Wednesday, July 29, 2009

தங்கக் கலசம்


Photo Credit: wikimedia.org

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தியின், கற்பனைக் கதையாக்கம்.

***

"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்க‌ல் ஷாப்பிலிருந்து செல்வி.

"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி போயிட்டே. கண்டுக்கவே மாட்டேங்கிற இப்பல்லாம்" என்றார் எலக்ட்ரிக் கடை மாணிக்கம், செய்தித்தாள் வாசிப்பினூடே.

"அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே. நம்ம தம்பி, சின்னத்தா மகென் கணேசன், விசா கெடச்சு துபாய்க்கு போனாப்ல. அதேன் சென்னைக்குப் போயி ப்ளைட் ஏத்திவிட்டு வந்தேன். ந‌ம‌க்கு இதேன் கெதினு இந்தா திரும்பி வ‌ந்திட்டேன்ல‌ !!!" என்றான் ஏகாம்ப‌ர‌ம்.

இது அவருக்கும் தெரியாமலில்லை, இருந்தும் ஒரு சின்ன வெரிஃபிகேஷன்.

செவ்வூர் பிஸின‌ஸ் ம‌ட்டும் ப‌த்தாது, ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் எல‌க்ட்ரிக் ச‌ப்ளை மாணிக்க‌ம் தான். அத‌னால‌ பட்டனத்துல செய்யும் ஆர்டர், ந‌டுநிசி சரக்கு ர‌யில்ல வந்து ப‌க்க‌த்து ட‌வுன்ல‌ இற‌ங்கும். அதை எப்போதும் கையோடு எடுத்து வ‌ந்துவிடுவார் மாணிக்க‌ம். போத‌த‌ற்கு ஆடு,மாடு,விவ‌சாய‌ம் என‌ ப‌ல்துறைக‌ளிலும் கால் ப‌தித்திருப்ப‌வ‌ர்.

"ச‌ரி ச‌ரி, ம‌ற‌க்காம‌ சாய‌ந்திர‌ம் ந‌ம்ம‌ தோட்ட‌துக்கு வ‌ந்திரு. நாளைக்கு ஆட்டுச் ச‌ந்தைக்கு ஆடுக‌ள‌ ரெடி ப‌ண்ண‌னும். வ‌ந்துருவியா, இல்ல‌ போன் போட்டுச் சொல்ல‌ணுமா ?" என்ற மாணிக்க‌ம் அண்ண‌னின் ந‌க்க‌லுக்கு, சிறிதும் கோப‌ப்ப‌டாம‌ல் "கவலப்படாதீங்க, வ‌ந்திர்றேண்ணே !" என்றான் ப‌வ்விய‌மாக.

இதே போல‌ எடுப்பார் கைப்பிள்ளையாக‌ எல்லோருக்கும் வேலை பார்க்கும் "மாது" தான் ந‌ம்ம‌ ஹீரோ ஏகாம்ப‌ர‌ம்.

வான் முட்டும் தென்னையும் ப‌னையும், நெருக்கி வளரும் நெல் க‌திரும், அடர்ந்து வளரும் க‌ரும்பு வ‌ய‌ல்க‌ளும், ஆங்காங்கே மோட்டார் பம்பு செட்டுகளும், அல்லி பூத்த குளத்தங்க‌ரைக‌ளும், கோவில் மண்டபப் ப‌டித்துறைக‌ளும், ஆற்றோட்ட‌ப் பாதை என‌ வ‌ளைந்து நெளிந்த‌ வீதிக‌ளும், அதில் ப‌ல‌ வீடுக‌ளும், ஊருக்கோர் க‌டைவீதியும் என‌, பெரிய‌ குறை என்று எதுவும் சொல்ல‌ முடியாத‌ அள‌வில் திக‌ழ்ந்த‌து செம்மண் புழுதி பறக்கும் செவ்வூர்.

"ஆத்தாவுக்கு கோவில் க‌ட்டி ப‌ன்னெண்டு வ‌ருச‌ம் ஆச்சு. ஒரு கும்பம் வச்சு, கும்பாபிஷேகம் பண்ணனும்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், யாராவ‌து கேக்க‌ணுமே... இந்த‌க் க‌ட்டை போற‌துக்குள்ள‌யாவ‌து க‌ட்டுமான‌த்த‌ பாருங்க‌ப்பூ, நானும் இருந்து பார்த்துட்டுப் போறேன்" என்று பொக்கை வாய் திற‌ந்தார் என்ப‌து வ‌ய‌து அர்ச்சுன‌ன், குள‌த்த‌டி மீட்டிங்கில் ஒரு நாள்.

"என்ன‌த்த‌ ஆண்டு அனுப‌விச்சாலும் போற‌துக்கு யாருக்கு தான் மனசு வருது. இங்கேயே இருப்பதற்கு ஏதாவ‌து சாக்கு வேற‌ ! என்ன‌ பெருசு ?!" என்றார் ரைஸ்மில் முத்து.

குவ‌ளைத் தேனீரை, குட‌ம் குட‌மாய் கொட்டிய‌து போல த‌க‌த‌கத்த‌து குள‌ம். ந‌ண்டும் சிண்டுமாய் சில‌ வாண்டுக‌ள் வ‌ந்து த‌ப‌த‌ப‌வென‌ நீரில் குதித்த‌ன‌. ப‌ட்டாம்பூச்சியென‌ நீந்தி ஆட்ட‌மும் போட்ட‌ன‌. க‌ரையோர‌ நிழ‌ல் ம‌ர‌ங்க‌ள் காற்றில் க‌விதை பாடின‌. சற்று தள்ளி, ஒரு சுற்று த‌னைச் சுற்றி, ம‌றுமுனை முள்ளில் மாட்டி, சில‌ அடிக‌ள் ந‌ட‌ந்து வ‌ந்து, சேலைத‌னைக் காய‌வைத்தாள் செம்ப‌க‌ப் பாட்டி.

'அருணா ஆடியோஸ்' என்று சிகப்பில் பெரிதாக எழுதிய பச்சைக் குழாய்களை கழுவி எடுத்துக் க‌ரை ஏறினான் ஏகாம்பரம்.

"யாருய்யா அது, ஏகாம்பர‌ம் தான‌ ?" என அவளைக் கடந்த ஏகாம்பரத்தை நிறுத்தினாள் பாட்டி.

"என்ன‌ கெழ‌வி, நாந்தேன். என்ன‌ விச‌ய‌ம் தெரிய‌ணும் உன‌க்கு இப்ப‌ ?" என்றான் கிழ‌வியின் எதிர்பார்ப்பறிந்த‌ ஏகாம்ப‌ர‌ம்.

"இந்த‌ ஆம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌மோ பேசிக்கிறாக‌ளே, என்ன‌து அது ?" என்றாள்.

"ஹிம்... பொம்ப‌ள‌ப் ப‌டித்துறையில‌ என்ன‌ பேசிக்கிறாக‌ளோ அதே தேன்" என்றான்.

"அதில்ல‌டா, கோவில் கும்பாபிஷேக‌ம்னு ஏதோ காதில‌ விழுந்த‌தே !"

"காரியத்தில குறியா இருப்பியே. ஏன், நீயும் இருந்து அதெல்லாம் பார்த்துட்டு போக‌ணுமாக்கும் ?!"

"அதிலென்ன‌ த‌ப்பு ! நீந்தேன் எல்லோரு வீட்டுக்கும் போறியே. அப்ப‌டியே சொல்ல‌ வேண்டிய‌வங்க‌ கிட்ட‌யும் சொல்லி, கும்பாபிஷேக‌ம் ந‌ட‌த்த‌ வ‌ழிய‌ப் பாருப்பூ. புண்ணிய‌மாப் போகும் உனக்கு !"

ஏகாம்ப‌ர‌மும் செல்லும் இட‌மெல்லாம் சேதி ப‌ர‌ப்ப‌, ம‌துரை மீனாட்சி கோவில் ப‌ட்ட‌ர் தியாக‌ர‌ஜ‌னை வைத்து ப‌ட்டென்று கும்பாபிஷேக‌ தேதியும் குறித்த‌ன‌ர். தேரடியில் ஊர் கூடி ஒரு கூட்டமும் போட்டனர்.

"ஏய்யா ப‌ண்ற‌து ப‌ண்றோம். த‌ங்க‌த்தில‌ ஒரு கும்ப‌ம் செஞ்சு, கொஞ்ச‌ம் விம‌ரிசையா கும்பாபிஷேக‌த்த‌ ந‌ட‌த்துவோமே ! ப‌க்க‌த்து ப‌ட்டி தொட்டி எல்லாம் போக‌ ப‌ட்ட‌ன‌த்து ஆளுக‌ளும் அப்ப‌ தான் ப‌டை எடுக்கும் நம்ம கோவிலுக்கு !" என்றார் அர்ச்சுன‌ன்.

'கேக்க நல்லாத்தேன் இருக்கு ! அவ்வ‌ள‌வு த‌ங்க‌த்துக்கு எங்க‌ போற‌து ?' என வாய் பிளந்தது கூட்டம்.

'மெல்லிசா தகடு போல செஞ்சு கும்பத்துல சுத்திருவோம்' என்று முடிவு செய்தனர்.

சிறுக‌ச் சேக‌ரிக்கும் சிறு குருவியின் தானிய‌மாய், த‌ங்க‌த்தை சேக‌ரிக்க‌ ஒரு சிறு குழுவும் உருவான‌து.

செம்ப‌க‌ம் - க‌ம்ம‌ல், சுமார் ஒரு கிராம்
அர்ச்சுன்ன‌ன் - மோதிர‌ம், கா ப‌வ‌ன்
முத்து - தாய‌த்து, அரை ப‌வ‌ன்
செல்வி - மூக்குத்தி (க‌ல்லு வ‌ச்ச‌து), தோராய‌மா ஒன்ன‌ரை கிராம்
...

குழுத்த‌லைவ‌ர் சொல்ல‌ச் சொல்ல‌ நோட்டில் எழுதிக் கொண்டான் ஏகாம்ப‌ர‌ம்.

நாள‌டைவில் தேவையான‌ அள‌வுக்கு த‌ங்க‌ம் சேர, அவற்றை தங்கப்பன் ஆசாரியிட‌ம் கொண்டு ஒப்ப‌டைத்தான் ஏகாம்ப‌ர‌ம். அவ‌ரும் எல்லாவ‌ற்றையும் வாங்கி, ச‌ரி பார்த்து, எடை போட்டு, 'நாப்ப‌த்தி நால‌ரை வ‌ருதுடாப்பா' என்றவர், ச‌ரி, நான் ஒரு அரை ப‌வ‌ன் போட்டு நாப்ப‌த்தி அஞ்சாக்கிக்க‌றேன் என்றும் சொன்னார்.

கும்பாபிஷேக‌ச் செய்தி ஈமெயில் இல்லாம‌லேயே ப‌ர‌வ‌, அப்போதிருந்தே கூட்ட‌ம் க‌ளை க‌ட்ட‌த் தொட‌ங்கிய‌து செவ்வூரில்.

யானை மீதேற்றி, மிக்க‌ ம‌ரியாதையோடு வீதி உலா வ‌ர‌ச் செய்து, க‌ற்ப‌கிர‌க‌ கோபுர‌த்தில் த‌ங்க‌க் கலச‌‌‌த்தை வைப்ப‌தாக செய்திருந்த‌ ஏற்பாடும் பக்கதில் ப‌ல‌ ஊர்க்கார‌ர்க‌ளின் புருவ‌ங்க‌ளை வில்லென‌ உய‌ர்த்திய‌து !

வழக்கம் போல‌ ஒரு நடுநிசியில் ச‌ர‌க்கை எடுத்துக் கொண்டு திரும்பினார் மாணிக்கம். ஊருக்குள் நுழைகையில், சைக்கிளின் பின்னால் சாக்குப் பையுடன் ஓருருவம் கடந்து செல்வதைப் பார்த்து, "ஏய் யாருய்யா இது இந்த நேரத்தில ?" என்று கேட்டார்.

உருவ‌த்திட‌ம் இருந்து ஒரு ப‌திலும் இல்லை.

த‌ன‌து ய‌மாஹாவை உருவ‌த்தின் திசையில் திருப்பி, வெளிச்சத்தில் பார்க்க‌, "நீ செவ்வூர்கார‌ன் இல்லியே ! யாருய்யா நீ ?" என்று அத‌ட்டினார்.

"யாராயிருந்தால் என்ன" என்ப‌து போல முறைத்து, "ஏன், ப‌க்க‌த்து ஊருதேன் ந‌ம‌க்கு. எங்க‌ அக்கா வீட்டுக் போயிட்டு இப்ப‌ எங்க‌ ஊர‌ப் பார்த்துப் போறேன்" என்றான்.

"ச‌ரி, சைக்கிள்ல‌ பின்னாடி என்ன‌ வ‌ச்சிருக்கே ?" என்றார் மாணிக்க‌ம்.

"எல்லாத்தையும் உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ணுமாக்கும். நீங்க‌ என்ன‌ போலீஸா ?" என்று சீறினான்.

"சொல்ல‌ வேணாம். ஆனா நேர‌ம் கால‌ம்னு ஒன்னு இருக்கில்ல‌. நீ எந்த‌ ஊர்க்கார‌னோ. ஊருக்குள்ள‌ ஒரு விஷேஷ‌ம்னு ந‌ட‌க்கும்போது, அர்த்த ராத்திரியில வெளியூர்க்கார‌ன் வ‌ந்தா கேக்க‌த்தேன் செய்வோம் !" என்று ஸ்டாண்ட் போட்டு நிறித்தினார் ய‌மாஹாவை.

"நீயா சொல்றியா, இல்ல நான் வ‌ந்து பாக்க‌வா ?" என்று ச‌ற்று க‌டுமை காட்டினார் குர‌லில் மாணிக்க‌ம்.

ஒரு ப‌திலும் இல்லாம‌ல் தொட‌ர்ந்த‌ வெளியூர்க்கார‌னை, "சொல்லிகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே ..." என்று அதிவேக‌ ந‌டையில் அவன் சைக்கிள் கேரியரைப் பிடித்து நிறுத்தினார்.

பேல‌ன்ஸ் த‌டுமாறி சைக்கிள் ச‌ரிய‌, சாக்கு மூட்டையும் ச‌ரிய‌, க‌ட்டு பிரிந்து, க‌ரு க‌ருவென்று உருண்டோடிய‌து ப‌ன‌ங்காய்க‌ள்.

ச‌ட்டென்று சிந்த‌னை சிற‌க‌டிக்க, அவனை எட்டிப் பிடித்து, த‌ன் மேல் துண்டால் அவ‌ன் கைக‌ளைப் பின் த‌ள்ளி ந‌றுக்கென்று க‌ட்டியும் போட்டார்.

"என்ன‌ங்க‌ ப‌ண்றீங்க‌. இதெல்லாம் ந‌ல்ல‌துக்கில்ல‌. நாங்க‌ யாருனு தெரியும்ல‌. நாளைக்கு காலையில் பாரு, இங்க‌ அத‌க‌ள‌ம் ஆக‌ப்போகுது !" என்று திமிறிய‌வ‌னின் வாயில் த‌ன் கைக்குட்டையைத் திணித்தார்.

"என்ன‌ அத‌க‌ள‌ம் ஆனாலும் ச‌ரி. நான் சொல்ற‌த‌ ந‌ல்லா கேட்டுக்க‌. ஒரு ச‌ந்தேக‌த்தின் பேருல‌ தான் உன்னைக் க‌ட்டி வ‌ச்சிருக்கேன். உன் மேல‌ ஒரு த‌ப்பும் இல்லேண்ணா உன்னை விட்டுருவோம். இல்ல‌, ம‌வ‌னே அத‌க‌ள‌ம் உன‌க்குத்தேன். நாஞ்சொல்ற‌து புரியுதுல்ல‌ !!!" என்றார் மாணிக்கம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌.

இருட்டோடு இருட்டாய் அவனை தன் வீட்டுக்கு இழுத்தும் வந்தார்.

"உன் பேரு என்னய்யா ?" என்ற மாணிக்கத்தின் கேள்விக்கு 'இப்படி வாயில துணிய வச்சி பேரு கேட்டா நான் என்னனு சொல்றது' என்பது போல விழித்தான் அழ‌க‌ர்.

கடைவீதிக்கு சென்று மெடிக்கல் ஷாப் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த‌ ஏகாம்ப‌ர‌த்தைத் த‌ட்டி எழுப்பினார் மாணிக்க‌ம்.

"எலேய் எழுந்திரிடா. போயி ஊருக்குள்ள‌ எல்லார் வீட்டுல‌யும் ந‌கை, பொருள் ஏதாவ‌து காணாம‌ போயிருக்கானு பாக்க‌ச் சொல்லு. ஏதாவ‌து த‌ப்புத் த‌ண்டா ந‌ட‌ந்திருந்தா அவுங்க‌ள‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு உடனே வ‌ர‌ச் சொல்லு. ம்ம்ம் சீக்கிர‌ம். ஓடு, ஓடு. மொதல்ல ஆசாரி வீட்டுக்குப் போ..." என்று விர‌ட்டினார்.

நினைத்த‌து போல‌வே மாணிக்க‌ம் வீட்டுக்கு ஆசாரி ப‌த‌றி அடித்து ஓடி வ‌ந்தார். "இப்ப‌த்தேன் க‌ல‌ச‌த்தைப் பார்த்துட்டு ச‌த்த‌ க‌ண் அச‌ந்தேன், அதுக்குள்ள‌ காணாம‌ போச்சே... ஏதாவ‌து சாமி குத்த‌மால்ல ஆக‌ப்போவுது" என்று அழுது புல‌ம்பினார்.

காற்றின் வருகையில் சடசடக்கும் சருகுகளாய், மாணிக்கம் வீட்டில் உரையாடிச் சேர்ந்தது ஊரே ! அவர் வீட்டு மாட்டுக் கொட்ட‌கையின் மூலையில் கால் ம‌ட‌க்கிச் ச‌ரிந்திருந்தான் அழ‌க‌ர்.

கறுந்திரை வில‌க்கி வெண்திரை ச‌ரிய ஆரம்பிக்கையில், போலீஸோடு ஆஜ‌ரானான் ஏகாம்ப‌ர‌ம்.

"ராத்திரில திருடுனத ஒடனே எடுத்துகிட்டு போனா, யாருட்டயாவது மாட்டிக்குவோம். எங்கேயாவ‌து வ‌ச்சிட்டு ப‌கல்ல‌ வ‌ந்து எடுத்துக்க‌லாம்னாலும் சிக்க‌ல்தேன். அதான் ராவோடு ராவா ப‌னைம‌ர‌த்துல‌ ஏறி ப‌துக்கிட்டு, அதுல‌ கெட‌க்க‌ற‌ காய்க‌ள‌ வெட்டி சாச்சுட்டு, மூட்டையில‌ அத‌க் க‌ட்டி ஊருக்கு போற‌ மாதிரி போயிட்டு, ம‌றுநா வ‌ந்து, பொருள எடுத்துகிட்டு, கூட்ட‌த்தோட‌ கூட்ட‌மா க‌ல‌ந்து வெளியேறிருவோம் !" என்று ப‌ன‌ங்காட்டில் வைத்து அழ‌க‌ரின் வாக்குமூல‌த்தை ப‌திவு செய்த‌து போலீஸ்.

10 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

ஆஹா!

மாடிவீட்டு மாதுவா

வட்டார பாஷை நல்லாயிருக்கு.

[[ய‌மாஹாவை உருவ‌த்தின் திசையில் திருப்பி]]

நல்லாயிருக்கு.

[[பின் த‌ள்ளி ந‌றுக்கென்று க‌ட்டியும் போட்டார்]]

கடிக்க போறாரோன்னு நினைச்சேன் ;)

[[கறுந்திரை வில‌க்கி வெண்திரை ச‌ரிய ஆரம்பிக்கையில்]]

அருமை.

cheena (சீனா)said...

கத நல்லாருக்கு - மொழி ந்டை அருமை

எளிய ஓட்டம்

நல்லமுடிவு

நல்வாழ்த்துகள்

தினேஷ்said...

வழக்கம் போல்...
அழகு

வல்லிசிம்ஹன்said...

அதென்ன கள்ளழகரா:)

கள்ளனா வந்திட்டாரே.கலசம் பிழைத்தது.

நல்ல கதை ,நல்ல முடிவு. வட்டார வழக்கு இழைய வரும் கதைகளே அழகுதான்.

சதங்கா (Sathanga)said...

ஜமால், சீனா ஐயா, சூரியன், வல்லிம்மா,

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வட்டார வழக்கு எப்பவுமே நம்மோஒடு ஒட்டறதும் வழக்கம் தானே :))) அதான் ... என் மக்கள், என் ஊர் என்று அவர்கள் பார்வையிலேயே எழுதவும் முடிந்தது.

ராமலக்ஷ்மிsaid...

எளிய மக்களின் வாழ்க்கைச் சித்திரம் அவர்தம் வட்டார வழக்கில் அற்புதமாக வந்திருக்கிறது.

சதங்கா (Sathanga)said...

சூரியன் said...

//வழக்கம் போல்...
அழகு///

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன் said...

//அதென்ன கள்ளழகரா:)

கள்ளனா வந்திட்டாரே.கலசம் பிழைத்தது. //

:))

//நல்ல கதை ,நல்ல முடிவு. வட்டார வழக்கு இழைய வரும் கதைகளே அழகுதான்.//

அழகான பின்னூட்டத்திற்கு நன்றி வல்லிம்மா.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//எளிய மக்களின் வாழ்க்கைச் சித்திரம் அவர்தம் வட்டார வழக்கில் அற்புதமாக வந்திருக்கிறது.//

பாராட்டுக்கு மிக்க நன்றிக்கா.

நானானிsaid...

எளிய வட்டார நடை நடந்து தங்கக் கலசத்தை காப்பாற்றி விட்டீர்கள்.
நல்லாருக்கு.

Post a Comment

Please share your thoughts, if you like this post !