Thursday, May 15, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 2)



பெண்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவ்வகுப்பில் கலக்கிய ஆண்கள் சிலரின் பேச்சுக்களைப் பார்ப்போம்.

-----

"இருபது வருடங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து, தற்போது மாற்றலாகி இங்கு வந்திருக்கிறேன். வந்த சில மாதங்களாகவே எனது பதினேழு வயது மகன், தினம் என்னிடம், 'ஏன்ப்பா இங்க வந்தீங்க ? நம்ம பழைய வீட்டை மறக்க முடியவில்லை, எனது பழைய பள்ளியை மறக்க முடியவில்லை, பழைய நண்பர்களை மறக்க முடியவில்லை ... எனக்கு இங்கு இருக்க துளியும் பிடிக்கவில்லை' என முறையிடாத நாள் கிடையாது.

திடீரென்று அவன் ஒரு நாள் வந்து, "ஏன்பா இத்தனை நாள் இங்கு வராமல் இருந்தீர்கள்" எனக் கேட்க, என்னுள் தாளமுடியாத வியப்பு !!!

ஆமாம்பா, அவள் பெயர் ரோஸி. மிகவும் நல்லவள். என்னை ஆண் நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என அவன் மேலும் கூற, சந்தோசம் வீட்டை நிரப்பிய‌து.

சில மாதங்களுக்குப் பின், "Dad it got broken, she got a new boy friend" என விசும்பி விசும்பி சிறு குழந்தைபோல் அழ ஆரம்பித்து விட்டான். பதினேழு வயது வாலிப மக‌ன் அழுவதை என்னால் தாங்க முடியவில்லை. சொல்லுங்கள், எந்தத் தந்தையால் தான் தாங்க முடியும்.

பிறகு அவனுக்கு சில விளக்கங்கள் அளித்தேன். வாழ்வில் எதுவுமே நடைபெறலாம். எல்லாவற்றையும் எதிர் கொள்ளப் பழகிக் கொள். ரோஸி இல்லையென்றால் வாழ்வு நின்று போய்விடாது என அவனைத் தேற்றி ஆறுதல் படுத்தினேன்." என்றார் நாற்பதுகளின் முடிவில் இருக்கும் ஒருவர்.

-----

"பிறப்பால் அனாதையான (!) நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அது அந்தக் கடவுளின் கருணை தான் என ஆரம்பித்தார் ஒருவர். சிறு வயதில் ரோட்டோரங்களிலும், பாலங்களுக்கு கீழேயும் படுத்துறங்கி, பல நாட்கள் (ஒரு முறை தொடர்ந்து பத்து நாட்கள்) தண்ணீரை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு அலைந்தேன்.

நமக்கு வாழ்வே அவ்வளவு தான். இனி ஒன்னும் செய்வதற்கில்லை என்ற நிலையில் தான் இருந்தேன். ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என‌ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் பெரிய ஊரான டெக்ஸாசிற்கு வேலை தேடிப் போனேன். கையில் இருந்த சொற்ப பணமும் கறைந்து போனது தான் மிச்சம். படிக்காதவனுக்குப் பிடிப்பேது !!!

பின் எங்களூரில் இருக்கும் சர்ச்சில், ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கெஞ்ச, சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள். சர்ச்சுக்கு வரும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராவது பணம் கொடுப்பார்கள். எனக்கு எஞ்சினியரிங் படிக்க ஆசை. சர்ச் நிர்வாகமும் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பண உதவி செய்தது. அவற்றை சேர்த்து வைத்து, எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். நாள் ஒன்றுக்கு இருபது மணிநேரம் படிப்பிற்கு செலவிட்டேன். டிகிரி வாங்கி இப்போது இதோ நல்ல நிலையில் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்த இறைவன் எனக்கு இட்ட பிச்சை" என கலக்கலாக முடித்தார்.

-----

என் பெண் நண்பி ஒரு நாள் திடீரென்று கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார். டாக்டர்களோ, அவள் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்றார்கள். இடுப்பில் ஒரு ஸ்டீல் ப்ளேட் வைத்து முதுகெலும்பு வரைக்கும் சர்ஜரி வேறு. மனதொடிந்திருந்த நிலையில் இருந்த அவளுக்கு முடிந்த வரை அனைத்து உதவியும் செய்யலானேன். சில நாட்களிலேயே மெதுவாக என்னைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். தினமும் சில மைல் தூரங்களாவது ஓடாமல் இருக்க முடியாது என்னால். நடக்க ஆரம்பித்த என்னவளை மெல்ல ஜாகிங் வரை இழுத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக தினம் ஜாகிங் செய்து, இப்போது சில வாரங்களிலேயே, அவள் என்னுடன் சகஜமாக கூட ஓடி வருகிறாள் என்றார் முப்பதுகளில் இருக்கும் வாலிபர் ஒருவர்.

இது என்ன பெரிய விசயம் என்கிறீர்களா ? இந்த வாலிபர் ஊனமுற்றவர் (குறிப்பாக கால்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

-----

இது யாருக்கு யாரு போட்டி என்று இல்லாமல் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவே இந்த இரு பதிவுகளும். வந்து வாசித்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி. திருவிளையாடல் படம், சிவம், சக்தி ... இதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2 மறுமொழி(கள்):

வல்லிசிம்ஹன்said...

இது யாருக்கு யாரு போட்டி என்று இல்லாமல் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவே இந்த இரு பதிவுகளும். வந்து வாசித்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி. திருவிளையாடல் படம், சிவம், சக்தி ... இதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.//

சரி ஞாபகப்படுத்திக்கிட்டோம்.
நல்ல பதிவு சதங்கா.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

பதிவு படிச்சு, பிடிச்சு, பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !