Monday, April 14, 2008

எதிலும் உன் நினைவாய் !



வெற்றிலை இதழ் சிவப்பும்,
மருதாணி நகச் சிவப்பும்,
முன்கோப முகச் சிவப்பும்,

மெல்லிய இடைச் சிவப்பும்,
உள்ளங் கைச் சிவப்பும்,
உன்பாத விரல் சிவப்பும்,

உள்ளத் துள் கரைந்து
உருகும் இரும் பென‌
உன்நினைவால் நான் சிவந்தேன்.

பச்சரிசிப் பல் சிரிப்பும்,
எளிற்தெரியும் வெளிர் சிரிப்பும்,
நகக்கீற்றுப் புன் சிரிப்பும்,

மயக்கும் மன்மதச் சிரிப்பும்,
மணக்கும் மல்லிகைச் சிரிப்பும்,
கலகலக்கும் வெண்கலச் சிரிப்பும்,

உள்ளத் துள் நிறைந்து
சலசலக்கும் அருவி யென‌
உன்நினைவால் நான் சிரித்தேன்.

உருகும் மனச் சிறப்பும்,
உதவும் குணச் சிறப்பும்,
மிதமான மொழிச் சிறப்பும்,

நேர்கொண்ட நடைச் சிறப்பும்,
கண்பேசும் காந்தச் சிறப்பும்,
விண்போற்றும் மதிச் சிறப்பும்,

எதிலும் உன் நினைவாய்
இதயம் சிந்திக்க‌,
உன்நினைவால் நான் சிறந்தேன் !

9 மறுமொழி(கள்):

தமிழ்said...

இந்த மாதிரி கவிதை
வாசிக்கும்பொழுது தான்
தமிழின் பெருமையே
தெரிகிறது

வாழ்த்துக்கள்

cheena (சீனா)said...

சதங்கா,

அருமையான கவிதை - அழகுதமிழ்ச் சொற்கள் - சிவப்பும், சிரிப்பும், சிறப்பும் ஆக கவிதை சிவந்து, சிரித்து, சிறக்கிறது.

//உதவும் குணச் சிறப்பும்,//

அருமையான அடி - வாழ்த்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

கவிதை அருமை!
வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர்,

வாசித்தலுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

மிக்க நன்றி. உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் அடுத்த படைப்பிற்கு எடுத்துச் செல்கிறது.

சதங்கா (Sathanga)said...

மிக்க நன்றி ஜோதிபாரதி.

Kavinayasaid...

கவிதை சூப்பர்! முடிவு வெகு அழகு! இதுதான் புரியல:

//எளிற்தெரியும்//

அப்படின்னா என்ன? எனக்குத் தெரிஞ்சது 'எழில்'தான்...

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

வாசித்து ரசித்ததற்கு மிக்க நன்றி.

////எளிற்தெரியும்//

அப்படின்னா என்ன? எனக்குத் தெரிஞ்சது 'எழில்'தான்...//

ஈறு தெரிய சிரிப்பது, வெள்ளையாய், பொய் கலக்காதது என்ற எண்ணத்தில் எழுதியது. தவறென்றால் சுட்டிக்காட்டவும்.

Kavinayasaid...

எனக்குத் தெரிந்த வரை (அது ரொம்ம்ம்பக் கொஞ்சம்தான்) அந்த மாதிரி சொல் இருக்கிறாற் போல தெரியவில்லை.

Post a Comment

Please share your thoughts, if you like this post !