Friday, July 31, 2009

எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !

அரும்பாடு பட்டு, காலம் காலமாய் காத்திருத்தலுக்குப் பின் ஏற்பாடான நிகழ்ச்சி தான் இவ்விழா. தேனாம்பேட்டை காமராஜர் நினைவரங்கில் எனது முதல் புத்தக வெளியீட்டு விழா.

மின் பதிப்பு :
null


உங்களுக்கான பிரதிக்கு "sathanga at gmail dot com" க்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தலைமை ஏற்று பேச எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்கள். ம‌ற்றும் வாழ்த்திப் பேச‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள், சில‌ சினிமா வி.ஐ.பிக்க‌ள், சாலமன் பாப்பையாவும் கடைசி நேரத்தில் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ஸோ ஸ்வீட்டா இவ‌ர்க‌ளோடு நானும் !

அரங்கு நிறைந்த கூட்டம் என்று இல்லை என்றாலும், ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பிரபலங்களைப் பார்ப்பதற்கான கூட்டம் தான், இருப்பினும் எனக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தான் செய்தன.

எழுத்தைப் போலவே பேச்சிலும் எளிமை காத்தார் ராமகிருஷ்ணன். "வருங்காலத்தில் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். ப்லாகில் எழுதுவது என்று நின்றுவிடாமல் பத்திரிகைகளிலும் கால் பதிக்க வேண்டும். முடிந்தால் திரைத்துறைக‌ளிலும் கூட" என்று அன்பொழுக‌ பேசினார். என‌து க‌தைக‌ளில் சில‌வ‌ற்றிலிருந்து, சில‌ வ‌ரிக‌ள் குறிப்பிட்டு பேசிய‌து மெய்சிலிர்க்க‌ வைத்த‌து என்னை.

எழுத்தைப் போல‌வே பேச்சிலும் வீச்சைக் காண்பித்தார் ஜெய‌காந்த‌ன். "முத‌லில் ஒருவ‌னுக்கு மொழிப் ப‌ற்று இருக்க‌ணும். பதவி, ஆனவம், பரிசுக்காக எல்லாம் எழுதுவதைத் தவிர்க்கணும். அதை விட்டு விட்டு இன்னும் பலரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜால்ரா அடித்து எழுதுவ‌தெல்லாம் எழுத்தா ? இளைஞ‌ர்க‌ளின் ச‌க்தி மாபெரும் ச‌க்தி. அவ‌ர்க‌ள் ஓர‌ணியில் திர‌ண்டு த‌மிழை வாழ‌ வைக்க‌ணும்" என்று சுறுக்க‌மாக‌ முடித்துக் கொண்டார்.

ப‌ல‌ரும் அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளைப் ப‌திய‌, க‌ரகோஷ‌த்தின் எதிரொலி காதுக‌ளில் சுழ‌ன்ற‌து சில பல நிமிட‌ங்க‌ள்.

ப‌திவ‌ர்க‌ள் மீட்டிங்கின் போன்டா ஃபேம‌ஸ் இங்கும் ஏற்பாடு செய்திருந்தோம். காரைக்குடி உண‌வ‌க‌த்தில் இருந்து ம‌திய‌ச் சாப்பாடு. பின் மாலையில் சால‌ம‌ன் பாப்பையாவின் மாறுப‌ட்ட "ப்லாகர் vs எழுத்தாளர்" ப‌ட்டி ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல‌, ந‌ண்ப‌ர்க‌ளின் அன்புத் தொல்லை தாங்காம‌ல் ப‌ட்டிம‌ன்ற‌மும் சேர்க்கும்ப‌டி ஆன‌து.

எல்லாம் முடிந்து, "முத‌ல் பிர‌தியை பெற்றுகொள்ள‌ ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ளை மேடைக்கு அழைக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் என‌து ந‌ண்ப‌ர் தெரிவிக்க‌, ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ள் த‌யாராய் வ‌ந்து நிற்கிறார். என்னால் எழுந்து செல்ல‌ முடிய‌வில்லை ! காலை ஆட்டிப் பார்க்கிறேன், கைக‌ளால் காலைத் தூக்கிப் பார்க்கிறேன், ம், ஹிம்...

"என‌க்குத் தெரியும் முன்னாலே இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கும் என்று. நீங்க‌ பாட்டுக்கு கால‌ ஆட்ட‌றீங்க‌, கைய‌த் தூக்க‌றீங்க‌, ஏதேதோ புரியாத‌ மொழியில‌ உள‌ர்றீங்க‌. என்ன‌ங்க, 'புத்த‌க‌ வெளியீட்டு விழாவா ?' க‌ன‌வில‌ ஐயோ, ராமா !" என்று என் ம‌னைவி, அர்த்த ராத்திரியில் த‌லையில் அடித்துக் கொள்வ‌தை, க‌ண்க‌ள் க‌சக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!

Wednesday, July 29, 2009

தங்கக் கலசம்


Photo Credit: wikimedia.org

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தியின், கற்பனைக் கதையாக்கம்.

***

"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்க‌ல் ஷாப்பிலிருந்து செல்வி.

"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி போயிட்டே. கண்டுக்கவே மாட்டேங்கிற இப்பல்லாம்" என்றார் எலக்ட்ரிக் கடை மாணிக்கம், செய்தித்தாள் வாசிப்பினூடே.

"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே. நம்ம தம்பி, சின்னத்தா மகென் கணேசன், விசா கெடச்சு துபாய்க்கு போனாப்ல. அதேன் சென்னைக்குப் போயி ப்ளைட் ஏத்திவிட்டு வந்தேன். ந‌ம‌க்கு இதேன் கெதினு இந்தா திரும்பி வ‌ந்திட்டேன்ல‌ !!!" என்றான் ஏகாம்ப‌ர‌ம்.

இது அவருக்கும் தெரியாமலில்லை, இருந்தும் ஒரு சின்ன வெரிஃபிகேஷன்.

செவ்வூர் பிஸின‌ஸ் ம‌ட்டும் ப‌த்தாது, ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் எல‌க்ட்ரிக் ச‌ப்ளை மாணிக்க‌ம் தான். அத‌னால‌ பட்டனத்துல செய்யும் ஆர்டர், ந‌டுநிசி சரக்கு ர‌யில்ல வந்து ப‌க்க‌த்து ட‌வுன்ல‌ இற‌ங்கும். அதை எப்போதும் கையோடு எடுத்து வ‌ந்துவிடுவார் மாணிக்க‌ம். போத‌த‌ற்கு ஆடு,மாடு,விவ‌சாய‌ம் என‌ ப‌ல்துறைக‌ளிலும் கால் ப‌தித்திருப்ப‌வ‌ர்.

"ச‌ரி ச‌ரி, ம‌ற‌க்காம‌ சாய‌ந்திர‌ம் ந‌ம்ம‌ தோட்ட‌துக்கு வ‌ந்திரு. நாளைக்கு ஆட்டுச் ச‌ந்தைக்கு ஆடுக‌ள‌ ரெடி ப‌ண்ண‌னும். வ‌ந்துருவியா, இல்ல‌ போன் போட்டுச் சொல்ல‌ணுமா ?" என்ற மாணிக்க‌ம் அண்ண‌னின் ந‌க்க‌லுக்கு, சிறிதும் கோப‌ப்ப‌டாம‌ல் "கவலப்படாதீங்க, வ‌ந்திர்றேண்ணே !" என்றான் ப‌வ்விய‌மாக.

இதே போல‌ எடுப்பார் கைப்பிள்ளையாக‌ எல்லோருக்கும் வேலை பார்க்கும் "மாது" தான் ந‌ம்ம‌ ஹீரோ ஏகாம்ப‌ர‌ம்.

வான் முட்டும் தென்னையும் ப‌னையும், நெருக்கி வளரும் நெல் க‌திரும், அடர்ந்து வளரும் க‌ரும்பு வ‌ய‌ல்க‌ளும், ஆங்காங்கே மோட்டார் பம்பு செட்டுகளும், அல்லி பூத்த குளத்தங்க‌ரைக‌ளும், கோவில் மண்டபப் ப‌டித்துறைக‌ளும், ஆற்றோட்ட‌ப் பாதை என‌ வ‌ளைந்து நெளிந்த‌ வீதிக‌ளும், அதில் ப‌ல‌ வீடுக‌ளும், ஊருக்கோர் க‌டைவீதியும் என‌, பெரிய‌ குறை என்று எதுவும் சொல்ல‌ முடியாத‌ அள‌வில் திக‌ழ்ந்த‌து செம்மண் புழுதி பறக்கும் செவ்வூர்.

