Friday, May 9, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 1)



Photo courtesy : electricwarrior.com

சமீப‌த்தில் அலுவல் மூலம் க‌ல‌ந்து கொண்ட‌ ஒரு வ‌குப்ப‌றையில், மற்றவர்களுக்கு நீங்கள், அல்லது உங்களுக்கு மற்றவர் inspiration-ஆக இருந்த தருணங்கள் ப‌ற்றி இர‌ண்டு நிமிட‌ம் பேச‌ வேண்டும் என்றனர். நாற்ப‌து பேர் கொண்ட‌ வகுப்பறை அது. பெண்க‌ளும், ஆண்க‌ளும் எண்ணிக்கையில் ச‌ம‌ விகித‌த்திலேயே இருந்த‌ன‌ர்.

அப்பா, தாத்தா, பாட்டி, க‌ண‌வ‌ன், ம‌னைவி, குழ‌ந்தைக‌ள் என‌ தங்க‌ள் inspiration ப‌ற்றி பெண்களும், ஆண்களும் சுவார‌சிய‌மாக‌ப் பேசினாலும், இங்கு வாழும் நிறைய‌ பெண்ம‌ணிக‌ள் ப‌ரிதாப‌த்திற்கு உரிய‌வ‌ர்க‌ளாக‌வே வாழ்கிறார்க‌ள் என‌லாம்.

பேசிய முக்கால்வாசி பெண்கள், திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள் !!! இதெல்லாம் இங்கே சகஜம் தானேப்பா என்பவர்கள் மேலும் பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பெண்களின் inspiration கதைகள் கூட்டத்தினரை வெகுவாகக் கட்டிப் போட்டது. பெயர்கள் தவிர்த்து, அவர்கள் கூறிய சம்பவங்களின் சாரம் கீழே.

-----

"எங்களுக்குத் திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. பத்து வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் இருக்கின்றனர். சில வருடங்கள் முன்பு என் கணவரின் நடத்தையில் சில மாற்றங்கள் உணர்ந்தேன். மெல்ல மெல்ல அவரை தொடர்ந்து கண்காணித்ததில், அவருக்கு ஒரு பெண் அல்ல, பல பெண்களின் சகவாசம் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனேன் !

எனக்குத் தெரிந்துவிட்டது என அவர் துளியும் கவலைப் படவில்லை. இப்ப என்ன செய்யணும் என்கிறாய் என விவாதித்து மிரட்டினார். அவர் வெளிப்படையாக அவரின் தொடர்புகளை என்றும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் எனது மகன்களுக்குத் துளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன செய்யலாம் எனப் பல மாதங்கள் யோசித்து, இருவரும் பேசி விவாகரத்து செய்யலாம் என முடிவு செய்தோம். முக்கியமாக எனது குழந்தைகளுக்கு அவரின் நடத்தை தெரிந்து விடக்கூடாது என அவரிடம் தீர்மானம் வாங்கிக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு, இது தான் காரணம் என, நானும் இதுவரை கூறவில்லை.

என் வாழ்வில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என் குழந்தைகள் தான் இனி என் உலகம். அவர்கள் வளர்ந்து பெரிவர்களாகி வாழ்வில் உயர நான் அவர்களுக்கு நல்ல‌ inspiration-ஆக இருப்பேன். நான் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறேன், மகன்களையும் சந்தோசமாய் வளர்த்து வருகிறென்." என முடித்தார் ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌யதுப் பெண்ம‌ணி.

-----

பின் ஒரு இளம்பெண் தனது கதையைக் கூறினார்.

"இரண்டு அக்காக்களுடனும், ஒரு தம்பியுடனும் பிறந்தேன். எனது பெற்றோர் சில ஆண்டுகள் முன்னர் விவகாரத்து செய்து கொண்டனர். அக்காக்களுக்கு திருமணம் ஆகி வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நானும் எனது தம்பியும் அம்மாவுடன் வசிக்கலானோம். சில மாதங்களில் அம்மா மறுமணம் செய்து கொள்ள, வழியறியாச் சிறுவர்களாக இருந்த எங்களை தந்தையே அழைத்துச் சென்றார்.

தாயில்லா இடத்தில், தம்பியின் வாழ்வு திசை திரும்பியது. சேரக்கூடாத சேர்க்கை, போதை வஸ்து, பள்ளிக்கு முறையாகச் செல்லாமல் வெளியேற்றம். இந்த நிலையில் தந்தை ஒருநாள் நோய்வாய்பட்டு கோமாவில் இறந்து போனார். அம்மாவிற்கு இது பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் எங்களைக் கவணித்துக் கொள்வார் என நம்பிக்கை இல்லை.

அப்பொழுது கல்லூரி முடித்து, ஒரு சிறிய அலுவலகத்தில் வேலையும் பார்த்தேன். தாய், தந்தையின் இழப்பைக் காட்டிலும் எனது தம்பியின் நிலை மிகுந்த மன வருத்தத்தை தந்து கொண்டே இருந்தது.

தந்தை இறந்த அன்று, அவனிடம் நீ இப்படியே இருக்க விரும்புகிறாயா அல்லது என்னுடன் வருகிறாயா ? என்றேன். அவனுக்கு அப்பொழுது பதினாறு வயதிருக்கும். சம்மதம் என்றான். சில நிபந்தனைகள் சொன்னேன். சரி என்றான்.

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டேன். கெட்ட நண்பர்களை வெட்டி எறியச் சொன்னேன். கிடைக்கும் வேலையை ஏற்கச் சொன்னேன்.

இன்று அவனுக்கு வயது இருபத்தி ஒன்று. கெட்ட பழக்கங்கள் துளியும் இல்லை. நல்ல வேலையில் இருக்கிறான், போன மாதம் திருமணம் கூட செய்து கொண்டான். ஒரு தாயாய், தந்தையாய் இருந்து தம்பிக்கு நல்ல inspiration-ஆக இருக்க நினைத்தேன், இருந்தும் காண்பித்தேன் " என டச்சிங்காக முடித்தார் அச்சகோதரி.

-----

"என் மாமியார் தான் எனக்கு inspiration" என்று அசத்தலாய் ஆரம்பித்தார் முன் ஐம்பதுகளில் இருந்த‌ மாது ஒருவர். சில நொடிகள் தான், பொல பொல என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவற்றை அடக்கிக் கொண்டு, தழுதழுத்த குரலில் தொடர்ந்தார்.

"என் பெற்றோர் விவாகரத்து செய்து கொள்ள, சிறு வயதிலேயே தனிமைப் படுத்தப்பட்டேன். திருமணமாகி இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றது. திருமணம் ஆன முதல் நாள் முதல் இன்று வரை என் கணவர் என்னிடம் அன்பாய் நடந்து கொண்டதில்லை. நிறைய அடிப்பார் (இந்த அமெரிக்கவிலா என சற்று வியப்படையச் செய்ய வைத்த சொற்கள்), சண்டை பிடிப்பார். எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டு அவருடன் வாழ்வதற்குக் காரணம் எனது மாமியார் தான்.

மிகுந்த depression-ல் பெற்றோரில்லாமல் தவித்த எனக்கு, குடும்பம், குழந்தைகள், சுற்றம், நட்பு என எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கி ஒரு தோழியாகவே வாழ்ந்தார். (இவருக்குப் போய் என் கணவர் குழந்தையாய் பிறந்தது இன்றும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.) புற்று நோயாளியான எனது மாமியார், அறுபத்தைந்து வயது வரை, பிறருக்கு சிரமங்கள் கொடுக்காமல், தாமாகவே எல்லா காரியங்களையும் செய்து, சில மாதங்கள் முன்னர் இறந்து போனார். நான் இடிந்து போனேன்" என நம்மையும் கலங்க வைத்தார்.

-----

மற்றும் சில பெண்கள், தங்கள் குழந்தைகளுக்காக‌ மறுமணம் செய்து கொள்ளாமலும், அவர் தம் கணவர்கள் மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இங்கு பேசிய பல ஆண்களின் கருத்துக்களும் வியப்படையவே செய்தன. பதிவின் நீளம் கருதி (நன்றி: சுப்பையா வாத்தியார்) அவை அடுத்த பகுதியில்.

14 மறுமொழி(கள்):

Anonymoussaid...

Sorry for writing in English:

Nice article. Mostly inspirations comes from their own parents (at least for me). I was inspired by some writers and their publishings' - Balakumaran, Sujatha, Prabanjan, Ra.Ki.Ra, J.K. and several others.

Kavinayasaid...

உண்மைக்'கதை'கள்தான் கற்பனையை விட நம்ப முடியாதவையாக இருக்கும். அத்துடன் நிறையத் துன்பம் அனுபவிப்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வேதமாக்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணம்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சதங்கா.

சதங்கா (Sathanga)said...

வாங்க அனானி,

வருகைக்கும், வாசித்து உங்களின் கருத்து பகிரதலுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

சரியாகச் சொன்னீர்கள், மிக்க நன்றி, கவிநயா.

நாகு (Nagu)said...

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க போனது ப்ளாக் மார்க்கெட்டிங் வொர்க்ஷாப்போ? :-)

Divyasaid...

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தன்னாம்பிக்கையுடன் வாழ்ந்து சாதித்த இப்பெண்களின் வாழ்வை கண்டு வியந்தேன்!!

jeevagvsaid...

மூன்றாவது டாப்!
தலைப்பின் பொருள் தொடர்கையில் விளங்கும் என நினைக்கிறேன், வாழ்த்துக்கள்!

ஜீவிsaid...

நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்ச்சிகளும் அவற்றின் தொகுப்பும் நிறைய யோசிக்க வைக்கின்றன.
புற உலக தரிசிப்பு என்பது மிகத் தேவையான ஒன்று.

தன்னம்பிக்கை என்பது தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு ஊக்க சக்தி..இருபாலாருக்கும் தேவையான ஒன்று..கணவன் - மனைவி - குழந்தைகள் இந்த முக்கூட்டில் யாரிடம் இது குறைபட்டிருப்பினும், மற்றவர் இந்த சக்தியை தேவையானோருக்கு ஊட்டக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளல் அத்தியாவசிய அவசியம் என்று கருதுகிறேன்..

Anonymoussaid...

தன்னம்பிக்கை அவரவர் அனுபவங்களைப்பொறுத்தே அமைகிறது என்று நான் நினைக்கிறேன் சதங்கா. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. மேற்கத்தியவர்களின் வாழ்க்கையிலும், விவாகரத்து என்றால் சோகம், கண்ணீர் எல்லாம் உண்டு. அவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா என்ன.

என்னோட இந்தப்பதிவை நேரம் கிடைக்கும்போது படியுங்கள். http://chinnaammini.blogspot.com/2008/01/blog-post_16.html
பெற்றவர்களின் பரந்த மனத்தால் எத்தனை பேர் வாழ்க்கை சரி செய்யப்பட்டு இருக்கிறது என்று.

சதங்கா (Sathanga)said...

சம்பந்தம் இருக்கிறது நாகு. இவர்களின் கதைகள் தன்னம்பிக்கை ஊட்டுவனவாகத் தோன்றவில்லையா உங்களுக்கு. வெறும் inspire என்றில்லாமல், அதற்கும் மேலாய் அவர்களின் தன்னம்பிக்கையை போற்றி தலைப்பாக்கினேன் :))

சதங்கா (Sathanga)said...

ஆமாம் திவ்யா. இவர்களுக்குள்ளும் இருக்கும் சோகத்தை இவர்கள் உடைத்தெரிகிறார்கள். வாழ்கிறார்கள்.

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. inspire கதைகளில், இவர்கள் சொன்னதனைத்தும் தன்னம்பிக்கை சார்ந்தே இருந்ததனால், தலைப்பும் அதுவே.

சதங்கா (Sathanga)said...

ஜீவி,

//புற உலக தரிசிப்பு என்பது மிகத் தேவையான ஒன்று.//

மிக அவசியமானது என்றும் சொல்லலாம்.

//தன்னம்பிக்கை என்பது தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒரு ஊக்க சக்தி..இருபாலாருக்கும் தேவையான ஒன்று..//

இது அதிகரிக்கணும். இந்த நோக்கம் தான், வலையுலகில் இக்கதைகளை பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. மிக்க நன்றி ஜீவி.

சதங்கா (Sathanga)said...

வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி சின்ன அம்மிணி,

உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவை வாசித்து, என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !