Sunday, May 4, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா


Photo courtesy: http://www.flickr.com/photos/balu/

இரவில் கசியும்
இறைச்சல் விளக்கொளி,
புரவி மீதே
புறப்படும் இறையவர்.

நாற்புறம் ஒலிக்கும்
நாதஸ்வர மேளதாளம்,
காதைக் கிழிக்கும்
தாரை தப்பட்டை.

பேச்சுப் போட்டிகள்,
சடுகுடு ஆட்டங்கள்,
நாட்டுப்புறக் கலைகள்,
பாட்டுக்கச்சேரி ஆரவாரங்கள்.

இவைஎல்லாம் நடுநிசியில்
சுவையோடு நின்றிருக்க,
விடியும்வரை தொடர்ந்திருக்கும்
அரிதாரத் தெருக்கூத்து.

அக்னி நட்சத்திரம்
அனலாய் கொதித்திருக்கும்.
கூரைக் கடைத்தெருவில்
வியாபாரம் சூடுபறக்கும் !

பஞ்சுமிட்டாய் கடிகாரம்,
பலூன்கேட்டு பரிதவிக்கும்
பிஞ்சுகளின் கூச்சல்களில்
பெற்றவர் பணம்கரையும்.

பொட்டுக் கடைகளும்,
புதுத்துணிக் கடைகளும்,
வளையற் கடைகளுமாய்
வளைய வந்து,

வண்டென ஆடும்
விழிகளில் வதைத்து,
மென்மையாய் உலவும்
தாவணிக் குயில்கள்.

அம்மன் தரிசனம்
தம்மில் கிடைத்திட
சற்றும் சளைக்காமல்
சுற்றிவரும் இளசுகள்.

சுவாமி புறப்பாடில்
சுற்றி வருகையில்,
தாகம் தணித்திடும்
நீர்மோர்ப் பந்தல்கள்.

விதவிதமாய் அலங்கரித்து
வீதிஉலா வந்த,
களைப்பினைப் போக்க
வனப்புமிகு தேரோட்டம்.

இரும்புச் சங்கிலியில்
விழுதுகள் இணைத்து,
வடம் பிடித்திழுக்க
தடதட வென,

உருண்டோடும் வண்ணப்
பெருந்தேர் காண,
ஊரே திரண்டிடும்
பெருந் திரளாக !

13 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

almost 100%!

தேரோட்டம்

jeevagvsaid...

நன்றாக இருந்தது சதங்கா,
//தாகம் தனித்திடும்// தாகம் தணித்திடும்?

வல்லிசிம்ஹன்said...

தேரோடும் எங்க சீரான மருதையிலே பாட்டுப் பாட வேண்டியதுதான்.

அருமையாக இருக்கு சதங்கா.
பிப்பீ ஊதும் சத்தம் கூடக் கேட்கிறது. கூடவே டர்ரென்று சத்ததோடு போகும் சின்ன பொம்மை வண்டிகள்,விசிறிகள்....

aanazagansaid...

கிராமத்து தேர் திருவிழாவை கண்முன் கண்டது போல இருந்தது உங்கள் எழுத்து நடை. Good.

சதங்கா (Sathanga)said...

நாகு,

100%-ஆ. ரொம்ப சந்தோசம் ரசித்துப் பின்னூட்டம் இட்டதற்கு.

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

பாராட்டுக்கு மிக்க நன்றி. எழுத்துப் பிழை சுட்டிக் காட்டியமைக்கும் சேர்த்து தான் :)) சரி செய்துவிட்டேன் !

சதங்கா (Sathanga)said...

வல்லிப்பாட்டி,

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

//பிப்பீ ஊதும் சத்தம் கூடக் கேட்கிறது. கூடவே டர்ரென்று சத்ததோடு போகும் சின்ன பொம்மை வண்டிகள்,விசிறிகள்....//

உங்கள் ரசிப்புத் திறனும், சின்ன விசயங்களையும் கூராய்க் கவனிக்கும் ஆற்றலும் பாராட்டத்தக்கதே !

சதங்கா (Sathanga)said...

ஆனழகன்,

அட அடா, பெயரே அசத்துதே !!!

//கிராமத்து தேர் திருவிழாவை கண்முன் கண்டது போல இருந்தது உங்கள் எழுத்து நடை. Good.//

மிக்க நன்றி. உங்கள் ரசிப்புக்கு நன்றிகள் பல.

பித்தன் பெருமான்said...

சதங்கா,

எப்படிய்யா இது போல எழுதரீங்க! என்னய்யா மாயம், ஒரு திருவிழாவை கண்முன்னாடி கொண்டுவந்து விட்டுட்டீங்க. எப்படியோ போங்க, அசத்தி புட்டீங்க!!.

ஏய்யா, அது எப்படி பதிவுக்கு பதிவு சரியான படம் வேற கிடைக்குது.

டபுள் ரைட்டுங்கோ.

பித்தன்.

சதங்கா (Sathanga)said...

பித்தன்,

எதையும் புதிதாகச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் :) இதுவரை கண்டதை, மனதில் தேக்கி இப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன், அவ்வளவே !!! உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.

//ஏய்யா, அது எப்படி பதிவுக்கு பதிவு சரியான படம் வேற கிடைக்குது.//

இணையமிருக்க படத்திற்கு பஞ்சமேன் ?!!! :)

ராமலக்ஷ்மிsaid...

உயிரோட்டமுடன் ஒரு தேரோட்டம்..இதுவே கவிதையைப் பற்றிய என் பின்னூட்டம்!

சதங்கா (Sathanga)said...

ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம் !

சரண்said...

//பொட்டுக் கடைகளும்,
புதுத்துணிக் கடைகளும்,
வளையற் கடைகளுமாய்
வளைய வந்து,

வண்டென ஆடும்
விழிகளில் வதைத்து,
மென்மையாய் உலவும்
தாவணிக் குயில்கள்.//

ஆஹா... அழகா சொல்லிட்டீங்க..

தாவணியெல்லாம் நம்ம காலத்தோட போச்சுங்க..
நம்ம குழந்தைகளெல்லாம் தாவணின்னா என்னனு கேக்கப் போகுது.. சொன்னாப் புரியவும் போறதில்ல..

Post a Comment

Please share your thoughts, if you like this post !