Friday, May 16, 2008

காட்டு வழி வாரீயளா ?


Photo: free-pictures.com

குளிர்ந்த காலையும்
தெளிந்த நீரோடையும்,
மொட்டவிழ்ந்த மலரும்
சொட்டும் இலைநீரும்.

உடைந்த‌ மூங்கிலில்
உட்புகும் தென்ற‌லும்,
குடைந்து விளையாடி
வெளிவ‌ரும் இசையும்.

ம‌ருந்து க‌ல‌ந்த‌
மூலிகைக் காற்றும்,
பனியில் குளித்த‌
பசும்புற் தரையும்.

சுருதி சேர்க்கும்
கானகத் தென்றலும்,
படபடத்து ரீங்கரிக்கும்
ம‌துஉண்ட‌ வ‌ண்டும்.

அருகருகாய் செல்லும்
எறும்புகள் வரிசையும்,
அசைந்தாடிச் செல்லும்
யானைகள் கூட்டமும்.

சிற்சிறு குன்றுகளாய்
கருங்கற் குவியலும்
ஆங்காங்கே தென்படும்
ஒற்றையடிப் பாதையும்.

ப‌ச்சைப் ப‌சேலென‌ப்
ப‌ல்வ‌கை ம‌ர‌ங்க‌ளும்,
நீண்டு தொங்கும்
விழுதுக‌ள் எங்கும்.

பதுங்கிப் பதுங்கிப்
பகலவன் வருவதும்,
விழுதுடன் போட்டியிட
விரைந்திற‌ங்கும் க‌திர்க‌ளும்.

காட்டுவழி நடக்கையில்
ரசிப்பதில் இன்பம்,
இதமாய் மனதில்
பதியும் நினைவாய்.

6 மறுமொழி(கள்):

Kavinayasaid...

//உடைந்த‌ மூங்கிலில்
உட்புகும் தென்ற‌லும்,
குடைந்து விளையாடி
வெளிவ‌ரும் இசையும்.//

ஆஹா. ரசிச்சு ருசிச்சு அருமையா எழுதியிருக்கீங்க, சதங்கா!

cheena (சீனா)said...

சதங்கா,

அருமை அருமை - அழகிய கவிதை - எளிய சொற்கள். காண்பவை எல்லாம் கற்பனை கலந்து கவிதையாக மாறுகின்றன. காடு - அக்காட்டின் வழியே போகும் போது காணும் காட்சிகள். இளங்காலை நேரம். குளிரடிக்கிறது. சலசல்வென தெளிந்த நீர் ஓடுகிறது. மலர் மொட்டவிழ்க்கிறது. இலையில் இருந்ந்து பனிநீர் சொட்டுகிறது.மூங்கில் துவாரங்கள் வழியாக சென்ற தென்றல் குடைந்து இசையைப் பிரசவிக்கிறது. தென்றலும் வண்டும். எறும்புகளும் யானையும். கருங்கற் குவியல் - ஒற்றையடிப் பாதை. நீண்ட விழுதுகளுடன் மரங்கள். ஒளிந்து வரும் சூரியன். போட்டியிடும் கதிர்கள்.

அடடா அடடா - சிந்தனை பாராட்டத் தக்கது. ரசித்து எழுதப்பட்ட கவிதை. உணர்வு பூர்வமாக உள்ளது

நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

உங்கள் ரசிப்புக்கும் மிக்க நன்றி

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//அடடா அடடா - சிந்தனை பாராட்டத் தக்கது. ரசித்து எழுதப்பட்ட கவிதை. உணர்வு பூர்வமாக உள்ளது//

இது போன்ற வரிகள் அடுத்த பதிவெழுத அடிக்கல் நாட்டுகிறது.

வாசித்து, மனம்திறந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன்said...

காட்டு வழி போனதில்லை. படங்களில் தவிர. போக வைத்துவிட்டீர்கள் காட்டின் காற்று அருமையாக இருந்தது.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

"காட்டு வழி போனதில்லை, போக வச்சிட்டேன்னு" சொன்னது படிக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. பாராட்டுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !