தரையிரக்கம். ப்ளேன் மாற்றி அடுத்து பத்து மணி நேரம் கழித்து இப்போது. இதுவரையிலும் வந்ததே அப்பாடா என்று இருந்தது. இங்கிருந்து, அரை அல்லது முக்கால் மணி நேரம் தான் டென்வர் என்று நண்பன் இளங்கோ கூறியது நினைவில் இருந்ததால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் நந்தகுமாரன். நந்தாவுக்கு இது தான் முதல் முறை இத்தனை தூர விமானப் பயணம்.
டென்வருக்கு ப்ளேன் நாலு மணிக்கு என்று அறிவிப்புப் பலகை சொல்லியது. இன்னும் இரண்டு மணி நேரம் என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒரு காபி சாப்பிடலாம் என்று சுற்றிலும் பார்த்தான், எட்ட ஒரு கடை தெரியவே அங்கே சென்று, பாக்கெட்டில் கையை விட்டவன் திடுக்கிட்டான்.
முகம் கருத்து, அங்கேயே பெட்டியை எல்லாம் பிரித்துப் போட்டு, தேடிய பர்ஸைக் காணாததால் பரிதவித்தான். அவ்வழியே சென்ற ஒரு வாட்ட சாட்டமான ஆப்பிரிக்க அமெரிக்கர், நந்தாவை ஒரு பார்வை பார்த்து.
Hey, waz up ? Any thing I can help you ? என்றார்.
திரு திரு முழி (வழக்கமான) ஒன்றை முழித்து, It's ok, I can manage என்றான்.
குனிந்து நிமிர்ந்து தேடியதில், என்னது ஒரே எடஞ்சலா இருக்கு என்று இடுப்பில் தொங்கிய pouch-ஐ பின்னுக்குத் தள்ளிய போது தான் நினைவுக்கு வந்தது, பாஸ்போர்ட், செல், பர்ஸ் எல்லாவற்றையும் ப்ளேன் மாறியவுடன் அதனுள் வைத்தது.
"உனக்குப் பொறுமையே இல்ல, எதுக்குக்கெடுத்தாலும் tension. ஒரு ரெண்டு செகண்ட் யோசிக்கறதில்லை". மனதில் உதித்தது மனைவியின் உளரல், மன்னிக்கவும் குரல்.
"நீங்க போய் செட்டில் ஆகிட்டு கூப்பிட்டுக்கங்க. அதுவரை நான் இந்தியா செல்கிறேன்" என்று அம்மா வீட்டிற்கு ஈரோடு சென்றுவிட்டாள் தேன்மொழி. அதான் நந்தா மட்டும் சிங்கையிலிருந்து இங்கே வந்திருக்கிறான்.
கொடுமையான அபார்ட்மென்ட் வாழ்க்கை, மூனு பெட்ரூமில் ஒன்பது பேர். அதைவிடக் கொடுமை அப்பார்ட்மென்ட் neatness. அதனினும் கொடுமை தினம் தினம் Interview. என்னவோ படித்து, என்ன வெல்லாமோ skill set வளர்த்து, எந்த எந்த job-ற்கோ interview attend பண்ணிக் கொண்டிருந்தான்.
ஆச்சு ரெண்டு மாசம். எல்லாம் தாண்டி, எதோ ஒரு skill set-ல வேலையும் கிடைத்தது. அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் புரிந்தது. மனதுள் சிரித்துக் கொண்டான்.
இன்று சனிக்கிழமை. டென்வரிலிருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டும். consultancy-யில் இருந்து e-ticket மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ரெண்டாவது ஸ்டேட் தள்ளியிருக்கிற டெக்சாஸிற்கு ஒரு சுற்று சுற்றி, ஒரு முறை தரையிறக்கம் லாஸ் வேகஸில் வேறு.
தேதிகளையும், பெயரையும் சரிபார்த்து print பண்ணிக் கொண்டான். திங்கள் இரவு ஹூஸ்டனில் நண்பன் ரவியுடன் கழித்தான். பழங்கதைகள் பல பேசி இரவு படுக்கச் செல்கையில், ஒரே சிந்தனை. போயும் போயும் செவ்வாய்கிழமை வேலையை ஆரம்பிக்க வேண்டுமா ? புதன் கிழமை ஆரம்பிச்சா எப்படி இருக்கும் ? பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்களே ! என்று சிந்தனையின் எல்லையில் இருந்த நந்தாவை, ரவியின் குரல் களைத்தது. "என்ன மாப்ள ஒரே flashback-ஆ ஓடுதா ?"
நந்தாவின் மனதுள் "சொல்லலாமா ? வேணாமா ? சொன்னா, டேய் நீ இருக்கறது அமெரிக்கா-ல, அதுவும் IT job பாக்கறவன். நீயே இப்படி-னு திட்டுவானோ" என்று, ஒன்னுமில்ல மாப்ள, வீட்டு நினைப்பு என்று சமாளித்தான்.
Consultancy-ல எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் நந்தா. பெரிய சண்டையே நடந்தது தொலைபேசியில். "ஒன்னும் செய்ய முடியாது நந்தா, afterall ஒரு கிழமைக்காக ஏன் இவ்வளவு tension ஆகறீங்க, நீங்க செவ்வய்க்கிழமை client எடத்தில இருக்கீங்க" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிவிட்டார்கள்.
வேலையும் ஓரளவு துரிதகதி அடைந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், ஒருவாரத்தில் தனி அபார்ட்மென்ட் பார்த்து, பத்து நாள் கழித்து வருவதாகச் சொல்லிப் பதிந்து கொண்டான். தேன்மொழிக்கு தொலைபேசியில் எல்லா விபரங்களும் சொல்லி அவளும் பதினைந்து நாட்கள் கழித்து வருவதாகச் சொன்னாள்.
அபார்ட்மென்ட் புக் பண்ணியாச்சு. அடுத்து வீட்டு சாமான்கள் வாங்க வேணுமே. நந்தாவுக்கு, ரவி யோசனை சொன்னான். "மாப்ள, நம்ம இந்தியன் ஸ்டோர்களில் 'மூவிங்க் சேல்ஸ்' notice போட்டிருப்பாங்க, அங்க போகும் போதெல்லாம் பாரு. அப்புறம் உங்க office-லயும் பாரு. உனக்குத் தேவையானது cheap-ஆ கிடைக்கும்" என்று.
microwave - $80
21" TV - $ 350
Honda Accord 1998 - Only 95 k, Brand new tires - $8000 OBO
பெரிய list-ல் நந்தா, அவனுக்கு தேவையானதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அட போங்கப்பா ... இவ்ளோ $ குடுக்கறதக்கு, நான் புதுசே வாங்கிடுவேன். பழசுக்கு எதுக்கு இவ்ள தெண்டம் அழுகணும் என்று எறிச்சல் பட்டான் ரவியிடம்.
ரவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத நந்தா, அனைத்துமே புதிதாய் வாங்கிச் சேர்த்தான். எல்லாம் 'தேனை' impress பண்ண வேண்டுமென்ற தலையாய நோக்கமும் அதற்குக் காரணம். மற்றொன்று பழையதை வாங்கி ஏதாவது repair-னா, அதுக்குக் வேறு அழ வேண்டும்.
தேனும் வந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், project முடிந்து விட்டது. மீண்டும் Interview படலம் ஆரம்பம் ஆனது. திரும்பவும் எந்த எந்த job க்கோ interview attend பண்ணி கடைசியில், ப்ஃரீமாண்டில் வேலை கிடைத்தது.
கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா ? பாருங்க எல்லாத்தையும் புதுசா வாங்கி வச்சிருக்கீங்க. இங்க இருந்து எடுத்திக்கிட்டுப் போற மாதிரியாவா இருக்கு. என் ப்ஃரண்ட் லஷ்மி வீட்டுக்காரருக்கெல்லாம் Relocation cost consultancy-யே குடுத்துச்சாம். அந்த மாதிரி உங்க consultancy குடுக்குமா ? அதுவும் இல்ல. எப்பத் தான் திருந்தப் போறீங்களோ ...
எல்லாம் செவ்வாய்க் கிழமை வேலைக்குச் சேர்ந்த நேரம் தான் என்று நொந்து கொண்டான் நந்தா.
மறுநாள், அனைத்து இந்தியன் ஸ்டோர்களிலும் நந்தா, மூவிங் சேல்ஸ் poster ஒட்டிக் கொண்டிருந்தான்.