"ஆத்தாவுக்கு கோவில் க‌ட்டி ப‌ன்னெண்டு வ‌ருச‌ம் ஆச்சு. ஒரு கும்பம் வச்சு, கும்பாபிஷேகம் பண்ணனும்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், யாராவ‌து கேக்க‌ணுமே... இந்த‌க் க‌ட்டை போற‌துக்குள்ள‌யாவ‌து க‌ட்டுமான‌த்த‌ பாருங்க‌ப்பூ, நானும் இருந்து பார்த்துட்டுப் போறேன்" என்று பொக்கை வாய் திற‌ந்தார் என்ப‌து வ‌ய‌து அர்ச்சுன‌ன், குள‌த்த‌டி மீட்டிங்கில் ஒரு நாள்.

"என்ன‌த்த‌ ஆண்டு அனுப‌விச்சாலும் போற‌துக்கு யாருக்கு தான் மனசு வருது. இங்கேயே இருப்பதற்கு ஏதாவ‌து சாக்கு வேற‌ ! என்ன‌ பெருசு ?!" என்றார் ரைஸ்மில் முத்து.

குவ‌ளைத் தேனீரை, குட‌ம் குட‌மாய் கொட்டிய‌து போல த‌க‌த‌கத்த‌து குள‌ம். ந‌ண்டும் சிண்டுமாய் சில‌ வாண்டுக‌ள் வ‌ந்து த‌ப‌த‌ப‌வென‌ நீரில் குதித்த‌ன‌. ப‌ட்டாம்பூச்சியென‌ நீந்தி ஆட்ட‌மும் போட்ட‌ன‌. க‌ரையோர‌ நிழ‌ல் ம‌ர‌ங்க‌ள் காற்றில் க‌விதை பாடின‌. சற்று தள்ளி, ஒரு சுற்று த‌னைச் சுற்றி, ம‌றுமுனை முள்ளில் மாட்டி, சில‌ அடிக‌ள் ந‌ட‌ந்து வ‌ந்து, சேலைத‌னைக் காய‌வைத்தாள் செம்ப‌க‌ப் பாட்டி.

'அருணா ஆடியோஸ்' என்று சிகப்பில் பெரிதாக எழுதிய பச்சைக் குழாய்களை கழுவி எடுத்துக் க‌ரை ஏறினான் ஏகாம்பரம்.

"யாருய்யா அது, ஏகாம்பர‌ம் தான‌ ?" என அவளைக் கடந்த ஏகாம்பரத்தை நிறுத்தினாள் பாட்டி.

"என்ன‌ கெழ‌வி, நாந்தேன். என்ன‌ விச‌ய‌ம் தெரிய‌ணும் உன‌க்கு இப்ப‌ ?" என்றான் கிழ‌வியின் எதிர்பார்ப்பறிந்த‌ ஏகாம்ப‌ர‌ம்.

"இந்த‌ ஆம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌மோ பேசிக்கிறாக‌ளே, என்ன‌து அது ?" என்றாள்.

"ஹிம்... பொம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌ பேசிக்கிறாக‌ளோ அதே தேன்" என்றான்.

"அதில்ல‌டா, கோவில் கும்பாபிஷேக‌ம்னு ஏதோ காதில‌ விழுந்த‌தே !"

"காரியத்தில குறியா இருப்பியே. ஏன், நீயும் இருந்து அதெல்லாம் பார்த்துட்டு போக‌ணுமாக்கும் ?!"

"அதிலென்ன‌ த‌ப்பு ! நீந்தேன் எல்லோரு வீட்டுக்கும் போறியே. அப்ப‌டியே சொல்ல‌ வேண்டிய‌வங்க‌ கிட்ட‌யும் சொல்லி, கும்பாபிஷேக‌ம் ந‌ட‌த்த‌ வ‌ழிய‌ப் பாருப்பூ. புண்ணிய‌மாப் போகும் உனக்கு !"

ஏகாம்ப‌ர‌மும் செல்லும் இட‌மெல்லாம் சேதி ப‌ர‌ப்ப‌, ம‌துரை மீனாட்சி கோவில் ப‌ட்ட‌ர் தியாக‌ர‌ஜ‌னை வைத்து ப‌ட்டென்று கும்பாபிஷேக‌ தேதியும் குறித்த‌ன‌ர். தேரடியில் ஊர் கூடி ஒரு கூட்டமும் போட்டனர்.

"ஏய்யா ப‌ண்ற‌து ப‌ண்றோம். த‌ங்க‌த்தில‌ ஒரு கும்ப‌ம் செஞ்சு, கொஞ்ச‌ம் விம‌ரிசையா கும்பாபிஷேக‌த்த‌ ந‌ட‌த்துவோமே ! ப‌க்க‌த்து ப‌ட்டி தொட்டி எல்லாம் போக‌ ப‌ட்ட‌ன‌த்து ஆளுக‌ளும் அப்ப‌ தான் ப‌டை எடுக்கும் நம்ம கோவிலுக்கு !" என்றார் அர்ச்சுன‌ன்.

'கேக்க நல்லாத்தேன் இருக்கு ! அவ்வ‌ள‌வு த‌ங்க‌த்துக்கு எங்க‌ போற‌து ?' என வாய் பிளந்தது கூட்டம்.

'மெல்லிசா தகடு போல செஞ்சு கும்பத்துல சுத்திருவோம்' என்று முடிவு செய்தனர்.

சிறுக‌ச் சேக‌ரிக்கும் சிறு குருவியின் தானிய‌மாய், த‌ங்க‌த்தை சேக‌ரிக்க‌ ஒரு சிறு குழுவும் உருவான‌து.

செம்ப‌க‌ம் - க‌ம்ம‌ல், சுமார் ஒரு கிராம்
அர்ச்சுன்ன‌ன் - மோதிர‌ம், கா ப‌வ‌ன்
முத்து - தாய‌த்து, அரை ப‌வ‌ன்
செல்வி - மூக்குத்தி (க‌ல்லு வ‌ச்ச‌து), தோராய‌மா ஒன்ன‌ரை கிராம்
...

குழுத்த‌லைவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ நோட்டில் எழுதிக் கொண்டான் ஏகாம்ப‌ர‌ம்.

நாள‌டைவில் தேவையான‌ அள‌வுக்கு த‌ங்க‌ம் சேர, அவற்றை தங்கப்பன் ஆசாரியிட‌ம் கொண்டு ஒப்ப‌டைத்தான் ஏகாம்ப‌ர‌ம். அவ‌ரும் எல்லாவ‌ற்றையும் வாங்கி, ச‌ரி பார்த்து, எடை போட்டு, 'நாப்ப‌த்தி நால‌ரை வ‌ருதுடாப்பா' என்றவர், ச‌ரி, நான் ஒரு அரை ப‌வ‌ன் போட்டு நாப்ப‌த்தி அஞ்சாக்கிக்க‌றேன் என்றும் சொன்னார்.

கும்பாபிஷேக‌ச் செய்தி ஈமெயில் இல்லாம‌லேயே ப‌ர‌வ‌, அப்போதிருந்தே கூட்ட‌ம் க‌ளை க‌ட்ட‌த் தொட‌ங்கிய‌து செவ்வூரில்.

யானை மீதேற்றி, மிக்க‌ ம‌ரியாதையோடு வீதி உலா வ‌ர‌ச் செய்து, க‌ற்ப‌கிர‌க‌ கோபுர‌த்தில் த‌ங்க‌க் கலச‌‌‌த்தை வைப்ப‌தாக செய்திருந்த‌ ஏற்பாடும் பக்கதில் ப‌ல‌ ஊர்க்கார‌ர்க‌ளின் புருவ‌ங்க‌ளை வில்லென‌ உய‌ர்த்திய‌து !

வழக்கம் போல‌ ஒரு நடுநிசியில் ச‌ர‌க்கை எடுத்துக் கொண்டு திரும்பினார் மாணிக்கம். ஊருக்குள் நுழைகையில், சைக்கிளின் பின்னால் சாக்குப் பையுடன் ஓருருவம் கடந்து செல்வதைப் பார்த்து, "ஏய் யாருய்யா இது இந்த நேரத்தில ?" என்று கேட்டார்.

உருவ‌த்திட‌ம் இருந்து ஒரு ப‌திலும் இல்லை.

த‌ன‌து ய‌மாஹாவை உருவ‌த்தின் திசையில் திருப்பி, வெளிச்சத்தில் பார்க்க‌, "நீ செவ்வூர்கார‌ன் இல்லியே ! யாருய்யா நீ ?" என்று அத‌ட்டினார்.

"யாராயிருந்தால் என்ன" என்ப‌து போல முறைத்து, "ஏன், ப‌க்க‌த்து ஊருதேன் ந‌ம‌க்கு. எங்க‌ அக்கா வீட்டுக் போயிட்டு இப்ப‌ எங்க‌ ஊர‌ப் பார்த்துப் போறேன்" என்றான்.

"ச‌ரி, சைக்கிள்ல‌ பின்னாடி என்ன‌ வ‌ச்சிருக்கே ?" என்றார் மாணிக்க‌ம்.

"எல்லாத்தையும் உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ணுமாக்கும். நீங்க‌ என்ன‌ போலீஸா ?" என்று சீறினான்.

"சொல்ல‌ வேணாம். ஆனா நேர‌ம் கால‌ம்னு ஒன்னு இருக்கில்ல‌. நீ எந்த‌ ஊர்க்கார‌னோ. ஊருக்குள்ள‌ ஒரு விஷேஷ‌ம்னு ந‌ட‌க்கும்போது, அர்த்த ராத்திரியில வெளியூர்க்கார‌ன் வ‌ந்தா கேக்க‌த்தேன் செய்வோம் !" என்று ஸ்டாண்ட் போட்டு நிறித்தினார் ய‌மாஹாவை.

"நீயா சொல்றியா, இல்ல நான் வ‌ந்து பாக்க‌வா ?" என்று ச‌ற்று க‌டுமை காட்டினார் குர‌லில் மாணிக்க‌ம்.

ஒரு ப‌திலும் இல்லாம‌ல் தொட‌ர்ந்த‌ வெளியூர்க்கார‌னை, "சொல்லிகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே ..." என்று அதிவேக‌ ந‌டையில் அவன் சைக்கிள் கேரியரைப் பிடித்து நிறுத்தினார்.

பேல‌ன்ஸ் த‌டுமாறி சைக்கிள் ச‌ரிய‌, சாக்கு மூட்டையும் ச‌ரிய‌, க‌ட்டு பிரிந்து, க‌ரு க‌ருவென்று உருண்டோடிய‌து ப‌ன‌ங்காய்க‌ள்.

ச‌ட்டென்று சிந்த‌னை சிற‌க‌டிக்க, அவனை எட்டிப் பிடித்து, த‌ன் மேல் துண்டால் அவ‌ன் கைக‌ளைப் பின் த‌ள்ளி ந‌றுக்கென்று க‌ட்டியும் போட்டார்.

"என்ன‌ங்க‌ ப‌ண்றீங்க‌. இதெல்லாம் ந‌ல்ல‌துக்கில்ல‌. நாங்க‌ யாருனு தெரியும்ல‌. நாளைக்கு காலையில் பாரு, இங்க‌ அத‌க‌ள‌ம் ஆக‌ப்போகுது !" என்று திமிறிய‌வ‌னின் வாயில் த‌ன் கைக்குட்டையைத் திணித்தார்.

"என்ன‌ அத‌க‌ள‌ம் ஆனாலும் ச‌ரி. நான் சொல்ற‌த‌ ந‌ல்லா கேட்டுக்க‌. ஒரு ச‌ந்தேக‌த்தின் பேருல‌ தான் உன்னைக் க‌ட்டி வ‌ச்சிருக்கேன். உன் மேல‌ ஒரு த‌ப்பும் இல்லேண்ணா உன்னை விட்டுருவோம். இல்ல‌, ம‌வ‌னே அத‌க‌ள‌ம் உன‌க்குத்தேன். நாஞ்சொல்ற‌து புரியுதுல்ல‌ !!!" என்றார் மாணிக்கம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌.

இருட்டோடு இருட்டாய் அவனை தன் வீட்டுக்கு இழுத்தும் வந்தார்.

"உன் பேரு என்னய்யா ?" என்ற மாணிக்கத்தின் கேள்விக்கு 'இப்படி வாயில துணிய வச்சி பேரு கேட்டா நான் என்னனு சொல்றது' என்பது போல விழித்தான் அழ‌க‌ர்.

கடைவீதிக்கு சென்று மெடிக்கல் ஷாப் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த‌ ஏகாம்ப‌ர‌த்தைத் த‌ட்டி எழுப்பினார் மாணிக்க‌ம்.

"எலேய் எழுந்திரிடா. போயி ஊருக்குள்ள‌ எல்லார் வீட்டுல‌யும் ந‌கை, பொருள் ஏதாவ‌து காணாம‌ போயிருக்கானு பாக்க‌ச் சொல்லு. ஏதாவ‌து த‌ப்புத் த‌ண்டா ந‌ட‌ந்திருந்தா அவுங்க‌ள‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு உடனே வ‌ர‌ச் சொல்லு. ம்ம்ம் சீக்கிர‌ம். ஓடு, ஓடு. மொதல்ல ஆசாரி வீட்டுக்குப் போ..." என்று விர‌ட்டினார்.

நினைத்த‌து போல‌வே மாணிக்க‌ம் வீட்டுக்கு ஆசாரி ப‌த‌றி அடித்து ஓடி வ‌ந்தார். "இப்ப‌த்தேன் க‌ல‌ச‌த்தைப் பார்த்துட்டு ச‌த்த‌ க‌ண் அச‌ந்தேன், அதுக்குள்ள‌ காணாம‌ போச்சே... ஏதாவ‌து சாமி குத்த‌மால்ல ஆக‌ப்போவுது" என்று அழுது புல‌ம்பினார்.

காற்றின் வருகையில் சடசடக்கும் சருகுகளாய், மாணிக்கம் வீட்டில் உரையாடிச் சேர்ந்தது ஊரே ! அவர் வீட்டு மாட்டுக் கொட்ட‌கையின் மூலையில் கால் ம‌ட‌க்கிச் ச‌ரிந்திருந்தான் அழ‌க‌ர்.

கறுந்திரை வில‌க்கி வெண்திரை ச‌ரிய ஆரம்பிக்கையில், போலீஸோடு ஆஜ‌ரானான் ஏகாம்ப‌ர‌ம்.

"ராத்திரில திருடுனத ஒடனே எடுத்துகிட்டு போனா, யாருட்டயாவது மாட்டிக்குவோம். எங்கேயாவ‌து வ‌ச்சிட்டு ப‌கல்ல‌ வ‌ந்து எடுத்துக்க‌லாம்னாலும் சிக்க‌ல்தேன். அதான் ராவோடு ராவா ப‌னைம‌ர‌த்துல‌ ஏறி ப‌துக்கிட்டு, அதுல‌ கெட‌க்க‌ற‌ காய்க‌ள‌ வெட்டி சாச்சுட்டு, மூட்டையில‌ அத‌க் க‌ட்டி ஊருக்கு போற‌ மாதிரி போயிட்டு, ம‌றுநா வ‌ந்து, பொருள எடுத்துகிட்டு, கூட்ட‌த்தோட‌ கூட்ட‌மா க‌ல‌ந்து வெளியேறிருவோம் !" என்று ப‌ன‌ங்காட்டில் வைத்து அழ‌க‌ரின் வாக்குமூல‌த்தை ப‌திவு செய்த‌து போலீஸ்.

Monday, July 27, 2009

ஊஞ்சல்


Photo Credit: photographersdirect.com

தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர்.

நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் தான் அவனை நிறுத்தி வைக்கும். முக்கால்வாசி நாள், அதில் கால் நீட்டி, ஒரு ப‌க்க‌ க‌ம்பியில் தலைகாணி வைத்து, அதில் சாய்ந்து, மெல்ல ஆடிக் கொண்டு, பேப்ப‌ர் வாசித்துக் கொண்டிருப்பார், ரிடைய‌ர்ட் தாத்தா ப‌த்ம‌நாப‌ன். பேப்ப‌ர் ப‌டிக்கிற‌ மாதிரி, வீதியில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து, ஏது ந‌ட‌க்கிற‌து என‌வும் நோட்ட‌ம் விடுவார், என்பார்க‌ள் அவ‌ரை.

அன்று ஒரு நாள் தாத்தாவைக் காணோம். ஓடிப் போய் ஒரு முறையாவது ஊஞ்ச‌லில் உட்கார்ந்து பார்த்துவிட‌ணும் என்று நினைத்தான். ஆனால், ஆளுய‌ர அல்ஷேஷ‌ன், க‌ம்பி கேட்டினுள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது கண்டு ப‌ய‌ந்து பின் வாங்கினான்.

அன்றிர‌வு, சாப்பிட்டு விட்டு அம்மாவின் ம‌டியில் த‌லை சாய்த்து படுத்திருந்தான் சௌந்த‌ர். ஊஞ்ச‌ல் அவ‌ன் ம‌ன‌தை விட்டு அக‌லுவ‌தாய் இல்லை.

"தூங்கு சௌந்தர். நேரம் ஆச்சு பாரு. நாளைக்கு ஸ்கூலுக்கு போக சீக்கிரம் எந்திரிக்க வேணாம் ?!" என்றாள் அம்மா.

"அம்மா அந்தத் தாத்தா வீட்டுல ஒரு ஊஞ்சல் இருக்கு பாத்திருக்கியா ? எனக்கும் அதுமாதிரி ஒன்னு வாங்கித் தாயேன் ?!"

"ஊஞ்ச‌லா ... இந்த‌ குட்டியூண்டு வீட்டுல‌ எப்ப‌டி, எங்க‌ மாட்டுவே ?அதெல்லாம் வேண்டாம். பேசாம தூங்கு" என்றாள்.

"ஏதாவது கதை சொல்லும்மா. ஊஞ்சல் கதையாவது சொல்றியா ?!" என்றான்.

"அதென்னடா ஊஞ்சல் கதை ? எனக்கு பாட்டி கதை, நரி கதை, வாத்து கதை தான் தெரியும்" என்றாள் அம்மா.

நெருப்பில் விழும் புழுவாய்த் துடித்த மகனிடம், "சரி சரி சொல்றேன்" என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்.

"ஒரு ஊருல ஒரு அப்பா, அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு மூனு பசங்களாம். அவங்க வீட்டுல ஒரு அழகான ஊஞ்சல் இருந்துச்சாம். தின‌ம் ப‌ச‌ங்க‌ அதில் ஆட்டம் போட்டு விளையாடிட்டு, ப‌டிக்க‌ மாட்டேன்கிற‌துங்கனுட்டு, அவ‌ங்க‌ அப்பா, ஊஞ்ச‌ல‌ மாடியில் ஒரு ரூமில் போட்டு பூட்டி வ‌ச்சிட்டாராம் !"

"ச்சோ ச்சோ, அப்புற‌ம் என்ன‌ம்மா ஆச்சு ?" என்று ப‌ரிதாபப்ப‌ட்டான் சௌந்த‌ர்.

"அப்புற‌ம் என்ன‌. ப‌ரீட்சைக்கு லீவு விட்டா ம‌ட்டும், ஊஞ்ச‌ல‌ கீழ‌ இற‌க்கி, உத்திரத்தில மாட்டித் த‌ருவாராம் அப்பா. லீவு முழுக்க‌ ஆட்ட‌ம் தான். ரெண்டு பேரு உக்காந்துக்க‌, ஒருத்த‌ர் கீழ‌ இருந்து த‌ள்ளணும். கொஞ்ச கொஞ்ச நேரத்துக்கு ஆள் மாத்திகுவாங்க. இது தான் அவ‌ங்க‌ ஊஞ்ச‌ல் விளையாட்டுக்கு வ‌ச்சிக்கிட்ட‌ சின்ன‌ விதி."

"விதின்னா என்ன‌ம்மா ?" என்றான்.

"விதின்னா ... ஏய் கதைய விட்டு வேற எங்க போற ? கதைய மட்டும் கேளு. விதின்னா என்னான்னு அப்புறம் சொல்றேன்."

"அப்புற‌ம் அந்த‌ வீட்டில‌ ப‌ச‌ங்க‌ வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ எல்லோரும் ஊஞ்ச‌ல‌ ம‌ற‌க்க‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ளாம். ஹிம்ம்ம்" என்று நிறுத்தினாள் அம்மா.

'கால்க‌ள் த‌ரையிலும் ப‌டாம‌ல், மேலே வானிலும் ப‌ற‌க்காம‌ல், ஒரு வித‌ உய‌ர‌த்தில் பாதுகாப்பாய் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்ப‌து தான் எத்த‌னை சுக‌ம். நாம தான் ஆடுகிறோம் என்பதை மறந்து, உத்த‌ர‌ம் ஆடுவ‌தாய், வாச‌ல் ஆடுவ‌தாய், வீடே ஆடுவ‌தாய், ஏன் உல‌க‌மே ஆடுவ‌தாய் தோன்றும் சில‌ நேர‌ங்க‌ளில். இனி வ‌ருமா அத்தருண‌ங்க‌ள் ?!!!'

"ஏம்மா க‌தையை நிறுத்திட்ட ?! ... " ப‌ட‌க்கென்று த‌லையைத் தூக்கி கேட்டான் சௌந்தர்.

"அப்புற‌ம் எல்லோரும் பெரிய‌வ‌ங்க ஆகி, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டு த‌னித் த‌னியா போய்ட்டாங்க‌"

"ஊஞ்ச‌ல் என்ன‌ம்மா ஆச்சு ?!"

"சொல்றேன் இரு. குறுக்கே குறுக்கே பேச‌க்கூடாதுனு சொல்லிருக்கேன்ல ?!" என்று அன்பாய்க் க‌டிந்து கொண்டாள்.

"அவங்க அப்பா திடீர்னு ஒரு நாள் சாமி கிட்ட போய்ட்டாரு. அப்ப, 'இப்பல்லாம் எங்ககேயும் இப்படி ஒரு ஊஞ்சல் கிடைக்காது, அதனால என‌க்கு தான் ஊஞ்சல் வேணும், எனக்குத் தான் ஊஞ்சல் வேணும்'னு அவ‌ங்க பசங்களுக்குள்ள‌ சரியான போட்டி."

"க‌டைசிய‌ல் யாரு ஜெயிச்சாங்க ?!" என்று ஆர்வ‌மானான்.

"யாரும் ஜெயிக்க‌லேப்பா. பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஆளாளுக்கு சொல்லிப் பார்த்தும் யாரும் ஒத்துக்கலை. அதனால அப்படியே போட்டு, யாருக்கும் பயனில்லாமப் போச்சு அந்த ஊஞ்சல் !" என்று முடித்தாள்.

"எனக்கு இந்தக் கதை பிடிக்கலம்மா..." என்று தேம்பினான்.

"தம்பீ... ராத்திரில தூங்கறதுக்கு முன்னாடி அழக்கூடாது. பாரு, சமத்துல்ல, உங்க அப்பா வரட்டும், உனக்கு ஒரு ஊஞ்சல் வாங்கித் தரச் சொல்றேன். பேசாமத் தூங்கு" என்று ஆறுதல்படுத்தினாள்.

"நீ தான் இந்த குட்டியூண்டு வீட்டுல மாட்ட எடம் இல்லேன்னுட்டியே ! எனக்கு ஊஞ்சலே வேணாம்." என்று தூங்கிப் போனான் சௌந்தர்.

ஜூலை 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

Wednesday, July 22, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும் !


Photo: www.zynnyadesign.com

கடும் அலை மோதலிலும் -- அசையாது
கரும் பாறை.

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது
மயில் தோகை.

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது
நெடு ம‌ர‌ம்.

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது
மலர் கூட்டம்.

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது
குருவிக் கூடு.

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது
சிலந்தி வலை.

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

அத‌னால் ...

வாக்கினிலே இனிமை கொள்வோம்
வ‌ள‌மாய் வாழ்திடுவோம் !

Monday, July 20, 2009

ஏம்மே அயுதுனுகீற ?!


Photo Thanks: bhopal.net

தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வ‌ழ‌க்க‌ம் போல‌ அன்றும் வீராச்சாமியுட‌ன் விவாத‌ம்.

"ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற..." என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.

"கௌலீ ழீ ழல்லா இலுக்கனு...." என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட‌ நெருங்கி நாசித் துவார‌த்தில் விர‌ல் வைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !' என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.

குடிசை மூலையில், ஏதோ நிக‌ழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த‌ இல‌வ‌ச‌ டி.வி.யை அணைத்தாள்.

ச‌ட்டைப் பொத்தான்க‌ளை அவிழ்த்து விட்டு, அங்கே கிட‌ந்த‌ ஓலை விசிறியில் லேசாக‌ விசிறி விட்டாள்.

"இந்தாம்மே கௌரீ...வூட்டுல தான் கீறியா ?" என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.

க‌த‌வைத் திற‌ந்த‌ கௌரி, "யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா..." என த‌ன் க‌ண‌வ‌னின் நிலை குறித்துப் புல‌ம்பினாள்.

"இப்ப‌டி வாய் பேசாத‌ இருந்துகினா, அது (வீராச்சாமி) வாய‌டைக்கிற‌து க‌ஷ்ட‌ங்க‌ண்ணு"

"யக்கா, நீ வேற‌, ஏய்யா இப்டி குட்சிட்டு வ‌ந்து க‌லாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்கா‌த‌ சுருண்டுகிச்சி" என்றாள் கௌரி.

"அய்யே அடிச்சியாக்கும்... ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட‌ சுத்தி சுத்தி வ‌ரும் பாரு !" என்று ஒரு யோச‌னையும் சொன்னாள் கோம‌ள‌வ‌ல்லி.

"சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !"

"மெய்யாலுமே தாங் க‌ண்ணு, செஞ்சி தான் பாரேன்."

***

இர‌ண்டொரு வார‌ங்க‌ளில் ந‌ல்ல‌ மாற்ற‌ம் இருந்த‌து வீராச்சாமியிட‌ம். நேர‌த்துக்கு க‌ட‌லுக்குப் போவ‌தும், மீன் அள்ளி வ‌ருவ‌தும், குழ‌ந்தைக‌ளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வ‌தும் என‌ ஆளே மாறிப்போனான்.

"இன்னாம்மே... எப்டிகீற‌ ? அய்யே மூஞ்சீல‌ சிரிப்ப‌ப்பாரு ..." என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோம‌ள‌வ‌ல்லி.

ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அட‌க்க‌ முடிய‌வில்லை.

"ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !" என்று ந‌ம‌ட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோம‌ள‌வ‌ல்லி.

***

வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோம‌ள‌வ‌ல்லி அப்ப‌டி என்ன‌ யோசனை சொல்லி இருப்பார் ? உங்க‌ள் எண்ண‌ங்க‌ளைப் பின்னூட்டுங்க‌ள்.

இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))

ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.

***

ரெண்டு நாளாச்சுபா ... உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,

கோமளவல்லியின் ரோசனை:
'எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்'னு சொல்லிப் பாரு கண்ணு :)))))

ஆகஸ்ட் 19 யூத்ஃபுல் விகடனில்


விகடன் முகப்பில்

Thursday, July 16, 2009

நம்மூரு அழுக்கு நோட்டு !


Photo (Thanks): www.picturejockey.com

சடசடக்கும் வெண்தாளில்
சட்டென்று ஈர்க்கும்வண்ணம்,
புத்தம் புதிதாய்
பிரசவிக்கும் நம் நோட்டு !

பொக்கை வாய் காந்தியும்
புன்னகையாய் சிரித்து,
வலம்வருவார் நாடெங்கும்
வண்ண நோட்டுக்களில் !

பத்தும் இருபதுமாய்
பலகோடி நோட்டுக்கள்,
பயணித்துச் செல்லும்
பலரின் வாழ்விலே !

கீரைத்தண்டு கரம்பற்றி
மீதிச் சில்ல‌ரையாக‌,
முழ‌ம்போட்ட‌ விர‌ல்பிரித்து
பூக்கும் சில்ல‌றையாக‌ !

சுருட்டிக் படுத்திருக்கும்
சுருக்குப் பைக‌ளுக்குள்,
வேர்க்கும் இத‌ய‌த்தின்
மேல்மிதக்கும் பைக‌ளுக்குள் !

நடத்துனரின் விரல்பற்றி
பேருந்தில் பயணிக்கும்,
ஊரெலாம் சுற்றி
ஓயாது ஒரு நாளும் !

நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!

சந்தைக்குப் போய்வரும்
சடுகுடுவில் கலந்து கொள்ளும்,
அண்டை வீட்டாருடன்
அடிக்கடி நட்பு கொள்ளும் !

உள்ளங் கையிடுக்கில்
சுருண்டு கறுத்ததுவோ ?
ஊர்சுற்றி களைத்து
வேர்த்துக் கறுத்ததுவோ ?!

அழுக்காகி அழுகவில்லை
அதைநினைத்துக் கவலையில்லை,
என்னோடு எங்கும் வரும்
நம்மூரு அழுக்கு நோட்டு !

ஜூலை 24, 2009 யூத்ஃபுல் விகடனில்

Tuesday, July 14, 2009

நீங்க தான் ஜட்ஜ் !



அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...

உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.

"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா ..." என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி.

என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு பாக்காதீங்க, ப்ளீஸ் கோ அஹெட்.... :)

***

"சார், நீங்க ஒரு ரெண்டு மூணு படத்தில, நாலஞ்சு ஷாட்ல வந்திருக்கீங்க. உத்து கவனிச்சா தெரியும், அது நீங்க தான்னு. எல்லோரும் கரெக்டா சொல்லிடுவாங்க !!! அந்த‌ அனுப‌வ‌ம் போதும் இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு வ‌ர்ற‌துக்கு" என்றார் நிகழ்ச்சியின் த‌யாரிப்பாள‌ர் ச‌பாப‌தி.

"ஆமாமா, உங்க நிகழ்ச்சி கூட தான் தமிழ்நாடே பாக்குது. சோறு தண்ணி இல்லாம (போட்டா தானே !) பாக்குற நிகழ்ச்சினா அது இது ஒன்னு தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக்கு என்னை அழைத்த‌தில் ரொம்ப‌ பெருமையா இருக்கு !" என்றான் ராஜு.

அந்த நேரம் பார்த்து, சபாபதியின் உதவியாளர் மைக்கேல் வந்து, "சார், ஒரு முக்கியமான விஷயம்" என்று சபாபதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

"கொஞ்சம் இருங்க ராஜு... இதோ வர்றேன்" என்று எழுந்து சென்றார் சபாபதி.

"அப்ப‌டி என்னைய்யா த‌ல‌ போற‌ அவ‌ச‌ர‌ம்..." என்று இழுத்தார் ச‌பாப‌தி.

"த‌ல போற‌து தான் சார் அவசரமே ! ந‌ம்ம 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு ரெண்டு ஜ‌ட்ஜ்ல ஒருத்த‌ர் திடீர்னு வ‌ர‌முடியாதுனு ப்ர‌ச்ச‌னை ப‌ன்றாரு. இன்னும் நாலு எப்பிசோட் பென்டிங் இருக்கு. அது வேணும், இது வேணும்னு ஒரே அடாவ‌டி ப‌ண்றார் சார். உங்க கிட்ட பேசணுமாம்" என்று, உள்ளங்கையில் அழுத்திப் பொத்திய‌ ரீசீவ‌ரை ரிலீஸ் செய்து, சபாபதியிடம் நீட்டினான் மைக்கேல்.

'மொத‌ல்ல‌ ஜ‌ட்ஜ‌ மாத்த‌ற‌னோ இல்லியோ, இவன மாத்தணும் !' என்று நினைத்து, ரிசீவரைத் திரும்பவும் அடைக்குமாறு சைகையில் தெரிவித்தார்.

"ஏய்யா, நான் வீட்டுல இருக்கேனு சொன்னியா ? சரியான .... சரி, சரி, அவசர வேலையா இப்ப தான் கெளம்பினாரு, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்புறம் பேசுங்கனு சொல்லித் தொலை".

"சார், நான் மறக்கறதுக்கு முன்னே சொல்லிடறேன். இதே போல 'போடா போடி' நிகழ்ச்சியிலயும் ஜட்ஜ் ப்ரச்சனை சார்" என்றான் மைக்கேல்.'சரியான நேரங்காலம் தெரியாதவன் !' என்று திட்டி "சரி அப்புறம் பேசறேன்" என்று ராஜுவிடம் வந்தார் சபாபதி.

பணிவாய் அமர்ந்திருந்தான் ராஜு. பார்த்த கணமே யோசனையிலும் ஆழ்ந்தார் சபாபதி.

"ராஜு, நீங்க 'அமெரிக்கன் ஐடல்' ப்ரோக்ராம் பாத்திருக்கீங்களா ?"

"பார்த்திருக்கேன் சார். உலகமே பார்த்த ப்ரோக்ராம் ஆச்சே. நான் பார்க்காமல் இருப்பேனா ?!" என்றான் ராஜு.

"நல்லதா போச்சு. அதுல ஜட்ஜ் சைமன் பத்தி என்ன நினைக்கறீங்க ?"

"அத்த‌னை போட்டியாள‌ர்க‌ளுடைய‌ வெறுப்பையும், பார்வையாள‌ர்க‌ள் வெறுப்பையும் சேர்த்து ச‌ம்பாதித்தவ‌ர் சார்" என்றான்.

"ஆனா, உல‌க‌மே அவ‌ர‌ப் ப‌த்தியும், அந்த‌ நிக‌ழ்ச்சி ப‌த்தியும் பேசுது. இது எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ம்பாத்திய‌ம் ந‌ம்மைப் போன்றோருக்கு !" என்றார் ச‌பாப‌தி.

"சார், நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு புரிஞ்ச‌ மாதிரியும் இருக்கு, புரியாத‌ மாதிரியும் இருக்கு !"

"அதே தான் ராஜு. 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு அடுத்த‌ ஜ‌ட்ஜ் நீங்க‌ தான் ! 'டி.வி.ஜட்ஜ் இன்டென்ஸிவ் ட்ரெய்னிங்' ஒரு ரெண்டு நாள் எடுத்துக்க‌ங்க‌. ட்ரெய்னிங் என்றவுடன் பயந்துறாதீங்க. ரொம்ப சிம்பிள். சைமனோட அனுகுமுறை, சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க.... மைக்கேல் இங்க‌ வா, அந்த‌ கான்ட்ராக்ட் பேப்ப‌ர்ஸ் எடுத்து வ‌ந்து சார் கிட்ட‌ கையெழுத்து வாங்கிக்கோ." என்றுவிட்டு அடுத்த‌ நிக‌ழ்ச்சியின் ஜ‌ட்ஜ் வேட்டைக்கு ஆய‌த்த‌மானார் ச‌பாப‌தி !

***

டிஸ்கி: இக்கதை யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்தும் நோக்கில் எழுத‌ப்ப‌ட‌வில்லை. முழுக்க‌ ந‌கைச்சுவைக்காவே .....

ஜூலை 20, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, July 12, 2009

லெச்சுமி அக்கா ...


Photo: baby-sang-http-www.indianhindunames

'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.

மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.

வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.

அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.

எனது திருமணத்திற்கு வந்தபோது, "டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?" என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.

ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.

'போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா ... கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ....'

'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. "ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!" என்று அம்மாவை நோக்குகையில் ...

"லெச்சுமி வாம்மா ..." என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். 'அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்' என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.

'அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!' என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, 'வாடா செல்லம்...' என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !

Friday, July 10, 2009

பரவால்ல விடுங்க பாஸூ ...


Photo Thanks: www.apexwealthmgmt.net

அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !

'இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்' என்று நினைத்திருந்தான் மூர்த்தி.

வெள்ளைக்கார‌ர்க‌ள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்ட‌ன‌ர்.

மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் "அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க‌. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க‌. ஆங்..." என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் ச‌ர‌வ‌ண‌ன்.

இந்தியர்ளோடு வேலை செய்வ‌து தான் க‌டின‌மோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேச‌வும் செய்வாங்க‌, கேட்க‌வும் செய்வாங்க‌. தாமரை இலை நீராய் இல்லாமல், ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏன் இப்ப‌டி எல்லாத்தையும் பெர்ச‌ன‌லா சொன்ன‌ மாதிரி எடுத்துக் கொள்கிறார்க‌ள் !

"சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் ப‌ண்றோம் !" என்றான் ராப‌ர்ட்.

"ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வ‌தும் ச‌ரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் ப‌ண்ணிடுங்க" என்றாள் கேத்தி.

"ச‌ர‌வ‌ண‌ன் என்ன பெரிய ஆளா ? அவர்‌ ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு ச‌ரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ ச‌ரி ப‌ண்ணிக் கொடுனு சொல்ல‌னும். அத‌விட்டுட்டு ஏன் இப்ப‌டி மீட்டிங்கில் எறிந்து விழ‌ணும். நல்ல வேளை 'நக்கீரன்' மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! " என்று வெளியே வந்து புல‌ம்பினான் மூர்த்தி த‌ன் ந‌ண்ப‌ன் அனீஷிட‌ம்.

"இன்னிக்கு நேத்து க‌தையா. அவ‌ன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற ... ப‌ர‌வால்ல விடுங்க‌ பாஸு" என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.

***

"ராப‌ர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க‌. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்த‌ப் ப‌ச‌ங்க‌ எத்த‌னை வ‌ருஷ‌மா இருக்காங்க‌னு தெரியுமா ? இவ‌ங்க‌ அடிச்சிக‌றாங்க‌ளேனு, த‌ய‌வு செய்து உள்ளே புகுந்து ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌லாம் என்று ம‌ட்டும் நெனைக்காதீங்க‌. ந‌ல்ல‌ வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்க‌ள்."

"என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்ப‌டி இவங்க அடிச்சிக்க‌ற‌து க‌ம்பெனி வ‌ள‌ர்ச்சியை பாதிக்கும்" என்றான் ராப‌ர்ட்.

"இந்திய‌ர்க‌ள் எப்ப‌வுமே உண‌ர்ச்சி பூர்வ‌மான‌வ‌ர்க‌ள். அவங்க‌ போக்கிலேயே விட்டு தான் போக‌ணும். க‌ம்பெனியுடைய‌ வ‌ள‌ர்ச்சி அவ‌ங்களுடைய‌ வ‌ள‌ர்ச்சி தான். இதையும் அவங்க‌ கிட்ட‌ சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்க‌ளோ என்ன‌வோ. ப‌ர‌வால்ல‌ விடுங்க‌ பாஸு..." என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய‌ த‌லைமுறையைத் தேற்றினாள் கேத்தி.

ஜூலை 13, 2009 யூத்ஃபுல் விகடனில்


ஜூலை 13, 2009 விகடன் முகப்பில்

Wednesday, July 8, 2009

நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?

காலத்தின் பயணத்தில் எவ்வளவோ சகிப்புத் தன்மையை நாம வளர்த்துகிட்டாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்கள் நம்மை ரொம்பவே அமைதி இழக்கச் செய்துவிடுகின்றன‌. சரீ, பில்டப் நிறுத்திக்கறேன் :))

சமீபத்தில் பார்த்த "நீயா‍ ? நானா ?" நிகழ்ச்சி "அப்பா பாஸாட்டம் ஆடுகிறாரா ?" தலைப்பு இதுவல்ல, இதுபோல ஒன்னு :))) ரெண்டு விச‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ ச‌கிப்புத் த‌ன்மையையும் மீறி சோதித்த‌து.

முதலாவது, ஒரு கட்டத்தில் விழுந்து விழுந்து கோபிநாத் சிரிக்க, என்னாச்சுனு நாங்க பதறிபோய், ஏற்கனவே டி.வி. திரையில் ஒட்டிக்கிட்டிருந்த கண்களை, மேலும் அழுத்தி விழுந்து விடாமல் ஒட்டிப் பார்க்க, 'சின்ன இடைவேளைக்குப் பிறகு'னு, சைக்கிள் கேப்ல ஆட்டோ வேற (வேற ஒன்னும் புதுசா கெடைக்கலபா) ....

'அப்பாக்கள் ஔட் டேட்டட் என்கிறதுக்கு இத விட வேற என்ன வேணும்'னுட்டு மேலும் இடி இடி என சிரிப்பு !!! ஏன் ? ஏ.இ.கொ.வெ ??? ஒரு அப்பாவிற்கு மைக்கை சரி வர பயன்படுத்தத் தெரியவில்லை ! இதுக்கு தான் இத்தனை அலப்பரை. ரொம்ப சி.பு.த.இ ஓய் !!!!

அப்பாக்க‌ள் ஔட் டேட்ட‌ட் ஆக‌ இருப்ப‌தால் தான், பிள்ளைக‌ள் அப் டு டேட் ஆக‌ இருக்க‌ முடியுது ! ந‌ல்ல‌ வீடு வேணும், வ‌ண்டி வேணும், செல்போன் வேணும், ஜிமிக்கி வேனும், ச‌ல்வார் வேனும், செருப்பு(க‌ள்) வேணும் ... ஆனா "ஏன் ?" அப்ப‌டினு ஒரு வார்த்தை கேட்டுர‌ப்ப‌டாது.

இரண்டாவது, "பொட்டு இப்படி வச்சா நல்லா இருக்கும். செல் போன் அதிகம் பயன்படுத்தாதீங்க. ராத்திரில சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" இப்படீனு ஒரு அப்பா சொல்ல ... "நிறுத்து ... இதெல்லாம் உங்களுக்கு அதிகமா தெரியல ... இத தீர்மானிக்க நீங்க யாரு சார்" என்றாரே பார்க்கலாம். "உன் பிள்ளைக்கு நீ எப்படி டா பேர் வைக்கலாம்"ன்கிற மாதிரில இருக்கு !!!

ஆரம்பத்தில விட்டாலும் பிறகு பிடித்தார் ஒரு அப்பா. "ஒரு அலுவ‌ல‌க‌த்தில் பாஸ் திட்டிட்டான்னா, இவ‌ங்க‌ வேலைக்கு போகாம‌ இருப்பாங்க‌ளா ? என் சிறுவ‌ய‌தில் ஒரு நூறு ரூபாய் இல்லாம‌ல் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் என‌க்குத் தான் தெரியும். என் க‌ஷ்ட‌ம் என் பிள்ளைக‌ள் ப‌ட‌க்கூடாதுனு தான் இத்த‌னை செய்கிறோம் பிள்ளைக‌ளுக்கு. அவர்கள் தவறுதலான வழியில் செல்கையில், நாங்க‌ ஏன்னு கேட்க‌ கூடாதா ?"

யாராவ‌து ப‌தில் சொல்ல‌ணுமே ! ம்.ஹிம்.

வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌டுவில‌ நாலு அப்பா, அம்மாக்க‌ள அழ‌விட்டு ... ப்ளீஸ் இதைத் த‌விர்த்துவிடுங்க‌ள். அய‌ல‌க‌த்து டி.வி.க்க‌ளை அப்ப‌டியேவா காப்பி அடிப்ப‌து !

உலகம் முழுக்க மதர்ஸ் டே, எர்த் டே ஃப்ரீ ஏர் டே, இப்படி என்னன்னெவோ டேக்கல் படு பிரபலம். ஆனா ஃபாதர்ஸ் டேயும் வருது ! அது பாட்டுக்குப் போகுது. இங்க கூட ஃபாதர்ஸ் டே பத்தி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

சில‌ வீடுக‌ளில் மோச‌மான‌ அப்பாக்க‌ள் இருக்கிறார்க‌ள். அத‌ற்காக, ந‌ட‌ந்த‌ இந்த‌ நிக‌ழ்ச்சியில், ஒட்டு மொத்த‌ அப்பாக்களையும் கூப்பிட்டு அவ‌மான‌ப்ப‌டுத்தியதாக‌வே ஆகிற‌து :((

Monday, July 6, 2009

மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !



பாடலில் பரவசம்
மேடையில் நவரசம் -- உன்
ஆடலில் உல‌கே
ஆடியது நிதர்சனம் !

குதூகலிக்கும் குழ‌ந்தைத்த‌ன‌ம்
சிறுவயதில் ம‌ற‌ந்தாய் -- உன்
சிலிர்க்கும் நடனத்தில்
உல‌கையே க‌வ‌ர்ந்தாய் !

திகிலூட்டும் த்ரில்லர்
சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்
அற்புத‌ பாட‌ல்க‌ளில்
கிறங்க‌(வும்) வைத்தாய் !

ஒவ்வொரு அசைவிற்கும்
ஓராயிர‌ம் ப‌யிற்சி -- உன்
ஒத்திகை ந‌ட‌ன‌ங்களிலும்
அத்துணை ஈடுபாடு !

பொங்கும் மாக்கடலில்
திரண்டது நீரலை -- உன்
உலுக்கும் தோள்களில்
உருண்டது கடலலை !

நிலவிருக்கும் வரை
நினைவு இருக்கும் -- உன்
நீந்தும் கால்களின்
நிலவு நடனத்தில் !

ஈடிலா‌ வ‌ள‌ர்ச்சி
ஈட்டிய‌து ப‌ல‌கோடி -- உன்
வாழ்க்கையும் உழன்றதே
அனுதினம் அலைமோதி !

சீறிப் பாய்ந்து
சிருங்காரம் செய்து -- உன்
நடனம் (நெஞ்சில்) நிறுத்தி
ஓய்வாய் புயலே !

தூற்றுவார் தூற்ற
போற்றுத‌ல் நிலைநிறுத்தி -- உன்
ம‌ன‌ம் அமைதியில்
துயில்வாய் புய‌லே !

உனைத்துர‌த்தித் துன்புறுத்த
இனி எவருமில்லை -- உன்
க‌ல்லறையும் இனி(தாக‌)
காவிய‌ம் பாடிடுமே !

-----

மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது. அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது. கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !

Friday, July 3, 2009

ஈர்பதினாறு கேள்விகளும் ஹி.ஹி. பதில்களும்

கேள்வி கேக்கறது ஈ.ஸி. பதில் சொல்றது தான் கஷ்டம் இல்லையா ? இதுவரை பதில் சொன்னவங்க எல்லோருக்கும் அது தெரிந்திருக்கும். இந்த ஆட்டதில நம்மையும் சேர்த்துக்கிட்ட கவிநயா அவர்களுக்கு நன்றி! சரி, ரொம்ப பில்ட்டப் கொடுத்து உங்கள சீண்ட விரும்பவில்லை :)) கேள்விகளுக்குள் புகுந்து செல்வோம் ...

*****

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எந்த‌ப் பெய‌ர் ? சொந்த‌ப் பெய‌ரா ? (வ‌லைக்கு) வ‌ந்த‌ பெய‌ரா ? (எப்ப‌டீ !!! எதிர் கேள்வி கேக்க‌லேன்னா ந‌ம‌க்கெல்லாம் தூக்கம் வ‌ராது, ஆங்ங்ங்ங்ங் :))

இர‌ண்டு பெய‌ர்க‌ளுமே பிடிக்கும். முன்னது, கோபித்து மலை ஏறிய‌ கும‌ர‌னின் மாற்று பெய‌ர். தாத்தா(க்கள்) பாட்டி(க்கள்) அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து வைத்த‌ பெய‌ர். பின்ன‌து, ஏக‌ப்ப‌ட்ட‌ நாள் ரூம் போட்டு உட்கார்ந்தெல்லாம் யோசித்த‌தாக‌ நினைவில்லை. அழ‌கிய‌ ப‌ர‌த‌க் க‌லை முத‌ல், தெருவில் ஆடும் வித்தைக்கார‌ர் வரை, கால்க‌ளில் க‌ட்டியிருக்கும் வ‌ரை ஒன்றும் தெரியாது, ஒரு அடி எடுத்து வைத்தால், 'ஜ‌லீர்'என்று ஒலி எழும்பி, உள்ள‌த்தின் எல்லை வ‌ரை சென்று ஒரு உண‌ர்வைக் கிள‌ப்புமே அந்தச் 'ச‌த‌ங்கை' ஒலி ரொம்ப‌ப் பிடிக்கும். என‌து ப‌திவுக‌ளில் அந்த‌ உண‌ர்வைக் கொண்டு வ‌ர‌ணும் என்ற‌ எண்ண‌மும் இருக்கிற‌து. இதுவ‌ரைக்கும் சாத்தியமாகி இருக்கிற‌தா என‌த் தெரியவில்லை ! நீங்க‌ள் தான் சொல்ல‌ணும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நினைவில் இல்லை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப‌வே, அதுவும் பள்ளி நாட்களில். கணினி ஆதிக்கத்தில் இப்பொழுது த‌லை எழுத்து போல‌ ஆனது :)) அப்பொழுதெல்லாம் ஜெராக்ஸ், பேக்ஸ், கணினி எல்லாம் ஆதிக்கத்தில் இல்லை. வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றால் நெருங்கிய சொந்தங்களுக்கு கைப்பட எழுதி தான் அழைப்பு அனுப்புவார்கள். சில வாண்டுகளை அழைத்து தான் எழுத வைப்பார்கள். அதில் நானும் சேர்த்தி :) இப்பல்லாம் ஒரு பத்து பேருக்கு அனுப்பனும் என்றால் கூட அச்சிட்டோ, மின்னஞ்சலிலோ தான் :((

4. பிடித்த மதிய உணவு என்ன?

ந‌ல்ல‌ வேளைக்கு 'சுவை மொட்டுக்கள்' (அதாங்க‌ டேஸ்ட் ப‌ட்ஸ்) இன்னும் மாற‌லை. சொர்க்க‌மே என்றாலும் ந‌ம்ம‌ ஊரு சாப்பாடு போல‌ வ‌ருமா ?

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஹாய், பய் என்பது உட‌னே வ‌ரும் :)) நீடிக்கும் ந‌ட்புக‌ளுக்கு நாளாகும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சந்தேகமே இல்லை பின்ன‌து தான். ம‌டேர் ம‌டேனு பின்ன‌ந்த‌லையில் விழுந்து, சிலுசிலுவென‌ சிலிர்ப்பூட்டி செல்லுவ‌தால்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

க‌ண்க‌ள். உடை. (ஆள் பாதி, ஆடை பாதி ... எப்ப‌டீ ? :))

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ரெண்டுத்திலும் நிறைய‌ இருக்கே ?!

பிடித்தது: சோக‌மா வ‌ந்து உத‌வினு கேட்டா உட‌னே ந‌ம்பி செய்ய‌ற‌து. (பிற்பாடு ந‌ம்ம‌ல‌ ஏமாத்திட்டாங்க‌னு தெரிஞ்சா வ‌ரும் பாருங்க‌ ரௌத்ர‌ம். ஹிம்ம்ம்.)

பிடிக்காத‌து: ம‌ன‌சு புண்ப‌டுமாறு பேசிவிடுவோமோ என்று அநேக‌ இட‌ங்க‌ளில் (ரொம்ப‌ நெருக்க‌மான‌வ‌ங்க‌ த‌விர்த்து) மௌனியாய் இருப்ப‌து.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: அவ‌ர்க‌ளின் அன்பு :)
பிடிக்காத‌து: அவ‌ர்க‌ளின் அள‌வுக‌ட‌ந்த‌ அன்பு :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என‌து கிராம‌ம்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

க்ரே டி.ஷர்ட்; மிலிட்டரி க்ரீன் கால்சட்டை.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது: க‌ணினித் திரை.
கேட்பது: விர‌ல்க‌ளின் ந‌ட‌ன‌த்தில்,
விசைப‌ல‌கை எழுப்பும் ஒலி :)

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

எல்லா வ‌ண்ண‌ங்க‌ளிலும் ஒவ்வொன்றாய். ரொம்ப‌ ஓவரோனு நெனைச்சிடாதீங்க. கேள்வியிலேயே பண்மை இருக்கே :)

14. பிடித்த மணம்?

காற்றில் க‌ரைந்த‌ ரோசாப்பூ வாச‌ம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நாகு - ரிச்மண்ட் வெர்ஜீனியாவில் நிறைய பேரை வலை(வீசி)க்கு இழுத்து வந்தவர். நம்மையும் விடவில்லை ! கொஞ்ச காலம் அமைதி காத்த தமிழ்சங்க ப்லாக் தற்போது சூடுபிடித்திருக்கிறது. புதுப் புது பதிவர்கள் வந்து கலக்குகிறார்கள். இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர். சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தவர்.

லாவண்யா - மின்னலெனத் தோன்றி உயிரோடையாக ஓடிக் கொண்டிருப்பவர். சங்ககாலப் பாடல்களில் நாட்டம் கொண்டவர். ரசனை மிகுந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.

அன்புடன் அருணா - கலகலப்பான எழுத்துக்கு சொந்தக்காரர். பின்னூட்டுவதிலும் தான். நன்றாக படம் வரைபவர் (சேம் ப்ளட்). அதற்கென தனித் தளமும் வைத்திருக்கிறார்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

க‌விந‌யாவின் ப‌திவில் தாள‌த்தோடு இணைந்த‌ க‌விதைக‌ள், மனதில் நிற்கும் க‌தைகள் மற்றும் அவ‌ர‌து எளிமையான‌ வ‌ரிக‌ள் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், டென்னிஸ், கால்ப‌ந்து ...

18. கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஹ்யூம‌ர், ஆக்ஷ‌ன், ரிய‌லிஷ‌ம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ப்ரகாஷ் ராஜின் 'வெள்ளித் திரை'.

21. பிடித்த பருவ காலம் எது?

வச‌ந்த‌கால‌ம் தான்.....

ப‌ட்ட‌ ம‌ர‌ம் துளிர்த்து,
ப‌ட்டுப் பூப் போலே,
மொட்டாய் சுருள் இலைக‌ளும்,
கொத்தாய் ம‌ல‌ரும் கால‌ம் !

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஹிம். ந‌ல்லா கேட்டிங்க‌. புத்தக‌ம் வாசித்து ரொம்ப‌ நாளாச்சு போங்க‌.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பல்லாம் புதுசா படங்கள் எடுக்கிறோமோ அப்ப‌ல்லாம்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: குழ‌லினிது யாழினிது எனினும் குழ‌ந்தையின் குதூக‌ல‌த்துக்கு இணை ஏது ?
பிடிக்காதது: அழுகை.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெரிய‌ண்ண‌ன் ஊரு தான் :)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

போட்டிக்கோ, போர்க்க‌ள‌த்துக்கோ போற‌வ‌ங்க‌ளுக்கு தான் த‌னித் திற‌மை வேண்டும் என்பது என் எண்ணம். 'நான் உங்க‌ளில் ஒருவன்' அப்ப‌டினு சொல்ற‌துக்கு தான் ஆசைப்ப‌டுகிறேன்.

இருப்பினும், கொஞ்ச‌ம் வ‌ரைவேன். கொஞ்சம் (சாக்பீஸ்ல) குடைவேன். கொஞ்ச‌ம் (த‌மிழில்) எழுதுவேன். கொஞ்ச‌ம் ப‌ட‌ம் காண்பிப்... இல்லை, இல்லை, ப‌ட‌ம் பிடிப்பேன். கொஞ்ச‌ம் ச‌மைப்பேன். ஆனால், எதிலும் முழுமை இல்லை இன்றுவ‌ரை.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைய்ய‌ !!! அர‌சிய‌லாக‌ட்டும், சினிமாவாக‌ட்டும், ந‌டைமுறை வாழ்வாக‌ட்டும் ... ஒருவ‌ரைப் புக‌ழ்ந்து துதிபாடி அவ‌ர் பின்னால‌ ஒரு கூட்ட‌மாக‌வே தொட‌ர்வது / தொடர வைப்பது. குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ளை இப்ப‌டி வீணாக்கும் க‌ய‌வர்க‌ளின் செய‌ல்க‌ள்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபித்த‌ கும‌ர‌னோட‌ பேரை வெச்சிகிட்டு கோப‌ப்ப‌ட‌லேன்னா எப்ப‌டீ ? முன்கோப‌ம் தான் :))

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நியூஸீல‌ன்ட் இய‌ற்கைக்கு ! பாரீஸ் க‌லைக்கு !! இவ்விரு இடங்களுக்கும் இன்னும் சென்ற‌‌தில்லை :(

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்றும் இள‌மையாய் ! ம‌ன‌சுல‌ தாங்க‌ :)

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அட‌டே, இதுவ‌ரைக்கும் யோசிக்க‌லையே !!! எனிவே, குட் கொஸ்ட்டீன் :))

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

What Goes Around Comes Back Around (Thanks: Justin Timberlake) !